பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 28, 2013

நேபாளம்.

 இமயமலையில் அமைந்துள்ள நாடு. மன்னராட்சி இருந்த இந்து நாட்டில் புரட்சி ஏற்பட்டு இப்போது ஜனநாயகம் மலர்ந்துள்ள நாடு. இந்தியா சீனாவுக்கு இடையில் அமைந்து இமயமலையின் உயர்ந்த இடத்தில் உள்ள அழகான நாடு. காட்மாண்டு போக முடியாதவர்கள் இந்தப் படங்களில் நேபாளத்தைப் பார்த்து விடுங்கள். இந்தப் படங்களை எடுத்தவர் அந்தந்த படங்களிலே உள்ளது. அவருக்கு நமது நன்றிகள்.
                                                    காட்மாண்டு விமான நிலையம்

நேபாள ராஜாவின் அரண்மனை

ஜனக்பூர் எனுமிடத்திலுள்ள நீர் தேக்கத் தொட்டி

ஜனக்பூரிலுள்ள கோவில்

பக்தாபூர் ‍ நேபாளத்திலுள்ள ஒரு நகரம்

பக்தாபூர் சந்தை

காட்மாண்டுவில் காய்கறி விற்கும் பெண்

நேபாளத்தின் அழகிய குழந்தைகள்

நேபாளத் தலைநகர் காட்மாண்டு ஒரு காட்சி

Monday, May 20, 2013

தலைவர் ம.பொ.சி. பட்ட கல்லடி

1953-54இல் ராஜாஜி கொண்டு வந்த ஆரம்பக் கல்வி சீர்திருத்தத் திட்டமும்   தலைவர் ம.பொ.சி. பட்ட கல்லடியும்.

சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. ஒரு காந்தியவாதி. தோற்றத்தால், அணியும் வெண்ணிற கதராடையால், இணைந்திருந்த அரசியல் கட்சியால் மட்டுமல்ல, நடத்தையால், நேர்மையால், சிந்தனையால் அவர் ஒரு சுத்த சுயம்பிரகாச காந்தியவாதி. புத்தகங்களில் படித்தோ, பிறர் சொல்லிக் கேட்டோ நான் இந்த முடிவுக்கு வரவில்லை. அந்த மகானை (நான் அப்படித்தான் மதிக்கிறேன்) நேரடியாகப் பார்த்ததாலும், அவர் உரைகளைக் கேட்டதாலும், அவருடைய பத்திரிகைகளுக்கு முகவராக இருந்து நானும் படித்து, கடைகள் மூலமாக பொதுமக்கள் வாங்கும்படி செய்ததாலும், தமிழரசுக்கழகம் சேலம் மகாநாட்டுக்குப் போய் அதன் பின்னர் பல விழாக்கள் பாரதி விழாக்கள் உட்பட பலவற்றில் பங்கு கொண்டதாலும், அவருடன் ஓரளவு பழக்கமிருந்ததாலும், அவரை மிஞ்சிய ஒரு தலைவரை நான் இன்றுவரை காணவில்லை என்றே உறுதி கூறுவேன். அப்படிப்பட்ட பெரும் தலைவர் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள் பலப்பல. ஆனால் பொது மேடையில் அவர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கொடுமையானது, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அந்த நிகழ்ச்சி பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன்.

ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது 1953-54இல் ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகளைச் சேர்க்க வேண்டுமென்கிற ஆவலில், போதுமான பள்ளிகள் இல்லாததால் ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி இரு மடங்கு மாணவர்களைப் படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு மாற்றுக் கல்வித் திட்டம் கொண்டு வந்தார். இந்த கட்டுரையின் நோக்கம் அந்தத் திட்டம் சரியா, தவறா அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதா, அல்லது அதனைக் கொண்டுவந்தவர் யார் என்பதால் அப்படிப்பட்ட எண்ணம் பரப்பப்பட்டதா என்ற விவாதத்திற்குள் புகுவதற்காகவோ அல்லது அந்தக் கல்வித் திட்டம் பற்றி அபிப்பிராயம் சொல்லவோ அல்ல. ம.பொ.சி. எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை மட்டும் அவர் எழுதிய கட்டுரையை அடியொற்றி இந்தக் கட்டுரையில் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

வடவெல்லை, தெற்கெல்லை போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போதே மற்றொரு போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய அவசியம் ம.பொ.சிக்கு ஏற்பட்டது. ராஜாஜி கொண்டு வந்த 'ஆரம்பக் கல்வி சீர்திருத்தத் திட்டத்'திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை முறியடிக்கும் போராட்டமாகும் என்கிறார் அவர்.

அடிப்படையில் காங்கிரஸ்காரனாக இருந்த அவர், காங்கிரஸ் அரசு கொண்டு வரும் எந்தத் திட்டத்தையும் ஆதரிக்கக் கடமைப் பட்டவர். ஆதரிக்க மறுப்பதோ, எதிர்ப்பதோ கட்சிக் கட்டுப்பாட்டைக் குலைக்கும் துரோகச் செயல் என்பது அவர் எண்ணம். முதல்வர் ராஜாஜியிடம் தமிழ்நாடு காங்கிரசுக்கு - அதன் தலைவர் காமராஜருக்கு நல்லெண்ணம் இருக்கவில்லை என்பது ம.பொ.சியின் கருத்து. ஆகையால் ராஜாஜி கொண்டு வந்த ஆரம்பக் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து எழுந்த போராட்டத்தை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் முன்வரவில்லை என்கிறார். அந்தப் பணியைத் தான் ஏற்றுக் கொண்டு தமிழரசுக் கழகம் சார்பில் போராட வேண்டியிருந்தது என்பது ஐயாவின் கருத்து. அதுமட்டுமல்லாமல் ராஜாஜியுடன் அவருக்கிருந்த நட்பும் மரியாதையும் கூட அவரை இந்தப் பணியில் ஈடுபடத் தூண்டியது என்கிறார்.

இது குறித்து ம.பொ.சி. "எனது போராட்டம்" நூலில் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.

"ராஜாஜி கல்வித் திட்டம் 1953-54ஆம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றத்தின் - சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியின் - நாட்டிலுள்ள கல்வி நிபுணர்களின் கருத்தை அறியாமலே தமது திட்டத்தைச் செயல்படுத்த ராஜாஜி முயன்றார். இது எதேச்சதிகாரப் போக்காக காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அவருடைய எதிரிகளால் கருதப்பட்டது.

ராஜாஜியின் திட்டத்தில் புதுமையோ, புரட்சியோ ஒன்றுமில்லை. வெறும் 'ஷிஃப்ட் முறை' அவ்வளவுதான். ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயிற்றுவிக்கும் நேரம் 6 மணியாக இருந்ததை 3 மணியாகக் குறைத்தார். மீதமுள்ள 3 மணி நேரத்தில் குழந்தைகள் பெற்றோர் செய்யும் தொழிலில் பங்கு கொள்ளவும் அதிலே பயிற்சி பெறவும் வாய்ப்பு தரப்படுவதாக முதல்வரால் சொல்லப்பட்டது.

'ஒருவேளை பள்ளிப் படிப்பு' என்ற ராஜாஜி திட்டத்தால் அதிகப்படியாக 45 லட்சம் குழந்தைகள் கல்வி பயில வசதி கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டது. அது உண்மைதான்.

அரசியல் சட்டத்தில் 1960ஆம் ஆண்டுக்குள் -- அதாவது, சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டு நிறைவு பெறுவதற்குள் 14 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவரையும் பள்ளிகளுக்குக் கொண்டு வந்து விடவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றும் பொறுப்பு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் பதவி ஏற்ற ராஜாஜியுடையதாக இருந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வரவேண்டிய பருவத்திலுள்ள அவ்வளவு பிள்ளைகளுக்கும் கட்டாயமாகவும் இலவசமாகவும் கல்வி தருவதென்பது சாதாரண விஷயமல்ல. பெரும் செலவுக்குரிய பொறுப்பாகும். முழு நேரக் கல்வி முறைப்படி இதனை நிறைவேற்றுவதானால், ஆயிரக்கணக்கில் புதிய பள்ளிகள் நிறுவி, பதினாயிரக்கணக்கில் புதிதாக ஆசிரியர்களை நியமித்தாக வேண்டும். ஏழ்மை மிகுந்த நம் நாட்டில் அது சாத்தியமன்று. அதனால் "அரை நாள் கல்வி" மூலமாகத்தான் அனைவருக்கும் கட்டாயக் கல்வி தர முடியும் என்று அரசு கருதியது.

ராஜாஜி புகுதிய கல்வித் திட்டத்தில் அதுவரை போதிக்கப்பட்டு வந்த பாடங்களில் எதுவும் குறைக்கப்படவோ, கைவிடப்படவோ இல்லையென்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தமது திட்டத்தில் இல்லாத ஒன்றை தமது பேச்சிலே ராஜாஜி வற்புறுத்தி வந்தார். ஆம்! அப்பன் தொழிலை மகன் செய்ய எனது திட்டம் வழி செய்கிறது என்று அவர் பேசி வந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு ராஜாஜி திட்டத்திற்குக் "குலக் கல்வித் திட்டம்" என்று பெயர் தந்தது தி.மு.க.

உண்மையிலேயே, சலவைத் தொழிலாளி மகன் சலவைத் தொழில்தான் செய்ய வேண்டும், க்ஷவரத் தொழிலாளி மகன் க்ஷவரத் தொழில்தான் செய்ய வேண்டும்; தோட்டியின் மகன் தோட்டித் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்க முடியாதுதானே! அதையும் ஒரு பிராமணர் சொன்னதால் சாதிப் போர் மூண்டது.

"அரை வேளைக் கல்வி" என்பது மலேசியா முழுவதிலும் நடைமுறையிலிருப்பதனை நான் 1964இல் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது நேரில் கண்டேன். கேரளத்திலும் அரை நாள் கல்வி முறை அமலில் இருக்கிறது. தமிழ் நாட்டிலும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் இது கடைப்பிடிக்கப் படுகின்றது.

என்ன செய்யப்படுகிறது என்பதைவிட, யாரல் செய்யப் படுகிறது என்பதற்கே முதன்மை தரப்பட்டது. அதனால், வகுப்புவாத அரசியல் நோக்குடன் ராஜாஜியின் கல்வித் திட்டம் தி.மு.க.வால் எதிர்க்கப்பட்டது. கொஞ்சம் தாமதித்து தி.க.வும் புதிய கல்வித் திட்டத்தை எதிர்க்கத் தொடங்கியது. தி.மு.க. ஜூலை 14இல் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனால் மாநில முழுவதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியிலும், டால்மியாபுரத்திலும் ரயில் நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 9 பேர் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில் கல்வித் திட்ட எதிர்ப்பானது பிராமண எதிர்ப்பாக, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக மாறியது. ஆரம்ப கட்டத்தில் இவ்வளவையும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழ்நாடு காங்கிரஸ். ஒரு கட்டத்தில் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசவும் முற்பட்டார் திரு காமராஜ். தூத்துக்குடி, டால்மியாபுரம் துப்பாக்கிச் சூடுகளினால் பொதுமக்கள் அனுதாபம் தி.மு.க. பக்கம் திரும்பியது. அந்த நேரம் பார்த்துப் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசினார் காமராஜ்; கல்வித் திட்டம் சரியா தவறா என்பதில் அவருக்குக் கவலையில்லை. ராஜாஜி ஆட்சியை வெளியேற்றி, தான் அதிகாரத்திற்கு வர அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ("எனது போராட்டம்" பக்கம் 392)

ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரித்துத் தமிழரசுக் கழகச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. மாநிலமெங்கணும் மாநாடுகளும் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்திக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவளித்துப் பிரச்சாரப் போர் நிகழ்த்தியது.

மாயவரத்திலே 6-9-1957 அன்று தாலுகா தமிழரசு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் முடிவில் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரித்துத் தனிச் சொற்பொழிவு நிகழ்த்தினேன். மாநாட்டிலே ஒரு சாரார் திட்டமிட்ட முறையில் எனக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அதனைச் சமாளித்து, மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மாநாட்டுப் பந்தலில் இருந்து வெளியேறினேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்குக் கழக முன்னணித் தோழர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகரிக்கவே ஊர்வலம் போல் ஆகிவிட்டது. வழியில் இருள் சூழ்ந்த ஒரு சாலை வழியாகச் சென்றபோது ஒரு கும்பல் என் கண்ணில் மண்ணை வாரிக் கொட்டியது. அந்த நேரத்தில் யாரோ ஒருவன் கூர்பொருந்திய இரும்புக் கத்தியொன்றால் எனது நெற்றியின் வலப்புறத்தில் வெட்டினான். உடனே, காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. பின்னர், பெரிய கலவரம் நடந்தது. நான் விரைவாக டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு வெட்டுக் காயத்திற்குக் கட்டுப் போட்டுக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அன்று இரவே ரயில் ஏறிச் சென்னை திரும்பினேன்.

மறுநாள் காலை சென்னை போலீஸ் டெபுடி கமிஷனர் ஒருவர் என்னை அணுகி, "தாங்கள் மயவரத்தில் தாக்கப்பட்டது இரவே முதலமைச்சருக்குத் தெரிந்து விட்டது. தங்களை விசாரித்துவிட்டு தகவல் தரச் சொன்னார்" என்றார். நான், "நல்ல வேளையாக, காயம் சொற்பம்தான், அபாயம் ஒன்றுமில்லை என்று முதல் அமைச்சருக்குச் சொல்லுங்கள்" என்றேன்.

அவர் போன சிறிது நேரத்திற்குள் மற்றொரு போலீஸ் சி.ஐ.டி. அதிகாரி வந்து என்னை அழைத்துக் கொண்டு போய் ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு 6 நாட்கள் தங்கிச் சிகிச்சை பெற்றேன். காயம் ஆழமானதுதான். டாக்டர் ஏ.எஸ்.ராமகிருஷ்ணன் காயம்பட்ட இடத்தில் தையல் போட்டார்.

"கிராமணியாருக்கு வயது நூறு" என்று தலைப்பிட்டு "கல்கி" 20-9-1953 இதழில் எழுதப்பட்ட நீண்ட தலையங்கத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:

"தமிழ்மொழி சொல்வளம் மிகுந்த, ஆற்றல் நிறைந்த மொழி. ஆயினும் ஸ்ரீ ம.பொ.சிவஞான கிராமணியாரைத் தாக்கி காயப்படுத்திய கயவர்களின் செயலைக் கண்டிப்பதற்கு வேண்டிய ஆற்றல் உள்ள சொற்கள் தமிழ்லே கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.

திரு ம.பொ.சிவஞானம் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்து பாட்டாளியாக இருந்து பாடுபட்டு வாழ்ந்தவர். தமது அறிவினாலும், ஆற்றலினாலும், ஒழுக்கத்தினாலும் உறுதியுள்ள உழைப்பினாலும் அரசியல் தலைவராக உயர்ந்தவர். தெய்வத் தமிழ் மொழியைத் தமது சொந்த முயற்சியினால் கற்று வளர்ந்து, பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ச்சி அறிவுடன் கற்றுத் தேர்ந்து, புலவர்களும் பாராட்டக் கூடிய தமிழ்ப் புலமை பெற்றவர். பிரசங்க மேடைகளில் இணையற்ற வன்மையுடன் தமிழைக் கையாளும் திறமை பெற்றவர். அரசியல் வாழ்க்கையில் புகுந்தது முதல் தமக்கென எதையும் வேண்டாது பொதுமக்களுக்கே ஓயாது உழைத்துப் பாடுபட்டு வருகிறவர்.

உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் தொண்டினாலும் தியாகத்தினாலும் உயர்ந்த ம.பொ.சி.யைப் பற்றித் தமிழ் நாட்டில் தமிழரகப் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொண்டு தோள்கள் பூரிக்க வேண்டும்.

அதற்கு மாறாக, அவரைக் கூட்டத்திலேயிருந்து கோழைத்தனமாகத் தாக்க முற்பட்டவர்களைப் பற்றித் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இத்தகைய கொடிய தாக்குதலுக்கு உள்ளாகிப் பிழைத்தெழுந்த திரு ம.பொ.சிவஞான கிராமணியார் இறைவன் அருளினால் நூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ்ந்து தமிழகத்துக்குப் பணி செய்வார் என்று நம்புகிறோம்.

திரு ம.பொ.சியின் நெற்றிக் காயத்திலிருந்து கொட்டிய ஒவ்வொரு இரத்தத் துளியிலிருந்தும் நூறு நூறு இளம் சிவஞானங்கள் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாயவரம் நகரமும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள கிராமங்களும் தேசபக்திக்கும், தமிழ்ப் பற்றுக்கும் பெயர் போனவை. ஒரு சில கயவர்களின் செயலால் மாயவரத்தின் நற்பெயருக்கு இப்போது மாசு நேர்ந்திருக்கிறது.

மறுமுறை திரு ம.பொ.சி. மாயவரத்திற்கு விஜயம் செய்யும்போது மாயவரம் நகரிலும் சுற்றுப்புற கிராமங்களிலுமுள்ள தமிழ்ப் பெருமக்கள் திரண்டு வந்து அவருக்கு மகத்தான மாபெரும் வரவேற்பு அளித்து மாயவரத்துக்கு நேர்ந்த மாசினைத் துடைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.' (கல்கி 20-9-1953)

மாயவரத்தில் நான் தாக்கப்பட்ட செய்தி மறுநாள் தமிழ் ஆங்கில நாளிதழ்களிலே பிரதான இடத்தில் பெரிய தலைப்புக்களுடன் பிரசுரிக்கப்பட்டது. அந்த வாரத்திலே தமிழ்நாடு முழுவதும் தமிழரசுக் கழகம், காங்கிரஸ் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னைக் கடற்கரையிலும் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதுரையில் மாணவர் கூட்டம் ஒன்றில் விம்மியழுத வண்ணம் தமது வேதனையை வெளிப்படுத்திப் பேசியது வருமாறு.

"தமிழகத்தின் தந்தை தாக்கப்பட்டிருக்கிறார். தமிழர் தலைவர் தாக்கப்பட்டிருக்கிறார். ஆம், தமிழ் மொழியே தாக்கப்பட்டிருக்கிறது. சொல்லால் ம.பொ.சியை வெல்ல முடியாதவர்கள் கல்லால் வெல்ல கனவு காண்கிறார்கள்."

நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த 'பிரசண்ட விகடன்', தி.க.நாளிதழான 'விடுதலை ஆகியவைகளும் மாயவரம் நிகழ்ச்சி பற்றி எழுதியது. திரு காமராஜ் கோஷ்டியிலிருந்த திரு எஸ்.எஸ்.மாரிசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பேரிகை' வாரைதழிலும், 'விடுதலை' இதழிலும் காங்கிரசில் இருக்கும் ஒரு குழுவினர்தான் இதற்குக் காரணம் என்று எழுதின.

மாயவரம் தாக்குதல் நடந்த ஒரு மாதம் கழிந்த பின் 11-10-1953 அன்று மீண்டும் அதே மாயவரத்தில் தமிழரசுக் கழகம் சார்பில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசினார். இந்தக் கூட்டத்துக்குப் போகவேண்டாமென்று ம.பொ.சியை ராஜாஜி தடுத்தார். அதையும் மீறி ம.பொ.சி. மாயவரம் கூட்டத்துக்கு வந்து பேசினார். நகர்மன்ற உறுப்பினர் ஏ.எம்.இஸ்மாயில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைக் காயம் ஆறிவிட்ட போதும், அடிபட்ட தன்மான உணர்ச்சி காரணமாக மாயவரத்தில் திரும்பவும் வந்து பேசினார் ம.பொ.சி. மக்கள் வெள்ளம் போல் கூடியிருந்தனர். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

மாயவரம் திராவிட இயக்கத் தோழர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து மாஜிஸ்டிரேட் முன் நிறுத்தப்பட்டனர். வழக்கில் ம.பொ.சி.யும் ஒரு சாட்சியாக விசாரிக்கப் பட்டார். அப்போது ம.பொ.சி. மாஜிஸ்டிரேட்டிடம் "குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்வதையே நான் விரும்புகிறேன்" என்றார். அதற்கு மாஜிஸ்டிரேட் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் தாம் யோசிப்பதாகக் கூறினார். ஆனால் குற்றவாளிகள் மன்னிப்புக் கேட்க மறுத்து எதிர் வழக்காடினர். விசாரணையின் முடிவில் அவர்களில் மூன்று பேருக்கு 6 வாரக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இருவர் விடுதலை பெற்றனர்.

ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்கு சட்டமன்றக் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. திட்டத்தைக் கைவிடுமாறு அவர் வற்புறுத்தப் பட்டார். அப்படி வற்புறுத்தியவர்களில் ம.பொ.சியும் ஒருவர். ராஜாஜி ஆட்சி நீடிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தாலேயே தான் அப்படிச் செய்ததாக அவர் கூறினார். ஆனால் ராஜாஜி, கல்வித் திட்டத்தைக் கைவிட மறுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதுவும் நம் தமிழ்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட நிகழ்ச்சி, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதால் இதனை விரிவாக இங்கு கொடுத்திருக்கிறேன்.Sunday, May 19, 2013

வடக்கு எல்லை போராட்டம் (பகுதி 5)

வடக்கு எல்லை போராட்டம் (பகுதி 5)
Tiruthani Murugan temple


திருத்தணியில் நடத்தப்பட்ட வன்முறை காரணமாக முதல்வர் ராஜாஜி மன வருத்தமடைந்தார். ம.பொ.சி. தனது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முயற்சி செய்வதும், தடை விதித்தால் அதனை மீறி கைதாகவும் ம.பொ.சி. முடிவு செய்தது கண்டு ராஜாஜி அவருக்கு ஒரு தந்தி அனுப்பினார். அதில்

"தாங்கள் தடையை மீறிச் சிறை புகுவதற்கு முடிவு செய்து விட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அத முயற்சியைக் கைவிட்டு, உடனே சென்னைக்கு வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்."
சி. இராஜகோபாலாச்சாரி.

இந்த தந்தியைக் கண்டு ம.பொ.சி. தன் முடிவை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக பதில் கடிதம் ஒன்றை ராஜாஜிக்கு அனுப்பினார். அதில் தான் சித்தூர் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவை மீறி சிறை புகுவதென முடிவு செய்திருந்ததையும், ராஜாஜியின் தந்தியைப் பார்த்ததும் அவருடைய வேண்டுகோளையும் இப்போது மீறவேண்டியிருப்பதற்கு வருத்தம் தெரிவித்தும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் ம.பொ.சி. ராஜாஜியிடம் இப்போதுகூட ஒன்றும் மோசம் போய்விடவில்லை. தாங்கள் பிரதமர் நேருவிடம் பேசி சித்தூர் மாவட்டம் தகறாறுக்குரிய மாவட்டம் என்பதால் அதனை முழுவதுமாக ஆந்திரத்தில் சேர்ப்பதை கைவிட்டு ஒரு கமிஷன் நியமித்து நிலைமையை நேரில் அறிந்து அதன் முடிவுப்படி நடந்து கொள்ளலாம் என்று பிரதமர் அறிவித்தால் போராட்டத்தைக் கைவிடலாம் என்று அறிவித்தார்.

1953 ஜூலை 3ஆம் தேதி ம.பொ.சி.யும் திருத்தணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் என்பாரும் அவ்வூர் காந்தி சிலை முன்பு ஒரு மேஜை மீதேறி நின்றுகொண்டு மக்களுக்கு வடக்கெல்லை மீட்பு போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். உடனே காவல்துறை பாய்ந்து சென்று அவர்களைக் கைது செய்து சப் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்ற சத்தியாக்கிரகிளை போலீசார் புளியம் மிளாறினால் அடித்து ரண காயப்படுத்தினர். இந்த புளியம் மிளாறு அடி 1930இல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட உத்தி. தொண்டர்களை அங்கு அடித்த போலீஸ் சிறைப்பட்ட ம.பொ.சியிடம் மிக்க மரியாதை காட்டினர். மாவட்ட எஸ்.பி. வந்து தலைவரைப் பார்த்து பேசினார். அவரை அன்று மாலையே ஒரு மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு சென்று விசாரித்து அவரை இரவு 7 மணிக்கு ஆறு வாரம் சிறை தண்டனை அளித்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.

அன்று இரவு என்ன நடந்ததோ, மறுநாள் காலையில் பிரதமர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் சித்தூர் மாவட்டம் பிரச்சினைக்குரிய மாவட்டம் என அறிவித்து, அதனை தீர விசாரித்தறிய ஒரு எல்லைக் கமிஷன் அமைக்கப்படும் என்றும் நேரு அறிவித்த செய்தி காலை செய்தித் தாள்களில் வந்தது. அதைத்தானே தலைவரும் எதிர்பார்த்தார். தன் போராட்டம் வெற்றி அடைந்து மத்திய அரசை தங்கள் கோரிக்கையைப் புரிய வைத்தமை கண்டு தலைவர் மகிழ்ச்சி யடந்தார்.

பிரதமர் நேருவின் அறிவிப்பின்படி கர்நூலைத் தற்காலிக தலைநகராகக் கொண்டு ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கர்நூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களோடு சித்தூரின் தெலுங்கு பேசும் பகுதிகளையும் சேர்த்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் என்பது தெளிவாகியது.

சென்னை திரும்பிய ம.பொ.சி. ராஜாஜியைப் போய் சந்தித்தார். அவருடைய தந்தியைப் பார்த்து போராட்டத்தை வாபஸ் வாங்காததற்காக வருத்தம் இல்லையே என்று ராஜாஜியிடம் கேட்டார். அவர் சொன்ன பதில்:

"நீங்கள் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தீர்கள். நான் அரசுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது" என்றார் ராஜாஜி. அதுதான் பெரியவர்களுடைய மனநிலை.

நாட்டில் பல திசைகளிலிருந்தும் ம.பொ.சிக்கு பாராட்டு குவிந்தன. பத்திரிகைகள் புகழ்னதன. இப்படி நாடே அவருடைய முயற்சியைப் பாராட்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில்

"காங்கிரஸ்காரராகிய தாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறியது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். ஆதலால், தங்களைச் சட்ட மன்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலக்கக் கூடாது என்பதற்கு 15 நாட்களுக்குள் தாங்கள் காரணங்காட்ட வேண்டும்" என்று அதில் இருந்தது.

ம.பொ.சி. அதற்கும் பதில் அனுப்பினார். அவருடைய பதில் மறுப்பு சொல்லவோ, அவரைக் கட்சியிலிருந்து நீக்கவோ முடியாமல் போயிற்று. பின்னர் ஆந்திர பிரிவினை குறித்து சட்ட மன்றத்தில் விவாதம் வந்தது. ஆந்திரம் பிரிவது உறுதியானது. விளைவு ஆந்திரகேசரி டி.பிரகாசம் "புதிய ஆந்திரத்தின் தந்தை" என்று போற்றிப் புகழப்பட்டார். புதிய ஆந்திராவின் முதன் மந்திரியாகவும் அவர் பதவி ஏற்றார்.

தமிழகத்தில், தலை நகரைக் காக்கவும், வடக்கெல்லை பகுதிகளை மீட்கவும் தன்னந்தனி ஆளாக நின்று போராடிய ம.பொ.சி.க்கு மக்களின் பாராட்டும், பத்திரிகைகளின் பாராட்டும் கிடத்ததேயன்றி அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ அவருக்கு உரிய மரியாதையைத் தந்தார்களா? வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் தெரியும். பின்னாளில் அனைத்துத் தலைவர்களும் எல்லா கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ம.பொ.சி.யின் சேவையை மனதார பாராட்டினார்களே தவிர, அவர் சிறை சென்று போராடி அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் அவரை பாராட்டவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அவருக்கு உரிய மரியாதையை அவர் தந்தார். தியாகபூமியிலிருந்து மண் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி சுதந்திர பொன்விழா நேரத்தில் நடந்தபோது 1930 உப்பு சத்தியாக்கிரகம் நடந்த வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் புனித மண் எடுத்துக் கொண்டு டில்லியில் காந்தி சமாதி இருக்கும் ராஜ்காட் வரை கொண்டு செல்லும் பெருமையை ம.பொ.சிக்குக் கொடுத்தார். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று வாழ்நாளெல்லாம் உழைத்த ஒரு தமிழ்ப்பெருமகனாருக்கு நாம் செய்த மரியாதை என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். அவருடைய பேரப் பிள்ளைகள் திருஞானம், ஞானசிவம், தி.பரமேஸ்வரி ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் மனம் மகிழும்படியாவது மக்கள் அந்த பெருமகனாருக்கு ஏதாவது செய்ய முயற்சி செய்யலாமே. முயன்றால் முடியாமலா போகும்?

(இத்துடன் எல்லைப் போராட்ட வரலாறு நிறைவு பெறுகிறது)                                        அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படவிருந்த நேரத்தில் சென்னை நகருக்கு உரிமை கொண்டாடிய ஆந்திரர், சித்தூரின் தமிழ்ப் பகுதிகளை ஆந்திரத்திலிருந்து மீட்டெடுக்க நடந்த போராட்டம், அப்போது ஆந்திரர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமை, தமிழர்கள் மத்தியில் கருத்து ஊசலாட்டம் இவை பற்றியெல்லாம் கடந்த ஐந்து கட்டுரைகளில் படித்த அன்பு நெஞ்சம் கொண்ட அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். தெரியாமலும் போயிருக்கலாம். இப்போது படித்த பின்பு உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். உங்கள் பின்னூட்டங்களை இந்தக் கட்டுரையின் இறுதியிலோ அல்லது எனது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள்.  My e.mail id: privarsh@gmail.com நன்றி. Thanjai V.Gopalan, Bharathi Ilakkiya Payilagam, Thanjavur 7

Saturday, May 18, 2013

தமிழகத்தின் வடக்கெல்லை போராட்டம். (பகுதி 3)

தமிழகத்தின் வடக்கெல்லை போராட்டம். (பகுதி 3)
Dr.S.Radhakrishnan


பாரத நாடு விடுதலை அடைந்த நாளன்று டில்லி நகரம் கோலாகலத்தோடு கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி வங்காளத்தில் நவகாளி எனுமிடத்தில் நடந்த மதக் கலவரத்தைத் தடுத்து நிறுத்த அங்கு சென்று கலவரப் பிரதேசத்தில் கால்நடையாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். சுதந்திரத்துக்குக் காரணமான அந்த மகான் எந்தவொரு பதவியையோ, பெருமையையோ எதிர்பார்க்கவில்லை. தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ, சுதந்திரத்தை அனுபவிக்கும் பக்குவம் இந்திய மக்களுக்கு இன்னமும் வரவில்லையோ என்கிற கவலைகூட அவர் மனத்தை அரித்தது. அவருக்கு மட்டுமா? அவரைப் போன்ற தன்னைப் பற்றியோ, தன் குடும்பம் பற்றியோ கவலைப்படாத தேசபக்தர்கள் நாட்டை மட்டுமே நினைத்துப் பாடுபட்ட வரலாறு நமக்குத் தெரியும். மகாத்மாவின் அடியொற்றி தமிழ்நாட்டிலும் ஒரு தலைவர் சுதந்திரம் அடைந்த பின் தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் வளம் இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பாடுபட்டவர் சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள்.

1947 ஆகஸ்ட் 16ஆம் தேதியன்றே அவர் சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்படப் போகிறது என்பதையும், வடக்கெல்லை பகுதியில் உள்ள பகுதிகள் எந்த மொழி பேசுவோர் அதிகம் இருக்கிறார்களோ அந்தப் பகுதிகள் தமிழகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ இணைக்கப்படும் என்பது தெரிந்து, தமிழ்ப் பகுதிகள் அதிகமுள்ள சித்தூர் மாவட்டத்தைத் தெலுங்கர் அதிகமுள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் ஆந்திரத்துக்குப் போய்விடப் போகிறது என்கிற ஆபத்தை உணர்ந்த தமிழ்ப் பிரதேசங்களை மீட்கும் எண்ணத்துடன் சித்தூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பதியும், நகரி புத்தூரும், திருத்தணியும் தமிழரின் பிரதேசம், அவை நம் கையைவிட்டுப் போய்விடப் போகிறது என்கிற ஆதங்கத்தில் அவர் இந்தப் பயணத்தை மேற் கொண்டார்.

அது தவிர சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை கடற்கரையில் மாபெரும் (மாபெரும் எனும் சொல்லுக்கேற்ப பெரிய கூட்டம்தான்) கூட்டத்தில் ஐயா ம.பொ.சியும் கலந்து கொண்டாரே தவிர, அவரைப் பேசச் சொன்னபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். காரணம் விடுதலையில் மனமில்லாதவரா அவர்? அதற்காகவா பல ஆண்டுகள் சிறையில் தவமிருந்தார்? சிறையில் இறந்துவிடுவார் எனும் அச்சத்தில் அல்லவா அவரை அரசாங்கம் விடுதலை செய்தது. அதுவல்ல அவர் பேசாமல் இருந்ததற்குக் காரணம். சுதந்திர இந்தியாவில் தமிழ் பேசும் பகுதிகள் கொண்ட தமிழகம் அமையவும், தமிழ் ஆட்சிக் கட்டிலில் அமரவும், சென்னை மாகாணம் எனும் பெயரை தமிழ்நாடு என்று மாற்றவும் அவர் இனி போராடவேண்டியிருக்கிறதே என்கிற கவலை அவர் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது.

1947 ஆகஸ்ட் 16இல் அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவாலங்காடு எனும் புகைவண்டி நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாக ஊர் ஊராக திருப்பதி வரை செல்லும் பயணத் திட்டத்தோடு வந்திருந்தார். அப்போது அவருடைய கோஷம் "வேங்கடத்தை விடமாட்டோம்", "திருத்தணிகை தமிழருடையதே" என்பது போன்ற கோஷங்கள்தான்.

இந்த நோக்கத்துக்காக அவர் "வடவெல்லைப் பாதுகாப்புக் குழு" எனும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரசுக்குள் இருந்து கொண்டு இவர் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேசுவதை, தேசியம் பேசுகின்ற காங்கிரசார் விரும்பவில்லை என்பது இறுதியில் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றியபோது வெளிப்பட்டது. அப்படி அவர் வடக்கெல்லை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நேரத்தில் அவருக்கு மங்கலங்கிழார் எனும் தமிழ்ப் புலவர் உடனிருந்தார். போகுமிடங்களில் எல்லாம் தெலுங்கர்கள் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டங்களில் கலவரமிழைத்தனர். ஆனாலும் இவருக்கு ஜனார்த்தனம் எனும் இளைஞர் உட்பட பல தொண்டர்கள் உடனிருந்து இவரைப் பாதுகாத்தனர்.

1953 மார்ச் மாதம் 25ஆம் தேதி பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி சித்தூர் மாவட்டம் பிரச்சினைக்குட்படாத பகுதி என்பதால் அதனை ஆந்திரத்தில் இணைத்துவிட மத்திய அரசு தீர்மானம் செய்துவிட்டது. இந்த முடிவு தமிழர் தலைவர் ம.பொ.சி. அவர்களுக்கு அதிர்ச்சியையும், உடனடியாக இதனை எதிர்த்துப் போராடவும் தூண்டுகோலாக அமைந்தது.

வடவெல்லை பாதுகாப்புக் குழுவுக்கு ஐயா ம.பொ.சி. தலைவர். கே.விநாயகம் எனும் திருத்தணி வக்கீல் செயலாளர். இவர் பின்னாளில் சட்டசபையில் கலக்கிக் கொண்டிருந்தவர். இந்த விநாயகத்துக்கு இப்போது உள்ள வழக்கப்படி ஐயாவும் "தளபதி" என்று பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தார்.

இதுபோன்ற வேடிக்கைகள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும். நாம் இன்னமும் சரித்திர காலத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, தளபதி, போர் வாள், பாசறை போன்ற சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு கற்பனையான உலகில் சஞ்சரித்து வருகிறோம். அது கிடக்கட்டும், நம் வரலாற்றுக்கு வருவோம்.

சித்தூர் மாவட்டத்தில் ஐயா ம.பொ.சி சுற்றுப் பயணம் செய்த காலத்தில் அவரோடு உறுதுணையாக இருந்தவர்களில் மங்கலங்கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், தணிகை என்.சுப்பிரமணியம், பொதட்டூர்பேட்டை ஏ.ச.தியாகராஜன், ஏ.ச.சுப்பிரமணியம், சித்தூர் வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு ஊராட்சித் தலைவர் திருமலைப் பிள்ளை, தணிகை காந்தி, ஜோதிடர் சடகோபாச்சாரியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

1953 ஏப்ரல் 8ஆம் தேதியை "தமிழ் ராஜ்யக் கோரிக்கை நாள்" என தமிழரசுக் கழகம் கொண்டாடியது. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரியும் அதே நேரத்தில் அப்போது சென்னை மாகாணத்தின் பகுதியாக ஒட்டிக் கொண்டிருந்த தென் கன்னட, மலபார் மாவட்டங்களையும் பிரித்து எஞ்சிய பகுதியை "தமிழ் மாநிலம்" என்ற பெயரில் அறிவித்திட வேண்டுமென்ற கோரிக்கையை தீர்மானம் நிறைவேற்றி முன்வைத்தது தமிழரசுக் கழகம்.

காங்கிரசின் அப்போதைய தலைவர்களாயிருந்த திரு காமராஜ், திரு ராஜாஜி ஆகியோர் இதுபோன்ற போராட்டங்களை விரும்பவில்லையாயினும் பெரும்பாலான காங்கிரசார் ஐயாவை ஆதரிக்கத் தயங்கவில்லை. அப்படிப்பட்ட தலைவர்களில் சிலர் அனைவரும் அறிய ஐயாவோடு இணைந்து பாடுபடத் தயாராயினர். அவர்களில் சென்னை மேயர் டி.செங்கல்வராயன், திருமதி டி.என்.அனந்தநாயகி, திருமதி சரஸ்வதி பாண்டுரங்கன், டாக்டர் குருபாதம், சின்ன அண்ணாமலை, கவி.கா.மு.ஷெரீப், வேலூர் வி.கே.குப்புசாமி முதலியார், ஜி.உமாபதி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திருத்தணியைச் சேர்ந்தவர். அவர் அப்போது சித்தூர் மாவட்டம் முழுமையும் ஆந்திரத்தில் இணைவதை ஆதரித்தார். அப்போது டில்லி நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த திருப்பதியைச் சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் அவர்களும் ஆந்திரருக்கு ஆதரவாகப் பணியாற்றினார். இவரைப் பற்றி ஐயா ம.பொ.சி. குறிப்பிடுவதைப் பார்ப்போம். ஐயா சொல்கிறார், "சித்தூர் தமிழ் ஐயங்காரான இவர் அசல் ஆந்திரரைவிடவும், தீவிரமாக இருந்தார். இப்படி ஆந்திரரெல்லாம் - டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்தசயனம் போன்ற இருமொழி (தமிழ்/தெலுங்கு) பேசுவோர் ஓரணியில் திரண்டு நின்றது போல் தமிழர் எவரும் இருக்கவில்லை (எனது போராட்டம் பக். 345)

மத்திய அமைச்சராக விளங்கிய ஆர்.வெங்கட்டராமன் பட்டுக்கோட்டைக் காரர். அவர் சொல்கிறார், சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, அதன் எந்தப் பகுதி மீதும் தமிழர் உரிமை கொண்டாடுவதற்கில்லை என்று தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

ராஜாஜி சட்டப் பேரவையில் பேசுகையில் சொன்னார், "திருப்பதி கலாசாரத் துறையில் இன்னமும் தமிழ்ப் பிரதேசம்தான். அதை ஆந்திரர் மறுக்க முடியுமா? ஆயினும் அரசியல் துறையில் நாம் (தமிழர்) அதை இழந்துவிட்டோம். திருப்பதி நமக்குத் திரும்பாது. அதைக் கண்ணெடுத்தும் பார்க்க வேண்டாம். திருப்பதி ஆந்திராவில் இருக்கிறது - இருக்கும்". இப்படிச் சொன்னார் ராஜாஜி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்ட கருத்து என்னவென்றால், ராஜாஜி, பெரியார், ஆர்.வி. "ஜனசக்தி" ஆகிய பெரியோர்கள் எல்லாம் கைவிட்ட பின்னர் சிவஞான கிராமணியாவது, வடவெல்லையை மீட்பதாவது? என்பதுதான். பொதுவாக வேறு யாராக இருந்திருந்தாலும், மனம் தளர்ந்து போய் நடப்பது நடக்கட்டும் என்று ஒதுங்கியிருப்பார்கள். ஆனால் வாழ்க்கையே போர்க்களமாக அனுபவித்து வந்த ஐயாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா. தனித்து நின்று போராடுவோம், கிடைத்தால் வெற்றி, இல்லையேல் போராடினோம் கிடைக்கவில்லை எனும் திருப்தி என நினைத்தார்.
Ananthasayanam Ayyangar

சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், திருத்தணி, பல்லவனேரி, கங்குந்திக்குப்பம் ஆகிய ஆறு தாலுகாக்கள் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்பது ஐயாவின் கோரிக்கை. கோரிக்கை இப்படி இருந்த போதிலும் உண்மையில் சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய பகுதிகளில்தான் தமிழர்கள் அதிகம் வாழ்ந்தனர். இருந்த போதிலும் மற்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அசல் தமிழர்களும் அல்ல, அசல் ஆந்திரர்களும் அல்ல, பெரும்பாலோர் இருமொழி பேசும் மக்களாக இருந்தனர். இவர்கள் எந்த மொழி பேசுவோர் என்று இனம் கண்டுகொள்ள முடியாதவர்கள். மேலும் வரலாற்று, இலக்கிய அடிப்படையில் பார்த்தாலும் திருப்பதிக்குத் தெற்கு தமிழகம் என்றே கூறப்படுகிறது. ஆகையால் இங்கிருந்த தமிழர்கள் ஆந்திரர்கள், விஜயநகர சாம்ராஜ்யம் பீடுற்றிருந்த சமயம் குடியேறிய அல்லது அவர்கள் ஆதிக்கத்தால் தமிழ்பேசுவோர் தெலுங்கு பேசுவோராயிருக்க வேண்டும்.

தமிழரசுக் கழகப் பொதுக்குழு கூடி வடவெல்லை போராட்டம் 1953 ஏப்ரல் 9இல் சித்தூர் மாவட்ட எல்லைகுள்ளே நடத்துவது என்றும், அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுமானால் போராட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவதென்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கழகத்தார் "சித்தூர் தினம்" என்று ஒரு நாளை அறிவித்து மக்களுக்குப் பிரச்சனையை விளக்கினர். சித்தூர் மாவட்டத்தில் கடையடைப்பும், பொது வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. இந்த 15 நாளும் காந்திய அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டதால் ராஜாஜி அரசாங்கம் எவரையும் கைது செய்யவில்லை.

அப்போது திருத்தணி ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அப்போது அதற்கு 10 இடங்களில் போட்டியிட்டு வடவெல்லை போராட்டக்குழு 9 இடங்களில் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத்தைக் கைப்பற்றி, திருத்தணி தமிழருக்குத்தான் என்பதை உறுதிசெய்தது. புத்தூரில் நடந்த பொதுக்கூட்டமொன்றுள் ஆந்திரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு சிவய்யா என்பவர் கலவரம் செய்து, ஜல்லிக் கற்களை எடுத்து மேடையை நோக்கி வீசினர். மேடைவிளக்குகள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடையுத்தரவு பிறப்பித்து உடனடியாக அனைவரையும் ஊரைவிட்டு ஓடிவிடும்படி கூறி விரட்டினர். அப்போது ஒரு உயர் போலீஸ் அதிகாரி தலைவர் ஐயா அவர்களை விரட்டுவது போல உறுமிக் கொண்டு அவர் காதருகில் வந்து, ஐயா நான் திருநெல்வேலிக் காரன், தமிழன். இங்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவரும் தெலுங்கருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் தப்பிப் போவதுதான் நல்லது என்று காதோடு ரகசியமாகச் சொல்லிவிட்டு அதட்டி விரட்டுவது போல பாவலா செய்தார்.

ஐயா அப்படி ஓடக்கூடியவரா? கைது செய்து கொள்ளுங்கள், நாங்கள் போகமாட்டோம் என்றதும் ஐயா உட்பட கே.விநாயகம், ஈ.எஸ்.தியாகராஜன், சித்தூர் சீனிவாசன், மங்கலங்கிழார் ஆகியோரைக் கைது செய்து திருத்தணிக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் ஜில்லா போலீஸ் சுப்பிரண்டெண்ட் காரில் வந்தார். போலீஸ் வண்டியைப் பார்த்ததும் நிறுத்தி விவரம் கேட்டறிந்தார். ஐயாவுக்கு உதவி செய்த நெல்லைத் தமிழனிடம் நீங்கள் செய்ததுதான் சரி என்று பாராட்டி அனுப்பி வைத்தார். அவர் ஒரு கன்னடிகர்.

முதல்வர் ராஜாஜி போராட்டம் வன்முறை நோக்கிப் போவதாக கவலை கொண்டார். வடவெல்லைப் போராட்டக் குழு இனி இதுபோன்ற வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போர்க்களத்தை சித்தூர் மாவட்டத்திலிருந்து சென்னை நகருக்கு மாற்றிக் கொள்வதென்று முடிவெடுத்தது. இம்முடிவு ராஜாஜிக்கும் நிம்மதி அளித்திருக்கும் என்பதற்கு கல்கி 31-5-1953 இதழில் ஆசிரியர் ஆதரித்ததிலிருந்து யூகிக்க முடிகிறது.

(அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்)

சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்? பகுதி 2.

சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்? பகுதி 2.

"சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்" எனும் தலைப்பிலான இதற்கு முந்தைய பதிவில் கல்கி இதழில் அதன் ஆசிரியர், ஆந்திரத்துத் தெலுங்கு பேசும் மக்கள் தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்து, அதன் தலைநகராக சென்னைக்கு உரிமை கொண்டாடியதைப் பார்த்தோம். அப்போது தெலுங்கு பேசுவோரின் குரல் உரக்க ஒலித்ததால் டில்லி தலைமையும் அதற்குத் தலை ஆட்டிவிடுமோ என்கிற கவலை சில உண்மையான தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உண்டாகியது. ராஜாஜியின் இது குறித்து கவலை தெரிவித்து இருந்தார். அவருடைய மனச்சாட்சியாக விளங்கிய திரு கல்கி அவர்கள் தன் கட்டுரையில் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்க ஒரு படை தேவை என்று எழுதினார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1952 பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை. கம்யூனிஸ்டுகள் அதிகம் கொண்ட எதிர்கட்சி பலம் வாய்ந்ததாக இருந்தது. அந்த சூழ்நிலையில் சென்னை மாகாண அரசு அமைக்க யார் முன்வருவது என்பதில் சிக்கல். காங்கிரஸ் தனிப்பட்ட பெரும்பான்மைக் கட்சி என்றாலும் அதற்கு போதுமான பெரும்பான்மை இல்லை. இதனை விவாதித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த கருத்து ஒன்றுக்கு வந்தார்கள். அது வங்காள கவர்னராகவும், டில்லியில் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த ராஜாஜி இப்போது ஓய்வில் இருக்கிறார். அவரை அழைத்து சென்னை அரசுக்கு தலைமை தாங்கச் செய்வதுதான் ஒரே வழி என்ற எண்ணம் தமிழ்நாட்டு காங்கிரசாருக்கு ஏற்பட்டது. இந்த முடிவை பண்டித ஜவஹர்லால் நேருவிடம் சொல்லி அவரது சம்மதத்தை வாங்க திரு சி.சுப்பிரமணியம் அவர்களையும் பொள்ளாச்சி திரு மகாலிங்கம் அவர்களையும் நேருவிடம் அனுப்பினார்கள். அவர்கள் சென்று நேருவிடம் இந்தத் தகவலைச் சொன்னபோது காமராஜ் என்ன சொன்னார் என்றார். அதற்கு அவருடைய சம்மதத்துடன் தான் இங்கு வந்திருக்கிறோம் என்றதும் அப்படியானால் சரி ராஜாஜியைச் சந்தித்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.

1952இல் ராஜாஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் போன்றவர்களுடைய கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு ராஜாஜி அமைச்சரவை அமைத்தார். சுயேச்சையாக இருந்த பி.பக்தவத்சலு நாயுடு போன்றவர்களும் துணை சபாநாயகர் பதவி பெற்று அரசுக்கு ஆதரவு தந்தார். இந்த நிலையில் தனி ஆந்திர கோரிக்கை வலுப்பெற்றது. ராஜாஜி மனதுக்குள் ஆந்திரம் பிரிந்து போவதில் சம்மதமுள்ளவராக இருந்தார். நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. வெளியிட்டார். ராஜாஜியின் ஆதரவாளராக இருந்தும் அவர் இந்த கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

அப்போது சிலம்புச் செல்வரின் தமிழரசுக் கழகம் எனும் அமைப்பு காங்கிரசுக்குள் ஒரு அங்கமாகத்தான் செயல்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் தமிழ் மொழி, சுயாட்சி, தமிழ்நாடு பெயர் வைத்தல் போன்ற கோரிக்கைகளை வைத்து தமிழரசுக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வந்தது. காங்கிரசில் பல தமிழார்வம் கொண்ட தலைவர்களும் தமிழரசுக் கழகத்துக்கு ஆதரவாக இருந்து வந்த நிலை. ம.பொ.சி. ராஜாஜியின் ஆதரவாளர் என்ற வகையில் அவர் மீது சிலருக்குக் கோபமும் எதிர்ப்பும்கூட இருந்து வந்த நிலை.

ஆந்திரத்துத் தலைவர்கள் ஒற்றுமையாக ஒரே குரலில் தனி ஆந்திரத்துக்குக் குரல் கொடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் தமிழ்நாடு தனி மாநிலமாக பிரியவும், ஆந்திரர்கள் சென்னைக்கு உரிமை கொண்டாடுவதை எந்த விதத்திலும் அனுமதிக்கமுடியாது என்றும் ம.பொ.சி.யும் தமிழரசுக் கழகமும் மட்டும்தான் குரல் கொடுத்து வந்தது. டில்லியில் ஆந்திரத்துக் குரல் ஒலித்ததே தமிர தமிழன் குரல் ஒலிக்கவே இல்லை. இந்த நிலையில் ஆந்திரர்கள் சென்னையைத் தங்களுக்கு வேண்டுமென்று கோரிக்கை வைத்ததை டில்லி ஏற்றுக் கொண்டுவிடுமோ என்கிற நிலையில் ராஜாஜியின் ஆசியோடு ம.பொ.சி. சென்னையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற உறுதியான நிலையை எடுத்தார்.

ஆந்திரரின் தனி மாநில கோரிக்கையை அடுத்து ம.பொ.சி. தமிழனின் குரலை ஓங்கி இவ்வாறு ஒலித்தார்:

"மொழிவாரி மாகாணப் பிரிவினை சம்பந்தமாகத் தமிழர்களின் உணர்ச்சி ஆந்திரர்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. எனது தலைமையிலுள்ள தமிழரசுக் கழகம் பொதுத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தது என்றால், தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சி மொழிவாரி மாகாண பிரிவினையை அமல் நடத்துமென்று நம்பியதுதான் காரணம். இதில் ராஜாஜி அரசு தயங்கினால், ஒரு போராட்டத்தில் ஈடுபடவும் தமிழரசுக் கழகம் தயங்காது" (தினத்தந்தி 16-4-1952)

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு காங்கிரசார் மனங்களில் இருந்ததெல்லாம் ஆந்திரம் பிரிந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதுதான். ஆந்திராவில் கம்யூனிஸ்டுகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு வந்துவிட்டபடியால், ஆந்திரம் பிரிந்து போனால் கம்யூனிஸ்டுகளின் தொல்லை குறையும் என்பது ராஜாஜியின் கணக்கு. மேலும் ஓரளவுக்கு காங்கிரசில் கோஷ்டிகள் குறையும் என்றும் அவர் கணக்குப் போட்டார். திரு காமராஜ் இந்த விஷயத்தில் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் மதில் மேல் பூனையாக இருந்தார் என்கிறார் ம.பொ.சி.

இப்படி ஆந்திரப் பிரிவினை இழுபறியாக இருந்து கொண்டிருந்த நேரத்தில் பொட்டி ஸ்ரீராமுலு எனும் ஆந்திரத்து தெலுங்கு பேசும் காங்கிரஸ்காரர் தனி மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். இவரை ஆந்திரத்தின் பெரும் தலைவர்களான டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்றவர்கள் உடனிருந்து தூண்டிவிட்டனர். பல நாட்கள் உண்ணா விரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலு ஒரு நாள் இறந்து போனார். காலாகாலத்தில் தனி ஆந்திர மாநிலம் பிரித்துக் கொடுத்திருந்தால் இது நேர்ந்திருக்காது. மொழிவழி மாநிலப் பிரிவுக்கு நேரு எந்த காலத்திலும் ஆதரவு தரவில்லை. பொட்டி ஸ்ரீராமுலு இறந்த செய்தி கேட்டு ஆந்திரம் வன்முறை பேயாட்டத்துக்கு ஆட்பட்டது. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீயிடல். பொதுசொத்துக்கள் நாசம். சில நாட்கள் வரை எந்தவித சட்ட ஒழுங்கும் இல்லாத பகுதியாக ஆந்திரம் விளங்கியது.

இதற்கு மாறாக பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தினால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் மட்டும் சிற்சில இடங்களில் போராட்டங்கள் நடந்தன, அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நிலைமை கட்டுகடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு 2-10-1953இல் தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் 1912-1952இல் அறிவித்தார். அதில் தெலுங்கு பேசும் மக்கள் வாழும் மாவட்டங்கள், சித்தூர் மாவட்டம் உட்பட ஒன்று சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும். சென்னை அதில் சேராது என்று பிரதமரின் அறிவிப்பு கூறியது.

இந்த அறிக்கையை பிரதமர் வெளியிட்ட பிறகு மீண்டும் சென்னை பிரச்சனை எழுப்பப்பட்டது. புதிதாக அமையும் ஆந்திர மாநிலத்தில் சென்னை நகரம் இருக்காது என்று நேருஜி உறுதியாகக் கூறியிருந்தாலும், ஆந்திரத்தின் தலைநகர் எது என்பது பிறகு முடிவாகும் என்றும் சொன்னதால், ஆந்திரர்களுக்கு சென்னையை எப்படியாவது தங்களுக்குக் கொண்டுவந்துவிட வேண்டுமென்கிற ஆசை வலுப்பெற்றது. "மதறாஸ் மனதே!" எனும் கூச்சலை இப்போது அவர்கள் மாற்றி கோஷமிட்டார்கள். எப்படி?

ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் சொன்னார், சென்னை நகரத்தை முழுமையாக ஆந்திரத்துக்குக் கொடுக்காவிட்டாலும் கூவம் ஆற்றை மையமாக வைத்து தென் சென்னையைத் தமிழ்நாட்டுக்கும், வட சென்னையை ஆந்திரத்துக்கும் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றார்.

அப்படி செய்ய முடியவில்லை என்றால் சென்னை நகரை ஆந்திரம் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொதுநகரமாகச் செய்ய வேண்டும் பஞ்சாபுக்கும், ஹரியானாவுக்கும் சண்டிகர் இருப்பது போல என்றார்.

அதுவும் முடியாதென்றால் சென்னை நகரத்தைப் பிரதம கமிஷணரின் நேரடி கவனிப்பில் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றார் டி.பிரகாசம்.

இந்த விஷயத்தைக் குறித்தும் ஆந்திரத்துக்கு எது தலைநகர் என்பதை தீர்மானிக்கவும் ராஜஸ்தான் மாநில நீதிபதி திரு வாஞ்சு என்பவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். வாஞ்சு ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வந்து பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவர் ஆந்திரம் போனபோது அங்கிருந்த அனைவரும் ஒருமுகமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வாஞ்சுவிடம் அறிக்கை அளித்தனர். ஆனால் தமிழகத்தில் அந்தோ பரிதாபம் நம் கட்சியை எடுத்து வைக்க பலமான கூட்டணி அமையவில்லை. ம.பொ.சி. ஒருவர் மட்டும்தான் தனிக்குரல் எழுப்பினார். தி.க. தலைவர் பெரியார் சொல்லிவிட்டார் "சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன, தமிழகத்தில் இருந்தால் என்ன, எங்கிருந்தாலும் திராவிடத்தில்தானே இருக்கப் போகிறது" என்று. தி.மு.க. அந்த நாளில் பெரிய அளவில் வளரவில்லை என்றாலும் பெரியாரைப் போல் கருத்துச் சொல்லவும் இல்லை, தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடவும் முன்வரவில்லை, மெளனமாக இருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அப்போது இருந்த திரு காமராஜர் ஆந்திரம் பிரிவதைப் பற்றியோ, சென்னை நகரம் யாருக்கு என்பதைப் பற்றியோ அப்போது எதுவும் சொல்லாமல் இருந்தார். அவருடைய மெளனத்தைப் பாராட்டி நீலம் சஞ்சீவ ரெட்டிகாரு சொன்னார், "திரு காமராஜரின் மெளனம் புத்திசாலித்தனமானது, பொருள் நிறைந்தது. மற்ற தமிழ்த் தலைவர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும்" என்றார். ஆந்திரத்துத் தலைவர்கள் சென்னை நகரில் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் போட்டுத் தங்கள் கட்சியை எடுத்துரைத்தனர். சென்னையில் ஆந்திர காங்கிரசாரின் மகாநாடும் நடைபெற்றது. ஆனால் தமிழர்களின் பக்கம் அசாத்திய மெளனம், அதன் இடையில் ம.பொ.சி. மட்டும் உரத்த குரல் எடுத்து தமிழ் நாட்டின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

ம.பொ.சி. சொல்கிறார்:- "தமிழரிலே படித்த வகுப்பாரின் மனப்பான்மை எனக்கு வியப்பைத் தந்தது. அவர்கள் சென்னையில் ஆந்திரர் ஆதிக்கம் பெறுவதை விரும்பவில்லை. அந்த அளவு அவர்களுக்கு 'டமிலர்' உணர்வு இருந்தது. ஆனால், சென்னை நகரை கமிஷனர் பிரதேச்மாக - அதாவது மத்திய அரசின் நிர்வாகப் பிரதேசமாகச் செய்வதை மனதார விரும்பினர். இதற்குக் காரணம், வகுப்புவாரி பிரதிநிதித்துவமற்ற வகையில் உத்தியோகங்களும், மத்திய அரசு ஊதியப் படிகளும், உயர் சம்பளச் சலுகைகளும் கிடைக்கும் என்ற காரணம்தான்."

9-12-1952 அன்று சட்ட மேலவையில் ம.பொ.சி. கேட்ட கேள்வி ஒன்றுக்கு ராஜாஜி சொன்ன பதில் இது:--

"சென்னை நகரம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த பகுதி. சென்னை நகர மக்களும், அந்நகருக்கு வடக்கே வெகுதூரம் வரை வசிப்பவர்களும் தமிழர்களே. ஆகவே சென்னை நகரைத் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துத் தனி நிர்வாகத்தின் கீழ் வைக்க முடியாது. சென்னையைத் தனி ஆந்திர ராஜ்யத்தின் தலைநகராகவும் செய்ய முடியாது. சென்னை நகர நிர்வாகம் பற்றிப் பேசவும் நிபந்தனைகள் விதிக்கவும் ஆந்திரர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சென்னை நகரத்தின் ஜனத் தொகையில் நூற்றுக்கு அறுபத்தியெட்டு பேர் தமிழர். பதினான்கு சதவீதம் பேர் தெலுங்கர். சென்னை நகரம் பற்றிய கோரிக்கையையும் அதன் எதிர்காலம் பற்றி எழுப்பப்பட்டுள்ள நிபந்தனைகளையும் கைவிடும் பக்ஷத்தில் தனி ஆந்திர அரசி நிறுவ ஆந்திர நண்பர்களுடன் சேர்ந்து நானும் பாடுபடத் தயார்"

இப்படிப் பேசி தன்னுடை கருத்தை வெட்டவெளிச்சமாக்கினார் ராஜாஜி. சென்னை தமிழருக்குத்தான், ஆந்திரருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்பதை ராஜாஜி சட்டசபையில் அறிவித்தார்.

சென்னை நகருக்கு அப்போது மேயராக இருந்தவர் டி.செங்கல்வராயன். ஆல்டர்மேன் எனும் பதவியில் இருந்தவர் ம.பொ.சி. இவ்விருவரும் சென்னை நகரை ஆந்திரத்துக்குக் கொடுக்க கடுமையான போராட்டங்களை நடத்தினர். தெருத்தெருவாக டி.செங்கல்வராயனும், தமிழரசுக் கழகத் தொண்டர்களும் போர் முழக்கம் செய்து "தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினர். இந்த முழக்கத்தை முதலில் ம.பொ.சி. சென்னை மாநகராட்சி மன்றத்தில் உணர்ச்சிகரமாகப் பேசும்போது முழங்க, அப்போது வெளியில் நின்ற ஆயிரக்கணக்கான தமிழர்களும் முழக்கம் செய்தபின் இந்த கோஷம் பிரபலமாகியது.

மேயர் டி.செங்கல்வராயன் அவர்கள் சென்னை கடற்கரையில் 16-3-1953 அன்று கட்சி சார்பற்ற ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் பேச பெரியார் ஈ.வே.ராவை அழைக்கும்படி ராஜாஜி கூறினார். அவர்தான் சென்னை எங்கு இருந்தால் என்ன திராவிடத்தில்தானே இருக்கிறது என்கிறாரே என்று ம.பொ.சி. சொன்னதன் பிறகு ராஜாஜி நான் அழைத்ததாகக் கூப்பிடுங்கள் இந்தக் கூட்டத்தில் அவர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று சொல்லுங்கள் வருவார் என்றார்; அதன்படியே அவரும் அந்தக் கூட்டத்துக் வந்து பேசினார். அந்தக் கூட்டத்தில் பெரியார் தவிர, ம.பொ.சி.. சட்டநாத கரையாளர், மீனாம்பாள் சிவராஜ், எஸ்.முத்தையா முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர் பேசினர். அன்றைய தினம் திரு காமராஜ் சென்னையில் இல்லை, மதுரையில் இருந்தபடி ஒரு அறிக்கையில், "சென்னை நகரிலே ஆந்திரருக்கு எந்தவிதமான பங்கு தந்தாலும் சரி, இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி மூண்டெழும்" என்று அறிக்கை வெளியிட்டார்.

சென்னை நகரைக் காப்பதற்காக நடைபெறும் இவ்வகை போராட்டங்கள் மட்டும் போதாது என்று ம.பொ.சி. தம் தமிழரசுக் கழகத்தின் இரண்டாவது மாநில மகாநாட்டைத் திருவல்லிக்கேணியில் 1953 ஜனவரி 24, 25 தேதிகளில் நடத்தினார். ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ.முத்தையா செட்டியார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் உடல்நலம் கெட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பேசினார். அவர் சொன்னார்:- "சென்னை, தமிழகத்தின் உட்பகுதி. தமிழருக்குச் சொந்தமானது. சிவஞானம் சென்னையைக் காப்பார், தமிழக எல்லைகளையும் மீட்பார் -- நம்புங்கள்" என்று சொல்லிவிட்டு ம.பொ.சி.யை அணைத்துக் கொண்டு வாழ்த்தினார். பின்னர் ஒருசில நாட்களில் அவர் காலமாகிவிட்டார்.

அரசியல் மகாநாடு ஒரு நாளும், மாணவர் மாநில மகாநாடு ஒரு நாளும் நடந்தது. மாணவர் மகாநாட்டை முன்னின்று ஏற்பாடு செய்தவர் திரு ஜி.சுவாமிநாதன், தஞ்சையில் பார்ம் ப்ராடக்ட்ஸ் நிருவன அதிபர் அவர். மாநிலங்கள் அவை துணைத் தலைவராகவும் இருந்தவர். சுதந்திரா கட்சி, அதிமுக ஆகிய கட்சிகளிலும் இருந்தவர் இவர்.

தமிழரசுக் கழக மகாநாட்டில் சென்னை நகரை ஆந்திரத்துக்குக் கொடுப்பதோ, நகரைப் பிளந்து இருவருக்கும் கொடுப்பதோ, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்துக்குப் போவதோ கூடாது, மீறி நடவடிக்கை எடுத்தால் தமிழரசுக் கழம் போராட்டத்தில் ஈடுபடும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த மகாநாட்டுத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அனைத்தும் வரவேற்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி" எழுதியதன் ஒரு பகுதி இது:

"தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" கடைசி தமிழன் உயிருள்ளவரை எமது உரிமைகளை விடோம். வீரப் பரம்பரையை மறவோம். வீறுகொண்டு எழுவோம். தமிழ்த்தாயைப் பாதுகாப்போம் என்ற வீரமிக்க கோஷங்கள் தமிழரசுக் கழக மகாநாட்டில் விண்ணைப் பிளந்தன. தமிழ் ஆர்வமும், ஆவேசமும் கரை புரண்டு ஓடின. உரிமைக்காக தலைநிமிர்ந்து, மார்பு காட்டி நிற்கும் தமிழனைக் கண்டு பூரிப்படையாதவர் யார் இருக்க முடியும்?"

இப்படி ஜனசக்தியில் எழுதியவர் அமரர் ஜீவா.

இந்த நிலையில் நீதிபதி வாஞ்சு டில்லியில் தனது அறிக்கையைக் கொடுத்தார். அதில் ஆந்திராவின் இடைக்கால தலைநகர் சென்னையில் இருக்கும் என்றும், தமிழ்நாடு ஆந்திரம் இரண்டுக்கும் ஒரே கவர்னர் இருப்பார் என்றும், இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நிதிமன்றம் இருக்குமென்றும் அதில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

இந்த செய்தியைக் கேள்விப் பட்டவுடன் ராஜாஜி கிளம்பி டில்லி சென்றார். நேருவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் ராஜாஜி சொன்னார்:-

"சென்னை நகரத்தில் ஆந்திரருக்கு இடம் தருவதென்று மத்திய அரசு முடிவு எடுப்பதானால் அதனை அமல் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கு இல்லை. அந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் பிரதமரிடம் கூறிவிட்டேன்" என்றார். இதற்கிடையே எம்.ஏ.முத்தையா செட்டியாரைச் சந்தித்து ம.பொ.சி. தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தந்திகளை இந்திய அரசின் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். தனி நபர்கள் தவிர, அமைப்புக்கள், கட்சிகள் என்று பல தரப்பாரும் இந்த தந்திகளை அனுப்பினர். ஒரு கட்டத்தில் லால் பகதூர் சாஸ்திரி தலைவர் காமராஜிடம் சொன்னார், "உங்கள் தமிழ் நாட்டுக் காரர்கள் என்னைத் தந்திகளாலேயே மூழ்கடித்துவிட்டனர். இத்தனை எதிர்ப்பு இருப்பதால் யோசனையை மறுபரிசீலனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை".

இதெல்லாம் நடைபெற்று சில நாட்கள் கழிந்தபின் பிரதமர் நேரு மத்திய அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரிடம் "சென்னை மாநகராட்சியே ஒரு கண்டிப்பான தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறபோது, அதற்கு மாறாக நாம் எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லியிருக்கிறர். இறுதியாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு அதிகாரபூர்வமான ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில்

1-10-1953 அன்று தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும்.

ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கும்.

ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி எந்த ஊரில் தலைநகர் வரும் என்பதை முடிவு செய்து கொள்ளட்டும்.

அப்போது ஐதராபாத் ஆந்திரத்துடன் இல்லையென்பதால், ஐதராபாத் நகர் இவர்கள் ஆலோசனையில் இல்லை. ஆனால், தெலுங்கானா பகுதிகள் இணைந்தவுடன் நாங்கள் ஐதராபாத் போய்விடுகிறோம், அது வரையில் சென்னையில் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று டி.பிரகாசம் ம.பொ.சியிடம் வேண்டுகோள் ஆரம்பத்திலேயே விடுத்தார், எனினும் ம.பொ.சி. அதற்குச் சம்மதிக்கவில்லை.

(இதன் பின் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்)
Friday, May 17, 2013

சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்?

              சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்?
                                                    சென்னை நகரம் ஒரு தோற்றம்

"கல்கி" பத்திரிகை ஆசிரியர் திரு ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் தன்னுடைய பத்திரிகையில் வாரந்தோறும் தலையங்கங்களை எழுதி வந்தார். அவ்வப்போது நிகழ்ந்த அல்லது முக்கியமான தலைப்புகளில் அந்த தலையங்கம் அமையும். இந்திய சுதந்திரத்துக்குப் பின்பு சென்னை மாகாணம் என்பது தமிழகம், ஆந்திரத்தின் பல பகுதிகள், கர்நாடகத்தில் பல இடங்கள், கேரளத்தின் வடபகுதி இவைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மொழிவாரி மாகாணம் பிரிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தபோது தனி ஆந்திரம், மைசூரை உள்ளடக்கிய கர்நாடகம், ஐக்கிய கேரளம் இவை உருவான நேரம் அது. சென்னை நகரம் இந்த மாகாணத்தின் தலைநகரமாக விளங்கியது. மொழிவழி மாநிலம் அமையும்போது சென்னை ஆந்திரத்துக்கு வேண்டும் எனும் கோஷம் எழுந்தது. அது முடியாவிடில் சென்னை இரு மாநிலத்துக்கும் பொதுவான தலைநகராக இருக்க வேண்டுமென்ற கருத்தும் எழுந்தது. அப்போது ராஜாஜியின் மனச்சாட்சியாக இருந்து வந்த கல்கி சென்னை நகரம் தமிழகத்தின் தலைநகரம்தான். ஆந்திரர்கள் எழுப்பும் பலத்த கூச்சலுக்கு சவாலாக தமிழகத்தில் ஒரு சேனை தேவை என்று தலையங்கம் எழுதினார். பின்னர் "தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" எனும் கோஷத்துடன் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. களத்தில் இறங்கினார். சென்னை நகரம் ஆந்திர கேசரி டி.பிரகாசம்காரு போன்றவர்கள் முயன்றும் தமிழகத்தின் தலைநகராக விளங்க ராஜாஜியின் தூண்டுதலும், தமிழ்ப் படைக்குத் தலைமை தாங்கிய சிலம்புச் செல்வரும், அப்போதைய சென்னை மாநகர மேயராக இருந்த டி.செங்கல்வராயனின் ஆதரவும் காரணமாக இருந்தன. ராஜாஜி நேரடியாக களத்தில் இறங்கவில்லையே தவிர அவரது குரலை ஒலித்தவர் சிலம்புச் செல்வர். இன்று அந்த பெருமக்களை மனதார போற்றி வாழ்த்தி வணங்குவோம். இதோ "கல்கி" 25-9-1949இல் எழுதிய தலையங்கம்.
"கல்கி" பத்திரிகை ஆசிரியர் திரு ரா.கிருஷ்ணமூர்த்தி

                                              சென்னைக்கு ஒரு சேனை!

"சேனை ஒன்று இப்போது தேவையாயிருக்கிறது. சென்னை நகரைப் பாதுகாப்பதற்காக அச்சேனை தேவை. சொல்லுவதற்கே கூச்சமாயிருக்கிறது. நமது சொந்தச் சகோதரர்களான ஆந்திர தேசபக்த வீரர்களின் அநியாயக் கோரிக்கையிலிருந்து சென்னை நகரைக் காப்பாற்றுவதற்கு அத்தகைய பாதுகாப்புச் சேனை ஒன்று தேவையாயிருக்கிறது. தமிழ் நாடெங்குமிருந்து அச்சேனை திரண்டு வரத் தயாராயிருக்க வேண்டும். கத்தி, துப்பாக்கி எடுத்துப் போராடுவதற்காக அல்ல; தமிழ் மக்களின் எகோபித்த அபிப்பிராயத்தையும் திட சங்கல்பத்தையும் தெரியப் படுத்திச் சாதிவீக முறையிலே போராடுவதற்காகத்தான்.

நமது ஆந்திர சகோதரர்கள், பாவம், சில விஷயங்களில் குறைப்படுவதற்கு இடம் இருக்கிறது. புராதன இலக்கியமோ, நவீன இலக்கியமோ அவ்வளவாக ஆந்திர பாஷையில் கிடையாது. தமிழர்களுடன் ஒப்பிடும்போது படிக்கும் ஆசையும் அவ்வளவாகக் கிடையாது. பழைய காலத்துச் சிற்பங்கள் கொஞ்சம் உண்டு; ஆனால் அவற்றைப் பேணிப் பாராட்டுவோர் இல்லை. விஜயநகர சாம்ராஜ்யம் ஒரு சமயத்தில் மகோந்நதம் அடைந்திருந்தது. அதன் சின்னங்களாகச் சில சிதிலமடைந்த கோட்டைகளும் கட்டிடங்கலும்தான் இன்று இருக்கின்றன. அந்த விஜயநகர சாம்ராஜ்யம் நடந்த காலத்தில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்திரங்களில் ஒப்பற்ற பெருமை வாய்ந்த கோயில்களும், கோபுரங்களும் கட்டப்பட்டன. ஆனால் ஆந்திர நாட்டில் அத்தகைய ஆலயங்கள் நிர்மானிக்கப் படவில்லை. ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனங்கள் தெலுங்கு பாஷையில் உள்ள சிறந்த கலைச் செல்வம். ஆனால் அவற்றை அனுபவிக்கும் ஆற்றலும் பாக்கியமும் ஆந்திர மகாஜனங்களில் மிகப் பெரும்பாலோர் இன்னும் பெறவில்லை. மட்டமான ஹிந்துஸ்தானி டாக்கி மெட்டுகளுடன் திருப்தியடைகிறார்கள்.
1950ஆம் வருஷத்து கல்கி பத்திரிகை

இப்படியெல்லாம் சில துறைகளில் அபாக்கியசாலிகளாயிருந்த போதிலும் 1921ஆம் ஆண்டிலிருந்து ஆந்திரர்கள் ஒரு முக்கியமான துறையில் பெயரும் புகழும் பெற்றனர். காந்தி மகாத்மா ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஆந்திரர்கள் முன்னணியில் நின்றார்கள். ஒப்பற்ற தியாகங்கள் பல செய்தார்கள். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக இயக்கத்திலும் ஆந்திரர்கள் தீரப் போர் புரிந்து நல்ல பெயர் வாங்கினார்கள்.

இப்படியெல்லாம் தேசபக்தியுடன் தியாகம் செய்ததற்காக வெட்கப்பட்டு அதற்குப் பரிகாரம் தேடுகிறவர்களைப் போல் சிலகாலமாக அந்நாட்டுத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்; காரியமும் செய்து வருகிறார்கள்.

1937-38இல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாயிருந்த போது ஆந்திர மாகாணக் கிளர்ச்சி வலுப் பெற்றது. ராஜாஜிதான் ஆந்திர மாகாணத்தைத் தனியாகப் பிரிப்பதற்குக் குறுக்கே நிற்கிறார் என்ற பொய் அவதூறைப் பரப்பிப் பிரச்சாரம் செய்தார்கள். அது பொய் என்று வெட்ட வெளிச்சமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் சில தலைவர்கள் அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லத் தயங்கவில்லை.

பிறகு அட்வைஸர்களின் ஆட்சி நடந்தபோது ஆந்திர மாகாணக் கிளர்ச்சி இருந்த இடம் தெரியவில்லை. இப்போது ஆந்திர மாகாணப் பிரிவினைத் தலைவர்களில் ஒருவராயிருக்கும் ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி அச்சமயம் சென்னை சர்க்காரின் பிரதம காரியதரிசியாக இருந்தார். சர்க்காரிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளவராயிருந்தார். அந்த நாலு வருஷத்தில் ஆந்திர மாகாணத்தைப் பிரித்திருக்கலாம் அல்லவா? யார் வேண்டாம் என்றார்கள்? அப்போது ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி தம்முடைய உத்தியோகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆந்திரகேசரி டி.பிரகாசம்

அது மாதிரியே ஸ்ரீ டி.பிரகாசம் பந்துலுகாரு சென்னை மாகாணப் பிரதமராயிருந்த நாட்களிலும் 'ஆந்திர மாகாணப் பிரிவினை'யைப் பற்றிப் பேச்சே இல்லாமலிருந்தது. ஸ்ரீ பிரகாசம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு 'ஆந்திர மாகாணத்தைப் பிரிக்க வேண்டும்' என்ற கூச்சல் ஒரே பிரளயமாக எழுந்தது.

ஆந்திர மாகாணப் பிரிவினைக்குத் தமிழர்கள் எப்போதும் குறுக்கே நின்றதில்லை. "தாராளமாய்ப் பிரித்துக் கொண்டு போங்கள்! எவ்வளவு சீக்கிரம் பிரிந்து போகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது!" என்றுதான் தமிழர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால் மேலேயுள்ள நமது மாபெரும் தலைவர்கள் மாகாணப் பிரிவினை முதலிய சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்த இது சரியான சமயம் இல்லை என்று கருதினார்கள். இதை நல்லபடியாகச் சொல்லிப் பார்த்தும் ஆந்திரத் தலைவர்கள் கேட்கவில்லை. நீதிபது தார் என்பவரைத் தலைவராகக் கொண்ட மாகாணப் பிரிவினைக் கமிஷன் ஒன்று தேசமெங்கும் சுற்றிச் சாங்கோ பாங்கமாக விசாரணை நடத்தியது. நடத்திவிட்டு அந்தக் கமிஷனும் "ஆந்திர மாகாணப் பிரிவினைக்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை. அதை இப்போது எடுத்துக் கொண்டால் இன்னும் பல கிளைப் பிரச்னைகள் எழுந்து தொல்லை கொடுக்கும்" என்று அபிப்பிராயம் தெரிவித்தது.

இதனாலும் பயன் விளையவில்லை. ஆந்திரத் தலைவர்கள் கொதிக்கிற எண்ணையில் போட்ட அப்பத்தைப் போலக் குதித்தார்கள். "ஆந்திர மாகாணம் இப்போதே வேண்டும்; இந்த நிமிஷமே வேண்டும்!" என்று காது செவிடுபடும்படி கோஷித்தார்கள்.

பார்த்தார்கள் நம் தலைவர்கள், "சரி, மாகாணத்தைப் பிரித்து விடுகிறோம்; ஆனால் அதற்குத் தடையாயிருப்பது உங்களுடைய அநியாயக் கோரிக்கைதான். அதாவது சென்னை நகரம் வேண்டும் என்று கேட்கிறீர்களே, அந்த அநியாயக் கோரிக்கையை விட்டுவிடுங்கள்; மாகாணம் உடனே பிரிக்கப்படும்!" என்று சொன்னார்கள்.

இப்படிச் சொன்னவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவர். ஆம், டாக்டர் பட்டாபியும் கூடத்தான்! ஆந்திர மாகாணக் கிளர்ச்சியை நடத்தியவர்களில் டாக்டர் பட்டாபியை மிஞ்சக் கூடியவர் வேறு யாரும் இல்லை. அவரே மற்ற இருவருடன் "சென்னைக் கோரிக்கையை ஆந்திரர்கள் கைவிட்டால்தான் உடனே ஆந்திர மாகாணம் ஏற்படுத்துவது சாத்தியம்!" என்று ஒப்புக் கொண்டு ஒப்பமும் வைத்திருக்கிறார்.

ஆனால் டாக்டர் பட்டாபிக்கு எதிர் கோஷ்டியார், அதாவது ஸ்ரீ டி.பிரகாசம் கோஷ்டியார் பார்த்தார்கள். டாக்டர் பட்டாபியை மட்டம் தட்ட இதுதான் சமயம் என்று தீர்மானித்தார்கள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல், டாக்டர் பட்டாபியின் மீதுள்ள கோபத்தைச் சென்னை நகரின் மீது பேரபிமானமாக மாற்றிக் கொண்டு புறப்பட்டார்கள்.
ராஜாஜி

"சென்னை நகரத்தை ஆந்திர மாகாணத்தில் சேர்க்க வேண்டும். அது முடியாவிட்டால் சென்னையில் பாதியாவது ஆந்திர மாகாணத்துடன் சேர வேண்டும். அதுவும் முடியாவிட்டால் சென்னை நகரம் தமிழ் நாட்டிலும் சேராமல் ஆந்திர நாட்டிலும் சேராமல் தனி மாகாணமாகி இந்திய சர்க்காரின் நேரான நிர்வாகத்தில் இருக்க வேண்டும்" என்றார்கள்.

எப்படி இருக்கிறது கோரிக்கை? காத்தவராயன் என்ற பழைய திருடனை, திருவானைக்காவல் ஆலயத்தில் புகுந்து அம்மனுடைய தங்க ஆபரணங்களைத் திருடிவிட்டதாகக் கைது செய்தார்கள். திருடன் கட்சி பேசுவதற்குப் பாரிஸ்டர் பரிபூரணராயர் முன்வந்தார். அவர் வாதிட்டார்:-

"குறிப்பிட்ட தினத்தில் என்னுடைய கட்சிக்காரன் திருவானைக்காவலில் இல்லை. அப்படி இருந்திருந்தாலும் ஆலயத்துக்குப் போகவில்லை. ஆலயத்துக்குப் போயிருந்தாலும் அம்மன் கோயில் ஆபரணத்தைத் திருடவில்லை. அப்படித் திருடியிருந்தாலும் அவை தங்க ஆபரணங்கள் அல்ல; பித்தளை ஆபரணங்கள்தான்!"

திருடனை விடுதலை செய்ய மேற்படி வக்கீலின் வாதம் எவ்வளவு உதவியாயிருக்குமோ அவ்வளவுதான் ஆந்திரர்களின் வாதமானது சென்னை நகரின் மீது அவர்களுடைய உரிமையை ஸ்தாபிக்க உதவக்கூடும்.

ஆனபோதிலும் ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இது ஜனநாயக யுகம். பெரும்பான்மை வோட்டுகளினாலும் அதிகமான கூச்சலினாலும் பொய்யும் உண்மையாகிவிடும்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

புது தில்லியிலுள்ள நமது தலைவர்கள்தான் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு எத்தனையோ வேலை! அத்தனையோ கவலை! இந்த ஆந்திர மாகாணத் தொல்லையை எப்படியாவது தீர்த்துத் தொலைத்தால் போதும் என்று அவர்களுக்குத் தோன்றி விடலாம் அல்லவா? ஆந்திர சகோதரர்களின் கூச்சல் மாத்திரம் அவர்கள் காதில் விழுந்து தமிழ் நாட்டிலிருந்து சத்தமே கிளம்பாவிட்டால், "ஓஹோ! ஆந்திரர்களின் கோரிக்கை நியாயமானதுதான் போலும்!" என்று அவர்கள் எண்ணிவிடக்கூடும் அல்லவா?

அந்த மாதிரி எண்ணத்தை நம் தலைவர்கள் மனதில் உண்டு பண்ணத்தான் ஆந்திரத் தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கல். கூட்டம் கூட்டமாகவும் கோஷ்டி கோஷ்டியாகவும் புதுதில்லிக்குப் படையெடுத்துப் போகிறார்கள். பண்டித ஜவஹர்லால் முதலிய தலைவர்களைப் பேட்டி காண்கிறார்கல். ஜனநாயக யுகத்தில் 'பேட்டி கொடுக்க மாட்டோம்' என்று தலைவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? வந்தவர்களுக்குப் பேட்டி கொடுத்துத் தலைவர்கள் அவர்கள் சொல்லுவதையும் காது கொடுத்துக் கேட்கிறார்கள். தில்லிக்குப் போனவர்கள் திரும்பி வந்து "தலைவர்களிடம் சொல்லி விட்டோம், அநேகமாக நம் பக்கம் தீர்ப்பு ஆகும்!" என்ற வதந்தியைப் பரப்புகிறார்கள்.

தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் ஆந்திர சகோதரர்களின் எண்ணம் நிறைவேறினாலும் நிறைவேறி விடலாம் அல்லவா? பிடிவாதக் காரர்களை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்று அகில இந்தியத் தலைவர்களுக்குத் தோன்றினாலும் தோன்றிவிடலாம் அல்லவா?"

ஆந்திரர்கள் சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதைப் போன்ற அநியாயமான கோரிக்கை அரசியல் உலகில் நாம் கேள்விப் பட்டதில்லை. சென்னை நகரில் பெரும்பான்மையோர் தமிழர்கள், ஏறக்குறைய 100க்கு 80 பேர் தமிழர்கள். இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

சென்னையில் நெடுங்காலமாக வசித்து வருவோர் தெலுங்கர்களா? தமிழர்களா? இதைக் கண்டுபிடிக்க ஒரு திட்டமான வழி இருக்கிறது.

ஒரு பாஷைக்காரர்கள் வியாபாரம் அல்லது தொழிலுக்காக வேறு மாகாணத்துக்குப் போனால் அவர்கள் தாங்கள் குடிபுகுந்த மாகாண பாஷையைக் கற்றுக் கொள்வது இயல்பு.

காசிக்குப் போய்க் குடியேறும் தமிழர்கள் அங்கு வழங்கும் ஹிந்தி பாஷையைக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் காசி வாசிகள் தமிழைக் கற்றுக்கொண்டுவிட மாட்டார்கள்.

இப்போது பாருங்கள், சென்னை நகரில் குடியேறி வர்த்தகம் செய்யும் கோமுட்டி செட்டியார்கள், நாயுடுமார்கள் முதலியோர் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கல். ஆனால் சென்னையிலுள்ள தமிழர்கள் எத்தனை பேருக்குத் தெலுங்கு பாஷை பேசத் தெரியும்?

சென்னை நகரம் தமிழர்களுடையதுதான் என்பதைப் பற்றி யாதொரு சந்தேகமும் இல்லை. ஆந்திரர்கள் சென்னை நகரை முழுதும் கேட்பதோ, பாதி வேண்டும் என்று கேட்பதோ மிக்க அநியாயம். ஆந்திராவிலும் தமிழ் நாட்டிலும் சேராமல் சென்னையைத் தனி மாகாணமாக்க வேண்டும் என்று கேட்பது "எனக்கு இரண்டு கண்கள் போனாலும் அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண் போனால் சரி" என்ற மோசமான மனோ நிலையைக் காட்டுகிறது.

தமிழர்களுடைய கட்சியிலேயே முழு நியாயம் இருந்த போதிலும் அதை எடுத்துச் சொல்வது அவசியம். ஏற்கனவே சென்னை விஷயத்தில் தமிழ் நாட்டுத் தலைவர்கள் அவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வில்லை. "பட்டணம் பறிபோகிறது" என்ற எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வடசென்னைக்கு ஆந்திரப் பிரதிநிதியைச் சட்டசபைக்கு நிறுத்த ஒப்புக் கொண்டார்கள்.

இப்போதாவது தமிழ் நாட்டுத் தலைவர்கள் விழித்தெழ வேண்டும். முன் ஜாக்கிரதையுடன் காரியம் செய்ய வேண்டும். தலைவர்கள் விழித்தெழுந்து தக்க சமயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்ப் பொது மக்கள் தூண்ட வேண்டும். தலைவர்கள் தூங்கினாலும் மக்கள் போடும் கூச்சலில் அவர்கள் எழுந்துவிட வேண்டும்.

சென்னையில் ஸ்ரீ பி.எம்.ஆதிகேசவலு நாயக்கர் அவர்கள் சென்ற வாரத்தில் இது சம்பந்தமாக ஒரு கூட்டம் கூட்டி வைத்தார்; பலரும் பேசினார்கள். தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.

தமிழ்நாட்டில் இன்னும் சில இடங்களிலும் "சென்னை நகரம் தமிழர்களுடையதே" என்ற சிறு குரல்கள் எழுந்திருக்கின்றன. இதெல்லாம் போதாது. இந்த மாதிரி சிறு குரல்களும் பெருங்குரல்களும் கோஷங்களும் கூச்சல்களும் தமிழ்நாடு முழுதும் கிளம்ப வேண்டும். எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய மகா சமுத்திரத்தின் பேரிரைச்சல் போல் முழங்கிப் புது டில்லியில் உள்ள நம் மாபெரும் தலைவர்கள் காதிலும் போட் எட்ட வேண்டும்.

சென்னை நகரைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றிக் கொடுக்க ஒரு பெரும் சேனை தயாராக வேண்டும். கூச்சலும் கோஷமும் போட்டுப் பார்த்த பிறகு அவசியமானால், காந்தி மகாத்மா காட்டியுள்ள சாத்வீக முறையில் நடவடிக்கை எடுத்துத் தமிழர் உரிமையை நிலைநாட்டவும் அந்த சேனை ஆயத்தமாயிருக்க வேண்டும்."

நன்றி: "கல்கி" 25-9-1949.

அன்பிற்கினிய பாரதிபயிலக வலைப்பூவைப் படிக்கும் அன்பர்களே! கல்கியின் இந்தக் குரல் யாரிடமிருந்து அவருக்கு வந்தது என்பதை யூகித்து உணர்வது ஒன்றும் சிரமமில்லை. அப்படி தமிழர்கள் சென்னை நகரைக் காக்க வேண்டும் என்று இத்தனை அழுத்தமாகக் கல்கி குரல் கொடுத்த பின்பு என்ன நடந்தது? அப்படிப்பட்ட ஒரு சேனை தமிழகத்தில் உருவானதா? அறவழிப் போராட்டம் நடைபெற்றதா? யார் தலைமையேற்று அந்தப் போராட்டத்தை நடத்தியது? அதில் வெற்றி பெற்றாரா? இவற்றையெல்லாம் அடுத்து வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

மீண்டும் மற்றொரு சிவாலயத்திற்கு ஆபத்து :மீண்டும் மற்றொரு சிவாலயத்திற்கு ஆபத்து :

வெண்பாக்கம், புறவார்பனங்காட்டூர் (கடும் போராட்டதிற்குப் பிறகு ஈசன் அருளால் புறவார்பனங்காட்டூர் காப்பாற்றப்பட்டுவிட்டது) வரிசையில் மீண்டும் ஒரு திருக்கோயில் - 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராஜேந்திர சோழன் திருப்பணி திருக்கோயிலான - "மானம்பாடி" (சோழபுரம் - திருப்பனந்தாள் சாலை; திருவிடைமருதூர் வட்டம்) அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில் மதிற்சுவரை இடித்து NH-45c தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய இந்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு திருக்கோயில் மதிற்சுவரை இடிக்க முயல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சாலைகள் அமைப்பதற்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கும்போது இந்து மக்களின் மனம் வேதனைப்படுமாறு நெடுஞ்சாலைத்துறையானது அதே செயலை மீண்டும் மீண்டும் செய்து இந்து மக்களின் மனங்களில் வெறுப்பைக் கொட்டுவதாக நடந்துகொள்வது மிகவும் வருத்தத்திற்குரிய மற்றும் கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது.
புறவார் பனங்காட்டூர் திருக்கோயில் விவகாரம் ஓய்ந்து ஓராண்டுக்குள் அதே பிரச்சினை வேறு ரூபத்தில் முளைத்து இருப்பது மிகவும் வேதனையாகவே உள்ளது. இந்து கோயில்களை இடித்தல், மாற்றி அமைத்தல் அல்லது வளர்ச்சிப்பணி என்ற பெயரில் திருக்கோயில்களுக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற, எந்த இந்துக்களும் விரும்பாத செயல்கள் இந்து மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
புராதனத்திற்கு எந்த வகையிலும் சிறிதும் ஆபத்து நேர்ந்துவிடாமல் தமிழ அரசின் இந்து சமய அறநிலைத் துறை பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இந்துக்களின் அரண்களாகிய ஆதீனங்களும், மடங்களும் இப்பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.

Thursday, May 16, 2013

நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா.


            நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா.

கரூர்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரம்மேதிரர் 99ஆவது ஆராதனை விழா, இலட்சார்ச்சனையுடன் நேற்று முன் தினம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் அருகே உள்ள நெரூர் அக்ரஹாரத்தில் ஆண்டு தோறும் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் ஆராதனை விழா நடந்து வருவது வழக்கம். நடப்பாண்டில் ஆராதனை விழா நேற்று காலை 8 மணிக்கு இலட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது.

நேற்று முந்தினம் காலை 11-30 மணிக்கு நெரூர் அக்ரஹாரத்திலிருந்து சதாசிவ பிரம்மேந்திரரின் உருவப் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அவருடைய ஜீவசமாதியில் வைத்து இலட்ச்சார்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மகன்யாச அபிஷேகம், வேத பாராயணம் ஆகியவை நாள்தோறும் நடந்தது. வரும் 19ஆம் தேதி வரை நாள்தொறும் இலட்ச்சார்ச்சனை நடக்கும்.

வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் 99ஆவது ஆராதனையை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் சதாசிவ பிரம்மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உத்சவமும், ஸந்தர்ப்பனையும் நடந்து வருகிறது. ஆராதனையன்று ஸ்ரீ சுவாமிகளின் திருவுருவப் படம் அக்ரஹாரத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஜீவசமாதியை அடைந்து அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அக்ரஹாரத்தின் நடுவில் காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஓடுகிறது. இருபுறமும் வரிசையாக வீடுகள் இருக்கின்றன. வாய்க்காலின் இரு கறைகளிலும் வீடுகளுக்கு முன்னால் இரு வரிசையாக இலை போடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதக்ஷணம் செய்துவிட்டு வாய்க்காலில் மூழ்கி எழுவார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் கீர்த்தனைகளை இசை வல்லுனர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள்.

ஆராதனை விழாவில் நடத்தப்படும் அன்னதானத்தின் போது, பக்தர்கள் சாப்பிடும் இலைகளில் ஏதேனுமொன்றில் யாருடைய உருவத்திலாவது ஸ்ரீ சுவாமிகள் வந்து அமர்ந்து உணவு அருந்துவதாக ஒரு நம்பிக்கை. அது எந்த இலை என்பது தெரியாததால் பக்தர்கள் ஒட்டுமொத்தமாக எல்லா இலைகளிலும் உருண்டு அங்கப் பிரதக்ஷணம் செய்து ஸ்ரீ சுவாமிகளின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இந்த அங்கப் பிரதக்ஷண நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. சாப்பிடுபவர்கள் தவிர அங்கு இந்த கோலாகல நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருப்பார்கள்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் சபா, சத்குரு சதாசிவ பிரம்மேந்திர சேவ டிரஸ்ட் ஆகியவைகள் கவனித்து வருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு அந்த வாய்க்காலில் சொட்டு நீர்கூட கிடையாது. காவிரியும், வாய்க்காலும் வறண்டு கிடப்பதால் பக்தர்களுக்கு ஏமாற்றம். ஒரு பழமொழி உண்டு, "புருஷன் அடிச்சாலும் அடித்தான், பெண்டாட்டி கண்ணிலிருந்த புளிச்சையெல்லாம் போச்சு" என்று காவிரியும் வாய்க்காலும் வரண்டாலும் வரண்டது. வாய்க்காலை தூர்வாரியா ஆற்றில் தண்ணீர் வரும்போது நீரோட்டம் சீராக அமைய அதனை சீரமைக்கும் பணியை நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் புலம்புவது, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற வறர்சியைக் காவிரி இங்கு கண்டதில்லை என்பதுதான். காலம் மாறும், வறட்சி தீரும். அந்த மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அருள் மழை இருந்தால் வான்மழை பொய்யாமல் பொழியும், ஆறுகள் கரைபுரண்டு ஓடும். நாடு வளம்பெறும். இதற்காக இந்த ஆராதனை நாளில் அந்த மஹானைப் போற்றி வணங்குவோம் வாரீர்.

செய்தி: நன்றி 'காலைக்கதிர்' நாளிதழ் 17-5-2013.

Tuesday, May 14, 2013

சிரிக்கவும் சிந்திக்கவும் இந்தப் படங்கள்.

1. 
பையன் இன்றைய அரசியலையும், மத்தியில் அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வைப்பதும், அதற்கு அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதும், எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் சுகவாழ்வு வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? அவனிடம் போய் ஆங்கில இலக்கணத்தில் கேள்வி கேட்டால் அவன் என்ன பதில் சொல்லுவான். இலக்கணத்தோடு நம் நாட்டு நிலைமையை அழகாகச் சொல்லிவிட்டான். ஐயா! ஆசிரியரே, அவனை அடிக்காதீர்கள். பாராட்டுங்கள்.

2.

"போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்" என்று சொல்லி ஏற்றது இது என்று தீர்மானித்துவிட்டால் அந்த வழியில் துணிந்து செல்லுவதே தன் வழி என்றார் கவிஞர் கண்ணதாசன். போற்றலும், தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று எல்லாம் இறைவனுக்கே என்ற பக்திமான்களுடைய கருத்தும் இங்கே காட்டப் படுகிறது. என்னைத் தூற்றுபவர்கள் தூற்றட்டும் அவர்களுக்குப் பதில் சொல்லி என் நேரத்தையும், மனத் திண்மையையும் கெடுத்துக் கொள்ளாமல், என் மீது அன்பு செலுத்துவோர் மீது அன்பு செலுத்தும் உள்ளத்தை இறைவா எனக்குக் கொடு எனச் சொல்லும் இந்த வரிகள் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டன.

3.


"சென்றதினி மீளாது மூடரே! நீர்
 எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
 கொன்றழிக்குங் கவலை யெனும் குழியில் வீழ்ந்து
 குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
 இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
 எண்ணமதைத் திண்ணமுறை விசைத்துக் கொண்டு
 தின்று, விளையாடி, இன்புற்றிருந்து வாழ்வீர்!
 தீமையெலாம் அழிந்து போம், திரும்பி வாரா!"

மகாகவி பாரதியாரின் இந்த வரிகள் எத்தனை உண்மையான, சத்தியமான வாக்கு. உலகத்து மேதைகள் அனைவருமே ஒன்றுபோல சிந்திப்பார்கள் போலிருக்கிறது. இதே கருத்துதான் இந்த படத்திலும், சுய முன்னேற்றத்துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

4.

நீங்கள் பிறரிடம் காட்டும் அன்பு விலை மதிப்பில்லாதது, அளவிடற்கரியது. அந்த அன்பை புரிந்து கொள்ளாத, அல்லது ஆதாயத்துக்காக உங்கள் அன்பைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. உங்கள் அன்பைப் புரிந்து கொள்ளாமல் மனதைத் துன்பப் படுத்துபவர்களை உங்களால் திரும்பப் புண்படுத்த முடியாது. மறந்து விடுங்கள்! அவர்களை விட்டுக் காத தூரம் போய்விடுங்கள். திரும்பவும் அவர்கள் முகங்களில் முழிக்க விரும்பாதீர்கள். அது ஒன்றே நல்ல மருந்து.

5. 

முதல் நான்கு படங்களையும் மிகவும் சீரியசாக அணுகினோமல்லவா? அதே சீரியஸ்னஸோடு முடித்தால் மனம் சிரமப்படும். ஆகையால் ஒரு சின்ன மாறுதலுக்காக, ஆறுதலுக்காக என்றுகூட சொல்லலாம், இந்த கடைசி படத்தின் கருத்தை நகைச்சுவையோடு பார்க்கலாம். திருமணங்களில் மணமகன், மணமகளின் கரங்களைப் பிடித்துக் கொள்கிறான். சிலர் பெண்ணின் கை விரல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தன் கைக்குள் வைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றும் உபதேசம் செய்வார்கள். அதாவது பெண்ணை வாழ்நாள் முழுவதும் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதாக அவன் நினைத்துக் கொள்கிறான். ஆனால் இந்தப் படம் என்ன சொல்கிறது? குத்துச் சண்டை அல்லது குஸ்தி போடுமுன்பு இருவரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்குவது போல பிடிக்கிறதைப் பார்த்திருக்கிறோமல்லவா, அதைப் போலத்தான் வாழ்வின் பின்னால் வரப்போகும் குஸ்திகளுக்கு முன்னதாகக் கையைக் குலுக்கிறார்கள் என்கிறது இந்தப் படம். நல்ல நகைச்சுவை.

Monday, May 13, 2013

காவேரி  காவேரி                       

தஞ்சை மாவட்டத்துக்கு உயிர் கொடுப்பது காவேரி ஆறு. பாரத நாட்டுப் புராதன நதிகளில் ஒன்று காவேரி. பெண்கள் பெயரால் அழைக்கப்படும் நம் நாட்டு நதிகளில் கங்கையைப் போன்று புனிதமுடையது காவேரி. பல காப்பியங்களின் உயிரோட்டமாக இருந்திருப்பது காவேரி. இன்றைய அரசியலில் காவேரி பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. காவேரி நதி வரண்டு போனால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறுவது உறுதி. அப்படிப்பட்ட ஜீவனுள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மக்களுடைய வாழ்வோடு பின்னிப் பிணைந்த இந்த காவேரி நதியைப் பற்றி சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
                                          
தென் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியை யொட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் கொடகு நாட்டில் தலைக்காவேரி எனுமிடத்தில் உற்பத்தியாவது காவேரி. இந்தப் பகுதி கர்நாடக மாநிலத்து எல்லையில் கேரளத்தை யொட்டி அமைந்திருக்கிறது. குடகில் உற்பத்தியாகும் இந்த நதி, கர்நாடக மாநிலத்தில் பாய்ந்து, தமிழகத்தில் ஹொகனக்கல் எனுமிடத்தில் நுழைந்து சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை எனப் பாய்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.
                                          

காவிரி நதியோடு வந்து இணையும் பல உபநதிகள் உண்டு. அவற்றில் குறிப்பாக ஹேமாவதி, அமராவதி, கபினி, பவானி, நொய்யல் ஆகிய ஆறுகளை முக்கியமாகச் சொல்லலாம். காவேரி நதியால் பயன் அனுபவிக்கும் மாநிலங்களின் பகுதிகள் நான்கு. அவை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவை. இது கர்நாடகாவில் சிவசமுத்திரம் எனுமிடத்திலும், தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் ஹொகனகல் எனுமிடத்திலும் அருவியாகக் கொட்டி மனங்களை மகிழ வைக்கிறது. இதில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி சுமார் 320 அடி உயரத்திலிருந்து கொட்டுகின்ற ஆகை நன்கு ரசிக்கலாம். ஹொகனக்கல் நீர்வீழ்ச்சி அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற இடம்.
                                         


காவிரி நதி நீரிலிருந்து மின்சாரம் எடுப்பது தவிர டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்கு முக்கியமாகப் பயன்படுகின்றது. இந்த காவேரி நதிக்குப் புராண கதைகளின் படி பல்வேறு செய்திகள் சொல்லப்படுகின்றன. பிரம்மனின் புதல்வி லோபாமுத்திரை எனப்படுபவர். இவர் அகத்திய முனியின் பத்தினி என்று சொல்லப் படுகிறது. இந்த புராண வரலாற்றையொட்டி திருவையாறு அறம்வளர்த்தநாயகியின் புகழ்பாடும் "தர்மாம்பாள் குறம்" எனும் நாட்டுப்புற இலக்கியமும் பேசப்படுகிறது. தமிழில் கா என்றால் சோலை, விரி என்றால் இந்த ஆறு ஓடுமிடங்களில் இருபுறமும் பசுமையான சோலைகளை வளர்த்துக் கொண்டு போவதால் இதனை காவிரி என்றனர் என்று விளக்கம் கூறப் படுகின்றது.

குடகில் இந்த நதி உற்பத்தியாகுமிடம் ஒரு குளம் போன்ற பகுதியில் ஒரு மூலையில் சிறு கிணறு போல் அமைந்த காவிரிமாதா சந்நிதிக்கு எதிரில் ஒரு ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து பாதாளம் வழியாகப் பாய்ந்து செல்கிறது. நீராக ஓடிவரும் காவேரி சிவசமுத்திரம் எனுமிடத்தில் மின் உற்பத்தியாகி பெங்களூர் நகரத்தை ஒளிமயமாக்குகிறது. கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஒரு தீவாக ஆக்கி அங்கு பள்ளி கொண்ட ரங்கநாதரை வழிபட்டு ஓடிவருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவேரி ஓடிவரும் பாதையெல்லாம் விவசாயத்துக்கு மட்டுமல்ல மக்களுக்குக் குடிக்கவும் குடிநீரைத் தந்து கொண்டு ஓடிவருகிறது. கிராமங்கள் மட்டுமல்லாமல் மண்டியா, மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் காவேரியின் குடிநீர் கிடைக்கிறது. இந்த நாட்டில் பல நதிகள் ஜீவ நதிகளாம். காவேரியும் ஜீவநதி என்கிறார்கள். தஞ்சை டெல்டா பிரதேசத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் காவேரி ஜீவநதியா என்று.
                                       


கர்நாடகம் முடிந்த மட்டும் காவிரியின் பயன்பாட்டை அனுபவித்தபின், தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. அது நுழையும் பகுதி தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம். அங்கு நதி நுழையுமிடம்தான் ஹொகனக்கல். காவேரி சேலம் மாவட்டத்துள் நுழையும்போது மேட்டூரில் ஸ்டான்லி ரிசர்வாயர் என அழைக்கப்படும் மேட்டூர் அணையில் நீரைத் தேக்கி தேவைப்படும் போது அளவோடு நீரை திறந்து காவிரி பாசன டெல்டா பகுதிகள் பயனடையும் விதமாகக் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு தண்ணீர் தேக்கப்படுவதோடு, மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது. 
                                     


மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவேரி ஈரோடு பகுதிக்கு வரும்போது அகண்ட காவேரியாக பெருகி வளர்ந்து வரும் கம்பீரம் பார்த்து ரசிக்கத்தக்கது. அங்கு பவானி நதி காவிரியோடு சேர்ந்து கொள்கிறது. பவானி நதி காவேரியில் வந்து சேரும் இடத்தில் பவானி எனும் ஊரில் கூடுதுறை என்று போற்றி அந்த சங்கத்தில் மக்கள் புனித நீராடுகின்றனர். திருமணி முத்தாறு, நொய்யல் ஆறுகளும் காவிரியில் வந்து கலக்கிறது. கரூரை அடுத்த நெரூரில் ஆம்பிராவதி என்று பெரியபுராணம் குறிப்பிடும் அமராவதி நதி காவிரியில் வந்து கலக்கிறது. ஈரோடு, கொடுமுடி, ஊஞ்சலூர், மாயனூர் என்று பல ஊர்களைக் கடந்து வந்து அங்காங்கே சில தடுப்பணைகளைத் தாண்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை வந்து அடைகிறது.
                                      

மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்ற காவிரி நதி ஊஞ்சலூர் கொடுமுடி அருகில் வடக்கு தெற்காக சிறிது தூரம் ஓடுகிறது. அப்படி ஓடுகின்ற நதி புனிதமானது என்று மக்கள் அங்கு நீராடுவது வழக்கம். ஈரோடு தொடங்கி திருச்சிராப்பள்ளி வரும் வரை காவிரி அகண்ட காவேரியாகக் காணப்படுகிறாள். மாயனூரில் காவிரியிலிருந்து நீர்ப்பாசனத்துக்காக கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு விவசாயத்துக்குக் கொண்டு செல்லப் படுகிறது. கட்டளை மேல்கரை வாய்க்கால், கீழ்கரை வாய்க்கால் என இவை அழைக்கப்படுகின்றன. 
                                       

குளித்தலை தாண்டி காவிரி மேலணை எனப்படும் இடம் வந்ததும் அங்கொரு தடுப்பணையில் காவிரி இரண்டாகப் பிரிகிறது. இந்த இடம் திருச்சிக்கும் மேற்கில் சுமார் 15 கி.மீ.தூரத்தில் உள்ளது. இங்கு காவிரி இரண்டாகப் பிரிகிறது அல்லவா, அதன் வடக்குப் பகுதி ஆற்றுக்கு கொள்ளிடம் என்றும், தென்பகுதி ஆற்றுக்கு காவேரி என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். மேலணையில் பிரியும் காவேரி திருவரங்கப் பெருநகரம் வந்ததும் மீண்டும் ஒன்று சேருகின்றன. இந்த இடைப்பட்ட பகுதி ஒரு தீவாகக் காணப்படும். இங்குதான் திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமான் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.
                                     

குடகில் காவேரி உற்பத்தியாகி வரும் வழியில் அதனோடு இணைந்து கொள்ளும் உபநதிகளாவன, ஹைமாவதி, ஷிம்ஷா, ஆர்க்காவதி, கபினி, ஹாரங்கி, பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை.

திருச்சிக்கு அருகில் ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே ஓடும் காவிரியாற்றில் கரிகால் சோழன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அணையைக் கட்டி காவிரி நீர்ப்பாசனத்துக்கு வழிவகுத்தான். கல்லணையிலிருந்து கிழக்கே காவேரி காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வரை புனிதமான அம்மனாகக் காவேரி போற்றப் படுகிறாள். காவிரியிலிருந்து கல்லணை திறக்கப்பட்டு தண்ணீர் விடப்படும்போது வழி நெடுக மக்கள், காவேரி அம்மனை வழிபட்டு வெற்றிலை தேங்காய் பூ இவற்றை வைத்து வணங்கி கற்பூரம் காட்டி ஆற்று மணலில் இறங்கி நமஸ்கரித்து வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் காவிரி புனிதநதி என்பதால் அதன் மணலில் காலில் செருப்போடு கூட நடக்க மாட்டார்கள். காவிரி நதியின் கரைகளில் ரிவிட்மெண்ட் எனும் சுவர் எழுப்பி உடைப்பு எடுக்காமலும், தண்ணீர் வீணாகாமலும் பாதுகாத்து சிறு சிறு ஓடைகள் வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்குக் கொண்டு சென்று விவசாயத் தொழில் புரிந்தனர்.
                                         

கல்லணையில் பிரியும் கொள்ளிடம் வடகிழக்கு திசையாக ஓடி பரங்கிப் பேட்டைக்கு தெற்கே தேவிபட்டணம் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த கொள்ளிடம் கும்பகோணத்துக்கு வடக்கே வரும்போது அங்கு கீழணை எனும் ஒரு அணையில் நீரைத் தேக்கி அங்கிருந்து மண்ணியாறு, உப்பனாறு போன்ற ஆறுகளாகப் பிரிந்து கிழக்குப் பகுதி விவசாயத்துக்குப் பயன்படுகின்றன. 
 
கல்லணையைத் தாண்டியதும் காவிரி பிள்ளைக்குட்டிக்காரியாக ஆகிவிடுகிறாள். ஏராளமான கிளை நதிகள் இங்கிருந்து பிரிந்து பல பகுதிகளுக்கும் விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகின்றது. வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, திருமலைராயனாறு, வீரசோழனாறு இப்படிப் பலப்பல. போதாதற்கு கல்லணைக் கால்வாய் என்று செயற்கையாக வெட்டி பாசனத்துக்காக பட்டுக்கோட்டை போன்ற மேட்டுப் பகுதிகளுக்கும் நீர்ப்பாசனத்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டிருக்கிறது. 

குடகில் உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமாக ஓடி, கடைசியில் மாயூரம் எனும் ஊரைத் தாண்டியவுடன் சின்னஞ்சிறு வாய்க்காலாக மாறி, காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கல்ல்கிறாள் காவேரி.Saturday, May 11, 2013

Sri Syama Sastri's Janma Nakshetra.


A Music homage was organised at Sri Bangaru Kamakshi Amman 
Temple, Thanjavur in connection with Sri Syama Sastri's Janma 
Nakshetra. The day was marked by the rendering of his compositions by young musicians of Thanjavur. 

 The programme was organised by Thillaisthanam Marabu 
Foundation. Syama sastri, one of the Carnatic Musical Trinity and a 
great Vaggayakara was born on Krithika Nakshatra of Chaithra Month. 

He belongs to the family which has the pooja rights of Bangaru 
Kamakshi Amman, traditionally. Being a Devi Upasaka, his compositions are of high order. The compositions are brimming with Bakthi, Raga bhava and Sahitya bhava. Most of the compositions were the outpour of his emotion in front of Sri Kamakshi of this Temple.Hence this function, said Dr.Rama.Kausalya Managing Trustee of Marabu Foundation. 
Welcome speech by Dr.Rama Kousalya of Marabu Foundation 

Selvi Swarna Sri singing a song

Mrs.Mridula Narayanan singing

Dr.Rama Kousalya, Mrs.Mythili Kannan and Mr.V.Gopalan with Musicians

Organiser Dr.Rama Kousalya & Guru Smt.Mythili Kannan with students

 Mrudula Narayanan, Swarna Shree, Anupama, M.S. Sruthi and V. 
Sruthi, all disciples of Mythili Kannan gave a performance on the 
compositions of Syama Sastri . Shri V. Gopalan of Aiyarappar 
Natyaanjali was the Chief guest.