பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 20, 2015

45. கலைகள் - மலையாளம் (1)


             மலையாளத்து ராகவ சாஸ்திரி என்பவர் நேற்று சாயங்காலம் மறுபடி என்னைப் பார்க்க வந்தார். நான் மௌன விரதம் பூண்டிருந்தேன். பிரமராய அய்யரும் 'பெண்-விடுதலை' வேதவல்லியம்மையும் ஏற்கனவே வந்திருந்தார்கள். மேனிலை முற்றத்தில் நல்ல தென்றல் காற்று வந்தது. அங்கு போய் உட்கார்ந்து கொண்டோம். அவர்கள் பேசினார்கள். நான் வாயைத் திறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

                 பிரமராய அய்யர் ராகவ சாஸ்திரியை நோக்கி "மலையாளத்தி லிருப்போர் இந்தப்பக்கத்தாரைக் காட்டிலும் நல்ல சிகப்பு நிறமாக இருக்கிறார்களே. காரணமென்ன?" என்று கேட்டார். 

"குளிர்ச்சியான பூமி" என்று வேதவல்லியம்மை  சொன்னாள்.  

கமுக மரத்தில் வெற்றிலைக் கொடிகள் படர்ந்திருக்குமென்றும், எங்கே பார்த்தாலும் ஏலக்காய் சிதறிக் கிடக்குமென்றும், பல வகைகளிலே மலையாளத்து நிலவளத்தைப் புகழ்ந்து சில சுலோகங்கள் சொல்லி அவற்றை ராகவ சாஸ்திரி கொச்சை இங்கிலீஷில் மொழி பெயர்த்துச் சொன்னார். வேதவல்லியம்மைக்கும், பிரமராயருக்கும் கொஞ்சம் ஸமஸ்கிருதம் தெரியும்; என்றாலும் செளகரியத்தின் பொருட்டு எல்லோரும் இங்கிலீஷ் பாஷையிலே ஸம்பாஷணை செய்யத் தொடங்கினார்கள்.

               "பூமி மிகவும் செழிப்பாகவும், அழகாகவும் இருக்கிறது. மலையாளத்தின் மனிதர் மாத்திரம் மூடர்" என்று வேதவல்லி சொன்னாள்.

               "மூடர் மலையாளத்தில் மாத்திரமா? இந்தியாவில் எங்கும்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள்" என்றார் ராகவ சாஸ்திரி.

               "இருந்தாலும் சராசரிக் கணக்குப் போட்டுப் பார்த்தால் மலையாளத்தில் மூடர் தொகை கொஞ்சம் அதிகம். விவேகானந்தர் மலையாளத்தைப் பற்றி எவ்வளவு கோபத்துடன் பேசுகிறார்?"

               "நூறு கஜமுள்ள ஒரு பாலத்தின் இந்த ஓரத்தை ஒரு தீயன் தொட்டால் அந்த ஓரத்திலுள்ள நம்பூரி பிராமணனுக்குத் தீண்டல் வந்து விடுகிறதாம்; மூடநம்பிக்கை அங்கே மிகவும் அதிகம்" என்று பிரமராய அய்யர் மறுபடி வற்புறுத்திச் சொன்னார்.

               அப்போது ராகவ சாஸ்திரி:‍‍ "அதெல்லாம் பண்டைக் காலத்தில். இப்போது மலையாளத்து நாயர்களும், தீயர்களும் பழைய வழக்கங்களை மாற்றுவதற்குப் பெரிய முயற்சிகள் செய்து வருகிறார்கள்."

              "ஆமாம், ஐயா! நான்கூடக் கேள்விப்பட்டேன். தீயர்களுக்குச் சிவாலயங்கள் கட்டிக் கொடுத்து அவர்களை மற்ற ஹிந்துக்களைப் போலவே செய்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்று   நாராயணஸ்வாமி என்ற ஸந்யாஸி ஒருவர் பாடு படுகிறதாகவும் படிப்பு, ஒற்றுய்மை, முதலிய நற்குணங்களில் தேர்ச்சி பெறும் பொருட்டு மலையாள முழுவதும் பல இடங்களில் தீயர் ஸமாஜங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். அந்த நாராயண ஸ்வாமியின் வரலாறு என்ன? கொஞ்சம் சொல்லும்" என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-

ஸ்ரீ நாராயணஸ்வாமி என்பவர் தீயர் ஜாதியில் பிறந்து பெரிய யோகியாய் மலையிலே தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது பல தீயர் அவரிடம் போய், 'ஸ்வாமி, தங்களை மலையாளத்து மஹாராஜாகூட மிகவும் கௌரவப் படுத்தும்படி அத்தனை மேன்மையான நிலைமையிலே இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை இதர ஜாதியார் மிகவும் தாழ்ந்த நிலைமையிலே வைத்திருக் கிறார்கள். கோயிலுக்குப் போனால் மற்ற ஜாதியார் எங்களை வெளிப்புறத்திலே நிறுத்துகிறார்கள். நேரே ஸ்வாமி தர்சனம் பண்ண வழியில்லை. எங்களுக்கு ஒரு புகல் சொல்லக்கூடாதா? என்று கேட்டார்கள். அப்போது நாராயணஸ்வாமி சொல்லுகிறார்:

''கேளீர், ஸகோதரர்களே! கோயில் கட்டுவதற்கு நம்பூரிப் பிராமணர் தயவு வேண்டியதில்லை. கல் வேலை தெரிந்த கல்தச்சர் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் கோயில் கட்டிக் கொடுப்பார்கள். ஆதலால், நீங்கள் இந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டாம். பணம் சேர்த்துக்கொண்டு வாருங்கள். எத்தனை கோயில் வேண்டுமானாலும் கட்டலாம். நான் ப்ரதிஷ்டை பண்ணிக்கொடுக்கிறேன்" என்றார். இதைக் கேட்டவுடனே தீயர்கள் தமக்குள்ளிருந்த பணக்காரரிடம் தொகை சேர்க்கத் தொடங்கினார்கள். காலக்கிரமத்தில் பெரிய தொகை சேர்ந்தது. இப்போது பல இடங்களில் மேற்படி நாராயண ஸ்வாமி ஆலயப்ரதிஷ்டை செய்திருக்கிறார். என்று சாஸ்திரி சொன்னார்.

"இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதியார் வருத்தப்படவில்லையா?" என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

"ஆம். அவர்களுக்குக் கோபம் தான். ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு,"பெயரென்ன?"  என்று கேட்டார்.

"என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்" என்று நாராயணஸ்வாமி சொன்னார்.

"தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?"  என்று நம்பூரி கேட்டார்.

''ஆம்'' என்று ஸ்வாமி சொன்னார். "பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?" என்று நம்பூரி கேட்டார்.

அதற்கு நாராயணஸ்வாமி:-  'பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப் படவேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை' என்றார்.

            இவ்வாறு ராகவ சாஸ்திரி மேற்படி நாராயணஸ்வாமியைக் குறித்துப் பல கதைகள் சொன்னார். பிறகு மலையாள பாஷையின் ஆதிகவியாகிய துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரைப் பற்றி கொஞ்சம் வார்த்தை நடந்தது. எழுத்தச்சன் என்றால் எழுத்தின் அச்சன் (தந்தை) என்று பொருள். அந்த எழுத்தச்சன் எத்தனாவது நூற்றாண்டிலிருந்தான் என்ற கால நிர்ணயம் ராகவ சாஸ்திரிக்குத் தெரியவில்லை. இவர் பிறந்த கிராமத்தின் பெயர் ஏதோ சொன்னார்; அது எனக்கு மறந்து விட்டது. இக் காலத்திலே கூட அந்தக் கிராமத்துக்குப் பக்கத்து நாட்டுப்புறங்களிலே எங்கேனும் ஓரிடத்தில் பிள்ளைக்கு அக்ஷராப்யாஸம் பண்ணிவைத்தால் அதற்கு அந்தக்கிராமத்திலிருந்து மண்ணெடுத்துக்"கொண்டு வந்து அக்ஷரம் படிக்கும் சிறுவனுக்குக் கொஞ்சம் கரைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்று மேற்படி சாஸ்திரியார் சொன்னார். துஞ்சத்து எழுத்தச்சன் செய்த ராமாயணத்திலிருந்தும் சில புராணத்திலிருந்தும், மேற்படி ராகவ சாஸ்திரி, சில சுலோகங்களை எடுத்துச்சொல்லிப் பொருள் விளக்கினார். அதன் நடை பழைய தமிழ்; கொச்சையில்லாத சுத்தமான சம்ஸ்கிருதச் சொற்களையும் தொடர்களையும் யதேஷ்டமாகச் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழ் காதுக்கு மிகவும் ஹிதமாகத் தானிருக்கிறது. துஞ்சத்து எழுத்தச்சன் வாணிய ஜாதியைச் சேர்ந்தவராம். இவர் தமிழ் நாட்டிலே போய் கல்வி பயின்றவராம். இவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷயமாகப் பக்திப் பாட்டுகள் பல பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பாட்டுக்களை மலையாள ஸ்திரீகள் பாடும் போது கேட்டால் மிகவும் இன்பமாக இருக்குமென்று ராகவ சாஸ்திரி சொன்னார். அவரே மாதிரி கொஞ்சம் பாடிக் காட்டினார்: 

"கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்கேணும்       
 விண்ணோர் புகழ்ந்த நாயிகே, மாயிகே, நீ"

என்று அந்தப் பாட்டின் முதற்கண்ணி சொன்னார். 
அதாவது:- 'கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்க வேணும், விண்ணோர் புகழும் நாயிகே' என்றவாறு.

''நாயிகே'' என்பது வடசொல். ''நாயகியே என்பது பொருள். ''மாயிகே'' என்றால் ஹே மாயாதேவி என்று அர்த்தம். இது பராசக்தியை நோக்கி கோபிகள் தமக்கு கண்ணனைத் தரும்படி வேண்டிய பாட்டு.

இங்ஙனம் அவர்கள் நெடுநேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள். பிரமராய அய்யர் கடைசியாக "ஹிந்து தேசமாகிய ரத்ன மலையில் மலையாளம் ஸாமான்ய ரத்னமன்று" என்றார்.

பிறகு வேதவல்லியம்மை அச்சிகளைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். ஏற்கனவே, ஐரோப்பிய ஸ்திரீகளுக்கு உள்ள விடுதலை (நாயர் ஸ்திரீகளாகிய) அச்சிகளுக்கு உண்டென்று வெளிப்பட்டது. வேதல்லியம்மைக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. பிரமாயர் பெருமூச்சு விட்டார். உடனே பிரமராய அய்யருக்கும் வேதவல்லிக்கும் சண்டை உண்டாயிற்று. இந்த வியாஸம் ஏற்கனவே நீண்டுபோய்விட்ட படியால், மேற்படி பிரமராயர் வேதவல்லி யுத்தக் கதையை ஸௌகரியப்பட்டால் மற்றொரு முறை எழுதுகிறேன்.


No comments: