பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 15, 2020

யானையாய் வந்த அசுரனை வதம் செய்த கீர்த்திவாசன்.

             அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று வழுவூர். இது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில் சுமார் ஐந்து கி.மீ. தூரத்திலும், சாலையிலிருந்து மேற்கில் ஒரு கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. மிக பழமையான ஆலயம். ஆலயத்தின் முன்புறம் ஒரு திருக்குளம். இந்த ஊரின் சிறப்பு இங்கு கோயில் கொண்டிருப்பவர் கஜசம்ஹாரமூர்த்தி, கீர்த்திவாசன் என்ற பெயருடைய சிவபெருமான். அம்பாள் பெயர் இளங்கிளைநாயகி. அட்ட வீரட்டானம் என்பதிலிருந்தே, சிவன் தீமைகளைத் தீயவர்களைச் சம்ஹாரம் செய்த ஊர் என்பது தெரிகிறது. அதன் படி இங்கு அவர் கஜமுகாசுரனை வதம் செய்ததால் இது ஒரு வீரட்டானத் தலம்.

            அட்டவீரட்டானத் தலங்களாவன:--

1.    திருக்கண்டியூர் – இங்கு சிவபெருமான் பிரம்மனுடைய தலையைக் கொய்து அவர் செறுக்கை அழித்த தலம்.

2.    திருக்கோவலூர் – அந்தகாசுரனை வதம் செய்த இடம்.

3.    திருவதிகை – திரிபுரத்தை எரித்த இடம்.

4.    திருப்பறியலூர் – தட்சன் தலை யைத் தடிந்த தலம்.

5.    திருவிற்குடி –  சலந்தராசுரனை வதைத்தத் தலம்.

6.    திருவழுவூர் – கஜமுகாசுரனைக் கொன்று அவன் தோலை மேலே போர்த்திக் கொண்ட தலம்.

7.    திருக்குறுக்கை – காமனைக் கடிந்தத் தலம்

8.    திருக்கடவூர் – மார்க்கண்டேயன் உயிரைக் காக்கக் காலனை உதைத்த இடம்.

 

இந்த வழுவூர் ஒருகாலத்தில் தாருக வனம் எனப் பெயர் பெற்றிருந்தது.

தாருக வனத்தில் தவமிருந்த முனிவர்கள், தங்கள் தவ வலிமையால் உலகத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவுமான தகுதிகளைப் பெற்றிருந்த காரணத்தால், அவர்களுக்குத் தங்கள் தவ வலிமையின் மேல் இருந்த நம்பிக்கையால், தாங்களே இறைவனுக்கும் மேலானவர்கள் என்ற அகந்தை உருவாகிவிட்டது. அவர்களுடைய அகந்தையை அழிக்க சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் தீர்மானித்தார்கள்.

            சிவபெருமான் ஒரு நாள் பிக்ஷாடனராக, தங்க நிற மேனியுடன், மேலே சடாமுடி காற்றில் அசைய, கையில் கபாலத்தை பிக்ஷைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு தன் அழகிய மேனி தெரியும் வண்ணம் வந்து கொண்டிருந்தார். வேள்வி புரிந்து கொண்டிருந்த ரிஷிகள் தங்கள் பத்தினி மார்களை அழைத்தபோது அவர்கள் அங்கு இல்லாமல் போகவே, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வெளியில் வந்து பார்த்தால், அங்கு காலை உதயசூரியனைப் போல தங்க நிறம் ஜ்வலிக்க, பொன்னிற மேனி தகதகக்க, ஒரு பிட்சாடனன் நிர்வாணமாகத் தன் அழகிய உடலமைப்பு வெளியில் தெரிய கையில் ஓட்டோடு சென்று கொண்டிருப்பதையும், அவருடைய அழகில் மயங்கி ரிஷி பத்தினிகள் அவர் பின்னால் வைத்த கண் வாங்காமல் கூட்டமாகச் சென்று கொண்டிருப்பதையும், அவர்கள் மனம் அந்த பிக்ஷாடனர் மீது படிந்து விட்ட படியால் அவர்கள் தங்கள் அழைப்பைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்று கோபம் பொங்கி எழ ஆசிரமம் திரும்பினர்.

            அப்போது மகாவிஷ்ணு ஒரு மோகினி வடிவம் எடுத்து, மலர்க்கொடி போன்ற அவள் உடலில் இடை உண்டோ இல்லையோ எனும்படி ஆடி, அசைந்து மலர்க்கொடியொன்று வீதியில் வருவதைப் போல வருவதை அந்த தாருக வனத்து முனிவர்கள் கண்டார்கள். அவ்வளவுதான், அத்தனை முனிவர்களின் கவனமும் அந்த பேரழகியின் பால் ஈர்க்கப்பட்டு, இரும்பைச் சுண்டி யிழுக்கும் காந்தம் போல அந்த பெண்மணியின் ஈர்ப்பில் அவளைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.

            அந்த மோஹினி எல்லா ரிஷிகளையும் தங்கள் வளர்ப்புப் பிராணிகளைப் போல அழைத்துச் சென்று உட்காரவைத்து அவர்களுக்கு உணவளித்து உபசரிக்கிறாள்.

            இறைவனிலும் தாங்களே வலியவர்கள் என்ற அகந்தை கொண்ட தாருக வனத்து முனிவர்களின் அகந்தை ஒரு மோகினியின் அழகு கொள்ளை கொண்டு போயிற்று. அவளை, அந்த மோகினியைத் தவிர அவர்கள் சிந்தனை வேறு எதிலும் செல்லவில்லை. தாங்கள் அழிக்க நினைத்த சிவன் மனதில் தோன்றவில்லை, வாசலில் போன ஒரு பிட்சாடனரின் பின்னால் ரிஷி பத்தினிகள் வரிசைகட்டிப் போனது நினைவில் இல்லை, தங்கள் எதிரில் தங்கத்தால் உருக்குச் செய்த பாவை போல இருக்கும் இந்த மோகினியின் அழகே பிரதானமாக இருந்தது.

            அவள் சென்று மறைந்ததும் சுயநிலை எய்திய ரிஷிகளுக்கு அப்போதுதான் அந்த பிட்சாடனர் பின்னால் சென்ற தங்கள் பத்தினிகளின் நினைவு வந்து ஓடிப்போய் அவர்களைத் தங்கள் பக்கம் அழைத்துக் கொண்டு அந்த பிட்சாடனருக்கு ஏதேனும் தீங்கு செய்ய எண்ணி யாகம் வளர்த்தனர். அந்த யாக குண்டத்திலிருந்து சிவனை அழிக்கப் பல ஆயுதங்களை வேண்டிப் பெற்றனர். முதலில் யாக குண்டத்திலிருந்து அக்னி வெளிவந்தது. சிவனை அழிக்க அவர்கள் அந்த அக்னியை ஏவி விட்டனர். அவரோ அந்த அக்னியை லாவகமாகத் தன் ஒரு கையில் எடுத்து வைத்துக் கொண்டார். தொடர்ந்து ஒரு கொடும் புலியை யாக குண்டத்தில் வரவழைத்து சிவனைக் கொல்ல அனுப்பி வைத்தனர். அந்த புலியைத் தாக்கி அதன் தோலை உரித்துத் தன் இடையில் உடுத்திக் கொண்டார் இறைவன். அடுத்து ஒரு மான் தோன்றியது அதை ஏவிவிட்டதும், அது சிவபெருமான் அருகில் சென்று மிக அந்நியோன்னியமாக அவர் அருகில் நின்று கொண்டது. பின்னர் ஒரு மழுவை வரவழைத்து அதை ஏவிவிட, அந்த மழுவோ, சிவனின் கரங்களில் போய் அமர்ந்து கொண்டது. பயங்கரமான விஷப் பாம்பு ஒன்றை வரவழைத்து அதை ஏவிவிட, அதை சிவன் பிடித்துத் தன் இடையில் கட்டிக் கொண்டு விட்டார். இவைகளால் கொல்ல முடியாத சிவனைக் கொல்ல முயலகன் எனும் உலகின் தீமைகள் எல்லாம் உள்ளடக்கிய ஒரு உருவத்தை அனுப்ப, இறைவன் அந்த முயலகனைத் தன் காலடியில் வைத்து ஒரு காலால் அழுத்திக் கொண்டு விட்டார்.

            இப்படி அவர்கள் ஏவிய அனைத்தும் சிவனைக் கொல்லாதது கண்டு இறுதி முயற்சியாக ஒரு யானையை வரவழைத்தனர். யானையாக வந்தவன் ஓர் அசுரன். அவன் மிகுந்த கோபத்துடன் சென்று சிவனைத் தாக்க முயல, சிவன் அயர்ந்திருந்த நேரத்தில் அந்த கஜமுகாசுரன் இறைவனைத் தன் துதிக்கையால் எடுத்து வாயிலிட்டு விழுங்கிவிட்டான்.

            அவ்வளவுதான், அக்னிப் பிழம்பான பரமேஸ்வரனை விழுங்கிய யானை என்ன பாடு படும், அத்தனை பாடுகளையும் அது பட்டுவிட்டது. வயிற்றில் எரிச்சல், எரிமலை போல பொங்கும் எரிச்சல் தாங்க முடியாமல் கஜமுகாசுரன் ஓலமிட்டான். எதைச் செய்தால் தன் வயிற்றின் எரிச்சல் போகும் என்று அங்கிருந்த திருக்குளத்தில் வீழ்ந்து மூழ்கினான். நீரின் குளிர்ச்சி அவனைக் குளிர்விப்பதற்கு பதிலாக அவன் எரிச்சலை அதிகமாக்க யானை பிளிறியது.

 கஜமுகாசுரன் சிவனை விழுங்கிய அடுத்த கணம் ஒளியிழந்த உலகம் இருள் சூழ்ந்து விட்டது. பார்வதி தேவி தன் மக்கள் விநாயகன், குழந்தை இளம் முருகன் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தவர், உலகம் இப்படி இருண்டு போக என்ன காரணம். தன் கணவருக்கு என்னவாயிற்று என்று அதிர்ந்து திடுக்கிட்டு குழந்தை முருகனைத் தன் இடுப்பில் சுமந்து கொண்டு, ஒரு கை விரலால் விநாயகன் கைகளைப் பிடித்துக் கொள்ளச் செல்லிவிட்டு வேகமாகக் கணவனைத் தேடி வருகிறாள். எங்கும் ஒரே இருட்டு. அப்போதுதான் கஜமுகாசுரன் திருக்குளத்தில் விழுந்து தன் உடல் எரிச்சலைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். முடியவில்லை. அவன் பிளிரல் மூவேழு உலகங்களுக்கும் கேட்கிறது. தேவர்கள் வந்து என்ன நேர்ந்தது என்று பார்க்கிறார்கள். உலகமோ இருண்டு கிடக்கிறது.

அப்போது யானையின் வயிற்றில் இருந்த சிவபெருமான் அந்த கஜமுகாசுரனின் தலைமீது காலையூன்றி அவன் முதுகைக் கிழித்து கொண்டு வெளிவருகிறார். அவர் யானையின் முதுகு வழியாக கிழித்துக் கொண்டு வரும் அதே நேரத்தில் உலகமெங்கும் வெளிச்சம் பரவுகிறது. அந்த வெளிச்சத்தில் பார்வதி தேவியின் இடுப்பில் இருக்கும் முருகப் பெருமான் குழந்தை வடிவில், முதலில் தன் தந்தை யானையைக் கிழித்துக் கொண்டு வருவதைப் பார்த்து விட்டு “அதோ அப்பா!” என்கிறான். உடனே பார்வதி கணபதியையும் அழைத்துக் கொண்டு விரந்தோடி குளத்திலிருந்து எழும் தன் கணவரைப் பார்க்கிறார்.   (இந்தக் காட்சியை விளக்கும் ஐம்பொன் சிலையொன்று அந்தக் காலத்தில் வழுவூரில் இருந்தது பார்த்திருக்கிறேன். இடுப்பில் முருகன் ஒரு விரல் நீட்டி அதோ அப்பா என்பது போல, மறு கையில் அம்மையின் ஒரு விரலைப் பிடித்துக் கொண்டு நடந்து வரும் கணபதி. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது போய் கேட்டால், அப்படியொரு சிலை அங்கு இல்லை என்கிறார்கள். அது என்ன ஆனது? இறைவனுக்கே வெளிச்சம். அல்லது பொன்.மாணிக்கவேல் வெளிச்சம் காட்டலாம்).

மகிழ்ச்சியுடன் பார்வதியும் குழந்தைகளும் ஓடிச் சென்று சிவனைக் கட்டிக் கொள்கிறார்கள். தங்கள் கர்வம் அழிந்த தாருக வனத்து ரிஷிகள் இறைவன் பாதங்களில் விழுந்து பணிந்து எழுகிறார்கள். ரிஷி பத்தினிகளும் தங்கள் தவற்றை உணர்ந்து ரிஷிகளை வணங்கி அவருடன் சேர்கிறார்கள்.

இவற்றுக் கிடையே சிவபெருமானும், மோகினியாக வந்த விஷ்ணுவும் எங்கோ சென்று விடுகிறார்கள். அழகனும், அழகியுமாக இணைந்த இவர்களுக்குத்தான் ஐயப்பன் பிறந்ததாக வரலாறு கூறுகிறது.

எழுத்து ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், (இயக்குனர், பாரதி இயக்கம், தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி, திருவையாறு),  28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885

Monday, September 14, 2020

பாரதி புதுவை வந்து சேர்ந்த வரலாறு.

 

                                                   ஸ்ரீஸ்ரீ ஆச்சார்யா.

            பாரதியார் வாழ்வில் சென்னையிலிருந்து அவர் புதுவை சென்றது மிக முக்கியமான சம்பவமாகும். புதுவையில் இருந்ததன் காரணமாகவே, அரவிந்தர்,வ.வெ.சு. ஐயர், பாரதி என்ற தேசபக்த மும்மூர்த்திகள் அங்கே சந்தித்து ஒன்றாக வாழும் சந்தர்ப்பமும், பாக்கியமும் ஏற்பட்டன.

            புதுவையில் பாரதியாருக்கு உற்ற துணைவர்களாக இருந்தவர்களில், சென்னையிலிருந்து பாரதியாருடன் அங்கு சென்று குடியேறிய மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் முக்கியமானவர் ஆவார். இவர் தூத்துக்குடி சுதேசிக் கப்பல் முயற்சியில் லட்சக் கணக்கில் நஷ்டமடைந்த தேசபக்தர்கள் குடும்பத்தில் உதித்தவர், திருவல்லிக்கேணியில், பேயாழ்வார் கோயில் தெருவில் 3ஆம் எண்ணுள்ள வீட்டில் வசித்து வந்தார்.

            அவர் தம் கட்டுரையில், பாரதி புதுவை வந்த வரலாற்றை விவரிக்கிறார்:--

            சென்னையில் 1908ஆம் வருடத்தில் இந்தியாபத்திரிகையின் மேல் ராஜத்துவேஷ வழக்கு ஆரம்பித்த போது, அதன் முக்கிய எழுத்தாளரான பாரதியார் பேரிலும் வாரண்ட்பிறப்பித்திருந்தது. அவருக்கு சிறைவாசங்களின் கஷ்டம் தெரியும். நமது நண்பர் சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய சிவா முதலானோர்களை சிறையில் கண்டு சம்பாஷித்திருக்கிறார். அங்குள்ள கஷ்டங்களுக்கு அவர் பயப்படவில்லை. அவரது வாழ்க்கையே எப்போதும் எளிய வாழ்க்கை, கிடைத்தது உண்டு, கிடைத்த இடத்தில் படுப்பார். வேண்டியிருந்தால் பட்டினியாகவும்கூட நாட்களைத் தள்ளுவார். ஆனால் கட்டுக்கு அடங்கி இருப்பது என்பது அவருடைய இயற்கைக்கு அடியோடு விரோதமானது.

            தம் குடும்பத்தாரையோ, நண்பர்களையோ பிரிந்து தனித்திருப்பதற்கும் அவர் அஞ்சவில்லை. ஆனால் சிறையில் தம் இஷ்டம்போல் உலாவவும், உண்ணவும், படுக்கவும், எழுந்திருக்கவும் விடமாட்டார்களே, அதற்கென்ன செய்வது? தமக்கிஷ்ட மில்லாத ஒரு வேலையைக் கொடுத்து அதைக் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பார்களே, அதற்குத் தாம் எப்படி உட்படுவது? இந்தப் பயம்தான் அவருக்கிருந்தது.

            இப்படிக் கட்டுப்பட்டுப் பிழைப்பதைவிட எங்காவது ஓடிப்போய் பட்டினி கிடந்தாவது வாழலாம் எனத் தீர்மானித்தார் அவர். அச்சமயத்தில் சிலர், புதுச்சேரி அந்நிய ராஜாங்கமாகையால், அங்கு சென்று பகிரங்கமாக ஒரு பயமுமின்றி அவர் வசிக்கலாம் என்றர்கள். அதற்கு இசைந்து, சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்பவருக்கு (இவர் குவளை கிருஷ்ணமாச்சாரியாருக்கு ஷட்டகர் முறை) தம் நண்பர் ஒருவர் கொடுத்த கடிதத்தோடு அங்கு சென்றார். புதுவை நகர், அதுவரை கடன்பட்டுத் திண்டாடு வோருக்குப் புகலிடம் என்ற பெயர்தான் பெற்றிருந்தது. பாரதியார் அங்கு சென்றதிலிருந்து அதனுடைய பெருமை அதிகரித்தது. அதன் அந்நிய ஆட்சியில் சரண்புகும் அரசியல் வாதிகளை பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஒன்றும் செய்ய இயலாது என்னும் விஷயம், பாரதியார் அங்கு சென்று தங்கினதிலிருந்துதான் இந்தியா பூராவும் தெரியவந்தது. என்ன புரட்சி எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், அகிம்சை வழியில் நடக்கும் எந்த அரசியல் வாதியும் அங்கு நிர்பயமாக வசிக்கலாம் என்பது அவரால் உறுதி பெற்றது. இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஸ்ரீ அரவிந்தர் அங்கு வந்து தங்கியதற்கும் இதுவே காரணம் எனலாம்.

            பாரதியார் புதுவை சென்ற செய்தி இரண்டு நாட்களுக்கெல்லாம் சென்னை போலீசுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்த விரும்பவில்லை. கோர்ட்டில் வழக்கு நடக்கையில் அதைக் கூறுவது அவசியமானபோது கூட, வெளிப்படையாகச் சொல்லாது, அதை மழுப்பிவிட்டார்கள். அரசியல் வாதிகளுக்கு இப்படி ஒரு புகலிடம் இருப்பது நாடெங்கும் தெரியாமலிருப்பது மேலென அவர்கள் எண்ணினார்களோ என்னவோ! ஆனால், பாரதியாரின் பெயர் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தபடியால் அவருடைய புதுவை வாசம் வெகு சீக்கிரத்தில் யாவருக்கும் தெரிந்து விட்டது.

            பாரதியார் மனதில் ஒரு எண்ணம் புகுந்தால் அது இடைவிடாது வேலை செய்துகொண்டே இருக்கும். போலீஸ்காரானிடம் சிக்காது ஊர்போய்ச் சேரவேண்டுமெனக் கருதியதனால் ரயிலில் தம்மருகில் எவன் வந்தாலும் அவன் போலீஸ்காரனாயிருப்பானோ என்ற ஐயம்தான் முதலில் அவருக்குப் பிறக்குமாம். சற்று நேரம் அவனோடு பேசியும் அவன் நடத்தையைக் கவனித்தும் பார்த்த பிறகுதான் சந்தேகம் நிவர்த்தியாகுமாம்.

            நேரில் சென்னையில் ரயில் ஏறாமல் சைதாப்பேட்டை சென்று அங்கிருந்துதான் புதுவைக்குப் புறப்பட்டார் பாரதி. இரவெல்லாம் கண்விழித்து அயர்ந்து, விடியுமுன் புதுவை போய்ச் சேர்ந்தார். அங்கு ஸ்டேஷனில் பொழுது நன்றாக விடியும் வரை இருந்துவிட்டு காலையில் குப்புசாமி ஐயங்கார் வீடு போய்ச்சேர்ந்தார். அங்கு அவரால் வரவேற்கப்பட்டு போஜனத்திற்காகக் கூடக் கவலைப்படாமல், தன் அலுப்புதீர அன்று பகல் பொழுதெல்லாம் படுத்துறங்கினார். இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன.

            இதற்குள் சென்னை போலீசுக்கு செய்தி எட்டிவிட்டது. அதைப் பெரிதாகப் பாராட்டாதவர்கள் போல வெளிக்கு அவர்கள் காட்டிக் கொண்டாலும், தக்க வேவுகாரர்களை அங்கு அனுப்பிவிட்டார்கள். இதற்கு முன் அரசியல் விஷயமாக அங்கு பலமுறை வேவுகாரர்கள் அனுப்பப்பட்டதும் உண்டு. பர்மிய அரசராகிய தீபா என்பவரைச் சிறைப்படுத்தி அந்நாட்டைக் கைவசப் படுத்திக் கொண்டபோது, அதன் அரசுரிமை கொண்ட மிங்கூன் என்னும் ஓர் அரசிளங்குமரர் கல்கத்தாவிலிருந்து சந்தனநகர் (சந்திரநாகூர்) தப்பியோடி அங்கிருந்து புதுவை வந்தார். அவரை வேவு பார்க்க ஒருசில போலீஸ் ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வரசிளங்குமாரர் இந்தோசைனா தலைநகராகிய சைகோனுக்குத் தப்பியோடியதும், அவ்வேவுகாரர்கள் எடுபட்டுப் போனார்கள். இம்முறை பாரதியாருக்காக அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் படை அன்றுமுதல் அங்கு நன்றாக வேரூன்ற ஆரம்பித்துவிட்டது. அத்தினத்தை அப்படையின் அங்குரார்ப்பண தினமாகக் கொள்ளலாம். அன்று சென்னை வேவு போலீசுக்கும் புதுவைக்கும் ஏற்பட்ட நெருங்கிய சம்பந்தம் வெள்ளை ஆட்சி நீங்கும் வரை நீடித்தது. இடையில் லட்சக்கணக்கான பெரும் பணச் செலவோடு மகத்தான ஒரு வேவு படை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

            ஒரு புதிய இடத்தில் சில வேவுகாரர்களை நியமித்துவிட்டால், அவர்கள் மேலதிகாரிகளுக்கு ஏதாவது வேலை செய்ததாகக் காட்ட வேண்டியிருக்கிறது. அதனால் அவர்கள் சும்மா இருப்பதில்லை. சரியான வழிகளில் தேடிப்பார்த்து ஒரு குற்றமும் இல்லை என்று ஏற்பட்டாலும், சில குறுக்கு வழிகளில் சென்று குற்றங்கள் இருப்பதாக எண்ணி அவற்றைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். பாரதியார் அங்கு ஆங்கில சர்க்காருக்கு விரோதமாக ஏதாவது சதி செய்கிறாரா என்பதைக் கவனிப்பது அவர்கள் கடமை. அதைச் செய்வதைவிட்டு, அங்கு அவர், நிம்மதியாக வாழாமலிருப்பதற்கு வேண்டிய இடைஞ்சல்களை உண்டுபண்ண முயன்றார்கள். அவருக்கு இடம் கொடுத்த ஐயங்காரை அழைத்து பயமுறுத்தும்படி பிரெஞ்சு போலீசைத் தூண்டினார்கள்.

            குப்புசாமி ஐயங்கார் சென்னை அரசியல் விஷயங்களில் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவரன்று. அவர் ஒரு சிறு வியாபாரி. ரஸவாதத்தில் நம்பிக்கை வைத்து அதில் அதிக பணம் செலவழித்து ஏழையானவர். சங்கீதத்தில் ஞானமுண்டு. நன்றாகப் பாடுவார். வைதீக ஆசாரங்களில் பற்றுடையவர். ஆங்கிலத்திலும், ப்ரெஞ்சிலும் சிறிது பயிற்சியுண்டு. சற்று பயந்த பேர்வழி. போலீஸ் என்றால் கிட்டக்கூட போகமாட்டார். இப்பேர்பட்டவரை போலீஸ் தலைவன் அழைத்து விசாரித்தால் பயந்து போகாமல் வேறென்ன செய்வார்?

            பாரதியை உமக்கு முன்னே தெரியுமா? அவரை நீர் ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்?என்று கேப்டன் கேட்டதற்கு, தமக்கு அவரைத் தெரியாதென்றும் தமது நண்பரொருவர் தம்மிடம் அனுப்பியதால் அவருக்கு இடம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

            பாரதி இங்கிலீஷ் சர்க்காருக்கு விரோதமாகப் பிரசாரம் செய்துவிட்டு இங்கு வந்து தங்கியிருக்கிறார், நீர் அவரை வீட்டில் வைத்திருக்கலாகாது. அதனால் உமக்குக் கஷ்டம் நேரக்கூடும். அவரை வெளியே அனுப்பிவிடும்என்று அரைவாசி புத்திமதியாகவும், அரைவாசி மிரட்டலாகவும் காப்டன் சொன்னார்.

            ஐயங்காருக்கு தர்மசங்கடமாய் விட்டது. வீட்டுக்கு வந்தவரை எப்படி வெளியே போகச் சொல்வது? தம்மிடம் அவரை அனுப்பிய நண்பர் என்ன நினைப்பார்? என்று ஆலோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அங்கு பாரதியாரிடம், ஐயா, போலீஸ்காரனோ என்னை பயமுறுத்துகிறான். எனக்கு உங்கள் விஷயம் ஒன்றும் தெரியாது. இன்னது செய்வதென்று எனக்குப் புரியவில்லை. ஆகையால் நீங்கள் வேறிடம் பார்த்துக் கொள்வது நலம்என்று ஐயங்கார் சொல்ல ஆரம்பித்தார்.

            விஷயங்களில் ஏதாவது கோணல் ஏற்பட்டால் பாரதியார் முதலில் அதைப்பற்றி மிதமிஞ்சி கலவரப்படுவது வழக்கம். சிறிது நேரம் கழிந்ததும் அதைப்பற்றி தீர ஆலோசித்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, தைரியமாயிருப்பார். ஆனால் அந்தச் சிறிது நேரத்திற்குள் அவர் படும் மனவேதனை சொல்லி முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராட முனைந்தால், வெளிநாட்டிலுமா நிற்க நிழலில்லாமற் போகவேண்டும் என்ற ஆத்திரம் அவர் மனதைப் புண்படுத்திற்று. ஐயங்காருக்கு பதில் சொல்ல அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. இனும் இரண்டு நாட்கள் பொறும். ஏதாவது தனியாக ஏற்பாடு செய்து கொண்டு விடுகிறேன்என்று அப்பொழுது சொல்லிவிட்டார்.

