பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 6, 2015

20. ஓம் சக்தி - (தொடர்ச்சி IV )

புனர்ஜன்மம் (2)

              பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் மர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது தேசத்துப் பொது நம்பிக்கை.  பாவம் செய்யும் ஒருவனை 'நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பாய்' என்றால் அவனுடைய மனம்பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திலேயே தாம் மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன்ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகிறான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து மாய்கிறான் என்று கூறத் தகும். மிருகங்களைப் போன்றமனிதர்களை நாம் பார்த்ததில்லையா?  நம்மை "நாம்கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களா           யிருந்திருக்கிறோம் என்பது தெரியும். வஞ்சனையாலும் சூத்திரத்தாலும் சமயத்திற் கேற்பப் பலவித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே?  ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலைகவிழ்ந்துஉட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. 

                  மறைந்திருந்து பிறருக்குத்தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப் பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கிவயிறு வளர்ப்பவன் நாய், கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர் திடீர் என்று கோபமடைகிறவன் வேட்டைநாய். காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய ''மேத்தா'' கட்சியைச் சேர்ந்தவன் வௌவால்.  அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல் முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.  பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும்,அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தமது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகின்றவன் வான்கோழி . கல்வி யறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர்சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கொண்டுஅஞ்சும்) ஆந்தை. 

              ஒவ்வொரு நிமிஷமும் "சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனேமனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவனாவான்.மிருக ஜன்மங்கனை நாம் ஒவ்வொருவரும் க்ஷணந்தோறும்நீக்க முயலவேண்டும்.


உலக வாழ்க்கையின் பயன்

உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது?எப்போதும் நீங்காத, எப்போதும் மாறாத, எப்போதும்குறையாத இன்பமெய்தி வாழ்தல்.

இவ் வகையான இன்பத்தை எய்தும் பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும் சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும,் அழுதலும், உழுதலும் - எல்லாத்தொழிலும் செய்கிறார்கள். மனிதர் மட்டுமேயன்றி மற்ற எல்லாஉயிர்களும் தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன.

ஆயினும், இதுவரை மேற்படி நித்யானந்த நிலையைஎந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலகத்தில் தவிர்க்கமுடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் கண்டதாகக் கூறப்படும்நான்கு உண்மைகளில், முதலாவது. இங்ஙனம் தீராத துன்பம்இருப்பதற்குக் காரணம் ஒவ்வொர் உயிரும் தன்னையேனும் பிறஉயிர்களையேனும் பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும்பயமும் அடைகின்றன வாதலேயாம்.

இங்ஙனம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிறஉயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மையும், பயமும், வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலந் தோட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்துவரும் ஓயாதபோராட்டத்தால ஏற்பட்ட பழக்கந்தவிர வேறொன்றுமில்லை.

எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும்ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப்பழக்கத்தை நீக்கவேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவைஅழுத்தாமல், வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும்ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டுவரமுடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.

"அஞ்ஞானத்தை வென்றால், தீராத இன்பநிலையெய்தி வாழலாம், என்று சாஸ்திரம்,   யுக்தி, அநுபவம் - மூன்றுபிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அந்த அஞ்ஞானப்பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோஹம்,லோபம், மதம். மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடங்கொடுக்கமாட்டேன் என்கிறது.நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால்.அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப்போய்விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவனும் மனத்தைக்கலங்க விடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்க விடாமல் பயிற்சி செய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும்.மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில், புத்திசும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்த போதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும்சக்தி மனத்துக்கு இருக்கிறது.

ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்ற கடிவாளத்தால் பிடித்துநிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சிஏற்படுத்திக்கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங் களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்.  தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள்.

இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங் கொடாதபடித் தன் மனத்தைக் கட்டக்கூடியதிறமையே பயன் தரக்கூடியது. மற்ற முயற்சிகளெல்லாம் வீண்.
நீதி, ஸமாதானம், ஸமத்துவம், அன்பு இவற்றாலேயேஇவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனாலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.

உழைப்பு
ராமகிருஷ்ணர் 'நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்லை, நானில்லை, நானில்லை' என்று ஜபம் பண்ணினார். அவர் சோம்பேறியா?  ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கினவர்களிலமுதல் வகுப்பைச் சேர்ந்தவர்.

'உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே சரணென்றிருப்பார் உள்ளத்திலே தாபமில்லாமல் உழைப்பவர்களஆனபடியால், அவர்களுடைய செய்கைக்கு வலிமை அதிகம்,வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழகு அதிகம், பயன் அதிகம்' என்பது சொல்லாமலே விளங்கும்.

உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையிலேசுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயன் என்ற இரண்டுநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல், ஸந்தோஷமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நிலத்தை உழுவது நல்லது. அழுதுகொண்டேஉழுதால் உழவுக்குக் கெடுதி; மனத்துக்கு ஸந்தோஷமில்லை; மடத்தன்மை தவிர வேறொன்றுமில்லை.

உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே நான் என்றபாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறுவென்று வேகமாகவும் பிழையில்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

தன்னை மறந்து, வித்தையின் இன்பத்திலே தன் புத்திமுழுவதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள். நாம் அழகோ அழகில்லையோ?  வகுப்பு சரியாயிருக்கிறதோ இல்லையோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ என்னவோ? பாதி ஆட்டத்தில் முன்னொரு முறை வயிற்று வலி வந்ததுபோல் வந்துவிடுமோ என்னவோ?  என்று தன் சித்தம் குழம்பிப் போயிருந்தால் ஆட்டம் நேரே வராது.

தன்னை மறந்து சகல உலகினையும்       
மன்னி நிதங்காக்கு மகாசக்தி - அன்னை       
அவளே துணையென் றமைவெய்தி 
நெஞ்சம் துவளா திருத்தல் சுகம்.

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி       
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை -  தஞ்சமென       
வையமெலாங் காக்கு மகா சக்தி நல்லருளை       
ஐயமறப் பற்றல் அறிவு.

வையகத்துக் கில்லை மனமே நினக்கு நலம்       
செய்யக் கருதி யிவை செப்புவேன் - பொய்யில்லை       
எல்லா மளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்       
சொல்லால் அழியும் துயர்.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்       
விண்ணிற் சுடர்கின்ற மீனை யெலாம் - பண்ணியதோர்       
சக்தியே நம்மைச் சமைத்தது காண் நூறாண்டு       
பக்தியுடன் வாழும்படிக்கு.

புராணங்கள்
வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டுமுன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன. 'நான்' 'எனது' என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையைஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால்ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து.

எல்லாம் ஈசன் செயல்; எல்லாம் அவனுடையரூபம். கம்ப ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்லாதாழ்வான் உபதேசித்தருளியடி, அவன்

 சாணிலு முளன்: மற்றாங்கோர்        
அணுவினைச் சத கூறிட்ட -   கோணிலும் உளன்; 
மாமேருக்        குன்றிலும் உளன்: இந்நின்ற    
தூணிலும் உளன்: யான் சொன்ன        
சொல்லிலும் உளன்.

அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. 'அவனன்றி ஓர் அணுவு மசையாது' ஆதலால், இந்த உலக முழுவதும்பரிபூரண அழகுடையது; பரிபூரண மங்களத் தன்மை யுடையது.அந்தக் கடவுள் ஸர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலேசொல்லியபடி, எல்லாப் பொறுப்புக்களையும் அவன் பாதங்களிலேசுமத்திவிட்டு, நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன்வாழும்படியாக நம் மனத்தைத் திருத்திக் கொள்ளக் கடவோம்என்ற துணிவே ஞானத் தீ என்று சொல்லப்படும். அது வேதாக்நி.

இங்ஙனம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவனுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும், தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப்படும். இந்தப் பக்திதான் முடிவான ஸாதனம். இதனால் ஈசன் நம்மிடத்தேகருணை பூண்டு நமக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பான்.இது அமிர்த பானம். இதுதான் நான்கு வேதங்களின் தீர்ப்பு.

இந்தக் கடவுளை முழுமையாக நோக்குமிடத்தே,வேதம் அவனுக்கு "தத்" (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்றபெயரும், "ஸத்" (உண்மைப் பொருள்) முதலிய பெயர்களும்கொடுக்கிறது.

படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல்,வலிமையுடைமை, தெளிவுடைமை, ஒளியுடைமை, எங்கும்,பரந்திருக்குந் தன்மை, பலபடத் தோன்றுந் தன்மை,ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும் இயல்புகளையும் பிரிவுபடுத்தி நோக்குமிடத்தே, வேதம் அந்தந்தக்குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி, அவன் ஒருவனுக்கேபிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு, ஸோமன், ஸூர்யன்,வருணன், அக்நி, பகவான் முதலிய  பலவேறு நாமங்களை வழங்குகிறது.

இந்த விஷயத்தை ரிக் வேதம் "ஏகம் ஸத்" என்றதொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.

எனவே, வேதத்தின் வழி நூல்களாகியபுராணங்களில், இக் கடவுளை உணர்வதற்கு ஸாதனாங்களாகிய தவம், பக்தி, யோகம் முதலியனவற்றை அனுஷ்டிக்கும் நெறிகளும், இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றியமையாதனவாகிய திடசித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப்  பழக்கப்படுத்திக் கொள்ளும் நெறிகளும் இந்தக் குணங்கள்ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டூரம் முதலிய அசுர குணங்களை அறுக்கும் நெறிகளும் பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும் உவமைக் கதைகளாலும் உபதேசங்களாலும் விஸ்தாரமாகக்காட்டப்பட்டிருக்கின்றன.

உபாஸனை புரிவோரின் இயல்புகளுக்கும் வேண்டுதல்களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின் முக்கியமான மூர்த்தி பேதங்கள் அதாவது குணபேதங்களைச் சிறப்பாகக் காட்டவேண்டி, சில இடங்களில்அக்கினியையும், சில இடங்களில் இந்திரனையும், இங்ஙனமேமற்ற மூர்த்திகளையும் முதன்மையாகக் கூறும் வேத வழியைஅனுசரித்து, புராணங்களும் சில அக்கினியை மேம்படுத்தியும்சில விஷ்ணுவை மேம்படுத்தியும் சில சிவனை மேம்படுத்தியும்காட்டுகின்றன.

ஆயினும், கால நடையிலே இப்புராணங்களைமாத்திரமே ஆதாரமாகக் கொண்ட மதபேதங்கள் நம்முடையதேசத்தில் ஏற்பட்டுவிட்டன. வேதக் கல்வியும் வேத ஞானமும்குன்றிப்போயின. வேத ஆராய்ச்சி ஒரு வகுப்பினருக்கே விசேஷ உரிமையாகக் கொண்டாடப்பட்டது. இதனால் பொது ஜனங்களுக்குள்ளே வேத ஆராய்ச்சி சூன்யமாய் விட்டது. புராணங்களில் வேறு வேறு மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சொல்லப்பட்டிருப்பதை யொட்டி, மத பேதங்கள் கட்சி பேதங்களாகி முடிந்தன. இதனால் வைதிக மதமாகிய ஹிந்துமதம்பல பிரிவுகளுடையதாய் விட்டது. ஜனத்தொகை, அவ்வக்காலத்துஅரசர்களின் கொள்கை-இவற்றிற்குத் தக்கபடி ஹிந்து மத பேதங்களுக்கு மேன்மையும் தாழ்வும் ஏற்படலாயின. பெயரளவில் எல்லா மதங்களும் வேதம் ஒன்றையே பிரமாணமாகப் பேசியபோதிலும், நடையிலே ஹிந்து மதஸ்தர்களதத்தம் புராணங்களையே தலைமையாகக் கொண்டு அவற்றின் கருத்துக்குத் தக்கபடி வேதத்தை மாற்றிப் பொருள் செய்யலாயினர். தம் தம் மூர்த்திகளை உயர்வாகக் கூறுவதின்உண்மைப் பொருளை மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் பெரியஅஞ்ஞானத்தில் ஆழ்ந்து வேதத்திற் காட்டிய இந்த "மூர்த்திகளை இழிவுபடுத்திப் பேசலாயினர். இந்திரன், அக்கினி, வாயு வருணன்என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்தமூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். காலக் கிரமத்தில் வைஷ்ணவம், சைவம், சாக்தம் முதலிய சில மதங்களே நாட்டில் மிஞ்சி நின்றன. எனவே, வேதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன், சூரியன்,இந்திரன் முதலியவர்களைப் பிற்காலத்துப் புராணங்கள் தூஷணை செய்யத் தொடங்கிவிட்டன. முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். பின்னிட்டுச் சைவ வைஷ்ணவ புராணங்களில் அவ்வக் காலத்து ராஜாக்கள் ஜனங்களின்கோட்பாடுகளை உயர்த்தும் பொருட்டாக மேற்படி கட்சி பேதங்கள் பஹிரங்க விரோதங்களாக முடிந்து, சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும், வைஷ்ணவ புராணங்களில் சிவ தூஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப்பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப்பட்டன. 

எனவே, இந்நூல்கள் பெரும்பாலும் நம்முடைய  தெய்வத் தன்மையையும் வைதிக மாண்பையும் இழந்து போய், வெட்கமற்ற அவைதிக தூஷணைகள் நிரம்பிக் கக்ஷிச் சண்டைகளை மிகுதியாகச்சேர்த்து ஜனங்களுக்குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயினர். இங்ஙனம் பரம சத்தியமாகிய ஹிந்து மதம்சிதைவு பெற்றுப் போயிற்று. ஹிந்து ஜாதியார் வீழ்ச்சியடைந்தனர். வேதம் ஒளி மறைந்து, பிற்காலத்தில்வேதத்துக்கு நாம மாத்திரையாக கொடுக்கப்பட்ட உயர்வைக்கூட இந்தக் கக்ஷிக்காரர் சிலர் மறுக்கலாயினர். திருஷ்டாந்தமாகப் பிற்காலத்துச் சைவர்களிலே சிலர் வேதங்களைக் காட்டிலும் சிவாகமங்களே மேலென்று சொல்லத்தலைப்பட்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட புராணச் சண்டைகளுக்கு வேதமே, காரணமாக இருந்ததென்று தவறாகக்கருதி வைதிக ஞானிகளே சிலர் வேதத்தைக் கர்ம காண்டமென்றும் உபநிஷத்தை ஞானகாண்டமென்றும்சொல்லலாயினர்.

வஸிஷ்டர் முதலியவர்களைக் 'கர்மி'களென்றும்பிற்காலத்துப் பண்டாரங்களை 'ஞானி' களென்றும் ஜனங்கள்மதிக்கலாயினர். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒருமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிகஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று, பூமண்டலத்தின் ஆசார்யபதவிகொண்டு வாழவேண்டுமாயின், அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:-

(1) வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்-இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்கவேண்டும்.
(2) புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றைவிளக்கும் அம்சங்களையும், உலகநீதி, பூர்வசரித்திரம் இவற்றைவிளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ரமாணமாகக் கொண்டு,இதர தேவதூஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமில்லாதனவென்று கழித்துவிட வேண்டும்.
(3) வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும்ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும்புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான ப்ரசாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே,பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!






No comments: