பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, July 24, 2020

லக்ஷ்மி ராமாயணம் -- ஆரண்ய காண்டம்.


             ஆரண்ய காண்டம்

கடுந்தவம் ஆற்றியபடியே காட்டினில் வசித்தவர்
அத்திரி முனியும் ரிஷி பத்தினியும் – அவர்
ஸப்த ரிஷிகளுள் மூத்தவராம்.
முப்பெரும் தோஷங்கள் நீத்தவராம்.              

கற்பு நெறிதனில் கரை கண்டிருந்த
பத்தினித் தெய்வமாம் அனுசூயை அன்னை,
வரவேற்றாள் மூவரையும் ஆஸ்ரமத்துள்
விருந்தளித்து உபசரித்தாள் சிலகணத்துக்குள்.       

சோர்வகல அக்குடிலில் உறங்கினர் மூவரும்.
சூரியன் உதித்திட கிளம்பினர் *தண்டகாரண்யம்.
ஆரத் தழுவினாள் சீதையை அனுசூயை
சந்தனம், குங்குமம், ஆடைகள் அளித்தாள்.           
(*தண்டகாரண்யம் – சட்டீஸ்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள அடர் காட்டுப்பகுதி)                                                          

                            விராதன் வருகை
(விராதன் என்னும் அரக்கனை வதைத்து அவனுக்கு அருள்                    புரிந்த படலம்)
                                                                                                                                         மதங்கொண்ட பதினாறு யானைகளையும்,
சினங்கொண்ட சிங்கங்கள் இருமடங்கும்,
திண்தோள் வலிமையாய்க் கொண்ட கிராதகன்
திரண்டமார்புடை விராதன் என்பவன். – அவன்       

மண்ணும், நிலமும் அதிர்ந்து, அசைந்திட,
விண்ணும், மலையும் நடுங்கி குலுங்கிட,
குன்றுகள் ஒன்று சேர்ந்ததைப் போலவே
கண்கள் கனலை உமிழ்ந்திட வந்தான்.             

மாமிசம் உண்ணும் வாயைக் குகையாய்
தாமதம் இன்றியே விரியப் பிளந்தான். - பின்
தாமரை மலர் மேல் அன்னப்பறவையாம்
மாமகள் சீதையைக் கவர்ந்து பறந்தான்.              

காளை மைந்தர்கள் குழம்பிப் போயினர்.
தோளினில் தொங்கிடும் வில்லை யெடுத்தனர்
வளைத்ததில் அம்பினை செலுத்திய பேரொலி
ஏழுல கெங்கிலும் இடியெனப் படர்ந்தது.             

அம்புகள் தெறித்திட சிலிர்த்தான் விராதன்
‘ஆதி நான்முகன் பிரம்மனிடம் நான்
ஆவி அகலா வரத்தினைப் பெற்றவன் – அதனால்
ஆயுதம் இன்றியே போர் புரிவேன்’ முழங்கினான்.   

குருதியும் அருவியாய்ப் பெருகிய நிலையிலும்
‘நெருக்கிடும் பசிக்கென புசிப்பேன் இவளை
நீவீர் மீள்வீரெ’ன பேருரை புரிந்த அரக்கனின்
தோளினில் தாவினர் குமரர்கள் இருவரும்.           

நெஞ்சம் நடுங்கிய விராதக் கிராதகன்
வஞ்சகப் பூனையின் வாயினில் மறுகும்
பஞ்சரக் கிளியாம் பாவையைத் தளர்த்தினான் - பின்
நஞ்செனப் பாய்ந்தான் நாயகர் மேலே!             

சேவல் பிடிபட வருந்திடும் கோழிபோல்
சோர்ந்து போன குலச்சீதையும் மயங்கினாள்.
‘பெருந்துயரில் தேவியவள் மனம் வருந்த
முறையாமோ விளையாட்டய் இதை நீ கருத!      

முறையிட்டுக் கடிந்தான் இளையான் இலக்குவன்.
முறுவலித்த இராமன், தன் கழலணிந்த பாதத்தால்
விராதன் இடுப்பினில் உதைத்துத் தள்ளினான்.
விரைந்து கரங்களை வெட்டிப் புதைத்தான்.       

பெற்ற சாபத்தினின்று உயிர்த்தெழுந்து மீண்டு
புத்தி நிலைபெற்றான் புதையுண்ட விராதன்,
‘பரப்ரும்மம் நீவீரெ’ன உரத்து உரைத்தான்.
திருவடி பற்றியே, தன் தீவினைகள் அறுத்தான்.        

இராமன் வினவினான்:
இவ்விதம் அரக்கனாய் ஆனது எவ்விதம்?
‘கந்தர்வ லோகத்தில் ‘தும்புரு’வாய் நான் பிறந்தேன்.
அரம்பையர் ஆட்டத்தில் மதி மயங்கிக் காதலுற்றேன்.
பீடித்த காமத்தால் பெருங்குற்றம் செய்யலுற்றேன்.  

சபித்தான் குபேரன். அரக்கனாய் மாற்றினான் – ‘உன்
திருவடி படர்ந்திட சாபம் விலகிடும்’ எனும்
அருள் பெற்றேன். தும்புரு உருபெற்றேன்’ என்றபடி
வானுலகெய்தான் விராதன். சோலையடைந்தனர் மூவரும்.  

                    சரபங்கர் பிறப்பு நீங்கு படலம்

குற்றங்களின் பிறப்பிடமாம் காமத்தை வென்றவர்,
மற்றை வெகுளி, மயக்கங்கள் சற்றேனும் அற்றவர்.
‘சரபங்கர்’ பெயர்கொண்ட தவமுனியின் ஆஸ்ரமத்தை
ராப்பொழுதில் அடைந்தான் பின்னவனோடும், பிராட்டியோடும்.   

  இந்திரன் முனிவரை பிரமலோகத்திற்கு அழைத்தலும் அவர்                                                                                                                                                                                                                                
                        மறுத்தலும்
சிறந்த தவசியின் தவநாள் முடிவைத்
தேவர்கள் நேரில் வந்து தெரிவிப்பர். – அது போல
தவத்தோன் எதிரினில் இந்திரன் சென்றான்
‘நான்முகன் நின்னை யழைத்தனன்’ என்றான்.               

‘எல்லா உலகினும் உயர்ந்த ஒன்றென
சொல்லா விடினும் நீர் அறிவீர்! – அங்கு
நல்லாளுடன் இன்று வரவேண்டும்’ இந்திரன் அழைக்க,
‘அல்லேன்’ என்றே மறுத்தவர் மொழிந்தார்.

‘சொற்பொங்கு பெரும் புகழோய்! - நான்
அருந்தவம் ஆற்றி ஆயுளைக் கடந்தவன்
மறுகா நெறியாம் மோட்சத்தை விடுத்து
வெறும் அற்பப் பதவியை விழைந்திடுவேனோ?’ யென்றார்.

அவ்வமையம்-
வருகைப் புரிந்துள்ளான் இந்திரன் என்றறிந்த
திருவவதாரப் பெருந்தகை அடைந்தனன் அவ்விடம்.
நான்மறைக் கனியைத் தொழுதான் தேவேந்திரன். - பின்
தன்னிகர் முனியிடம் விடைபெற்று அகன்றான்.

தன்னைத் துதித்த இந்திரனிடம் – இராமன்
ஒன்றுமே குறிப்பாய்க் கூறவில்லை.
தன்னுயிர் விட்டுப் புரந்தரன் அகன்றதை
புலமையால் சரபங்கர் புரிந்துகொண்டார்.

ஆழியில் துயிலும் எம்பெருமான் மாலை,
மான்விழி பிராட்டியும் தம்பியும் சூழ
ஆஸ்ரமத்துள்ளே அழைத்து அமர்த்தி, - நனி
உபதேசங்கள் அருளினார் அத் தவமுனி.

கிரணங்கள் பரப்பிய கதிரவன் மறுதினம்
நிறையிருள் உறையினை உரித்து வெளிப்பட
எரியிடைப் புகுந்திட விரும்பிய முனிவரும்,
‘விடை நீ தருகெ’ன தாள் பணிந்தார்.

‘யான் வரும் பொழுதினில் இது ஏனோ?’ வினவிட,
‘நீயிவண் வரும் நிலை நிகழ்ந்ததினாலே – எந்தன்
தீவினை, நல்வினை இரண்டும் அழிந்தன
இனி ஒரு வினை இலை வேந்தே’ யென்றவர்,

‘வந்தது இறுதி நாளெ’ன அழைத்த இந்திரன்;
தந்த வையகத்தைத் தவிர்த்து விட்டேன். 
அந்தமற்றதும் அரியதுமான பரமபதத்தினை
அடைந்திட எனக்கு அருளுதி’ யெனத் துதித்தார்.

‘இராமனின் நாமத்தை நித்தமும் ஜபித்தால்
பேரருள் கிட்டிடும்’ எனும் நிலையிருக்க,
உயிரின் இறுதியில் தரிசனம் பெற்ற
சரபங்கர் பிறப்பின் உன்மத்தை என்சொல்ல?

                           அகத்தியப் படலம்

சரபங்கர் இறுதியைப் பார்த்ததினாலே
இரங்கி வருந்திய திண்சிலைக் குமரர்கள்,
அலைபுனல் நதிகளை, மலைகளைக் கடந்தே
அரிதினில் அகன்றனர் அவ்விட மிருந்தே!

அந்நாளில் பிரமன் ஈன்ற பாலகில்லர்,
முண்டர், மோனர், முதலியோரும்,
தண்டகாவனத்தினில் தவத்திலுள்ள ஏனையோரும்,
கண்டனர் இராமனைக் களிப்பு மேலோங்கிட.

கடுஞ்சின அரக்கர்கள் தவத்தினை கலைப்பதால்
அஞ்சி நடுங்கி வெதும்பிய முனிவர்கள் - அக்
காட்டின் கனலை அணைத்திட வந்த
காகுந்தன் இவனென மனம் மகிழ்ந்தார்.

புல்லர்கள் பயத்தினைப் போக்கிடல்தான்
பிறந்து தாம் பெறும் பெரும் பேறென்றவன்
பத்து ஆண்டுகள் அவ்வனத்திடை வசித்த பின்
அகத்திய முனியின் ஆஸ்ரமம் அடைந்தான்.

தென்தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து,
கடத்தினில் காவிரி கொணர்ந்த அகத்தியன்,
நெடுமால் வந்ததும் வணங்கி யெழுந்தார்.
எம்பிரான் தாள்தனில் வீழ்ந்து பணிந்தார்.

அரக்கரை வேர்முத லறுத்து எறிந்திட
பிறந்த மருத்துவன் இவனெனப் புரிந்து,
உய்த்தனர் தேவர்கள்; உயிர்த்தனர் தவத்தோர்;
அகமகிழ்ந்தனர் அறத்தின் நெறிநின்ற அந்தணர்.

‘செருக்குடை அரக்கரை விரைவினில் அகற்றிட
அருளுதி அதற்கெ’ன வேண்டினான் இராகவன்.
அரியவாள், வலியஅம்பென ஆயுதங்கள் பலவுடன்
திருமால் வில்லொன்றை, அளித்தான் அகத்தியன்.

உலகங்கள் ஏழினும் எவ்விடமும், எந்நாளும்
கலந்து விளங்கிடும் பரம்பொருளான எம்பிரான்
ஆலமரங்கள் ஐந்துடனே பொலிவுடன் விளங்கிடும்
‘பஞ்சவடி வனம்’ நோக்கிப் புறப்பட்டார்.
(பஞ்சவடி இப்போது நாஸிக் என்று அழைக்கப்படுகிறது)

                         சடாயு காண் படலம்

தூய்மையன்; கற்றுத் துணிந்த கேள்வியன்;
வாய்மையன்; குற்றம் துறந்த மதிகூர்மையன்,
தேய்ந்த அங்குசம்போல் நீண்ட நாசிகொண்ட
‘சடாயு’ என்கின்ற கழுகின் வேந்தன் – அவன்

ஓங்கி உயர்ந்த மலை மேல் நின்றான்.
தாங்காத அம்மலை தாழ்ந்து அமிழ்ந்தது.
வீங்கிய வலிமைகொண்ட சடாயு கழுகினை
நோக்கினர் மூவரும் ஐயம் எழும்பிட
(அந்த மலையின் பெயர் ப்ரஸ்ரவணம்)

வரிசிலை வீரரை பார்த்தான் சடாயு.
‘மரவுரி தரித்த வினையறு வில்லினர்,
தேவரோ எவரோ அறிகிலேன்’ எனப்பல நினைத்தவன்,
‘உரைப்பீர் எவரென’ வெளிப்படையாய் வினவினான்.

‘வீரக் கழலணி தசரதன் மைந்தர்கள்’ என்ன
பெருகிய உவகையால் தரையினை அடைந்தவன்,
‘தசரதர் வலியரோ’ வென விருப்புடன் வினவினான்.
‘இறக்கம் உற்றான்’ என்றதும் ஏக்கம் எய்தினான்.

‘நீயுடல் யானாவி’ என்ற தசரதத்தோழன் இறந்ததால்
இனிதுயிர் துறந்திட சடாயு துணிந்தான்
‘தந்தையின் இடத்தில் இருப்பீர் நீரெ’ன
அணைத்துத் தேற்றினர் தசரத புதல்வர்கள்.

நாடு துறந்தபின் காட்டிடை வந்ததும்,
நேசம் நிறைந்த பிராட்டி மணந்ததும்
கேட்டுத் தெளிந்த கழுகுத் தலைவன் – இக்
காட்டினில் கழிப்பீர் காக்குவென் நானென்றான்.

‘அகத்தியன் இயம்பிய பஞ்சவடி யடைந்து,
அகன்ற கரைதனில் உறைவம்’ என்ன – அவர்களை
விரித்த சிறகின் நிழலினில் பொருத்தியே
உயர்ந்து விண் வழி சடாயு பறந்தான்

                          சூர்ப்பணகை படலம்
           (இராமன் முதலியோர் கோதாவரியைக் கண்டது)

புவிக்கு அணியாய் பெரும் பொருள் ஈந்து
ஐவகைத் திணைகளில் அளாவிப் பாய்ந்து,
கவிபோல் விளங்கிடும் நதி கோதாவரியின்
கரைதனை யடைந்தனர் வரிசிலை வீரர்கள்.

திரையெனும் கரங்களால் திருமலர் தூவி,
திருவடி பணிந்து பொலிந்த அந்நதி
திருமகன் வனத்திடை வருவதால் அதிர்ந்தது.
பனித்துளி பரப்பியே அழுவதை ஒத்தது.

அனையதோர் ஆற்றின் கரைதனில் அமைந்த
‘பஞ்சவடி’யெனும் பரந்த சோலையில் – பர்ண
சாலையை வடித்தான் இளையான் இலக்குவன். – அங்கு
தேவியை இருத்தி மகிழ்ந்தான் வீரன்.

                   சூர்ப்பணகை பஞ்சவடி வருதல்

தேவர்க்கும், முனிவர்க்கும் இன்னல்கள் இழைத்தவன்
அரக்கர்க் கரசன் தசமுக இராவணன். - அவன்
வேர் முதலறுந்திடக் காரண மானவள்.
முறம்போல் நகம் படைத்த அறமற்ற ஓர் அரக்கி.- அவள்

.
.
உடனுறைக் கடிய காமநோய் கொண்டவள்.
கொடிதான வனத்திடையே தனியாக வசிப்பவள்.
‘சூர்ப்பணகை’ யென்னும் பெயர்தரித்த அவ்வரக்கி,
இராகவனின் குடில் வாயில் பார்த்தவுடன் நுழைந்தாள்.

‘முகமென்ன தாமரையோ, முழுமதியோ!’ மலைத்தாள்.
‘பற்களின் நிறம்தான் சூரியச்சோதியோ’! வியந்தாள்
;உதட்டுச் சிவப்பென்ன பவழத்தை நிகர்த்ததுவோ’வென
பதட்டத்துடன் அவனைக் கவர்ச்சியாய்ப் பார்த்தாள்.

பனை மரம் ஒப்பாகுமா – யானையின்
தும்பிக்கைக்கு ஒப்பான அவன் கைகளுக்கு.
கல்மலையோ, பொன்மலையோ ஒப்பாகுமா
வில்லெடுத்துப் போரிடும் அவன் வீரத்தோள்களுக்கு.

ஐயனைக் கண்டதும் அவனழகில் மயங்கினாள்
‘சிவனோ, மாலோ, காமனோ, இந்திரனோ’வென
ஐயுற்றுத் தெளிவடைந்தாள் மானுடன்தானென - பின்
அரக்கியுறு நீக்கிவிட்டு அழகாக வெளிப்பட்டாள்.

வியப்பு பெருகிட வீரனின் எதிர் வந்து
நயந்து நின்றவள் மயக்கமாய்ப் பார்த்தாள்.
நிமிர்ந்து நோக்கினான் நீதி நெறியாளன். – அவள்
குனிந்து சிரித்தாள் பெருகிய காமத்தால்.

அந்நியளாய் அவ்விடம் வந்து அடைந்தவளை
அந்தமிலான் வினவினான். ‘யார் நீ அபலை?’
நான்முகனின் மகன் வயிற்றுப் பெயற்றி நான்
கன்னி ‘காமவல்லி’, இராவணனின் பின்னையென்றாள்.
(பிரும்மனின் புதல்வன் புலஸ்தியர். அவரின் குமரர் விஸ்வரஸ் என்ற முனிவர். அவருக்கும், சாலகடங்கடர் என்ற க்ஷத்திரிய மரபில் பிறந்த அரச குலத்துப் பெண்ணுக்கும் பிறந்த மகள் சூர்ப்பணகை.)

‘இமையவர் தலைவன், வானவர்க்கரசன் இந்திரனையே
இழிநிலைப்படுத்தி ஏவல்கள் செய்திட ஏவியவன்.
மூவுலகாளும் செங்கண் இராவணன் தங்கையெனில்
இவ்விடம் தனியே அழகியாய் வந்தது எங்கனமெ’ன
                                           வினவினான்.             

‘’சீர்மைகெட்ட அரக்கரோடு நானென்றும் சேர்கிலேன்.
ஆர்ய முனிவரோடு நன்னெறியில் வாழ்கிறேன். – ஒரு
காரியத்தின் பொருட்டாக இன்று உன்னைக்
காண்பதற்கு இவ்விடமே வந்தேனெ’ன்றாள்.

‘கூறுதி! பொருத்தமென்றால் வருத்தமில்லை’ என்ன
‘காமனவன் என்மேல் விடுக்கும் கூரியபாணத்தால்
காமம் மிகக் கொண்டுள்ளேன் அதன் பாரத்தால்’ என்றதும்,
நாணமில்லா நல்லள் அல்லள் இவளென்றுணர்ந்தான்.

நீதி நிலையற்ற நிந்தனை அரக்கிதான்
தீவினைப் புரிவதற்கே வந்தனளென அறிந்தான்.
‘அந்தணர் குடியில் பிறந்த பாவை நீ - நானோ
அரசர்குலம்! வழக்கத்திற்கு உகந்ததன்று’ என்றான்

‘நான்மறைகள் நமக்காக வகுத்து வைத்த
மணமுறையை மனதாற மேற்கொள்வோம்.
கந்தர்வக் கல்யாணம் நிகழ்ந்துவிட்டால் – நின்
கட்டுக்குள் வந்துவிடும் விண்ணும், மண்ணும்

முனிவருடன் என் தமையன் நாளும் கொள்ளும்
முதிர்பகை முற்றிலும் முறிந்து போகும்.
விருப்பொடு அரக்கர்கள் இணக்கமாயிருப்பர்.
சுணக்கமின்றி ஏவல்கள் புரிந்தபடி இருப்பர்’ என்றாள்.

‘அரக்கர்தம் அருளும் பெற்றேன் – நின்னை
அடைந்திடும் பெரும்பேறும் பெற்றுவிட்டேன்.
திருநகர் நீங்கி யான் வனத்திடை வந்தபின்
செய்தவம் பயத்ததெ’ன பரிகாசமாய் நகைத்தான்.

அவ்வமையம் –
வான்சுடர் சோதிவெள்ளம் தளர்நடைபயின்றாற் போல்
அன்னம்போல் மெல்ல வந்தாள் வஞ்சிக்கொடியாள்.
பொன்னைப்போல் ஒளிர்ந்திடும் இந்தப் பெண்ணும்
தன்னைப்போல் வந்தனளோவென சூர்ப்பணகை வியந்தாள்.

விளைவன தீமையென்றுணர்ந்து கொண்ட வீரன்
‘இளையான் வருமுன் போகுதி விரைந்தெ’ன்று எச்சரித்தான்.
மின்னல் தொடரும் மேகமன்ன மிதிலைப்பெண்ணை
மெல்ல அணைத்து பண்ணசாலைக்குள் புகுந்தான்.

‘விரும்பிய நாதனையே தழுவிடணும் மடக்கி’யென
பொருமிய சினத்தீயால் புழுங்கினாள் அரக்கி.
வழிந்த காமக்கனல் மிகுந்து எரிந்ததால்
அழிந்த சிந்தனையால் உறக்கமும் துறந்தாள்.

விடியல் கண்டதும் ஓர் முடிவுக்கு வந்தாள்
‘சடுதியில் அப்பெண்ணைக் கவர்ந்து எடுத்து,
தனித்த இடத்தினில் ஒளித்து வைத்தபின் – அவளின்
நல்லுரு கொண்டு நாம் வாழ்ந்திட வேண்டும்’

பொழுது புலர்ந்தது.
கனி தரும் சோலையில் காலையிலே,
சந்தியா வந்தனம் அண்ணலும் செய்கையிலே,
இந்துவை ஒத்த நுதலுடைத் தேவியைத்
தம்பியும் காவலாய் காத்து வந்தான்.

அறியவில்லை அரக்கி இளையானின் இருப்பை
குறிப்புடன் பார்த்தாள் பிராட்டியின் பின்னுருப்பை.
‘தனித்திருக்கிறாள் சமைந்ததென் கருத்தெ’ன கருதினாள்.
வன்மனத்துடன் வளைத்திட வகையாய் நெருங்கினாள்.

‘நில்லடீ’ யென விரைந்து வந்தான் இளையான்.
வில்லெடுக்கவில்லை அவள் பெண்ணானதால் – மாறாய்
விரித்த கூந்தலை விரல்களால் பற்றினான்.
இடையினில் உதைத்து உடைவாள் உருவினான்.

முகலட்சணம் மாறி அவலட்சண மாவதற்கு - அவளின்
மூக்கையும், காதுகள் இரண்டையும் அறுத்தெறிந்தான்.
பெண்மைக்குக் குறைவைக்க அவளின் முரண் முலைக்
கண்களை அகற்றி, பின் கூந்தலைத் தளர்த்தினான்

அக்கணத்தில் அவளெழுப்பிய அரற்றல் ஒலியோ
திக்கனைத்தும் மேலெழும்பிப் பரந்து ஒலித்தது.
மூக்கின்வழி பெருகிய குருதியின் அளவினால்
மூவுலகும் நிலைகுலைந்து தளும்பித் தளர்ந்தது.

அவளோ-
வானம் வரை உயர்ந்து எழுந்தாள்
மண்மீது விழுந்து அழுது புரண்டாள்.
மூக்கின் செம்மையை ஆடையால் துடைத்தாள்
கயிலை மலையெடுத்த தமையனைக் கூவியழைத்தாள்.
(கயிலை மலையெடுத்த தமையன் இராவணன்)

ஊழிக்காலத்தும் தன் நிலையினின்றும் நழுவாமல்
தேவர்கட்க்கும், அசுரர்கட்க்கும், மூர்த்திகள் மூவருக்கும்
தேவையாய் இருந்த இராவணனே! – எந்தன்
வேதனையைக் காண வேகமாய் வருவாயோ?

இந்திரனை எதிர்த்துப் போர் புரிகையிலே – உடல்
வியர்க்க அவனை விரட்டி யடித்தவனே!
வாயு, வருணன், அக்னி, யமன் மற்றும்
வானத்துக் கோள்களை ஏவலராக்கிய தசமுகனே!

சிவனோ, அரியோ, அயனோ இவனென
எவருமே வியந்திடும் அண்ணனாம் கரனே!
விரைந்து வாராய். திண்தோள் வீரனே – என்
அவதியைத் தீராய். தமையனாம் தீரனே!
(விஸ்வரஸின் முதல் மனைவியான கேசகியின் மகன் இராவணன்.
மற்றும் கும்பகர்ணன்.
விஸ்வரஸின் இரண்டாம் மனைவியான, கேசகியின் தங்கை கும்பினஸிக்குப்
பிறந்தவர்கள் கரன், தூடணன் மற்றும் சூர்ப்பணகை. தாய் வழி, தந்தை வழி,
இரண்டு வழிகளிலும் இவர்கள் சகோதரர்கள்.
திரிசிரா என்பவன் மூன்று தலைகளை உடையவன்.
இவன் கரனின் படைத்தலைவன்.)

‘இந்திராணியே ‘பல்லாண்டு’ எனும் வாழ்த்துப்பா பாடிட -
சந்திரனே வெண் கொற்றக்குடையாய் பறந்து ஆடிட
இமையோரெல்லாம் அடங்கி நடக்கும் அவைதனில்
நசுங்கிய முகத்துடன் எவ்விதம் நான் நுழைந்திட?


இந்திரனை சிறைபிடித்த இந்திரஜித் மருமகனே!
மதயானைக் கொம்பொடித்த மாவீரன் இராவணனே!
ஆயுதக் கரம் கொண்ட கரனே! தூடணனே!
செவிமூடி உறங்குதிரோ கும்பகர்ணன் போலே!

அழுது புரண்டவள் அரற்றிய ஒலி கேட்டு
விரைந்தங்கு எய்தினான் வில்லாளன் இராமன்.
‘தவவனத்தினில் என்செய்ய நீ வந்தாய்? அவளை அதட்டினான்.
‘விடுகாதும், நெடுமூக்கும் ஏன் நீ அரிந்தாய்? அவனை                     
                                       வினவினான்.

‘இவள், கருதிவந்த காரியத்தை அறிந்திலேன் நான்
‘புறத்திருந்து தாக்கும் அரக்கர் கூட்டம்’ என்னும்படி
பிராட்டிதன் உயிரைப் பறித்திடும் கருத்துகொண்ட
எரிஉமிழ் கண்ணினாள் பாய்ந்து வந்தாள்’ என-

இளையான் சொல்லிமுடிக்குமுன் செங்கண் அரக்கி,
‘மாற்றாளைக் கண்டக்கால் மனம் எரியாதோ? என்றதும் – ‘
குற்றம் செய்யவல்ல கொடும்அரக்கி இவளென்றும்
முற்றிலும் சரியே இவளின் மூக்கரிந்ததென்றும் உணர்ந்தான்.       
‘உன்
அன்னைதனை ஈன்றெடுத்த நவையரக்கி ‘தாடகை’யின்
தலையெடுத்து வதம்செய்த வில்லும் அம்பும் உண்டு.
புலனடக்கித் தவம்செய்து பெருமையுடன் யான்பெற்ற
பலவகையாய் வாளுண்டு உனைப் பதம்பார்க்க.

மணமான என்பால்கொண்ட மோகத்தைக் கொன்றுவிடு.
வீணான மையலையும் வேருடனே அழித்திடு.
எரிசொல்லை விட்டொழித்து எதிரினின்று சென்றிடு.
பெரும்குலமாம் அரக்கர்களை அறுப்பதற்கு வழிவிடு’ என்றான்.

          சூர்ப்பணகை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டல்

‘மூக்கு அறுபட்டாள் நும் தங்கை’ எனச் சொல்வாரின்
நாக்கையும், நரம்பையும் அறுப்பான் தசமுகன். – உன்
ஊனையும் உயிரையும் காப்பவர் எவருமில்லை- என்
இச்சைக் காக்கின் யான் உன் மூச்சைக் காப்பேன்.

போரென்றால் நானுன் புறம் இருப்பேன். – உனை
தோள்மீது சுமந்து செல்ல வல்லேன்.
வாள் வீசி உனக்கு வேண்டியதைத் தருவேன். – இப்
பவளப் பெண்ணாலே பயன் யாதும் உளதோ!

வேலேந்திய இராட்சதர்கள் வெகுண்டு வந்தால்
பூலோகம் உன்பொருட்டால் அழிந்து பொகும்.
உயர்குலத்தில் பிறந்து வளர்ந்த நாயகனே - என்னை
உவந்து ஏற்று இனிது இருப்பீர்’ என இறைஞ்சினாள்.

                    இராமன் மறுத்தல்

‘இராட்சதர் எதிரினில் தேவர்கள் தோற்றதால்
இளக்காரமா பெண்ணே யாமிருவர் மானுடரென?
இயக்கரையும், அரக்கரையும் கொணருதி இவ்விடம்
கொன்று குவித்துக் கொடுத்திடுவோம் உன்னிடம்’. என்றான்.

                  சூர்ப்பணகை விடுத்த சூள்

‘கொடிமூக்கும், இருகாதும், முலையிரண்டும்
அறுபட்ட பின்னாலும் வாழ்ந்திடத்தான் பொறுப்பேனோ?
காற்றையும், கனலையும் காட்டிலும் கொடியவனாம்
கரனாகிய யமனைக் கொணர்ந்திடுவேன் நானெ’ன்றாள்.

                    கரன் வதைப் படலம்

‘ஜனஸ்தானம்’ என்ற சமஸ்தானத்தின் தலைவன்!
கும்பீனிஸிக்கும், விஸ்வரஸுக்கும் மகனான அரக்கன்!
தூடணனுக்கும், தனக்கும் தமையனான கரன் என்பானின்
கரம்பற்றி கதறி அழுதாள் அரக்கி சூர்ப்பணகை.

வழிந்த குருதியைப் பார்த்ததும் நெஞ்சம் துடித்தான்
இழிந்த நிலையைக் கண்டதும் நஞ்சென உமிழ்ந்தான்.
‘பழிச்செயல் இதனை துணிவுடன் புரிந்தவன் எவனெ’ன
கருவிழி இரண்டும் சிவந்திட உருமிச் சினம் கொண்டான்.

‘தவ நியமத்திலிருக்கும் மானிடர் இருவர்
தரும நெறிப்படி நடக்கும் தசரத குமரர்
வரிவில் வாள் கொண்ட வீரக்கையினர்
வடிவினில் மன்மத னையொத்த மேனியர்.

சிறிதும் உன் வலிமை நோக்காதார்
அரக்கரை அழித் தொழிக்கும் நோக்கத்தார் - அவரோடு
நேர்கிலா பெண்ணின் நோக்கு உடையவளை
நோக்கினேன் நான் என்னிரு கண்களால்.

இலட்சணம் பொருந்திய இலக்ஷ்மியைப் பார்த்ததும்
இலங்கை வேந்தன் இராவணனுக் கென
எடுத்துச் சென்றிட இலட்சியம் கொண்டேன் – அதைத்
தடுத்தென் மூக்கினை அறுத்தான் இலக்குவனெ’ன்றாள்.

தோண்டிய பனை நுங்கின் துளைகள் போல்
துண்டான மூக்கினைக் கண்டு ஆத்திரப்பட்டவன்,
‘கேடு செய்தவரை காட்டிடெ’ன ஆவேசப்பட்டான்.
‘எடுத்திடு தேரெ’ன வீறுகொண் டெழுந்தான்.

மலையினும் வலிய படைத்தலைவர் பதினால்வரும்,
‘தேவரோடு போரென்றால் வாளினை நீவீர் எடுக்கலாம்.
மாந்தரோடு மோதுதற்கு மதயானை கிளம்பலாமோ?
தருக இப்பணி; தகர்த்திடுவோம் நாங்களினி’ யென்றார்’

‘நன்று சொன்னீர்; நானிச் சிறார் மேல்
சென்று போர் செய்தால் தேவரும் நகைப்பர்.
கொன்று நீர் அவரின் குருதியைக் குடிப்பீர்.
வென்று மீள்வீர் மெல்லிடையாளோடெ’ன்றான் கரன்.

வெட்கமற்ற சூர்ப்பணகை சுட்டிக்காட்டினாள் பரந்தாமனை!
‘முற்றுவிப்போம் தலைவன் சொல்லிய முறைப்படி’யென
எட்டிப்பிடிக்கும் பந்துபோல் எள்ளிநகையாடிய அசுரர்கள்
வட்டமிட்டு சூழ்ந்தனர் கொசுக்கூட்டமாய் அம்மாமலையை

‘தையலைக் காத்தி’யென இளவலை ஏவிய ராமன்,
கயிற்றை அவிழ்த்து, பெருநாண் வாங்கினான்.
எய்தான் அம்புகளை; பாய்ந்தன பதினால்வர் மேல்
கொய்தன கரங்களை; சிதைத்தன அவரின் சிரங்களை.

படைத்தலைவர் பதினால்வரும் மடிந்தமை கண்டு
அதிர்ந்து போனாள் தீயவள் சூர்ப்பணகை.
ஒளிரும் வேலேந்திய கரனுக்குத் தெரிவிக்கப்
பிளிறிய படி ஓடினாள் அண்ணனைப் பார்க்க

‘அழையுங்கள் என் தேரை விரைந்து!
முழக்குங்கள் போர் முரசை அதிர்ந்து
‘எழுக சேனை! வருக போர்ப்படை!’ யென
ஏழுலகும் அதிரும்படி வெகுண்டான் அரக்கன்.

காலாட்படைகள் கடல் போல் முன்வர
வாட்களும், வேல்களும் சுமந்த வீரரின்
தேர்கள், ரதங்கள், கூட்டமாய் பின்வர
‘புறப்பட்டது பெரும் படை’யென்பது புலப்பட்டது ஐயனுக்கு.

அம்புப் புட்டிலை முதுகினில் தரித்து
போர்புரிய ஸ்ரீராமன் ஆயத்த மாகையில்
தாம் போர் புரிய விழைந்த இலக்குவன்
‘யான் செய்நிலை காண்டி இன்றெ’ன்றான்.
.

‘அரக்கர்கள் ஆவியைப் பிடுங்கிப் பறித்திடுவேனென
பெருந்தவ முனியிடம் வாக்கினை அளித்ததால்
பொறுப்பேற்று யான் செல்வதே முறைமை
பிராட்டியைக் கனிவுடன் காப்பதுன் கடமை’ யென்றான்.

அண்ணல் ஆணையை மறுக்கிலா தம்பியும்,
கண்ணீர் சொரியும் அன்னையின் அருகினில்
உள்ளங் கைகளைக் குவித்துத் துதித்து
குன்றென காவலில் நின்றனன் நம்பியாய்.

மானிடனின் மகத்துவம் அறிந்திடா கரன்
‘யானே வாகை கொண்டனனெ’ன கர்ச்சிக்கையில்
‘தற்சமயம் நிமித்தம் தீயதாய் உள்ளதே’யென
அச்சத்துடன் இயம்பினான் அகம்பனெனும் நிமித்தன்.

உரைத்த அகம்பனின் அறிவுரைதனை கரன்
உரத்துச் சிரித்தபடி உதறித் தள்ளினான்.
‘ஈயினைக் கொல்ல ஈட்டி எதற்கென நகைத்தவன்
தீயெரி விழியுடன் போரிட முனைந்தான்.

பிடரி மயிர் கொண்ட ஒற்றை சிங்கத்தை
நெருக்கி வளைத்தன எறிபடை யானைகள்.
செருக்கும், இடக்கும் சிந்தையாய்க் கொண்ட
சேனைக்குப் பறந்தன பற்பல ஆணைகள்.

வளைந்த கைவிரி வில்லினால் அவ்விடம்
விளைந்த போரினை விளம்புவது எவ்விதம்?
புரண்டு விழுந்தன பாய்ந்து செல்லும் பரிகள்
மருண்டு மாய்ந்தன பேருரு கொண்ட கரிகள்

சூலமும், வாளும், தூரமாய்ப் பறந்தன.
தலைகளும் உடல்களைத் துரிதமாய் துறந்தன.
குருதியும் அருவிபோல் பாய்ந்து படர்ந்தன.
நிருதர்கள் தரையினில் புரண்டு இறந்தனர்.

அத்தருணம்-
முத்தலைகள் கொண்ட அரக்கன் திரிசிரா
எத்தனித்தான் இராமனை எதிர்த்துப் போரிட
தனியனாய் நின்ற தன்னிகரற்ற வீரனோ
சேனைகளை சிதைத்தான் பிணக் குவியலாய்.

அரக்கர்கள் உடல் சுமந்த குருதியாறு
அலங்கல்வேல் இராவணனுக்கு அறிவிக்குமாறு
இலங்கைவரை பாய்ந்து சென்று உய்க்கையிலே
ஆழ்ந்திருந்த தேரேறி ஆகாயத்தில் பறந்தான் திரிசிரா.

வான்தொடர் மழையென தோன்றல் மேலே அவன்
வெம்கணை சரங்களைத் தொடுக்கத் தொடங்கினான்.
அம்பினை விடுத்த எம்பிரான் துண்டாக்கித் தேரழித்தான்
இருதலை கொய்து, ‘திரிசிரா’ என்னும் பேரழித்தான்.

கால்களை ஒடித்து, தோள்களை அரிந்து
துல்லியமாய் மூன்றாம் தலையை அறுத்து
வெஞ்சின அரக்கர் சிகரத்தை அழித்ததும்
அஞ்சி ஓடினர் எஞ்சிய நிருதர்கள்.

‘நிச்சயம்’ யெனும் கவசமணிந்த தூடணன்
‘கொச்சை மாந்தரைக் கண்டா கூச்சமடைந்தீர்?
நின்று காண்பீரென் நெடும்சிலை வலிமையை’ என்று
சென்று தாக்கினான் கருநீல வண்ணனை.

கணக்கிடமுடியா பிணம் நிறை காட்டினில்
ஒலிக்கின்ற தேரினை செலுத்திய தூடணனின்
குரைகடல் சேனையோ வறள்பட குறைந்தது.
குறையுடல் அரக்கரின் அரற்றலால் நிறைந்தது.

குன்றெனத் தேரினில் வில்லேந்தி வந்த தூடணன்
மூன்று அம்புகளை முறையாகத் தொடுத்தான்.
மூன்றையும் ஒற்றை அம்பால் தகர்த்த வில்லான்.
நெடுந்தலை பிளந்தவன் உயிரையும் மாய்த்தான்

‘தலையிழந்தான் தம்பி’யென்பதை அறிந்து
கொலைவெறி கொண்டான் கொடியவன் கரன்.
சந்திரனை வளைத்திருக்கும் மேகக்கூட்டம் போல்
அந்தகனும் அஞ்சும்படி அரங்கனை வளைத்தான்.
(அந்தகன் – யமன்)

கடுங்கரனெனும் பெயர்படைத்த கழல் வீரன்
நெடுங்கடலின் இடையே பெருமலையாய் நின்றான். – அவனின்
வாள்படையையும், வேற்படையையும், விற்படையையும் தன்
தோள்பலத்தால் துவைத்தெடுத்தான் தசரத இராமன்.

கள்ளமாய்த் தாம்கற்ற கல்வியை செலுத்திய கரன்
வள்ளலின் தோற்றத்தை அம்புகளால் மறைத்தான்.
உள்ளம் வருந்தினர் வானவரும், தேவரும் – வைகுந்தனோ
வெள்ளைப் பற்களைக் கடித்தபடி வெகுண்டான்.

‘முடிப்பேனின்று வலிய கணையாலெ’ன்றபடி வில்லான்
தொடுத்திட வில் நுனி தோளுற வளைத்தான்.
பிடித்த திண்சிலையோ அகன்ற ஆகாயத்திடை
இடி முழக்கமாய் இடித்துக் கடிது ஒடிந்தது.

மாற்று வெஞ்சிலை இல்லாமை கண்டு
ஏக்கமுற்றுத் தவித்தனர் வானவர் ஆனவர்.
மன்னர் மன்னனோ முன்னம் நிகழ்ந்த மரபொன்றால்
பின்புறமாய்த் தனது பெரும்கரத்தை நீட்டினான்.

வருணனிடம் கொடுத்திருந்த பரசுராமன் விஷ்ணுவில்லை
நீண்டகரத்தினில் ஒப்படைத்தான் வாயுத் தேவன்
பிடித்த வில்லினை இடக்கையால் எடுத்தவுடன்,
துடித்தன அரக்கரின் இடக்கையும், இடத்தோளும்.

நாணேற்றியதும் கரனின் எந்திரத்தடந் தேர்
நுண்ணிய பொடியாய் உதிர்ந்து வீழ்ந்ததும் அவன்
சுந்தர வில்லுடை இராமனின் தோளெனும்
மந்திரமலைமேல் அம்பை மழையாய் பொழிந்தான்.

சரங்களை எதிர்த்து குமரன் வீசிய
சிவந்த சரத்தால், கரனின் வலக்கரம்
வீங்கு தோளொடு பாரிடை வீழ்ந்ததும் – கரன்
ஓங்கி வீசினான் உலக்கையை இடக்கையால்

விலக்கினான் இராமனதை வெங்கதிர் வாளினால்
எய்தான் கரன் ஆச்சா மரத்தினைப் பெயர்த்தெடுத்து.
ஏவினான் இராமன் ஒப்பற்ற கணைதனை – அது
துண்டாக்கி வீழ்த்தியது கரனெனும் அரக்கனை,

ஆர்த்தெழுந்த வானவர் ஆடினர், பாடினர்.
தூர்த்து மகிழ்ந்தனர் தூவிய மலர்களால்
போர்முடித்த தசரத மைந்தன் புறப்பட்டான்
தவித்தபடி பிராட்டியிருக்கும் இருப்பிடம் நோக்கி.

இறந்த கரனின் பெருவுடல் தழுவியே
குருதிப் புரண்டாள் கொடியவள் சூர்ப்பணகை.
இராமனிடம் கொண்ட மோகத்தால் மூக்கிழந்தேன் நான்
‘போக்கிவிட்டேனே உன் வாழ்வை’யெனப் புலம்பினாள்.

ஆழ்ந்த கடலிடை அகப்பட்ட மரக்கலத்தை
சூழ்ந்து வீசிடும் சுழற்காற்று போல்
அலங்கல் குலத்தை அழித்திடும் நோக்குடன்
இலங்கை மாநகர் நோக்கி விரைந்தாள்.

                       சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்

‘விசுவகர்மனெ’னும் தெய்வத்தச்சன் படைத்த இலங்கையில்,
தசமுக இராவணன் அதிபதியாய் ஆண்டுவந்தான். - அவன்
தோள்கள் இருபதிலும் அணிகலன்கள் அணிந்தவன்
கோள்கள் அனைத்தையும் பணியாற்றப் பணித்தவன்.

‘திக்கயங்களெ’னும் யானைகளைப் பிடித்த வீரன்
கயிலை மலையை பெயர்த்த அசகாய சூரன்
இந்திரனை வென்று வானுலகை அடக்கிய தீரன்.
இரத்தினம் பதித்த கொலுமண்டபத்தில் வீற்றிருந்தான்

கொங்கைகள் இரண்டும், மூக்கும், காதும் இழந்த
தங்கையாம் ‘சூர்ப்பணகை’ வெறிகொண்ட வேங்கையாய்
செங் கைகளைத் தலையில் தாங்கிய வண்ணம்
வடதிசை வாயிலில் வந்து தோன்றினாள்.

மூவுலகையும் ஆள்பவனின் ஆருயிர் தங்கையின்
மூக்கறுந்ததை யறிந்த அரக்கரும், மகளிரும்
தரிக்கவல்லாமல் தவித்துக் குழம்பினர். – இதைப்
புரிந்தவர் எவரென புரியாமல் புலம்பினர்.

‘போரிலானாகி ஏவல்கள் புரியும் இந்திரன் அல்லன்.
தோற்றுப்போய் நீர்புகுந்த திருமாலும் அல்லன்.
எதிர்நில்லாது மலைமீது நின்ற சிவனும் அல்லன்’.
இவ்வாறெல்லாம் எண்ணிச் சோர்ந்தனர் நிருதர்கள்.
குன்றென அமர்ந்திருந்த இலங்கேஸ்வரனின் வீரக்கழல்தான்
நன்றென எண்ணி, அழுது புரண்டாள் அரக்கி சூர்ப்பணகை.
நிகழ்ந்ததொன்றும் விளங்கிடாமல் நெஞ்சம்பதைத்த அண்ணன்
வழிந்து ஓடும் குருதி கண்டு வாயடைத்து நின்றான்.

மடித்த அவன் வாய்கள் பத்தும் கோபப்புகை கக்க
துடித்த தொடர் மீசைகள் தீப்பற்றி உயிர்ப்ப,
கடித்த பற்கள் இடியென ஒலி யெழுப்ப,
வெடித்தான், ‘யாவர் செயல் இஃதென்று’

‘காட்டிடை வந்து புவி காவல் புரிகின்றார்.
மீனுடைக் கொடிகொண்ட மன்மதனை ஒத்தார்.
ஊனுடை உடம்பு கொண்டார்; உவமையில்லா
மானிடர் இருவர், வாளுருவித் துண்டித்தார்’ என்றாள்.

செய்தவர் ‘மானிடர்’ என்பதை ஏற்கமாட்டாமல்,
எள்ளி நகையாடி ஏளனத்துடன் சொன்னான்,
‘நீ சொன்ன வார்த்தைக்குப் பொருந்தார் மானிடர்,
பொய் தவிர், பயத்தையொழி, நடந்ததைக் கூறிடு.

‘மரவுரி தரித்து, பிரிசடை பூண்ட வீரர்கள்.
முப்புரி நூலினை மார்பினில் அணிந்த வேதியர்கள்
அரக்கர் குலம் அழித்திட சூளுரைத்த சூரர்கள்.
தசரத மைந்தர்கள் இராம, இலக்குவர்கள்.’என்றாள்.

‘அரிதான என் தங்கையின் நாசிகளை வாட்கொண்டு
அரிந்துவிட்ட மானுடர் வாழ்கின்றாரா இப்புவியில்?
ஆளும் உள; வாளும் உள; வாழ்நாளும் உள;
தோளும் உள; அண்ணனாம் நானும் உளனன்றோ?’ என்றவன்,

‘குன்றுடைக் காட்டினில் காவலாய் உனக்கிருந்த
கரன் முதலானோர் கொன்றிலரோ மானிடரை?’ வினவினான்.
‘சுற்றமுற்றமும் தொலைந்து மடிந்தது ஏளிதிலெ’ன
உற்றது உற்றபடி உரைக்கலுற்றாள் சூர்ப்பணகை.

‘வாயிடை இதழும், மூக்கும், கொங்கைகளும்
வலிந்து கொய்து, குருதி பெருக்கிடும் வண்ணம்
நீயிடை இழைத்த குற்றம்தான் என்ன?’ வென்று
தீயிடை புகுந்த நெய்யாகச் சீறினான்.

‘சித்திரக் கலை வல்லுனரும் வடிக்கவொண்ணா
அத்தனை அழகும் அமையப்பெற்ற இராமனோடு
முத்திரை பதிக்கவல்ல முகவடிவு கொண்டிருந்த
உத்தமப் பாவையால் நிகழ்ந்தது ஈதெ’ன்றாள்.

‘பெண்ணினால் நிகழ்ந்த பாதகமா?’ வினவியவன்
‘புதிரவிழ்த்துப் புரியவை யார் அவளென?’ சினந்தான்.
‘தேன்சுவையுடன் கனிந்த கனியாம் அவளுக்கு
யாமுரை வழங்கல் அறிவின்மை சார்வதாகும்.

பூமித்தாய் பெற்றளித்த தனிப்பெருமை பெற்றவள்.
அண்ணனாம் இராமனின் மனம் கவர்ந்த பெண்ணவள்.
தனக்கிருப்பிடன தாமரையை விட்டுவந்த தன்மையள்.
‘சீதை’யெனும் பெயர் கொண்ட பேரழகியவள்.

மின்னலிடமிருந்து மெல் லிடையை பெற்றவள்.
மூங்கிலிடமிருந்து மென்மைத் தோல் கொண்டவள்.
பொன்னிடமிருந்து ஒளிரும் மேனியை ஏற்றவள்
அங்கங்கள் ஒவ்வொன்றாய் விளம்புதல் எளிதன்று.

அன்னவளை உன்பால் உய்ப்ப அணுகிய என்னை
முன்னை மூக்கரிந்து முடித்தான் இவன் தம்பி.
மானொத்த அப்பெண்ணை நீ கொண்டு உண்டாடு.
யான்கொண்டு ஊடாட இராமனையே கொண்டாடு’ என்றாள்

சினம், வீரம், மானமெனும் ஆடவர் குணமெலாம்
காமம் மிகுந்திட காணாமல் போயினவாம்,
மயிலுடை சாயலாளை இதயத்தில் சிறை வைத்தான்.
வெய்யிலில் வைக்கப்பட்ட வெண்ணையாய் உருகினான்.

சிங்காதனம் விட்டு எழுந்தான் சிந்தனைவயப்பட்டவன்
சங்கம் முழக்கிப் பூச்சொறிந்தனர் அங்கிருந்த அவையோர்
சிதைந்த அவன் மனம் சஞ்சல மிகப்பட்டதால்
பொன் பொதிந்த அரண்மனையுள் சென்று புக்கான்.

விரகத்தால் அவன் உடல் வெந்து எரிந்தது.
மஞ்சத்தின் மலர்களெல்லாம் காய்ந்து கருகியது.
கொல்லனின் வலிய உலைத் துருத்தியைப்போலே
மேல்மூச்சும், கீழ்மூச்சுமாய் பெருமூச்சு விட்டான்.

இன்னவாறு செய்வதென்று எண்ணமற்று உடல்தளர்ந்தான்.
வண்ணமிகு சோலையினுள் அங்குமிங்கும் நடைபயின்றான்.
மண்டபத்தின் மஞ்சத்தில் மல்லாந்து படுத்தவனின் - விரகப்
புண்மீது குத்தித் துளைத்துப் படுத்தியதாம் பின்பனி.

‘என்ன பருவமடா இது?’வென பெருங்குரலில் கத்தினான்.
பின்பனி பின்னடைந்து வேனில் வந்து நின்றது.
வேனிலும் வெதுப்பியதும் கூதிரை கொணரென்றான்.
கூதிரின் குளிர்காற்றால் இருபது தோள்களும் மருகின.

பருவங்கள் அனைத்துமே பகையாய்த் தோன்றிட
அகன்றிடு அத்தனையும்; உதித்திடு நிலவென்றான்
வான்வெள்ளி வெம்மையைக் கக்கியதும் போவென்றான்.
கதிரையும் தாளாமல் இளம்பிறையை வாவென்றான்.

முன்செய்த தவப்பயனால் கோள்கள் எல்லாம்
முன்வந்து முகம் கொடுத்து ஏவல்கள் புரிந்தன.
பத்துத் தலையோனைப் பதம் பார்த்தது ஒருதலைக் காதல்
பித்துப் பிடித்தவன், வடித்தான் அவள் தோற்றத்தை.

‘உலகுக்குக் கோமான் நீ! சிறுமையுடன் வருந்தலாமோ
மலரணிந்த குழலாளை அபகரிக்கத் தயங்கலாமோ?’
நிலைதடுமாறிய அண்ணனை சூர்ப்பணகை தூண்டியதால்
கலைவடிவான மண்டபம் கட்டிட ஏவினான் காவலரை.

சிந்தையில் விளைந்ததைச் செய்திடும் செய்கையாய்
மந்திரி மார்களுடன் தந்திரமாய் கலந்துரையாடியவன்
அந்தரத்தில் பறக்கும் புஷ்பகவிமானந்தனில் ஏறியே
இந்தியம் அடக்கி வாழும் மாரீசன் வசம் வந்தான்.

                       மாரீசன் வதைப் படலம்

(சுகேது என்ற யக்ஷணின் பெண்ணான தடைகைக்கும், சுந்தன் என்னும் யக்ஷர் தலைவனுக்கும் பிறந்தவர்கள் சுவாகுவும், மாரீசனும், அகத்தியர் சாபத்தால் தாடகையும், அவள் மக்களும் அரக்கர்களாகி இராவணனின் தாய்வழிப் பாட்டனான சுமாலியால் போற்றப்பட்டதால் இவர்கள் இராவணனுக்கு மாமன்மார்கள் என்பதை பாலகாண்டத்தில் பார்த்தோம்.)

தவம் செய்து தகவாய் வாழும் மாரீசன் முன்
தனியாக வந்து நின்றான் தசமுகன்.
வணங்கித் தொழுதவன் பயத்துடன் வினவினான்;
‘வனத்திடை வருகையின் யாது காரியம்? சொல்லுதி’

‘நின் மருமகளின் நாசியறுத்தார் மானிடர் இருவர்.
உன் மருகர்கள் கர தூடணனையும் கொன்று அழித்தார்.
வன்மைமிக்கவர் தண்டகாரண்யத்தில் தவசியாய் இருக்கிறார்.
என்மரபுக்கும், நின்மரபுக்கும் இழுக்கன்றோ இவையெல்லாம்?

ஒப்பில்லா மாந்தருடன் போர்புரிய ஒப்பவில்லை.
செப்புமொழி கொஞ்சிப்பேசும் வஞ்சிக்கொடி பெண்ணொருத்தி
உடனிருக்கிறாள் என்பதைநான் உணர்ந்துகொண்ட பிற்பாடு
கடத்திவர உனைநாடி கானகத்துள் வந்தேன். புறப்படு’
        
                     மாரீசன் நல்லுரைக் கூறல்
எரிகின்ற நெருப்பினில் இரும்பினை உருக்கியே
செவிப்பறைவரை ஊற்றினாற்போல் உடல்சிலிர்த்த மாரீசன்
‘அறத்திறனால் தவம்செய்து பெரும்செல்வம் பெற்றாயே
புறத்திறனால் பெற்றவற்றை இழந்திடத்தான் புகுவியோ?

அகலிகைபால் மோகம் கொண்ட தேவேந்திரன்,
அகம்திருந்த அழிவுற்றதை அறிந்திலையோ நீ?
நீரையும், நாட்டையும், பிறர் தாரத்தையும் கவர்கின்ற
யாரையும் தருமமழிப்பதை மறந்தனையோ நீ?

என்னையும், தம்பியையும், தடகைத் தாயையும்
தண்டித்த வில்லான் இன்றுனக்கு விரோதியானானோ!
நன்று உண்டெனில் இழிசெயலை நீ மறப்பதுதான்’
என்று நல்கினான் பல்விதமாய் நல்லுரைகள்.

                    இராவணன் கொண்ட சினம்
நங்கை முகமெங்கும் அகழ்ந்தவரைப் புகழ்ந்தனை! – என்
நெஞ்சின் நிலையையும் அஞ்சாமல் இகழந்தனை!
கொஞ்சமும் உனக்கு உரைக்கவில்லை நிகழ்ந்தவை! – என
வெம்கண் இருபதும் புருவங்களும் உயர விடைத்தான்.

                        மாரீசனின் உப்தேசம்
‘எடுத்தேன் கயிலை மலையையென இயம்பினையே! – ஈசன்
வடித்த மலையையே வளைத்தவன் இராமன்.
விடம் உண்கின்றாய் என்பதையறிந்தும் உன்னைத்
தடுக்காமல் விடுவது தர்மமாகுமா சொல்?’

                        இராவணன் மேலும் சினந்து கூறல்

அன்னையினைக் கொன்றவனை அஞ்சி நீ உறையலாமோ?
உன்னை ஒரு வீரனென மதித்திடல்தாம் சிறப்பாமோ?
ஆணை வழி ஏவல் செய்து அனுசரித்துப் போவாய்!
வீணான விளக்கத்தால் முடித்திடுவேன் என் வாளால்.

காமபாணத்தால் மடிவதை நான் விரும்பிலேன்.
ராமபாணத்தை எதிர்த்திடத்தான் விழைகிறேன்.
மானிடரை எதிர்க்கொள்ள சேனைதான் வேண்டுமோ - என்
பெருங்கரத்து ‘சந்திரஹாஸ வாளொ’ன்றே போதுமே!

                       மாரீஸன் உடன்பாடு
‘நன்மையும் தீமையன்றோ நாசம் வந்த நாளில்’
என்றவன் கேட்டான் ‘செய்வது புகலுதி’
காமக்கனலால் எரித்துவாட்டும் சீதையெனும் தென்றலை
கவர்ந்து கொணருதி மாயையினாலே’ யென்றான்.

விதிவிளைவை முன்னறிய வல்லார் எவருமில்லை.
ஏவிய செய்தலல்லால் வழியேதும் இங்கில்லை. - அதனால்
‘இயம்புக! என்ன மாயம் நான் இயற்றுவதெ’ன்றதும்,
‘பொன்மானாகிப் போய் அப்பெண்மானைக் கொண்ரெ’ன்றான்.

விடம் கலந்த நீரில் விழுந்த மீனாகத் துடித்தவன்.
தன்மானமில்லாமல் பொன்மானின் உருவத்தை யெடுத்தான்.
நன்மானொத்த நங்கையை நாடிச் சென்றவனைக்
கலைமான்கள் களிப்புடன் நெருங்கி, விருப்புடன் பார்த்தன.

கொய்யாமலர்களைக் கொய்யும் தையலாள் முன்
பைய நடைபயின்று பதுங்கி வந்தது இப்பொய்மான்.
மாயமானைக் கண்டு மயங்கிய மான்விழியாள்.
எம்மானிடம் இறைஞ்சிப் பற்றித்தருமாறு கொஞ்சினாள்.

‘மாணிக்கம் பொதிந்த அக்கானகத்துக் கனகமானை
காணத்தகுமென்’றாள்; ‘வேண்டுமெ’ன்று கைதொழுதாள்.
‘இம்மாநிலத்தில் எங்கும் இல்லை இம்மானெ’ன யாசித்தாள்.
‘எம்மான் இது’ வென்று எம்பெருமான் யோசித்தார்.

மானிடப் பிறவியெடுத்த திருமாலின் மனையாளுக்கு
மானிடம் ஏற்பட்டது மங்காத ஒரு நாட்டம்.
ஜனகமான் சொன்ன சொல்லால் சொக்கிப்போய்
விசித்திர மானைப் பிடிக்க ஆயத்தாமானார் கோமான்.

                  இலக்குவன் கூற்றும், இராமன் மறுப்பும்

பொன்னுடலும், கால், செவி, வால் என
மாணிக்க மயமாய் இருக்கும் இம்மான்,
பாயும் மானல்ல; பகைவர்களின் மாயமானென
ஐயுற ஐயனை எச்சரித்தான் இளையான்.

‘பல்லாயிரம் கோடி மண்ணுயிர்கள் பரந்துள்ளதால்
‘இல்லாதன’வென்று எதுவுமில்லை இளங்குமரா’யென்றவன்,
இல்லாளை அழைத்து ‘எங்குள்ளது மான்? சொல்’லென்றதும்,
‘கடக்கவொண்ணா வினையாக’ விழித்துப் பார்த்தது போலிமான்.


               இலக்குவன் மேலும் தடுத்தலும்
                    இராமன் மறுத்தலும்.

‘இளையவ! மனம் கொண்டு நோக்காய் இம்மானை.
முத்துக்கு ஒப்பாகும் இதன் வெண்ணிற பற்கள்.
பொன்னினை ஒத்திருக்கும் சிவந்த இதன் மேனி.
வெள்ளியை ஒத்ததுதான் மின்னிடும் புள்ளிகள்’

‘பொன்மானால் ஆகும் காரியம்தான் என்ன?
மீள்வதுதான் மேன்மை’யென இளையவன் முடிக்குமுன்னம்
‘கொற்றவமைந்த! தர்க்கம் நீடித்தால் தப்பிப் போய்விடுமே!
பற்றித்தந்திடுவீர்! பெற்று வளர்ப்பேன் அயோத்தியிலெ’ன்றாள்.

‘பாம்புப் படுக்கையைத் தாம் நீங்கிப் பிறந்தது
பாக்கியம் உடைய தேவரின் உடைமை. – அன்னது
பயன்படாது பழுது போக விடலாமோ?’ என்பதாகப்
‘பற்றுவேன் நானெ’ன்றான் சீர் தூக்கிப் பாராமல்.

‘வீரனே! வஞ்சகம் விரும்பிடும் நயவஞ்சக அரக்கரின்
வினையிற் விளைந்த தீவினை மானிது’ எச்சரித்தான்.
‘மாயமான் ஆகுமேல் முடிப்பேன் என் அம்பால்.
தூயமான் ஆகுமேல் பிடிப்பேன் என் அன்பால்’ நிச்சயித்தான்.

‘பின்னின்று பாயும் பகைவர் யாரென்றறிகிலோம்’ என்ன
‘பகைவரென்றால் போரிடுதல் சரிதானே! அண்ணன் சொன்னான்.
‘கொடிய அம்பினைத் தொடுத்து முடிப்பேன் அவரை,
அன்றெனில் பிடித்துக்கொணர்வேன் நானெ’ன்றான் இளையான்.

சிவந்த வாயினால் கொஞ்சு மொழியில் குழறிப்பேசி
‘நாயக! நீயே பற்றி நல்கலை போலுமெ’ன்றவள்
நீலோற்பல மலொரொத்த விழியிரண்டில்
நீர் முத்துக்கள் சிந்தியபடி சீறிப்போனாள்.

இளையவன் சொல்லை மனதுள் கொள்ளான்,
வதனத்தாள் சினத்தை சிரம்மேல் கொண்டான்.
‘மானதைப் பற்றிக் கொணரும் வரையில்,
மயிலாளைக் கத்தனை நீ’யென விரைந்தான்.

அம்மான் மெல்ல நடந்தது; வெறித்துக் குதித்தது.
அப்பால் சென்று அகன்றது; ஓட்டம் பிடித்தது.
நின்றது போலே இருந்தது; நீங்கிப் போனது.
குன்றிடை ஏறிப் பார்த்தது; மேகத்திடை நகர்ந்தது.

கூடச் சென்றிடில், தூரச் சென்று மறைந்தது.
தாமதித்து நின்றால், தீண்டும் நிலையில் நின்றது.
‘பற்றுவன் அல்லன் இவன் இனி அம்புகொண்டு
கொல்வான்’ என உணர்ந்து வேகமாய் ஓடியது.

‘சக்ராயுதத்திற்கு’ ஒப்பான ‘சுதர்சனம்’ என்கின்ற
சிவந்த அம்பினை ஐயன் தொடுத்திட,
‘ஹே சீதா.!ஹே லக்ஷ்மணா’வென்று அண்ணலின் குரலில்
உரத்து அழைத்த மாரீசன், மாண்டான் தன்னுருவில்

இழைத்த மாயையால் என் குரலெடுத்து
அழைத்தது கேட்டதும் அரற்றுவாள் கோதை – ஆயினும்
ஆற்றல் அறியும் இளையான் அவளைத்
தேற்றுவான் என்றெண்ணித் தேறினான் தமையன்.

மாள்வதற்காக மட்டும் வந்தவனல்ல இம்மாரீசன்.
சூழ உள்ளது ஒன்றுண்டெ’ன உணர்த்திய காரியஸ்த்தன்.
மூளும் தீங்கு, பற்றிச் சூழும் முன்னம்
மீள்வதே மேலென்றெண்ணி அவ்விடம் அகன்றான்.

                   சடாயு உயிர் நீத்த படலம்

குகையனைய வாய் திறந்து மாரீசன் சொன்ன
சொற்செவியில் பாய்ந்திட, பயந்து விட்டாள் பிராட்டி.
குயிலொன்று தவறி விழுந்து துடிப்பதைப் போல்
வயிற்றில் அறைந்தபடி மயங்கி விழுந்தாள்.

                   இலக்குவனை வெறுத்துக் கூறலும்,
                         இலக்குவன் தேற்றலும்

குற்றமற்ற குணத்தினனாம் எம் கோமகன்,
மற்றை அரக்கர் புரிந்த மாயையினால்
இற்று வீழ்ந்தனன் எனத் தெரிந்தும், தன் அயல்
நிற்கும் இலக்குவனை, நோக்கிக் கடிந்தாள்.
‘மண்ணிலும், விண்ணிலும் இராமனைக் காட்டிலும்,
திண்மையார் உளரென்று கூறத் தகுமோ?
பெண்மையின் இயல்பால் உரைசெய்து கூறினீரெ’ன
உண்மை நிலையினை உணர்ந்திட உரைத்தான்.

‘நீருண்ட மேகமன்ன அண்ணனை யாரென்று கருதினீர்?
விரித்துச் சொல்லுங்கால் இராமபாணம் தாக்கிய
அரக்கன் அவ்வுரை எடுத்து அரற்றினான்.
இரக்கமுற்று இரங்கலீர் நீவீரெ’னத் தேற்றினான்.

கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவனாம்
‘தும்புரு என்னும் பெயர்கொண்டான். – அவன்
ரம்பையின் அழகினில் மயங்கிவிட்டன்
அரக்கனாய் பயம் மேலெழுந்திட மனம் பதைத்தான்.