            இரண்டு நாட்களும் கழிந்தன. அவ்விரண்டு நாட்களும் அவருக்கு இரண்டு யுகமாயிருந்தது. என்ன ஆலோசித்தும் அவருக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. ஊர் புதிது; ஒரு நண்பருமில்லை; தெரிந்த மனிதனொருவனும் கிடையாது; இந்த நிலையில் ஐயங்கார் தம்மிடம் வரவரக் கடுமையாக நடந்து கொள்வதை உணர்ந்தார். பாரதியாருக்குத் தம் வாழ்க்கையில் என்றும் காணாத ஒரு புதிய அனுபவமாக இருந்தது இது. தம்மை வேண்டாதவரோடு அவர் அரை நொடிகூட சகவாசம் செய்யமாட்டார். எவ்வளவோ பெரிய ஜமீன்தார்களைக்கூட அலட்சியம் செய்திருக்கிறார். அவருக்குக் கோபம் இப்பொழுது பொங்கி எழுந்தாலும், தம்மை முதலில் வரவேற்று இடம் தந்தவரை எப்படிக் கடிந்து கொள்வது? அவரோ பயந்த பேர்வழி; போலீஸ் வற்புறுத்தலுக்கு எதிர்த்து பதில் சொல்லத் திறமையற்றவர் என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டு, இன்னும் ஆழ்ந்து, ஏதாவது வழியுண்டா என்று ஆலோசிக்கலானார்.

            இங்கிலீஷ் போலீஸ் சும்மா இருக்கவில்லை. மறுபடி பிரெஞ்சு போலீசைத் தூண்டினார்கள். ஐயங்கார் மறுபடி வரவழைக்கப்பட்டார். பின்னும் கடினமாக மிரட்டப்பட்டு வீடு திரும்பினார். ஐயங்கார் திரும்பியபோது வாய் திறந்து ஒன்றும் சொல்லாவிடினும், முகம் அவர் மனநிலையைக் காட்டிவிட்டது. பாரதியாருக்கு நெஞ்சு துடிதுடித்தது. தமிழ் நாட்டில் வீர சுதந்திர எண்ணம் பரப்பிய தமக்கு, புதுவையில் அவ்வுணர்ச்சி கொண்ட ஒருவனும் கண்ணில் படவில்லையே என்று தவிக்கலானார். தாம் சென்னையை விட்டு வரும்போது இந்தியாபத்திரிகைக்கு புதுவையில் சந்தாதாரராக இருந்தவர்கள் பெயரைக் குறித்துக் கொள்ளாமற் போனோமே என வருந்தினார். அவர்களில் ஒருவரிடம் சென்றிருந்தால் இவ்வளவு எளிதில் தம்மை கைவிடமாட்டார்கள் என்று தோன்றிற்று.

            இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, தெய்வம் ஏதாவது வழிகாட்டும் என்று அன்றிரவு பெருங் கவலையோடு வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அப்போது திண்ணைக்குப் பக்கத்திலிருந்த குறடு வழியாகச் சென்ற ஸ்ரீகுவளை கிருஷ்ணமாச்சாரியார் அவரைக் கண்டு பேசினார். பாரதியைக் கவிந்திருந்த இருள் நீங்கிற்று; ஒளி உதயமாயிற்று. கவலை தீரும் வழி தெரிந்தது.

            ஸ்ரீகுவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியை சுந்தரேசய்யரிடம் அழைத்துச் சென்றார். சுந்தரேசய்யர் மூலம் வேறொரு வீட்டில் அன்றிரவே பாரதியார் தங்க ஏற்பாடாயிற்று.

            இந்த சமயத்தில், சில மாதங்கள் புதுச்சேரியில் சென்று கழிக்கவேண்டுமென்று நானும் அங்கு போய் பாரதியாரோடு தங்கினேன். சிறுவயதில் அங்கு படித்தவனாகையால் எனக்கு அவ்வூரில் பலரைத் தெரியும். என்ன கஷ்டம் வந்தாலும் இனி சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பாரதியாருக்குப் பிறந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து இனிமையாய்க் காலம் கழிக்க சில சந்தர்ப்பங்களும் வந்து கூடின.

            இச்சமயத்தில் சென்னையில் ராஜத்துவேஷ வழக்குக்காக ரிமாண்டிலிருந்த ஸ்ரீ ஜி.சுப்பிரமணியருக்காக சில பெரிய மனுஷர்கள் குறுக்கிட்டு சர்க்காரோடு மன்றாடி, அவருக்கு மன்னிப்பும், விடுதலையும் பெற்றுக் கொடுத்தனர். அதே மாதிரி பாரதியாரும் ஒப்புக்கொண்டால் பலரைக் கொண்டு முயற்சி செய்வதென்று தீர்மானித்துக் கொண்டு பாரதியின் மாமனார் செல்லப்பையரும், மைத்துனர் அப்பாதுரையும் வந்திருந்தார்கள். பாரதியார் சிறிதும் இடம் கொடுக்கவில்லை.

            இங்கு நான் என்ன கஷ்டப்படுகிறேன்? அங்கு வந்து நான் என்ன சுகப்படப் போகிறேன்? அங்கேயானால் எந்த வேளையில் போலீஸ் என்ன செய்யுமோ என்று திகில் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இங்கு இந்த அழகிய பங்களாவில் நான் சுகமாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?என்று கேட்டார்.

            பாரதியார் புதுவை சென்ற ஒரு மாதத்திற்குள் இந்தியா பத்திரிகையின் சொந்தக்காரரான ஸ்ரீ ந.திருமலாச்சாரியாரும் அங்கு வந்து சேர்ந்தார்.  அவர் தமது பத்திரிகையை சென்னையிலிருந்து புதுவைக்கே கொண்டு வந்து விடுவதென்ற தீர்மானத்தோடு வந்தார். சென்னையிலிருந்தால் அதற்கு நித்தியகண்டமாயிருக்கும். இங்கு பாரதியாரும் இருப்பதனால் அது ஒழுங்காக நடக்கக் கூடும் என்று எண்ணினார். பாரதியாரும் அதை ஆமோதித்தார்.

            ஆனால், இடையில் எங்களுக்குள் ஒரு சிறு யோசனை நடந்து கொண்டிருந்தது. திருமலாச்சாரியாரும் அதில் கலந்து கொண்டார். மூவருமாக ஐரோப்பா சென்று சுற்றுப்பிரயாணம் செய்து வருவது என்றும், அதற்கு முன் இந்தியாபத்திரிகையைப் புதுவையில் நடத்த தக்கபடி ஏற்பாடு செய்துவிட்டுப் போவதென்றும் பேசிக்கொண்டோம்.

            சென்னையில் வழக்கு நடந்தாலும் இந்தியாபத்திரிகை தப்பாமல் வெளிவந்து கொண்டேயிருந்தது. அதை சரிவர நடத்தி மேற்பார்வை பார்த்து வந்தார் ஸ்ரீ எம்.பி.டி.ஆச்சார்யா என்பவர். அவர் திருமலாச்சாரியாரின் சிறிய தகப்பனார் மகன். அவரோடு திருமலாச்சாரியார் தம்பி போல் பழகி வந்தார். அதனால் அவரைக்கொண்டே பத்திரிகையைப் புதுவையில் நடத்தச் செய்வது என்று திருமலாச்சாரியார் கருதினார். அதற்கேற்ற ஏற்பாடுகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கையில், ஸ்ரீ எம்.பி.டி. ஆச்சார்யாவே திடுமென்று அங்கு வந்து சேர்ந்தார்.

            பத்திரிகைக்கு மறுபடி ஏதாவது ஆபத்து வந்ததோ என்று நாங்கள் பரபரப்புடன் அவரைக் கேட்டோம். அப்படிக்கொன்றுமில்லை என்றும், தாம் இங்கிலாந்து செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறபடியால் தமால் பத்திரிகையைப் பார்த்துக் கொள்ள முடியாதென்றும் கூறினார். தாம் கொழும்பு வழியாகச் செல்ல உத்தேசித்ததனால் நடுவில் புதுவையில் எங்களோடு சில நாட்கள் தங்கியிருந்து போவதென்று தாம் வந்ததாகவும் கூறினார்.

            இவர் தனது வெளிநாட்டு யாத்திரையைப்பற்றி திருமலாச்சாரியாரோடு சில மாதங்களுக்கு முந்தியே பேசியிருந்தார். அப்போது அவர் வேண்டாமென்று தடுத்ததனால் நின்று போயிற்று. இப்போது என்ன சொல்லியும் கேட்கவில்லை. தம் தாய் தந்தையரோடு கலந்து ம்டிவு செய்துகொண்டு வந்திருப்பதாகவும், இனி அதை நிறுத்த முடியாதென்றும் அவர் கூறினார்.

            இதனால் எங்கள் யோசனைகள் எல்லாம் தடுமாறிப் போயின. பாரதியாருக்கு ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்துவர வேண்டும் என்று ஆவல் வெகு அதிகமாயிருந்தது. அச்சமயம் அவரது பந்துவும் அவருக்கு அவ்வப்போது பண உதவி செய்து வந்தவருமான ஸ்ரீ லக்ஷ்மணய்யர் என்பவர் அங்கு வந்திருந்தார். அவரிடமிருந்து சிறு உதவியும், அவர் மூலம் தமது வெளி நண்பர்களிடமிருந்து சிறு உதவியும் பெற்று, போதும் போதாதற்கு, திருமலாச்சாரியாரும் நானும் பார்த்துக்கொள்வதென்று முடிவு செய்திருந்தோம். இதற்கெல்லாம் சிறிது காலம் வேண்டியிருந்தது. அவர் மனைவி செல்லம்மாள் கர்ப்பாயிருந்தது, இரண்டாவது பெண் சகுந்தலா பிறக்கும் தருணமாயிருந்தபடியால் அதுவரை வெளிநாடு செல்வதை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாபத்திரிகையை புதுவைக்குக் கொண்டு வருவதைப் பற்றி தீவிரமாய் எல்லா ஏற்பாடுகளும் செய்யத் தொடங்கினோம்.

            ஸ்ரீ எம்.பி.டி.ஆசார்யா அதைவிட்டு வந்தபடியால் அதற்குச் செய்ய வேண்டியிருந்ததை முதலில் கவனிக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சு சட்டப்படி புதுவையில் ஒரு பத்திரிகை நடக்க வேண்டுமானால் அதற்குப் பொறுப்பாளியாக ப்ரெஞ்சு இந்தியக் குடி ஒருவர் இருந்தாக வேண்டும். வில்வநல்லூரில் வசித்துவந்த எனது பழைய நண்பரான ஸ்ரீ எஸ்.லக்ஷ்மிநாராயண ஐயர் அப்பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார்.

            திருமலாச்சாரியாரும் புதுவையில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திவிட்டு, அச்சு சாமான்களை அங்கு அனுப்ப சென்னை வந்து சேர்ந்தார். அவை அங்கு போய்ச் சேர்ந்ததும் ஸ்ரீசங்கரநாராயணய்யர் என்னும் நண்பரைப் புதுவைக்கு அனுப்பி பாரதியோடு கலந்துகொண்டு இந்தியாபத்திரிகையைக் கூடிய சீக்கிரம் வெளியிடும்படி திருமலாச்சாரியார் சொன்னார். சில நாட்களுக்குள் தாமும் அங்கு சென்று பத்திரிகையை வெளியிடலானார்.

            இந்தியாஅங்கிருந்து வெளிவரத் தொடங்கியதிலிருந்து பாரதியாருக்கு ஒருவித மன நிம்மதி ஏற்படலாயிற்று. பிற்காலங்களில் அவர் இயற்றிய பெருங்காவியங்களுக்கு அம்மனவமைதி இன்றியமையாததாக இருந்தது. பாரதியார் சென்னையில் இருந்திருந்தால் கூட்டங் கூட்டுவதிலும் மேடைகள் மேல் உபந்நியாசங்கள் செய்வதிலுமே காலம் கழிந்திருக்கும். இப்பொழுது போல ஆழ்ந்த உள்ளுணர்வுகளை இனிய பாடல்கள் மூலம் வெளியிட தமக்கு அவகாசம் கிடைத்திராது என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

           

           

           

 

 

           

 

திருவையாறு காவிரிக்கரையில் இசைவெள்ளம்.

                         

            கர்நாடக சங்கீதம் தமிழ்நாட்டில் பெரிதும் வளரவும், அதில் பல அரிய பாடல்களைப் பாடி இன்றளவும் நிலைத்து நிற்கும்படி செய்தவர்களில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்என்று போற்றப்படுபவர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், ஸ்ரீமுத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரி ஆகியோராவர். இவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். இவர் திருவாரூரில் பிறந்து பின் திருவையாற்றில் தன் வாணாளை இராம பக்தி சாம்ராஜ்யத்தில் ராமபிரானை முன்னிருத்தி பல அரிய பாடல்களைப் புனைந்து பாடியவர். இவர் அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களின் தயவையோ, அல்லது தான் பாடுவதை மக்கள் கேட்டு மகிழவேண்டுமென்கிற நோக்கத்திலோ அல்லாமல், தன் மனதிற்குகந்த ஸ்ரீராமபிரானை மனதில் வைத்து, அவரைப் பல்வகையாலும் பக்தி செய்து பாடிய பாடல்கள் மூலம் இசையுலகில் ஓர் உயர்ந்த பீடத்தைப் பிடித்தவர். அவருடைய இஷ்ட தெய்வமான ராமபிரானை எப்படியெல்லாம் வழிபட்டு பாடியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டுமானால் அவருடைய ஏராளமான கீர்த்தங்களையும், அதில் பீரிட்டெழும் பக்தி உணர்வையும் நாம் கேட்டும் பாடியும் உணர வேண்டும்.

            ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் திருவாரூரில், ராமபிரம்மம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய பாட்டனார் சம்ஸ்கிருத மொழியில் புலமை வாய்ந்த அரசவைப் புலவர் கிரிராஜகவி என்பார். இவர் பிறந்தது திருவாரூர் என்றாலும் இவருடைய குடும்பம் இருந்த திருவையாற்றில் தான் இவர் தன் வாணாளைக் கழித்தார். திருவையாற்றில் தஞ்சை மராத்திய மன்னர்களின் அரசவைக் கலைஞராக இருந்த சொண்டி வெங்கடரமணைய்யா என்பவர் தன் மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதை நன்கு கவனித்து அதனால் ஈர்க்கப்பட்டு தியாகராஜரின் தந்தையார் இவரையும் அவரிடம் சீடராக சேர்த்து இசை பயில வைத்தார். குருநாதர் தன்னிடம் சீடனாக வந்து சேர்ந்த தியாகராஜர் இயற்கையிலேயே இசையில் வல்லவராக இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தன் சீடனுடைய இசைத் திறமையை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் விதமாக பல இசைக் கலைஞர்கள் இருந்த அவையொன்றில் இவரைப் பாடவைத்தார். அப்போது தியாகராஜர் பிலஹரி ராகத்தில் அமைந்த தொரகுணா இடுவண்டி சேவாஎனும் கீர்த்தனையைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தார்.

            தியாகராஜருடைய இசைத் திறமையைக் கேள்விப்பட்ட தஞ்சை மராத்திய மன்னர் சரபோஜி ராஜா, அவரைத் தன் அரசவைக்கு வந்து பாடும்படி அழைத்தார். அரசரின் தூதர்கள் அவரை மன்னர் அவைக்கு வருமாறு திருவையாற்றுக்கு வந்து அழைத்தபோது, அவருக்கு தன் இஷ்ட தெய்வமான இராமனைத் தனிமையில் அவன் புகழைப் பாடுவதைத் தவிர, பெயர், புகழ் இவற்றை விரும்பி மன்னன் அவைக்குச் சென்று பாட விரும்பவில்லை. அரசரின் அழைப்பை ஏற்க விரும்பாமல் தான் வழிபடும் இறைவன் ராமபிரானின் புகழைப் பாடுவதல்லாம், பணம் காசுக்காக அங்கு வந்து பாடுவது சாத்தியமில்லை என்பதை நிதி சால சுகமாஎன்ற கிருதியைப் பாடித் தன் இயலாமையை அந்த தூதர்களுக்குத் தெரிவித்தார். இதனால் சரபோஜி மன்னர் மனவருத்தம் அடைந்தாலும், தியாகராஜரின் பக்தியைப் பாராட்டி அவருக்குத் துன்பம் இழைக்கவில்லை.

            திருவையாற்றில் வசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் அவ்வப்போது திருவையாற்றின் தெருக்களில் ராமநாம மகிமைகளைப் பாடல்களாகப் பாடிக்கொண்டு உஞ்சிவிருத்தி எடுத்து வந்தார். அப்போது அவருடைய பெருமையை உணர்ந்த துறவி ஒருவர், இவரை ராமநாமத்தைப் பலகோடி முறை உச்சாடனம் செய்யச் சொல்ல்ச் சென்றார். அதன்படி தியாகராஜர் ராமநாமத்தை உச்சரித்து உன்னத பலன்களைப் பெற்றார். அதன் மூலம் அவர் பெற்ற தெய்வானுபவத்தை பாலகனகமயஎனும் கீர்த்தனையை அடாணா ராகத்தில் பாடி மகிழ்ந்தார்.

            இவருக்கு நல்ல திறமை வாய்ந்த சில சீடர்கள் அமைந்தனர். அவர்களெல்லாம் தில்லைத்தானம், உமையாள்புரம், வாலாஜாபேட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள். தியாகராஜ சுவாமிகளின் மகள் திருமணத்தின் போது அவருடைய சீடர் வெங்கடரமண பாகவதர் ஒரு ராம பட்டாபிஷேகப் படத்தைப் பரிசளித்தார். அந்த சீடர் வாலாஜாபேட்டையிலிருந்து நடந்தே திருவையாற்றுக்கு வந்து இந்தப் படத்தை அளித்ததும் தியாகராஜர் மனம் மகிழ்ந்து அந்த அயோத்தி ராமபிரானே தன் இல்லம் தேடி வந்திருப்பதாக மனம் மகிழ்ந்து நனுபாலிம்ப நடசிவச்சிதிவோஎன்ற கீர்த்தனையைப் பாடி வணங்கினார்.

            தியாகராஜரின் தந்தையின் நண்பர் ஒரு மகான் இவரை அழைத்த போது காஞ்சிபுரம் சென்றார். மற்றொரு வள்ளல் அவரது ஊரான கோவூருக்கு இவரை அழைத்து அவருடைய ஊரில் தங்க வைத்து மரியாதைகளைச் செய்து அனுப்பினார். அங்கிருந்து அவர் பல்லக்கில் திருப்பதி சென்று அங்கு பெருமாளை தரிசிக்கச் சென்றார். அங்கு இவர் சென்றபோது திருப்பதி பெருமாளுக்கு திரை போட்டு மறைத்திருந்தனர். அப்போது இவர் மனதில் இறைவனை அடைய முடியாமல் ஜீவாத்மாக்கள் தங்கள் ஆசாபாசங்கள் எனும் திரையினால் மூடப்பட்டு மறைக்கிறதோ, அதைப் போல இங்கே இறைவனை தரிசிக்க முடியாமல் திரை போடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தெரதீயகராதாஎனும் கீர்த்தனையைப் பாடினார். சிலர் சொல்வது போல், அவர் அந்த சந்நிதியில் திரை அறுந்து விழும்படி பாடியதாகச் சொல்வது தவறு, தன்னுடைய மனதில் அஞ்ஞானம் எனும் திரை இறைவன் ஒளியை தரிசிக்க விடாமல் தடுக்கிறது என்ற போருளில் தான் அந்தப் பாடலைப் பாடியிருக்கிறாரே தவிர சந்நிதியில் திரை மறைப்பதைக் குறிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு பக்தன் இறைவன் சந்நிதியில் எதற்காகத் திரைபோட்டு மறைப்பார்கள் என்பது கூடவா தியாகராஜருக்குத் தெரியாது. அவருக்குத் தெரியும், அவர் அந்தத் திரையை தன்னுடைய அஞ்ஞானமெனும் திரைக்கு உதாரணமாகச் சொல்லித்தான் அந்த கீர்த்தனத்தைப் பாடியிருக்கிறார்.

            அவர் கோவூருக்குப் போயிருந்த பொது கோவூர் பஞ்சரத்னம் என்று ஐந்து அரிய கீர்த்தனைகளை இயற்றிப் பாடினார். அவை பந்துவராளி ராகத்தில் சம்போ மகாதேவா, சஹானாவில் ஈவசுதா நீவண்டி, கரஹரப்பிரியாவில் கோரி சேவிம்பராரே, சங்கராபரண ராகத்தில் சுந்தரேசருதி, கல்யாணி ராகத்தில் நம்மிவச்சினஎனும் கீர்த்தனைகள்.

            இவருடைய நூற்றுக்கணக்கான கீர்த்தனங்கள் அனைத்துமே பெரும்பாலும் தெலுங்கு மொழியிலும், ஒருசில சம்ஸ்கிருதத்திலும் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் பல்வேறு அரிய ராகங்களில் பாடிய பெருமை தியாகராஜருக்கு உண்டு. ஸ்ரீரங்கம் பஞ்சரத்னம் என்று ஐந்து பாடல்களையும், லால்குடி பஞ்சரத்னம் என்று இன்னொரு ஐந்து பாடல்களையும் பாடிச் சிறப்பித்துள்ளார்.

            திருவையாற்றில் பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகள் இப்போது அவருடைய ஆராதனை சமயத்தில் இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடி வருகிறார்கள். அவை ஐந்தும் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, ஆரபி, கெளளை, வராளி, ஸ்ரீ ராகம் ஆகியவற்றில் பாடப்பட்டவை. அவற்றின் சிறப்பையொட்டி அவ்வைந்து கீர்த்தனைகளையும் பஞ்சரத்னம் என்ற பெயரில் அவர் ஆராதனையில் பாடி இறைவனைத் துதிக்கிறார்கள்.

            இவருடைய கீர்த்தனைகளில் எல்லாம் மிக உயர்ந்த பக்தி நெறிகளையும், கருத்துக்களையும் வைத்துப் பாடியிருக்கிறார். காலத்தால் அழியாத அரிய கீர்த்தனைகள் தியாகராஜரின் கீர்த்தனைகள். அவர் தெலுங்கு மொழி பேசுபவர் என்பதால் அவர் கீர்த்தனைகள் அனைத்துமே தெலுங்கில் அமைந்திருக்கின்றன. அவருக்கு மரியாதை செலுத்த ஆராதனை நடத்துகின்றபோது அவர் எந்த மொழியில் பாடினாரோ, அந்தப் பாடல்களை அதே மொழியில் பாடி ஆராதனை செய்வதென்பது வழக்கத்தில் உள்ளது.

            இசைக் கலையில் தலைசிறந்தவர்கள் மத்தியில் யார் பெரியவர் என்ற போட்டியும் கூட சில சமயங்களில் தலைகாட்டும். அதைப் போல இவருடைய காலத்தில் பொப்பிலி எனும் தெலுங்கு பேசும் பகுதியிலிருந்து ஒரு இசைக் கலைஞர் மிகுந்த படாடோபத்துடன் பல்லக்கில் வந்து தியாகராஜருடைய இசைத் திறமையைச் சோதிக்க அவர் வீட்டு வாசலில் வந்து இறங்கினார். அப்போதுதான் காலையில் சீடர்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துவிட்டு, காவிரியில் ஸ்நானம் செய்வதற்காக வாசலுக்கு வந்த தியாகராஜர் தன் வீட்டின் வாசலில் பல்லக்கில் வந்து ஒருவர் இறங்குவதைக் கண்டு தயங்கி நின்றார். வந்தவர் பட்டு, பீதாம்பரம் அணிந்து தங்க ஆபரணங்களை அணிந்து வாசனைத் திரவியங்களின் வாசனை இவரை முந்திக் கொண்டு வர இவரைப் பார்த்து, இங்கு தியாகராஜர் என்பவர் யார்?  என்றார்.

            தியாகராஜர் மிகுந்த பணிவோடு அடியேன் தான் தியாகராஜன்என்று பதிலளித்தார்.

            நீர் ஏதோ கீர்த்தனைகள் எல்லாம் பாடுகிறீர்களாமே, நான் ஒரு இசை சாம்ராட். எல்லா மகானுபாவர்களும் என்னை ஒரு தலைசிறந்த இசைக் கலைஞராகப் போற்றுகிறார்கள். நீங்கள் அப்படி என்ன பாடுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு போகவே வந்தேன்என்றார்.

            தியாகராஜர் மிகுந்த அடக்கத்துடன் சொன்னார், நான் ஏதோ எனக்குத் தெரிந்த கீர்த்தனைகளை என் இராமனுக்காகப் பாடிக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்என்றார்.

            பிறகு வந்த பாகவதரை தியாகராஜர் உள்ளே அழைத்துச் சென்று உட்காரச் சொன்னார், வந்தவர் தியாகராஜரைப் பாடச் சொல்லிக் கேட்டார். முதலில் ஒரு கீர்த்தனையைப் பாடிவிட்டு, அடுத்ததாக, வந்தவர் சொன்னாரல்லவா, எல்லா மகானுபாவர்களும் என்னைத்தான் சங்கீத சாம்ராட் என்று போற்றுகிறார்கள் என்று அதை மனதில் வைத்து அந்த மகானுபாவர்களுக்கெல்லாம் என் நமஸ்காரங்கள் என்ற பொருள்படும் எந்தரோ மகானுபாவுலுஎனும் கீர்த்தனையைப் பாடப்பாட, வந்தவர் தியாகராஜரின் உயரிய சங்கீதத் திறமையைக் கண்டு தன் உடலில் இருந்த ஆடம்பரமான ஆபரணங்கள் ஒவ்வொன்றாக எடுத்து அவர் முன்பாக வைத்துவிட்டு, இறுதியாக அவர் பாடி முடித்தவுடன் அவரைப் பணிந்து வணங்கிப் போற்றினாராம்.

            இத்தனை சிறப்புகளைக் கொண்ட தியாகராஜ சுவாமிகள் 1847ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 6ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்து அவர் காலமெல்லாம் வணங்கி வந்த ராமனின் பாதாரவிந்தங்களைச் சென்றடைந்தார். அவர் மறைந்த நாளில்தான் திருவையாற்றில் அவரது சமாதி அமைந்த இடத்தில் அவருக்கு இசை ஆராதனை நடைபெற்று வருகிறது. இதனை நடத்துவதற்கென்று ஸ்ரீதியாகராஜ ஆராதனைக் கமிட்டி ஒன்று உருவாகி பல காலமாக நடந்து வருகிறது. முன்பு கபிஸ்தலம் ஜி.கே.மூப்பனாரும், பிறகு அவர் இளவல் ரங்கசாமி மூப்பனாரும், இப்போது ஜி.கே.வாசன் அவர்களும் தலைவராக இருந்து இவ்விழாவினை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். இம்மாதம் 11ஆம் நாள் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள் தொடங்கி வைக்கப்போகும் இந்த இசை ஆராதனை விழா 15-1-2020 புதன்கிழமை வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்காக பல ஊர்களில் இருந்தும் இசைப் பிரியர்கள் வந்து திருவையாற்றில் குவிந்து காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள அவரது சமாதியருகில் அமைந்திருக்கும் பந்தலில் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்வார்கள். விழா நடைபெறும் ஐந்து நாட்களும் தியாகராஜர் சமாதியைச் சுற்றிலும் பல ஸ்டால்களும் அமைத்து இசைத் தகடுகள், பூஜை சாமான்கள், புத்தகக் கண்காட்சி ஆகியவை நடைபெறும். புத்தகக் கண்காட்சியை திருவையாறு பாரதி இயக்கம் பல ஆண்டுகளாக நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இசை கேட்க வருபவர்கள் நல்ல புத்தகங்கள் வாங்கிச் செல்வது இங்கு வழக்கமாக இருக்கிறது. இவ்வாண்டு தியாராஜ ஆராதனையின் 173ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.  

கட்டுரை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.      #9486741885    email: www.privarsh@gmail.com

 

கலைகளும், கலைஞர்களும் .

                             

முற்காலத்தில் ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகித்தன. ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய ஆலயங்களில் கூட நாட்டியச் சிற்பங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் இந்த நடனத்துக்கு மூலம் என்றால் சிவபெருமான் நடராஜப் பெருமானாக தில்லையில் ஆடிய ஆனந்த தாண்டவமே மூல முதல் நடனமாக இருந்திருக்கிறது. இந்தக் கலை பெரும்பாலும் ஆலயங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன.  சதிர் ஆடுபவர்கள் சதிர் ஆடுவதோடு ஆலயத்தின் இதர சில பணிகளையும் செய்ய தேவரடியார்கள் என்ற பெயரில் பணியில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கோயில் பூஜைகளில் கூட கும்ப ஆரத்தி எனும் தீபாரதனை எடுத்துக் கொடுக்கும் உரிமையும் இருந்திருக்கிறது. புனிதமான இந்த நாட்டிய நிகழ்ச்சி ஆலயங்களில் முறையாக நடந்து கொண்டிருந்த காலத்தில் அன்னியர்கள் போரிட்டோ அல்லது வாணிபம் செய்வதற்கென்றோ இங்கு நுழைந்து, சிறிது சிறிதாக நமது பண்பாடு, நாகரிகம், முதலிய அனைத்திலும் ஊடுறுவி இவற்றின் புனிதத்தை அதன் முக்கியத்துவம் தெரியாமல் அழித்து அல்லது சிறுமைப் படுத்தி விட்டார்கள்.

கல்வியில் மேம்பட்டு, உலகத்தில் மிக உயர்ந்த ஒருசில நாடுகளில் ஒன்றாக நம் பாரதநாடு விளங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டில் நமது பாரம்பரியமான கல்வி, கலைகள் இவற்றை சிறுமைப் படுத்தும் விதமாக அன்னியர்கள் நமது கல்வி முறையை மாற்றியும், அவர்கள் பண்பாட்டுத் திணிப்பினாலும்,  நமது சமூகம் குழப்ப நிலையை அடைந்தது. விளைவு நாம் புனிதமாக எண்ணியிருந்த கலைகள் அழியத் தொடங்கின. இந்த சதிர் கலையை நம்பி வாழ்ந்த தேவரடியார்கள் என்பவர்களை வேறு கண்கொண்டு பார்க்கும் நிலைமையை உருவாக்கி அவர்களையும் பிழைப்புக்கு வழியில்லாமல் செய்து, அவர்கள் கைக்கொண்டிருந்த கலையையும் அழித்து விட்டனர். அப்போதெல்லாம் நாட்டியம் என்பது ஆலயங்களில் ஆடப்படும் புனிதமான கலை என்பதால் அதை வீடுகளில் ஆடுவதில்லை. அரசவைகளில் ஆடுவதற்கு ராஜதாசிகள் இருந்தார்கள். ஆலயங்களில் ஆடுவோர் தேவதாசிகள் எனப்படுவார்கள்.

அன்னிய ஆட்சி நம் வாழ்க்கை முறையையும், கல்வி, கலாசாரம் அனைத்திலும் ஊடுறுவி நம் கல்வி, அவர்களுக்கு ஊழியம் செய்ய மட்டுமே பயன்படும்படியாக மாற்றி அமைக்கப் பட்டது. நம் கல்வி அனைத்துத் துறைகளையும் ஒருவன் அறிந்து கொள்ளும் விதத்தில் குருகுல முறையில் கற்பிக்கப்படது போக, மெக்காலேயின் கல்வித் திட்டம்  தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அன்னியர்களுக்குப் பணிபுரியும் தொண்டர்களை உருவாக்கும் கல்வியாக உருவெடுத்து விட்டது. அது போலவே அவர்களுக்குக் கலை என்பது பொழுது போக்குக் காகவும், மகிழ்ச்சியாகக் கொண்டாட்டங்களை கொண்டாடும்பொது கூடி ஆடிப் பாடி கும்மாளமடிக்க பயன்பட்டது போல் அன்றி நம் கலைகள் எல்லாமே இறைவனை மையப்படுத்தி, அனைத்தும் இறைவனுகே எனும் அர்ப்பணிப்பு உணர்வில் நடத்தப்பட்டவை. அதனால் தான் நாம் கொண்டாடும் தெய்வ உருவங்கள் அனைத்தின் கைகளிலும் அனேகமாக ஏதேனும் ஒரு இசைக் கருவி இருக்கும். சரஸ்வதி கையில் வீணை, கிருஷ்ணன் கையில் குழல், நாரதர் கையில் தும்புரு, நந்தி கையில் மத்தளம் இப்படி. இந்த சதிர் ஆலயங்களில் நடைபெற ஆடல் மகளிர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கி, வேளை தோறும் ஆலயங்களில் ஆடுகின்ற பணிகளும் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கெல்லாம் சமூக அந்தஸ்தும், கெளரவமும், இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் என்ற பெருமையும் இருந்தது. அவர்கள் மட்டும் இந்த ஆடற்கலையையும், இசையையும் கட்டிக் காப்பாற்றியிருக்காவிட்டால் அவை அழிந்துகூட போயிருக்கலாம்.

இப்படிக் குருவிக் கூடு போல அமைக்கப்பட்டிருந்த நமது கலை கலாச்சார அமைப்பு பிரித்தெறியப் பட்டு, அவர்கள் கலாச்சாரத்தை நுழைத்து விட்டனர். அதன் பயனாக நமது தெய்வீகக் கலைகள் ஓரம் கட்டப்பட்டு அதனை ஆடுவோர் தாழ்ந்தவர்கள் என்பது போன்ற நிலையை உருவக்கி, இசையையோ, நடனத்தையோ குடும்பப் பெண்கள் பாடக் கூடாது, ஆடக்கூடாது என்கிற மிக மோசமான பிற்போக்கு எண்ணம் விதைக்கப்பட்டது. இதன் விளைவாக ஆலயங்களில் தேவதாசி முறை சட்டப்படி இந்திய சுதந்திரத்துக்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்டு ஆலயங்களில் இருந்த இவர்களை வெளியேற்றி விட்டார்கள். பல நூறு ஆண்டுகளாக அந்த கலைப் பணியைச் செய்து வந்த அந்த சமூகம் இதனை கைவிட்டதோடு ஒரு கட்டத்தில் அவர்கள் மற்றவர்களைப் போல பல துறைகளுக்கும் சென்று விட்டனர். ஆனால் கலை ஆர்வம் கொண்ட ருக்மணி தேவி, பாலசரஸ்வதி பொன்றோர் இந்த கலையை அழியவிடக் கூடாது என்று விடாப்பிடியாக இதனை வளர்க்கவும், பாதுகாக்கவும் சென்னையில் கலாக்ஷேத்ரா என்ற நிறுவனத்தில் இந்த நடனக் கலையை வளர்க்க ஏற்பாடு செய்து அவர்களும் ஆடத் தொடங்கிய பின் எல்லா தரத்தாரும் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு ஆடவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் தொடங்கினர்.

அந்த காலகட்டத்தில் சினிமா என்றொரு கலை வெகு வேகமாகப் பரவிய காரணத்தால் இந்த நடனங்கள் அதில் பயன்படுத்தப் பட்டு பிரபலமடையத் தொடங்கின. இந்தக் கலையில் வல்லவர்கள் பலர் அனைத்துத் தர மக்கள் மத்தியிலும் உருவானார்கள். குமாரி கமலா, லலிதா, பத்மினி, ராகினி, குசலகுமாரி, சாயி, சுப்புலட்சுமி இப்படி எத்தனையோ நடனமணிகள் உருவானார்கள். சினிமா இதைப் பிரபலப் படுத்தியதன் பயனாகக் குழந்தைகள் ஆர்வத்தோடு தாங்களும் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். கடந்த அறுபது அல்லது எழுபது ஆண்டுகளில் லட்சக் கணக்கான பெண் குழந்தைகளும், ஆண்களும் கூட இந்தக் கலையில் ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்து ஆடத் தொடங்கினார்கள். இன்று ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, எங்கும் நடன ஆசிரியர்கள், நடனப் பள்ளிகள், திறமையான குருமார்கள் ஏராளமான குழந்தைகளுக்குப் பயிற்று விக்கிறார்கள். இயல்பிலேயே இந்தக் கலை உணர்வு, ஆர்வம், திறமை உள்ளவர்கள் இதனை விரைவாகக் கற்றுக் கொண்டு உயர்ந்த நிலைமைக்குச் சென்று விடுகிறார்கள்.

சதிர் என்கிற பெயர் இப்போது பரதநாட்டியம் என்று பெயர் பெற்று விளங்குகிறது. முன்பெல்லாம் சதிர் ஆடுபவர் சமூகத்தில் யார் எவர் என்ற பேதம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஆடுபவர் ஒரு பரதக் கலைஞர் என்பதோடு சரி, அவர் யார், என்ன பிரிவு அல்லது என்ன  ஜாதி உயர்ந்தவரா தாழ்ந்தவரா என்பது போன்ற பேதங்கள் எல்லாம் அறவே கிடையாது. ஆங்கிலத்தில் Complex என்று சொல்லப்படும் உணர்வு ஒருசில இடங்களில் தனிப்பட்டவர்கள் மிதான குற்றம், குறைகளினாலோ அல்லது சிந்தனையின் விளைவாகவோ, சில வேறு பட்ட கருத்துக்களும் வெளியாகின்றன. கலைகளுக்கு எந்தவித பேதமும் கிடையாது. அது ஆடுபவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போன அதுபோன்ற கருத்துக்கள் இருந்தால் அதனைச் சிறிது சிறிதாக நீக்கி அவர்கள் அனைவரும் கலைஞர்கள் என்கிற ஒரே இனம் என்பதை உருவாக்க வேண்டும். அப்படி ஒருக்கால் சிலருக்கு அதுபோன்ற ஏற்றத் தாழ்வு எண்ணம் இருக்குமானால்  உடனடியாக அதை எடுத்து எறிந்திட வேண்டும். கலையும் கலைஞர்களும் வளர வேண்டுமே தவிர இதுபோன்ற பேதங்கள் வளரவும் கூடாது, வளர்வதை ஆதரிக்கவும் முடியாது. கலைகள் தான் நமக்கு முக்கியம் பேதங்கள் அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட்டாலன்றி இதுபோன்ற பிளவுகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

நம்மிடையே எத்தனையோ கலைகள் இப்போது வழக்கத்தில் இருக்கின்றன. கலைகள் என்ற கண்ணோட்டத்தில் அவை எல்லாமே சமமானவை என்று சொன்னாலும், அந்தந்த கலைகள் எங்கு எப்படி பயன்படுகிறது என்பதைப் பொறுத்து அதை நடத்தும் இடம், அதனை நடத்தும் கலைஞர்கள் ஆகியவர்கள் பார்க்கப்படுகிறார்கள். நம்மிடையே இன்று இருக்கும் சில கலைகள். 1. சதிர் 2. அதுவே பரதநாட்டியம் என்று ஆனது 3. கரகாட்டம்  4. தெருக்கூத்து  5. தேவராட்டம்  6. சிலம்பம்  7. பறையாட்டம்  8. காவடியாட்டம்  9. கும்மியாட்டம்  10. கோலாட்டம்  11. பொம்மலாட்டம்  12. புலிவேஷம் 13. மயிலாட்டம்  14. ஒயிலாட்டம்  15. பொய்க்கால் குதிரை ஆட்டம், 16. வில்லுப்பாட்டு.  இதுபோன்ற பல கலைகள் இருந்தாலும் இவற்றின் பயன்பாடு அதனதன் நோக்கத்துக்குத் தக்கதாக மாறுகிறது. இவை நடத்த வேண்டிய களங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது. பரதக் கலை ஆலயங்களில் நடந்தது இப்போதெல்லாம் பெரிய அரங்குகளில் மேடைகளில் ஆடப்படுகின்றன. திருமணங்கள், ஆலய திருவிழாக்கள், சபாக்கள் நிகழ்ச்சிகளில் என்று இவை ஆடப்படுகின்றன. இதற்காக மத்திய மாநில அரசுகள் அமைப்புகளை உருவாக்கி இந்த கலைக்கும் கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதில் ஒரு குறையை அல்லது தவறைப் புரிந்து கொள்ள வேண்டும். பரதக் கலை ஆட வேண்டிய இடங்களை மேலே பார்த்தோம், அப்படி அதுபோன்ற இடங்களில் அல்லாமல் அவரவர் தேவைகளுக் கேற்ப இந்த கலைகளுக்குப் பொறுத்தமில்லாத இடங்களில் ஆட வைப்பது என்பது அந்தக் கலைக்குத் தரும் மரியாதையாகாது. நினைத்த இடத்தில், தெருக்களில், அரசியல் கூட்டங்களில் இதுபோன்ற இடங்களில் புனிதமான நடனக் கலையை ஆடாமல் அதற்குரிய அரங்கில் ஆடுவதே சிறப்பு. நடனக் கலைஞர்கள் தாங்கள் அணியும் சலங்கையையும், ஆடுகின்ற மேடையையும் கும்பிட்டு வணங்கிவிட்டுத்தான் ஆடத் துவங்குகிறார்கள். அவர்கள் மனம் எப்போதும் விழிப்போடு இருந்தால்தான் முகத்தில் பாவத்தையும், கரங்களில் முத்திரைகளையும், காலில் தாளத்தையும் தவறு இல்லாமல் செய்ய முடியும். அப்படிப்பட்ட கலைஞர்கள் மற்றவர்களைக் காட்டிலும் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும் திறமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

கரகாட்டம் என்பது நம் தமிழகத்தில் மாரியம்மன் கோயில்களில் வேண்டுதல் செய்துகொண்டு கடத்தில் நீர் நிரப்பி , மஞ்சள் பூசி, கடத்தில்  வேப்பிலை வைத்துக் கொண்டு போய் அபிஷேகம் செய்யக் கொடுப்பது. அதுவே நாளடைவில் குடத்தைத் தலையில் ஏந்தி ஆடும் பொது நிகழ்ச்சியாக கரகாட்டம் என்ற பெயரில் கிராம தேவதைகள் திருவிழாக்கள் சமயம் நடைபெறுகிறது. காவடியும் முருகனுக்கு வேண்டுதல் செய்துகொண்டு பழனி, திருத்தணி போன்ற கோயில்களுக்குப் போய் வந்தது போக இப்போது எல்லாவிடங்களிலும் காவடி ஆட்டம் வந்தாகி விட்டது. தேவராட்டம், ஒயிலாட்டம் இவைகள் எல்லாம் ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை. மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பக்கங்களில் எல்லாம் ஒயிலாட்டம் கிராம கோயில்கள் திருவிழா சமயங்களில் ஆடுவதுண்டு. கும்மியும், கோலாட்டமும் பள்ளிக் கூடங்களிலேயே பெண் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவார்கள். இப்போது அதெல்லாம் போய்விட்டது. அம்மானை ஆடுவது, சோழி வைத்துப் பல்லாங்குழி விளையாடுவது என்பது போன்ற அறிவுக் கூர்மைக்குப் பயன்படும் பெண்கள் விளையாட்டுகள் கூட அழிந்து போய் விட்டன. பொம்மலாட்டம் நாடகம், தெருக்கூத்து போன்ற சில கலைகள் மட்டும் அவ்வப்போது சிலரால் அழகாக நடத்தப்பட்டு வந்தன, இப்போது எங்கும் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. தெருக்கூத்து முன்பெல்லாம் கோடை காலத்தில் கிராமக் கோயில்கள் திருவிழா சமயத்தில் விடிய விடிய நடைபெறுவது உண்டு. கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில்களில் இரவு பத்து மணிக்கு மேல் உடுக்கு அடித்துக் கொண்டு அரவான் கதை என்பதைச் சொல்வதுண்டு.  இது மகாபாரத யுத்தம் தொடங்கும் போது அரவான் பலி கொடுக்கப்பட்ட கதை. விடிய விடிய அவர் பாடவும் மக்கள் கேட்கவும் அது ஓர் இனிய அனுபவமாக இருக்கும்.  அதுவும் இப்போதெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை. பொய்க்கால் குதிரை சுவாமி ஊர்வலம், அரசியல் கட்சி ஊர்வலங்கள் போன்றவற்றிலும் திருவிழாக் காலங்களிலும் பெரிய பெரிய குதிரை பொம்மைகளுக்குள் புகுந்து கொண்டு காலில் கட்டை வைத்துக் கட்டிக் கொண்டு ஆடுவார்கள். அதுவும் இப்போது பரவலாக மறைந்து வருகிறது. நாட்டிய வகையில் குறவஞ்சி என்று ஒன்று உண்டு. குற்றாலக் குறவஞ்சி மிகப் பிரபலமானது. தஞ்சை சரபோஜிராஜ பூபால குறவஞ்சி, வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, தர்மாம்பாள் குறம் போன்ற பல குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் நடந்து வந்தன. இதன் உட்கருத்து ஒரே மாதிரியாகவும், யாரை மையப்படுத்தி ஆடப்படுவது என்பதைப் பொறுத்து சற்று மாறும். இதில் மலைவாழ் மக்களில் பெண் குறத்தி என்பார் வந்து குறி சொல்வது போன்ற காட்சிகள் இருக்கும்.  இவைகள் அனைத்துமே எந்த இடத்தில், எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தினால்தான் அதன் பெருமைகள் நிலைத்திருக்கும் இல்லையேல் அவை சிதைந்து போக வாய்ப்பாக அமைந்துவிடும்.

கலைகள் காப்பாற்றப்பட வேண்டும். கலைஞர்கள் வளர வேண்டும். கலைஞர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். கலை நிகழ்ச்சிகளை நடத்துவோர் எந்தக் கலையை எங்கு எப்படி நடத்த வேண்டுமென்கிற முறையறிந்து நடத்த வேண்டும். ஒன்று உயர்வு இன்னொன்று தாழ்வு என்பது அல்ல, அனைத்தும் கலைகள் என்றாலும் அவைகள் எங்கெங்கு நடத்த வேண்டுமோ, எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தி வந்தால் கலைகள் நிரந்தரமாகச் சிறப்பாக இருந்து வரும். இதனைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள் நடத்துவோரும் உணர்ந்து செயல்பட்டால் அனைத்துமே சிறப்பாக இருக்கும். எந்திரமயமான இந்த நாளில் மனித மனங்களைச் செம்மைப் படுத்தவும், உற்சாகமூட்டவும் இந்த கலைகள் பயன்படுவதால் அனைத்துத் தரப்பாரும் இந்த விஷயங்களில் ஒத்துழைப்பு நல்கி நடத்துவது கலைக்கு நாம் செய்யும் சேவையாக இருக்கும்.

கட்டுரை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885

 

 

Sunday, September 13, 2020

முதல் சுதந்திரப் போரும், அதன் தொடர்ச்சியும்.

                                       

1857இல் கிழக்கிந்திய கம்பெனியார் இந்திய சமஸ்தானங்களை வாரிசு இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அபகரித்துத் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்ட நேரத்தில் இந்திய சுதேச மன்னர்கள் சிலர் தங்கள் ராஜ்யம் பறிபோவதை எதிர்த்து ஆங்கிலேய கம்பெனியாரை எதிர்த்து ஒரு புரட்சியைத் தொடங்கினார்கள்.  கம்பெனியார் படையில் இருந்த வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை வெள்ளையர்களிடம் ஒப்படைத்து விட வேண்டுமென்று கட்டளையிட்ட போது, அதை எதிர்த்து பாரக்பூரில் முதல் கலகத்தைத் தொடங்கியவர் மங்கள் பாண்டே.

ஆங்கிலப் படையில் இருந்த மங்கள் பாண்டே அவர் படையின் தளபதி தன்னைக் கொல்ல முயன்றபோது அவனைக் கொன்று முதல் புரட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கம்பெனியார் படையில் இருந்த சிப்பாய்கள் ஆங்காங்கே கலகத்தை உருவாக்கி வெள்ளைக்காரர்ளின் கொலைவெறிக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்க, அதில் நானா சாகேப், தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் போன்ற மாவீர, வீராங்கனைகள் களத்தில் இறங்கி போராடி ஒரு நேரத்தில் வெள்ளையர்களைத் திணற அடித்துக் கொண்டிருந்த பொது, சென்னையில் இருந்த ஜெனரல் நீல் என்பான் கல்கத்தாவுக்குச் சென்று அங்கிருந்து கான்பூர் வரை வழிநெடுக இந்திய சிப்பாய்களைக் கொன்று குவித்துக் கொண்டு வந்தான்.

இறுதியில் வெள்ளையன் கை ஓங்கி, இந்திய சிப்பாய்கள் களபலியானார்கள். நானா சாகேப் மட்டும் தப்பிப் பிழைத்து நேபாள் சென்றதாக வரலாறு சொன்னாலும், அவர் 20ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் சென்னையில் வந்திருந்த செய்தியையும் மகாகவி பாரதியின் நண்பர் நாராயண ஐயங்கார் என்பவர் நேரில் சந்தித்து அதை விவரிக்கிறார்.

ஆங்கிலேயர்கள், தங்கள் வீர தீர பராக்கிரமங்களை வரலாறாக ஆக்கி அதற்கு “சிப்பாய் கலகம்” என்று பெயரிட்டு தங்கள் படுகொலைகளை நியாயப் படுத்திய போதிலும், இந்திய தேசிய வாதிகள் அதை முதல் சுதந்திரப் போராட்டமாக வருணித்து எழுதியதுதான் வீர சாவர்க்கர் எழுதிய “எரிமலை” எனும் இந்த நூல்.

இது ஆங்கிலேயர்களின் வரலாற்றுச் செய்திகளை மறுத்து, இந்தியர்களின் எழுச்சியாக எழுதப்பட்டது இந்த தேசிய நூல். இது ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்டிருந்தது. இதனை இருவேறு தமிழறிஞர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெயமணி சுப்பிரமணியம் என்பவர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களிடம் சுறுக்கெழுத்தாளராகப் பணியாற்றியவர். இந்திய தேசிய ராணுவம் அமைந்த காலத்தில் இவர் நேதாஜியுடன் இருந்தவர். 1942 வரை இவர் மலேசியாவில் இருந்தார். பிறகு இந்தியா வந்து 1959 வரை கல்கியில் இருந்தார். பின் 1960இல் அமுதசுரபியில் நேதாஜி பற்றி தொடர் எழுதினார். இவர் 2002இல் தன் 98ஆம் வயதில் காலமானார்.

ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பாடத்தில் சிப்பாய் கலகம் என்று வர்ணித்த இந்த போராட்டம் ஒரு சுதந்திரப் போர் என்பதுதான் சாவர்க்கரின் கூற்று. இந்திய சுதேச சமஸ்தான அதிபர்களுக்கு வாரிசு இல்லையென்பதைக் காரணம் காட்டி இவர்கள் அந்த ராஜ்யங்களை அபகரிக்கும் செயல் பகல் கொள்ளை என்பது சாவர்க்கரின் கருத்து. அந்த அராஜகத்தை எதிர்த்துப் போரிட்ட இந்திய வீரர்கள் முதல் சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதாக வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்கிறார் இந்த நூலில்.

டல்ஹவுசியின் அராஜகமான நாடுபிடிக்கும் திட்டத்தின் கீழ் தஞ்சை ராஜ்யத்தை ஆண்டு வந்த சிவாஜி 2 எனும் ராஜாவுக்கு வாரிசு இல்லையென்கிற காரணத்தைச் சொல்லி, பிரிட்டிஷ் கம்பெனியார் தஞ்சை ராஜ்யத்தைத் தாங்களே முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டனர். அதற்கு முன்பு சிவாஜி 2 ராஜாவின் தந்தையான சரபோஜி 2 ஆண்டுகொண்டிருந்த போது அவரது வழிகாட்டியாக விளங்கியவர் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் என்பதால், இவர் துளஜேந்திர ராஜாவின் ஸ்வீகார புத்திரன் என்ற போதிலும் அவரை தஞ்சை கோட்டைக்குள் மட்டும் ஆட்சிபுரியச் சொல்லிவிட்டு ராஜ்யம் முழுவதையும் கம்பெனியாரின் ரெசிடெண்ட் அனும் அதிகாரியே ஆட்சி புரிந்ததும் நடந்து வந்தது.

இந்திய வீரர்களை கல்கத்தா முதல் கான்பூர் வரையில் வழியெங்கும் கொன்று குவித்த ஜெனரல் நீல் என்பாருக்கு சென்னையில் ஒரு சிலை அமைத்தது ஆங்கிலேய அரசு. அதனை எடுக்க வேண்டுமென்று 1930களில் ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் நா.சோமையாஜுலு எனும் தேசபக்தரின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டனரே தவிர, இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நீலன் சிலையை அகற்றவில்லை. நம்மைக் கொன்றவனுக்கு நாம் சிலை எழுப்பி அவனுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?

பின் 1936இல் ராஜாஜி தலைமையில் சென்னையில் ஒரு காங்கிரஸ் அரசு உறுவானபோது அந்த சிலை சென்னையில் அகற்றப்பட்டு எழும்பூர் காட்சிக் கூடத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. நம் வரலாற்றுச் செய்திகளை ஆங்கிலேய அரசு தங்களுகுச் சாதகமாக எழுதி வைத்திருந்த பல செய்திகள் நம் சுதேசி அரசு உருவானதும் அதனை நம் கண்ணோட்டத்தில் மாற்றி அமைக்க வேண்டுமென்பது சாவர்க்கரின் கருத்து. அதற்கு முன்னோட்டமாக அவர் சிப்பாய் கலகம் என்று வருணித்த நிகழ்ச்சியை முதல் சுதந்திரப் போராக எழுதியிருகிறார். இந்த நூலைப் படித்தால் இந்தியர்கள் சுதேசி உணர்வைப் பெற்று விடுவார்கள், என்று கருதி பிரிட்டிஷ் அரசு இந்த நூலைத் தடை செய்து வைத்திருந்தது. இதை இப்போது படித்தாலும் தேசபக்தி பற்றி எழும் என்பதை இன்றும் இதை படிக்கும் போது ஏற்படுகிறது. நல்ல மொழிபெயர்ப்பு. உணர்ச்சி பூர்வமாக நம் வீரர்களின் தியாகத்தை நம்மால் உணர முடிகிறது. சென்னை அல்லையன்ஸ் வெளியீடான இந்த நூல் வெளியாகி தேசபக்திக் கனலை உண்டாக்கியது.

இப்போதுகூட தமிழகத்தில் சிலர் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதினால்தான் நமக்கு ரயில் வசதி வந்தது, நவீன சாதனங்கள் வந்தன, அதனால் ஆங்கிலேயர்களே ஆண்டு கொண்டிருக்க வேண்டுமென்ற கோரிக்கையை சுதந்திரப் போராட்டத்தன் போது எழுப்பி வந்தார்கள் என்பதை நாமறிவோம். ஆனால், நம்மை ஆங்கிலேயர்கள் ஆட்சி புரியாவிட்டாலும், உலகின் பலபாகங்களிலும் உருவான மாற்றங்கள் இங்கும் வந்துதான் இருக்கும். முன்பு ஐரோப்பியர்கள் கானகங்களில் உலாவிக் கொண்டிருந்த காலத்தில், நம்மவர்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்ததையும், மாபெரும் காப்பியங்கள் எழுதி வைத்ததையும் பார்க்கும் பொது நா ஆங்கிலேயர்களுக்கு ஆட்படாமல் இருந்திருந்தால் நம்முடைய முன்னேற்றம் இன்னம் முன்னமேயே வந்திருக்கும் என்பதை இவர்கள் உணர்ந்திருக்க வில்லை.

அதனால்தான் பாரதி தன்னுடைய கவிதையில் ‘முன்னர் நாம் பெற்றிருந்த சிறப்புகளை, நம்மை அடிமைகொண்ட ஆங்கிலேயர்கள் உணரவில்லை, அதனை நம் மக்களே கூட உணராமல் போய்விட்டனர்’ என்பதற்கு வருந்தியிருக்கிறான். இன்று நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ‘இந்தியா என்றொரு நாடுண்டு, அங்கு மூத்த நாகரிகம் இருந்ததுண்டு’ என்று நாம் எல்லா துறைகளிலும் முன்னேறி, அனைத்துலக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துறவி யொருவரு நாட்டை ஆண்டால், தன்னலம், சுயநலமில்லாமல், ஊருக்கு உழைக்கும் உத்தமரால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். வாழ்க பாரதம்.

 

Friday, September 4, 2020

3. லாலா லஜ்பத்ராய்

           ஸ்ரீமான் லஜ்பத்ராயரை மாண்டலே கோட்டைக்குள் அடைத்து வைக்கப் போவதாக ஆரம்பத்திலே அங்குக் கொண்டு சென்றார்கள். இப்பொழுது அங்கேயிருந்து கடத்திச் சென்றுவிட்டார்களென்று ஓர் தந்தி சொல்லுகிறது. அனேகமாக இவரை ஷான் நாடுகள் என்ற பிரதேசத்துக்கு அனுப்பியிருக்கலாமென்று தோன்றுகிறது. கீழே இந்த மஹானது சரித்திரத்தைச் சுருக்கமாகத் தருகின்றோம்.

            இவருடைய தந்தை ஓர் சர்க்கார் பாடசாலையில் உபாத்தியாயரா விருக்கிறார். மிகவும் விருத்தராய் விட்ட போதிலும் சத்காரியங்களிலே மிகுந்த முயற்சி யுடையவரா யிருக்கின்றார்.

            லாலா லஜ்பத்ராய் 1865-ம் வருஷத்தில் பிறந்தார். எனவே இப்போழுது வயது 41 ஆகிறது. (பாரதி இதை எழுதிய காலத்தில்). குழந்தைப் பிராயத்திலே லஜ்பத்ராய் பலக்குறைவு உடையவராகவும் ஏழையாகவு மிருந்தபோதிலும் நன்றாக வித்தியாப்பியாசம் செய்து அரிய தேர்ச்சி கொண்டு விட்டார். 18-ம் வயதிலேயே வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார்.

            1892 வரையில் ஹிஸார் என்ற ஊரிலே வக்கீல்களுக்குள் முதன்மைப் பட்டவராக விளங்கினார். 1892-ம் வருஷத்துக் கப்பால் இவர் லாஹோர் சீப் கோர்ட்டிலே போய் வக்கீலாக அமர்ந்தார். சிறிது காலத்திற்குள்ளே மிகவும் பிரசித்தராய் விட்டனர். 1892-ம் வருஷம் முதல் 1902-ம் வருஷம் வரை 10 வருஷங்களுக்குள் இவர் மிகுந்த கீர்த்தியும், செல்வமும் அடைந்தவராயினர்.

            1902-க்கப்பால் பொதுஜனங்கலுக் கனுகூலமான விஷயங்களிலே விசேஷ சிரத்தை கொள்ளத் தொடங்கினார். பாலியத்திலேயே ஆரிய சமாஜத்திலே சேர்ந்து கொண்ட இவர் மேற்படி சமாஜத்தினபிவிர்த்தியின் பொருட்டாக எவ்வளவோ முயற்சி செய்திருக்கின்றார். லாஹோரில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தயானந்த ஆங்கிலோ வைதிக காலேஜை உன்னத நிலைமைக்குக் கொண்டு வரும் பொருட்டு இவர் அளவற்ற பரிசிரமம் எடுத்திருக்கின்றார்.

            பஞ்சக் காலத்தில் இவர் இன்னும் சில ஆரிய சமாஜிகளின் கூடச் சேர்ந்துகொண்டு பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு வருந்தும் ஜனங்களுக்குதவி செய்து அவர்களைக் கிருஸ்துவப் பாதிரிகளின் வலையினின்றும் காப்பாற்றினார். இக்காரணம் பற்றியே பாதிரிகள் இன்று வரையும் கூட லாலா லஜ்பத்ராயரிடத்திலும் ஆரிய சமாஜத்தாரிடத்திலும் கெட்ட எண்ணம் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.இவர் பஞ்சாப் நாஷனல் பாங்க், பருத்தி நூல் யந்திரசாலைகள் என்பவற்றின் டைரக்டர்களிலே ஒருவர். மேலும் மேற்படி யந்திரசாலைகளிலே இவர் நெருங்கிய சம்பந்தங்கொண்டு பல விதங்களிலேயும் உழைத்து வந்தார்.

            இடாலி தேசத்தைக் கொடுங்கோன்மையினின்றும் விடுவித்து ஸ்வராஜ்ய ஸ்தாபனம் செய்தவர்களாகிய மாஸினி (Mazzini), காரிபால்டி (Garibaldi) என்ற மஹான்களின் சரித்திரத்தை லாலா லஜ்பத்ராய் உருது (ஹிந்துஸ்தானி) பாஷையிலே எழுதியிருக்கின்றார். மகமதிய ராஜாக்கள் கொடுங்கோன்மையிலே விருப்பங் கொண்ட காலத்தில் அவர்களுடைய ஹிம்ஸையினின்றும் நாட்டை விடுவித்து, மஹாராஷ்டிர ஸ்தாபனம் செய்த சிவாஜி மஹாராஜாவின் திவ்விய சரித்திரத்தை ஹிந்துஸ்தானியிலே எழுதி *உபகரித்திருக்கின்றார். ஆரிய ஸமாஜத்தின் ஸ்தாபனாச்சார்யராகிய மஹரிஷி தயாநந்த ஸரஸ்வதியின் சரித்திரமும் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன. இதுவன்றியும் இங்கிலீஷ் பாஷையிலும் பஞ்சாபி பாஷையிலும் பல அரிய உபந்நியாசங்க ளெழுதிப் பிரசித்தி பெற்றிருக்கின்றார். 1888-ம் வருஷத்திலேதான் அலஹாபாத்திலே நடந்த காங்கிரஸ் சபைக்கு வந்து இவர் ராஜாங்க விசாரணைகளில் பஹிரங்கமாகத் தலையிடத் தொடங்கினார். அதுமுதலாக ராஜநீதி சம்பந்தமான விஷயங்களிலே ஓயாது கவனம் செலுத்தி வருகின்றார்.

            1905-ம் வருஷத்திலே இவர் நாஷனல் காங்கிரஸின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகி, கோகலேயுடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே பாரத நாட்டின் ராஜநீதி விஷயங்களைப் பற்றிப் பலவிடங்களிலே உபந்நியாசம் புரிந்தார். இதே சமயத்தில் அமெரிக்கா தேசத்துக் கல்வி முறைகளை நன்கு தேர்ந்து வரவேண்டு மென்றெண்ணி அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

            இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து லாலா லஜ்பத்ராய் நமது நவீனக் கோட்பாடுகளை இந்நாட்டாருக்குப் பிரசங்கிப்பாராயினர். ஸ்வதேசியம் அந்நிய வஸ்து பஹிஷ்காரம் என்ற தேசபக்தி முறைமைகளிலே இவர் மிகுந்த அன்பு கொண்டவர். பாரத நாட்டின் தற்கால இழிந்த நிலைமையைக் கருதி மனம் பொங்கி ஆற்றாமையுடன் இவர் எழுதியிருக்கும் சில வசனங்கள் இப்போழுது நமக்கு முன்பாக விருக்கின்றன. அவ்வசனங்க ளெப்போதும் நமது நினைப்பினின்றும் நீங்க காட்டா. அளவிறந்த தேசபக்தி கொண்டவரா யிருப்பினும் ஸ்வாதந்திரியமடைவதற்கு இவர் சாந்தமான உபாயங்களையே நாடி யிருந்தனர். ஸர்க்காருக்கு விரோதமாக இவர் கலகம் எழுப்ப முயன்றார் என்பதை எவரும் நம்ப மாட்டார்கள்.

            எனினும் என்ன எண்ணம் கொண்டோ இவரைக் கவர்ன்மெண்டார் திப்பாந்தரத்துக்கு ஏற்றியனுப்பி விட்டார்கள். இவர் கடைசியாகச் சொல்லிய வாக்கியத்தை நாம் இந்தச் சமயத்தில் மறக்கலாகாது. “கடவுள் செய்வதெல்லாம் நன்மையின் பொருட்டாகவே செய்கின்றார்.”           

2. விபின சந்திரபாலர்

             கீழ் பெங்காளத்திலே ஸில்ஹெட் என்ற ஊரிலே, வக்கீல்களுக்குள் முதன்மைப் பட்டவராகி, மிகுந்த செல்வமும் புகழும் படைத்து விளங்கிய ஓர் பெங்காளிக் காயஸ்தப் பிரபுவின் குமாரராக விபின சந்திரர் பிறந்தார்.

            வட நாட்டை ஒரே கலக்காகக் கலக்கிய சிப்பாய்க் குழப்பம் முடிந்து நாட்டில் அமைதி பிறந்த வருஷமாகிய 1858-ம் ஆண்டுதான் இவரது ஜனன வருஷமாகும்.

            செல்வத்திலேயும் சிறப்பிலேயும் வளர்ந்த விபின சந்திரர் கல்வியிலே விருப்பமற்றிராமல், வாலிபப் பிராயத்திலேயே ஞானப் பயிற்சியிலேயும் நூற் பழக்கத்திலேயும் அளவிறந்த ஆவல் கொண்டவராகி அதிபாலியத்திலேயே மெட்ரிக்குலேஷன் பரீக்ஷை தேறிவிட்டார். அதன் பேரில் தந்தையார் சந்திர பாலரைக் கல்கத்தாவிலே கொண்டு விட்டுக் காலேஜில் சேர்த்தார்.

            காலேஜில் படித்துக் கொண்டிருக்கும்போது இவருக்குப் பிரம ஸமாஜக் கோட்பாடுகளிலே பற்றுண்டாயிற்றுய். 18-ம் பிராயத்திலே பிரம ஸமாஜத்தில் சேர்ந்துவிட்டார். இவர் பிரம ஸமாஜத்திலே சேரக்கூடாதென்று இவருடைய தந்தை முதலானவர்கள் எத்தனையோ தடுத்தும், பிரயோஜனப் படவில்லை. எவருடைய சொல்லையும் பாராட்டாமல், இவர் சேர்ந்து விட்ட படியால், தந்தையார் மிகுந்த கோபங்கொண்டு பத்து வருஷ காலம் இவரது முகத்திலே விழிக்காமல் இருந்து விட்டார். மேலும் தாம் இறந்த பிறகு தமது சொத்துக்கு விபின சந்திரர் உரிமை யுடையவராக மாட்டாரென்று உயில் எழுதி வைத்து விட்டார்.

            எவ்வளவு கஷ்டம் ஏற்பட்ட போதிலும், யாருடைய விரோதம் வந்த போதிலும் தமது மனச்சாக்ஷிக்கு விரோதமில்லாமல் தெய்வத்துக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்று சந்திரபாலர் நிச்சயம் செய்து கொண்டார்.

