பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும்
ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லௌகிக சாஸ்திரங்களைத்
தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக் கிறார்கள். ஏற்கெனவே, சில
பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்;
வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக
ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும்
நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க
பண்டிதர்களின் உதவி கொண்டு, விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடும்.
அஸ்திவாரக்
காரியம்
இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக்
காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு
மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது; ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம்,
குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு
கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும்
பொது வழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன்,
சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும்
சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின்
பெயர் 'தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை'. மேற்கண்ட பெயருடன் ஒரு
சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில்
ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.
'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை' என்ற சேலத்துப் பத்திரிகையின்
முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல்
தமிழருக்கு வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதற்கு
ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை.
ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று
தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன்.
அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு
மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.
பரிபாஷை சேகரிக்க
ஓருபாயம்
ஸ்ரீகாசியிலே, 'நாகரி ப்ரசாரிணி சபையார்' ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம்
எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள்.
அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு
வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப்
பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Sunday, May 24, 2015
57. கலைகள் - தமிழில் சாஸ்த்ர பரிபாஷை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment