பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 17, 2015

40. கலைகள் - தியானங்களும் மந்திரங்களும் [விடுதலைக்கு வழி]


                என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப்போலவே சிந்தனை செய்ய வல்லேன். "இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற்குரிய வழி செய்யவேண்டும்.

                நான் இவ்வுலகத்துப் பொருள்களின் மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக் கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன்.

                நான் வேண்டிக் கரையத் தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேனா? ருஷிய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்?  அன்றி, நான் செல்வத்தை வேண்டி அழுங்குவேனா? செல்வம் என்ன பயன் தரும்?  நோவினின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளைக்கும்; பகையின்றிக் காக்குமா? அன்று; பகையைப் பெருக்கும்; கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமா?  அன்று; அவற்றை மிகுதிப்படுத்தும். மரணமின்றிக் காக்குமா?  காக்காது. எனில், அதனை வேண்டி அழுங்குதல் பெரும் பேதைமையன்றோ?

              இரப்போன் தன்னைத்தான் விலைப்படுத்திக் கொள்கிறான். பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்று கூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவமானம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்கமாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன்.

ஆரோக்கிய ஸம்பந்தமான மந்திரங்கள

நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக்கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாகவ முடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன;  மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களை யெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான்சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்றி நோயுறல் யாங்ஙன மியலும்?

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள்ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தேர்ந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.

நான் கடவுள், ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் "திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக் கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் எப்போதும் வீர்யமுடையேன்: ஜாக்கிரதையுடையேன்; எப்போதும் தொழில் செய்வேன்; எப்போதும் காதல் செய்வேன்; அதனால் சாதல் இல்லேன்.

நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே?நான் தேவனாதலால். நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும். நித்யமான கால முழுமையிலும், தீராத, மாறாத இளமையுடையேன். மூடமனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர். நான் அதனை வேண்டேள். ஏனென்றால், இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை. நான் ஸதாகாலம் துன்பமின்றிவாழும் வாழ்க்கையை விரும்புகி்றேன். அதனை நான் எய்தி விட்டேன். தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்?  நான் கவலையை ஒழித்தேன், ஆதலால் எப்போதும் வாழ்வேன். எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப் பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.

ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையு மின்பத்தை என்னென்றுரைப்பேன்?  தேவத்தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன்.

என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை, காகள் - இவை யெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன; நோயுற்றன நோயுறத்தகாதன; எக்காலும் நோயுற மாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவுகொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் தாக்கப்படாதன.

நோய்களையும் அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டு வராதபடி அவற்றை சூன்யத்திற்குள்ளே வீழ்த்தி விட்டேன்.

நானே ஆரோக்கியம்; நான் தேவன்.    


No comments: