பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 10, 2015

31. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீ செய்த ப்ரஸங்கம்


               சியூ சீன் ஒரு பொதுக்கூட்டத்தில் செய்த உபந்யாஸமொன்றின் ஸாராம்சத்தை லயோநெல் கிப்ஸ் எழுதியிருக்கிறபடிஇங்கு மொழிபெயர்த்துச் சொல்லுகிறேன். அதினின்றும் இவளுடைய உண்மையான குணத்தை அறிந்து கொள்ளுதல் சற்றே எளிதாகுமென்று நினைக்கிறேன். சியூ சீன்சொல்லுகிறாள்:-

ஸஹோதரிகளே! 

 பல்லாயிர வருஷங்களாக நாம் ஆண் மக்களின் கொடுமைக்குக் கீழ்ப்பட்டு வாழ்கிறோம். எந்தக் காலத்திலும் நமக்கு ஓரணு வளவாயினும் ஸ்வதந்திரம் இருந்தது கிடையாது. மூன்று விதமான கீழ்ப்படித லென்றும், நான்கு விதமான பெண்ணறங்களென்றும் சொல்லிப் பழையசாஸ்திர விதிகள் நம்மை இறுகக் கட்டியது மன்றி இந்த பந்தத்தை எதிர்த்து நாம் ஒரு வார்த்தைகூட உச்சரிக்கக்கூடாத வண்ணமாக நம்மை அடக்கிவிட்டன. ஸ்திரீகளாகிய நம்மைச் சிறு குழந்தைப் பிராய முதலாகவே பாதங்களைக் கட்டுதல் என்ற வழக்கத்தால் எண்ணுதற்கரிய துன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த முறையால் நமதுபாதம் வற்றிச் சதையும், எலும்பும் குறுகிச் சிதைந்துபோகின்றன. இதனால் நம்முடல் பலமிழந்து உழைப்பதற்குத் தகுதியற்ற தாய் விடுகிறது. எல்லாக் காரியங்களிலும் நாம் ஆண் மக்களைச் சார்ந்து நிற்க நேரிட்டது. விவாகம்நடந்த பின்னர் நம்மைக் கணவர் அடிமைகளைப் போல நடத்துகிறார்கள். அவர்களுக்குத் துணிப்பெட்டி தைத்துக்கொடுக்கவும், சமையல் பண்ணவும், சோறு போடவும்,தேயிலைக் காய்ச்சிக் கொடுக்கவும், வாயில் தெளிக்கவும், குப்பை பெருக்கவும், அவர்களுக்கு ஸ்நானம் செய்துவைக்கவும், பணி செய்யவும் மாத்திரமே நம்முடைய சக்திகளெல்லாம் செலவாகின்றன. முக்கியமான கார்யம் எதிலும் நாம் சிறிதளவேனும் கலக்கக் கூடாது. வீட்டுக்கு யாரேனும் விருந்தாளி வந்தால் உடனே நாம் அந்தர்த்தானம் பண்ணி அறைக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொள்ளவேண்டும். எதைக் குறித்தும் நாம் ஆழ்ந்த விசாரணை செய்யக் கூடாது. ஏதேனும் வாதத்தில் நீண்ட மறுமொழி சொல்லப் போனால் ஸ்திரீகள் அற்பமதியுடையவர்களென்றும் ஸ்திரபுத்தி யில்லாதவர் களென்றும்சொல்லி நம்முடைய வாயை அடைத்து விடுகிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் நம்முடைய தைர்யக் குறைவேயன்றி வேறில்லை. இந்த தைர்யக் குறைவுக்குரிய பல ஹேதுக்களில் நம்மைக் குழந்தைப் பிராயத்திலேயே பாதங்கட்டி விடுதல் ஒன்றாகும். ''மூன்றங்குலப்பொற்றாமரைகள்'' என்றும், அவற்றின் 'மோஹனச் சிறுநடை' என்றும் வர்ணித்துப் பெண் குழந்தைகளின்அடிகளைக் கட்டிப் போடும் தீமையால் நாம் சக்தி யிழந்துவிட்டோம். இன்று எனது ரத்தம் கொதிப்புற்று நிற்கிறது.உங்களுடைய ரத்தத்தையும் கொதிக்கும்படி செய்யவிரும்புகிறேன். முதலாவது, இனிமேல் எல்லாஸ்திரீகளும் சூர்ணம் தடவுவதையும் முகப்பூச்சுகள் பூசுவதையும் நிறுத்திவிட வேண்டும். மோஹப்படுத்த வேண்டுமென்று பொய்ப் பூச்சுகள் பூசக் கூடாது. ஒவ்வொரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள் கொடுத்தமுகமிருக்கிறது. பாதங்களைக் கட்டும் நீச வழக்கத்தைஉடனே வேரோடு களைந்து எறிந்து விடவேண்டும். ஐந்து கண்டங்களிலுமுள்ள வேறெந்த  நாட்டிலும் இவ்வழக்கம் கிடையாது. அப்படியிருந்தும் உலகத்தில் சீனாவே அதிக நாகரீகமுடைய தேசமென்று நமக்குள்ளே பிதற்றிக் கொள்ளுகிறோம். பாதக்கட்டு மட்டுமேயன்றி, இன்னும் பழைய கெட்ட வழக்கங்கள் எத்தனை உள்ளனவோ அத்தனையும் ஒழித்தெறிவோம். ஆண்மக்களுக்கு இனி அடிமைகளாக வாழ மாட்டோம். தைர்யத்துடன் எழுந்து நின்று தொழில் செய்து நம்முடைய ஸ்வதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவோம்.

(சீனாவில் பண்டைய நாட்களில் பெண் குழந்தைகளின் பாதத்தை இறுகக் கட்டி அது வளராமல் சிறுத்துப் போக வைத்து விடுவார்கள்; அவர்கள் நினைத்தபடி நடந்து செல்ல முடியாதபடிக்கு இந்த படுபாதகச் செயலைக் குறிப்பிடுகிறார் இந்த சீனப் பெண்)

No comments:

Post a Comment

You can give your comments here