ஸ்ரீமான் ஜினராஜ் தாஸரின் கருத்து
"கல்வியைப் பற்றிய மூலக் கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் பொது. ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும் போது இடத்தின் குணங்களுக்கும்
ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசியமாகி
விடுகிறது. இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப் பயிற்சி முறைகளும்
கட்டாயமாக ஏற்பட்டிருக்கின்றன. இத்தாலியில் அவை புறக்கணிக்கப் படுகின்றன. அங்கு கற்பனா
சக்தியும், சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்ட கல்வியே பயிற்றப் படுகிறது.
இதன் காரணம்: இங்கிலாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதலால், அநேக ஜனங்கள் வெளித்
தேசங்களில் குடியேறி ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி
முக்கியமாகக் கருதுகிறது. அமெரிக்காவில், ஜனாதிகாரமே மேலான ராஜ்ய தர்மமென்றும், எத்தனை
பெரிய ஏழையும் எத்தனை பெரிய செல்வனும் தம்முள் ஸமமேயன்றி அவர்களில் ஏற்றத்தாழ்வு
கிடையாதென்றும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத் தகுந்த கூலிதரும்
எவ்விதமான கைத்தொழிலிலும் அவமானத்துக்கு இடமில்லை யென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக்
கற்பிக்கிறார்கள். இந்தியாவில் மாத்திரம் சுதேசியக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி
முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரம்
ஹிந்து தேசசரித்திரமும் தேச பாஷைகளும் கற்றுக்கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசிய
ஞானம் ஏற்படாது. சென்னையில் 'பிரஸிடென்ஸி காலேஜ்' என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின்
கட்டடம் நமது தேசமுறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலிய வழியொன்றை அனுஸரித்தது. இங்கிலாந்தில்
ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் சர்வகலா சங்கங்களின் கட்டிடம் இத்தாலிய முறையிலா கட்டியிருக்கிறார்கள்? அதுபோலவே,
பாரததேச முறைமைப்படி கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக்
கல்வி என்று சொல்லத் தகுந்த யோக்யதை பெறாது."
இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம்
செய்திருக்கும் ஒரு வ்யாசத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது.
நமது தேசத்து முறைப்படி கட்டிய கட்டிடத்திலேயன்றிப் பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய
மனைகளிலேகூட தேசீயக் கல்வி பயிற்றுதல் ஸாத்ய மில்லை யானால், ஓஹோ, பாஷை விஷயத்தை என்னென்று
சொல்வோம்! தமிழ் நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே
தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
தமிழ்நாட்டுப்
பெண்கள்
தமிழ்நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களுடைய யோசனைகளையுந்
தழுவி, நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆகமாட்டாது. தமிழ்க் கல்விக்கும்,தமிழ்க்
கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோயில், தமிழரசு,
தமிழ்க் கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும்
நிற்பது தமிழ்மாதரன்றோ? இப்போது ஸ்ரீமதி ஆனி பெஸண்ட் தம்முடன் திலகர், ரவீந்த்ரநாதர்
முதலிய மஹான்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு மீளவும் எழுப்பியிருக்கும் தேசீயக் கல்வி
முயற்சியில் ஏற்கெனவேநீதிபதி ஸதாசிவ அய்யர் பத்தினி ஸ்ரீமதி மங்களாம்பாள் முதலிய
ஓரிரண்டு ஹிந்து ஸ்திரீகள் ஸர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், இது போதாது. தேசீயக் கல்வியின் தமிழ் நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்படவேண்டும்.
அதன் ஆட்சி மண்டலத்தில் பாதித் தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்திரீகள் கலந்திருக்க
வேண்டும். ஒரு பெரிய சர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்தக்க
கல்விப் பயிற்சியும் லௌகிகஞானமும் உடைய ஸ்திரீகள் இப்போது தமிழ் நாட்டில் பலர் இலர்
என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ் நாடு முழுதும் தேடிப் பார்த்தால் ஸ்ரீமதி
மங்களாம்பாளைப் போல இன்னும் பத்து ஸ்திரீகள்அகப்படமாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை.
எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில் பத்துப் பெண்களைக் கூட்டி நடத்தவேண்டிய
காரியங்களைப் பச்சைத் தமிழில் அவனிடம் கூறினால். அதினின்றும் அவர்கள் பயன்படத்தக்க
பல உதவி யோசனைகளையும் ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும்
சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேகமில்லை. முன் தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ?
ஓளவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?
மீர்ஜா ஸமி உல்லா பேக்
முன்பு மகம்மதிய ஸர்வ கலா சங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்
எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், 'ஜாதி
மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழமாட்டார்களென்று பிறர்
கூறும் அவச்சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத்
தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள்.
இந்தத் தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது' என்கிறார். தேசீயக் கல்வியும்
ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை
அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா
சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய
அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்யமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமான காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது
என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார்.
'காளயுக்தி' என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம் இந்த
வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.
பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கள் சேர்த்தும், ஹம்ஸ
யோகி என்பவரின் 'கீதா ரஹஸ்யம்' என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18அத்யாயக்
கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்ததர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப்
போட்டிருக்கிறார்கள்.
இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அந்த
முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிறார்.
இப்படிப்பட்ட மணி அய்யரும் ஆனி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும் தேசீயக்கல்வி முயற்சியில் பெண்களின் ஆதிக்யம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே
விளங்கும்.
மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில் 'ஓம் நம:
ஸ்ரீ பரமர்ஷிம்யோ யோகிப்ய; (யோகிகளாகிய தலைமை முனிவரைப் போற்றுகிறோம் ஓம்) என்று
அச்சிட்டு, அடியில்,
ஸ்ரீீம்; ஸ்ரைம்; ஸ்ரைம்; ஓம் - தாஸ:
என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இம் மந்திரங்களின் பொருள் யாதெனில் - ஸ்ரீம் - லக்ஷ்மியை (ஸ்ரீீ- திரு என்றவை ஒரு மொழியின் வடிவங்கள்.) ஸ்ரைம் - ஆச்ரயிக்கிறேன்: சார்ந்துநிற்கிறேன்; ஆதலால், ஸ்ரைம் - அசைகிறேன், ஓம் - ப்ரணவம் = ப்ர+நவம்=மேன்மேலும் புதிய நிலை.
எப்போதும் க்ஷணந்தோறும் புதிய புதிய உயிருடன் என்றும் அழியாத அமிர்த
நிலை பெற்று விளங்குவேன்.
தாஸ: = அடியேன்.
இப்பொருளுடைய மந்திரங்களை துர்க்காஸ்துதி சேர்ந்த கீதைப் பதிப்புடன்
ஆரம்பத்தில் போட்டது மிகவும் பொருத்தமுடைய செய்கையே யாம்.
மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள்.
ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவ வாழ்க்கை. "வந்தே மாதரம்" என்பதும்
"ஓம் ஸ்ரீம்" என்பனவும் நம்முடைய தேசக் கல்விச்சாலைகளின் வாயிற் கதவுகளிலும்
கொடிகளிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம்.
மேலும் அந்தப் பதிப்பின் மூன்றாம் ஏட்டின் முதுகுப் புறத்தைத் திருப்பினால்,
அதில் நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன் நடத்த, அதில் அர்ஜூனன் வீற்றிருப்பதைப் போல்
சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது ஆண்மக்கள் ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த
வேண்டிய நெறியைக் காட்டுவது.
ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் பாவனை செய்யவேண்டும்? நர நாராயணரைப் போலே.
நீ உனது மித்திரனைக் கண்ணனாகவும், உன்னைப் பார்த்தனாகவும், அவன் உன்னைக் கண்ணனாகவும்,
தன்னைப் பார்த்தனாகவும் உணர்ந்து கொள்ள வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும்
குறிக்கப்படுவது.
இந்த நெறி தேசீயக் கல்விச் சாலைகளில் கற்பிக்கும் விஷயங்களுள் ஒன்றாகக்
கற்பிக்கப்படவேண்டும்.
ஹிந்து முஹம்மதிய
ஸமரஸம்
தேசீயக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ,
அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும்.
மதபேதங்களை
மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய
நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும் பட்டாணிய அராபிய பாரஸீக
மொகலாய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால்,
ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர்ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்;
சீனத்தில் பிறந்தவன் சீனன்; ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச
எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக்
கூடாது?
இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில்
பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.
(2) கிறிஸ்தவர்
தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள்
சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக் கல்வியில் ரிக்வேதமும்,
குரானும், பைபிலும் ஸமானம். கிறிஸ்து,கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில்
ஹிந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.
(3) மனுஷ்யத்தன்மை
ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட
புதர்ச்சாதியார் (Bushmen) - எல்லாரும் பொதுவில் 'மனிதர், 'ஆதாம் ஏவா வழியில்
பிறந்தவர்கள்' என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் 'மனிதர் எல்லோரும் ஒன்று'
என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோருமே
காச்யப ப்ரஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
வேதாந்த சாஸ்த்ரமோ பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய
ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே யன்றி வேறல்ல என்று பல நூற்றாண்டு களாகப்
பறையறைந்து கொண்டு வருகிறது.
ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக்
கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள் சொல்லுவதை இந்த நாட்டில்
எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று
நம்புகிறேன்.
கிராமப்
பள்ளிக்கூடங்கள்
அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
'கான்பரென்ஸ்' என்றும், 'மீட்டிங்' என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை
சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போடுவதற்கு யாதொரு
வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று
திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும்,
நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு
வழி பிறக்கவில்லையே! ஏன்? எதனாலே? காரணந்தான் என்ன?
