பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 27, 2017

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் மீது பேசும்போது காந்தியடிகள் சொன்னார் இதுவே நமது இறுதிப் போர், இதில் ஒன்று செய்து முடிப்போம் இன்றேல், செத்து மடிவோம் என்றார். அன்று 8 மணிக்கு மாநாட்டில் பேசி முடித்து அவர் தங்குமிடம் செல்லும்போது கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவே பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சி தடை செய்யப்பட்டது, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாநாட்டுக்கு உடல் நலம் சரியில்லாததால் பாட்னாவில் தங்கியிருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும் கைதானார். நாடே கொந்தளித்தது. அந்த நிகழ்வின் 75ஆம் ஆண்டு  வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள். அதனை நினைவுகூரும் வகையில் அப்போது 1942 ஆகஸ்டில் நடந்த சில கலவர நிகழ்ச்சிகளை இங்கே பதிவிடுகிறேன்.   தஞ்சை வெ.கோபாலன்

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு

நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரம் இந்திய நாடு முழுவதையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுதந்திரப் போரில் தமிழ்நாடு தனது வீரப்புதல்வர்களின் தியாகத்தை வெளியுலகுக்குத் தெரிவித்த நிகழ்ச்சி இது. தூக்குமேடைக்கு அருகில் சென்று மீண்ட இரு பெரும் தியாகிகளின் வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்ட சம்பவம் இது. இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் மெளலான அபுல்கலாம் ஆசாத் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்த தீர்மானம்தான் புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தின் மீது நேருஜி பேசும்போது ஆங்கிலேயார்கள் தாமாகவே முன்வந்து மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்று உறுதிபட தெரிவித்தார். மகாத்மா காந்தி பேசுகையில் இந்தப் போரில் இந்திய சுதந்திரப் போர் வீரர்களுக்கு விடுத்த செய்தி "செய் அல்லது செத்து மடி" என்பதாகும்.

இந்த ஆகஸ்ட் தீர்மானம் நெடிய வாசகங்களைக் கொண்டது. இந்தத் தீர்மானத்தின் வாசகங்களில் காந்திஜி கடைப்பிடித்த அகிம்சை வழியில் போரிடப்போவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒளிந்திருந்த ஒரு சூட்சுமத்தை அறிவுசால் காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள். அந்த வாசகம் 'காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தத்தமக்கு வழிகாட்டியாகி, எப்படிப் போராடுவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்' என்பதுதான் அது.
                                         
1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அன்றிரவே மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மெளலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் போன்றவர்கள் மாநாடு நடந்த ஊரிலேயே கைதாகினர். உடல் நலம் கெட்டு பாட்னாவில் இருந்த பாபு ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, மகாதேவ தேசாய் போன்றோரும் கைதாகினர்.

கைதான தலைவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் பிரிட்டிஷ் ஆட்சியினர். இவர்கள் ஒரே இடத்துக்குக் கொண்டு செல்லப்படாமல் வெவ்வேறு ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.                                  
இந்த ரகசிய நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பம்பாய் முதலான இந்திய நகரங்கள், ஊர்கள், கிராமங்கள் தோறும் மக்கள் திரண்டு பொதுவிடங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, ரயில்வே தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன, தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, தபால்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அரசாங்க உயர் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர்.

நாடெங்கும் பெரும் கிளர்ச்சி உண்டாகியது. அருணா ஆசப் அலி போன்ற பெண் தொண்டர்கள் சாகசங்களில் ஈடுபட்டனர். கைதாகாமல் வெளியில் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அச்சுத் பட்டவர்தன், அசோக் மேத்தா, ராம் மனோஹர் லோஹியா போன்ற சோஷலிஸ்ட்டுகள் தலைமையேற்று போராட்டத்தை வலிமைப் படுத்தினர்.

நாடெங்கும் தொண்டர்களே தலைமையேற்று தத்தமக்குத் தோன்றியபடி போராடத் தொடங்கினார்கள். இந்திய சுதந்திரப் போர் தொடங்கிய நாளுக்குப் பிறகு முதன் முதலாக இயமம் முதல் குமரி வரைய்ல் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஒரு மக்கள் இயக்கமாக நடத்திய போர் இந்த ஆகஸ்ட் புரட்சிப் போர்.

பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சஞ்சீவி ரெட்டி, சத்தியமூர்த்தி, பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கைதாகினர். பெருந்தலைவர் காமராஜ் சிறிது காலம் தலைமறைவாகத் திரிந்து போராட்ட உத்திகளை வகுத்துத் தொண்டர்களுக்கு அறிவித்துவிட்டுத் தாமாகவே போலீசில் சரணடைந்தார்.

                                                   
தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கோவையில் சூலூர் விமான நிலையம் தீப்பற்றி எரிந்தது. புகளூரில் ரயில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டு சரக்கு ரயில் தடம் புரண்டது. தேவகோட்டையில் தியாகிகள் கைதாகி அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சிறை உடைக்கப்பட்டது. திருவையாற்றில் முன்சீப் கோர்ட், பதிவாளர் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது, சீர்காழியில் உப்பனாறு பாலத்துக்கு வெடிவைக்க முயன்றதாக இளைஞர்கள் சிலர் கைதாகினர்.
                                         
காங்கிரஸ் தொண்டர்கள் தவிர, இந்தப் போரில் பொதுமக்களும் பெருமளவில் பங்கு கொண்டனர். கட்சிகளுக்குள் இருந்த வேற்றுமைகள் மறைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாடே அல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் போரில் முன்னிலை வகித்த திருநெல்வேலியின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
                                                              
நெல்லை அதிக அளவில் சுதந்திரப் போர் வீரர்களை அளித்த பிரதேசம். அங்கு தொண்டர்கள் கூடி திருநெல்வேலி பிரதேசத்தை சுதந்திர பூமியாகப் பிரகடனம் செய்ய முயன்றனர். அதற்காக வீரர்கள் ஒன்றுகூடினர். இந்த ரகசியக் கூட்டத்தில் கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், த.தங்கவேல், நாராயணன், ஆர். செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு "சுதந்திர சேனை" என்ற பெயரில் ஒரு படையை அமைத்தனர்.

1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி. ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் என்பவர் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பம்பாய் காங்கிரசின் தீர்மானம் விளக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூடும்படியும், அப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சொல்வதாகப் பேசினார். தொண்டர்கள் அவர் அறைகூவலை ஏற்று உறுதிமொழி தந்தனர்.
                                                                   
ஆகஸ்ட் 12. ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூட்டம் நிரைந்து வழிந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கே.டி.கோசல்ராம் பேசினார். இறுதியில் "அனைவரும் உப்பளம் நோக்கிப் புறப்படுங்கள்" என்று உத்தரவிட்டார். கூட்டமும் அங்ஙனமே அவரைப் பின் தொடர்ந்தது.

அங்கு உப்பளத்தில் அமர்ந்து கோசல்ராம் அமைதியாக சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மக்களும் அவரைப் பின்பற்றினர். ஆயிரக்கணக்கானோர் அப்போது கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீஸ் அவர்களை பயங்கரமாகத் துன்புறுத்தத் தொடங்கினர். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. தலையிலும் மார்பிலும் ரோமங்களைப் பிடுங்கி அலற விட்டனர், மிருகங்களை அடிப்பது போல தொண்டர்களைத் தாக்கினர்.

அவர்கள் அனைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு தொண்டர்கள் போலீசின் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு பதுங்கி விடவில்லை. மாறாக செப்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் மறுபடி ஒன்றுகூடினர். போலீசாரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தனர்.

நாம் அகிம்சை வழியில் அவர்களை எதிர் கொள்ள முடியாது. ஆகவே தற்காப்புக்காக ஒரு தற்கொலை படையை அமைக்க முடிவு செய்தனர். உடனே தற்கொலைப் படை உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் தொண்டர்கள் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

கை விரலில் ஊசியால் குத்தி ரத்தக் கையெழுத்திட்ட பலரில் குறிப்பாக ஜி.மகராஜன், அமலிபுரம் எஸ்.பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு டி.சிவந்திக்கனி, பரமன்குறிச்சி டி.நாகமணி வாத்தியார், செட்டியார்பத்து எம்.அருணாசலம், வாழவல்லான் டி.பச்சப்பெருமாள், கொழுவைநல்லூர் வி.இரமலிங்கம் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.

புரட்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வெள்ளைக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாமி நாடார், வடிவேல், சுடலைமுத்து, கே.சுப்பையன் ஆகியோர் உறுதியளித்தனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு தொண்டர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரு வேறு திசைகளில் சென்றனர்.

மெய்ஞானபுரத்துக்கு ஒரு பிரிவும், சாத்தான்குளத்துக்கு மற்றொரு பிரிவும் சென்றது. மெய்ஞானபுரத்தில் அஞ்சல் அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு தீ வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழித்தெழுந்த ஊர்மக்கள் இவர்களைத் திருடர்கள் என்று நினைத்துத் துரத்தி வந்தனர். மாதாகோயில் மணியை அடித்து மக்களை எழுப்பினர். தேசபக்தர்களை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.

செய்வதறியாது திகைத்த புரட்சி வீரர்களில் ஒருவர் திடீரென்று 'வந்தேமாதரம்' என்று குரல் எழுப்ப, மற்றவர்களும் உரக்க முழங்கினர். ஆகா! வந்திருப்பவர்கள் தேசபக்தர்களாச்சே என்று ஊர்மக்கள் உணர்ந்தனர். உடனே அவர்களும் வந்தேமாதரம் முழக்கமிட்டனர்.

கூட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு குரும்பூர் எனும் ஊரின் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் தங்களிடம் நிலையத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும்படி கூறவே அவரும் ஓடிப்போனார்.

சாத்தான்குளம் நோக்கிப் போன புரட்சியாளர்கள் அங்கிருந்த காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தைத் தன்வசப் படுத்திக் கொள்ள புரட்சிக்காரர்கள் ஒரு புதிய வழியைக் கடைப்பிடித்து ஏமாற்றி காவலர்களை லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டனர்.

புரட்சிக்காரர்களின் செயல் மாவட்டத் தலைமையிடத்துக்குப் போய்விடாமல் இருக்க அங்கிருந்த தந்திக் கம்பிகளை அறுத்தனர். ஆனால் செய்தி நெல்லை கலெக்டர் எச்மாடி என்பவருக்குப் போயிற்று. அவர் மலபார் ஸ்பெஷல் போலீசாருடன் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு விரைந்தார்.

தங்களைப் பிடிக்க மலபார் போலீஸ் வருவதை அறிந்து புரட்சிக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தலைமறைவாகினர். புரட்சித் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். புரட்சிக்காரர்கள் இதற்கெல்லாம் பயப்படவில்லை. துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டனர்.

மலபார் போலீசார் ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மெய்ஞானபுரம், குரும்பூர் முதலான ஊர்களில் முகாமிட்டிருந்தனர். புரட்சிக்காரர்கள் போலீச்சில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன்.

1942 செப்டம்பர் 29ஆம் தேதியன்று நள்ளிரவு புரட்சி வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டம் குலசேகரப்பட்டினம் உப்பளம் நோக்கிச் சென்றது. இந்த குலசேகரப்பட்டினம் கன்னியாகுமரியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூர் உப்பளத்துள் நுழைந்த தொண்டர்களைப் போலீஸ் தாக்கத் தொடங்கியது. தொண்டர்களும் திருப்பித் தாக்கினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு தொண்டர்கள் அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

1942 செப்டம்பர் 30 விடியற்கால வேளை. பொழுது இன்னம் முழுமையாக புலரவில்லை. இருள் மண்டியிருந்தது. நான்கு மணியிருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த முஸாபரி பங்களா வாயிலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி குடிபோதையில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு இவர்களை எதிர் கொண்டான்.

கூட்டத்தில் வந்து கொண்டிருந்த பி.எஸ்.ராஜகோபாலன் எனும் இளைஞரின் நெஞ்சைக் குறிபார்த்து அந்த லோன் துரை தன் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு சுட்டுவிட முயற்சி செய்தான். அவன் இருந்த நிலை, துப்பாக்கியைப் பிடித்திருந்த சூழல், இவன் ராஜகோபாலனைச் சுட்டுவிடுவானோ என்று அனைவரும் பதறினர். அப்போது உடன் வந்த பல தொண்டர்களில் ஒருவர் தன் கையிலிருந்த வேல்கம்பை உயர்த்தி அந்த லோன் துரையின் மார்பில் பாய்ச்சினார். அதே நொடியில் உடன் வந்த தொண்டர்கள் அரிவாளைக் கொண்டும், வேல் கம்புகளாலும் அவன் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டனர்.

லோன் துரை கீழே சாய்ந்தான். இரத்த வெள்ளத்தில் பிணமானான். பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அவன் உடலில் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிந்தது.

லோன் துரையின் மரணம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிவிட்டது. கே.டி.கோசல்ராம் உட்பட சுமார் 500 பேர் மீது வழக்கிப் பதிவு செய்யப்பட்டது.

குரும்பூர் ரயில் நிலையம் பறிக்கப்பட்டது, மெய்ஞானபுரம் தாக்கப்பட்டது குறித்து "குரும்பூர் சதி வழக்கு" பதிவாகியது.

லோன் துரையின் கொலை "குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விசேஷ அதிகாரங்களைக் கொண்ட சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்தது. இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின், மங்களா பொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம், நாராயணன் ஆகிய 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யர், ஐ.சி.எஸ்.

பிரபல வழக்கறிஞர் டேனியல் தாமஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வழக்கறிஞர் குழு குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆகி வாதிட்டனர்.

1942 அக்டோபர் மாதம் வழக்கு தொடங்கியது. 1943 பிப்ரவரி ஆறாம் தேதி முடிவடைந்து, எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யருக்கு தேசபக்தர்கள் மீது என்னதான் அப்படி கோபமோ தெரியவில்லை. தேசபக்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாவது எதிரி ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அதோடு மூன்று மூன்று ஜன்ம தண்டனை (60 ஆண்டுகள் சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். ஆக மொத்தம் தூக்கு தவிர 74 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஏ.எஸ்.பெஞ்சமின் இந்த வழக்கில் மூன்றாவது எதிரி. இவருக்கு 63 ஆண்டுகள் சிறை. இது தவிர மெய்ஞானபுரம் வழக்கில் ஆயுள் தண்டனை (20 ஆண்டுகள்) குரும்பூர் ரயில் நிலைய வழக்கில் 17 ஆண்டுகள், ஆக மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை.

மற்ற எதிரிகளான செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜென்ம தண்டனை. ஏனையோருக்கு 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் தீர்ப்பை வாசித்து முடித்தவுடன் முதல் இரு எதிரிகளான காசிராஜனும், இராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்து சிரித்துக் கொண்டு கேட்டனர், "நீதிபதி அய்யா அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜன்மம் ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஜன்ம தண்டனையும், அதுதவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது, தூக்குக்குப் பிறகு ஜன்ம தண்டனைகளா அல்லது அதற்கு முன்பாகவா?" என்றனர். நீதிமன்ற வளாகம் துக்கத்தையும் மீறி சிரிப்பலைகளில் மிதந்தது.

இந்த கலகலப்புக்கிடையே ஒரு குரல், "இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை அனைத்திலும் வரிசையாக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்" என்று கேட்டது. மறுபடியும் ஒரே சிரிப்பலை.

மதுரை சிறைச்சாலை இவர்களின் இருப்பிடமாயிற்று. அப்போது மதுரை சிறையை உடைத்து இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் ஒரு முயற்சியில் இறங்கினார். அந்த ரகசியம் எப்படிக் கசிந்ததோ தெரியவில்லை கைதிகள் அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர். தளபதி கே.டி.கோசல்ராம் ஒன்றரை ஆண்டு தண்டனை பெற்றார்.

காசிராஜன், இராஜகோபாலன் இருவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவர்கள் இருவருக்கும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். ராஜாஜி அவர்கள் பொது மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் இருவரையும் உடல்நலம் விசாரித்தார்.

இந்த வழக்கு நடந்து வந்த காலத்தில் குற்றவாளிகளின் வயது காரணமாகவும் தீர்ப்பின் கடுமை காரணமாகவும் தமிழக பத்திரிகைகள் இவர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தது. 'தினமணி' பத்திரிகையும் வேறு பல பத்திரிகை எழுத்தாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மத்தியில் இவர்கள் பால் அனுதாபத்தை உருவாக்கினர். ராஜாஜி அவர்கள் இவர்களுடைய விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

சென்னை உயர்நீதி மன்றம் இவர்கல் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. மறுபடி ரிவிஷன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இவ்விருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று பல்லாயிரக் கணக்கில் தந்திகள் அரசாங்கத்துக்குப் பறந்தன.

உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக பிரிட்டனில் இருந்த பிரிவி கெளன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். தேசபக்தர் இருவர் சார்பிலும் பிரபல ஆங்கிலேய வழக்கறிஞர் பிரிட் என்பார் வாதிட்டார். ஏற்பாடு செய்து உதவியவர் ராஜாஜி.

லோன் எனும் ஆங்கிலேயரைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால் இவர்களிடம் அந்த நீதிபதிகளும் இரக்கம் காட்டவில்லை. இவர்களது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்கு தண்டனை உறுதியாயிற்று இவ்விரண்டு தேசபக்தர்களுக்கும்.

அந்தக் காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய வைசிராய்க்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. வைசிராய் அவர்களை நேரில் சந்தித்து ராஜாஜி அவர்கள் செய்த முறையீடு வேலை செய்தது. தூக்கு தண்டனை இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதற்குள் 1946இல் இந்திய சுதந்திரம் நெருங்கி வந்துவிட்ட சமயம், சென்னை மாகாணத்தில் ஒரு இடைக்கால சர்க்கார் உருவாகியது. அதற்கு பிரபல காங்கிரஸ்காரரும், மிகப் பெரிய வழக்கறிஞருமான ஆந்திர கேசரி என வழங்கப்பட்ட டி.பிரகாசம்காரு முதலமைச்சராக வந்தார். அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் நல்ல காரியம் சிறையில் வாடிய தேசபக்தர்களையெல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார். கூட்டத்தோடு தூக்குமேடை காசிராஜனும், தூக்குமேடை ராஜகோபாலனும்கூட வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர்.

இவர்கள் தவிர கே.டி.கோசல்ராம் உள்ளிட்ட மற்ற பல தேசபக்தர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இப்படியாக ஒரு வீர காவியம் வரலாற்றில் எழுதப்பட்டு புகழ்பெற்றது. அதுமுதல் இவ்விரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் "தூக்குமேடை ராஜகோபாலன்", "தூக்குமேடை காசிராஜன்" என்று வழங்கலாயினர்.

இந்தச் சுதந்திரப் பொன்னாளில் இவர்கள் போன்ற மாவீரர்களைப் போற்றி வணங்குவோம். அப்போதுதான் இவர்களைப் போன்ற தன்னலமற்ற தியாகிகள் இந்த மண்ணில் தோன்றுவார்கள். வாழ்க குலசேகரப்பட்டினம் தியாகிகள் புகழ்!!

விருதுநகர் சதி வழக்கு. (1942)

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் மீது பேசும்போது காந்தியடிகள் சொன்னார் இதுவே நமது இறுதிப் போர், இதில் ஒன்று செய்து முடிப்போம் இன்றேல், செத்து மடிவோம் என்றார். அன்று 8 மணிக்கு மாநாட்டில் பேசி முடித்து அவர் தங்குமிடம் செல்லும்போது கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவே பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சி தடை செய்யப்பட்டது, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாநாட்டுக்கு உடல் நலம் சரியில்லாததால் பாட்னாவில் தங்கியிருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும் கைதானார். நாடே கொந்தளித்தது. அந்த நிகழ்வின் 75ஆம் ஆண்டு  வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள். அதனை நினைவுகூரும் வகையில் அப்போது 1942 ஆகஸ்டில் நடந்த சில கலவர நிகழ்ச்சிகளை இங்கே பதிவிடுகிறேன்.   தஞ்சை வெ.கோபாலன்


விருதுநகர் சதி வழக்கு. (1942)

அந்தக் காலத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் தீவிர காங்கிரஸ்காரர்களாக விளங்கிய கு.காமராஜ், அவருடைய நண்பர் கே.எஸ்.முத்துச்சாமி ஆகியோர் சுதந்திரப் போர் எழுச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிகழ்ச்சியொன்றை இப்போது பார்ப்போம்.

ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விருவரும் காங்கிரசில் பிரபலமாக வளர்ந்து வந்தார்கள். கு.காமராஜ் அவர்களின் பெற்றொர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார். கே.எஸ்.முத்துச்சாமி அவர்களின் பெற்றோர் கே.சங்கரநாராயண ஆச்சாரி, அன்னபூரணத்தம்மாள்.

1933இல் உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வங்காள மாநிலத்தின் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்வதற்காகச் சதி நடந்ததாகவும் அதில் கே.அருணாசலம் (அருண்), சபாபதி, கண்ணாயிரம், ஹைதர் அலி என்கிற சங்கர், வாங்கார்டு இன்சூரன்ஸ் கம்பெனி அதிபர் ஹெச்.டி.ராஜா இவர்களோடு வங்கத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்கார், கோவை சுப்பிரமணியம் ஆகிய 21 பேர் கைது செய்யப்பட்டு 'சென்னை மாகாண சதி வழக்கு' என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. (இந்த வழக்கு குறித்த நமது கட்டுரை "சென்னை சதி வழக்கு" எனும் தலைப்பில் நமது வலைத்தளம் http://www.tamilnaduthyagigal.blogspot.com வெ ளியாகியிருக்கிறது. தயவு செய்து அதனைப் பார்க்க வேண்டுகிறேன்.)

இந்த வழக்கில் அப்போது தமிழகத்தில் தீவிரமாக இருந்த தேசபக்தர்கள் சிலரில் காமராஜ் போன்றவர்களையும் இணைக்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால் பாவம், அவர்களால் முடியவில்லை. காமராஜ் அவர்களை அந்தச் சதிவழக்கில் பிரிட்டிஷ் அரசு சேர்க்க விரும்பியதற்கு முக்கிய காரணம் இருந்தது. அதாவது காமராஜ் 1930இல் உப்பு சத்தியாகிரகத்தை ஆதரித்துப் பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்தார். அப்போது அதே சிறையில் அடைபட்டிருந்த லாகூர் சதி வழக்கில் ஷாஹீத் பகத் சிங்கின் தோழர்கள் காமராஜ் அவர்களுக்கு பழக்கமாகினர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காமராஜ் அவர்களையும் சதி வழக்கில் பிணைக்க முனைந்தனர்.

உண்மையில் வங்க கவர்னராக இருந்த ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்யவும், வங்கியைக் கொள்ளை அடிக்கவும் புரட்சிக்காரர்கள் திட்டமிட்டது உண்மைதான். இதில் பங்கு பெற்ற தமிழ் நாட்டு வீரர்களில் கே.அருணாசலம் (அருண் - இவர் பிந்நாளில் 'ஆனந்தவிகடன்' இதழில் தொடராகப் பல தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார்) விருதுநகர் சென்று காமராஜ் அவர்களை சந்தித்தார் என்பது ஒரு காரணம். அருணாசலம் புதுச்சேரி சென்று இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தார். ஆனல் இதில் எதிலும் காமராஜ் பங்கு பெறவில்லை என்பதுதான் உண்மை.

'சுதந்திரச் சங்கு' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர் இந்த அருணாசலம். இவரையும் இவரோடு தொடர்புடைய மற்ற புரட்சிக்காரர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து விட்டனர். இந்த முயற்சியில் காமராஜ் அவர்களையும் சேர்த்துவிட அவர்கள் செய்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை.

எனவே அடுத்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர் போலீசார். காமராஜரை எப்படியும் மாட்டிவிட வேண்டுமென்பது அவர்களது திட்டம். அந்த சமயம் பார்த்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. போதாதா போலீசாருக்கு காமராஜரை மாட்டிவிட. இந்த நிகழ்ச்சிகளுக்கு காமராஜ், முத்துச்சாமி இவர்கள்தான் காரணம் என்று சந்தேகித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் தவிர மாரியப்பன் எனும் பத்திரிகை நிருபர், நாராயணசாமி, வெங்கடாசலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது நடந்த அந்த வழக்கில் கே.எஸ்.முத்துச்சாமிதான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இரண்டாவது குற்றவாளியாக கு.காமராஜ் பெயர் இருந்தது. மற்றவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றனர்.

இவர்கள் ஐந்து பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயாரிப்பதில் போலீசார் திணறினர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கெல்லாம் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பாவம்! எப்படியாவது இவர்களை இதில் மாட்டிவிட வேண்டுமே என்ன செய்வது? ஒரு முடிவுக்கு வந்தனர். ஐந்தாவது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்த வெங்கடாசலம் என்பவரை மிரட்டி அப்ரூவராக ஆக்கிவிட முயன்றனர். இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டவர் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்தசாரதி ஐயங்கார். (பிந்நாளில் பெருந்தலைவர் காமராஜ் முதலமைச்சராக இருந்த சமயம் இவர் சென்னை நகரத்தின் போலீஸ் கமிஷ்ணராக இருந்தார் என்பதும், இதற்கு முன்பு நடந்த திருவாடனை கலவர வழக்கில் டி.எஸ்.பி,யாக  இருந்த இவர் காங்கிரஸ் தொண்டர்களை அடித்துத் துவைத்தவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.)

இவர் பிந்நாளில் காமராஜ் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை நகர் போலீஸ் கமிஷனராக இருந்தார் - இவருக்கு காமராஜ் அவர்களிடமிருந்து எந்தவித தொல்லையும் நேர்ந்ததில்லை - பழி வாங்கப்படவில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். மற்றொரு முறை இவர் சென்னையில் பணியாற்றிய சமயம் ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக சென்னைக்கு விஜயம் செய்தார். காமராஜ் உட்பட பலரும் அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அனுமதிச்சீட்டு கொண்டுவரவில்லை என்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜை பார்த்தசாரதி ஐயங்கார் விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். அதற்காகவும் அவர் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையை காமராஜ் எடுத்ததில்லை. அதுதான் காமராஜ் அவர்களின் பண்பு)

காமராஜ், முத்துச்சாமி ஆகியோர் மீதான இந்த வழக்கு தென் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலிருந்து இவர்களை வெளிக்கொணர தலைவர் சத்தியமூர்த்தி, குமாரசாமி ராஜா போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அப்போது ராஜபாளையம் விஜயம் செய்த காந்திஜி டி.எஸ்.எஸ்.ராஜனிடம் இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.

ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.

உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.

அடி, உதை தாங்காமல் அப்ரூவராகி பொய்யான வாக்குமூலம் கொடுத்த வெங்கடாசலமும் சத்தியத்துக்கும், மனச்சாட்சிக்கும் பயந்து தான் பொய் வாக்குமூலம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

நீதிபதி மன்றோ தனது தீர்ப்பில் அரசாங்கத் தரப்பு நம்பத்தகுந்த வாதங்களை முன்வைக்கவில்லை. மகா புத்திசாலிகளான இந்த இளைஞர்கள் வெடிகுண்டு வீச இப்படிப்பட்ட கேலிக்கூத்தான நடவடிக்கைகளைச் செய்திருப்பார்கள் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறினார். முடிவில் ஐந்து பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த பொய் வழக்கு காமராஜ், முத்துச்சாமி ஆகியோரின் புகழை தமிழகம் முழுவதும் பரவும்படி செய்தது. காமராஜ் இந்த வழக்கை எந்தவித புலம்பலோ அல்லது குற்றச்சாட்டுகளோ சொல்லாமல், தன் மடியில் கனமில்லை என்பதால் தீரத்தோடு எதிர்கொண்டு முறியடித்தார். வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடையாது; கோழைகளுக்குத்தான் அனைத்துமே என்பதை நிரூபித்தார். வாழ்க காமராஜ்--முத்துச்சாமி புகழ்!!


அக்கினித் திராவக அபிஷேகம்.

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் மீது பேசும்போது காந்தியடிகள் சொன்னார் இதுவே நமது இறுதிப் போர், இதில் ஒன்று செய்து முடிப்போம் இன்றேல், செத்து மடிவோம் என்றார். அன்று 8 மணிக்கு மாநாட்டில் பேசி முடித்து அவர் தங்குமிடம் செல்லும்போது கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவே பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சி தடை செய்யப்பட்டது, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாநாட்டுக்கு உடல் நலம் சரியில்லாததால் பாட்னாவில் தங்கியிருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும் கைதானார். நாடே கொந்தளித்தது. அந்த நிகழ்வின் 75ஆம் ஆண்டு  வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள். அதனை நினைவுகூரும் வகையில் அப்போது 1942 ஆகஸ்டில் நடந்த சில கலவர நிகழ்ச்சிகளை இங்கே பதிவிடுகிறேன்.   தஞ்சை வெ.கோபாலன்


அக்கினித் திராவக அபிஷேகம்.

