பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, August 27, 2013

நடராசபத்து

சிறுமாவூர் முனுசாமி முதலியார் என்பவர் இயற்றிய நடராசப் பத்து எனும் இந்தப் பத்துப் பாடல்களும் சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது பாடப்பட்டவை.

                                                                         ஓம்
                                                                   சிவமயம்

                                                                நடராசபத்து

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
பிறவும்நீ ஒருவநீயே,
பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
பெற்றதாய் தந்தைநீயே,
பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                             1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட 
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                                2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                            3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                            4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ 
தந்தைநீ மலடுதானோ,
விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                             5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                               6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
வனோ தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                            7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                           8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                                9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                             10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியனிவரை,
சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.                                                               11

courtesy:  Project Madurai.

கம்பன்

                           கம்பனின் காப்பியச் சிறப்பு

கம்பன் ஒரு ஒப்பற்ற புலவன். சங்க காலத்துக்கும், புதிய யுகத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 12ஆம் நூற்றாண்டில் இருந்த தெய்வப் புலவன். தமிழோடு வடமொழியையும் போற்றி வந்த காரணத்தால் தமிழகத்தில் பல நூல்கள் வடமொழியிலினின்றும் தழுவி இயற்றப் பட்டிருக்கின்றன. தமிழ்ப் புலவர்கள் சம்ஸ்கிருதம் கற்கவில்லையென்றால் நமக்கு ஒரு கம்ப ராமாயணம் ஒரு வில்லி பாரதமோ அல்லது நள வெண்பாவோ கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த வரிசையில் கம்பனின் காப்பியச் சிறப்புக் கருதியே மகாகவி பாரதி 'கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று தலை நிமிர்ந்து சொல்லுகிறான். அந்த கம்பனின் காப்பியத்தில் தொட்ட இடத்திலெல்லாம் அழகும், கவிச்சுவையும் மிளிர்வதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் கம்பனின் வர்ணனைகளைப் பார்க்கும்போது, இப்படிக்கூட சிந்திக்க முடியுமா என்று வியப்படைகிறோம். அப்படிப்பட்ட சிறப்பான காட்சிகள் காவியம் முழுவதும் நிரம்பிக் கிடந்தாலும், அவற்றில் என் மனத்தைக் கவர்ந்த சில இடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

காவியத்தின் தொடக்கத்தில் நாட்டு வளம் குறித்து கம்பனின் வர்ணனையிலேயே அவனுடைய கற்பனை எட்டமுடியாத உயரத்துக்குச் சென்றுவிடுகிறது. கோசல நாட்டில் வறுமை என்பதே இல்லை என்பதைச் சொல்ல வந்த கவிஞன் அங்கு இரந்துண்பார் எவருமே இல்லை என்கிறான். இரப்பார் எவருமில்லை என்பதால் வள்ளல் தன்மையோடு கொடுப்பார் எவரும் இல்லையாம். பகை இல்லை என்பதால் அங்கு போர் என்பதே இல்லை, பொய் பேசுவோர் எவருமே இல்லையென்பதால் அங்கு வாய்மையின் சிறப்பு வெளிப்படவில்லை, மக்கள் கல்வியில் தேர்ந்தவர்களாக இருப்பதால் அறிவின் மேம்பாடு வெளிப்படவில்லை. இப்படி விளைவைச் சொல்லி வினைகள் எவை என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர். அந்த சிறப்பு மிக்க கோசல நாட்டுக்கு மன்னனாக இருப்பவன் தசரதன். அவன் அந்த நாட்டு மக்களின் உயிர்கள் எல்லாம் ஒடுங்கி அடங்கும் உடலாக வாழ்ந்தான் என்கிறார், நாட்டுக்கு ஏதேனும் தீங்கு விளையுமென்றால், மன்னன் அவற்றைத் தீர்க்கும் மருந்தாக இருந்தானாம். இதுபோன்ற ஒப்பீடுகள் எல்லாம் எந்தக் காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திருக்கிறது அல்லவா? 

விசுவாமித்திர முனிவர் இராம இலட்சுமணர் இருவரையும் கானகத்தில் தான் நடத்தும் வேள்வியைக் காப்பதற்காக அழைத்துக் கொண்டு போகும்போது தாடகை எனும் அரக்கியைப் பற்றிக் கூறுகிறார். அந்தத் தாடகை எத்தனை அவலட்சணமானவள், கோரமானவள் என்பதைச் சொல்லப் புகுந்த முனிவர், இராமனை என்ன சொல்லிப் புகழ்கிறார் தெரியுமா? இராமா! உன் அழகைக் கண்டு பெண்கள் மோகிப்பது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ஆடவர்களாகப் பிறந்தவர்கள்கூட உன் அழகைக் கண்டு மயங்குமளவுக்கு வீரம் செறிந்த தோளையுடையவன் என்கிறார். அப்படிப்பட்ட அழகு தான் தெய்வீக அழகு என்பதில் கம்பருக்கு உறுதியான எண்ணம். பெருமாளின் அழகை வர்ணித்துக் கொண்டே வந்த ஆழ்வார், ஒரு கட்டத்தில் அவன் அழகை வர்ணிக்க முடியவில்லை என்பதற்காக "ஐயோ! என்ன சொல்லி அவன் அழகை வர்ணிப்பேன்" என்றாராம். அந்த நிலைமையைத்தான் கம்பரும் இங்கே அடைகிறார். 

 தாடகையை நான்கே வரிகளில் படம்பிடித்துக் காட்டி விடுகிறார் கம்பர். "இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள் மறக்கடை அரக்கி, வடவைக்கனல் இரண்டாய் விறைக்கடல் முளைத்தென வெருப்பு எழ விழித்தாள்". கடுமையான கோபத்தால் நெறித்த புருவங்கள்; கோரைப் பற்கள்; வடவாக்கினி தீ இரு கண்களாக; ஏழுலகமும் கேட்டு ஆடும்படியாகக் கர்ச்சனை. இப்படித்தான் நமக்கு அந்த தாடகையை அறிமுகம் செய்கிறார். அந்த தாடகை மீது இராமபிரான் ஒரு அம்பைச் செலுத்துகிறார். அது வேகமாகச் செல்லுகிறது. எத்தனை வேகமாகச் செல்லுகிறது? அந்த வேகத்தை எதனோடு கம்பர் ஒப்பிடுகிறார் என்றால், "சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்" என்கிறார். ஒருவன் சொல்லும் சொல்லுக்கு என்ன வேகம் உண்டோ அந்த வேகத்தோடு அவன் அம்பு தாடகை மீது பாய்கிறது. அந்தச் சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம், அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விட்டதும், அது கல் ஒக்கும் அவள் நெஞ்சில் புகுந்து, அங்கு தங்காமல் கழன்று போய்விடுகிறதாம். எதைப் போல தெரியுமா? "புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்" போல இந்தக் காதில் புகுந்து அந்தக் காதின் வழியாகப் போவது போல் அந்த அம்பு உள் நுழைந்து கழன்று புறம் சென்று வீழ்ந்தது என்கிறார். 

தாடகை வதம் முடிந்த பின் விசுவாமித்திர முனிவர் இராம இலட்சுமணருடன் மிதிலையில் அந்த நாட்டு மன்னன் ஜனகன் வைத்திருக்கும் சிவதனுசைக் காண அழைத்துச் செல்கிறார். வழியில் இராமன் கால் தூசு பட்டு ஒரு கல் பெண்ணாகி எழுந்து நின்றாள். அவள்தான் அகலியை. அவள் வரலாற்றைச் சொல்லி விட்டு இராமனின் புகழ ஒரு பாட்டில் சொல்கிறார் கம்பர். என்ன அழகு? "இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே, உன் கைவண்ணம் அங்க்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்". தாடகை மேல் அம்பு எய்தபோது உன் கைவண்ணம் கண்டேன், இங்கு உன் பாததூளி பட்டு ஒரு பெண் எழுந்தபோது உன் கால்வண்ணம் கண்டேன் என்று முனிவர் சொல்வதாக கம்பர் அழகுபட கூறுகிறார். 

மிதிலை மா நகர், அங்கு ஜனக மகாராஜன் தன்னுடைய சிவதனுசை எடுத்து வளைக்க எல்லா தேசத்து மன்னர்களையும் அழைத்திருந்தார். ஒருவராலும் அந்த வில்லை எடுக்கக்கூட முடியவில்லை. இராமபிரானைப் பார்த்து விசுவாமித்திர முனிவர் கண்களால் ஜாடை காட்டி, போ, எடுத்து வில்லை வளைத்து அம்பினைப் பூட்டு என்கிறார். உடனே இராமபிரான் எழுந்து நடக்கிறான். அந்த அழகைக் கம்பர் சொல்கிறார், "மாகம் மடங்கலும், மால் விடையும், பொன் நாகமும், நாகமும் நாண நடந்தான்" என்று.மாகம் மடங்கலும் என்றால் சிறப்புப் பொருந்திய சிங்கம் என்றும், மால் விடையும் என்றால் பெருமையுள்ள ரிஷபம் என்றும், பொன் நாகமும் என்றால் பொன்னிறமான மகாமேரு மலை என்றும், மற்றொரு நாகம் இங்கு யானை எனவும், இவை அத்தனையும் ஒருங்கு நடந்தாற்போல இராமன் நடந்தான் என்கிறார். வில் வைத்திருந்த பெட்டியை அடைந்த இராமன் அதனை ஒரு கையால் எடுக்கிறான், அதன் ஓர் முனையைக் காலில் வைத்து அழுத்திக் கொண்டு, நாணை இழுத்து அதில் அம்பை ஒரு கையால் பூட்டியதைக் கூட சரியாக ஒருவரும் கவனிக்க முடியாத கண நேரத்தில், ஒரு பெரும் ஓசை கேட்கிறது, அங்கு அந்த சிவதனுசு ஒடிந்து வீழ்வதைக் கன்டனர் இவ்வளவும் ஒரு கணப்போதில் நடந்து முடிந்து விட்டது என்பதைக் கம்பர் வாக்கால் பார்க்கலாம். "தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில், மடுத்ததும் காண் நுதி வைத்ததும் நோக்கார், கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்." இங்கு சொற்களிலேயே அது நடந்த விதத்தைப் படம் பிடித்துக் காட்டும் அழகை என்னவென்று சொல்வது? 

திருமண இல்லம். மாப்பிள்ளை வீட்டாருக்குத் தங்கள் பிள்ளையின் தோற்றம், கம்பீரம் இவற்றில் பெருமை, பெண் வீட்டாருக்கோத் தங்கள் பெண்ணின் அழகு, பண்பு இவற்றில் நாட்டம். இராமபிரான் திருமணத்திலும் இந்த நிகழ்வு இல்லாமல் இல்லை. இதோ கம்பர் அந்தக் காட்சியை இப்படி வர்ணிக்கிறார். "நம்பியைக் காண நங்க்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும், கொம்பினைக் காணும் தோறும், குரிசிற்கு அன்னதேயால், தம்பியயிக் காண்மின் என்பார், தவம் உடைத்து உலகம் என்பார், இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்." இராமனைப் புகழ்வதா, சீதாபிராட்டியைப் புகழ்வதா, தம்பி இலக்குவனைப் புகழ்வதா அல்லது அவர்களை இந்த நகருக்கு அழைத்து வந்த முனிவனைப் புகழ்வதா என்று மக்கள் கூட்டத்தில் போட்டா போட்டி. 

இராமன் வீதியில் நடந்து செல்கையில் மக்கள் அவரைக் கண்டு மகிழ்ந்து போகின்றனர். முழுமையாக இராமனை யாருமே பார்க்கவில்லையாம். காரணம் அவர்கள் பார்வை ஓரிடத்தில் மட்டும் தங்கி விடுகிறதாம். கம்பர் சொல்கிறார். "தோள் கண்டார், தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதே வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத் தன்னன் உருவு கண்டாரை யொத்தார்". 

அறுபதினாயிரம் ஆண்டுகள் இந்த பூமியை அறவழி பிறழாமல் ஆண்டு வந்த தசரதன் ஒரு நாள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறான். அப்போது அவனது காதருகில் ஒரு தலைமுடி வெண்மையாக இருந்ததைக் கண்டதும், அவன் எண்ணினான், தனக்கு முதுவை வந்துவிட்டது, ராஜ்ய பாரத்தை இனி தன் மகன் இராமனிடம் கொடுத்துவிட வேண்டுமென ஒரு கணத்தில் முடிவெடுத்தான் உடனே தனது மந்திராலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறான் என்கிறார் கம்பர். இராமன் தந்தையை வந்து கண்டதும், தசரதன் அவனைத் தன் தோளோடு தோள் வைத்துத் தழுவுகிறான். இது எப்படி இருக்கிறதாம்? கம்பர் சொல்கிறார், தான் இது நாள் வரை கட்டிக் காத்த இந்த சாம்ராஜ்ய பாரத்தை இந்த இராமன் தாங்க வல்லவந்தானோ என்று தன் தோளோடு அவன் தோளை வைத்து அளந்து பார்த்தது போல இருந்தது என்கிறார். என்னே உவமை! 

கைகேயி தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், இராமன் கானகம் செல்ல வேன்டும் என்று கணவனிடம் வரம் கேட்பதற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டு தரையில் படுத்துக் கிடக்கிறாள். அந்தக் காட்சியைச் சற்றுப் பார்த்தால் தெரியும் அதன் அழகு. "நவ்வி வீழ்ந்தன, நாடக மயில் துயின்றென்ன, கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்க்கும் என்று அயோத்தி வந்து அடைந்த தன்வை ஆம் எனக் கிடந்தனள், கேகயன் தனயை." மான் எப்போதும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும், அது கீழே விழுந்து கிடந்தாற்போலே, தோகை விரித்தாடும் மயில், அப்படி ஆடாமல் கீழே விழுந்து துயில் கொள்வதைப் போலே, செந்தாமரையில் வாசம் செய்யும் திருமகளாம் லக்ஷ்மி அயோத்தி நகரைவீட்டு நீங்கவும், அவள் இடத்திற்கு அவள் மூத்தவள் மூதேவி உள் நுழைந்தாற்போலே கேகயன் மகள் கீழே வீழ்ந்து கிடந்தாள் என்கிறார். 

கைகேயி தன் மகனுக்கு ராஜ்யம் என்று கேட்டதும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தசரதன் அவள் கேட்ட வரத்தின் விவரங்களை கேட்கிறான். கைகேயி சொல்கிறாள், "ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என் சேய் உலகு ஆள்வது" சரி! அவ்வளவுதானே, உன் மகன் பரதனே நாட்டை ஆண்டு கொள்ளட்டும் என்று ஓரளவு மனம் தெளிந்த நிலையில், அடுத்து வருகிறது ஒரு பேரிடி. "சீதை கேள்வன் ஒரு வரத்தால் போய் வனம் ஆள்வது" இப்படி அவள் சொன்னதும்தான் தசரதன் இடியோசை கேட்ட நாகம் போல அரற்றி வீழ்ந்தான். அப்படிச் சொன்னவள் யார்? கைகேயி, அவளை கம்பர் சொல்வது "தீயவை யாவையினும் சிறந்த தீயாள்" என்று. 

நிகழ்ச்சியின் தீவிரத்தை நன்கு உணர்த்தக் கூடிய சொற்கள், விளக்கங்கள். இவைதான் கம்பச் சித்திரம் என்பதோ? இராமன் வரவழைக்கப்படுகிறான். கைகேயி இராமனிடம் உன் தந்தை உனக்கு இரண்டு கட்டளைகளை இட்டிருக்கிறார் என்கிறார். அவர் எனக்களித்த ஓர் வரத்தால் என் மகன் பரதனே நாடாளவும் என்று அவள் சொன்ன மாத்திரத்தில் இராமன் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என் தம்பி பரதன், நாட்டையாள மிகப் பொருத்தமானவன் என எண்ணுகிறான். அடுத்து அவள் சொல்லுகிறாள், நீ போய் பதினாங்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்று தவம் பல இயற்றி திரும்ப வேண்டும் என்று அந்த இராமனது முகம் அப்போது எப்படி இருந்தது. அதைக் கம்பர்தான் சொல்ல வேன்டும். "இப்பொழுது எம்மனோரால் இயம்புவது எளிதோ யாரும், செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு, பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா". அடடா! இப்படிக்கூட மனிதன் உணர்வுகள் இருக்க முடியுமா? உனக்கு ராஜ்யாபிஷேகம் என்றபோது முகம் எப்படி சலனமின்றி மலர்ந்திருந்ததோ, அதே போல, நாடு உனக்கு இல்லை, காடுதான் என்றபோதும் அவன் முகம் அன்றலர்ந்த செந்தாமரை மலரை ஒத்திருந்தது என்றால் என்னே அவனது குணவிசேஷம். அதை கம்பரால் மட்டுமே எடுத்துக் காட்ட முடியும். 

பெரியவர்களைக் காண வருவோரில் பலர் தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களுக்காக சிபாரிசு வேன்டி வருவார்கள். ஆனால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல், வந்திருப்பவரைப் பற்றிய முழு விவரமும் தெரியாமல், உள்ளுணர்வு ஒன்றே வந்திருப்பவர் பரம்பொருள் என்பதான உணர்வுடன் இராமனைக் கானகத்தில் பார்க்க வருகிறான் சிருங்கிபேரம் எனும் இடத்தின் வேட்டுவ மன்னனான குகன். அவன் கூட உறவினர்கள், பரிவாரங்கள் புடைசூழ அந்த அமைதியான கானகத்தில் முனிவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வருகிறான். ஓர் ஆசிரமத்தில் முனிவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறான் இராமன். வாயிலில் பெருத்த ஓசை. இலக்குவன் போய் பார்க்கிறான். குகன் தன் பரிவாரங்களோடு வருவது கண்டு யார் என்கிறான். அதற்கு குகன் "ஐயனே, கங்கை நதியில் நாவாய்கள் ஓட்டும் வேட்டுவன் நான். தங்கள் கழல் சேவிக்க வந்தேன்" என்கிறார். 

அவனுக்கு இலக்குவன், இராமன் பேதம் கூட புரியவில்லை. இலக்குவன் சற்று இருங்கள் என்று உள்ளே சென்று இராமனை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இராமன் குகனை அமரச் சொல்லியும் அவன் அமரவில்லை. குகன் சொல்லுகிறான், "ஐயனே, தேவரீர் அமுது செய்து அருளும்படியாகத் தங்க்களுக்குத் தேர்ந்தெடுத்த தேனும், மீனும் கொண்டு வந்திருக்கிறேன். அமுது செய்தருள வேண்டும்" என்கிறான். என்னவொரு அப்பாவித்தனமான அன்பு, மரியாதை, பக்தி. புன்சிரிப்போடு இராமன் முனிவர்களை மெல்லப் பார்த்தான். தவ ஒழுக்கம் பூண்டுள்ள நான் உண்ணுதற்கு இயலாதவற்றை கொண்டுவந்து படைக்கும் இவனது வெள்ளை உள்ளத்தையும், மிகுந்த அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்ந்து போகிறான். இராமன் சொல்கிறான், "உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்தாகவே எண்ணிக்கொள்" எனும்போது அவன் மனம் அன்பால் கசிந்து போகிறது. பலன் கருதாமல் பிறர் செய்யும் உதவி உலகத்திலுள்ள வேறு எந்த பொருளிலும் மதிப்பு வாய்ந்தது என்பதை இங்கு கம்பர் உணர்த்துகிறார்.


மங்கையர்க்கரசியார்

  ஆடிப்பூரத் திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில், அறம்வளர்த்தநாயகி சந்நிதி விழா மண்டபத்தில் நான் "மங்கையர்க்கரசியார்" எனும் தலைப்பில் உரையாற்றியது இது:‍                    
                       மங்கையர்க்கரசியார்

மங்கையர்க்குத் தனியரசி வளவர் குலக் கொழுந்து
மன்னவர் சூழ் தென்னவர்க்கு மாதேவியார் மண்
சங்கை கெடவமண் சமயஞ் சாடவல்ல
சைவ சிகாமணி ஞானத் தமிழிற் கோத்த
பொங்கு திருவருளுடைய போதவல்லி
பொருவி நெடுமாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட நருளாலின்பஞ்
சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.

பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணி செய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே.

எல்லாம் வல்ல ஐயாற்றில் குடிகொண்ட அருள் மிகுந்த பிரணதார்த்திஹரன் எனும் ஐயாறப்பர் அருளாலும், கைலை மலையில் அமர்ந்து இப்பெருவுலகைக் காத்திடும் சிவபெருமான் அருளாலும் இறைவர்க்குப் பணிசெய்த அற்புதமான பெண்டிரில் ஒருவரான மங்கையர்க்கரசியார் பற்றி பேச முன்வருகின்றேன்.

சமண சமயத்தின் கை ஓங்கி சைவம் மங்கியிருந்த சமயமொன்று உண்டு. அதிலும் மன்னர்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்குமானால் கேட்கவா வேண்டும். பண்டைய தமிழ் நாட்டில் அவ்வப்போது சைவத்துக்குத் தாழ்வு வந்ததுண்டு. அந்த நேரத்திலெல்லாம் இறைவனின் அருட்பெற்ற பெரியோர்கள் வந்து சைவத்தைக் காத்து மனிதர் உய்ய நல்வழி காட்டிச் சென்ற வரலாறு உண்டு.  அப்படி ஒரு நிலைமை தென் தமிழ் நாட்டுக்கு ஏற்பட்டிருந்தது. சைவத்துக்கு ஏற்பட்ட இருண்ட காலமாக அந்தக் காலம் இருந்தது.

தென் தமிழகத்தின் தலை நகராம் மதுரையம்பதி தமிழ்ச்சங்கங்கள் கண்ட அதிசய நகரம். அங்கு சைவம் கோலோச்சிய காலம் போய் எங்கு திரும்பினாலும் சமணர்கள் இடையில் ஓலையால் முடைந்த பாயை இடையில் கட்டிக் கொண்டு, கையில் மயில் பீலியுடன் நகர் முழுதும் வலம் வந்து கொண்டிருந்த காலம். சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மையும் கோலோச்சிய மதுரை சமணர்களின் ஆடுகளமாகத் திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அதற்கு அந்த பாண்டிய நாட்டையாண்டு  வந்த நெடுமாறன் எனும் மன்னனே காரணம்.

எத்தனைதான் அறிவும் ஞானமும் வளர்ந்து மக்கள் தெளிவு பெற்றிருந்தாலும் அவ்வப்போது இருள் மண்டி அஞ்ஞானம் ஆட்சி புரிவதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. எங்கும் பரவிக் கிடக்கும் காரிருள் ஒரு சிறிய தீக்குச்சியை ஏற்றியதும் மறைவது போல, தீமைக்கு இடையே ஒரு பெரியோர் அவதரித்து அந்த அக இருளை முழுதுமாக நீக்கிவிடுகிறார்.

அப்படி இருள் மண்டிக் கிடந்த பாண்டிய நாட்டில் இரு தீப்பிழம்புகள் மீண்டும் அங்கு ஒளி பரவ காரணமாக இருந்தார்கள். அவர்களே பாண்டிய அரசியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சராகத் திகழ்ந்த குலச்சிறையாரும் ஆகிய இவ்விரு சைவ நன்னெறிச் செல்வர்களும் ஆவர்.

தீமைகளும், தீயவர்களும் கூட அங்கு இருப்பவரில் இருவர் நல்லவர்களாகவும், மேன்மையுடையவர்களாகவும் இருப்பார்களானால் தீயவர்களும் மாறிவிடுவார்கள். ஒரு மனிதன் நன்னெறிகளுடன் வாழவேண்டுமானால் இதுபோன்ற நல்லவர்களின் ஒட்டுறவு நிச்சயம் தேவைப் படுகிறது. அப்படி உதவுகின்ற ஒருவர் இருந்துவிட்டால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

வைகை நதி பாய்ந்து வளம்பரப்பி மீனாட்சி சுந்தரேசர் அருளாட்சி செய்யும் மதுரையம்பதி பாண்டிய நாட்டின் தலை நகரம். அங்கு ஏழுலகங்களும் பெருமையுறும் வகையில் ஆட்சி புரிந்தவன் நெடுமாறன். சைவம் செழித்த தென் தமிழ் நாடாம் பாண்டிய நாட்டில் சைவம் ஒளிகுன்றி சமணம் தலையெடுத்த காலமது. மன்னன் நெடுமாறனும் சமணம் தழுவி சமணத் துறவியர் கையில் மயில் இறகு ஏந்தி நிற்க நாடாண்ட காலமது. சமணமே தவ நெறியென்று அவன் புத்தியை மழுங்கடித்திருந்தனர் சமணர்கள். சமணர்களின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு கிடந்தான் நெடுமாறன். காலம் கடந்தபின் சைவத்தின் பெருமையை திருஞானசம்பந்த மூர்த்தியின் கருணையால் உணர்ந்தபின் மீண்டும் சைவத்துக்கு வந்து சாதித்த பல செயல்களையும் அறுபத்து மூவரில் ஒருவராய்த் திகழும் பெருமையையும் பின்னர் பார்க்கலாம்.

                                           நிறைக் கொண்ட சிந்தயான் நெல்வேலி வென்ற
                                           நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

என்று சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணத்தில் கண்ட இந்த நெடுமாறன்தான் இன்றைய வரலாற்றின் கதா நாயகன்.

நற்குடிப் பிறந்து நற்செயல்கள் செய்து நல்லோனாக வாழ்ந்து வரும் ஒருவனுக்கு விதிவசத்தால் சில இன்னல்கள் வந்துறுவது இறைவன் வகுத்த செயல். அப்படித் துன்பத்தைக் கடந்தபின் அவனுக்கென்று சரியான வழியையும் வகுத்து வைத்தவன் இறைவன். அந்த வழியில் வந்த நின்றசீர் நெடுமாறன் குறித்தும் அவன் மனையறம் காத்த மாமணியாம் மங்க்கையர்க்கரசி பற்றியும் சிறிது இன்று பார்ப்போம்.

துன்பங்களும் சோதனைகளும் மனிதர்க புடம்போட்டு எடுத்த பின்னர் அத்தகைய மனிதர்கள் மாந்தருள் மாணிக்கங்களாகத் திகழ்ந்ததை நாம் பார்த்திருக்கிறோம். தென் தமிழகத்தைக் கட்டியாண்ட மன்னர்கள் மதுரை நகரைத் தலை நகராகக் கொண்ட பாண்டியர்கள். அந்த பாண்டிய நாட்டில் நெடுமாறன் என்ற பெயருடைய பேரரசன் ஆண்டு வந்தான். இவனுக்குக் கூன்பாண்டியன் என்றொரு பெயரும் உண்டு; காரணம் இவன் முதுகில் சிறு கூன் விழுந்திருந்ததே. ஒருக்கால் அவன் மனத்தில் விழுந்த கூன் காரணமாக இந்தப் பட்டப் பெயர் வந்திருக்கலாமோ? யார் கண்டார்கள்.

இந்த மனிதனுடைய நல்ல இதயத்தில் அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த‌ சமணர்கள் விஷ வித்தை விதைத்துவிட்டார்கள். சமணமே சமயங்களில் சிறந்தது என்பது அவன் மனத்தில் விதைக்கப்பட்ட விதை. மதமாற்றம் என்பது அந்த காலத்திலேயே நடந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே சமணம் என்பது தன் உயிர்க்காற்றாக ஆனபின்பு பாண்டிய நாட்டில் சமணம் தவிர வேறெந்த சமயமும் இருக்கக்கூடாது என்று எண்ணத் தொடங்கினான் பாண்டியன் நெடுமாறன்.

இப்படி பாண்டியன் சமயக் குழப்பத்தில் சிக்கித் தவித்தாலும் அவனுக்கு அமைந்த வாழ்க்கைத் துணை சோழ தேசத்து இளவரசியாம் மங்ககையர்க்கரசி என்பார் சதா காலமும் சிவபெருமானின் அருட்பெயரை உச்சரிப்பதே கடமையாகக் கொண்டவர். இவர் ஒரு சிறந்த சிவபக்தை. அதுமட்டுமல்ல நெடுமாறன் செய்த புண்ணியம் அவருக்கு ஒரு நல்லமைச்சர் அமைந்தார். அவர் பெயர் குலச்சிறையார். இவரும் ஒரு சிறந்த சிவ பக்தர். இவ்விருவரின் முயற்சியால் மன்னன் சமணம் சார்ந்திருந்தாலும் நாட்டில் சைவமும் தழைத்து இன்னமும் உயிர்ப்போடு விளங்கியது.

பாண்டியன் நெடுமாறனின் பத்தினியாகத் திகழ்ந்தவர் சோழ ராஜகுமாரியாகப் பிறந்த மங்கையர்க்கரசியார் எனும் புண்ணியவதி. மாபெரும் சைவக் குரவராகிய திருஞானசம்பந்தராலேயே பாராட்டிப் போற்றப்பட்டவர். சைவத்தை உயிர் மூச்சாய்க் கொண்ட மங்கையர்க்கரசியார் தன் கணவனுக்குத் தொண்டாற்றி நாட்டையும், வீட்டையும் பரிபாலனம் செய்ய உதவிக்கொண்டிருந்தார். 

சைவ சமயம் இல்லறம் குறித்தும் நல்ல பல குறிக்கோளை வற்புறுத்தி வந்திருக்கிறது. இல்லற வாழ்வு இம்மைக்கு மட்டுமல்லாமல் மறுமையின்பமான சிவபேறு குறித்தும் வழிகாட்டுவதாகும். இந்த காரணத்தால்தான் சைவத் திருமணங்களில் மணமக்களை சிவ பார்வதியாகக் கருதி உமாமஹேஸ்வரராக திருமணச் சடங்குகளை நடத்துவது வழக்கம். தமிழிலக்கண நூலான தொல்காப்பியமும் வாழ்வின் லட்சியமாகச் சொல்லும் கருத்து கவனிக்கத் தக்கது.

                   காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                  அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பண்பே."

ஆக, இல்லறம் தாங்கும் தம்பதியர் தங்களது ஆன்மிகப் பேற்றிலும் இருவரும் கருத்தாயிருக்க வேண்டுமென்பது தெரிகிறது. அப்படி கணவனின் ஆன்மிகப் பேற்றில் கருத்தாயிருந்த மங்கையர்க்கரசியாரின் வரலாற்றை இனி பார்ப்போம். 

பாண்டிய நாட்டில் எங்கு திரும்பினாலும் மயில்பீலியும், சமணத் துறவிகளும் பரவிக் கிடந்த நேரம். மன்னன் எவ்வழி, நாடும் அவ்வழி என்று நாட்டினரும் சைவத்தைத் துறந்து சமணத்தைப் போற்றி வந்த காலம். மங்கையர்க்கரசியாருக்கு சீர்காழியில் அவதரித்த ஞானக்குழந்தை திருஞானசம்பந்தரைத் தெரியும். அமைச்சர் குலச்சிறையாருக்கும் ஞானக்குழந்தையின் சிறப்புகள் புரியும். இவ்விருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். மன்னனின் சமணப் பேயை விரட்ட ஒரே வழி திருஞானசம்பந்தர் பிரான் தான் என்று முடிவுக்கு வந்தனர். அமைச்சர் தன் ஆட்கள் மூலம் ஞானசம்பந்தரை அணுக முடிவு செய்தார்.

அப்போது சோழ தேசத்தில் திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தரும் திரு நாவுக்கரசரும் இருந்த நேரம். மதுரை அமைச்சர் குலச்சிறையாரின் தூதர்கள் சென்று ஞானசம்பந்தரைக் கண்டு அமைச்சர் சொன்ன செய்திகளைச் சொல்லி, மன்னன் நெடுமாறனை நல்வழிப்படுத்த ஞானசம்பந்தரால் மட்டுமே முடியும், அவர் மதுரை வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

பாண்டிய மன்னனுக்குக் கிடைக்க வேண்டிய பெருமைகள் எல்லாம் இந்த சமணப் பற்றால் கெடுவது பற்றித்தான் மங்கையர்க்கரசியார் மனமுடைந்து நின்றார். அவர் அழைப்பையேற்று ஞானசம்பந்தர் மதுரை வந்தபோது பாடிய வரிகள்

"பானலங் கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி யானும் என் பதியும் செய்த தவம் என்கொல்?" என்பது.