ஜாதி என்ற சொல் இரண்டு அர்த்தமுடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள்
ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு; வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோளஜாதி என்பது
போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பாரஸிக
ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பது போல. இவ்விரண்டிலும் அதிக
அநுகூல மில்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத தாகூருடைய கக்ஷி.
அமெரிக்காவிலே பிறந்தவன் தான் அமெரிக்க ஜாதியென்றும் ஆங்கில சாதியில்லை
என்றும் நினைத்துக் கொள்கிறான். இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயனுக்கும் குடியரசுத் தலைவர்
வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாஷை எதிலும் வேற்றுமை கிடையாது ஆனால், தேசத்தை
யொட்டி வேறு ஜாதி 'நேஷன்'. இந்த தேச ஜாதிப் பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம்போல்
ஆதரிக்கப் படுகிறது. அங்கு, யுத்தங்களுக்கு இக்கொள்கை ஒரு முக்கிய காரணம். எல்லா
தேசத்தாரும் சகோதரர் என்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றே யென்றும். ஆதலால் தேச வேற்றுமை
காரணமாக ஒருவரை ஒருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழையென்றும் ஸ்ரீீ தாகூர்
சொல்கிறார்.
அமெரிக்காவிலே ஒரு சபையிலே மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகையில்,
அந்த தேசத்தான் ஒருவன் இவரை நோக்கி "இவ்விதமான கொள்கையிலிருந்தது. பற்றியே உங்கள்
தேசத்தை அன்னியர் வென்று கைப்பற்றிக்கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்"
என்றான். "நாங்கள் இப்பொழுது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும், எங்கள்
பூமி புண்யபூமி. உங்களுடைய செல்வத்தின் மேலே தெய்வ சாபம் இருக்கிறது" என்று
ரவீந்திர தாகூர் அவனுக்கு மறுமொழி சொன்னாராம். அதாவது, இந்த நிமிஷத்தில் செல்வத்திலும்
பெருமையிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்க தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும்,
இந்த நிலைமை எப்போதும் மாறாமலிருக்கும் என்று அமெரிக்கா நினைப்பது பிழை. நாங்கள்
தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பி யிருக்கிறோம். கீழே விழுந்தாலும் மறுபடி எழுந்து விடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோகதி, ஆதலால், இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை
அனுசரித்து, உலகமுழுதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் ஸமான மென்றும் தெரிந்துகொண்டு,
பரஸ்பரம் அன்புசெலுத்தினால் பிழைக்கலாம்' என்று ரவீந்தரர் அவர்களுக்குத் தர்மோப தேசம்
செய்கிறார்.
வெளி தேசத்தாருக்கு தர்மோபதேசம் செய்கையில், நமது நாட்டில் குற்றங்கள்
நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? இங்கே, அனாவசியமான ஜாதி விரோதங்களும் அன்புக்
குறைவுகளும் அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன்பிறப்பையும்
நிலைநாட்டுவது நம்முடைய கடமையன்றோ?
எது எப்படியானாலும், இந்த தினத்தில் இந்த க்ஷணத்தில் நாமெல்லோரும் பறையர்,
பார்ப்பார் எல்லோரும், ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. இப்போது எங்களுக்குஅதிகாரிகள்
தயவு செய்யவேண்டிய விஷயம் என்ன வென்றால்:- எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டு
பிரதி நிதிகள் குறிக்கவேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்த தொரு மகாசபை வேண்டும்.
ராஜ்யத்தில் வரவு செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மகாசபையார் இஷ்டப்படி
நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேய ஸாம்ராஜ்யத்தை விட்டு விலகவேண்டும்
என்ற யோஜனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள்
நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் விண்ணப்பம் செய்கிறோம். விடுதலை விண்ணப்பத்துக்கு
நல்ல உத்தரவு கொடுக்க வேண்டும்.
காள யுக்தி
காளயுக்தி என்பது கால யுக்தி; அதாவது, காலத்தின்பொருத்தம்; காலம் இந்த
வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப்பெருஞ் செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.
தேசீயக் கல்வி, மனுஷ்ய ஜாதியின் விடுதலை,இவ்விரண்டும் பெருங்காரியங்களைத்
தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.
இவற்றுள் மனுஷ்ய ஜாதியின் விடுதலை நிறைவேற வேண்டுமாயின் அதற்கு பாரத
தேசத்தில் விடுதலை இன்றியமையாதமூலாதாரமாகும்.
இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின்அதற்கு தேசீயக் கல்வியே
ஆதாரம்.
"அ......................................................................ன்"
மேலே காட்டிய குறியின் பொருள் யாது?
தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல்
னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும்.பாடசாலைகள் ஸ்தாபிக்கப் பட்டால்,
அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும்
தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; "ஸ்லேட்""பென்சில்" என்று சொல்லக்
கூடாது.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Tuesday, May 26, 2015
68. சமூகம் - தேசீயக் கல்வி (2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment