பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 27, 2013

மொழிபெயர்ப்பு நூல் "ஞானத்திரட்டு" (28-1-2013)

1. மொழிபெயர்ப்பு நூல் "ஞானத்திரட்டு" (28-1-2013)

சுவாமிஜியின் கடிதங்களிலிருந்து சில பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்த மிகப் பழமையான பத்திரிகைகளுள் "லோகோபகாரி" என்பதும் ஒன்று. அதன் ஆசிரியராக இருந்தவர் திரு வி.நடராஜ ஐயர். சுவாமிஜி வாழ்ந்த காலத்திலேயே, அவருடைய சொற்பொழிவுகளையெல்லாம் திரட்டி, அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து இரு பகுதிகளாக வெளியிட்டார் நடராஜ ஐயர். அந்த நூல்களுக்கு "ஞானத்திரட்டு" என்று பெயர். அந்த நூலின் முதல் பகுதியை சுவாஜிக்கு அனுப்பி வைத்தார். அந்த நூலைப் பெற்றுக்கொண்டு சுவாமிஜி நடராஜ ஐயருக்கு பதில் எழுதினார். ஆங்கிலத்தில் சுவாமிஜி பேசிய பேச்சுக்களை மாநில மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிட்டது இந்தத் தமிழ் நூலாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சாதனையைப் புரிந்த "லோகோபகாரி" ஆசிரியர் நடராஜ ஐயருக்கு சுவாமிஜி எழுதிய பதில் கடிதத்தை இங்கு பாருங்கள்.

டார்ஜிலிங் 15 ஏப்ரல் 1898

அன்புடையீர்!

உங்கள் 7ஆம் தேதி கடிதமும் எனது சொற்பொழிவுகளில் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பொதுவாக தமிழ் மக்களுக்கும், குறிப்பாக உங்கள் பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள் பெரிய சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துக்களை எல்லா இடங்களிலும் பரவுமாறு செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்ற வழி அவற்றை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன். ஆசிகள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

தங்கள் உண்மையுள்ள,
விவேகானந்த

2. சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம்.

சுவாமிஜிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்த பேராதரவு அனைவரும் அறிந்தது. தமிழ் மக்களின்பால் அன்பு மிகக் கொண்டிருந்தார் சுவாமிஜி. தமிழ் அன்பர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்திற்கு ஒரு நிரந்தர மையத்தை ஏற்படுத்த எண்ணி தமது குருபாயியான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார் சுவாமிஜி. அவர் 1897 இறுதியில் சென்னை வந்து சேர்ந்தார். அவர் சென்னையில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு சில அடிப்படை விஷயங்களை இந்தக் கடிதத்தில் விளக்குகிறார் சுவாமிஜி. இப்படி தொடங்கப்பட்டதுதான் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம். இனி அந்தக் கடிதத்தின் சில பகுதிகளை இப்போது பார்க்கலாம்.

டார்ஜிலிங் 20 ஏப்ரல் 1897.

அன்பு சசி,

நீங்கள் எல்லோரும் இதற்குள் கட்டாயமாக சென்னை போய்ச் சேர்ந்திருப்பீர்கள். *பிலிகிரி உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார், சதானந்தர் உனக்குச் சேவை செய்கிறார் என்று நம்புகிறேன். சென்னையில் பூஜை, அர்ச்சனை முதலியவற்றை முற்றிலும் சாத்வீக பாவனையில் செய்ய வேண்டும். ரஜோகுணத்தின் சாயலே அதில் இருக்கக்கூடா

து. அளசிங்கன் இதற்குள் சென்னை திரும்பியிருப்பான் என்று நினைக்கிறேன். யாருடனும் விவாதங்கள் செய்யாதே; எப்போதும் சாந்தமாக இரு. இப்போதைக்கு பிலிகிரியின் வீட்டிலேயே குருதேவரைப் பிரதிஷ்டை செய்து பூஜை முதலியவற்றைச் செய்து வா. பூஜையை விரிவாகச் செய்யாதே. அந்த நேரத்தை வகுப்புகள் நடத்துவதிலும், சொற்பொழிவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். உன்னால் முடிந்த அளவு அன்பர்களுக்கு மந்திரோபதேசம் செய்வது நல்லது. இரண்டு பத்திரிகைகளையும் கவனித்துக் கொள். இயறவரையில் அதில் உதவு. பிலிகிரிக்கு இரண்டு விதவை மகள்கள் உள்ளார்கள். அவர்களுக்குக் கல்விப் பயிற்சி அளி. அவர்கள் மூலமாக மேலும் பல விதவைகள் முன்வந்து சம்ஸ்கிருதம், ஆங்கிலம், மதம் இவற்றைக் கற்கட்டும். இந்த விஷயத்தில் விசேஷ முயற்சி செய். ஆனால் இந்தக் காரியமெல்லாம் எட்ட நின்று செய்யப்பட வேண்டும். இளம் பெண்களுடன் பழகும்போது மிகவும் எச்சரிக்கையாக இரு. ஒரு தடவை தவற நேர்ந்தால் அப்புறம் கதியில்லை. அந்த அபராதத்திற்கு மன்னிப்பும் இல்லை.

அதிகாலையில் பூஜை முதலானவற்றைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, பிலிகிரியையும் அவர் குடும்பத்தினரையும் சேர்த்து கீதை முதலான நூல்களைச் சிறிது நேரம் படி. ராதாகிருஷ்ண பிரேமையைப் பற்றி யெல்லாம் கற்பிக்க வேண்டியதே இல்லை. சீதாரமர், அல்லது ஹர பார்வதி இவர்களிடம் தூய பக்தி கொள்ளுமாறு போதனை செய். இதில் எந்தத் தவறும் ஏற்பட்டுவிடக் கூடாது. ராதா-கிருஷ்ண லீலை இளம் மனங்களுக்கு விஷம் போன்றது என்பதை நினைவில் வை. அடிலும் முக்கியமாக, பிலிகிரி முதலியவர்கள் ராமானுஜரின் நெறியைப் பின்பற்றுபவர்கள்; ராம உபாசகர்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் சுத்த பக்தியை இழக்கும்படி நேரக் கூடாது.

மாலை நேரத்தில் இதேபோல் சாதாரண மக்களுக்குச் சிறிது கற்பிக்கலாம். இவ்வாறு படிப்படியாக மலையையும் தாண்டிவிடலாம். எப்போதும் பரிபூரணத் தூய்மை நிலவுமாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வாமாச்சாரத்தின் நிழல்கூட மடத்தில் புகுந்துவிடக் கூடாது. மற்றபடி இறைவன் எல்லாவற்றையும் வழி நடத்துவார். பயம் வேண்டாம். பிலிகிரிக்கு எனது விசேஷ வணக்கத்தையும், அன்பையும் தெரிவி. அதேபோல் எல்லா பக்தர்களுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவி.

அன்புள்ள, விவேகானந்த.

பி.கு. டாக்டர் நஞ்சுண்ட ராவுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவி. முடிந்த அளவு அவருக்கும் உதவு. தமிழர்களை, அதாவது பிராமணர் அல்லாதவர்களை சம்ஸ்கிருதம் படிப்பதில் ஊக்கப் படுத்து.

குறிப்பு:-- *இதில் 'பிலிகிரி' என குறிப்பிடப்படுபவர் பிலிகிரி ஐயங்கார் என்பவர். இவர் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு வைஷ்ணவர். உயர்நீதிமன்றத்து வழக்கறிஞர், செல்வந்தர். இவர்தான் இப்போது விவேகானந்தர் இல்லம் எனும் கட்டடத்தை ஐஸ் கட்டிகளைக் கொண்டு வந்து இறக்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு ஆங்கிலேய கம்பெனியிடமிருந்து விலைக்கு வாங்கியவர். சுவாமி விவேகானந்தரை அந்த இல்லத்தில் தங்கச் செய்தவர். அதனால்தான் அந்தக் கட்டடம் விவேகானந்தர் இல்லம் ஆகியது.












Saturday, January 26, 2013

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா


Book stall
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஐந்து நாள் ஆராதனை விழா இன்று மாலை தமிழக ஆளுனர் அவர்களால் துவக்கப்படவிருக்கிறது. கபிஸ்தலம் இளையவர் என்று அன்போடு அழைக்கப்படும் திரு ஜி.ஆர்.மூப்பனார் அவர்களது தலைமையில் செயல்படும் ஆராதனைக் கமிட்டி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் திருவையாற்றுக் காவிரிக் கரையிலிருந்து இசையின் நாதம் எழுந்து பரவப் போகிறது. சென்னையிலோ, மும்பையிலோ அல்லது அமெரிக்காவிலோ திருவையாறு என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினாலும், ஒரிஜினல் காவிரிக் கரை திருவையாற்று மண்ணிலிருந்து எழும் தியாராஜ சங்கீதம் போல் ஆகுமா என்கின்றனர் சங்கீதப் பிரியர்கள். ஆராதனை நடக்குமிடத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள். அவற்றிடையே திருவையாறு பாரதி இயக்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று மாலை 6-00 மணிக்குக் கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் திரு இரா.குணசேகரன் அவர்களால் திறந்து வைக்கப்படவிருக்கிறது. பல பதிப்பாளர்களும் தங்கள் வெளியீடுகளை இங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். செவிக்கு இசையோடு அறிவுக்கு விருந்தாக நல்ல நூல்களையும் இங்கு வருவோர் வாங்கிச் செல்ல வேண்டும். வாருங்கள், இன்று மாலை திருவையாற்றில் சந்திக்கலாம்.
Sri Thyagarajaswamy Samadhi temple
Rendering Pancharathna Keerthanas
Samadhi on the shores of Cauvery river



G. Srinivasan
Choices aplenty: Visitors at the book exhibition organised as part of Thyagaraja's aradhana in Thiruvaiyaru on Saturday. —Photo: M. SRINATH
Choices aplenty: Visitors at the book exhibition organised as part of Thyagaraja's aradhana in Thiruvaiyaru on Saturday. —Photo: M. SRINATH
The aradhana of saint composer Thyagaraja is not just an enlightening spiritual experience but also provides food for thought as it hosts music concerts, book expos. The festival brings in its wake numerous exhibitions and other activities at Thiruvaiyaru.
Noted authors
Bharathi Iyakkam of Thiruvaiyaru, that has been organising a book exhibition during the aradhana for the last 20 years, has put up an exhibition hosting hundreds of books. The collections include, all books of Kannadasan, Kalki, Sujatha, lyricist Vairamuthu and others.
On the religious and philosophical side, Kritis of Thyagaraja with Tamil explanation, Periya Puranam, Kamba Ramayanam, Sundara Kandam, Thiruppavai, Bharathy's poems are on display. “Last year we recorded a sale of Rs.1.5 lakh. Books on saint Thyagaraja and his contribution to music are very famous among customers,” said Gopalan of Bharathi Iyakkam. Another exhibition organised by the National Bank for Agriculture and Rural Development (NABARD), Thanjavur saw the display of products produced by members of Self Help Group, participants of training programmes organised by the bank and other craftsmen who have benefitted under different schemes implemented by NABARD.
Products on display are Thirubhuvanam handloom silk sarees, icons, photo frames, embroidery sarees, designer blouses, artificial jewellery, glass paintings, flower bouquets besides food items .


'எழுமின்! விழிமின்! (27-1-2013)


'எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்மின்.' (27-1-2013)

சுவாமிஜி சிகாகோ நகரத்திலிருந்து சென்னையில் இருந்த அழகியசிங்கப் பெருமாள் எனும் அன்பருக்கு 28-5-1894இல் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இதோ.

"அன்பார்ந்த அளசிங்கா,

உனது கடிததிற்கு உடனே பதில் எழுத முடியாமல் போயிற்று. ஏனெனில் நான் நியுயார்க், பாஸ்டன் என்று சுழன்று கொண்டிருந்தேன். நரசிம்மனின் கடிதத்தை எதிர்பார்த்தேன். நான் இந்தியாவிற்கு எப்போது வருவேன் என்பது தெரியாது. என் பின்னால் இருந்து என்னை இயக்கி வருகின்ற ஆண்டவனின் பொறுப்பில் அனைத்தையும் விட்டுவிடுவதே மிகவும் சிறப்பானது. நான் ஒருவன் இல்லாதிருந்தால் எப்படியோ, அப்படியே என்னை விட்டுவிட்டு வேலை செய்வதற்கு முயற்சி செய். யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காதே. உன்னால் முடிந்ததைச் செய்து முடி. யாரையும் நம்பியிருக்காதே.

சொந்த நாட்டில் எனக்குப் போதிய அளவு பாராட்டுகள் கிடைத்துவிட்டது. அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தூங்காதீர்கள், வேகம் தளர்ந்து விடாதீர்கள். நமது திட்டங்களில் ஒரு சிறிதுகூட இதுவரை செயலளவில் நிறைவேற்றப்படவில்லை என்பதை மறக்காதீர்கள்.

படித்த இளைஞர்களிடம் செயல்படு, அவர்களை ஒன்றுபடுத்தி அமைப்புகளை உருவாக்கு. பெரும் தியாகங்களால் மட்டுமே மகத்தான செயல்களைச் சாதிக்க முடியும். சுயநலம் கூடாது, பெயர் கூடாது, புகழ் கூடாது; உனது புகழோ, எனது புகழோ, ஏன் என் குருதேவரின் புகழேயானாலும் கூடாது. செயல்படுங்கள்; நமது கருத்தை, நமது திட்டத்தைச் செயலளவில் நிறைவேற்றுங்கள். என் இளைஞர்களே, தைரியம்
மிக்க, உத்தம குணம் வாய்ந்த நல்லவர்களே, செயல் சக்கரத்தை உருட்ட வாருங்கள்; சக்கரத்தை இயக்க உங்கள் தோள்களைக் கொடுத்து உதவுங்கள். பெயர், புகழ் போன்ற அற்ப விஷயங்களுக்காக நின்று திரும்பிப் பார்க்காதீர்கள். சுயநலத்தைத் தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள். 'புல்லானாலும்கூட அதை ஒன்று சேர்த்துக் கயிறு ஆக்கினால், மதம் பிடித்த யானையையே அதனால் கட்டிவிட முடியும்.' இதை நினைவில் வையுங்கள். உங்கள் அனைவர் மீதும் இறைவனின் ஆசிகள் பொழியட்டும். அவரது சக்தி உங்கள் அனைவரிடமும் நிலவட்டும் -- ஏற்கனவே அது இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். 'விழியுங்கள், குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்' என்கின்றன வேதங்கள். எழுந்திருங்கள், எழுந்திருங்கள், நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது, பகற்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலை எழுந்து விட்டது. அதன் பெரு வேகத்தை எதிர்த்து நிற்க எதனாலும் முடியாது. என் இளைஞர்களே, வேண்டுவதெல்லாம் உற்சாகம், உற்சாகமே! என் குழந்தைகளே, அன்பு, அன்பு; நம்பிக்கை, எல்லையற்ற நம்பிக்கை இவையே வேண்டும். பயம் வேண்டாம். பாவங்களுள் மிகப் பெரிய பாவம் பயம் என்பதே.

நமது கருத்தை நாலாபக்கமும் பரவச் செய்யுங்கள்; கர்வம் கொள்ளாதீர்கள்; பிடிவாதக் கொள்கை எதையும் வற்புறுத்தாதீர்கள்; எதற்குமே மாறாகச் செல்லாதீர்கள். நமது வேலை இரசாயனப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வைப்பதே; படகம் எவ்வாறு எப்போது உருவாகும் என்பது இறைவனுக்கே தெரியும். அனைத்திற்கும் மேலாக, எனது வெற்றியையோ உங்கள் வளர்ச்சியையோ கண்டு கர்வம் கொண்டு விடாதீர்கள். பெரும் பணிகள் செய்தாக வேண்டியுள்ளன. இனி வரவிருக்கின்ற வெற்றியுடன் ஒப்பிடும்போது, இந்தச் சிறு வெற்றி எம்மாத்திரம்? நம்புங்கள், நம்புங்கள், ஆணை பிறந்துவிட்டது. இறைவனின் கட்டளை பிறந்துவிட்டது. பாரதம் முன்னேறியே ஆக வேண்டும், பாமரர்களும், ஏழைகளும் நலம் பெற வேண்டும். இறைவனின் கையில் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஆன்மிக வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. தடுக்க முடியாதபடி, கங்கு கரைகள் இல்லாதபடி, அனைத்தையும் கவர்ந்தபடி அது நிலத்தின் மீது புரண்டு வருவதை நான் காண்கிறேன். ஒவ்வொரு மனிதனும் முன்னணியில் வந்து நிற்கட்டும். ஒவ்வொரு நன்மையும் அந்த வேகத்தின் ஆற்றலுடன் சேர்த்துக் கொள்ளப்படும்; ஒவ்வொரு கையும் அதன் பாதையைச் சீராக்கும். எல்லா பெருமையும் இறைவனையே சேரட்டும்.

அனல் பறக்கின்ற இளைஞர் குழு ஒன்றை ஆயத்தப் படுத்துங்கள். உங்களிடமுள்ள ஊக்கத் தீயை அவர்களிடம் செலுத்துங்கள். பிறகு படிப்படியாக இந்த அமைப்பைப் பெருக்குங்கள். இதன் பரப்பு மேலும் மேலும் அகன்று விரியட்டும். உங்களால் முடிந்த அளவு சிறப்பாக செய்து முடியுங்கள். தண்ணீர் வடிந்த பிறகு நதியைக் கடக்கலாம் என்று காத்திருக்காதீர்கள். பத்திரிகைகள், செய்தித் தாள்கள் எல்லாம் அச்சிடுவது நல்லதுதான், அதில் சந்தேகமில்லை; ஆனால் என் இளைஞர்களே, ஓயாமல் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருப்பதையும் பேசுவதையும்விட, உண்மை வேலை செய்வது என்பது அது ஒரு மிகச் சிறிய துளி அளவே இருந்தாலும் அதுவே உத்தமமானது.

உயிர் போகும் நிலை வந்தாலும் சுயநலமற்றவர்களாக இருந்து வேலை செய். நான் எண்ணுகின்ற அனைத்தையும் எழுத முடியாது. ஆனால் தைரியம் மிகுந்த என் இளைஞர்களே, எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்கான ஆற்றலை இறைவன் உங்களுக்கு அளிப்பார். இந்தப் பணியில் ஈடுபட்டு விடுங்கள்! இறைவனின் புகழ் ஓங்கட்டும்!

அன்புள்ள விவேகானந்த

சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!


சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று! 

சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர். அவர் ஒரு நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு, ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக்காரராகப் பார்க்க முடியாது. யாரையும் எதிரியாகவோ, வேற்றாளாகவோ கருதியது கிடையாது. அன்பு மட்டுமே அவரை உலக மக்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார வைத்திருந்தது எனலாம்.

பிறப்பால் வங்காளியான அவருக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் இருந்த அன்பும் அக்கறையும் பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அவரது சிகாகோ பயணத்தின் முதல் கட்டத்தில் அவர் பயணம் செய்த கப்பல் சென்னை நோக்கி வரும் செய்தியைத் தொடர்ந்து அவரது தென்னக மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் பகுதியும் வருகிறது.

அவரது பயணத்தை மட்டும் சொல்லாமல், பயணம் செய்யும் இடங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் காலத்தில் தமிழ்பேசும் நல்லுலகம் மட்டுமல்ல, ஆந்திரப் பகுதிகளின் பெரும்பாலான இடங்கள், கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவற்றை உள்ளடக்கியிருந்தது பழைய சென்னை மாகாணம். சுவாமிஜி சொல்கிறார் 

"தென்னிந்தியாவின் பெரும் பகுதி சென்னை மாகாணத்தைச் சேர்ந்தது. நிலம் மட்டும் பரந்து கிடப்பதில் என்ன பயன்? அதிர்ஷ்டம் உள்ளவனிடம் பாலைவனம் கிடைத்தாலும் அது சொர்க்கமாக ஆகிவிடும்" 

என்று தென்னக மக்களின் உழைப்பை உயர்வுபடுத்திச் சொல்லுகிறார்.

தென்னக மக்களைக் குறிப்பாக தமிழக மக்களை அவர் வர்ணிக்கும் காட்சி அற்புதமானது. அவர் சொல்கிறார்: 

"மழித்த தலை, குடுமி, பல்வேறு வண்ணங்களைப் பூசிய நெற்றி, கட்டைவிரலை மட்டுமே நுழைத்து அணியக்கூடிய செருப்பு. பொடி போட்டு இளகிய மூக்கு - இத்தகைய தோற்றம், உடம்பு முழுவதும் சந்தனம் அப்பிய தனது குழந்தைகள், என்று நால் கல்கத்தாவின் ஜகந்நாத கட்டத்தில் ஒரிசா பிராமணனைக் காண்கிறோமே, அது தென்னிந்தியக் காட்சியின் ஒரு நகல்தான்" 

இங்கு சுவாமிஜி வந்து தங்கி பழகிய மனிதர்களின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தென்னிந்திய பிராமணர்கள் திருஷ்டி கழிப்பதற்கென்று மண்குடத்தில் வெள்ளையடித்து வண்ணம் பூசி வீட்டுமுன்பு வைத்திருப்பார்களாம். அதை வர்ணிக்கும் சுவாமி சொல்லுகிறார்: 

"தூரத்திலிருந்து பார்க்கும்போது இராமானுஜ நெறியினரின் (வைஷ்ணவர்கள்) நெற்றியில் திகழும் அந்த நாமம் சாட்சாத் அப்படியேதான் தெரிகிறது". நல்ல ரசனை.

தமிழ்நாட்டு உணவுப் பண்டங்களையும் சுவாமி வர்ணிக்கத் தவறவில்லை. நம்முடைய 'ரசம்' முதலான உணவுப் பண்டங்கள் பற்றிய அவர் விளக்கம் இதோ: 

"மிளகுத் தண்ணீர்" ரசத்துடன் கூடிய அந்த 'ஸாப்பாடு' ஒவ்வொரு கவளம் உள்ளே போகும்போதும் நெஞ்சம் ஒருமுறை நடுங்கித் தணியும்! அந்த அளவிற்கு காரமும், புளிப்பும். கடுகும் கருவேப்பிலையும் வறுத்துச் சேர்த்துள்ள தயிர்சாதம், நல்லெண்ணெய்க் குளியல், நல்லெண்ணெயில் பொரித்த மீன் -- இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தென்னிந்தியாவை நினைக்க முடியுமா?" என்கிறார்.

"சென்னை மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நாகரிகம் மிகமிகப் பழமையானது. யூபிரட்டஸ் நதிக்கரையில் மிகப் பழங்காலத்தில் பரவியிருந்த பெருநாகரிகம் இந்தத் தமிழர்களில் ஒரு பிரிவினராகிய சுமேரியர்கள் பரப்பியதே" இப்படி உலக நாகரிகம் தமிழகத்திலிருந்து பரவிய கருத்தை சுவாமிஜி அழகாக விவரிக்கிறார். "ஜோதிடமும், அறநெறியும், நீதிநெறியும், ஆசாரங்களும்தான் அசிரிய, பாபிலோனிய நாகரிகங்களுக்கு அடிப்படை. இவர்களின் புராணங்களே கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு மூலம். இவர்கலின் மற்றொரு பிரிவினர் மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்து அற்புதமான எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர். தென்னகத்தில் உள்ள இவர்களது பிரம்மாண்டமான கோயில்கள் வீர சைவ, வீர வைணவ நெறிகளின் கீர்த்தியைப் பறைசாற்றுகின்றன. இவ்வளவு சிறப்பான வைணவ நெறி உள்ளதே, "முறம் விற்பவரும் அதே வேளையில் பெரும் யோகியாகத் திகழ்ந்தவரும்" தாழ்ந்த குலத்தில் பிறந்தவருமாகிய ஒரு தமிழர் ஆரம்பித்தது அது. தமிழ் ஆழ்வார்கள், வைணவர் அனைவராலும் இன்றும் வழிபடப் படுகின்றனர். த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத வேதாந்தங்கள் பற்றி மற்ற இடங்களைவிட இங்குதான் இன்றும் அதிக ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. மற்ற இடங்களைவிட அறவழியில் நாட்டம் அதிகமாக உள்ளது."

அவர் எழுதிய கடிதங்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பட்டியலில் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார், அளசிங்கப் பெருமாள், 'லோகோபகாரி' எனும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும் சுவாமிஜியின் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தை மொழிபெயர்த்தவருமான வி.நடராஜ ஐயர், நாட்டராம்பள்ளி கே.வெங்கடசாமி நாயுடு ஆகியோரைச் சொல்லலாம். சென்னையில் இப்போது விவேகானந்தர் இல்லம் என வழங்கப்படும் ஐஸ் ஹவுஸ் எனும் கட்டடத்தை ஐஸ்கட்டி இறக்குமதி செய்யும் ஒரு கம்பெனியிடமிருந்து வாங்கிய பிலிகிரி ஐயங்கார் என்பவரைப் பற்றியும் சுவாமிஜி குறிப்பிட்டு விசாரித்திருக்கிறார். தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணத்தில்தான் பல தமிழர்களின் பழக்கம் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. சென்னையில் அவரை ரதத்தில் உட்காரவைத்து இழுத்துச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களில் ராஜாஜியும் ஒருவர். இராமநாதபுரம் சேதுபதி உட்பட இவருக்கு உதவி செய்த பலரும் தமிழர்களே. சிகாகோ போக உத்வேகம் கொடுத்த கன்னியாகுமரி பாறை இவரது வாழ்க்கையையே திசைதிருப்பிய இடம், அது இருப்பதும் தமிழ்நாடே. ஆக, தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சுவாமிஜியிடம் உள்ள உறவு எல்லை கடந்தது.

Friday, January 25, 2013

(எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! (26-1-2013)

                             "உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்யவரான் நிபோதத"
        (எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! குறிக்கோளை எட்டும்வரை நில்லாது செலுங்கள்!)
                                                                     (26-1-2013)

ஸ்ரீ சுவாமிஜி எழுதியுள்ள மற்றொரு கடிதத்தின் ஒரு பகுதி.

"................... தொடர்ந்து விரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. குறுகுவது சாவு. சொந்த சுகங்களையே கவனித்துக் கொண்டு சோம்பேரியாகக் காலம் கழிக்கின்ற சுயநல மனிதனுக்கு நரகத்தில்கூட இடம் கிடையாது. தனக்கு நரகமே வாய்ப்பதானாலும், உயிர்களிடம் கருணை கொண்டு வேலை செய்பவனே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் புத்திரன்; மற்றவர்கள் அற்பர்கள். அனுகூலமான இந்த வேளையில் வரிந்து கட்டிக் கொண்டு, கிராமம் கிராமமாக, வீடுவீடாகச் சென்று, அவரது உபதேசத்தைப் பரப்புகின்றவனே என் சகோதரன், அவரது பிள்ளை. யாரால் இது முடியவில்லையோ அவர்கள் இங்கிருந்து மறைந்து போகட்டும்.

................. யார் இராமகிருஷ்ணரின் மகனோ அவன் தன்னலத்தை நாடமாட்டான்; ப்ராணாத்யயேsபி பரகல்யாண சிகீர்ஷவ: (உயிரைக் கொடுத்தாவது பிறருக்கு நன்மை செய்ய விரும்புவான்). சொந்த சுகத்தை விரும்பி, சோம்பல் வாழ்க்கையை நாடி, தனக்காக மற்ற அனைவரையும் பலியிடத் தயங்காதவர்கள் நம்மவர்கள் அல்ல; காலம் மிஞ்சிப் போவதற்குள் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறட்டும். ஸ்ரீராமகிருஷ்ணரின் குணநலனை, அவரது போதனையை, அவரது நெறியை நாற்புறமும் பரப்புங்கள். இதுவே சாதனை, இதுவே பஜனை, இதுவே மோக்ஷம். எழுந்திருங்கள், எழுந்திருங்கள், பேரலை புரண்டு வருகிறது. முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். ஆணும் சரி, பெண்ணும் சரி சண்டாளர்வரை அனைவரும் அவரது நோக்கில் புனிதர்களே. முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். பெயருக்கு இது நேரமல்ல, புகழுக்கு இது நேரமல்ல. முக்திக்கு இது நேரமல்ல. பக்திக்கு இது நேரமல்ல. இவற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது, இந்தப் பிறவியில் அவரது மகத்தான குண மேம்பாட்டை, மகத்தான வாழ்க்கையை, மகத்தான சிந்தனைகளைப் பரப்புவோம். செய்ய வேண்டியது இது ஒன்றே, வேறு எதுவும் அல்ல.

எங்கெல்லாம் அவரது திருநாமம் போகிறதோ, அங்கெல்லாம் புழுபூச்சி வரை எல்லாம் தெய்வங்களாகி விடும்; ஏன், ஆகவே செய்கிறது. அதைப் பார்க்கிறீர்களே, பார்க்க வில்லையா? இது என்ன வெறும் குழந்தை விளையாட்டா, பொருளற்ற உளறலா, கேலிப் பேச்சா? உத்திஷ்டத; ஜாக்ரத -- எழுந்திருங்கள், விழித்திருங்கள், அவர் நமக்குப் பின்னால் உள்ளார். இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. முன்னேறிச் செல்லுங்கள். இதை மட்டும் சொல்லிவிட விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை யார்யார் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் எனது சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். ஹரே! ஹரே! (தேவையற்ற) அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள். எச்சரிக்கை. அதோ அவர் வருகிறார். அவருக்கு, அவருக்கு அல்ல, அவருடைய குழந்தைகளுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ, ஏழைகளாக, துன்பப்படுபவர்களாக, பாவிகளாக, உள்ளவர்களுக்கு, புழு பூச்சி வரையிலுள்ள உயிர்களுக்குச் சேவை செய்ய யார்யார் ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களிடம் அவர் உறைவார். அவர்களின் நாக்கில் கலைமகள் உறைவாள்; அவர்கலின் நெஞ்சில் மகா சக்தியான மகாமாயை வாசம் செய்வாள். நாத்திகர், நம்பிக்கையற்றவர், மனிதர்களுள் தாழ்ந்தவர், இன்ப நுகர்ச்சியில் திளைப்போர் -- இவர்கள் எல்லாம் எதற்காக நமது திருக்கூட்டத்தினுள் வந்து கலந்து கொள்கிறார்கள்? அவர்கள் நம்மை விட்டுப் போய்விடட்டும்.
உங்கள் நரேந்திரன்

குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்.


பாரத நாட்டின் குடியரசு நாள் 26 ஜனவரி. மக்கள் சக்தி வெற்றி பெறவும், ஊழல் அழிந்து நேர்மை மேலோங்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம். அனைவருக்கும் குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்.

Thursday, January 24, 2013

'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள்' (25-1-2013)

                            'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள்' (25-1-2013)

கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் நன்கு அமைந்துவிடுவதில்லை. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கிய அந்தஸ்து பெற்று விட்டது. டாக்டர் மு.வரதராசனார் இலக்கியங்கள் கடிதம் வாயிலாகவே, தம்பிக்கு, தங்கைக்கு என்று வெளிவந்தன. சி.என்.அண்ணாதுரை அவர்களும் தன்னுடைய 'திராவிட நாடு' பத்திரிகையில் தம்பிக்கு என்று தொடங்கி கடிதங்கள் எழுதித்தான் தனது கொள்கைகளைப் பரப்பினார். அதன் பின்னர் பலரும் அவருடைய பாதையில் செல்லத் தொடங்கினர்.

சுவாமிஜி தன்னுடைய கடிதங்களில் ஒன்றில் எழுதியுள்ள வரிகள் இவை: "இந்தக் கடிதத்தை யார்யார் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் எனது சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். ஹரே! ஹரே! யாரோ என் கையைப் பிடித்து இவ்வாரெல்லாம் எழுதச் செய்கிறார்கள். முன்னேறிச் செல்லுங்கள். ஹரே! ஹரே! அதோ அவர் வருகிறார். அவருக்கு, அவருக்கு அல்ல, அவருடைய குழந்தைகளுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ, ஏழைகளாக, துன்பப் படுபவர்களாக, பாவிகளாக உள்ளவர்களுக்கு புழுபூச்சிவரையிலுள்ள உயிர்களுக்குச் சேவை செய்ய யார்யார் ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களிடம் அவர் உறைவார். அவர்களின் நாக்கில் கலைமகள் உறைவாள்; அவர்களின் நெஞ்சில் மகா சக்தியான மகாமாயை வாசம் செய்வாள்."

பாலாஜி ராவ் எனும் அன்பர் சுவாமிஜிக்குத் தன்னுடைய மனக் கஷ்டங்களை விவரித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சுவாமிஜி 23-5-1893 அன்றுஎழுடிய பதில் கடிதம் இதோ.

"தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணமாக வந்தேன். திரும்பவும் நிர்வாணமாகவே போகிறேன்; இறைவன் கொடுத்தான், எடுத்தும் விட்டான். அவனது திருநாமம் வாழ்க!"மனிதனுக்கு வரக்கூடியதில் மிகப் பெரிய துன்பங்களில் துவண்டபோது ஒரு புராதன யூதமகான் சொன்ன வார்த்தைகள் இவை; அவர் கலங்கவும் இல்லை. வாழ்க்கையின் முழு இரகசியமும் இதில்தான் உள்ளது. கடலின் மேற்பரப்பில் அலைகள் புரண்டு எழலாம், புயல் சீறிப் பாயலாம். ஆனால் அதன் ஆழங்களில் எல்லையற்ற அமைதி, எல்லையற்ற சாந்தம், எல்லையற்ற ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அளிக்கப்படுவார்கள். ஏன்? தந்தையின் கதறலையோ, தாயின் புலம்பலையோ பொருட்படுத்தாமல் விதியின் கைகள் இதயத்தை இறுக்கிப் பிழிகின்ற, கவலை மனத்தளர்வு அவநம்பிக்கை இவற்றின் சுமையால் உலகமே காலடியிலிருந்து நழுவிப் போவதுபோல் தோன்றுகின்ற, எதிர்காலமே ஊடுருவ முடியாத துயரமும் அவநம்பிக்கையுமாகக் காட்சி அளிக்கின்ற கணங்கள் நம்மைச் சந்திக்கும்போதுதான் அகக் கண்கள் திறக்கின்றன; திடீரென எங்கும் ஒளி பரவுகிறது, கனவு கலைகிறது, இயற்கையின் மாபெரும் புதிரான வாழ்க்கை என்பதுடன் நாம் நேருக்கு நேர் வருகிறோம். ஆம், சாதாரண மனிதர்களை மூழ்க வைக்கின்ற அளவுக்குச் சுமைகள் அழுத்தும்போதுதான் வலிமைமிக்க, வீரமிக்க மேதை உண்மையைக் காண்கிறான்; எல்லையற்ற, அறுதியான, என்றும் பேரின்ப வடிவான இறைவன் பல்வேறு மக்களால் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படுவதையும், வழிபடப்படுவதையும் காண்கிறான். அப்போதுதான், ஆன்மாவை இந்தத் துயரக் கூண்டுடன் பிணைத்திருந்த சங்கிலிகள் உடைந்து வீழ்கின்றன. ஆன்மா எழுந்து உயரத்தில் இறைவனின் சிம்மாசனத்தை அடைகிறது. அங்கே 'தீயவர்கள் துன்பம் செய்வதில்லை, களைத்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.'

சகோதரா, 'உமது திருவுளம்போல் நடக்கட்டும்' என்று இரவும் பகலும் சொல்வதை நிறுத்தாதீர்கள். இரவும் பகலும் புகார்களை அவருக்கு அனுப்பாமல் இருக்காதீர்கள்.

'ஏன் என்று கேட்பதல்ல நம் வேலை; செய்வதும் செத்து மடிவதுமே நாம் செய்ய வேண்டியது.'

எம்பெருமானே, உமது திருநாமம் வாழ்த்தப் படட்டும். உமது திருவுளம்போல் நடக்கட்டும். இறைவா! சரணடைய வேண்டியவர்களே நாங்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பரம்பொருளே, எங்களை அடிக்கின்ற கை அன்னையின் கைதான் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், 'மனம் அதனைப் புரிந்து கொள்கிறது, உடம்புக்கு அதனைத் தாங்குகின்ற சக்தி இல்லை. அன்புத் தந்தையே, எங்கள் இதய ஆழங்களின் வேதனை ஒன்று உள்ளது. அது நீர் போதிக்கின்ற அந்த அமைதியான சரணாகதியை எதிர்த்துப் போராடுகிறது. உமது கண் முன்னாலேயே உமது குடும்பம் அழிந்துபோவதை, கைகளை மார்பில் இறுகக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறீர். இறைவா, படைவீரன் எதிர்த்துப் பேசக்கூடாது, பணிவதே அவன் செய்யத் தக்கது என்பதைப் போதித்த பரம்பொருளே வருக. உம்மில் தஞ்சம் புகுவதே வாழ்க்கையின் ஒரே இலட்சியம் என்பதை அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறிய பார்த்தசாரதிப் பெருமானே வருக. அப்போதுதான் நானும் அந்த மாபெரும் மனிதர்களுடன் சேர்ந்து உறுதியாக, உம்மையே தஞ்சமடைந்து, ஓம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து (அனைத்தும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்) என்று சொல்ல முடியும்.

இறைவன் உங்களுக்கு அமைதியை அருளட்டும் என்பதே இரவும் பகலும் எனது பிரார்த்தனை.

விவேகானந்த


Wednesday, January 23, 2013

ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா

 திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர்  ஆல  குடமுழுக்கு விழா

முழுமுதற் கடவுளான சிவபெருமான் சிறப்பாக எழுந்தருளியுள்ள இடமாக திருக்கயிலாய மலை கருதப்படுகிறது. இந்தத் திருக்கையிலாயம் சென்று இறைவனை தரிசிப்பது இயலாய காரியமானதால் அவன் நாட்டின் பல பகுதிகளிலும் ஆலயங்களில் குடிகொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட சிவாலயங்களில் தென்னாட்டில் தேவாரத் திருத்தலங்களாக அமைந்தவை 276, அவற்றில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 51ஆவது தலமாக அமைந்ததுதான் திருவையாறு.

இத்தலம் திரு ஐயாறு எனப் பெயர் பெறக் காரணம் என்ன? சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கையாறு, பாலாறு, நந்திவாய்நுரை இவை ஐந்தும் இங்கே கலப்பதால் இத்தலம் "பஞ்சநதம்" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பருக்கு செம்பொற்ஜோதி, செப்பேசர், கயிலைநாதர், பிராணதார்த்திஹரர் எனும் பெயர்களும் உண்டு. இவை தவிர திருவையாறுடைய மகாதேவர் என்றும் இறைவியை உலகுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஐயாறப்பர் லிங்கத் திருமேனி சுயம்புவானதால் இங்கு புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படும், இவருக்குத் தீண்டாத்திருமேனி நாதர் என்னும் பெயரும் உண்டு.

இங்கு ஐயாறப்பருக்கு பூஜை செய்து வந்த ஒரு ஆதிசைவர் காசி சென்று திரும்பிவர காலதாமதம் ஆனதால், சிவபெருமானே அந்த சிவாச்சாரியார் உருவில் வந்து தன்னைத்தானே பூசித்த வரலாறு சிற்ப்பு வாய்ந்தது. சப்தஸ்தான திருவிழாவின் போது இங்கு 'தன்னைத் தானே பூஜித்த' வரலாறு ஐந்தாம் நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.

திருக்கடவூரில் மார்க்கண்டனின் உயிரைக் காக்க சிவபெருமான் காலனை உதைத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதுபோலவே இந்தத் தலத்தில் சுசரிதன் எனும் அந்தணச் சிறுவனின் உயிரைக் காக்க சிவபெருமான் தன் தென்வாயில் காப்போனான ஆட்கொண்டாரைக் கொண்டு எமனை தண்டித்த வரலாறும் இங்கு உண்டு. எனவே இவ்வாலயத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை இறைவன் சந்நிதியில் செய்து கொள்வது சிறப்பு. இங்கு ஆட்கொண்டாருக்குத் தெற்கு வாயிலில் ஒரு சந்நிதி உண்டு. இங்கு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குங்கிலியக் குண்டம் இருக்கிறது. மக்கள் இங்கு குங்கிலியம் வாங்கி இடுகிறார்கள்.

தேவார மூவரில் திருநாவுக்கரசருக்கு ஒரு முறை கைலாய மலைக்குச் சென்று சிவனை தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் மேலும் பல காலம் தமிழ் பேசும் நல்லுலகில் இருந்து பல பாடல்களைப் பாடவேண்டும் எனக் கருதினாரோ என்னவோ, அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தி, இந்தப் பூதவுடலுடன் கயிலை செய்வது சாத்தியமில்லை என்று சொன்னர். அதற்கு அப்பர் "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என மறுத்தார். அதற்கு ஒரு முனிவர் வடிவம் தாங்கி வந்திருந்த சிவபெருமான் அப்பரிடம் ஆங்கிருந்த ஒரு பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக!" எனப் பணித்தார். அவ்வண்ணமே பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் ஒரு நீர்நிலையில் எழுந்திருக்க அங்கே சிவன் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி கயிலை காட்சி அருளினார். ஆடி அமாவாசை தினத்தில் இங்கு நடைபெறும் கயிலைக் காட்சித் திருவிழா மிகவும் புகழுடையதாகும். அதனால்தான் திருவையாற்றைத் தென் கயிலாயம் என அழைக்கின்றனர். 

சப்தஸ்தானத் தலங்கள் என வழங்கப்படும் ஏழூர்களாவன; திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துறுத்தி, திருநெய்த்தானம் ஆகியவை அவை. இவற்றில் முதல் தலமான இவ்வூரில் சித்திரை மாதம் பெளர்ணமி விசாகத்தில் "ஸப்த ஸ்தானப் பெருவிழா" நடைபெறுகிறது. இவ்வேழூர் இறைவனும் அம்மையப்பராகக் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர். இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது, "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" என்கிற திருமுறை வாக்கின்படி இங்கு அம்பிகை தர்மசம்வர்த்தினி அரியின் அம்சமாகக் கருதப்படுதலால் இங்கு திருமாலுக்கென்று தனி ஆலயம் எதுவும் இல்லை.

தக்ஷிணாமூர்த்தி தனது பதினெண் பேதவுருவங்களில் இங்கு ஸ்ரீஹரிகுரு சிவயோக தக்ஷிணாமூர்த்தி வடிவில் காட்சியளிக்கிறார். எப்போதும் வேலேந்திய கரத்தோடு காணப்படும் முருகன் இங்கு வில்லேந்திய முருகனாகக் காட்சி தருகிறார். இவ்வாலயத்திலுள்ள செபேச மண்டபம் காசிக்கு நிகராகக் கருதப்படுகிறது. இங்கு அமர்ந்து பஞ்சாக்ஷரம் ஜெபம் செய்வோருக்கு நல்வினைப் பயன்கள் கிடைக்குமென்பது உறுதி.

இவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன.

சுமார் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டிருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும் எழுப்பபெற்றமை தெரிகிறது. மேலை கோபுரம், முதல் சுற்று, நடை, திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தென்கோபுரம் ஆகியவை பின்னாளில் அறம் காக்கும் மரபுடையோரால் கட்டப்பட்டவை.

முதல் இராஜராஜ சோழன் காலத்தில் இத்தலத்துக்கு "பொய்கை நாட்டுத் திருவையாறு" எனப் பெயர் வழங்கியது. இப்போது நினைத்தால் அதிசயிக்க வகையில் அந்நாளில் நிர்வாகத் துறையில் இவ்வாலய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியை "அதிகாரிச்சி" எனும் சொல்லால் அழைத்திருக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அகற்றும் பணி செய்வோரை "நிர்மால்ய நீர் போக்குவான்" என அழைத்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவிந்த தீக்ஷதர் வழிகாட்டுதலில் இங்கு காவிரிக் கரையில் பல படித்துறைகள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட படித்துறைகளில் புஷ்யமண்டபப் படித்துறை சிறப்பு வாய்ந்தது. 

திருநாவுக்கரசர் ஐயாறப்பரைப் பாடும்போது "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" எனக் குறிப்பிடுகிறார். அப்பரின் இந்த வாக்கியத்தை மெய்ப்பிப்பது போல இவ்வாலயத்தின் மேலைப் பிரகாரத்தில் நின்று குரல் கொடுத்தால் அவ்வொலி ஏழு முறை எதிரொலிக்கும் அதிசயமும் இங்கே இருக்கிறது. கரிகால் சோழனின் தேர் இங்கு அழுந்த அங்கு தவத்திலிருந்த அகப்பேய்சித்தர் உணர்த்தியபடி இவ்வாலயம் எழுப்பப் பட்டதாகத் தல வரலாறு சொல்கிறது. 1937இல் ஒரு முறை இவ்வாலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் 31-3-1971இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 41ஆண்டுகள் கழிந்து இப்போது அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளது பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

இங்கு கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சந்நிதிக்கு 1937 தொடங்கி இன்றுவரை கும்பாபிஷேகம் செய்யும் பொறுப்பை தேவகோட்டை உ.ராம.மெ.சுப.சின்ன சேவுகங் செட்டியார் குடும்ப்த்தினர் பொறுப்பேற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகின்றனர். 

இவ்வரிய கும்பாபிஷேக நிகழ்ச்சி நந்தன வருஷம் தை மாதம் 25ஆம் நாளுக்குச் சரியான 2013ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வியாழன் மூல நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் காலை 8.40க்கு மேல் 10-40க்குள் மீன லக்னத்தில் நடைபெறவிருக்கிறது. அன்பர்கள் எல்லோருக்கும் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். 





பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?



                   பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி சில மனித மிருகங்களின் வெறிச்செயலுக்கு ஆளாகி, அதனால் உயிருக்குப் போராடி இறுதியில் உயிரிழந்த செய்தி உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிகழ்வின் எதிர்வினையாக டெல்லி மற்றும் அருகிலிருந்த நகரங்கள், கிராமங்களிலிருந்தெல்லாம் இளைஞர்களும் மாணவ மாணவிகளும் புது டெல்லி இந்தியா கேட் அருகேகூடி தங்களது கோபத்தையும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் போராட்டம் நடத்தினர்.

இந்த இளைஞர்களின் நியாயமான கோபத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அரசு நிர்வாகம், காவல்துறை அவர்களைக் கண்மூடித் தனமான முறையில் தாக்கிக் கலைந்து போகவைத்தனர். இந்த நிகழ்வில் குற்றமிழைத்து ஓர் உயிரைக் குடித்த மனித வெறித்தனத்தைக் கண்டிக்க வேண்டுமா? அல்லது அந்த வெறித் தனத்தை எதிர்த்துத் தங்கள் ஒருமித்த குரலை வெளிப்படுத்திய இளைஞர் சமுதாயத்தை ஆறுதல் அடையும்படியான நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் கொடுத்து சமாதானம் செய்து, சரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டுமா? இந்த இரண்டையும் செய்யாமல், காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி, தண்ணீரைப் பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் இந்த நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்களை ஓடஓட விரட்டியடித்த காவல்துறை சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது? பாராட்டுவதா, குறை சொல்வதா? 

இந்த கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைவிட, இளைஞர் சமுதாயத்தின் பிரதிநிதிகளான சில கல்லூரி மாணவிகளைப் பேட்டி கண்டு ஒரு தினசரி பத்திரிகை தனது "சண்டே ஸ்பெஷல்" எனும் தலைப்பில் தமிழில் வெளியாகும் வாராந்தர வெளியீட்டில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த கட்டுரையில் நோக்கத்தை அவர்கள் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

"காமுகர்களின் பிடியிலிருந்து பாதுகாப்பு வழங்குவது குறித்து, மாணவிகளின் கண்ணோட்டத்தைத் தெரிந்து கொள்ள ஒரு மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தோம்" என்று தொடங்கி அவர்கள் மேலும் சொல்லும் செய்தியினைப் பார்ப்போம்.

அந்தக் கல்லூரி மாணவியர் சிலரை நிருபர்கள் சந்தித்து சில கேள்விகளைக் கேட்டு அவர்கள் பதிலையும் பெற்று வெளியிட்டிருக்கின்றனர். அதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் முதலில் ஒரு பெண் கூறுகிறார்: "பெண்களைக் கண்கள் என போற்றும் தமிழகத்திலேயே, பெண் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இல்லை. டெல்லியில் நடந்த நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும், அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். தமிழகத்தில் இதுபோல நடக்கும் பல நிகழ்ச்சிகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்று அந்தப் பெண் ஆதங்கப் பட்டிருக்கிறார். 

அதுமடுமல்லாமல், சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் காமுகர்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் கடுமையான தண்டனை இல்லாததே. தூக்குத் தண்டனை வழங்குவதைக் காட்டிலும், அந்தக் குற்றவாளிக்கு சமூக உரிமைகள் அனைத்தையும் பறித்துவிடுவது ஒன்றே சரியான தண்டனை என்கிறார் அந்தப் பெண். அதாவது அவர்களுடைய குடியுரிமை, குடும்ப அட்டை, வாக்களிக்கும் உரிமை, வண்டியோட்டும் உரிமம் என அனைத்து வசதிகளையும் பறித்துவிட வேண்டும் என்கிறார். 

இந்த யோசனை சரியாகத் தோன்றினாலும், அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அவன் அனைத்தையும் இழந்து வருந்துவான் என்பதை எப்படிச் சொல்ல முடியும்? ஓரளவு முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் அவன் சமூகத்தில் நடமாடமுடியாமல் செய்வதுதான் பாதுகாப்பு தரும் என்பதால் இந்த யோசனை நடைமுறைக்கு ஒவ்வாது.

அடுத்த பெண் சொல்லும் கருத்து, சில தலைவர்கள் சொன்னபோது பெண்களின் கடுமையான எதிர்ப்பையும் குற்றச்சாட்டையும் பெற்றது. அந்தப் பெண் சொல்கிறார், 'பெற்றோர் பேச்சைக் கேட்காமல், கலாச்சார மாற்றம், புதுமை எனும் பெயரால் பெண்கள் சிலர் பண்பாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரவு நேரங்களில் ஆண்களைப் போலவே இவர்களும் துணிந்து நடமாடுவதும் இவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ காரணமாகின்றன என்பது இவர் கருத்து. இந்த உண்மையை ஒரு பெண் சொல்லும்போது அதில் இருக்கும் நியாயத்தையாவது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா? மாட்டார்கள். காரணம் ஆண்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா என்பார்கள். சரி இவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. ஆண்களைப் போலவே இவர்களும், ஆண்கள் செய்வதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், இரவில் தனித்து நடமாடும் ஆண்களுக்கு இவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் போல எதுவும் நடப்பதில்லையே. எங்காவது தனித்து நடந்து வந்த ஒரு ஆணைப் பல காமவெறி பிடித்தப் பெண்கள் பிடித்துக் கொண்டு அவனுக்குத் துன்பம் விளைவித்ததாக எங்காவது செய்தி வந்தது உண்டா? அப்படி பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றால், இவர்களுக்கும் எந்தவித ஆபத்தும் வராத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலை இல்லாத காலகட்டத்தில், நாங்கள் ஆண்களுக்குச் சமம், இரவில் தனித்தே போவோம் என்றெல்லாம் சொல்வது சரியானதாக இருக்குமா?

ஒரு சமூகத்தில் இதுபோன்ற கொடுமைகள் ஒரு சாராருக்கு மட்டும் நடக்கிறது என்றால், அந்த சாரார் பலவீனமானவர்கள், பாலியல் வன்முறைக்கோ, அல்லது ஆதாயம் கருதி அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் போன்றவற்றைப் பறிப்பதற்கோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதுதான் பொருள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் அத்தனை பேருக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டால், குற்றம் நடப்பதற்கு முன்பு பாதுகாப்பு எப்படி செய்ய முடியும். அப்படியானால் ஒவ்வொரு பெண்ணோடும் ஒரு காவலர் சென்று கொண்டிருக்க முடியுமா? குற்றம் நடைபெற்றால், அல்லது நடப்பதற்கு முயற்சிகள் நடந்தால் அதை எப்படி எதிர் கொள்வது, உதவிக்கு எப்படி ஆட்களைக் கூப்பிடுவது போன்ற தற்காப்பு செயல் முறைகளை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

பலவீனமான பிரிவினர் என்று பெண்கள் தங்களைக் கூறிக் கொள்ளும் போதே, அவர்கள் ஆண்களைப் போல குற்றச் செயல்களால் பாதிக்கப் படாமல் தங்களாலும் இருக்க முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். எதிர்த்துப் போராட முடியுமா என்றும் பார்க்க வேண்டும். சில காவல்துறை அதிகாரிகள் சிபாரிசு செய்வது போல கையில் மிளகாய்த் தூள் பொட்டணத்தை வைத்துக் கொண்டு, தாக்குதல் நடத்த முயற்சி செய்யும்போது அதை அவர்கள் மீது தூவி தற்காத்துக் கொள்ள வேண்டும். கூச்சலிட்டு உதவிக்கு ஆட்கள் வரும்வரை குற்றம் புரிவோரோடு போராடத் துணிய வேண்டும். 

இவர்கள் முக்கியமாக ஒரு சமூக நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி அறிவு இன்றைய நாள் போல வளர்ச்சியடையாத நாட்களில் ஆங்காங்கே விடலைப் பையன்களும், காமுகர்களும், சமூக விரோதிகளும் போகிற வருகிற பெண்களைக் கேலி செய்வது, ஏதாவது புண்படும்படியான சொற்களைப் பேசுவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். இன்று படித்த நற்பண்புகள் உள்ள இளைஞர்கள் அப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதில்லை. முன்பெல்லாம் பெண்களும்கூட சக மாணவர்கள்கூட பழகவோ, பேசவோ மாட்டார்கள். ஒதுங்கியே போவார்கள். இப்போதெல்லாம் அப்படியில்லை. மாணவர்களும் மாணவியரும் நன்றாகப் பழகி இரு ஆண் நண்பர்களைப் போல அவர்களுக்குள்ளும் பேசிப் பழகி நாகரிகத்துடன் நடந்து கொள்கிறார்கள். அதையும் மீறி சில கீழ்புத்தி உள்ளவர்களோ, அல்லது பேதமில்லாமல் பழகும் ஆண் பெண் நட்பைக் கண்டு பொறாமைப் கொண்டவர்களோ அவர்களைத் தரக்குறைவாக பேசுவதோ, அந்தப் பெண்ணைத் தனிமையில் வரும்போது அவனோடுதான் பேசுவாயோ, என்னோடு பேசமாட்டாயோ என்பது போன்ற தொல்லைகளைக் கொடுப்பதும் நடக்கிறது. பொதுவாக ஈவ் டீசிங் படித்த நாகரிக இளைஞர்கள் மத்தியில் கிடையாது. இன்னமும் எங்காவது இருக்கிறது என்றால், படிப்பறிவு இல்லாத சமூக விரோதிகளால்தான் நடக்கின்றன. இந்தப் பெண்கள் சொல்வதைப் போல நடவடிக்கைகள் எடுக்க முடியாவிட்டாலும், அல்லது கடுமையான தண்டனை ஏற்படுத்தினாலும், இதற்கெல்லாம் தீர்வு ஏற்படப்போவதில்லை. நமக்கு நாமே உருவாக்கிக் கொள்கிற தற்காப்பு முறைகள் மட்டுமே சரியான வழிமுறையாக அமைய முடியும். அவை

1. பெண்கள் தற்காப்புக் கலை பயில்வதோ, ஆண்களைப் போல ஜீன்ஸ் பேண்ட் போன்றவற்றையும் டீ ஷர்ட்டும் அணியும்போது, அதே போல உள்ளத்தில் தைரியத்தையும், எதிர்த்துப் போராடக்கூடிய திராணியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது திரைப்படங்களில் பார்த்தால் தெரியும், வில்லன் கதாநாயகியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போவான், கதாநாயகன் வந்து அவனோடு போராடுவான், அப்போது கதாநாயகி தனக்காகப் போராடும் கதாநாயகனுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டாள், மாறாக வீல் வீல் என்று கத்திக் கொண்டிருப்பாள். கதாநாயகன் இவளைப் பாதுகாப்பானா, அந்த வில்லனோடு போராடுவானா? இந்த சினிமா கதாநாயகி தனது கையாலாகாதத் தனத்தை விட்டுத் தன்னைத் தான் காத்துக் கொள்ளும் வல்லமை பெற வேண்டும்.

2. உடைகளால் மட்டும் மாடர்ன் ஆகிவிட்டால் போதாது. உள்ளத்தால், ஆண்களைக் கண்டு அநாவசியமாக சிணுங்குதல், தெருவில், அல்லது பேருந்தில் போகும் அனைவரும் இவர்களை ஏதோ செய்துவிடத் துடிப்பவர்கள் போல ஒதுங்குதல், வெறுப்புப் பார்வையை வீசுதல் இவற்றால் குற்றமற்ற பலரையும் இவர்கள் பால் வெறுப்புக்கொள்ளச் செய்யாதிருத்தல். ஒன்றை மட்டும் இவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தெருவில் சாதுவான நல்ல நாய்களும் போகும், வெறிபிடித்த நாய்களும் போகும் இவற்றை இனம் கண்டு கொள்ளும் திறமை இவர்களுக்கு வேண்டும். தெருவில் போகும் எல்லா ஆண்களும் கார்த்திகை மாதத்து நாய் என்று எண்ணுவதும், அவர்கள் அனைவருமே தங்களை குறிவைத்து ஏதோ செய்ய நினைக்கிறார்கள் என்று நினைப்பதையோ போன்ற ஹைதர் காலத்து மனப்பாங்கை விட்டொழிக்க வேண்டும்.

3. ஆபத்து எனும்போது உதவிக்கு மற்றவர்களை உரத்தக் குரல் எடுத்து கூப்பிட வேண்டும். அப்படி குரல் எழுப்பினாலே குற்றம் செய்ய நினைப்பவன் ஓடிவிடுவான். அப்போதும் வாய்மூடிக் கொண்டு இருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பிறகு கூக்குரல் இட்டுப் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

படித்த பெண்களுக்குத்தான் இப்படிப்பட்ட தொல்லைகள். படிப்பறிவில்லாத தொழிலாளிகள், காய்கறி, பூ விற்போரிடம் யாராவது வாலாட்டினால், அவர்கள் பேச்சாலேயே அவர்களை ஒருவழி பண்ணிவிடுவார்கள். மானம் போய் ஓடிவிடுவார்கள். அந்த தைரியம் இவர்களுக்கு இல்லை, அதுதான் தொல்லைகளுக்குக் காரணம்.

பொதுவாக பெண்களின் முன்னேற்றம் மேற்கண்ட வழிமுறைகளில் இன்னமும் மிகுந்த மாற்றமடைய வேண்டியிருக்கிறது. தோற்றத்தில், படிப்பில், வெளியில் சுற்றும் முறையில், விடுமுறை நாட்களில் தங்கள் ஆண் பெண் நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும்போது, பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்கள் காட்டும் நாட்டம், அறிமுகமில்லாத அன்னியர்களிடமும் சகஜமாக நடந்து கொள்ளப் பழகினால் தொல்லைகள் இருக்காது. இவர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்துக் கொண்டிருப்போர், இவர்கள் இன்னமும் கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளலாமே என்றுதான் நினைப்பர், காரணம், மற்றவர்களை இவர்கள் பூச்சி புழுக்களைப் போல பார்ப்பதும் ஒரு காரணம். ஆகையால் இவர்களது பழக்க வழக்கங்களில் இன்னமும் மாற்றம் தேவை.

இவைகளைச் சொல்லும்போது கசப்பாக இருக்கலாம். இப்படிச் சொல்வது தவறு என குற்றம் சாட்டலாம். ஆனால் என்ன செய்வது, இதுதான் உண்மை எனும்போது, உரக்கச் சொல்கிறேன். இவைகளை மட்டும் கடைபிடித்தால் மட்டுமே பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு இருக்கும்.

வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)


வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)

அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் நாட்டறாம்பள்ளி எனும் ஊருக்கு அருகில் இருப்பது வாணியம்பாடி. இந்த ஊரில் வெங்கடசாமி நாயுடு எனும் அன்பர் ஒருவர் இருந்தார். அந்தக் காலத்தில் அதாவது 1900ஆம் ஆண்டு வாக்கில் அவ்வூரில் இருந்த நாயுடு காரு ஒரு நாத்திகர். தமிழ் நாட்டில் நாத்திகர் என்போர் எப்படி இருந்திருப்பார் என்பது நமக்கெல்லாம் தெரியும் அல்லவா? அப்படிப்பட்ட இவருக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும். அந்த காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டு ஆங்காங்கே சொற்பொழிவுகளை ஆற்றிவந்தார். அந்தச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனைச் சில பத்திரிகைகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தன. அப்படி வந்த சுவாமிஜியின் சொற்பொழிவுகளை நமது வெங்கடசாமி நாயுடு படிக்கலானார். ஒவ்வொரு சொற்பொழிவையும் தமிழில் படிக்கப் படிக்க நாயுடுகாருவின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சுவாமிஜியின் பேச்சுக்களில், அவருடைய கருத்துக்களில் இவரது மனம் ஆர்வத்துடன் ஈடுபடலாயிற்று. படிப்பதோடு அந்தப் பேச்சின் சிறப்புக்களைத் தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். சுவாமிஜியின் கருத்துக்களை ஏகத்துக்கும் பாராட்டிப் பேசிவந்தார். தான் மட்டும் படித்துத் தெரிந்து கொண்ட செய்திகளை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுமென்கிற அவா அவருக்கு. நல்ல நினைவாற்றல் உள்ளவர் அவர். அதனால் சுவாமிஜியின் சொற்பொழிவுகளை மனதில் பதித்துக் கொண்டு, அவற்றை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பிறருக்கும் அப்படியே எடுத்துரைத்தார்.

சுவாமிஜியின் பேச்சுக்கள் மட்டுமல்ல, அவருடைய தோற்றமும், உடையும்கூட இவரை மிகவும் கவர்ந்தன. உடனே இவரும் சுவாமிஜியைப் போல உடை அணிந்து கொண்டு அதே வீரம் ததும்பும் தோற்றத்தோடு அவருடைய பேச்சுக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கலானார். அன்றைக்குப் படித்த சொற்பொழிவை அப்படியே மனனம் செய்து கொண்டு சொல் மாறாமல் அப்படியே ஒப்பிப்பார். பேச்சை முடித்ததும், அமெரிக்க நாட்டில் நமது சுவாமி விவேகானந்தர் இப்படித்தான் உடையணிந்து, இப்படித்தான் பேசினார் என்று அறிவிப்பார்.

ஏழ்மையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்தப் பகுதி மக்களிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. அவர்களுக்குத் தேவையான பல உதவிகளையும் அவர் செய்து வந்தார். தான் தனியொரு மனிதனாக உதவிகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, அதன் மூலம் உதவிகளை மக்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தில் "விவேகானந்தர் வேதாந்த சங்கம்" எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். தான் இப்படியொரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதையும், அதனைக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்யவிருப்பதையும் ஒரு கடிதத்தில் வெங்கடசாமி நாயுடு அமெரிக்காவில் இருந்த சுவாமிஜிக்கு தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைக் கண்ட சுவாமிஜி நம்மூர் வெங்கடசாமி நாயுடுவுக்கு ஒரு பதில் கடிதம் எழுதினார். சுவாமிஜி வாழ்ந்த காலத்திலேயே, அவர் பெயரால் முதன்முதலில் தமிழ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சங்கம் இந்த சங்கம். தோற்றுவித்து வரலாற்றில் இடம்பெற்றிருப்பவர் வெங்கடசாமி நாயுடு.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுவாமிஜிக்கு, முன்பின் பழக்கமில்லாத ஒரு நபர் தமிழ் நாட்டிலிருந்து தங்கள் பெயரால் ஒரு சங்கம் தோற்றுவித்துச் சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்று எழுதியது புதுமையாக இருந்திருக்கலாம். இவர் யார் என்பது தெரியாததனாலோ, அல்லது தன் பெயரால் ஒரு சங்கம் என்றதும் ஏற்பட்ட கூச்சம் காரணமாகவோ, கடிதத்தில் நாயுடுவின் சங்கத்தின் பெயரை முழுமையாக விவேகானந்தர் சொசைட்டி என்று எழுதுவதற்கு பதிலாக சுருக்கமாக ஆங்கிலத்தில் viv.society என்று மட்டும் எழுதியிருந்தார். முழு விவரமும் தெரியாத நிலையில், தன் பெயரில் ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திக்கு என்ன பதில் எழுத முடியும்? அதனால்தான் இந்தக் கடிதமும் மிகச் சுருக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பின்னாளில் நாட்டறாம்பள்ளியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் உருவாக இந்த வெங்கடசாமி நாயுடுவே இடத்தையும் கொடுத்து உதவினார் என்பது வரலாற்றில் இடம் பெற்றிருக்கிற செய்தி. வாழ்க வெங்கடசாமி நாயுடு புகழ்!

சுவாமி விவேகானந்தர் வெங்கடசாமி நாயுடுவுக்கு எழுதிய கடிதம்:--

"கே.வெங்கடசாமி நாயுடு
viv. society

அன்புடையீர்!
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப் பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றி வாகை சூடட்டும். எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல்வாழ்த்துக்கள்.

இறைவனில் என்றும் உங்கள்,
விவேகானந்த

(சுவாமிஜி எழுதிய கடிதங்களில் பல தமிழ்நாட்டு அன்பர்களுக்கு எழுதப்பட்டவை. அவற்றில் சிலவற்றை அடுத்தடுத்த நாட்களில் பார்ப்போம்)

Tuesday, January 22, 2013

என்றும் வாழும் இந்தியா (23-1-2013)


                                 என்றும் வாழும் இந்தியா (23-1-2013)

இந்தியாவை விட்டுக் கிளம்புமுன் நான் அதனை நேசித்தேன். இப்போதோ அதன் தூசி கூட எனக்குப் புனிதமாக இருக்கிறது; அங்கு வீசும் காற்று புனிதம்; இப்போது இந்தியா எனக்குப் புனித பூமி, தீர்த்தத் தலம்.

இந்தியா சீரழிந்துவிட்டது என்றெல்லாம் பேசக் கேட்கிறோம். இதை நானும் நம்பிய காலமொன்று உண்டு. ஆனால் இன்று அனுபவம் என்னும் வசதியான இடத்தில் இருந்து கொண்டு, பார்வையை மறைத்த தவறான கருத்துக்கள் நீங்கி, மற்ற நாடுகளைப் பற்றி எண்ணியிருந்த கருத்துக்கள் நான் நேரில் அவற்றைப் பார்த்ததன் மூலம் சரியாகப் புரிகின்ற நிலையில், நான் நம்பியது தவறு என்பதை மிகவும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். நான் அப்படி எண்ணியது தவறு.

ஆரியர்களின் புண்ணிய பூமியே! நீ ஒருபோதும் சீரழியவில்லை. செங்கோல்கள் உடைக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டுள்ளன. அதிகாரப் பந்து கைக்குக் கை மாறியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அரசர்களும் அரசவைகளும் மிகவும் சிலரைத்தான் பாதித்தன. எனினும் மிக உயர்ந்தவர்களிலிருந்து மிகத் தாழ்ந்தவர்கள் வரை பெரும்பான்மையான மக்கள் தங்கள் வழியிலேதான் சென்று கொண்டிருந்தார்கள். தேசிய வாழ்க்கையென்னும் வெள்ளத்தின் வேகம் சில நேரங்களில் மிக மெதுவாகவும், அரைத் தூக்கத்திலும்தான் இருந்தது. மற்ற வேளைகளில் வேகமாகவும் விழிப்புடனும் இருந்தது.

இடையறாமல் தொடர்ந்து செல்கின்ற பிரகாசமான நூற்றாண்டுகளுக்கு முன்னர் நான் பணிவச்சத்தோடு நிற்கிறேன். அந்தச் சங்கிலித் தொடரில் சற்று மங்கலான சங்கிலிகள் இருக்கலாம். ஆனால் அடுத்த கணம் அவை மிகவும் ஒளியுடன் விளங்கலாம். அதோ என் தாய்நாடு தன் பிரகாசமான இலட்சியத்தை, அதாவது மிருக மனிதனை தெய்வ மனிதனாக மாற்றும் காரியத்தை நிறைவேற்றும் பொருட்டுக் கம்பீர நடை போட்டுச் செல்கிறது. மண்ணிலும் சரி, விண்ணிலும் சரி, அதை எந்தச் சக்தியினாலும் தடுக்க முடியாது.

என் நாட்டு மக்களே, என் நண்பர்களே, என் குழந்தைகளே, நம் நாடாகிய இந்தத் தேசியக் கப்பல் இலட்சக்கணக்கானோரை வாழ்க்கைப் பெருங்கடலைக் கடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக இது நல்ல முறையில் இந்தக் கடலைக் கடந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக இலட்சோபலட்சம் பேர் பேரின்பமாகிய கரைக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றனர். ஆனால் இன்றோ, ஒருவேளை உங்கள் சொந்தத் தவறின் காரணமாக இந்தக் கப்பல் சிறிது பழுது அடைந்துள்ளது. ஓட்டைகள் விழுந்திருக்கிறது. அதற்காக அதைச் சபிப்பீர்களா? இந்த உலகத்தில் வேறு எதைவிடவும் அதிகமாக உழைத்துள்ள இந்தத் தேசியக் கப்பலின் மீது சாப மழையைப் பொழிவது உங்களுக்குத் தகுதியானதா?

தேசியக் கப்பலில், நம் சமூகமாகிய அந்தக் கப்பலில் ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா?நாம் சென்று அந்த ஓட்டைகளை அடைப்போம். நம் இதயக் குறுதியைக் கொட்டி, மகிழ்ச்சியோடு அந்தக் காரியத்தை முடிப்போம். நம் அறிவால் அடைப்பான் செய்து அந்த ஓட்டைகளை அடைப்போம். ஆனால், அதை ஒருபோதும் நிந்திக்க வேண்டாம். இந்தச் சமூகத்திற்கு எதிராக ஒரு கடின வார்த்தை கூடப் பேசாதீர்கள். நான் அதை அதன் கடந்த கால மகோன்னதத்துக்காக நேசிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள், மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள். நான் எப்படி உங்களைச் சபிக்க முடியும்? ஒருபோதும் முடியாது.

எல்லா ஆசிகளும் உங்கள் மீது பொழிவதாக! என் குழந்தைகளே, என் திட்டத்தைச் சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டால் நானும் உங்களோடு நானும் சேர்ந்து பணிபுரியத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் கேட்காமல் என்னை உதைத்து இந்தியாவிற்கு வெளியே துரத்தினால்கூட நான் மறுபடியும் உங்களிடம் வருவேன். வந்து, நாம் எல்லோரும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வேன். உங்களோடு ஒருவனாக இருக்கவே நான் வந்திருக்கிறேன். மூழ்கத்தான் வேண்டுமென்றால் நாம் எல்லோருமே சேர்ந்து மூழ்குவோம். ஆனால் நம் உதடுகளிலிருந்து சாபங்கள் வராமல் இருக்கட்டும்.

தஞ்சையில் மலர்ந்தது பொற்றாமரை.


தமிழ்த்தாமரை எனும் வலைத் தளம் தேசிய சிந்தனைகளை வெளிக்கொணரும் அரியதோர் வெளியீடாக வந்து கொண்டிருக்கிறது. தேசிய உணர்வுள்ளோர் அனைவரும் பார்க்கவேண்டிய தளம். அரிய பல கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திரு வி.எம்.வெங்கடேஷ் அவர்கள் இதனை நடத்தி வருகிறார்கள். அனைவரும் கீழ்கண்ட இந்த தளத்துக்குச் சென்று பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். தஞ்சையில் நடந்த "போற்றாமரை" இலக்கிய அமைப்பின் தொடக்க விழா குறித்த செய்தி அதில் வெளிவந்திருக்கிறது.

http://www.tamilthamarai.com

Sri V.M.venkatesh (Editor)

தஞ்சையில் மலர்ந்தது பொற்றாமரை.

 தஞ்சையில் மலர்ந்தது பொற்றாமரை.சென்னை நகரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பூத்த பொற்றமரை அங்கு கலை இலக்கிய மணம் பரப்பிக் கொண்டிருந்தது. இந்த பொற்றாமரை மலர் இமயம் முதல் குமரி முனை வரையிலான புண்ணிய பாரத தேசத்தின் பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றின் புத்துணர்வையும் மணத்தையும் மக்கள் மத்தியில் பரப்பிடும்
நோக்கத்தோடு சென்னை நகரத்துக்கு வெளியேயும் சென்று மலரத் திட்டமிட்டது. தேசியமும், தெய்வீகமும்தான் மொழி, கலை, கலாச்சாரம் இவற்றைப் பேணிக் காத்து வந்திருக்கிறது. தேசியம் வேறு, மொழிப் பற்று வேறு எனும் தவறான கருத்து புகுத்தப்பட்டதனாலோ என்னவோ தேசியத்தின்பாற்பட்ட உண்மையான தேசபக்தியுடைவர்களால் மொழி வளரவில்லை எனும் உணர்வு மக்கள் மனங்களில் புகுத்தப்பட்டிருந்தது. இந்த ஆபத்தான நிலை கருதி, இந்த நாட்டில் ஒவ்வொரு காலத்திலும் தெய்வீக உணர்வு மிக்கோரும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழைப் பேணிக் காத்து வந்திருக்கிறார்கள். தேசிய உணர்வாளர்களுக்கு தேசம் எப்படியோ, மொழியும் அப்படியே என்பதை உணர்த்திடும் வகையில் உருவானதுதான் பொற்றாமரை.
சென்ற செப்டம்பர் 11இல் மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பொற்றாமரைபொற்றாமரை  தோன்றியது. அதனை அடுத்து இப்போது இந்த ஜனவரி 20இல் தஞ்சை மாநகரில் வானளாவிய இராஜராஜேச்சரம் கோயிலின் உயரம்போல, பாரத பண்பாடு, கலை, இலக்கியங்களின் தாயகமாகப் போற்றப்படும் தஞ்சை மண்ணிலும் பொற்றாமரை தோன்றியது. இதற்கான விழா 20-1-2013 ஞாயிறு மாலை 4 மணிக்கு தஞ்சை மேல வீதியில் அமைந்த ஜீ.ஜீ.மகாலில் நடைபெற்றது.
சேகல்மடப்புரம் எனும் ஊரைச் சேர்ந்த பாரம்பரிய மிக்க இசைக் குடும்பத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசை லயஞான இசைத் தென்றல் இளையராஜா குழுவினரால் நாகஸ்வர இசை வழங்கப்பட்டது. தொடர்ந்து இசைமேதை, இசைஞானசித்தர் சி.எஸ்.ஜெயராமனின் நிழல் எனப் போற்றப்படும் இசைவாணர் திருவீழிமிழலை சு.சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த விழா தொடங்கியது.
அலங்கார மேடையில் புகழ்வாய்ந்த தமிழ்ச் சான்றோர்கள் வீற்றிருக்க பொற்றாமரையின் தலைவர் திரு இல.கணேசன் தலைமை தாங்கி அமர்ந்திருந்தார். கவிக்கோ ஞானச் செல்வன், இவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் ஆர்வமிக்கத் தமிழ்த் தொண்டர். தமிழிலக்கியங்களில், குறிப்பாகச் சிலப்பதிகாரத்தில் மூழ்கித் திரு இல.கணேசன் தோய்ந்தவர். இவரது உரை சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் ஆகிய இலக்கியங்களிலிருந்து சில அரிய பகுதிகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. பூம்புகாரில் அடக்கமே உருவாக இருந்த கண்ணகி, பாண்டியனின் மதுரை மாநகரில் தீத்திறத்தால் கொலையுண்ட கணவன் கோவலனின் மரணத்துக்குப் பழிவாங்க அந்நகரைத் தீக்கிரையாக்கிய வரலாற்றை எடுத்துரைத்தார். இலங்கையில் இராமனின் அம்பினால் மாண்டு கிடந்த இராவணனின் உடலை இராமன் அம்பு துளைத்தெடுத்தது எதற்காக என்பதையும் சுவையாக எடுத்துச் சொன்னார். சீதையின் நினைவைத் தன் மனச் சிறையில் வைத்துக் காத்துக் கொண்டிருந்த இராவணனின் உடலில், அந்த சீதையின் நினைவு எங்காவது ஓரிடத்தில் இருக்கிறதோ என்று எண்ணி இராமனின் வாளி அவன் உடலை மூலை முடுக்கிலெல்லாம் தேடியதோ என்று மண்டோதரி கதறி அழும் காட்சியையும் அழகாக விளக்கினார்.
அடுத்து திருமதி தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில் தான் மருத்துவம் பயின்ற இந்த தஞ்சை மண், கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் மட்டுமல்ல மனிதநேயத்துக்கும் புகழ்பெற்றது என்றார். நஞ்சையும் புஞ்சையும் விளையாடும் தஞ்சை என்று சொல்லி இந்தப் பகுதியின் சிறப்புக்களையெல்லாம் விளக்கிப் பேசினார். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல், மனிதாபிமானம் குறித்தும் சுவையான நிகழ்ச்சிகளை விளக்கிப் பேசினார். வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தால் மூடிய கதவைத் திறந்துவிட, அதனை மூடுவதற்கு திருநாவுக்கரசர் பத்து பதிகங்களைப் பாடிய நிகழ்ச்சியையும் சொன்னார். அப்பருக்கு வருத்தம், ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் கதவைத் திறந்தது, ஆனால் தனக்கு பத்து பதிகம் பாடியபின்னரே கதவு மூடியது என்பதில். அதற்கு ஞானசம்பந்தர் சொன்ன மறுமொழி அப்பரே தங்கள் பாடலை மேலும் மேலும் கேட்க வேண்டுமென்பதற்காகத்தான் சிவபெருமான் உம்மை பத்து பாடல்களைப் பாடவைத்தார், தனது ஒரு பாட்டே போதும் என்று ஒரு பாட்டில் கதவைத் திறந்தார் என்றாராம்.
 திருச்சி மெளன மடத் தலைவரும், திருவையாறு ஐயாறப்பர் ஆலய கட்டளை விசாரணம், திருத்தருமையாதீன முனைவர் குமாரசுவாமி தம்பிரான் ஆசியுரை வழங்கினார். நமது பண்பாட்டையும், வாழ்க்கை முறைகளையும், மேலான பழக்க வழக்கங்களையும் திருமுறைகளில் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அவர் பல மேற்கோள்களுடன் விளக்கிப் பேசினார். தமிழ் நாட்டில் தமிழுக்கு, ஆன்மிகம் செய்த தொண்டுக்கு இணையாக வேறு யாரும் செய்ததில்லை என்பதையும் அவர் இங்கு நிறுவினார்.
 இசைக்கவி எனும் பெயர்பெற்ற திரு இரமணன்அக்காலத்தில் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை இசையாகப் பாடித்தான் வெளிப்படுத்துவர். அதுபோல இசைக்கவி எனும் பெயர்பெற்ற திரு இரமணன் தன்னுடைய இனிமையான குரலெடுத்துப் பாடி கூட்டத்தினரை கட்டிப் போட்டுவிட்டார். உமர்கயாம் தொடங்கி, பட்டினத்தார், கண்ணதாசன் என்று வழிவழி பாரம்பரியக் கவிஞர்களின் மேற்கோள்களோடு தான் இயற்றிய சீரிய கவிதை மாலைகளால் கூட்டத்தினரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சந்தத்தோடு அவர் பாடிய கவிதைகள், உணர்வும், பாவமும், ரசமும் பொங்க அவர் விவரித்த அந்த கவிதை வரிகள், கேட்டோர் நெஞ்சங்களில் கல்வெட்டுக்களாகப் பதிந்தன. நிறைவாக அவர் பாடிய மகாகவி பாரதி பற்றிய நெடுங்கவியொன்று, கேட்போர் கண்களைக் குளமாக்கின. அவர் கவிதை வாசித்தாரா, பாடினாரா, அந்தப் பாடலுக்கிடையே உறுமி மேளம் ஒலித்ததே எப்படி இப்படி பல அற்புத விளைவுகளுக்கிடையே அவரது சொற்பொழிவு மக்களைக் கட்டிப் போட்டது. ஐயோ! அவர் இன்னமும் பேசமாட்டாரா என்று கேட்டோர் தவித்துக் கொண்டிருந்த போது நிறைவு செய்தார். அன்று நிகழ்ச்சியைக் கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்களே!
நிறைவாக தலைவர் இல.கணேசன் விழா சிற்புக்குக் காரணமானவர்களுக்கு சிறப்புச் செய்தார். கட்சி சார்பின்றி இலக்கியத்துக்காக நடைபெறும் பொற்றாமரை அடிக்கடி பூக்கும் எனும் செய்தியோடு தன் நிறைவுரையை முடித்தார். திரு கி.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.
நன்றி; தஞ்சை வெ.கோபாலன்

Monday, January 21, 2013

இந்திய வாழ்க்கையில் மதத்தின் இடம் (22-1-2013)


                                     இந்திய வாழ்க்கையில் மதத்தின் இடம் (22-1-2013)

நமது இந்த பெருமைமிக்க நாட்டின் அடித்தளமாகவும், முதுகெலும்பாகவும் உயிர் நிைலையாகவும் இருப்பது மதம், மதம் மட்டுமே. மற்றவர்கள் அரசியலைப் பற்றிப் பேசட்டும், வியாபாரத்தின் மூலம் குவிகின்ற அளவற்ற செல்வத்தின் பெருமையைப் பேசட்டும், பரவி வருகின்ற வாணிப வளத்தைப் பற்றிப் பேசட்டும், சுதந்திரத்தின் சிறப்பினைப் பற்றி பேசட்டும். இவைகளை எல்லாம் இந்துவின் மனம் புரிந்து கொள்ளாது, புரிந்து கொள்ளவும் விரும்பாது. ஆன்மிகம், மதம், இறைவன், ஆன்மா, எல்லையற்ற பரம்பொருள், முக்தி -- இவை பற்றியெல்லாம் பேசிப் பாருங்கள். பிற நாடுகளின் சிறந்த தத்துவ ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களைவிட நம் நாட்டில் உள்ள சாதாரண விவசாயி இவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருப்பான். இது உறுதி.........
நாம் இந்த உலகிற்குப் போதிக்க வேண்டியவை சில உள்ளன. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் கொடுமையிலும் அன்னிய ஆதிக்கத்திலும் அவர்களின் தண்டனைகளுக்கு ஆட்பட்டும் இந்த நாடு அழியாமல் இருப்பதற்குரிய ஒரே காரணம், இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியதை அது பெற்றிருப்பதுதான். இந்த நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கடவுளையும், மதம் மற்றும் ஆன்மிகக் கருவூலங்களையும் கைவிடாமல் கைக்கொண்டிருக்கிறது.

நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான குறிக்கோள் இருப்பதை நான் கண்டேன். அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்தத் தேசியப் பின்னணி சில நாடுகளில் அரசியலாக இருக்கிறது, சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய் நாட்டின், அடிப்படையாகவும், முதுகெலும்பாகவும் அதன் தேசிய வாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப் பாறையாகவும் மதம் மட்டுமே உள்ளது.

ரோமாபுரையைப் பாருங்கள்! ஏகாதிபத்தியமும் நாடு பிடித்தலும் அதன் குறிக்கோளாக இருந்தது. அந்தக் குறிக்கோள் பின்னடைவு ஆனதும், அந்த சாம்ராஜ்யமே சிதறிச் சின்னா பின்னப்பட்டு மறைந்து ஒழிந்தது. கிரேக்கம் நிலைநாட்ட விரும்பிய குறிக்கோள் அறிவு. அந்த அறிவு தாக்கப்பட்ட அளவில் அந்த நாடும் அழிந்தது. இதுபோலவே பிற்காலத்தில் ஸ்பெயின் முதலான நாடுகளும் அழிந்தன. ஒவ்வொரு நாடும் உலகிற்காக ஒரு நோக்கத்தை முன்வைத்தே செயல்பட்டது. அந்த நோக்கம் பாதிக்கப் பெறாத வரையில் அந்த நாடு எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவற்றைத் தாக்குப் பிடித்து வாழ்ந்தது. நோக்கம் அழிந்தபோது அந்த நாடு வீழ்ச்சியுற்றது.

இந்திய நாட்டின் இத்தகைய ஆதார சக்தி இன்றுவரை பாதிக்கப் படாமல் இருக்கிறது. இந்தியர்களும் அதை விடாமல் பற்றிக் கொண்டுள்ளனர். பல்வேறு மூடக் கொள்கைகளின் நடுவிலேயும் அந்த ஆதார சக்தி வலிமையுடன் விளங்குகிறது. பயங்கரமான மூட நம்பிக்கைகள் அவர்களிடம் காணப்படுகின்றன. அவற்றுள் சில குலை நடுங்கச் செய்பவை. அதனால் என்ன? தேசிய உயிர்துடிப்பு, அதன் நோக்கம், பணி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ..........

இறைவன் - இறைவனை மட்டுமே இந்தியா உடும்புப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறது. எனவே நம்பிக்கைக்கு இன்னமும் இடமிருக்கிறது.

ஓர் இந்து, நீரைப் பருகுவதுகூட மத உணர்வுடன்தான்; தூங்குவது மத உணர்வுடன்தான், நடப்பது மத உணர்வுடன்தான்; திருமணம் செய்வதும் மத உணர்வுடன்தான், திருடுவதானால் கூட மத உணர்வுடன்தான்............ இதிலிருந்து அந்த இனத்தின் உயிர்நாடி எதுவென்று தெரிகிறது அல்லவா? அந்த இனத்தின் குறிக்கோள் மதம் தான். இதுவரை அந்தக் குறிக்கோளை யாரும் தாக்காததால், அந்த இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையின் மற்ற பிரச்சினைகள் எல்லாம் அந்தக் குறிக்கோளுக்கு அடுத்த படியிலேயே வைக்கப்பட வேண்டும். சங்கீதத்தில் தாள லயங்களின் இடத்தைப் போன்றதே அது. அரசியலையே நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நாடு இருக்கலாம். அங்கே மதம் முதலான மற்றவையெல்லாம் அந்த இலட்சியத்துக்கு அடுத்தபடியாகத்தான் அமைய வேண்டும். ஆனால் இந்திய நாட்டின் மகத்தான வாழ்க்கை இலட்சியம் ஆன்மீகமும் தியாகமும்தான். அவர்களுடைய அடிப்படை முழக்கம், 'இந்த உலகமே வெறுமை, மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலைத்திடும் மாயை' என்பதுதான். 

அறிஞர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் காலமானார்


harimanigandan v 
14:40 (12 minutes ago)
to mintamil
    Dr.M.S.Udayamurthy pass away today @ 11.30 AM chennai...

 அறிஞர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் காலமானார் என்கிற செய்தி எனக்கு மின்னஞ்சல்மூலம் கிடைத்தது. அந்தப் பெருமகனாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் வாழ்ந்த அந்தப் பேரறிஞர் தன்னுடைய நூல்கள் வாயிலாகத் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பார்.


Sunday, January 20, 2013

உலகிற்கு இந்தியாவின் கொடை (21-1-2013)

                             உலகிற்கு இந்தியாவின் கொடை (21-1-2013)

நமது தாய்த் திருநாட்டிற்கு இந்த உலகம் பட்டுள்ள கடன் அளவற்றது.

நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப் போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதை நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. என் நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம், "நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள்" என்பதுதான்.

உங்கள் மதம் காலத்தால் முந்தியது என்பதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? உங்கள் மதம் சிந்தனையில்கூட உதிப்பதற்குக் குறைந்தது முன்னூறு வருஷங்களுக்கு முன்பாவது எங்கள் மதம் இருந்திருக்கிறது.

விஞ்ஞானங்களைப் பொறுத்தவரையிலும் இது பொருந்தும். சிந்தனைக்கு எட்டாத காலத்திலிருந்தே இந்தியா விஞ்ஞானிகளைப் படைத்துள்ளது. விகாரமான காது, மூக்கு போன்றவற்றைச் சரிசெய்வதற்கான இரசாயனங்களைக் கண்டிபிடித்துத் தந்ததன் மூலம் இந்தியா நவீன மருத்துவத் துறைக்குக்கூடத் தனது கொடையை அளித்துள்ளது என்று கூறுகிறார் சர் வில்லியம் ஹண்டர். கணிதத் துறையிலும் அது தனது கொடையை அளித்துள்ளது. அல்ஜீப்ரா, ஜியோமிதி, வானவியல், நவீன விஞ்ஞானத்தின் வெற்றி முத்திரையான கலவைக் கணிதம் (mixed mathematics) போன்றவையெல்லாம் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய எல்லா நாகரிகங்களுக்கும் அடிப்படையான பத்தின் மடங்கை வைத்துக் கணக்கிடுகின்ற முறையும் இந்தியாவின் கொடைதான். இவற்றைக் குறிக்கின்ற வார்த்தைகள் எல்லாமே சம்ஸ்கிருத வார்த்தைகள்.

ஜெர்மானியத் தத்துவ அறிஞரான ஷோபனேர் ஒத்துக்கொள்வது போல் தத்துவத்தைப் பொறுத்தவரையில் நாம் மற்ற எந்த நாடுகளையும் விட மிக உயர்ந்த இடத்திலேயே இருக்கிறோம். இசையை எடுத்துக் கொண்டால், ஏழு ஸ்வரங்களுடன்கூடிய இசையை உலகிற்கு வழங்கியது நாம்தான்.

மொழியியலை எடுத்துக் கொண்டால், எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் அடிப்படையாக இருப்பது சம்ஸ்கிருதமே என்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். நமது இதிகாசங்களும் கவிதைகளும் வேறு எந்த மொழியிலும் உள்ள இலக்கியத்தினும் தரம் வாய்ந்தவையே. நமது 'சாகுந்தலம்' ஜெர்மனியின் மாபெரும் கவிஞரால் "வானமும் பூமியும் தொடுகின்றன" (Heaven and Earth united) என்ற பெயரில் சுருக்கமாக வெளியிடப் பட்டுள்ளது.

ஈசாப்பின் கதைகளை உலகிற்குக் கொடுத்தது இந்தியாவே. பழைய ஏதோவொரு சம்ஸ்கிருத நூலிலிருந்து ஈசாப் அதை எழுதிக் கொண்டார். அரேபிய இரவுகள், ஏன், சின்ட்ரல்லா (Cinderella), பீன் ஸ்டாக்ஸ் (Bean Stalks) கதைகளையும் இந்தியாவே அளித்தது. பஞ்சு, சாயம் ஆகியவை இந்தியாவின் கண்டுபிடிப்பு. பலவித ஆபரணங்கள் செய்வதிலும் இந்தியா முதலிடம் வகித்தது. சர்க்கரை (Sugar) என்ற பொருளும், ஏன், அந்த வார்த்தைகூட இந்தியாவில் தோன்றியதே. சதுரங்கம் (Chess) சீட்டு, தாயம் (Dice) முதலான விளையாட்டுக்கள் இந்தியா கண்டுபிடித்தவையே. ஒவ்வொரு துறையிலும் இந்தியா இத்தனை மகோன்னமாக இருந்ததால்தான் ஐரோப்பியப் படைகள் அதை நாடி வர நேர்ந்தது. இந்த முயற்சியில்தான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது.

உலகத்தையே ஆட்டி வைக்கக்கூடிய ஆன்மிகச் செல்வர்கள் இல்லாத காலம் இந்தியாவில் எப்பொழுதாவது இருந்ததுண்டா? சொல்லுங்கள் என்று நான் எல்லோருக்கும் சவால் விடுகிறேன். இந்தியாவின் பணி ஆன்மிகமயமானது. இதைப் போர் முரசுகளாலோ படைகளின் அணிவகுப்புக்களாலோ செய்ய முடியாது. எப்படிப் பனி, சத்தம் இன்றியும் விழுந்த இடம் தெரியாமலும் உலகின் அழகிய மலர்களில் வீழ்ந்து அவற்றை மலரச் செய்கிறதோ, அவ்வாறே இந்தியாவின் ஆதிக்கமும் உலகம் முழுவதும் செயல்படுகிறது.

Saturday, January 19, 2013

பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)


           பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)

இந்த உலகத்தில் புண்ணியபூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால், தங்கள் வினைப்பயன்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வோர் உயிரும் வந்தாக வேண்டிய ஓர் இடம் இருக்கிறது என்றால், கடவுளைத் தேடிச் செல்கின்ற ஒவ்வொரு ஜீவனும் வந்து சேர வேண்டிய கடைசி வீடு ஏதாவது இருக்கிறது என்றால், மென்மையிலும் தாராள மனப்பான்மையிலும் புனிதத்திலும் அமைதியிலும், இவையனைத்திற்கும் மேலாக அக நோக்கிலும், ஆன்மிக நோக்கிலும், மனித சமுதாயம் உச்சத்தை அடைந்த நாடு ஏதாவது உண்டு என்றால், அது பாரதத் திருநாடே.

அரசியல் மகோன்னதமோ இராணுவ அதிகாரமோ நம் இனத்தின் தனிச் செய்தி அல்ல; அப்படி இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள் -- இனி இருக்கப் போவதும் இல்லை.

இந்திய இனம் ஒரு போதும் செல்வத்திற்காக வாழ்ந்தது இல்லை. பிற எந்த நாடும் குவித்திராத அளவிற்கு ஏராளமான செல்வத்தை ஈட்டிய போதிலும், அது செல்வத்தைப் பெரிதென்று கருதியதில்லை. காலங்காலமாக வீரமும் தீரமும் கொண்ட ஆற்றல் மிகுந்த நாடாக இருந்து வந்திருந்த போதிலும், வீரமே பெரிதென்று போற்றியதில்லை. வெற்றி வெறி பிடித்துப் பிற நாடுகளுக்குச் சென்றதில்லை. தன் நாட்டிலேயே, தான் வகுத்த தனது எல்லைக்குள் இருப்பதிலேயே அது மன நிறைவு கண்டது. யாருடனும் அது போர் செய்ததில்லை. இந்திய நாட்டிற்கு ஏகாதிபத்திய மோகம் என்றுமே இருந்ததில்லை. செல்வமும், செல்வாக்கும் அதன் குறிக்கோள்கள் அல்ல.

ஓ! என் சகோதரர்களே! இது மிகவும் பிரகாசமான இலட்சியம். உபநிஷத காலத்திலேயே நாம் உலகிற்கு சவால் விடுத்தோம்; 'ந ப்ரஜயோதனேன தியாகேனைகே அம்ருதத்வ மானசு: -- சந்ததியால் அல்ல, செல்வத்தால் அல்ல, தியாகத்தினால் மட்டுமே அமரத்துவம் அடையப்படுகிறது'. எத்தனையோ இனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, ஆசை என்னும் கோணத்திலிருந்து உலகப் புதிரை அவிழ்க்க எத்தனையோ காலம் முறன்றன. அவையெல்லாம் அன்றே தோற்றன. பழைய நாடுகள் பதவிக்கும் பணத்திற்கும் உள்ள ஆசையின் காரணமாக ஏற்பட்ட கொடுமை, துன்பம், இவற்றின் பளுவைத் தாங்க முடியாமல் அழிந்தன; புதிய நாடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

சமாதானம் நிலைக்குமா? யுத்தம் நிலைக்குமா? பொறுமை நிலைக்குமா? பொறுமையின்மை நிலைக்குமா? நல்லது நிலைக்குமா? கெட்டது நிலைக்குமா? தோள் வலிமை நிலைக்குமா? அறிவு நிலைக்குமா? உலகியல் நிலைக்குமா? ஆன்மிகம் நிலைக்குமா? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

நமது பிரச்சினைகளுக்கு நாம் எப்போதோ தீர்வு கண்டுவிட்டோம். நல்ல காலத்திலும் சரி, கெட்ட காலத்திலும் சரி, அதைப் போற்றி வந்திருக்கிறோம்; காலம் முடியும் வரை அதைப் போற்றி வருவோம். நாம் கண்ட தீர்வு உலகப் பற்று இல்லாமை -- தியாகம்.

மனித இனத்தை ஆன்மிக மயமாக்குவதுதான் இந்தியாவின் வாழ்க்கைப் பணியினுடைய உட்பொருள், அதன் அமர கீதங்களின் பல்லவி, அதன் வாழ்க்கையின் முதுகெலும்பு, அதன் அஸ்திவாரம், அது இருப்பதற்கான காரணம். தார்த்தாரியர் ஆண்டாலும் சரி, இஸ்லாமியர் ஆண்டாலும் சரி, முகமதியர்கள் ஆண்டாலும் சரி, ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் சரி, அது தனது இந்த வாழ்க்கைப் பணியிலிருந்து ஒரு நாளும் தவறியதில்லை.

கீழை நாட்டுப் பெண்களை மேலை நாட்டின் அளவு கோலால் மதிப்பிடுவது சரியானது அல்ல. மேலை நாட்டில் பெண் என்றால் மனைவி; கீழை நாட்டிலோ அவள் தாய். தாய்மைக் கருத்தை இந்தியர்கள் போற்றுகிறார்கள். தாயின் முன்பு துறவியர்கூட வீழ்ந்து வணங்க வேண்டும். கற்பு இந்தியாவில் மிகவும் போற்றப்படுகிறது.

இந்தியாவில் குடும்பத்தின் ஆதாரம் தாய். நமது இலட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய். எனவே தாய் நமக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவூல் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே ஆவார். நமது கடவுள் அறுதி நிலையிலும், தனி நிலையிலும் உள்ளவர். அறுதி நிலையில் அவர் ஆண், தனி நிலையில் அவர் பெண். இவ்வாறுதான், "தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு" என்று நாம் சொல்கிறோம். பிரார்த்தனையின் மூலம் பிறந்தவனே ஆரியன், காமத்தின் மூலம் பிறந்தவன் ஆரியன் அல்லன்.

இந்தக் கருத்து நம்மிடம் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. பிரார்த்தனையில் நிறைவுறாத திருமணத்தை நாம் இழி செயலாகவே கருதுகிறோம் ... கற்பு - இதுதான் இந்து இனத்தின் இரகசியம்.

மிகவும் பழமை வாய்ந்த சிறந்த இரண்டு இதிகாசங்கள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. பழங்கால இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், சமூக நிலை, நாகரீகம் போன்றவற்றை இவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இந்த இரண்டில் மிகப் பழமையானது இராமாயணம். 'இராமனின் வாழ்க்கை வரலாறு'.... இராமனும் சீதாபிராட்டியும் இந்திய நாட்டின் இலட்சியங்களாகும். எல்லா குழந்தைகளும், முக்கியமாக எல்லா சிறுமிகளும் சீதையை வழிபடுகின்றனர். தூயவளௌம் தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டவளுமான சீதையைப் போல வாழ்வதுதான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசையாகும்.

மகாபாரதம் என்றால் 'பெரிய இந்தியா அல்லது பரதனின் பெரிய சந்ததியரின் கதை'..... இந்த இதிகாசம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கிரேக்கர்களின் மீது ஹோமரின் கவிதைகள் எத்தனை செல்வாக்கு பெற்றுள்ளதோ அத்தனை செல்வாக்கை இது இந்தியர்கள் மீது பெற்றிருக்கிறது. பக்தியுள்ள ஆனால் மன உறுதி இல்லாத பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனின் மனத்தில் தர்மத்துக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்; பிதாமகர் பீஷ்மரின் மகோன்னதமான குணச்சித்திரம்; யுதிஷ்டிரனின் சிறந்த பண்பும் தர்மமும்; நான்கு சகோதரர்களின் விசுவாசமும் வீரமும்; கிருஷ்ணரின் பரிசுத்தமான பண்பும்; ஈடு இணையற்ற பொது அறிவும்; இனி, ஆண்களுக்குச் சளைக்காத பெண்களின் பாத்திரங்கள் -- கம்பீரமான காந்தாரி, அன்புத்தாய் குந்தி, அடக்கமே உருவானவளும் துவள்பவளுமான திரெளபதி, இன்னும் நூற்றுக்கணக்கான மகாபாரதக் கதாபாத்திரங்களும், இராமாயணக் கதாபாத்திரங்களும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களின் சொத்தாக இருந்து வருகின்றன. அவர்களின் சிந்தனைகளுக்கும் நற்பண்புகளுக்கும் தார்மிகக் கருத்துக்களுக்கும் அடிப்படையாக உள்ளன. உண்மையில், இராமாயணமும், மகாபாரதமும் பழங்கால ஆரியர்களின் வாழ்க்கையும் அறிவும் அடங்கிய அறிவுக் களஞ்சியங்கள். இவை விரிக்கின்ற இலட்சிய நாகரிகத்தை மனித குலம் இன்னமும் எட்டிப் பிடிக்கவில்லை.

இவர்களைப் பற்றியெல்லாம் படிக்கும்போது மேலை நாட்டு இலட்சியம் இந்திய இலட்சியத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டது என்பதை நீங்கள் உடனடியாக உணரமுடியும்......... 'செய், செயலால் உன் சக்தியைக் காட்டு' என்று மேலை நாடு சொல்கிறது. 'பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு' என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக் கொள்ள முடியும் என்னும் பிரச்சினைக்கு மேலை நாடு தீர்வு கண்டுள்ளது. அவன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற பிரச்சினைக்கு இந்தியா தீர்வு கண்டுள்ளது.

Friday, January 18, 2013

சுவாமிஜியின் பொன்மொழிகள் (19-1-2013)

                                     சுவாமிஜியின் பொன்மொழிகள் (19-1-2013)

தொடர்ச்சி......

1. நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுகின்றவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உழல்பவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வி அறிவைப் புகட்டு. இந்த வழிகளில் நீ உன் சகோதரர்களாகிய மக்களுக்குத் தொண்டு செய்யத் தொடங்குவாயானால், நிச்சயம் உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

2. அந்த நாட்களில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல், தன்னடக்கம் ஆகிய வீரனுக்குரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்கிறானே அன்றி, தனது சொந்த நலனைக் கருதுவதில்லை. ஒருவன் பிறருடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் அன்பு செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் தர தயாராக இருத்தல் வேண்டும்.

3. கடவுளிடம் நம்பிக்கை வைத்திடுங்கள்; திட்டங்கள் எவையும் தேவையில்லை. அவற்றால் ஆகப்போவதும் எதுவும் இல்லை. துன்பத்தால் வாடுபவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள்; பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயம் கிடைத்தே தீரும்.

4. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து. வெறுப்புணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள். நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாக ஆவாய்.

5. சுயநலமற்ற தன்மையே கடவுள். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்த போதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம். அவனுக்கு உலகில் செல்வம் எதுவும் இல்லாமலிருக்கலாம். அப்படியிருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால் அவன் லெளகீகத்தில் ஒரேயடியாக மூழ்கியவனே யாவான்.

6. இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழியுமானால், உலகிலிருந்து அனைத்து ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த லட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும் பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும்; வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூசைக்கிரியை முறைகளாக வைத்துக் கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலி பீடத்தில் பலியாக்கி விடும். ஆனால்............ அப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றும் ஒருநாளும் நடக்கப் போவதில்லை.

7. உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத் தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய்விடும்? இல்லை.

8. மற்ற நாடுகளோடு முன்னேற்றத்தில் இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா? அல்லது திறமையில் குறைந்தவளா/ அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகியவற்றைப் பார். அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்தியாவை இந்தப் பாதையிலே ஈடுபடுத்துங்கள், மற்றவை தாமாக வந்து சேரும்.

9. ஓர் அரக்கி தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையில் வைத்திருந்தாள், அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றி தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த அரக்கியின் கதையை நாம் குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஒரு நாட்டின் வாழ்க்கையும், அதைப் போன்றதே ஆகும். நமது இந்த நாட்டின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது "மதத்தில்"தான் இருக்கிறது. அதை ஒருவராலும் அழித்து விடமுடியாது.

10. ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல். என் அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று பணியாற்றுங்கள்.

11. மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப் போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.

12. கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுச்சி பெறட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியோரின் குடிசைகளிலிருந்து புதிய இந்திய எழுச்சி பெறட்டும். பலசரக்குக் கடைகள், பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தைகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து நிற்கட்டும்.

13. செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிக்ளோ இந்த நாட்டில் இல்லை. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள்தாம் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை.

14. எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்திய நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. எழுமின்! எழுமின்! இந்த நமது தாயகத்து தேவி, தனது அழிவற்ற அரியணையின் மீது புத்திளமை பெற்றவளாக, முன்பு எப்போதையும்விட மகிமை கொண்டவளாக அமர்ந்திருப்பதைக் காணுங்கள்.

15. உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளுமே. காலமெல்லாம் அழுதது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். இளைய தலைமுறையினரிடம்தான் என் நம்பிக்கை இருக்கிறது. ஓ! மாபெரும் வீரர்களே! கண்விழித்து எழுந்திருங்கள்! இனி உறக்கம் உங்களுக்குப் பொருந்தாது. விழித்தெழுங்கள்! எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்! என் அறிவுரைகளால் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். உலகம் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும்.

--ooOoo-

Thursday, January 17, 2013

காலி நாற்காலி


நடுக்கூடத்தில் காட்சி தரும்
அந்த காலி நாற்காலியைப்
பார்க்கும்தோறும் பார்க்கும்தோறும்
நெஞ்சு வலிக்கிறதே ஏன்?

அதில் எப்போதும் உட்கார்ந்திருந்த
என் தந்தையைப் பார்த்த பொழுதெல்லாம்
அடிமனத்தில் ஆத்திரமும்
கோபமும் கொப்பளித்ததே ஏன்?

எல்கேஜியில் சேர்த்துவிட்டு என்னைப்
பள்ளியில் கொண்டு விட்டவுடன்
தந்தை வீடு திரும்புமுன்னே
வீட்டுக்கு ஓடிவந்தேனே அதனாலா/

ஒரே ஒரு மாதத்தில் மட்டும்
மூன்று பள்ளிகளுக்கு மாறியபோதும்
மனம் தளராமல் என்னை
பள்ளிக்கு அனுப்பிவந்தானே அதனாலா?

கால்வலிக்க நான் நடக்கக்கூடாதென்று
தெருவோர மேடையருகே என்னை
உட்காரச் சொல்லிவிட்டு அங்கு
தானே வந்து அழைத்துச் சென்றானே அதனாலா/

படிக்கும் பருவத்தில் நான்
கேட்டதெல்லாம் வாங்கித் தந்து
விளையாடவிட்டு என்ன
குறையின்றி வளர்த்தானே அதனாலா?

என் அப்பன் எனக்கு இன்னம்
திருமணப் பேச்சை எடுக்கவில்லையென்று
நண்பர்கள் குழாத்திடம் முறையிட்ட பின்னர்
எனக்குத் திருமணம் செய்வித்த காரணத்தாலா?

வேலைக்குச் சென்ற பின்னர்
ஒவ்வொரு வேலையையும் விட்டுவிட்டு
வீட்டுக்கு ஓடிவந்து நின்றபோதும்
வருந்தாமல் என்போக்கில் விட்டதாலா?

தனிமையிலே வெளியூரில் நான்
வேலைக்குப் போகும் நிலைமை கண்டு
சோற்றுக்கு வழிசெய்ய என் தாயையும் எங்கூட
வெளியூர் அனுப்பி வைத்த காரணமா?

மனம் சோர்ந்து, உடல் வருந்தி
ஆதரவு நாடி நானும் அடிக்கடி ஓடிவந்து
அடைக்கலம் ஆனபோது ஆறுதல் கூறி
என்னை மனம் தேற வைத்ததாலா?

ஊரார் ஒன்றுகூடி என்மீது குறை சொல்ல
அவர்களை எதிர்கொண்டு என்பக்கம் நின்றுபேசி
மனத்தில் தெளிவு பெற ஆதரவு தந்து என்னை
ஊக்கம் கொடுத்து ஆதரித்த காரணமா?

தேவைப் பட்ட காலமெல்லாம்
தேவைப்பட்ட உதவிகளை
முகம் சுளித்து மறுத்திடாமல் மனமுவந்து
செய்து வந்த காரணமா?

பாசத்தை உணர்ந்திடாமல் நான்
மனம் வருந்தி நின்ற போது
தான் வருந்தி அன்புகாட்டி
துணையாக இருந்ததாலா?

ஏன், இன்று எனது மனம்
அந்த காலி நாற்காலியைப் பார்த்து
மரித்துப் போன என் தந்தைக்காக
உடல் குலுங்க அழுகின்றது?


Alasiam Govindhasamy commented on your photo.
Govindhasamy wrote: "அருமையான உணர்வுகளை அள்ளித் தெளித்தக் கவிதை ஐயா! அதன் கடைசிப் பகுதியில் இந்த வரிகளையும் சேர்த்துப் படிப்போமே!

 நெஞ்சிலே பல்லக்கு தந்த தெய்வத்தை 
அஞ்சுலே உணரவில்லை அதன் அடியொற்றி 
தஞ்சமென வந்த போதெல்லாம் கடலை 
விஞ்சும் அன்பைப் பொழிந்த கருணாமூர்த்தியியை இழந்து 
எஞ்சி நிற்கும் நாற்காலியே எந்தை 
கொஞ்சிப் பேசிய அந்த நாட்களை
மிஞ்சிய வாழ்வில் நினைக்கையில் உன்னைப்போல்
 செஞ்சுவைத்த மெளனமாக இருக்க முடியவில்லையே!"