பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 4, 2015

13. உண்மை

ரத்தினக் களஞ்சியம்

பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறுகாலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்தசில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன்.தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ்நாட்டு மஹாஜனங்களை வேண்டுகிறேன்.
தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவிசொல்லுகிறார்: 
''கல்லைக் குவித்துப் பெரிய கோவில்கள் ஏன்கட்டுகிறீர்கள் ? தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப்படுத்துகிறீர்கள் ?''
ஸ்வாமி விவேகானந்தர்:-  ''ஒவ்வொரு மனிதனுடையஅறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும்உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்யவேண்டிய காரியம்.செய்கை, அன்பு, யோகம், ஞான இவற்றினால் அந்தப் பொருளைஅடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும்"இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள்,சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம்பக்ஷமாகக் கருதத்தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை'.
அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகியஎமெர்ஸன் சொல்லுகிறார்: 
'எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தைநான் பார்ப்பதற்குத் தடையுண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளேயிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடிவைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்குவேறோருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க்கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்.'
த்ஸென்-தஸே-த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானிசொல்லுகிறார்:-
'பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி, ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர்மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை"விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது நமது பாட்டன்மாரும்பூட்டன் மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்பவேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போதுதைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும்போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்.'
மேற்கூறிய எமெர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும் நல்லஞானியுமான தோரோ சொல்லுகிறார்:-
'என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமதுகாலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது; சிற்சில சமயங்களில்பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்! '
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- 
'ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மைநெறியினின்றும் தவறிவிட்டார்கள்.'
ருஷியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ் தோய்):       
''நமது மதக் கொள்கைகளில் பயனில்லாதது, ஜடமாவது, புறவடிவமாவது, தெளிவில்லாதது, நிச்சயமில்லாதது- இவற்றை நாம் பயமில்லாமல் தள்ளி விடவேண்டும். அதன்ஸாரத்தை மாத்திரம் கொள்ளவேண்டும். எத்தனைக்கெத்தனைஇந்த ஸாரத்தை நாம் சுத்தப்படுத்துகிறோமோ, அத்தனைக்கத்தனை ஜகத்தின் உண்மை விதி நமக்குத் தென்படும்.''
எது தெய்வம்?
'ஹெர்மெஸ்' என்ற புராதன மிசிர(ஈஜிப்டு)தேசத்துஞானிசொல்லுகிறார்:
''உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது,"ஜடமில்லாதது, நமது புலன்களுக்கு எட்டாதது-இது தெய்வம்.'
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-  'ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்தது போல் மறைந்து நிற்கும் ஒளியே தெய்வம்.'
பட்டினத்துப்பிள்ளை:-  'எட்டுத் திசையும் பதினாறுகோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கும்ஜோதி.'
தாயுமானவர்:-  'சுத்த அறிவே சிவம்.'
ரிக்வேதம்:-  உண்மைப் பொருள் ஒன்று. அதனைப்புலவோர் பலவாறு சொல்லுகிறார்கள்.'
நம்மாழ்வார்:-  'திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம்இவைமிசைப் படர் பொருள் முழுவதும் ஆய், அவையவைதோறும் உடல்மிசை உயிரெனக் கரந்துளன்.'
ஹெர்மெஸ்:-  'தெய்வம் எது?  ஜகத்தின் உயிர்.'
எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்: ஒருமதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதிமனிதர் பிரிந்துவிடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரேதெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகிக விஷயங்களைப்போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலைமூன்றும் பாராட்ட வேண்டும்.
முடிவுரை

எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்: ஒருமதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதிமனிதர் பிரிந்துவிடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரேதெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகிக விஷயங்களைப்போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலைமூன்றும் பாராட்ட வேண்டும்.


No comments:

Post a Comment

You can give your comments here