பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 25, 2015

65. சமூகம் - தேசீயக் கல்வி (1)


             தேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே நமது முன்னோர் குடிக்கட்டு களினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும்.

                                                         குடும்பக் கல்வி

            தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்.

            வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்யன்; வீட்டில் பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமை யுடையவன். மனைவியின் பொருளைத் திருட மனந்துணிந்தோன் கோயிற் பணத்தைக் கையாடக் கூசமாட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பக்ஷபாதஞ் செய்பவன் ஊரில் நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாட்டான். குடும்பம் நாகரீக மடையாவிட்டால், தேசம் நாகரீக மடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில், தேசத்தில் விடுதலை இராது.

           ஒரு குடும்பத்தார் கூடித் துன்பமில்லாமல் வாழ்வதைக் காட்டுமிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணமாக, ஆதியில் மனிதர் காட்டை அழித்து வீடு கட்டினார்கள். பல வீடுகள் கூடி, ஊர் ஆயிற்று.

           வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். 'விடத்தக்கது வீடு' என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று. 'விடத்தக்கது வீடு' என்பது கற்றோர் துணிபாயின், அக் கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும். குழந்தைகள் வீட்டையே அரணாகக் கருதுகிறார்கள். ஸ்திரீகளும் அப்படியே செய்கிறார்கள். இடை வயதிலுள்ள ஆண் மக்கள் பெரும்பாலும் வீட்டைக்காட்டிலும் வெளி இடங்களில் அதிக இன்பம் காண்கிறார்கள். இந்த விஷயத்தில், குழந்தைகள், ஸ்திரீகள் முதலியோர்களின் கொள்கையை ஆண்மக்கள் பின்பற்றுதல் தகும் என்றுநம்புகிறேன். 'வீட்டிலிருந்து வெளியே ஓடிப்போய், வீட்டாருடன் கலகம் பண்ணிக்கொண்டு வாழ்வதே மேல்' என்று கருதும் மக்களின் கூட்டங்களே பெரிய படைகளாய், உலகத்தில் பெரிய போர்களை நிகழ்த்தி, எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகச் செய்கின்றன. வீடு துயரிடம் ஆவதற்குக் காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே. வீட்டில் அண்ணன் தம்பி களையும் தாய் தந்தையரையும், அக்கா தங்கைகளையும், பெண்டு பிள்ளைகளையும் அடிமைப்படுத்தி ஆளச் சதிசெய்யும் ஜனங்களின் கூட்டங்களே தேசங்களையும் அடக்கி அடிமையாக்கி ஆளச் சதி செய்கின்றன.

              வீடு துன்பமாக இருப்பதின் மூல காரணம் கணவனுக்கும் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லாமை. ஸ்திரீ புருஷ விரோதத்தால் உண்டாகும் துன்பங்களே வீட்டுத் துன்பங்களுக்கெல்லாம் ஆதாரம்.

கொடுங்கோன்மை தவறு என்றும், கொடுங்கோன்மை இழைத்தால் அதற்குமேல் கொடுங்கோன்மை அவசியம் விளையும் என்றும், அவனவன் வீட்டிலிருப்போரைக் கொல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வானாயின், உலகத்தில் கொடுங் கோன்மையும் போரும் விளையக் காரணமில்லையென்றும்  நான் கருதுகிறேன். குடும்ப வாழ்க்கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதனால் அன்றோ திருவள்ளுவரும்,

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்                                                      நல்லாற்றின் நின்ற துணை”    
                    
என்றார்.     
                                                                                           
 காதல்-விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் கக்ஷியார்காட்டும் ஆதாரங்கள் பல. அதாவது, பூமண்டல முழுதில் சென்றகால - நிகழ்கால அனுபவங்களை ப்ரமாணமாகக் காட்டுகிறார்கள். அதாவது, பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யபிசாரம் ஜனவழக்கத்தில் தள்ளப்படாமலும் ஏகபத்நீ வ்ரதம் பாதிவ்ரத்யம் என்ற இரண்டுவித தர்மங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும் நடைபெற்று வருகின்றனவென்றும், அக்னி ஸாக்ஷி வைத்து 'உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை' என்று ஸத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் ஸஹிக்கத்தக்க அல்லது ஸஹிக்கத்தகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதப் போது மாற்றிக்கொள்ளுதலே நியாயமென்றும். இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால், விவாகம் 'சாச்வத பந்தம்' என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள். மேலும்,ஐரோப்பாச் சட்டத்திலும் மகமதியச் சட்டத்திலும் ஸ்திரீபுருஷர் தனது விவாகத்தை ரத்து செய்துகொள்ளலாம் என்ற நியாயம் ஏற்பட்டிருத்தல் தமது கொள்கையை மனுஷ்ய நீதி ஏற்கனவே அங்கீகாரஞ் செய்து கொண்டு விட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love)  கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

                 ஆனால், தேசீயக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் ஸாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது,குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்க ளில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ, தேசீயக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனைவாழ்க்கைக்கும் பொருந்தாது. மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும் 'இன்று வேறு மனைவி, நாளை வேறு மனைவி' என்றால், குழந்தைகளின் நிலைமை என்னாகும்?  குழந்தைகளை நாம் எப்படி ஸம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால், குழந்தைகளுடைய ஸம்ரக்ஷணையே நாடி ஏகபத்நீவ்ரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப் பட்டது.

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது 'தேசீயம்' என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்கவேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்கவேண்டும்.இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்யபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்றுநினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரததேச முழுதிலும் எப்போதும்போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரததேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழிதலைமை பெற்றுத் தழைத்திடுக.

                                         ஆரம்பப் பள்ளிக்கூடம்

உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாகஎத்தனை பள்ளிக்கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில், மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்குச் சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்குக் குறையாமல் ஏற்படுத்தவேண்டும். இந்த உபாத்தியாயர்கள் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளாகஇருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய் தவறினவர்கள்கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர் களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக, இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும்தேசீயப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று. அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆரோக்கியமும் திடசரீரமுமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று.


No comments:

Post a Comment

You can give your comments here