1942 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம். மதுரையில் தேசியத் தொண்டர்கள், சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட பெண்கள் உட்பட பலர் ஊர்வலமாகச் சென்று மகாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்படி அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஊர்வலத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது. ஊர்வலத்தில் வந்த சில தொண்டர்களையும், இரண்டு பெண்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி ஊருக்கு எட்டு மைல் தள்ளி ஒரு வனாந்திரப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்று, அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு வந்து விட்டார்கள். நட்ட நடுக் காட்டில் நிர்வாண கோலத்தில் அந்த தாய்மார்களும், தொண்டர்களும் அன்று பட்ட வேதனை. அப்பப்பா, கொடுமை. இந்தக் கொடுமையைச் செய்தவன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். பெயர் விஸ்வநாதன் நாயர். இவரைத் தீச்சட்டி கோவிந்தன் என்று குறிப்பிடுவார்கள். தேசபக்தர்களுக்கு கொடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றவர்.

இந்த நிகழ்ச்சியின் காரணமாக மதுரை இளைஞர்களுக்கு இந்த விஸ்வநாதன் நாயர் மீது ஒரு கண். அவனை பழி தீர்த்துக் கொள்வதற்காக நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது. அவர்கள் அந்த கொடுங்கோல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயரை நடுவில் விட்டு அக்கினித் திராவகத்தால் அபிஷேகம் செய்து ஆனந்தப் பட்டனர். பழிக்குப் பழி. எங்கள் தாய்க்குலத்தை நிர்வாணமாக்கி அவமதித்த விஸ்வநாத நாயரே, இனி வாழ்நாள் முழுவதும் நீ செய்த அந்த கொடுமையை உன் முகத்தையும் உடம்பையும் பார்த்துப் பார்த்து நினைவு படுத்திக் கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது அக்கினித் திராவகம் வீசிய நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கை நிரூபிக்கப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை. எனவே அக்கினித் திராவகம் வீசினார்கள் என்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ராமானுஜம் ஐயங்கார், கோ.குப்புசாமி, டி.தர்மராஜ் சந்தோஷம், முதலான வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் பழிக்குப் பழி வாங்கும் செயலை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரத் திலகங்கள் K.B.ராஜகோபால், D.ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டன் என்பாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், லட்சுமணன், காயாம்பு தேவர், கோமதிநாயகம் ஆகியோருக்கு தலைக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.

மற்ற எதிரிகளான ஓ.ஆர்.சுந்தர ராவ், டி.எம்.கோபாலாச்சாரி, ஏ.என்.விசுவநாதன், ரத்தினம் பிள்ளை, சோமுப் பிள்ளை, கணபதி பிள்ளை, சங்கிலித்தேவர், நாராயணன், குருநாதன் ஆகியோர் செஷன்ஸ் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் இவர்களில் பலர் மறுபடியும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு செய்தனர். திரு ஜெயராமன் என்ற வழக்கறிஞர் எதிரிகளுக்காக வாதிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. இவர்கள் தவிர மேலும் பலர் தடையை மீறியதற்காகவும், ராஜதுவேஷப் பேச்சிற்காகவும் சிறை தண்டனை பெற்று மதுரையின் பெருமையை உலகறியச் செய்தனர். வாழ்க மதுரை தியாகசீலர்களின் புகழ்!
                                                                                                                                                           


Tuesday, July 25, 2017

திருவாடனை சிறை உடைப்பு (1000ஆவது பதிவு)

 இந்தப் பதிவு எமது வலைப்பூவின் 1000ஆவது பதிவு. அது நமது சுதந்திரப் போராட்டத்தில் ஆகஸ்ட் புரட்சியின்போது நடந்த நிகழ்ச்சியை விவரிப்பது. ஆகஸ்ட் புரட்சியின் 75ஆம் ஆண்டு நினைவு இப்போது, அதையொட்டி இந்தப் பதிவு மீள்பதிவாக வெளியிடப்படுகிறது.                                       


                     திருவாடனை சிறை உடைப்பு

உங்களுக்குச் சின்ன அண்ணாமலையைத் தெரியுமா? தெரியாதா? தெரிந்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது. கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் உறவினர். தேவகோட்டை வாசி. நல்ல தமிழ் அன்பர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் நெருங்கிய தோழர். ராஜாஜியின் தொண்டர், 'சிறிய திருவடி' என்று அன்போடு அழைக்கப் பட்டவர். தமிழ்ப் பண்ணை எனும் புத்தக வெளியீட்டகம் நடத்தியவர். தமிழரசுக் கழகத்திற்காக "சங்கப் பலகை" எனும் பத்திரிகை நடத்தியவர். கம்பீரமான தோற்றம். சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப்பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.

"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தேமாதரம்' என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.

இவர் நான்கு முறை சிறை சென்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம் செய்திருக்கிறார். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி அவர்களால் சத்தியாக்கிரகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவகோட்டையில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். இவரை அங்கு கைது செய்யாததால் அங்கிருந்து சென்னை வரை நடந்தே வந்து வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். சென்னையில் கைது செய்யப் பட்டார். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னும் இவர் போராட்ட மனப்பான்மையை விடவில்லை.

தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்றும், திருப்பதி, கன்னியாகுமரி பகுதிகள் தமிழ் நாட்டோடு சேரவேண்டுமென்கிற எல்லைப் போராட்டத்திலும், சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும், ஆந்திராவுக்குக் கொடுக்கக்கூடாது என்ற போராட்டத்திலும் முக்கியப் பங்கேற்று சிறை சென்றிருக்கிறார். இப்படி வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டம், சிறை என்றே கழித்து விட்டார். இவ்வளவு தியாகம் செய்தும் கட்சியிலோ, அரசாங்கத்திலோ எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இவருடைய தியாகத்தையும், பட்டம் பதவியில் ஆசையில்லாத மனப் பக்குவத்தையும் ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் உதாரணமாகக் கொள்ள வேண்டும். 

(திரு சின்ன அண்ணாமலை எழுதிய "தியாகச்சுடர்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசியது)

இனி திரு சின்ன அண்ணாமலை அவர்களின் வாயால் 1942இல் திருவாடனையில் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். நமக்காக அவர் எழுதிவைத்திருக்கிறார். நாம்தான் அதைப் படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொள்வோம். 

"1942 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும் கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர். 

ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத அபாயம் என்று கருதி போலீஸார் அன்றிரவே என்னைக் கைது செய்வது என்று முடிவு செய்து விட்டனர்.

இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்க மாட்டார்கள், சில பேர்தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்குச் சுமார் பத்து லாரி ரிசர்வ் போலீசைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக் கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.

அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரசர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது. "உங்களைக் கைது செய்திருக்கிறோம்" என்று போலீசார் சொன்னார்கள்.

இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக்கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ "இராமவிலாஸ்" பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள். 

திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி மக்கள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீசைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.

என்னை ஏற்றிக் கொண்டு சென்ற இராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்து கொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸைச் சாம்பலாக்கி விட்டார்கள். அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக் கூடாது என்று மக்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள்.

அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து கோர்ட் கட்டடத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை.

பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு திருவாடனையை நோக்கி வந்தது. திருவாடனை வரும் வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும் உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடனையை நோக்கி வந்தார்கள்.

சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சப்-ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.

நான் சொன்னேன், 'இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்' என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள், 'நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம். வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?' என்று கேட்டார்கள்.

'அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான் பொறுப்பு' என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் 'சூரப்புலி' சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும்.

என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடையென்றும், கட்டடத்திற்கு தீ வை என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முனால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.

பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து "இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். 

"நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?" என்று நான் திருப்பிக் கேட்டேன்.

"இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்" என்று பதில் சொன்னார்.

"சரி, அப்படியே செய்யுங்கள்" என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்துதான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.

அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப்பகல் 12 மணிக்குப் பல ஆயிரக் கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை. 

அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது.

தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை.மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் 1942இல் சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்போது நான் குறுக்கிட்டு, "அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்" என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள்.

நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ அவர்களது உடைகள் என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில் ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள்.

எல்லோரையும் சமாதானப் படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோடின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்று கொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது.

உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு "எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா" என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள்.

இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும் குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால் அவைகளைச் சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின் குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்து விடுகிறது.

ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும். எவ்வித பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப் பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர்.

நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டிருந்தோம். உயிர் போன பலரும், உயிர் போகும் தருவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல் நின்று கொண்டிருந்தேன். இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசலவெற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போது எற்படும் பயங்கரமான கிரீச் எனும் அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்று விழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?

(பிறகு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படித் தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள். மேற்கொண்டு நடந்தவற்றையும் எழுதுகிறோம்.)

நன்றி: குமரன் பதிப்பகம், சென்னை வெளியிட்ட சின்ன அண்ணாமலை எழுதிய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" நூல்.

திருவையாறு கலவர வழக்கு



(ஆகஸ்ட் புரட்சி எனும் "வெள்ளையனே வெளியேறு" போராட்டம் நடந்த 75ஆம் ஆண்டு இது. 1942 ஆகஸ்ட் 13ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள அரசர் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதம் படித்து வந்த எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்பவரும் (இவர் ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்) தமிழ்க் கல்லூரியில் படித்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த கு.ராஜவேலு, சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (கவியின் கனவு போன்ற பல நாடகங்களை இயற்றியவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக 17ஆண்டுகள் பணியாற்றியவர், பெருந்தலைவர் காமராஜரின் அன்புக்குப் பாத்திரமானவர்) இவர்கள் பங்குபெற்று திருவையாற்றில் கடையடைப்புக்கு ஏற்பாடு செய்தனர். காவல்துறை அதிகாரி நடராஜ முதலியார் தலைமையில் போலீஸ் இவர்களைத் துரத்தியடித்தது. கலவரம் மூண்டது. திருவையாறு முன்சீப் கோர்ட், அருகிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது 44 பேர் மீது வழக்கு நடந்து 40 பேருக்குத் தண்டனை கிடைத்து சிறை சென்றனர். அந்த விவரத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.  ‍‍‍ தஞ்சை வெ.கோபாலன்)    
                                                                       இது ஒரு மீள் பதிவு


                  திருவையாறு கலவர வழக்கு


ஆன்மீகத் துறையில் மட்டுமல்லாது திருவையாறு அரசியலிலும் முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்ச கட்டத்தை அடைந்த 1942 ஆகஸ்ட் புரட்சி எனும் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின்போது அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு புரட்சிகளில் ஒன்று திருவையாற்றிலும், மற்றொன்று சீர்காழி உப்பனாறு பாலத்திற்கு வெடிகுண்டு வைத்த நிகழ்ச்சியாகவும் நடந்திருக்கிறது. சீர்காழி சதி வழக்கில் அன்றைய "தினமணி' இதழைச் சேர்ந்த திரு இராமரத்தினம், ஏ.என்.சிவராமன், திருச்சி சிம்கோ மீட்டர் நிறுவனத்தின் அதிபராக பின்னாளில் விளங்கியவரும் சீர்காழி பெருநிலக்கிழார் எஸ்.இரகுபதி ஐயரின் மகனுமான சுப்பராயன், கும்பகோணம் பந்துலு ஐயரின் குமாரனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன், சேஷு ஐயர் போன்றவர்கள் சம்பந்தப்பட்டு பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள். திருவையாறு நிகழ்ச்சியில் அரசர் கல்லூரி மாணவர்களாயிருந்த சோமசேகர சர்மா, இராம சதாசிவம், ஏ.ஆர்.சண்முகம், கு.ராஜவேலு, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் போன்றவர்களும் மேலும் பெரும்பாலும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவையாற்றை அரசியல் வரைபடத்தில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கும்படி நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களையும் இந்த நூலில் சிறிது பார்க்கலாம்.

1942 ஆகஸ்ட் புரட்சியின் போது நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ. எனினும் திருவையாற்றில் நடந்த "திருவையாறு கலவர வழக்கு" போராட்டத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். திருவையாறு நகரத்தில் போலீசுக்கு எதிராகக் கலகம் கல்லெறி வைபவம், போலீஸ் தடியடி, அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திருவையாறு தபால் அலுவலகம், முன்சீப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகுந்து அடித்து நொறுக்கி, தீ வைத்த சம்பவங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், இறுதியில் 44 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கைப் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

1942 ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஆங்கில அரசுக்கு காங்கிரசின் மீதும், காந்தியடிகள் மீதும் பயங்கர கோபம். பழிதீர்த்துக் கொள்ள பயங்கர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆகவே நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே அவர்களாகவே பெரும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்தி தலைவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் நடுமே இந்தியா மந்திரி அமெரியின் விஷமத்தனமான வியாக்கியானம் வேறு மக்கள் கையில் கிடைத்ததும், ஓகோ இப்படித்தான் போர் புரிய காந்தியடிகள் கட்டளையிட்டிருக்கிறார் போலும், இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் இந்தியா மந்திரி பொய் சொல்வாரா? என்ற நினைப்பில் அவர் குறிப்பிட்டமாதிரியில் போராட்டம் திசை திரும்பிவிட்டது.

அரசாங்கத் தரப்பில் கூறப்படும் வழக்கின் விவரம் இதோ: 

நாடு முழுவதிலும் நடக்கும் மக்கள் எதிர்ப்பின் ஒரு பங்காக திருவையாறு நகரத்திலும் மக்கள் கொதிப்படைந்தனர். காந்திஜி கைதான 9-8-1942க்கு மறுநாள் 10-8-1942 அன்று திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவர்கள் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த அரசர் கல்லூரி என்பது மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்திரங்கள் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. பின்பு ஆங்கில அரசு இவற்றை அரசு சார்பில் சத்திரம் இலாகா மூலமாக நடத்தி வந்தது. அந்த வகையில் திருவையாற்றில் சமஸ்கிருத கல்லூரி தொடங்கப்பட்டு, முதலில் சமஸ்கிருதம் மட்டும் சொல்லித்தரப்பட்டு, பின்பு அதில் தமிழ் வகுப்பும், பிறகு இப்போது மற்ற எல்லா பாடங்களும் சொல்லித்தரப்படும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசர் கல்லூரி மாணவர்கள்தான் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்தோடு தலைவர்கள் கைதையும் எதிர்த்து ஓர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு ஆந்திரா பகுதியிலிருந்து இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிப்பதற்காக வந்து விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்பவர் முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தார். 
அவரோடு கு.ராஜவேலு, பின்னாளில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்டவர் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கீற்றுப் பந்தல் பிறகு தீப்பிடித்து எரிந்து போயிற்று. இந்த விபத்து பற்றி விசாரணை செய்ய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் டி.நடராஜ முதலியார் என்பவர் கல்லூரிக்கு வந்து விசாரணை செய்தார். இதில் இரண்டு மாணவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினார். அவர்கள் கவிஞர் சுந்தரம் மற்றும் கோவிந்தராஜன் என்பவர். இவர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகள் 27, 44 ஆக சேர்க்கப்பட்டவர்கள். இந்த கல்லூரிக்குள் நடந்த இந்த நிகழ்வு, வெளியேயும் பரவும் என்று போலீஸ் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.

12-8-1942 அன்று, அதாவது உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்த நாளுக்கு இரண்டாவது நாள் மாலை 5 மணிக்கு புஷ்யமண்டபத் துறையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவிக்கரை எனும் ஊரைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சிதம்பரம் பிள்ளை என்பவரும் தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல் நிலைப் பள்ளி என வழங்கும் திருவையாறு Central High School முன்னாள் ஆசிரியர் சங்கரய்யர் என்பவரும் பேசினார்கள். இவர்கள் பேச்சில் மக்கள் இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு எந்த வகையிலும், அவர்களது யுத்த முஸ்தீபு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கக்கூடாது என்று பேசினர். 

இந்த கூட்டத்தில் பேசியவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், தேசபக்தியைத் தூண்டியும் பேசினர். மறுநாள் காலை அதாவது 13-8-1942 அன்று திருவையாறு கடைத் தெருவில் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. விசாரித்ததில் மகாத்மா மற்றும் இதர தலைவர்களின் கைதை எதிர்த்து கடைக்காரர்கள் கடையடைப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. அப்போது காலை 7 அல்லது 8 மணி இருக்கும், சுமார் 200 அல்லது 300 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தார்கள். இவர்கள் அனைவர் கையிலும் கழி அல்லது கற்கள் வைத்திருந்தனர். இந்தக் கூட்டம் அப்படியே கடைத்தெருவுக்குள் கிழக்கிலிருந்து மேற்காக நுழைந்து வரத்தொடங்கியது. மற்றொரு கூட்டம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரத் தொடங்கியது. அப்படி அந்தக் கூட்டம் கடைத்தெருவில் வரும்போது திறந்திருந்த கடைக்காரர்களை கடையை மூடும்படியும் அப்படி இல்லாவிட்டால் அதன் விளைவை எதிர்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு வந்தனர். இந்தச் செய்தி போலீசுக்குப் போயிற்று. உடனே சப் இன்ஸ்பெக்டர் T.நடராஜ முதலியார் போலீஸ் காவலர்கள் லோகநாதன், பராங்குச நாயுடு, சிவிக் கார்டுகள் வடிவேலு, அப்துல்லா, அப்துல் அஜீஸ் குப்புசாமி ஆகியோருடன் கடைத்தெருவுக்கு வந்தார். போலீஸ் அதிகாரியும் போலீஸ் மற்றும் சிவிக் கார்டுகளும் கடைக்காரர்களைக் கடைகளைத் திறந்து வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு, தாங்கள் பாதுகாப்பளிப்பதாகவும் உறுதி கூறினர். கூட்டத்தினரை போலீசார் கலைந்து போய்விடுமாறு கேட்டுக் கொண்டனர், அவர்கள் போகாததால் எச்சரித்தனர். பிறகு மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர். ஆனால் கூட்டம் கலைந்து போகாமல் மேலும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை எடுத்து வீசினர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வளவும் ஆட்கொண்டார் சந்நிதி முன்பாகக் கடைத்தெருவின் கிழக்குப்பகுதியில் நடந்து கொண்டிருக்க, கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து மெல்ல நகர்ந்து தபால் ஆபீசுக்குச் சென்று விட்டனர். அங்கு சென்று தபால் ஆபீசின் மீது கற்களை எறிந்தும், கதவை உடைத்துத் திறந்து கொண்டு, மூங்கிலால் ஆன தடுப்பை எடுத்துச் சாலையில் வீசி, மின் பல்புகளை உடைத்து, தந்தி ஒயர்களை அறுத்தெறிந்து அறிவிப்பு பலகையையும் உடைத்துத் தெருவில் விட்டெறிந்தனர். 

சுமார் 10 மணிக்கு மக்கள் கூட்டம் மிகப் பெரிதாக ஆனது. 300 அல்லது 400 பேருக்கு மேல் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அத்தனை பேர் கைகளிலும் கழியும்க கற்களும் இருந்தன. இந்தக் கூட்டம் விரைந்து ஊரின் தென்பகுதியில் காவிரி நதியின் தென் கரையில் இருந்த முன்சீப் கோர்ட் வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கூட்டத்தினர் அனைவரும் ஒரே மாதிரியாக "மகாத்மா காந்திக்கு ஜே" என்று கோஷமிட்டுக் கொண்டு சென்றனர். கோர்ட் கட்டடத்தில் கூட்டம் கல்லெடுத்து வீசி, கூறையில் பதித்திருந்த கண்ணாடிகளையும், பெயர் பலகையையும் உடைத்தனர். சிலர் கோர்ட்டுக்கு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மேஜை நாற்காலி இவற்றைப் போட்டு உடைத்தனர். கோர்ட் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் மன்னரின் போட்டோ உடைத்தெறியப்பட்டது. பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்ட புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. இங்க் புட்டிகள் உடைத்தெறியப்பட்டன. டைப் அடிக்கும் மெஷின் உடைக்கப்பட்டு சாலையில் கொண்டு போய் போட்டு நசுக்கப்பட்டு, பின்னர் அருகிலிருந்த காவிரி ஆற்றில் வீசி எறியப்பட்டது. வாசலில் நெருப்பு அணைக்க மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த வாளிகள் நசுக்கி தூக்கி எறியப்பட்டன. கோர்ட் அறை தவிர ஆபீசின் இதர பாகங்களில் இருந்த மேஜை நாற்காலிகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து ஆபீஸ் பணம் சூறையாடப்பட்டது. அலுவலக கேட் உடைக்கப்பட்டு நடு சாலையில் போடப்பட்டு போக்குவரத்தை நிறுத்தினர். இவை அனைத்தும் சுமார் 15 நிமிஷ நேரத்துக்குள் நடந்து முடிந்தன.

கூட்டம் உடனே அங்கிருந்து அடுத்த கட்டடத்தில் இருந்த சப் ரிஜிஸ்டரார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கும் கோர்ட்டில் நடந்தது போன்ற அழிவுகளும், உடைத்தலும் நடைபெற்றன. காலை 11-15 அல்லது 11-30 மணி சுமாருக்கு போலீஸ் அங்கு வந்து சேர்ந்தது. போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து கோர்ட் மற்றும் சப் ரிஜிஸ்டிரார் அலுவலகக் கட்டடங்களில் நடைபெற்ற வன்முறையைக் கண்டு கூடியிருந்த கூட்டத்தைத் தடிகொண்டு தாக்கி விரட்டலாயினர். உடனே கும்பல் நாலா திசைகளிலும் சிதறி ஓடிவிட்டது. அந்தச் சந்தடியில் கு.ராஜவேலு, காவிரி ஆற்று வெள்ளத்தில் குதித்து, நீரின் போக்கிலேயே நீந்திக் கொண்டு போய், திருப்பழனம் எனும் கிராமத்தில் கரை ஏறினார். அங்கு அவர் ஒரு வாழைத் தோட்டத்தில் படுத்திருந்துவிட்டு, பின்னர் அவ்வூரைச் சேர்ந்தவரும், ராஜவேலுவோடு படித்தவருமான ஒரு நண்பர் வீட்டிற்குப் போய்விட்டார்.

சம்பவம் நடந்த நாளன்று மாலையிலிருந்தே நூற்றுக்கணக்கானோரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கடைத்தெருவில் நிறுத்தி, அங்கிருந்த கடைக்காரர்கள், கோர்ட், சப்ரிஜிஸ்டிரார் ஆபீசில் வேலை செய்வோர், பிராசஸ் சர்வர்கள், போஸ்ட் மாஸ்டர், முன்சீப், சப்ரிஜிஸ்டிரார் ஆகியோரைவிட்டு அடையாள அணிவகுப்பு நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பிறகு இறுதியில் 44 பேர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.

கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் போலீசாரைத் தங்கள் கடமையைச் செய்யமுடியாமல் தடுத்ததாகவும் கு.ராஜவேலு உள்ளிட்ட 19 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. முன்சீப் கோர்ட்டையும், ரிஜிஸ்டிரார் ஆபீசையும் அடித்து நொறுக்கியதாக எஸ்.டி.சுந்தரம் உள்ளிட்ட 38 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. சிலர் இந்த இரண்டு வழக்கிலும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். 

அன்று மால சுமார் 4.00 அல்லது 4.30 மணிக்கு மாவட்ட மாஜிஸ்டிரேட், மாவட்ட காவல்துறை அதிகாரி, ரிசர்வ் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சப் இன்ஸ்பெக்டர் டி.நடராஜ முதலியார் விசாரணையை நடத்தினார். இவர் நடத்திய விரிவான விசாரணை, அடையாள அணிவகுப்பு இவற்றை நடத்தி கடைசியாக 28-9-1942 அன்று சம்பவம் நடந்து 1-1/2 மாதம் கழித்து 44 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

கடைத் தெருவில் கூட்டமாக ஆயுதங்களுடன் சென்று கடைக்காரர்களை மிரட்டி, கடைகளை மூடச்சொல்லியும், அப்படி மூடாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லி வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீசார் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் இந்திய பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்படி, ஏ.ஆர்.சண்முகம், கருப்பையா, கிருஷ்ணசாமி செட்டி, சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், ரெங்கநாதன், கு.ராஜவேலு, எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, கோவிந்தசாமி, ரெத்தினம் சேர்வை, குஞ்சு பிள்ளை, மாணிக்கம் பிள்ளை, ஏகாம்பரம் பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, பஞ்சன், ராம சதாசிவம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதுபோலவே, ராஜாராம் ராவ், நல்லதம்பி, ஏ.ஆர்.சண்முகம், சன்னாசி சேர்வை, ஊமையன் சுப்ரமணியன், எஸ்.வி.பழனி, கருப்பையன், கோவிந்தராஜுலு, சிதம்பரம், பங்காருசாமி, கிருஷ்ணசாமி செட்டி, மணி பிள்ளை, ராஜா வன்னியர், அமர்சிங் வன்னியர், சந்தானம் செட்டி, கோவிந்தராஜன் செட்டி, ஜெகன்னாத செட்டி, கோபால்சாமி செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், சாமிநாத பிள்ளை, காளி வன்னியர், சுந்தரேசன், குஞ்சு ஆகியவர்கள் மீது முன்சீப் கோர்ட், சப் ரிஜிஸ்டிரார் அலுவலகம் ஆகியவற்றைத் தாக்கி உபகரணங்களை உடைத்தல், ஆவணங்களை எரித்தல், ஆற்றில் போட்டு அழித்தல் போன்ற செயல்களுக்காக வழக்கு பதிவு செய்தனர். 

அரசாங்கத் தரப்பில் மொத்தம் 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் முன்சீப், போஸ்ட் மாஸ்டர், சப் ரிஜிஸ்டிரார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் அடங்குவர். இந்த வழக்கு நாம் முன்பே சொன்னவாறு 27-2-1943 அன்று அதாவது சம்பவம் நடந்து 6 மாத காலத்துக்குப் பிறகு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு 4-1/2 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 85 பேர் எதிரிகளின் தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளில் பெரும்பாலோர் குற்றவாளிகளுக்கு அலிபி, அதாவது குற்றம் நடந்த நேரத்தில் அவர்கள் அங்கு இல்லை என்றே சொன்னார்கள். அவை எதுவுமே ஏற்கப்படவில்லை. 

போலீசாருக்கும், கோர்ட் சிப்பந்திகளுக்கும் கல்லூரி மாணவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னதாகக் கூறப்பட்டது. என்றாலும், வலுவான சான்றுகள் எதுவும் சொல்லி நிரூபிக்கப்படவில்லை. மேலும் மாணவர்களுக்கும் இவர்களுக்கும் விரோதம் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் வாதிடப்பட்டது. குறிப்பாக உண்ணாவிரதம் இருந்த பந்தல் எரிந்த சம்பவத்திற்காக மூன்று மாணவர்களை சப் இன்ஸ்பெக்டர் நடராஜ முதலியார் போலீஸ் நிலையத்துக்கு 17-8-1942 அன்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். என்றாலும் அவர்கள் மறுநாள் விடுவிக்கப்பட்டு விட்டனர். உண்மையில் போலீசுக்கு மாணவர்கள் மீது விரோதம் இருந்திருக்குமாயின் இவர்களைக் கைது செய்திருப்பார்களே என்றும் கூறப்பட்டது.

குற்றவாளிகளில் முதல் 11 பேர் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு விட்டனர். இப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறை, அராஜகம், அடித்து நொறுக்குதல் எல்லாம் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுவதும், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக சகஜமாக போய்விட்டதையும் நாம் அறிவோம். ஆனால், அன்று 1942இல் “க்விட் இந்தியா” தீர்மானத்தை காந்திஜி நிறைவேற்றிய காரணத்தால், இந்திய பாதுகாப்புச் சட்டம் என்ற கடுமையான சட்டத்தை அமல் படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாலும் இந்த வீரர்கள், வன்முறைதான் என்றாலும், தேசபக்தி காரணமாகச் செய்து பல ஆண்டுகள் சிறையில் தவம் செய்த வீரவரலாற்றை எங்ஙனம் மறக்க இயலும். குறுகிய நோக்கில் தற்போது நடைபெறும் வன்முறையோடு ஒப்பிடுகையில், தேசபக்தி காரணமாக நடந்த இந்தச் செயல் வீரச்செயலாகவே கருத வேண்டும்.

கு.ராஜவேலு சிறை சென்று மீண்ட பின்னர் சென்னை சென்று தமிழ். எம்.ஏ. தேர்வு பாஸ் செய்து, காமராஜ் முதல்வராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் தமிழ்த்துறையில் பணியாற்றி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து, வீர சாவர்க்கரின் எரிமலையைத் தமிழில் எழுதி, சிலப்பதிகாரத்துக்கு விளக்க உரை எழுதி, “வைகறை வான மீன்கள்” எனும் தலைப்பில், விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி நாவல் எழுதி, பாரதியின் குயில் பாட்டுக்கு விளக்கம் எழுதி, இன்றும் நம்மிடையே பெரும் புகழோடு வாழ்ந்து வருபவர். இவரைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளரும், பாரதி அன்பரும், தேசிய வாதியுமான பெ.சு.மணி அவர்கள் எழுதியிருக்கும் பகுதி பயனுள்ளதாக இருக்கும். அது, "பழந்தமிழ் இலக்கிய மரபையும், நவீன படைப்பிலக்கியத் தமிழ் மரபையும் இணைக்கும் தமிழ் பேரறிஞர்களுள் கு.ராஜவேலும் ஒருவர். இவ்வகையில் திருமணம் பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார், டாக்டர் மு.வரதராசனார் வரிசையில் புகழ் எய்தியவர் கு.ராஜவேலு. பதினான்கு வயதிலேயே சிறுகதை எழுதி நவீன படைப்பிலக்கியத் துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர். புதினங்கள் (Novels) பலவற்றைப் படைத்தவர்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், தமது சிறைவாசத்தையும் புதிய படைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். காந்தியடிகள் தலைமையில் நிகழ்ந்த வீறார்ந்த "வெள்ளையனே வெளியேறு" (Quit India Movement) எனும் ஆகஸ்ட் சுதந்திர போராட்ட இயக்கத்தை, சுய அனுபவ வெளியீடாக "ஆகஸ்ட்-1942" எனும் பெயரில் புதினமாக எழுதியவர். புகழ் பூத்த இலக்கிய இதழான "கலைமகள்" இவருடைய "காதல் தூங்குகிறது" எனும் புதினத்திற்கு முதல் பரிசு அளித்து கெளரவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில், இரண்டு ஆண்டுகளைச் சிறை வாசத்தில் கழித்த தியாகியாகவும் பாராட்டப்பெற்று வருபவர்.

காந்தியடிகள், நேருஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராசர் முதலான தேசியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பெரும் பேற்றினைப் பெற்றவர். குறிப்பாக பெருந்தலைவர் காமராசரின் 'நம்பற்குரிய வீரராக' என்றும் திகழ்ந்தவர். ஆசிரியரான பின்பும், மாணவராகவே இருந்து படித்துக் கொண்டிருப்பவர் என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் போற்றப்பட்டவர் கு.ராஜவேலு. "சிந்திப்பவர்க்கே நெஞ்சில் களி வளர" புதிய சிந்தனைகளைத் தமிழ் மணக்கும் உரைநடையில் வழங்கும் இவருடைய உரைநடை ஆற்றலை, டாக்டர் மு.வ., "கு.ராஜவேலுவின் உரைநடையே கவிதை" என்று புகழ்ந்துள்ளார். பெரியோரைப் போற்றலும், நடுவுநிலை தவறாத நேர்மைத் திறனும், கூரிய அறிவும், சீரிய பண்பும், பரந்த உள்ளமும் தெளிந்த நீரோடை போன்ற நடையும், கவிஞரின் உள்ளக் குறிப்பைத் தெள்ளத் தெளிய அறிந்து அதைத் தயங்காது உரைக்கும் அவரது பண்புகள்"

விடுதலையான கவிஞர் எஸ்.டி.சுந்தரம், சுதந்திர இந்தியாவில் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திரு கு.ராஜவேலு, எம்.ஏ., அவர்கள் அரசு உயர் அலுவலராக இருந்து இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இதில் கு.ராஜவேலுவின் சார்பில் 4 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் கல்லூரி தங்கும் விடுதியின் மேற்பார்வையாளர் ஒருவரும், கல்லூரி பேராசிரியர் ஒருவருமாவர். அவர்கள் 13-4-1942 அன்று ராஜவேலு விடுப்பு கேட்டு விண்ணப்பித்ததைச் சுட்டிக் காட்டினர். ஆனால் அரசாங்கத் தரப்பு சாட்சி ஒருவர் இவர் அன்று கூட்டத்தில் இருந்ததை உறுதிப்படுத்தினார். ஈரோட்டைச் சேர்ந்த முனிசிபல் கவுன்சிலர் முத்துச்சாமி அய்யர் என்பவர், ராஜவேலு ஈரோட்டுக்கு வந்திருந்ததாகச் சொன்னதும் ஏற்கப்படவில்லை. ராஜவேலுவின் சகோதரர் ஒருவர் பிரபலமான கேசவதாஸ் காளிதாஸ் சேட் என்பவரிடம் பணியாற்றி யிருக்கிறார். 

ராஜவேலு திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் படிக்கும் மாணவர். இவரும் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்களும் அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சாட்சியத்தின் வாயிலாக ராஜவேலு ஈரோட்டில் மாணவர்கள் கூட்டங்களை நடத்தி வந்தார் என்றும், அவர் நல்ல பேச்சாளர் என்றும், அவர் ஒரு தொழிற்சங்க செயலாளர் என்றும் கூறப்பட்டது. ராஜவேலு ஈரோட்டைச் சேர்ந்தவர், அரசர் கல்லூரியில் தமிழ் படிப்பதற்காக இங்கே இருந்தார் என்பதையும் நாம் சொல்ல வேண்டும்., இவர் சம்பவம் நடந்த அன்று கல்லூரியில் காலை 8 முதல் பகல் 1 வரை இருந்தார் என்று ஒரு சாட்சி. அன்று இவர் பிரின்சிபாலைச் சந்தித்து ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகிக்க அழைத்ததாகவும் சாட்சி இருந்தது. இவற்றை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

சோமசேகர சர்மா என்றொரு கல்லூரி மாணவர். அதே கல்லூரியைச் சேர்ந்தவர். இவரும் காலையிலிருந்து கல்லூரியில் இருந்ததாக உடன் படிக்கும் மாணவர் ஒருவர் சாட்சியம் அளித்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. ஆர்.கணேச அய்யர் எனும் பேராசிரியரும் இந்த மாணவன் கல்லூரியில் இருந்ததை சாட்சியம் அளித்தும் பலனில்லை. அதற்கு இந்த மாணவர் கலவரத்திலும் ஈடுபட்டுவிட்டு, கல்லூரியிலும் தலை காட்டியிருக்கலாம் என்பது போல தீர்ப்பளித்திருக்கிறார்.

13-8-1942 அன்று திருவையாற்றில் கடையடைப்பும், அதையொட்டிய பொது மக்கள் கலவரம், போலீஸ் தடியடியும், பிறகு தபால் அலுவலகம், மாவட்ட முன்சீஃப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் கோர்ட்டில் நீதிபதி கே.வி.கண்ணப்ப முதலியார், அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திருவையாறு மாவட்ட முன்சீப், மாவட்ட நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை, திருவையாறு சார்பதிவாளர் மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கை 12-8-1942, திருவையாறு போஸ்ட் மாஸ்டர், திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்குக் கொடுத்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இந்திய பாதுகாப்புச் சட்டப்படி பதிவானது. வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலை யானார்கள். மீதமுள்ள 40 பேருக்குத் தண்டனை.

மேற்படியான தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெல்லாரியில் உள்ள அலிப்பூர் ஜெயிலுக்கு அனுப்பி "C" வகுப்பில் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வாழ்க திருவையாற்றுத் தியாகிகள் புகழ்! (நன்றி: ஆவணங்களைச் சேகரித்துக் கொடுத்த வழக்கறிஞர் நா.பிரேமசாயி அவர்களுக்கு நன்றி.)



Wednesday, July 19, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி VIII

"லக்ஷ்மி ராமாயணம்" 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.
நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )
          
கார்முகப் படலம்

முற்றும் செவிமடுத்த சனகன், ‘மாயவில்லிற்கு,
தோற்றவனானே னென்றுநான் துவண் டிருக்கையில் – இவன்
நாணேற்றிடு வானேயெனில், இடர் கடப்பேன். - நாண்
ஏற்றவனை ஏற்றிடுவாள் எம்நங்கை’ என்றனன்.    268

‘குன்று போன்ற கட்டமைந்த வில்லினை,
ஈண்டு கொணர்மின்’ பணித்தனன் பணியாளரை – அவரும்
கார்முகச் சாலையின் காவல ரிடம்போய்
‘முக்கணன் வில்லினை இக்கணம் அருள்வீ’ரென்றார். 269

உறுவலி களி றொத்த மேனியர்;
செறிமயிர்க் கல் லென்ற தோளினர்;
அறுபதி னாயிரம் ஆட்களு மிடையிடையே
தறிமடுத்து தோள்சுமந்து வந்தனர் – இவ்வில்லை  270

நெடுங்காலம் தன்முதுகில் சுமந்திருந்த நிலமகள் - தம்
உடல்நோவை ஆற்றுதற்கு முனைந் தாளாம்.
கண்ணுற்ற மேருமலை நாணுற்ற தாம்!
எண்ணற்ற மிதிலைமக்கள் காண வந்தாராம்!      271

சிவனோ, அரியோ அன்றி யாருளர்
அவனியிலே இவ்வில்லைத் தீண்டு தற்கு?
அவனே வந்தி தில் நாணேற்றின்,
நங்கையின் வாழ்வும் சிறக்கு மென்றார்’ சிலர்.    272

‘வில்’ லென்று சொல்லுதல் வஞ்சகமே!
பொன்குன்றாம் மேருமலையே தானி தென்பார்.
படைக்கையில் நான்முகனே, தொட்டதவன் தவப்பயனே
இப்பிறப்பில் நாணேற்றத் தக்கவ னெவனோ?’ வென்பார். 273

நாகங்களுக் கரசனாம் ஆதி சேடனோ?
பாற்கடல் கடைந்த மந்திர மலையோ?
விண் ணின்று மண்ணில் வீழ்ந்த
இந்திரவில்லோ இது? என்றெல்லாம் பேசினராம். 274

மணவாளன் தேர்வுக்குப் பணயமாய் வில்வைத்த
மதிகெட்ட மன்னர் வேறொரு வருமுண்டோ?
முன் செய்த நல்வினை யாலிதை
முடித்தலும் கூடுமோ? கன்னியும் காண்பளோ?   275

இவ் வில்லினின்று புறப்படும் அம்புக்கு,
இலக் கெதுவும் உளதோ? என்றும்,
திருமாலே வந்திதை வளைப்பானோ! என்றும்,
விதிசெய்த சதி யிதுவோ?’ பலவாறாய் பேசினராம். 276

மன்னனின் ஆணையால் கொணர்ந்த வில்லை,
மண்ணின் மேலிடம் நெளிந்துதாழ வைத்தனராம்.
வந்திருந்த வேந்தர்கள் வியந்தனராம்! – இதனை
வளைத்திடல் எவரென விதிர்த் தனராம்.         277

யானைகன்று போன்ற வனாம் ராமனையும்,
வேதனை யளிக் கின்ற வில்லினையும்,
மாதினை எண்ணி வருந்தும் மன்னனையும்,
மாறிமாறிப் பார்த்த சதாநந்தமுனி கூறலுற்றார்.   278
                     
உமையினை ஒருமுறை தக்கன் இகழ்ந்தான் .- பின்
தொடர்ந்தான் மிகப்பெரும் யாக மொன்றை.
சினந்தனன் சிவனும்! ஏவினன் வீரபத்ரனை - அவனும்
தேவரை வதைத்து, வேள்வியை யழித்தனன். 279

மேருவை வில்லென வளைத்த சிவனும்,
பெருகிய சினத்துடன்; யாக சாலையடைய,
வேண்டினள் தேவியும் அமைதி கொண்டிட,
ஏற்றனன் சிவனும், தேவரை உயிர்பித்தான்.      280

தண்டின் சிறப்புடை அவ் வில்லை,
சனகனின் முன்னோர் வசம் சேர்த்தான்.
வில்லின் வலிமை யுரைத்த மகாமுனி,
செல்வியாம் சீதையின் கதை தொடர்ந்தார்.       281

வேள்விச் சாலையை செப்ப னிட – பொன்
கலப்பையால் நிலத்தை உழு கையிலே
கொழுமுனை தொட்டதும் புவியழ குடனும்,
பாற்கடல் அமுதென தோன்றினள் திருமகள்.      282

நற் குணங்கள் பலப்பலவும் போட்டியிட்டே,
பொற்செல்வி தாள்பணிந் தடைந் தனவாம்.
‘அழகு’என்பதும் பெருந்தவஞ் செய்து இத்
தவக்கொடி தன்னை வந் தடைந்ததுவாம்.         283

அழகும், குணமும் ஒருங்கே இணைந்திருத்தல்
ஏளிதில் ஏலாது; பிராட்டிக்கோ பிணைந்திருந்தது!
தெய்வநதி கங்கையும் பூமிக்கு வந்ததினால்,
பொலிவிழந்த மற்றநதி போலானர் நங்கைகள்.     284

வித்தகமும், விதிவசமும் வேறுவேறா யிருக்க
நிலவேந்தர் மட்டுமின்றி, அமரர்குல கணங்களுமே,
திருமகளை உடைமையாக்க விரும்பினார் போன்ற
விசித்திரமான செய்தியிவ் வுலகிலே வேறுண்டோ? 285

யானையுடனும், சேனையுடனும் இதுவரை யில்,
மணம்பேச வந்தமன்னர் எண்ணற் றவராம்.
சிவதனுசு வளைப்பானே எம் நங்கைக்கு,
தகுதி பெற்றோ னெனயாம் வலித்திருந்தோம்.      286

முயற்சிசெய்த மன்னர்பலர், எடுப்பதற்கே
முடியாமல் போனதனால் சினம் கொண்டார்.
அறைகூவி சேனையுடன் போர் தொடுக்க,
குறிக்கோளில் வழுவாது எதிர்த்தனன் சனகனும்.    287

 குறைந்தன மன்னனின் மாபெரும் படைகள்,
இருப்பினும் கருத்தினில் உறுதியைக் கூட்டினன்.
நடப்பதை விருப்புடன் நோக்கிய தேவர்கள்
படையீந்தார் மன்னனவனின் எண்ணமது ஈடேற!    288

வில்லினின்று நாணேற்ற எவருமே யில்லை!
மங்கலநாண் கழுத்தினிலே ஏறுவ தெப்போ?
இன்றுஇவன் நாணேற்றி விடுவானெ னில்
நன்று! நங்கையவள் நல்லிளமை நலியாதென்றான்.  289

முனிவனுரை முழுவதையும், முடிதரித்த கௌசிகன்
முடியும்வரை செவிமடுத்து, மனதுள்ளே குறிப்பெடுத்தான் – பின்
வடிவான ராமன்தன் கருணைமுகம் நோக்கிட்டான்.
உட்கருத்தை உணர்ந்தவன், பொருள்படவே வில்பார்த்தான்! 290

வேள்வித்தீயுள் ஆகுதிநெய் பொழிந்த விடத்திலே
பொங்கியெழும் கொழுகனலாய் தசரத புத்திரன்,
அங்கிருந்த வில்லெடுத்து வளைத்திடும் நோக்கில்,
ஆசனத்தின் மீதிருந்து அனலா யெழுந்தான்.      291

‘அழிந்தது வில்லென’ ஆர்பரித்தனர் விண்ணவர்.
மொழிந்தனர் ஆசிகளை, முப்பகைவென்ற முனிவர்கள்.
‘செவ்விய நிறமுடையிவனின் கரம்பிடிக்கா விடில் - நாமும்
நங்கையுடன் தீக்குளிப்பதே நன்றெ’ன்றார் மங்கைகள் - இப்  292

‘பிள்ளை சீதையை மண முடிப்பேனெனில்,
கொள்ளென இவனிடம் கொடுப்பதை விடுத்து,
வில்லினை வளைத்திட வேண்டு மென்று – இவ்
வள்ளல்முன் போட்டது பேதைமை யன்றோ?’  293

தோகையர் இவ்விதம் சொல்லி யிருப்ப,
தேவர்கள் மகிழ, முனிவர்கள் வாழ்த்த,
எருதும், சிங்கமும், யானையும் நாண,
வீறுநடையுடன் வில்நோக்கி நடந்தான் ராமன். 294

மலைபோ லிருந்த அவ் வில்லை - பூ
மாலையெனவே கையி லெடுத்தான்.
இமைத்திட மறந்திட்ட சபையோர் களும்,
நிகழ்ந்திடும் அதிசயம் நோக்க லுற்றார்.        295

ஒரு நொடிப்பொழுதினில் வில்லேந்தி
திருவடி யடியினில் நுனி யூன்றி
மறுமுனை நாணைப் பூட்டு தற்காக
எடுத்தது கண்டார்; இற்றது கேட்டார்.           296
                             
முறிந்த வில்லின் முழக்கத்தா லமரர்கள்
யாரிடம் அடைக்கலம் புகுவோமென விழிக்க,
இடிதாக்கித்தென்று ஆதிசேடனே ஓடிஒளிய,
பாரிலுள்ளோர் நிலைபற்றி பகர்வ தெங்கனம்?   297

கண்ணுற்ற விண்ணோர் பூமழை சொரிய,.
பொன்மழை பொழிந்ததுவாம் வான்மேகம்!
முனிகணங்கள் ஆசிகூற; பன்மணிகள் கடல்தூவ,
நல்வினைப் பயந்ததென, பயந்தெளிந்தான் சனகமன்னன்.298

பல்வகை வாத்தியங்கள் முழங்கி யதாம்
முந்நீர் நிலைகளும் பொங்கி யெழுந்ததாம்.
கார்மேகம் கண்ட தோகை மயில்களென
ஊர்மக்கள் கொண்டாடி கூத்தா டினராம்.         299

மங்கையர்கள் அமுதகீதம் பாடத் துவங்கினர்.
பாணர்களும் மகரயாழை மீட்டத் தொடங்கினர்.
தேவர்களும் செவியாரக் கேட்டு ரசித்தனர்.
ஒளிபொருந்தும் சிலைபோலே லயித்து நின்றனர்.300

தேவலோக அரம்பையர்கள் மிதிலை வந்தனர்.
சிவதனுசு முறிந்தநிலையைக் கண்டு மலைத்தனர்.
தசரத மைந்தன், தாமரைக் கண்ணன்,
மானுடன் அல்லன், நாரணன் இவனென்றும்,     301

புயலும், மேகமும், மேனியாய் கொண்ட,
புருஷோத் தமனை நங்கை பார்ப்பதற்கு
நயனங்கள் ஆயிரம் வேண்டு மென்றும்
சானகி பார்த்தலும் சமம்தானே யென்றும்,        302

இளையவன் இவன்தம்பி சளைத்தவ னில்லை.
உலகம் செய்தது அரும்பெரும் பாக்கியம்!
அவனியில் இவர்களைப் பெறுவதற்கு – என
களிப்புடன் பற்பல கூறிக் கொண்டார்.            303     

(இன்னும் உண்டு)