பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 10, 2015

30. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை


(அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின்குமாரியாகிய ஸ்ரீ தங்கம்மா பின்வரும் பத்திரிகையைப்படித்தனர்:-)

                 சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னே சீனதேசத்தில் செகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்ற பட்டணத்தில் ஒரு ராஜாங்க உத்தியோகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது கதாநாயகி பிறந்தாள். இவளைக் குறித்துச் சென்ற வருஷம் ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்ரெவ்யூ' (ஆசிய பரிசோதனை) என்ற பத்திரிகையில் லயோ நெல்கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ள கதையில் ஸாராம்சமான சில பகுதிகளை இந்த சபையின் முன்னே தெரிவிக்கிறேன்.

             ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியைநாட்டவேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில் நாட்டம் செலுத்தி வரும் உங்கள் அனைவர்க்கும் மிகவும் ரஸமாகத் தோன்றக் கூடும்.

              ''சியூ சீன்'' என்ற பெயரில் சீன் என்பதற்கு''ஒளியுடைய ரத்நம்'' என்பது பொருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மழை பெய்யுங்காலம்) என்ற பொருள் உடையது. பின்னிட்டு இவள் சிங்ஹஸியாங் என்ற பட்டப் பெயர் தரித்துக்கொண்டாள்; அதன் பொருள் ''ஆண்மக்களுடன் போர் செய்பவள்'' என்பது இவளுக்கு ''சியெந்-ஹெூ நு-சி-யெஹ்'' என்றும் ஒரு பெயருண்டு. அதன் பொருள் யாதெனில் ''கண்ணாடி ஏரிக்கரைப் பெண்வக்கீல்'' என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரதேசத்தில் ஒரு ஏரிக்குப் பெயர்.

                பதினெட்டாம் வயதில் இவள் ''லாங்'' என்ற" பெயருள்ள ஒருவனை மணம் செய்து கொண்டு அவனுடன் சீனத்து ராஜதானியாகிய பெசிங் நகரத்தில் சென்று வாழ்ந்தாள். அங்கே இவளுக்கு ஒரு பெண் குழந்தையும் ஓராண்குழந்தையும் பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர் கலக நிமித்தமாக பெகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்படைகள் புகுந்து சீனத்துக்குச் செய்த பழிகளைக் கண்டு மனம் பொறுக்காமல், இவள் 'ஐயோ, மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தும் நம்முடைய மனுஷ்ய சக்தியைக் காண்பிக்கும் பொருட்டாகக் கஷ்டங்களையும் விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் நமக்கில்லாமல் போய்விட்டதே! வீட்டுக் காரியங்களின் அற்பக் கவலைகளுக் கிரையாகிமடியவா நாம் பூமியில் பெண் பிறந்தோம்' என்று சொல்லி பெருமூச்செறிந்து வருத்தப்பட்டாள்.
சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம் வஹித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும் சேர்ந்திருந்தது. சீன ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன் கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப்பொருந்தவில்லை யாதலால், இவள் பாக்ஸர் கலகத்திற்குப் பின் இரண்டு மூன்று வருஷங்களுக்குள் தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகவே பிரிந்து வந்துவிட்டாள்.

இதனிடையே இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிடைத்த பணம் முழுதையும் ஒரு அயோக்கிய வியாபாரியிடம் கொடுத்து அவன் மூலமாக வியாபாரச் சூதில் இழந்து போய்விட்டாள்.

பின்பு ''ஐப்பானில் போய் ஐரோப்பிய நவீனக்கல்வி பயின்றால் இக்காலத்தில் அதிகப் பயன் பெருகிவாழலாம்'' என்ற எண்ணமுடையவளாய்த் தன்னுடையஆபரணங்களை விற்றுப் பணம் சேகரித்துக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட ஆயத்தங்கள் செய்தாள். ஆனால், இவள் பெகிங் நகரத்திற்குப் புறப்படு முன்னே அங்கு சீர்திருத்த கக்ஷியைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் பிடித்து அடைத்து வைத்திருப்பதாகவும், வக்கீல் நியமிக்கவும், வழக்கு நடத்தவும் பணமில்லாதபடியால் ஏனென்று கேட்பாரில்லாமல் அவன் சிறைக் களத்திற்கிடந்து வருவதாகவும் பணத்திற் பெரும் பகுதியைஅவனுக்குக் கொடுத்தனுப்பி விட்டாள்.

மிஞ்சிய சிறு தொகையுடன் 1904-ஆம்வருஷம் ஏப்ரல் மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக் கப்பலேறினாள். ஜப்பான் ராஜதானியாகிய டோக்யோ நகரத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தால் விரைவில் கீர்த்தியடைந்து விட்டாள். சீனத்து மாணாக்கரின் ஸபைகள் பலவற்றில் சேர்ந்து விளங்கினாள். மேலும் அப்போது சீனத்தில் அரசு செலுத்திய மஞ்சு ராஜ்ய வம்சத்தை ஒழித்துவிடவேண்டு மென்ற கருத்துடன் இவள் தானாகவே பல ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள் ஏற்படுத்தித் திறமையுடன் உழைத்து வந்தாள். 