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் தூதனுப்பி ஞானசம்பந்த பெருமானை மதுரைக்கு அழைத்தனர். இவர்கள் அனுப்பிய தூதர்கள் சென்று ஞானசம்பந்தரைச் சந்தித்தபொது அவர் அப்பருடன் வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் இருந்தனர். அங்கு மூடியிருந்த கோயில் கதவை ஞானசம்பந்தர் பாடித் திறக்க தரிசனம் முடிந்தபின் அப்பர் பாடிய பத்து பாடல்களால் கதைவை மூடியிருந்தனர்.

அப்போது சம்பந்தர் அப்பரிடம் மதுரை தூதர்கள் சொன்ன செய்தியைச் சொல்லி தான் மதுரை செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் சொன்னார். அதனைக் கேட்ட அப்பர் துடித்துப் போனார். அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிச் சொன்னார், "பிள்ளாய்! பொறும்" சமணர்கள் மிகவும் பொல்லாதவர்கள். வஞ்சனைகளை எல்லையின்றி செய்யும் வல்லமை படைத்தவர்கள். இளம் பிள்ளையாகிய தங்களை அவர்கள் வஞ்சனையால் கேடு செய்துவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல ஐயனே! இப்போது அமைந்திருக்கும் கோள்களின் நிலைமையும் சாதகமாக இல்லை. என்ன செய்வீர். தங்க்களுக்கு ஒரு துன்பமென்றால் எங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? கோள்கள் சரியில்லாத இந்த நேரத்தில் தாங்கள் அங்கு செல்வது தகாது, தவிர்த்துவிடுங்கள் என்றார் அப்பர்.

அதற்கு சம்பந்தர் சொல்கிறார்,  "ஐயனே, நான் போற்றுவது சிவபெருமான் திருவடிகள். அப்படி சிவன் திருவடிகள் துணையிருக்க நாளும் கோளும் எமை என்ன செய்யும்? பரமனுக்குச் செய்யும் தொண்டில் நமக்குப் பழுது ஒன்றும் வாராது." என்று சொல்லி ஒரு திருப்பதிகத்தைப் பாடுகிறார். அந்தப் பதிகம் தான் "கோளறு பதிகம்" எனப் போற்றப்படும் அரிய தேவாரப் பாடல். அது

ஞானசம்பந்தப் பெருமான் அத்தனை உறுதியோடு சொன்ன பிறகு நாவுக்கரசருக்கு அவரைத் தடுக்கும் எண்ணம் இல்லை. சம்பந்தர் திருமறைக்காட்டை விட்டுப் புறப்படுகிறார் என்றதும் அப்பர் தாமும் உடனே இவ்வூரைவிட்டு கிளம்ப முயற்சி செய்ய, அவரைத் தடுத்து ஐயனே தாங்கள் இங்கு இன்னும் சிலகாலம் இருந்து வருவீராக என்றருளினார்.

ஞானசம்பந்தர் தாம் மதுரை செல்ல முடிவு செய்ததும் மீண்டும் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை வழிபட்டு பாதங்க்களைத் தொழுதெழுந்து பாடிப் பரவிவிட்டு, திருவாவுக்கரசரைத் தொழுது அவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மதுரைக்கு கிளம்பினார்.  பின்னர் தன்னுடைய முத்துச் சிவிகையில் ஏறிக் கொண்டு ஐந்தெழுத்தை ஓதிய வண்ணம் புறப்படுகிறார்.  கூடியிருந்த மக்கள் அனைவரும் ஞானசம்பந்தர் சமணர்களை எதிர்கொள்ள மதுரைக்குச் செல்வதால் அவரைக் காக்க வேண்டுமென்று சிவனிடம் வேண்டி ஹரஹர மகாதேவா என கோஷமிடுகின்றனர்.  மறையோர் நாங்கு மறைகளை ஓதி ஆசி வழங்கினார்.

திருமறைக்காட்டிலிருந்து புறப்பட்ட திருஞானசம்பந்தர் தொடர்ந்து பயணம் செய்து அகத்தியம்பள்ளியை அடைகிறார். அங்கிருந்து குழகர்கோயில், திருக்கடிக்குளம், இடும்பாவனம், திரு உஷத்தானம் முதலான திருப்பதிகளைக் கடந்து விரைந்து சென்றார். வழியில் சோழ நாட்டுத் தலங்களைக் கடந்து பாண்டிய நாட்டின் எல்லையை அடைந்தனர்.

வழி நெடுக முல்லை மணம் பரவும் முல்லை நிலத்தையும், மறவர் வாழும் பாலை நிலத்தையும் கடந்து சென்றார். வழி நெடுக பெண்கள் நீராடும் நீர் நிலைகள்; அந்தணர் வேதம் ஓதும் யாக சாலைகள், திருத்தொண்டர் குழுமிய திருமடங்கள், திருமணம் நடந்தேறும் மங்கல வாத்திய வகைகள் முழங்கும் இல்லங்கள், ஊர்கள் இவைகளைக் கடந்து சென்றார்.

தென் பாண்டி நாட்டைக் கடக்கும் போது அங்கு திருக்கொடுங்குன்றத்தை அடைகிறார். அது இப்போதைய பிரான்மலை. அங்கு கோயில் கொண்ட சிவபிரானை வணங்கிச் செல்கிறார். தொடர்ந்து மலைகளையும் காடுகளையும் கடந்து செல்கிறார். இப்படிப் பயணம் செய்து அவர் பாண்டிய நாட்டின் எல்லையை அடைகிறார். மதுரைக்கு வடக்கே ஆனைமலையைக் கடந்து இப்போது அவர் மதுரை நகரத்தின் எல்லையை அடைகிறார்.

இப்படி திருஞானசம்பந்தர் மதுரையை அடையும் சமயம் அங்கு வாழும் சமணர்கள் தீய கனவுகளைக் கண்டனர். தங்களுக்கு அழிவு நேருவதாக உணர்ந்தனர். துர் நிமித்தம் பலவற்றை சமணர்கள் உணர்ந்தார்கள். சமணப் பள்ளிகளிலும், சமண மடங்களிலும் அசோக மரங்களின் உச்சியிலும் ஆந்தைகளும் கோட்டான்களும் அமர்ந்து ஓசையெழுப்பின. சமணத் துறவிகளின் கரங்களில் இருந்த மயில் பீலிகள் நழுவிக் கீழே விழுந்தன. கால்கள் தடுமாற இடக்கண்கள் துடித்தன. வரப்போகும் துன்பம் என்ன என்பதை அறியாமல் சமணரெல்லாம் தவித்தனர்.

இப்படி சமணர்கள் வருந்திக் கொண்டிருந்த வேளையில் பாண்டிமா தேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சரான குலச்சிறையாரும் இருக்குமிடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றின.  மன்னன் கூன்பாண்டியனுக்கு சமணர்களிடமிருந்து விடுதலை கிடைக்க சிவபெருமான் ஏதோவொரு வகையில் வழிவகுத்துவிட்டான் என்பதை உணர்ந்தார்கள்.

அப்போது திருமறைக்காட்டுக்குச் சென்ற தூதர்கள் மதுரை வந்து குலச்சிறையாரையும் மங்கையர்கரசியாரையும் சந்தித்து ஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்கு வரும் செய்தியை அறிவித்தார்கள்.  அமைச்சர் ராணியை வணங்கினார். அதற்கு ராணி  நம் தம்பிரான் ஞானசம்பந்தர் பெருமான் இங்கு எழுந்தருளுவதால் அவரை எதிர்கொண்டு வரவேற்க ஆவன செய்யுங்கள் என்றார்.

அமைச்சரின் உத்தரவின் பேரில் மதுரை நகரம் அலங்கரிக்கப்பட்டது.  வருகின்ற ஞானக் குழந்தையை வரவேற்க மதுரை நகரத்திலிருந்து வெகு தூரத்துக்கு மக்கள் கூட்டம் வரிசையில் நின்று வணங்கி நின்றார்கள்.  மகாராணி மங்கையர்கரசியும் அரசனிடம் அனுமதி பெற்று சொக்க நாதரை வழிபடச் சென்றுவிட்டு பரிவாரங்களுடன் ஞானசம்பந்தரை வரவேற்கச் சென்றுவிட்டார்.

திருஞானசம்பந்தரின் முத்துச் சிவிகை மதுரையின் வீதிகளில் பவனி வந்தது. சுற்றிலும் திரு நீறணிந்த தொண்டர்கள் சிவ நாமத்தைச் சொல்லிக்கொண்டு வந்தனர். துந்துபிகள் முழங்க, வேதங்கள் ஒலிக்க, மக்களின் குரலோசை கடல் அலைபோல் ஓசையெடுப்ப, ஞானசம்பந்தர் மதுரையில் படிந்துள்ள இருளைப் போக்க எழும் உதய ஞாயிறையொப்ப நகருக்குள் வந்தார். பாண்டி நாடு செய்த தவப் பயனால் அங்கு படிந்த சமணத்தின் புற சமயக் கறை மறைய சைவ நெறி தழைத்து ஓங்க "பரசமயக் கோளரி வந்தான்.

அமைச்சர் குலச்சிறை தன் கரங்களைத் தலைமேல் கூப்பி ஓடிவந்து தரையோடு வீழ்ந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். இதனைக் கண்ட மதுரை மக்கள் "தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் இங்கு வந்து பணிந்து அணைந்தார்" என்று மகிழ்ந்தனர்.  அமைச்சர் குலச்சிறை வந்து வணங்கிய காட்சி கண்டு ஞானசம்பந்தர் முகம் மலர்ந்தது. பல்லக்கிலிருந்து இறங்கி அமைச்சரை அணைத்து அவர் கரங்களைப் பற்றித் தூக்கி அணைத்துக் கொண்டார்.

ஞானசம்பந்தர் கேட்டார், செம்பியர் பெருமானின் குலமகளாம் மங்கையர்க்கரசியாருக்கும், உமக்கும் நமது சிவபெருமான் திருவருள் பெருகும் நன்மைதான் சிறந்துளதோ? என வினவினார்.

