பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 5, 2015

16. ஓம் சக்தி

  ஜன வகுப்பு

இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து மனுஷ்யனைச் சாகாமல் நூறாண்டேனும் பயமில்லாது வாழக் கூடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்குக் காண்பிக்கலாம். மனுஷ்யன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம்.'பாபத்திற்கு மரணம் சம்பளம்' என்று கிருஸ்துவ வேதம் சொல்லுகிறது பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம்.
ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. 'இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார், என்று எண்ணவோ திடமில்லையே' என்று தாயுமானவர் சொன்னார்.
எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ?கடவுளுக்குத் தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது, சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம், ஐயோ பாவம்!
அடா, மனிதர்களே; எத்தனை சாஸ்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர் உட்பட்டிருக்கவில்லையா?  ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கட்டுப்பாடு யாதெனில்: "ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க் கொருவர் பயப்படல் இல்லை.' மானிடரே இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவர்க்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமாக மனுஷ்ய நாகரீகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சியிருக்க, பலர்தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை - கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக்கூடிய பாகத்தையெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர் பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால் 'எல்லோரும் சமானம், அண்ணன் தம்பிபோல' என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்.
அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் 'சோஷலிஸ்ட்' கட்சியார் சொல்வது போல நிலத்தை ஸகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம் பூமி தேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே கையாளத் தெரியாமல் பொறாமையாலும், அறியாமையாலும், தாறுமாறாக விழல்படுத்தி, சோறு தேடும் இடத்தில் சோறு தேடாமல்,ஒருவர்க் கொருவர் கொல்ல வழி தேடி, பலர் வயிறு வாடச் சிலர் வயிறு ஜீர்ண சக்தியில்லாமல் போக, மனிதர் பரிதாபமாகக் காக்கையிலும் கடைப்பட்ட வாழ்வு வாழ்ந்து வீணே நசித்துப் போகிறோம். 'ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன?' என்றுநினைப்பவர் பரமமூடர். பலர் சௌகரியப்படும் வரை சிலர் சௌகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்தியமில்லை. பொருளாளி நல்ல உடுப்புகள் அணிந்து கொண்டு தெருவில் உலாவப் போவதையும், அவனுடைய கன்னத்தில் சதை உப்பியிருப்பதையும், அவனுடைய ஏவலாட்களின் தொகையும் சிறுமையும், மேற்படி பொருளாளி பிறரை அவமரியாதை செய்வதையும் கண்டு மயங்கிப் போய் அவன் பரமானந்த நிலையிலிருப்பதாக ஏழை நினைக்கிறான். அது தவறு. அவன் மனத்தில் ஒளிந்து கிடந்து அவன் உயிருக்கு நரகவேதனை செய்யும் துயரங்களை ஏழை அறியமாட்டான். ஒரு வகுப்பின் மனம் மற்றொரு வகுப்புக்குத் தெரியாமலும் ஒருவனுடைய உள்ளம் மற்றொருவனுக்குத் தெரிய இடமில்லாமலும், மனுஷ்ய நாகரீகம் அவ்வளவு மூடத்தனமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
வறுமையின் பயன்

ஏழையின் அழுக்குத் துணியையும், அழுக்குடம்பையும், சிரைக்காத முகத்தையும் பார்த்துப் பொருளாளியின் குழந்தைகள் மேற்படி ஏழை தமது மனுஷ்ய பதவிக்குத் தாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்பைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள் ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளாளிக்கும் விரோதம் முற்றிப்போய், உள் நாட்டுச் சண்டைகள் நேரிட்டும், அப்படி நேரிடாதபடி தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜனங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டாக வெளிநாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்க, கண்டங்களில் போர் பரவியும், பூமண்டலம் தூள் தூளாகிறது. கிழக்குத் தேசங்களிலும், யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்கும் இடங்களிலும் -  திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறையர்கூட கண் விழித்துத் தாங்கள் மனிதர் என்பதைத் தெரிந்துகொண்டு மற்ற ஜாதியாருக்குத்தாங்கள் சமானமென்று சபை கூட்டித் தீர்மானம் செய்கிறார்கள். மந்திரி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்குத் தேசங்களில் சமாதான எல்லைகளிலே கூட ஏழைகள் கண் திறந்து பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சுருங்கக் கூறுமிடத்து, சோற்றுக்காக மனிதர் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ளும் அநியாயம், நாய்களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யும் வழக்கமில்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம். ஆங்கில பாஷையில் (Lord Byron - லார்டு பைரோன்) என்ற மகா கவி ஒரு சமயத்தில் மனிதரை 'நாய்கள்' என்று கூறினார். பிறகு, உண்மையில் மனிதரைக் காட்டிலும் நாய் ஜாதி மேம்பட்ட தாகையால் மனிதரை நாய்களே என்று சொல்லியதிலிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாதை செய்வதாக ஏற்படுமாகையால், அதை மாற்றி 'ஏ மனிதரே' என்று கூப்பிட்டார்.
தீர்ப்பு

அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனிதருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்துநீக்ரோவருக்கும் சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித் தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு. சகோதர உணர்ச்சியைப்பற்றிக் கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும், வர்த்தமானப் பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில், எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அதுநடைக்கு வரவேண்டும். கண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது. இன்பமோ அன்புலகத்தைச் சேர்ந்த பதார்த்தம் ஆதலால் அன்பில்லாவிடின் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித்தேடி எங்கும் எப்பொழுதும் எதனினும் காணாமல் வருந்துகிற மானிடரே, கேளுங்கள்.
அன்புண்டானால் இன்பமுண்டு என்பதைப் புத்தபகவான் கண்டுபிடித்துச் சொன்னார். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்துகொள்ளாமல், அவர் காட்டிய பயனை அடையாமலே இருந்து வருகிறார்கள். அன்பு, கொள்கையில் இருந்தால் போதாது; செய்கையில் இருக்க வேண்டும். உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் தேச நன்மைக்காகக் கொடுத்துவிட்டு நீ ஏழையாகிவிடத் துணிவாயானால், நீ உன் தேசத்தின்மீது அன்புடையவனாகக் கருதப்படுவாய். உன்னுடைய குழந்தை உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதலாவது கையிடத்துணிவாயானால், நீ குழந்தையிடம் அன்புடையவனாகக் கருதப்படுவாய். பறையனுக்கும் போஜனம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால், நீ மனுஷ்யனிடம் அன்புடையவனாக விளங்குவாய்.
யேசு கிருஸ்துவின் வார்த்தை

யேசுவினிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து "ஸ்வாமி எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன?"  என்று கேட்டான்.
அதற்கு யேசு சொன்னார்:-  "ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட. விகபசாரம் பண்ணாதே, சொல்லாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, வஞ்சனை பண்ணாதே, தாய் தந்தையரைப் போற்று" என்று. வந்த மனிதன்: "நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் நடத்தி வருகிறேன்" என்றான். அப்போது யேசு கிருஸ்து:  "ஒரு குறை இன்னும் உன்னிடத்திலே இருக்கிறது. வீட்டுக்குப்போய் உன்னுடைய சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடு. உனக்கு மோக்ஷச் செல்வம் உண்டாகும். சிலுவையை (அதாவது வேள்வி விரதத்தைக்) கைக்கொண்டு என்னுடனே வா" என்றார்.
வந்த மனிதன் இந்த வார்த்தையைக் கேட்டு மிகவும் துயரத்துடன் திரும்பிப்போனான். அவன் பெரிய பணக்காரன். அவ்வளவையும் ஏழைகளிடம் கொடுத்து விட்டுச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு யேசுவின் பின்னே போவதில் அவன் மனத்திற்கு இன்பந்தோன்றவில்லை. அப்போது யேசு கிருஸ்து பக்கத்திலிருந்த தமது சீடரை நோக்கிச் " செல்வமுடையார் மோக்ஷ ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது" என்றார். சீடரெல்லாம் இதைக் கேட்டு வியப்பெய்தினர் ஸஹஜந்தானே?பணம் நிரம்ப வைத்திருப்போர் யார்?  ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, வியாபாரி, ஜமீன்தார், கோயிலதிகாரிகள், மடாதிகாரிகள் - இத்தனை பேருக்கும் மோக்ஷம் ஸந்தேஹமென்று சொன்னால் கேட்போருக்கு வியப்புண்டாவது ஸஹஜந்தானே? குருக்கள் கூட நரகத்துக்குத்தானா போகவேண்டும்? யேசுகிருஸ்து பின்னும் சொல்லுகிறார்:-"மக்களிலே செல்வமுடையோர் ஈசனுலகத்திற்குள்ளே புகுதல் மிகவும் அரிது. ஊசித்தொளையில் ஒட்டகை நுழைவதைக் காட்டிலும், செல்வன் மோக்ஷத்துக்குள் நுழைவது கடினம்" என்றார். அப்போது பேதுரு என்ற சீடன் சொன்னான்:  "நாங்கள் அனைத்தையும் விட்டு உம்முடன் வந்திருக்கிறோம்" என்று. அப்போது "என் பொருட்டாகவும் வேதத்தின் பொருட்டாகவும் எவனொருவன் வீட்டையேனும், உடன் பிறந்தாரையேனும், தாய் தந்தையரையேனும்  விட்டு வருகிறானோ, அவனுக்கு அவையனைத்தும் நூறு பங்கு பெருகிவரும். இஹத்தில் உடன்பிறந்தார், தாய்தந்தையர், பெண்டு பிள்ளைகள், பூமி-எல்லாம் திரும்பக் கிடைக்கும்; ஆனால் கொடுமை அனுபவிக்கவேண்டும். பரத்தில் நித்யவாழ்வு கிடைக்கும்; ஆனால் இப்போது முதற்பட்டிருப்போர் கடைப்படுவார்கள்" என்று யேசு சொன்னார்.
மேற்படி கதையை ஸ்ரீ காந்தி எடுத்துக் காட்டிச் சில தினங்களின் முன்பு பிரயாகையிலே ஒரு அர்த்த சாஸ்திர சபையின் முன்பு செய்த பிரசங்கத்தின் கருத்து என்னவென்றால்:-"ஐரோப்பியர் செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைத்துவிட்டார்கள். அப்படி நினைத்தபடியால், அவர்களுக்குப்பலவித அஸௌகர்யங்கள் நேரிட்டன. நாம் செல்வத்தைப் பெரிதாக வைக்கக் கூடாது' என்பதேயாம்.
ஸ்ரீ மான் காந்தி சொல்லுகிறார்:
"இது கொண்டே முற்காலத்திலும் பணந்தேடும் காரியங்களுக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினார்கள். லௌகீக ஆசையெல்லாம் நிறுத்திவிடவேண்டுமென்று நான் சொல்ல வில்லை. பொருள் தேடுவதையே நோக்கமாகக் கொண்ட கூட்டமொன்று நம்முள்ளே இருக்கலாம். ஆனால் அந்த நோக்கம் ஸர்வ உந்நதமன்று.
"மேற்குத் தேசத்தார் தங்களுடைய அபிவிருத்தியைப் பவுன், ஷில்லிங், பென்ஸ், கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்; அமெரிக்காவின் செல்வத்தை அளவெடையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"அங்கே எல்லாத் தேசத்தாருக்கும் அமெரிக்காவைக் கண்டால் பொறாமை. நமது தேசத்தில் சிலர் அமெரிக்காவைப்போல நாமும் செல்வந் தேடுவதே சரியென்றும், ஆனால் அந்தமாதிரி நாம் வேலைசெய்ய வேண்டாமென்றும் சொல்லுகிறார்கள். இந்த முயற்சி ஈடேறாது. ஒரு மனிதன் ஏக காலத்தில் உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று நிலைமையிலும் இருக்க முடியாது....யந்திரசாலை, ஆலை இவற்றால் என்ஜின் புகையேறிய நாட்டிலே தேவர்கள் இரார் நவீன யந்திர தந்திரங்களினாலும் அவற்றால் விளையும் செல்வத்தினாலும் இன்ப முண்டாகா."
இங்ஙனம் ஸ்ரீமான் காந்தி யேசுநாதரை மாத்திரமே யல்லாமல் முஹம்மது, நானக், கபீர், சைதன்யர், சங்கராசார்யார், தயாநந்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞானிகளை எல்லாம் காட்டி, இவ்வனைவரும் வறுமையை விரதமாகக் கொண்டு மேன்மை பெற்றதையும், உலகத்துக்கு நல்ல வழி காட்டியதையும் ஞாபகப் படுத்துகிறார். ஆதலால் வறுமை விரதமே உயர்வு என்கிறாரா? ஒரேஅடியாக அப்படியும் சொல்லவில்லை. "பொன்னைக் காட்டிலும் "அதிக உண்மை காட்டவேண்டும்; அதிகாரத்தைக் காட்டிலும் அதிக தீரம், சுயநலத்தைக் காட்டிலும் அதிக ஈகை இவை வேண்டும். நமது வீடுகளையும், அரண்மனைகளையும் கோவில்களையும் பணக்கோலம் குறைவாகவும் குணக்கோலம் அதிகமாகவும் விளங்கச்செய்வோமானால், நம்மிடத்தில் பாரமான சைன்யமில்லாமலே எதிர்த்து வரும் சேனைக் கூட்டங்களைத் தடுக்கலாம்" என்று ஸ்ரீமான் காந்தி சொல்லிவருவதில் எனக்குப் பெரும்பாலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக்கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்'என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன். தெய்வத்தின் 'அருள் பெற்றால் மற்றச் செல்வங்களெல்லாம் கூடி வரும்' என்று யேசுகிருஸ்து சொல்லியதைக் காந்தி எடுத்துக் காட்டுகிறார். அதுவும் வேதவாக்கியமாம். ஆனால் அவர் சொல்வது துறவு நெறி. அது சிலருக்குச் சில காலங்களில் பயன்படலாம். இக்காலத்தில் பலருக்கு அது தீமை உண்டாக்கும். தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை, ருக்வேதம் இது போலவே சொல்லுகிறது.No comments:

Post a Comment

You can give your comments here