            1879-ம் வருஷத்திலே இவர் ஒரிஸ்ஸா மாகாணத்திலே *கடக நகரத்து ஹைஸ்கூல் ஒன்றிலே ஹெட்மாஸ்டர் வேலை பார்த்தார். அப்போழுது இவருக்கு வயது 21. 1880-ம் வருஷத்திலே ஸில்ஹெட்டில் இவர் தாமாகவே ஒரு ஹைஸ்கூல் ஸ்தாபனம் செய்தார். 1881-ம் வருஷத்தில் நமது மாகாணத்திலே பெங்களூரிலிருக்கும் ஆர்க்காட் நாராயணசாமி முதலியார் ஹைஸ்கூலிலே ஹெட்மாஸ்டரானார். இப்பொழுதுதான் இவரது முதலாவது விவாகம் நடைபெற்றது. சில வருஷங்களிலே தந்தையும், இவருடன் சமாதானமாய்ப் போய்விட்டார்.

            1890-ம் வருஷத்திலே இவரது முதல் தாரம் இறந்து விட்டதின் பேரில், 1891-ம் ஆண்டிலே இரண்டாம் தாரம் விவாகம் செய்து கொண்டார். இதைத் தவிர இவர் லாஹோர் “ட்ரைப்யூன்” பத்திரிகை முதலிய பல பத்திரிகைகளின் தலைவராக இருந்திருக்கிறார்.

            1898-ம் வருஷத்திலே இவர் பிரம ஸமாஜ ஆசாரியராக இங்கிலண்டு, அமெரிக்கா முதலிய தேசங்களிலே சென்று உபன்னியாசங்கள் புரிந்தார்.

            பாலிய முதலாகவே ஐரோப்பியர்கள் விஷயத்தில் மிகுந்த பக்தியும் மதிப்பும் கொண்டு வளர்ந்து நமது தேசத்திற்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் அது ஐரோப்பியரின் ஸஹவாஸத்தினாலேதான் ஸாத்தியமாகு மென்று நம்பிக்கை கொண்டிருந்த இவர், மேல்நாடுகளிலே யாத்திரை செய்ததினின்றும் ஐரோப்பியர்களின் ஸ்வபாவத்தை நன்கு தெரிந்தவராகி இனி இந்தியர்கள் தமக்குத் தாமே துணை செய்து கொண்டாலொழிய நற்காலம் பிறக்கமாட்டாதென்ற விசுவாசம் கொண்டு விட்டார். அதன் பேரிலேதான் 1901-ம் வருஷத்தில் இந்தியாவிற்கு வந்து, இவர் “நியு இந்தியா” என்ற புதிய கட்சிப் பத்திரிகையை ஸ்தாபனம் செய்தார்.

            விபின சந்திரர் பெங்காள ஜனத் தலைவர்களுக்குள்ளே மிகவும் உயர்ந்த தகுதிக்கு வந்து விட்டார். 1886-ம் வருஷத்திலே விபின சந்திரபாபு காங்கிரஸ் கூட்டத்திலே சேர்ந்து கொண்டார்.

            1887-ம் வருஷத்திலே சென்னையில் நடைபெற்ற காங்கிரஸில் இவர் “ஆயுத ஆக்டை” கண்டனம் புரிந்து செய்த பிரசங்கம் மிகவும் வியக்கத் தக்கதாக இருந்தது. அதுமுதல் இவர் காங்கிரஸ் விஷயங்களிலே மிகுந்த சிரத்தை பாராட்டி வருகிறார்.

            பிரம ஸமாஜத்தி முக்கியமான மெம்பர்களிலே பாபு விபின சந்திரர் ஒருவர். மதுபானத்தை வேரறுத்துவிட வேண்டுமென்னும் நோக்கத்துடன் வேலை செய்யும் கூட்டத்தாருக்கு இவர் ஓர் பூஷணம் போன்றவர்.

            ஸ்ரீ ஹனுமான் எப்படி ஆஹாரம் முதலிய எவ்விதமான் லோக போகங்களையும் இச்சிக்காமல் “ராம ராம” என்று தியானம் செய்துகொண்டே ஆனந்தமடைந்திருந்ததாக சொல்லப்படுகின்றதோ அதுபோல ஸ்ரீவிபின சந்திரரும் சதாகாலமும் பாரத நாட்டின் அபிவிருத்தியைப் பற்றி தியானம் செய்வதிலேயே நாள் கழிக்கின்றார்.

            ஹனுமானுக்கு எப்படி “ராமாமிருதம் ஜீவனம்” ஆக இருந்ததோ, அதுபோன விபின சந்திரருக்குப் “பாரதாமிருதம் ஜீவனம்” என்று கூறுதல் மிகவும் பொருந்தும்.

             

           

இந்திய தேசியத் தலைவர்கள் பற்றி பாரதியார்.

             மகாகவி பாரதியார் நம்முடைய நாட்டின் பெருமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட பல பெரியோர்கள் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். நாம் ஏன் பண்டைய பெரியோர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு விளக்கத்தையும் தருகிறார். அது ....

“அறிவுடையோரையும், லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப் போகும்”.

            ஆகவேதான் அவர்காலத்தில் வாழ்ந்த, அல்லது அதற்கும் முற்பட்ட பழம்பெரும் தலைவர்களைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிச் சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட பெருந்தலைவர்கள் சிலரைப் பற்றி பாரதி எழுதியிருக்கும் வரிகளை நாம் இப்போது பார்க்கலாம். முதலில் ......

லோகமான்ய பாலகங்காதர திலகர்.   

            நமது தேசாபிமான திலகமாகிய ஸ்ரீமத் பால கங்காதர திலகரின் 50-வது ஜன்ம தினம் புனா நகரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. “கால்” பத்திரிகையின் அதிபராகிய ஸ்ரீமத் பரஞ்ஜபேயும், வேறு பல மித்திரர்களும் ஆரம்பத்தில் இந்த யோசனையைத் தொடங்கினார்கள். உடனே ஒரு பொதுக்கூட்டம் கூட்டப் பெற்றது. ஸ்ரீபரஞ்ஜபே திலகரின் பிறந்தநாட் கொண்டாட்டத்தின் பொருட்டாகப் பணம் வேண்டுமென்று சொன்னவுடன், அந்த ஸ்தலத்தில் வைத்தே 750 ரூபாய் சேர்ந்து விட்டது. அதற்கப்பாலும் மேற்படி பெருங் காரியத்தின் பொருட்டுச் சிறிது சிறிதாகப் பணத் தொகைகள் சேர்ந்தன.

            ஸ்ரீமான் திலகரிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஒருவர் கேட்டபோது அவர் “எனக்கேன் இந்த ஆடம்பரமெல்லாம்? அந்தப் பணத்தை ஏதேனும் வேறு உபயோகமான காரியத்தில் செலவிடலாகாதா?” என்றனராம். ஸ்ரீதிலகர் சொல்லியும்கூட மேற்படி ஆலோசனையை பரஞ்ஜபே முதலானவர்கள் கைவிட்டுவிட வில்லை. தெய்வத்தினிடத்தில் சம்மதம் கேட்டுக் கொண்டா நாம் அதற்குப் பூஜை நடத்துகிறோம்?

            தெய்வ பூஜையைக் காட்ட்லும், இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீரபூஜை (Hero-worship) அத்தியாவசியமாகும். ராமன், அர்ஜுனன், சிவாஜி, பிரதாபர் முதலிய யுத்த வீரர்களும், புத்தர், சங்கரர் முதலிய ஞான வீரர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய தேசமானது இப்போது வீர சூனியமாயிப் போய் விட்டது. அந்த ஸ்திதியில் ஈச்வர கடாக்ஷத்தினால் உதித்திருக்கின்ற சாமானிய மஹான்களைக்கூட நாம் தக்கபடி கவுரவம் செய்யாமல் இருப்போமானால் நம்மை மிகவும் இழிந்த குருடர்களென்று உலகத்தார் நிந்தனை புரிவார்கள். வீர பூஜையானது ஒரு தேசத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும். கார்லைல் (Carlyle) என்ற ஆங்கிலேய ஞானியார், வீர பூஜையைப் பற்றி ஓர் முழு கிர்ந்தமெழுதியிருக்கின்றார். எந்தக் காலத்திலும், வீர பூஜை விஷயத்தில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்த நமது நாட்டார்கள், அது மிகவும் அவசியமாயிருக்கும் இந்தத் தருணத்தில் சும்மா இருந்து விடலாகாது. ஆதலால், பரஞ்ஜபே முதலானவர்கள் இந்த விஷயத்தில் தக்க சிரமமெடுத்துக் கொண்டமை பற்றி அவர்களுக்கு எமது மகிழ்ச்சி யறிவிக்கிறோம்.

            திலகர் இந்த தேசத்தினிடம் வைத்திருக்கும் அபிமானத்தையும், அவர் அதன் பொருட்டு அடைந்திருக்கும் கஷ்டங்களையும் விரித்துப் பேச வேண்டுமென்றால், நமது பத்திரிகை முழுமையும் இடம் போதமாட்டாது.

            ஆரம்பத்தில் இவருக்கு கவர்ன்மெண்டார் ஒரு ஸப்-ஜட்ஜி வேலை கொடுப்பதாகச் சொல்லியபோது இவர் அதனை விஷமாக எண்ணி வேண்டாமென்று மறுத்து விட்டார். 1897-ம் வருஷத்திலே பம்பாய் மாகாணத்து மூட அதிகாரிகள் இவரைப் படுத்திய பாட்டையெல்லாம் நினைக்கும்போதே மனம் பதறுகின்றது. அதற்கப்பால் இவர் மீது ஒரு பொய்க் கேஸ் கொண்டு வந்தார்கள். அதனால் இவருக் கேற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் வரம்பில்லாதவையாகும். இவற்றை யெல்லாம் இப்போது நினைப்பூட்டுதல் அவசியமில்லை.

            இந்த மஹான் நனவிலும், கனவிலும், பாரத தேசத்தின் க்ஷேமத்திற்கும், பெருமைக்கும் சுயாதீனத்திற்கும் பிரார்த்தனை புரிந்து வருகிறார். திலகர் சாமானியமாகத் தேசாபிமானிகளென்று சொல்லித் திரியும் கூட்டத்தாரைச் சேர்ந்தவ ரல்லர். பயங்காளித்தனத்தைப் புத்தி சாதுரிய மென்றும், ஆண்மை யற்றிருக்கும் அயோக்கியத் தன்மையைத் தீர்க்காலோசனையுடமை யென்றும் திலகர் நினைப்பவரில்லை.

            சுதேசீய தர்மத்துக்கு பிரதம குருவாக ஸ்ரீதிலகரைக் கருதலாம். மஹா வைதீகானுஷ்டானங் கொண்டவராகிய திலக ரிஷி தற்காலத்துப் போலி வைதிகர்களைப் போல கண்மூடித்தனமான அகந்தையும் பொறாமையும், ஹிருதயக் குறுக்கமும் உடையவரில்லை. இவர் 50 வருஷங்கள் இருந்து தமது வலிமையையும் ஞானத்தையும் தாய்த் தேசத்தின் அனுகூலத்திற்கு நிவேதனஞ் செய்து வந்ததுபோலவே இன்னும் எத்தனையோ வருஷ காலம் ஜீவித்திருந்து நமக்கு ஹிதம் புரியுமாறு செய்ய வேண்டுமென்று ஸர்வேசுவரனது திருவடியைப் பற்றிப் பிரார்த்தனை புரிகிறோம்.

            தனக்கென்ற எண்ணத்தை அடியோடு தொலைத்து, பிறர்க்கு என்று தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்த முற்றும் துறந்த முனிவர்களெல்லாம் காடே யாயினும், நாடே யாயினும், மாளிகை யாயினும், காராகிருகமாயினும் தமது திருத்தொண்டிற்குக் காலமும் இடமும் கண்டு ஓயாது பாடுபட்டு வருதல் சகஜமே யன்றோ? அவர் உண்பதும் உறங்குவதுமே பிறர் பொருட்டாயின், பின் அவரது பெருஐயைக் கணித்தற் கியலுமா? அத்தகையோர் இவ்வுலகத்து இடைக்கிடை உலவுவதா லன்றோ கொடுமை மிஞ்சிய பிரளய காலங்களிலும்கூட இப் புவியணு மனத்தினாலும் அறிவினாலும் கணக்கிடற்கரிய அண்ட கோடிக் குவியல்களின் நடுவில் அடிபட்டுத் தூள் மயமாகாது சுகமே சுழன்று கொண்டிருக்கிறது.

            இது பற்றி யன்றோ  பெரியோரும்

            “உண்டா லம்ம விவ்வுலகம்

            .............................................. 

            தனக்கென முயலா நோன்றாட்

            பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

என்று கூறியுள்ளார்.

            இப்போது நமது தேச குரு திலக மகரிஷியும் மாண்டலேயில் உடம்பு சுகமாகவே காலங் கழித்து வருகின்றார். தமது ஆச்சிரம வாசம் வீணாகாமல் சிஷ்ய கோடிகளுக்குப் பயன்படுமாறு ஸ்ரீ கிருஷ்ண பகவான் உபதேசித்த ‘பகவத் கீதை’க்குத் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டிருக்கிறார். இவ் வேலை ஓய்வு ஒழிவில்லாமல் நடந்து வருகிறதாம்.

                                    (நன்றி: பாரதியார் கட்டுரைகள்)