அப்போது எதிரில் வானளாவிய சிவாலய கோபுரம் தெரிந்தது. இதுவே ஆலவாய் அழகர் அமர்ந்தருளும் திரு ஆலவாய் என்றனர் மக்கள். உடனே திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்து நின்று வணங்கிவிட்டு "மங்கையர்க்கரசி வளவன் கோன்பாவை" எனும் பாடலைப் பாடத் தொடங்கினார். "ஆலவாய் ஆவதும் இதுவே" என்று இறுதி அடி பாடி முடித்தார். ஆலயத்தினுள் ஆலவாய் அழகரை தரிசித்து "நீலமாமிடற்று ஆலவாயிலான்" எனத் தொடங்கும் திருவிருக்குக்குறள் பாடலைப் பாடினார்.

ஞானசம்பந்தப் பெருமான் ஆலயதுள் நுழையும்போது அவர் எதிரில் நில்லாமல் மங்கையர்க்கரசியார் ஒதுங்கி ஓரமாக நின்று பக்தி பரவசமாய் கண்களில் நீர்சோர அவரை வணங்கினார். அப்போது குலச்சிறையார் சம்பந்தருக்கு அரசியாரைக் காட்டி, அதோ ஓரமாக நின்று கண்கள் பனிக்கத் தங்களை தரிசிக்கும் அவரே சோழ மன்னரின் மகளார் மங்கையர்க்கரசி" என்றார். மகிழ்ச்சியோடு ராணியாரைத் தரிசிக்க ஞானசம்பந்தர் விரைந்து வர மங்கையர்க்கரசியார் அவரை விழுந்து வணங்கினார். அவரைத் தூக்கி எழுப்பி அரசியைத் தேற்றினார் சம்பந்தர் பெருமான். தன் வினை இன்றோடு முடிந்தது என்று அரசியும் பெருமூச்சு விட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

அரசியார் "யானும் என் பதியும் செய்த மாதவம்தான் என்னே" என்று குழலிசை போல் பேசினார். அதற்கு ஞானசம்பந்தர் "புறச் சமயத்தாரிடையிலே நம் சைவத் திருத்தொண்டை வழுவாமல் செய்து வாழ்வீர்! உம்மைக் காணவே நாமும் வந்தோம்" என்றார். பின்னர் குலச்சிறையார் புறச் சமயத்தாரால் விளந்த தீவினைகளை விளக்கமாய் உரைக்க சம்பந்தர் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  பின்னர் அவர் தங்க வேண்டிய திருமடத்தில் கொண்டு போய் சுவாமியைச் சேர்த்தார் குலச்சிறையார்.

மதுரையில் ஞானசம்பந்தர் வரவையொட்டி நிகழ்ந்த பரபரப்பான வரவேற்பைக் கண்ட சமணர்கள் கலக்கமுற்றனர். பொறாமை மனத்தில் பொங்க அந்த சமணர்கள் அனைவரும் அன்று இரவே ஓரிடத்தில் கூடினர். மதுரையெங்கும் எதிரொலித்த திருப்பதிக இசையின் பேரொலி அவர்களைத் துன்புறுத்தியது. உடனே ஓடிப்போய் தங்களுக்கு ஆதரவளித்து வரும் பாண்டியன் நெடுமாறனிடம் சென்று முறையிட ஓடினார்கள்.

சமண முனிவர்கள் அரசனிடம் சென்று நிற்கவும் மன்னன் கவலையுடன் என்ன நேர்ந்தது என்கிறான். அதற்கு அந்த சமணர்கள் "நடக்கக்கூடாத தீங்கு நமக்கு நேர்ந்துவிட்டது" என்றனர். அது என்ன என்று சொல்லுங்கள் என்றான் மன்னன்.

"மன்னா! உன் ஆட்சிக்குட்பட்ட இந்த மதுரை மா நகரத்தினுள் சைவ வேதியர்கள் வந்துற்றார்கள். அவர்களைக் கண்டாலே தீட்டு அல்லவா. அவர்களைக் கண்டதனால் நாங்க்கள் "கண்டுமுட்டு" ஆயினோம் என்று சொல்ல, மன்னனும், ஆம்! இந்தச் செய்தியைக் கேட்டதனால் நானும் "கேட்டுமுட்டு" ஆயினேன் என்றான்.  பின்னர் அந்த சைவர்கள் நம் நகரத்தினுள் வரக் காரணம் என்ன என்றான். அவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள் எனக் கேட்டான்.

சமணர்கள் சொன்னார்கள், "சோழ நாட்டில் சீர்காழி எனும் ஒரு பதி உண்டு. அங்கு ஒரு வேதியர் குலத்துதித்த சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவன் என்று சொல்லிக்கொண்டு அந்த வேதியச் சிறுவன் தன் அன்பர்கள் கூட்டமொன்றை அழைத்துக் கொண்டு தன் முத்துஸ் சிவிகை மீதேறி எங்களோடு வாதிட வந்திருக்கிறான்" என்றனர்.

அதற்கு பாண்டியன் நெடுமாறன் சொல்லுகிறான், "அப்படியா? அந்த வேதியச் சிறுவன் இங்கு வந்ததனால் நாம் செய்யக்கூடியது என்ன?" என்றான்.

அதற்கு அந்தச் சமணர்கள் சொல்கிறார்கள், "அந்த அந்தணச் சிறுவனை நாம் வலிய விரட்டக்கூடாது. அவன் தங்கியிருக்கும் மடத்தை நம்முடைய விஞ்சை மந்திரத்தால் தீப்பிடித்து எரியச் செய்தால் அவன் தானாகவே இங்கிருந்து ஓடிவிடுவான்" என்றார்கள் அந்தக் கொடிய மனம் படைத்த சமணர்கள்.

சொல்லுவார் சொல்லும் முறையால் சொன்னால், யார்தான் நம்ப மாட்டார்கள். பாண்டிய மன்னனும் சொற்பேச்சு கேட்டு அப்படியே ஆகட்டும், இப்போதே செய்து விடுங்கள் என்று சம்பந்தர் மடத்துக்குத் தீமூட்ட அனுமதி வழங்கினான்.

அப்படிச் சொன்னானே தவிர அவன் மனத்தை கவலை அரிக்கத் தொடங்கியது. என்ன செய்கிறோம், செய்வது நல்லதா, தீதா என்று புரியாமல் கலக்கமடைந்தான். பள்ளியறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். மஞ்சத்தில் வீழ்ந்தான். மன்னன் வந்த செய்தியறிந்து அங்கு விரைந்து வந்தாள் பாண்டிமாதேவியாம் மங்கையர்க்கரசி அம்மையார். மன்னவன் முகத்தில் தவழ்ந்த கவலையின் குறிகளைக் கண்டு வருந்தினாள்.

"என் உயிரினும் உயிரான மன்னவா! உமக்கு நேர்ந்த கவலைதான் என்ன? முக மலர்ச்சியோடு இருக்கும் தாங்கள் இன்று முகம் வாடியிருப்பதன் காரணம் யாதோ?" என்று பாண்டிமாதேவி கேட்டாள்.

"தேவி! கேள். காவிரி வள நாட்டிலுள்ள சீர்காழிப் பதியைச் சேர்ந்த சிறுவனொருவன் சங்கரன் அருளைப் பெற்று இங்குள்ள நம் சமணர்களை வாதில் வெல்ல வந்திருக்கிறானாம். அந்தச் சிறுவனோடு வெண்பொடிப் பூசிய தொண்டர்களும் வந்திருக்கிறார்கள். நீறு பூசிய அந்த சிவ நேசர்களைக் கண்டால் தீட்டு ஆகையால் நம் சமண அடியார்கள் "கண்டுமுட்டு" ஆயினர். அச்செய்திகளைக் கேட்டதால் நாமும் "கேட்டுமுட்டு" ஆயினோம். இதுவே நடந்தது, மனத்தில் கலக்கத்தைத் தந்தது" என்றான் மன்னன்.

இதனைக் கேட்ட பாண்டிமாதேவி சொல்கிறாள், "இவ்வளவுதானே! அவர்களுடைய வாதம் தெய்வத் தன்மை உடைத்தாயின் வெற்றி வெற்றி பெறுவர். பின்னர் வெற்றி பெற்றவர் பக்கம் சேர்வதுதானே நேர்மை. இதற்காக ஏன் வருந்த வேண்டும்" என்றான். இப்படி மகாராணியார் சொன்னாரே தவிர அவர் மனத்தில் மகிழ்ச்சி பொங்கியது. சீர்காழிச் சிவச்செல்வரின் வருகை எம்மை இந்த சமணரின் தீங்கிலிருந்து காக்கப் போகிறது என மகிழ்ந்தாள்.

அப்போது அமைச்சர் குலச்சிறை அங்கு வந்தார். அவரிடம் நடந்தவற்றை பாண்டிமாதேவி உரைத்தாள். அமைச்சர் கைகூப்பி நின்றுகொண்டு "ஞானசம்பந்தர் சுவாமி இங்கு வந்து நமக்கு அருள் புரிந்தார். இனி அந்த சமணர்கள் என்ன செய்வார்களோ, என்ன வஞ்ச்சனைகள் புரிவார்களோ" என்று அச்சத்தை வெளியிட்டார்.

அரசியும் மனம் கலக்கமடைந்து "ஆம், வஞ்சகச் சமணர்கல் தீங்குகள் புரிவதில் வல்லவர்கள். இப்போது நாம் என்ன செய்வது? அவர்கள் செய்யும் வஞ்சனையால் அந்த குழந்தைப் பெருமானுக்கு யாதேனும் தீங்கு நேரிடுமோ?" என அஞ்சினார்.

இந்த நிலையில், மன்னனிடம் செய்தி சொல்லிவிட்டுச் சென்ற சமணர்கள் ஒருவருமறியாமல் திருஞானசம்பந்தர் மடத்தை அடைந்தார்கள். மந்திரம் ஜெபித்து மடத்துக்குத் தீமூட்ட முனைந்தார்கள். ஆனால் அந்தோ, அவர்கள் மந்திரம் பலிக்கவில்லை. தீ மூளவில்லை. இதனால் அச்சமுற்று அவர்கள் மீண்டும் ஆலோசித்தார்கள். மன்னன் இந்த செய்தியறிந்தால் நம்மை மதிக்க மாட்டானே. இதற்கு ஒரு யுக்தி செய்தாக வேண்டும் என்று தீர்மானித்துத் தீப்பந்தம் ஏற்றி மடத்துக்குத் தீ வைத்தார்கள். மடம் தீப்பற்றி எரிந்தது. சிவனடியார்கள் ஓடிவந்து தீயை அணைத்தார்கள்.

