பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 27, 2015

73. சமூகம் - ஜாதிக் குழப்பம்


    இந்தியாவில் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு. பணமில்லாதது ஒன்று. ஜாதிக் குழப்பம் இரண்டாவது. பணக்கஷ்டமாவது வயிற்றுக்குப் போதிய ஆஹாரமில்லாத கொடுமை. இந்தத் துன்பத்துக்கு முக்கியமான நிவர்த்தி யாதென்றால் நமது தேசத்தில் விளைந்து, உணவுக்குப் பயன்படக்கூடிய தான்யங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகாமல் தடுத்துவிடவேண்டும். இங்கிலாந்து முதலிய சில தேசங்களில் காலையில் எழுந்தால் ஆஹாரத்துக்கு மீன் தென் அமெரிக்காவிலிருந்து வரும்படியாக இருக்கும்; வெண்ணெய் ஆஸ்டிரேலியாவிலிருந்து வரும்படியாக இருக்கும். இந்நாட்டினரின் நிலைமை அப்படியில்லை. இங்கு பூமி நம்முடைய ஜனங்களுக் கெல்லாம் போதிய ஆஹாரம் கொடுக்கிறது. ஆதலால், ஏற்கெனவே போதிய அளவு பணம் குவித்து வைத்திருந்தாலன்றி உணவுக்கு வழி கிடையாது என்ற நிலைமை நம்முடைய தேசத்திற்கில்லை. உணவு தான்யங்களின் ஏற்றுமதியை எந்த நிமிஷத்தில் நிறுத்தி விடுகிறாமோ, அந்த நிமிஷம் முதல் நம்முடைய ஜனங்களுக்குத் தட்டில்லாமல் யதேஷ்டமான ஆஹாரம் கிடைத்துக் கொண்டு வரும். இந்தவிஷயத்தில் ஜயமடைய வேண்டினால் நம்முடைய வியாபாரிகள் வெறுமே தம்முடைய வயிறு நிரப்புவது மாத்திரம் குறியாகக் கொள்ளாமல் தமக்கும் லாபம் வரும்படியாகவும் பொது ஜனங்களுக்கும் கஷ்டம் ஏற்படாமலும் செய்தற்குரிய வியாபார முறைகளைக் கைக்கொள்ளும்படி அவர்களை வற்புறுத்த வேண்டும். இங்ஙனம் நம்முடைய நாட்டிலேயே தான்யங்களை நிறுத்திக்கொண்டு, அந்தந்த ஊரில் மிக எளியோராக இருப்போரிடம் தக்க வேலைகள் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு உணவு வேண்டிய மட்டும் கொடுத்துவர ஏற்பாடு செய்தல் மிகவும் எளிது.

பூரி (ஜகந்நாதம்) பிரதேசங்களில் மிகவும்கொடிய பஞ்சம் இந்த க்ஷணத்தில் நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் ராஜாக்களும், சாஸ்திரிகளும், பெரியமிராசுதார்களும், ஸாஹூகார்களும், வியாபாரிகளும்,வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும், வயிறுகொழுக்க, விலாப்புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாரங்களைத் தம்முள் திணித்துக் கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும், தீராத மாறாத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமையைத் தீர்க்கவழி தேடவேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிறது. இத்தனை கஷ்டத்துக்கிடையே ஜாதிக் கொடுமை ஒருபுறத்தே தொல்லைப்படுத்துகிறது.

பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே அதி ஏழைகளாக இருக்கிறார்களென்பது மறுக்க முடியாத விஷயம். உழைப்பும் அவர்களுக்குத் தான் அதிகம். அதிக உழைப்பு நடத்திவரும் வகுப்பினருக்குள்ளே அதிக வலுவு ஏற்படும் அநீதி உலக முழுதிலுமிருக்கிறது. எனினும், நம்முடைய தேசத்தைப் போல் இத்தனை மோசமான நிலைமை வேறெங்குமில்லை.

இந்த ஊரில் (கடையத்தில்) ஒரு செல்வர்வீட்டு விசேஷமொன்றுக்காக சங்கரநயினார் கோயிலிலிருந்து கோவில் யானையை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.அது ஆண் யானை; 18 வயதுள்ள குட்டி. அது மிகவும் துஷ்டயானை யென்று பெயர் கேட்டிருப்பதால், அதை இவ்வூரில் அனேக ஜனங்கள் திரள் திரளாகச் சென்று பார்க்கிறார்கள். இன்று காலை நானும் என் நண்பரொருவருமாக இந்த யானையைப் பார்க்கச்சென்றோம். அந்த யானையைப் பற்றிய முக்கிய விசேஷம் யாதெனில், இதற்கு மாவுத்தர்களாக இரண்டு பிராமணப் பிள்ளைகளும், சைவ ஓதுவார் (குருக்கள்) வம்சத்தைச்சேர்ந்த ஒருவரும் வேலை பார்க்கிறார்கள். ஸாதாரணமாக, மாவுத்தர் வேலை செய்ய மஹம்மதியர்களும் ஹிந்துக்களில் தணிந்த ஜாதியாருமே ஏற்படுவது வழக்கம். இந்த யானைக்கு பிராமண மாவுத்தர் கிடைத்திருக்கிறார்கள்.

மேற்படி பிராமண மாவுத்தரில் ஒருவனிடம் நான் இந்த யானையின் குணங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நான் நதிக்குப் போய்க் கொண்டிருக்கையில் அவன் அந்த யானையை நிஷ்கருணையாக அடித்துக்கொண்டிருக்க நான் பார்த்தேனாதலால், அதை அவனுக்கு நினைப்பு மூட்டி ''மிருகங்களை அன்பினால் பழக்கவேண்டும். கருணையில்லாமல் அடித்துப்பழக்குவது சரியில்லை'' என்றேன். நான் இந்த வார்த்தை சொன்னது தான்தாமஸம், அவன் மிகவும் நீளமாகத் தன் ஸாஸ்திரக் கட்டுகளை யெல்லாம் அவிழ்த்து விரிக்கத் தொடங்கிவிட்டான். அந்த மாவுத்தன் சொல்லுகிறான்:-  ''இந்தயானை கீழ் ஜாதி யானை; யானைகளில் ப்ரம்ம,க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக்களிருக்கின்றன. அவற்றுள் இது சூத்திரஜாதியைச் சேர்ந்த யானை. மனிதர்களில் சூத்திரர்களுக்குள்ளே ஈழுவர் என்ற ஜாதியர் இருக்கிறார்களே, அதே மாதிரி இந்த யானை ''வீரன்''வகுப்பைச் சேர்ந்தது........'

இங்ஙனம் அந்த மாவுத்தன் நீண்ட கதைசொன்னான்.

நான் இந்த விஷயத்தை இங்கு எடுத்துச் சொல்லியதின் நோக்கம் யாதெனில், நம்மவர்கள் மனதில் இந்த ஜாதிக் கொள்கை எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டேயாம். யானையை எடுத்தால், அதில் ப்ரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்! குதிரையிலும் அப்படியே! வானத்திலுள்ள கிரஹங்களிலும் அதே மாதிரி ப்ரம்ம க்ஷத்திரிய முதலிய ஜாதி பேதங்கள்.இரத்தினங்களிலும் அப்படியே!

இங்ஙனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்வம், ஸஹோதரத்வம்  என்னுங் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்றால் அது ஸாதாரண வேலையா ? கொஞ்ச  ஜாதியா ? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா ? பறை பதினெட்டாம்! நுளைநூற்றெட்டாம்! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும், நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும்,பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள்; ஒன்றுக்கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண்கொடுக்கல், வாங்கல் கிடையாது. கேலி; கேலி; பெருங்கேலி. இங்ஙனம் ஏற்கெனவே மலிந்து கிடக்கும் பிரிவுகள் போதாவென்று புதிய புதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்கமுடையவர்களிலே சிலர் செய்கை நெறியுணராமல் புதியவகுப்புக்கள் ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். கடையத்துவேளாளரில் இங்கிலீஷ் படித்த சிலர் தாங்கள் 'திராவிடப் பிராமணர்' என்று பெயர் வைத்துக்கொண்டு பரம்பரையாக வந்த 'பிள்ளை'ப் பட்டத்தை நீக்கி 'ராயர்' பட்டம் சூட்டிக்கொண்டிருக் கிறார்கள். திருஷ்டாந்தமாக ஒருவருக்கு 'ஆண்டியாப் பிள்ளை' என்ற பெயர் இருந்தால், அவர் அதை ஸர்க்கார் மூலமாக 'ஆண்டியப்ப ராயர்' என்று மாற்றிஅப்படியே ஸகல விவகாரங்களும் நடத்துகிறார். இந்த திராவிடப் பிராமணரின் பட்டம் எப்படி நேரிட்டது என்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை.

இங்ஙனமே சில தினங்களின் முன்பு வள்ளுவர்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கூட்டங் கூடித் தாங்கள் உயர்ந்த ஜாதியாரென்றும் மற்றப் பறையர்களைத் தொடக் கூடாதென்றும் அவர்களுக்குப் பஞ்சாங்கம் முதலியன சொல்லக் கூடாதென்றும் அவ்வாறு செய்யும் வள்ளுவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் துண்டுப் பத்திரிகைகள் போட்டிருந் தார்களாம். இதைக் கண்டு மனம் பொறுக்காமல் வள்ளுவக் குலத்தைச் சேர்ந்த ஸ்ரீமான்வி.எல். பெருமாள் நாயனார் என்பவர் ''வள்ளுவர் பறையரே, பஞ்சமரே'' என்பதை மிகவும் தெளிவாக ருஜூப்படுத்தி சென்ற வியாழக்கிழமை (ஜூன் மாதம் 3-ம்தேதி) சுதேசமித்திரனில் ரஸமான வியாஸமொன்று எழுதியிருப்பதைக்கண்டு என் மனம் சால மகிழ்ச்சி யெய்திற்று.

ஆனால், அதே வியாஸத்தில், நாயனார் நான்காம் வகுப்பாகிய வேளாளர் குலத்திலிருந்து பறையர் பிரிந்தாரென்றுசொல்லுவது பொருத்தமில்லாத வார்த்தை. இவர் எந்த ஆதாரத்தில் இங்ஙனம் சொல்லுகிறார் என்பது விளங்கவில்லை. வெறும் ஜாதி விரோதத்தாலே தான் இங்ஙனம் சொல்லுகிறாரென்று தோன்றுகிறது. வீண் பகைமைகளால் நன்மை ஏற்படாது.

எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார்கள். மாம்ஸ போஜனம் செய்யும் வகுப்பினர் அதை நிறுத்திவிட வேண்டும். பிறகு ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியபடி, எல்லாரையும் ஒரேயடியாக பிராமணராக்கி விடலாம். கீழ் ஜாதியாரை நல்ல ஸம்ஸ்காரங்களால் பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பதுஎன்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக யிருந்தாலும் சரி. அவன் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டு, காயத்திரி மந்திரம் கற்பித்துக் கொடுத்துவிட வேண்டும். பிறகு, அவன் பிராமணனாகவே கருதப்படவேண்டும். இதுதான் விவேகாநந்தர் சொல்லிய உபாயம். கூடியவரை நல்ல உபாயமும் கூட. ஆனால், மேல் வகுப்பினர் தம்முடைய உயர்வை மறந்து கீழ் வகுப்பினருடன் கலத்தல் இதனிலும் சிறந்த உபாயமாகும்.

ஜாதிபேத விநோதங்கள்

இந்தியாவின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் நமது சென்னை மாகாணத்தில் தான் ஜாதி பேதத்தைப் பற்றிய மனஸ்தாபங்கள் இப்போது அதிகமாக முளைத்திருக்கின்றன வென்பது. அந்த மனஸ்தாபங்கள் ராஜரீக விவகாரங்களிலுங் கூடப்  புகுந்து தேச விடுதலை யாகிய பரம தர்மத்துக்கே ஓர் இடுக்கணாகக் கூடிய நிலைமை இம்மாகாணத்தில் மாத்திரமே காணப்படுவதினின்றும் நன்கு விளங்கும். ஆயினும், இது பற்றி சுதேசாபிமானிகள் அதிகமாகப் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், முதலாவது உலக முழுவதிலும் புதிதாகத் தோன்றிச் சென்ற சில வருஷங்களாகப் புயற்காற்றைப் போல் தொழில் செய்துவரும் தெய்விகமான விடுதலைக் கிளர்ச்சியின் சக்தியால் இந்தியாவின் மக்கள் முப்பது கோடிப் பேரும் எங்களுக்கு ஸ்வராஜ்யம் வேண்டியதில்லை யென்று ஹடம் பண்ணிய போதிலும் இந்தியாவுக்குக் கட்டாயமாக ஸ்வராஜ்யம் வந்து தீரவே செய்யும். மனிதர் எண்ணத்தை மீறியும் கால சக்திவேலை செய்வதுண்டு. அப்படிப்பட்ட காலம் இப்போது உலகமெங்கும் தோன்றியிருக்கிறது. மேலும் இந்த சமயத்தில் இந்தியாவிலும் ஜனங்களிற் பெரும்பகுதி ஸ்வராஜ்ய தாகத்தில் ஈடுபட்டுத் தான் கிடக்கிறார்கள். எனவே, எந்த வகையாய் யோசித்த போதிலும், இந்தச் சென்னை மாகாணத்து ஜாதிபேதக் கிளர்ச்சியினால் இந்தியாவின் விடுதலைக்குத் தாமஸம் ஏற்படுமென்று நினைக்க ஹேது இல்லை.

தவிரவும், இந்த ''பிராமணரல்லாதார் கிளர்ச்சி '' காலகதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதிபேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலிய வற்றில் கௌரவ ஸ்தானங்களையும் தாமே அடையவேண்டு மென்றஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலைசெய்து வருகிறார்கள். திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பினருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள். இந்த நிலையில்நம்முடைய சைவ வேளாளருள்ளே ''அல்லாதார்'' கிளர்ச்சியைச் சேர்ந்திருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களே யல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடனும் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள். ''பிராமண ரல்லாதார்'' என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது. எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப்போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக் கிறார்கள். பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.

      பிராமணரல்லாதார் என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே, இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன். உண்மையாகவே, இந்தியாவில் ஜாதி பேதங்களில்லாமல் சமத்துவ கொள்கை வெற்றியடைய வேண்டுமென்றால், அதற்கு ஸ்வராஜ்ய ஸ்தாபனமே சரியான உபாயம். ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்டசபைகளில் எல்லா ஜாதி மேதாவிகளும் கலந்திருப்பார்களாதலால் அந்த சபைகளின் மூலமாக இந்தியாவில் முதலாவது ராஜரீக வாழ்வில் சமத்துவக் கொள்கை தானே பரவிவிடும். இதை விட்டுப் பொய்யும் புனையுமாக திராவிடர்களென்றும் ஆரியரென்றுமுள்ள பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதனால் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது.
No comments:

Post a Comment

You can give your comments here