பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 26, 2015

67. சமூகம் - பொதுக் குறிப்புகள்


                 மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக் கூடம் நடத்துவதற்கு அதிகப் பணம் செலவாகாது.  மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத் தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும் தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள் அதிகத் தொகையும் மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 100 ரூபாய் கூடவசூல் செய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து உபாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12 ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள், "ஸயன்ஸ்" கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100 ரூபாய் வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபதுபோக மிச்சத் தொகையை மேற்படி கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப் படுத்தலாம். மேற்படி கருவிகள் எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்டு வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந் தோறும் மிஞ்சுந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால் போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பணத்தைப் பள்ளிக்கூடத்துக்கு க்ஷேமநிதியாக ஒரு யோக்கியமான ஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறன்றி ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியன வாங்குவதற்குப் பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றை வாங்கிக் கொண்டு விட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

             மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களை க்ஷேமநிதியாகச் சேர்த்து வந்தால் பதினைந்து  வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு, மாஸ வசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்தநிதியைக் கொண்டே நடத்தி வரலாம். தவிரவும், அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலங்களில் ஸம்பாவனை, விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியைப் போஷணை செய்து வரலாம்.

எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யாதானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்தி பெற்றதாகிய நமது நாட்டில், இத்தகைய பள்ளிக்கூட மொன்றை மாஸ வசூல்களாலும், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம்.

இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேக உடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல் கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்தவேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவோரும் ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸபையாகச் சமைத்து அந்த ஸபையின் மூலமாகப் பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்படவேண்டும். இந்த நிர்வாக ஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர் தவறாமல் அத்தனை பேருக்கும் சீட்டுப்போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும்.

         இத்தகைய கல்வி கற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூடச் சம்பளம் வசூலிக்கக்கூடாது. தம்முடைய பிள்ளைகளுக்குச் சம்பளம் கொடுக்ககூடிய நிலைமையிலிருந்து அங்ஙனம் சம்பளங் கொடுக்க விரும்புவோரிடம் அத்தொகைகளை நன்கொடைகளாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்திரங்களும் இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

          ஆண் மக்களுக்கு மட்டுமின்றி, இயன்றவரை பத்து வயது மட்டுமேனும் பெண் குழந்தைகளும் வந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யலாம். அங்ஙனம் செய்தல் மிகவும் அவசியமாகவே கருதத் தகும். ஆனால், ஜனங்கள்  அறியாமையால் இங்ஙனம் பெண் குழந்தைகளும் சேர்ந்து படிக்கும் விஷயத்தில் ஆக்ஷேபம் சொல்லக்கூடிய கிராமங்களில், இதை வற்புறுத்தாமல் முதலில் ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரமாவது தேசியக் கல்வி பயிற்ற ஏற்பாடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு இதே மாதிரியாக உபாத்திச்சிமார் மூலமாகக் கல்வி பயிற்றக்கூடிய இடங்களில் அதனையும் செய்யலாம்.

பாடசாலை வைப்பதற்குத் தக்க இடங்கள் செல்வர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது ஸெளகர்யப்படாத இடங்கலில் கோயில்கள், மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம். அதிகப் பணம் செலவின்றி ஸெளகர்யமும், நல்ல காற்றோட்டமும், ஒளிப் பெருக்கமுமுடைய கூறைக் கட்டிடங்கள் கட்டி, அவற்றில் பாடசாலை நடத்தினால் போதும். இடம் பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏராளமான பணம் செலவு செய்து கட்டிடங்கள் கட்ட வேண்டிய அவசியமுமில்லை. ஸாதாரண ஸெளகர்யங்கள் பொருந்திய இடங்களில் கல்வி நன்றாகக் கற்பித்தால் அதுவே போதும்.
இங்ஙனம் ஆரம்பப் பாடசாலைகளில் படித்துத் தேறும் பிள்ளைகள் அந்த அளவிலே ஏதேனும் தொழில் அல்லது வியாபாரத் துறையில் புகுந்து தக்க ஸம்பாத்யம் செய்யத் தகுதியுடையோராய் விடுவார்கள். அங்ஙனமின்றி, நாட்டிலுள்ள பல உயர் தரப் பாடசாலைகளில் அவர்கள் சேர்ந்து மேற்படிப்புப் படிக்க விரும்பினாலும் அதற்கு இப்பள்ளிக்கூடங்கள் தக்க ஸாதனங்களேயாகும். மேலும் அவ்விதமான ஆரம்பப் பாடசாலைகள் நன்கு நடந்து வெற்றி பெற்று விடுமாயின், அப்பால் இதே கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட மேல்தர தேசியப் பாடசாலைகள் ஏற்படுத்தக் கூடிய இடங்களில் அங்ஙனம் செய்யலாம்.

முக்கியமான குறிப்பு: ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால் அவரவர் மதக் கொள்கைகளை அன்னிய மத தூஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக் குடுப்பதற்குரிய வழிகள் செய்ய வேண்டும். 

                                                                                       முடிவுரை

                  தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக்கல்வி இன்றியமையாதது. தேசீயக் கல்வி கற்றுக்கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தைரவீந்திரநாத் தாகூர், ஆனி பெஸண்ட், நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்து, நம்நாட்டில் தேசீயக் கல்வியைப் பரப்புவதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால் இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற்கடமையாகும்.


No comments:

Post a Comment

You can give your comments here