சமணர்கள் செந்த தீங்கு இது, இதற்குக் காரணம் பாண்டிய மன்னன் அன்றோ? இந்தத் தீங்குக்கு மன்னனே பொறுப்பு என்று சம்பந்தர் பாடத் துவங்குகிறார். "செய்யனே திருவாலவாய்" எனும் திருப்பதிகத்தைப் பாடி சிவனடியார்கள் வாழும் திருமடத்திற்கு சமணர்கள் இட்ட தீ, பையவே சென்று பாண்டியர்க்கே ஆகுக!" எனக் கட்டளையிட்டார். தீ பையவே செல்க என்றதால் அது மெல்ல வந்து பாண்டியனை அடையுமுன்பு மன்னன் மனம் மாறிவிடலாமே எனும் ஆதங்கம் அவருக்கு. திருஞானசம்பந்தர் சிவபெருமான் பெயரால் அந்த தீ பாண்டியனை அடையட்டும் எனக்கூறியதால் அந்த தீ எனும் வெப்பு நோய் பாண்டியன் நெடுமாறனைச் சென்று அடைந்து அவனைத் துன்புறுத்தலாயிற்று.

மறு நாள் சமணர் சம்பந்தர் மடத்துக்குத் தீயிட்ட செய்தி மதுரை நகருள் காட்டுத்தீயாகப் பரவியது. செய்தி கேட்டு பாண்டிமாதேவியும் அமைச்சர் குலச்சிறையாரும் மனம் வருந்தினர். ஆனால் தீ பரவாமல் அணைந்துவிட்டது எனும் செய்தி ஆறுதலாயிருந்தது. இனி சமனர்களின் சூழ்ச்சி என்னவெல்லாம் செய்யுமோ என அச்சமடைந்தனர். அப்போது அரசனின் மெய்க்காப்பாளன் அரசரை வெப்பு நோய் பீடித்துவிட்டது எனும் செய்தியைச் சொன்னான். இருவரும் ஓடிப்போய் மன்னனைப் பார்த்தார்கள்.

அங்கு மன்னன் வெப்பு நோயால் துடிதுடித்தான். வயிற்றில் தீப்பற்றி எரிவது போல் எரிச்சல். அரண்மனை முழுதும் அந்தத் தீயின் சூடு உணரப்பட்டது. அரசன் உடல் கருகியது, சுருங்கியது, உலர்ந்தது. உணர்வும் உயிரும் நீங்குவது போன்ற நிலை. அவனைச் சுற்று வாழைக் குருத்துக்களும், பச்சிலைத் தழைகளும் பரப்பப்பட்டன. அவையும் வெப்பத்தால் கருகிப் போயின. வைத்தியர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. சமணர்கள் தொடத் தொட வெப்பு அதிகமாயிற்று.

அப்போது மன்னன் மனதில் ஓர் ஐயம். நேற்று நாம் அந்த சீர்காழி சிறுவனுக்குச் செய்த தீங்கின் விளைவோ இது? என்பது அது. மன்னனைக் காண வந்த சமணர்கள் குற்ற உணர்வோடு தங்கள் மயிற்பீலியினால் மன்னன் உடலை வருட அது இன்னமும் வெப்பு நோயை அதிகமாக்கியது. பீலிகளும் கருகி உதிர்ந்தன. தங்கள் கமண்டல நீரையெடுத்து அதன் மீது ஊற்றினர். அந்த நீர் தீயின் மீது நெய்போல விழுந்து தீ ஜுவாலையை அதிகமாக்கியது. ஆத்திரமடைந்த மன்னன் சமணர்களை விலகிப் போங்கள் என்று கத்தினான்.

அப்போது பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் அமைச்சர் குலச்சிறையாரிடம், "நேற்று அந்த ஞானசம்பந்தப் பெருமானுக்குச் செய்த தீங்குதான் இப்படி வாட்டுகிறதோ" என்றார். அதற்கு அவர், "ஆம், முப்புரம் எரித்த முக்கண் பெருமான் தன் அடியார்க்குச் செய்த தீங்குக்காக மன்னனை இப்படி வருத்துகிறார்" என்றார்.

இருவரும் ஒரு முடிவுக்கு வந்து மன்னிடம் சென்று "மன்னா, தங்களுக்கு இந்த வெப்பு நோய் வந்த விதம் தெரியுமா? சீர்காழி தந்த சிவ நேசச் செல்வர் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு சமணர்கள் தீயிட்டதால் வந்த வினை இது" என்றனர். சமணர்கள் எந்த வகை மாயம் செய்தாலும் தங்கள் வெப்பு நோய் தீராது, அதிகரிக்கும். மாறாக ஞானசம்பந்தர் வந்து தங்களுக்குத் திரு நீறளித்தால் தங்கள் நோய் தீரும்" என்றனர். திருஞானசம்பந்தரின் நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் மன்னனுக்கு எரிச்சல் குறைந்தது. உடனே அமைச்சரிடமும், மாதேவியிடமும் சொன்னான், "ஞானச் செல்வரின் அருளினால் எனக்கு இந்த நோய் தீருமென்றால், அவரை இங்கு அழைத்து வாருங்கள். என் பிணி தீர்ந்தால் நான் அவர் பக்கம் சேர்வேன்" என்றான்.

உடனே திருமடத்துக்குத் தாங்களே சென்று சம்பந்தர் பாதத்தில் வீழ்ந்து வேண்டி மன்னனுடைய நோயைத் தாங்கள் வந்து தீர்க்க வேண்டுமென வேண்டினர். அதற்கு அவர் "எல்லாம் சிவபெருமான் கருணையினால்தான். அமணர்களின் பாவச் செயல்கள் நீங்க சிவபெருமான் உள்ளக் குறிப்பறிந்து அரண்மனை வருவேன்" என்றார்.

உடனே ஆலவாய் ஆலயம் சென்று "காட்டுமாவ திரித்துரி" எனும் திருப்பதிகத்தைப் பாடி பின் "வேதவேள்வியை" எனும் பதிகம் பாடுகிறார். சிவனருள் பெற்றபின் சிவிகை ஏறி அரண்மனை வந்துற்றார். அவரை வரவேற்ற மன்னன் தன் இருக்கைக்கு அருகில் பொற்பீடமொன்று அமைத்து அமரச் செய்தான். இதனைக் கண்டு சமணர்கள் கொதித்தார்கள். அப்போதும் சூது வாது கொண்ட சமணர்கள், சீர்காழி சிறுவனால் உம் நோய் தீர்ந்தாலும் எம்மால் தீர்ந்ததென்று நீர் சொல்ல வேண்டுமென்றனர். மன்னன் வஞ்சகத்துக்கு உடன்படவில்லை. உங்களால் முடிந்தால் தீருங்கள், அவர் செயலின் பெருமையை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது என்றான்.

ஞானசம்பந்தர் அரண்மனை வந்தார். பொற்பீடத்தில் அமர்ந்தார். சமணர்கள் பீதியடைந்தார்கள். மன்னன் செல்வரை நோக்கித் தமக்கு எந்த ஊர் என்றான். அவர் "பிரமனூர் வேணுபுரம்" எனப் பாடினார். வாதம் தொடங்கியது. சமணர்கள் பொங்கினார்கள். சீர்காழியார் அமைதியாய் வாதிடுங்கள் என்றார். ஆத்திரத்தில் எழுந்தனர் சமணர். அம்மையார் மங்கையர்க்கரசி தலையிட்டு இந்தச் சமணர்கள் கொடியவர்கள். எம்பெருமான் ஞானசம்பந்தரை தனித்து இருக்க உத்தரவிடுங்கள். அவரால் முடியாவிட்டால் பின்னர் இவர்கள் பார்க்கட்டும் என்றார், மன்னரும் சம்மதித்தார். அப்போது தன்னைச் சிறுவன் என்று எண்ணி எனக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சவேண்டாம், ஆலவாய் அண்ணல் எனக்குத் துணை நிற்பான் எனும் பொருள்பட "மானினேர் விழி மாதராய்" எனும் திருப்பதிகத்தைப் பாடினார்.

அப்போது பாண்டியன் நீங்கள் தனித்தனியே என் நோயைத் தீர்க்க முயற்சி செய்யுங்க்கள் என்றான். உடனே சமணர்கள் சென்று அவன் இடப்புறம் நின்று மந்திர உச்சாடனம் செய்தனர். மன்னன் நோய் அதிகமாகியது. தாங்கிக்கொள்ள முடியாத மன்னன் ஞானசம்பந்தரை அழைத்துத் தன் வலப்புறம் நின்று நோயைத் தீர்க்கும்படி சொன்னான். உடனே சம்பந்தர் "மந்திரமாவது நீறு" எனும் திரு நீற்றுப் பதிகத்தைப் பாடி அந்தத் திரு நீற்றை அவன் வலப்புறத்தில் தடவினார். வலப்பக்க நோய் தீர்ந்து உடல் குளிர்ந்து இருந்தது. இடப்புறம் தீயென எரிய வலப்புறம் ஞானசம்பந்தர் அருளால் நோய் தீர்ந்து குளிர்ந்தது. மன்னன் சமணர்களைப் பார்த்து "சமணர்களே நீங்கள் தோற்றுவிட்டீர்கள், போய்விடுங்கள் இங்கிருந்து" என்று சொல்லி ஞானசம்பந்தரிடம் ஐயனே என் இடது பக்கத்தையும் தாங்களே குணப்படுத்தி விடுங்கள் என்றான். ஞானசம்பந்தரும் திரு நீறு பூசி அந்தப் பக்கத்தையும் குணப்படுத்தினார்.

மன்னைன் வெப்பு நோய் தீர்த்த ஐயனின் அடிகளில் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் விழுந்து பணிந்து எழுந்தனர்."நாங்கள் பெருமையுற்றோம், மன்னரும் பிறவா மேன்மையுற்றார்" என்று மகிழ்ந்தார்கள். சமணர்கள் மருண்டனர். பயந்து அஞ்சி பல சூதுகளை வகுத்து தீயாலோ, நீரினாலோ தீங்கு விளக்க எண்ணினார்கள். அனல்வாதம் புனல் வாதம் நடந்தது. இறுதியில் சம்பந்தர் பெருமானின் சைவ நெறியே வெற்றி பெற்றது. சைவ உலகில் மங்கையர்க்கரசியார் ஒரு நாயன்மாராக இன்றும் ஒளிவீசி நிற்கிறார் .

                                  மங்கையர்க்கரசியார் புகழ் வாழ்க!  சைவ நெறி வாழ்க!
                                மறைஞான காழியூர் சம்பந்தர் பெருமான் புகழ் வெல்க!

                  தென்னாடுடைய சிவனே போற்றி!    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!





















Saturday, August 24, 2013

Kalinga Narthana

Oothukkaadu, a small village near Papanasam, where you can see the Kalinga Narthana temple. The Krishna vigraham is seen here. 

An interesting feature at this temple is the posture of Kalinga Narthana - his left leg is seen on top of the Asura Snake but not touching the snake. His left thumb alone is holding the tail of the snake with none of his other four fingers in contact with the tail!! His right leg is seen above the ground in a dance posture. On a close look, one can find the scars on his leg below the knee, the result of his fight with Kalinga.

"குழலூதி மனமெல்லாம்"

                                               "குழலூதி மனமெல்லாம்"


ராகம்: காம்போஜி                                                                               தாளம்: ஆதி

                                                              பல்லவி

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு
குறையேதும் எனக்கேதடீ.

                                                        அனுபல்லவி

அழகான மயில் ஆடவும் (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்

                                                       மத்யம காலம்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே - தனை மறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக -இசைந்தோடி வரும் - நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு - பதம் பாட - தகிடததிமி என - நடம் ஆட
கன்று பசுவினொடு - நின்று புடைசூழ - என்றும் மலருமுக இறைவன் கனிவொடு (குழ)

                                                              சரணம்

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ...........
மிகவும் எழிலாகவும் ......... காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ........
அகமகிழ்ந் .................. இறைவன் கனிவோடு (குழ)

ஆடாது அசங்காது வா கண்ணா!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். ஊத்துக்காடு வேங்கடகவியின் சில பாடல் வரிகளை இங்கு காணலாம்.

              ஆடாது அசங்காது வா கண்ணா!


ராகம்: மத்யமாவதி                                                                        தாளம்: ஆதி.

                                                             பல்லவி

ஆடாது அசங்காது வா கண்ணா, உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுது எனவே (ஆடாது)

                                                      அனுபல்லவி

ஆடலைக் காண தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு மாமயில் இறகணி மாதவனே நீ (ஆடாது)

                                                           சரணம்

சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவி மடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில்
பீலி அசைந் தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிருகை இறைவன் ஏறுமயில் ஒன்று - தன்
பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே - குழல்
பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால்
மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)

Friday, August 23, 2013

"தாயே யசோதே! உந்தன்"

இந்தப் பாடலை நீங்கள் பலரும் பாடக் கேட்டிருக்கலாம், அவை முழுமையாக அமைந்தவை அல்ல. முழுப் பாடலையும் இதோ படியுங்கள்!

                       "தாயே யசோதே! உந்தன்"

ராகம்: தோடி                                                                                           தாளம்: ஆதி

                                                            பல்லவி

தாயே யசோதே! உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)

                                                         அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

                                                           சரணங்கள்

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும், கையசைவும், தாளமோடிசந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனமாடுகிறான்!
பாலன் என்று தாவி அணைத்தேன், அணைத்த என்னை
மாலை இட்டவன் போல் வாயில் முத்தம் இட்டாண்டீ!
பாலன் அல்லடி உன் மகன், ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொன்னால் நாணமிக ஆகுதடீ! (தாயே) 1.

அன்றொரு நாள் இந்த வழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றது போகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தை மிகு பழியிங்கே பாவம் எங்கே என்றபடி
சிந்தை மிக நொந்திடவும் செய்யத் தகுமோ?
நந்த கோபற்கு இந்த விதம் அந்தமிகு பிள்ளைபெற
நல்ல தவம் செய்தாரடி, நாங்கள் என்ன செய்வோமடி (தாயே) 2.

எங்கள் மனை வாழவந்த நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யுமுனா நதிப் போகையிலே - கண்ணன்
சங்கையும் இல்லாதபடி, பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
உங்கள் மகன் நான் என்றான், சொல்லி நின்றபின்
தங்கு தடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி எண்ணித் தவிக்கின்றார்! நாங்கள் என்ன செய்வோமடீ (தாயே) 3.

தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை அவிழ்த்து எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் மாட்டிக் கொண்டான்!
விட்டுவிட்டு "அம்மே" என்றான் கன்றினைப் போல்
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் 'உன் செல்வமகன்'
பட்டியில் கறவையிடம் பாலை ஊட்டுறானடீ (தாயே) 4.

சுற்றி சுற்றி என்னை வந்து, அத்தை வீட்டு வழிகேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழிகேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து, மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடீ (தாயே) 5.

வெண்ணை வெண்ணை தாருமென்றான், வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும், என்று கண்ணடிக்கிறான்
வண்ணமாய் நிருத்தமாடி, மண்ணினைப் பதத்தால் ஏற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து, வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணி உனக்காகுமடி, கண்ணியமாய்ப் போகுதடீ (தாயே) 6.

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை, தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான், அடி யசோதா!
மைந்தன் எனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன், வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு, சிந்தையும் மயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு, எல்லாம் காட்டினானடி (தாயே) 7.







Thursday, August 22, 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 28 August 2013

                                ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

                                                 (தஞ்சை வெ.கோபாலன்)

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளை ஜென்மாஷ்டமி என்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் ஆங்கில நாள்காட்டியின்படி எந்த ஆண்டு பிறந்தார் என்பது நிர்ணயிக்காவிட்டாலும், குறிப்பாக இப்போதிலிருந்து 3413 ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1400 B.C.) பிறந்தார் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். வசுதேவர் தேவகியின் மகனாக கம்சனின் சிறையில் பிறந்தவராயினும், கோகுலத்தில் யசோதையின் மைந்தனாக வளர்ந்தவர். கோகுலத்தின் ஆயர்பாடியில் குழந்தை கண்ணனின் லீலைகளை கவிஞர்கள் எல்லா மொழிகளிலும் புகழ்ந்து பாடி மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். கிருஷ்ணனின் பால லீலைகள் எந்த காலத்திலும் எவராலும் படித்து இன்புறத்தக்கவை. அவனுடைய குறும்புகள், அவனுடைய நட்பு வட்டாரம் கோகுலத்தில் செய்த சேஷ்டைகள், ஆயர்பாடியில் பெண்கள் பட்ட பாடு இவைகளை எத்தனை வகையில் பாடி வைத்திருக்கிறார்கள். ஊத்துக்காடு வேங்கட கவியின் "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி தாயே" எனும் பாடலில் கவி கிருஷ்ணனின் லீலைகளை வரிசைப்படுத்திப் பாடி மகிழ்கிறார். மகாகவி பாரதியும் தனது கண்ணன் பாட்டில் "தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை" எனும் பாடலிலும் கிருஷ்ண லீலை பேசப்படுகிறது. கோபியர்கள் வீட்டில் கிருஷ்ணன் சட்டியிலுள்ள வெண்ணையை எடுத்து நண்பர்களுடன் பங்கிட்டு உண்பது, தாயார் உரலில் கட்டிப்போட்டது, பூதகி எனும் அரக்கியை வதம் செய்தது, காளிங்கன் எனும் நச்சுப்பாம்பை அடக்கியது, மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவர்த்தனகிரி மலையைத் தூக்கி அடைக்கலம் கொடுத்தது, கம்சனை வதைத்தது இவைகள் எல்லாம் என்றென்றும் பேசப்படும் கிருஷ்ணனின் லீலைகள்.
இவைகள் எல்லாம் பாலகிருஷ்ணனின் லீலா வினோதங்கள்.

வளர்ந்து பெரியவனாக ஆனபின்பு ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாக இருந்தது, அவன் மனம் சோர்ந்து நின்றபோது கீதையை உபதேசித்து அவனுக்கு தர்மத்தை எடுத்துரைத்தது போன்றவைகள் எல்லாம் என்றும் இந்த புண்ணிய பூமியில் போற்றிக் காப்பாற்றப்படும் செய்திகளாகும்.

மதுராபுரி மன்னன் கம்சன், தன்னுடைய தந்தையைச் சிறையிலிட்டுத் தான் முடிசூட்டிக் கொண்ட அசுரன். அவனுடைய சகோதரி தேவகி வசுதேவரை மணந்தவள். அராஜகங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய கம்சனின் அழிவு சகோதரி தேவகியின் எட்டாவது மகனால் நிகழும் எனும் அசரீரியின் குரல் அவனை வாட்டி வதைத்து அடாத காரியங்களைச் செய்யத் தூண்டியது. சகோதரி என்றும் பாராமல் தேவகியையும் அவள் கணவனையும் சிறையில் அடைத்து கொடுமைகள் செய்தான். இவர்களுக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தையல்லவா தன்னைக் கொல்லப் பிறக்கப்போகிறது எனும் எண்ணம், அவர்களுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் பிறந்தபொழுதே கொன்று குவித்தான் அரக்கன். ஏழு குழந்தைகளைக் கொன்ற கம்சன் எட்டாவது குழந்தை தேவகிக்குச் சிறையில் பிறக்கப்போகிறது என்பதால் அங்கு ஏராளமான காவலர்களை நியமித்தான். வசுதேவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தான்.

கொட்டும் மழையில் நள்ளிரவில் ஊரும் உலகமும் உறங்கும் வேளையில் சிறையில் தேவகியின் எட்டாவது மகன் பிறந்தான். கண்ணன் பிறந்தான், நம் கண்ணன் பிறந்தான் என்று உலகத்து உயிர்கள் எல்லாம் குதூகலம் அடையும் வண்ணம் கண்ணன் சிறையில் பிறந்தான். கம்சன் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைத்தான். நள்ளிரவில் கண்ணன் பிறந்த நேரம், சிறைக் காவலர்கள் அசந்து உறங்கிப் போனார்கள். சங்கிலியால் கட்டுண்ட வசுதேவரின் சங்கிலிகள் அறுந்து விழுந்தன. இறைவன் முன்கூட்டிய தீர்மானித்தபடி வசுதேவர் பிறந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு கிளம்ப, சிறைக் கதவுகள் தானாகத் திறக்க, கோகுலம் செல்வதற்காக யமுனை நதிக்கரையைச் சென்றடைகிறார். அந்த யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த நதியின் அக்கரையில் உள்ள கோகுலம் யாதவர்கள் நிறைந்த இடம். அங்கு கொண்டுபோய் பிறந்த குழந்தையை ஒப்படைக்க எண்ணி வசுதேவர் போகிறார். அங்குதான் நந்த ராஜா என்பவர் வசுதேவரின் நண்பர் அரசனாக இருந்து வந்தார்.

அந்த நள்ளிரவு நேரத்தில் இடியும் மின்னலுமாக மழை கொட்டித் தீர்க்கிறது. அந்த சூழ்நிலையில் தலையில் குழந்தையைக் கூடையில் வைத்து சுமந்துகொண்டு வசுதேவர் யமுனை நதிக்கரையை வந்தடைகிறார். எதிரில் இருப்பது கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மழையின் கடுமை இருந்தது. வசுதேவர் யமுனை நதிக்கரையை அடைந்த நேரம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மழையோ காற்றுடன் கூடி கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது?


என்ன செய்வதென்றறியாத வசுதேவர் இறைவனை எண்ணி உரக்க வேண்டினார். என்ன அதிசயம்? எதிரில் யமுனையின் வெள்ளம் இவருக்கு வழிவிட்டு இரு பிரிவாகப் பிரிந்து கொண்டது. தலையில் குழந்தையை வைத்துள்ள கூடையுடன் வசுதேவர் போக வழிவிட்ட யமுனையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர் தலையில் பள்ளி கொண்டிருந்த குழந்தைக்கு வாசுகி எனும் பாம்பு குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் பாதுகாத்துக் கொண்டே வந்தது.

ஆற்றைக் கடந்து வசுதேவர் தலையில் சுமந்திருந்த குழந்தையுடன் கோகுலத்தில் நந்தனின் வீட்டை அடைந்தார். அங்கு அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே நந்தனின் மனைவி யசோதா அப்போதுதான் பிறந்திருந்த பெண்குழந்தை அருகில் படுத்திருக்க அவளும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். பொழுது விடிவதற்குள் வசுதேவர் மதுராவின் சிறைக்குத் திரும்பிவிட வேண்டும். என்ன செய்வது?

வசுதேவர் தான் கூடையில் கொண்டு வந்திருந்த தன்னுடைய ஆண் குழந்தையை உறங்கிக் கொண்டிருந்த அந்தத் தாய் யசோதையின் அருகில் விட்டுவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார். அந்த யாதவகுலப் பெண்மணி யசோதை செய்த பூஜாபலந்தான் என்னே! அந்த பரந்தாமனே அவளருகில் குழந்தையாகக் கைகால்களை அசைத்துக் கொண்டு மர்மப் புன்னகையுடன் படுத்திருந்த காட்சியை என்னவென்று வர்ணிப்பது?

வசுதேவர் தன்னுடைய எட்டாவது குழந்தையை யசோதையின் அருகில் விட்டுவிட்டு, அங்கு அவளுக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த வழியே திரும்பி மதுராபுரிக்கு வந்து சேர்ந்தார். அவர் திரும்ப வந்தபோதும் சிறைக் காவலாளிகள் நல்ல உறக்கத்தில்தான் இருந்தார்கள். எனவே குழந்தை பிறந்ததோ, வசுதேவரின் விலங்குகள் கழன்றதோ, அவர் குழந்தையைக் கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு போனதோ, இப்போது திரும்ப வந்ததோ எதையும் அறியாமல் நல்ல உறக்கம் அவர்களுக்கு. போன வழியே திரும்பிய வசுதேவர் சிறைக்கு வந்தார், உள்ளே நுழைந்தார், பழையபடி விலங்குகள் பூட்டிக் கொண்டன, பெண் குழந்தையை தாயார் தேவகியின் அருகில் விட்டுவிட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இவை எல்லாம் நடந்து முடிந்தபின் காவலர்கள் உறக்கத்திலிருந்து எழுந்தார்கள். கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தார்கள். குழந்தை அழும் குரல் கேட்டு, ஆகா! தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்துவிட்டது, அரசன் கம்சனுக்குச் செய்தி சொல்ல ஓடினார்கள் காவலர்கள். கம்சன் எங்கே எங்கே என்றல்லவா காத்துக் கொண்டிருக்கிறான். செய்தி கேட்டு ஓடிவந்தான் சிறை கொட்டிலுக்கு. வந்தான், பார்த்தான் நம்மைக் கொல்ல வந்த எட்டாவது பிள்ளை எப்படி என்று, பார்த்தான், அந்த குழந்தை ஆண்குழந்தை அல்ல, பெண்ணல்லவா பிறந்திருக்கிறது. என்ன இது? ஆணானால் என்ன, பெண்ணானால் என்ன? என்னைக் கொல்லப்போவது எட்டாவது குழந்தை அல்லவா? ஆகையால் இந்தக் குழந்தையையும் கையில் எடுத்துக் கொண்டு சுழற்றித் தறையில் அடித்து அதனைக் கொல்லப் போனான்.

தேவகி கதறினாள்; பெற்ற வயிறு. இதற்கு முன்பு ஏழுமுறையும் குழந்தைகளை அவன் இரக்கமின்றி அவள் கண்முன்னால் வெட்டிக் கொன்றானே, இப்போது இந்தப் பெண் குழந்தையையும் கொல்ல வந்திருக்கிறானே என்று அவள் கதறினாள், கெஞ்சினாள், இது பெண் குழந்தையாயிற்றே, இதைப்போய் கொல்வேன் என்கிறாயே, பாவம் அது என்ன பாவம் செய்தது, அதைக் கொல்லாதே, விட்டுவிடு என்று அண்ணனிடம் கெஞ்சினாள் தேவகி. அண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு இந்தக் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை கொடு என்று கதறினாள்.

அந்த களங்கமற்ற பெண்ணின் கதறலைக் கேட்டு மனம் இரங்கவில்லை அந்த அரக்கன் கம்சன். அவள் கதறக் கதற அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும் ஒன்றாக ஒரு கையால் பிடித்துக் கொண்டு அதைச் சுழற்றி தரையில் அடித்துக் கொல்வதற்காக சுழற்றிய சமயம் அந்தக் குழந்தை அவன் கைகளிலில் இருந்த கழன்று வானத்தில் பறந்து சென்றது.

அதே நேரம் ஒரு தெய்வீகக் குரல் சிறையெங்கும் எதிரொலிக்க, "கம்சனே! உன்னைக் கொல்வதற்கென்று அவதரித்தக் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது" என்றது.

மறுநாள் பொழுது விடிந்தது. அந்த இரவுக்கு மட்டுமல்ல, கம்சனால் அவதியுற்ற மக்களுக்கும் துன்பம் எனும் இருளிலிருந்து வெளிச்சன் வர பொழுது விடிந்தது. அங்கு கோகுலத்தில் நந்தனின் மனைவி யசோதை கண் விழித்துப் பார்த்தாள். தனக்குப் பக்கத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை. இரவின் மயக்கத்தில் முந்தைய இரவு தனக்குப் பிறந்தது பெண்குழந்தை என்றல்லவா தோன்றியது. இது என்ன அதிசயம், ஆண் குழந்தையாக இருக்கிறதே, சரி போகட்டும் இதைப் போய் பெரிது படுத்தலாமா? எதுவானால் என்ன, பெண் என்று இரவின் மயக்கத்தில் நினைத்திருப்போம், நல்லது நமக்கு ஆண் குழந்தை பிறந்தவரையில் மிகுந்த மகிழ்ச்சி என்று மகிழ்ந்தனர் நந்தனும் யசோதையும். குழந்தையைக் காலை வேளை வெளிச்சத்தில் பார்த்தார்கள். குழந்தை நல்ல கருமை நிறம், ஆகவே அவனை கிருஷ்ணன் எனும் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

சிறையில் அசரீரி சொன்ன செய்தியைக் கேட்டு அரண்டு போயிருந்தான் கம்சன். என்னைக் கொல்வதற்கென்று பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்கிறதாமே! விடக்கூடாது. அன்று பிறந்த குழந்தை எதுவும் கோகுலத்தில் உயிரோடு இருக்கக்கூடாது. கூப்பிடு அந்த அரக்கியை என்று பூதகி எனும் ஒரு அரக்கியைக் கூப்பிட்டு முந்தைய இரவில் பிறந்த எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு என்று உத்தரவிட்டான். கருத்த மலைபோன்ற உருவமுடைய அந்த பூதகி தன்னுடைய மார்பகங்களில் விஷத்தைத் தடவிக் கொண்டு கொகுலம் சென்று அங்கு பிறந்திருந்த குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்து அவைகளைக் கொல்ல முயன்றாள். முதலில் இப்படியொரு பெண், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்ததை அலட்சியமாக எண்ணிய மக்கள், அவள் பால் கொடுத்த குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து இறந்து போனதைக் கண்டதும் விழித்துக் கொண்டார்கள். இவள் யாரோவொரு மாயக்காரி, குழந்தைகளிக் கொல்வதுதான் இவள் எண்ணம், நல்ல எண்ணத்தில் இவள் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

எங்கே அந்த ராட்சசி? தேடினார்கள். அவளோ மெல்ல நந்தன் யசோதாவின் இல்லத்தைச் சென்றடைந்தாள். அங்கு அன்னை யசோதையின் மடியில் படுத்திருந்த குழந்தையைத் தான் கொஞ்சி மகிழ்வதற்காகத் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டாள். தன் குழந்தையை அன்போடு ஒருத்தி கொஞ்சவேண்டுமென்கிறாள் என்றதும் மகிழ்ச்சியோடு யசோதையும் குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் தன் வீட்டு வேலைகளைக் கவனிக்க உள்ளே சென்றுவிட்டாள்.

உள்ளே வேலையாக இருந்த யசோதையின் காதில் ஒருத்தி கொடூரமான குரலில் அலறுவதைக் கேட்டாள். ஐயயோ! தன் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டல்லவா வந்துவிட்டோம் என்று வாசலுக்கு ஓடிவந்தாள் யசோதா. அங்கு முன்பு வந்து குழந்தையை வாங்கிக் கொண்ட அந்த ராட்சசி உயிரிழந்து அலங்கோலமாக மார்பகம் தெரிய விழுந்து கிடந்ததைக் கண்டாள். அருகில் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டு கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு விளையாடுவதைக் கண்டாள். நல்ல காலம், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, இவள் யார்? ஏன் இவள் இறந்து கிடக்கிறாள்? என்று நினைத்தாள் யசோதா. இவள் யாராகவேனும் இருந்துவிட்டுப் போகட்டும், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, அதுமட்டுமல்லாமல் சிரித்து விளயாடிக் கொண்டிருக்கிறதே, இது ஒன்றும் சாதாரண குழந்தை இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

யசோதையிடம் கிருஷ்ணன் வளர்ந்தான். பால்ய லீலைகளை கோகுலத்தில் நிகழ்த்திக் காட்டினான். கோகுலத்துப் பெண்கள் அவனிடம் அன்பு கொண்டனர். நட்பு வட்டம் அவனுக்கு அதிகம். அவனுடைய விஷமம் பலரையும் கோபப்பட வைத்தாலும், அவனுடைய மலர்ந்த முகத்தைக் கண்டதும் அந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் அல்லவா மறைந்து விடுகிறது? யார் இவன்? என்ன மாயம் செய்கிறான்?

பிறகு கண்ணன் வளர்ந்து பெரியவனாகி கம்சனை வதம் செய்து, தன் பாட்டன் உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து அரசனாக்கிவிட்டு, தன் உண்மை பெற்றோர்களான வசுதேவர், தேவகியிடம் அன்பும் பாசமும் கொண்டு, அதே அளவில் தன்னை வளர்த்த நந்தனிடமும் யசோதையினடமும் அன்புடன் இருந்தான். உலகத்தைப் பீடித்திருந்த துன்பங்கள் விலகி, கண்ணனால் ஒளிபெற்றது. அந்த குழந்தை பிறந்த நாள் ஜென்மாஷ்டமி.

ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை கோகுலாஷ்டமி, கிருஷ்ணனின் ஜென்மாஷ்டமி, தீமையை அழித்து ஒளியூட்டிய நல்ல நாள். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!