சீனாவில்இப்போது நடைபெறும் குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் இவளும் ஒருத்தி.

1905-ம் வருஷத்து வஸந்த காலத்தில் இவள் தன் கல்வியின் பொருட்டுப் பின்னும் பணம் சேர்க்குமாறு சீனத்துக்கு வந்தாள். அப்போது சீனத்திலிருந்த பெரியராஜ்யப் புரட்சித் தலைவர்களுடன் இவள் ஸ்நேகம் ஏற்படுத்திக்கொண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின் மூலஸபையாகிய ''குலாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸபையில் சேர்ந்தாள். பிறகு அவ்வருஷம் செப்டம்பர் மாஸத்தில் டோக்யோவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த ஸுனயத்-ஸேன் என்ற மஹாகீர்த்தி பெற்ற குடியரசுக் கக்ஷித் தலைவனுடன் பழக்கம் பெற்றாள்.

அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில் ஸ்ரீமதி ய்ஜுஹுஹ என்ற தனது தோழியும் தன்னைப்போல் கவி ராணியுமான ஸ்திரீயுடன் சேர்ந்து ஒருபெண் பள்ளிக் கூடத்து உபாத்திச்சியாக வேலை செய்தாள். அப்பால் நாடு முழுதிலும் கலாசாலைகள் ஸ்தாபனம் செய்தும், ரஹஸ்ய ராஜ்யப் புரட்சி ஸபையின் கிளைகள் ஏற்படுத்தியும், பத்திரிகைகள் நடத்தியும் தொழில் புரிந்தாள். இங்கிலீஷ் பாஷையிலும் இவள்தகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததாக லயோநெல்கிப்ஸ் சொல்லுகிறார்.

அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகிய ஷாவ்ஸிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒருபாடசாலை நடத்தினாள். ஆனால் அது வெளிக்குப் பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப் பயிற்சிக் கூடமாகவும் நடை பெற்றது. மாணாக்கரெல்லாம் படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.

இவளுடைய முடிவைக் குறித்து லயோநெல்கிப்ஸ் பின் வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகலில் இவளுடைய ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் படைகள் ஷாவ்ஸிங் நகரத்தின் மீது தண்டெடுத்து வருவதாகக் கூறினார்கள். அவள் மறுபடி ஒற்றுப் பார்த்து வரும்படி சிலரை ஏவினாள். நகரத்தருகிலுள்ள நதியைத் தாண்டிக் கீழ்க் கரைக்கு  மஞ்சுப்படை  வந்து  விட்டதென இவ்வொற்றர் வந்து சொன்னார்கள். பிறகு மிக விரைவில் மஞ்சுப்படை நகரத்துள்ளே புகுந்து விட்டது. மாணாக்கர்கள் அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாலோசனை நடத்தி இவளைத் தப்பி யோடும்படி சொல்லினர். இவள் மறுமொழி கூறவில்லை. மஞ்சுப்படை  கலாசாலையின் முன்னே வந்துநின்றது. எனினும் உடனே உள்ளே நுழைய அதற்கு தைர்யம் ஏற்படவில்லை. மாணாக்கர்களில் பெரும்பாலோர் புழக்கடை வழியாக வெளியே குதித்தோடிவிட்டனர். ஏழெட்டுப் பேர்மாத்திரம் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு வாயிலில் நின்ற தளத்தின் மீது பாய்ந்தனர். எதிர்பார்க்காத இச் செய்கைகளைக் கண்ட மஞ்சுப் படை திகைத்து விட்டது. அப்போது நடந்த போரில் மஞ்சுப் படையாளர் பலர் கொலையுண்டும் புண்பட்டும் வீழ்ந்தனர். மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்ளே ஓரறையில் வீற்றிருந்த சியூசீனையும் அவளுடன் அறுவரையும் படைவந்து கைதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின் முன்னே சியூசீனைக் கொண்டு நிறுத்தி வாக்கு மூலம் கேட்டபோது உடந்தையானவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்ற கருத்தால் இவள் ஒரு சொல்லேனும் மொழியவில்லை.

'சியூ யூசி யூதெங் சவிஷா ஜென்' என்ற கவிதைவாக்கியத்தை மாத்திரம் எழுதிக்காட்டினாள்.

இதன் பொருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மழையும், மார் புண்ணாக வருத்துகின்றனவே' என்பது.

அப்பால் இவளுக்குக் கொலை என்பது தண்டனை விதிக்கப்பட்டது. ஜூலை 15-ம் தேதி யன்று ஸுர்யோதயவேளையில் இவள் ஷங்ஸிங் நகர மண்டபத்தருகே தூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ் செந்நிறமுடைய மேகமொன்று இவள் தலையின் மீதே வானத்தில் பறந்ததென்றும்,குளிர்ந்த வாடை வீசிற்றென்றும் தூக்கிட்டோரும் பார்த்து நின்றோரும் துக்கத்தால் மெய் நடுங்கினரென்றும், ஆனால் சியூசீன் பரிபூரண சாந்தியுடன் தூக்கு மரத்துக்குச் சென்றாளென்றும் லயோநெல் கிப்ஸ் சொல்லுகிறார்.


No comments:

Post a Comment

You can give your comments here