சுதேசிய முயற்சி நாட்டிலே தோன்றிய பிறகு பல விஷயங்களில் குணங் கண்டிருக்கிறோம்.
கைத்தொழில் அபிவிருத்தி, தேசீய வர்த்தகம், ஜனஐக்கியம், சுய பாஷைகளின் வளர்ச்சி முதலிய
பல அம்சங்களிலே கைகண்ட பலன் பார்த்திருக்கிறோம். இதை நாம் இன்னும் எத்தனைக் கெத்தனை
ஆவலுடன் பரிபாலித்து வருகிறோமோ அத்தனைக்கத்தனை நாடு பலவிதங்களிலேயும் க்ஷேமப்பட்டு
வரும்.
ஆனால், சென்ற சில வருடங்களாக ஆங்கிலேய அதிகாரிகளிலே சில சில்லரை உத்தியோகஸ்தர்கள்
தம்மவர்களாகிய ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு இதனால் நஷ்டமும் தமக்கே சில அசௌகரியங்களும்
உண்டாவது கருதி, இதைச் சிலர் தப்பான வியாஜங்களைச் சொல்லி அடக்கிவிடப் பார்க்கிறார்கள்.
ஆட்டுக் குட்டியைத் தின்ன விரும்பிய ஓநாய், "ஏ ஆட்டுக்குட்டியே, நீ என்னைத்
திட்டினாயாமே" என்று கேட்ட கதைபோல, இந்த ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள், நம்மை
இராஜ துரோகிகளென்று பொய்க் குற்றஞ் சார்த்தித் தண்டனைகள் செய்து நமது காரியத்தைக்
கெடுத்துவிடப் பார்க்கிறார்கள். இங்ஙனம் ஆங்கிலேய அதிகாரிகளிலே பலர் பொய்யான கோப
நடிப்பு நடித்துக் கொண்டு நம்மவர்களிலே சில முதல்வர்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள்
விதித்து விட்டதினின்றும், கிராமாந்தரங்களிலே சாமான்ய ஜனங்கள் சிலர் சுதேசியம்
என்று சொன்னாலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகலாம் என்றெண்ணி நடுநடுங்கி, தமது மனத்திற்குள்ளே
நமது தர்மத்தில் அபிமானங் கொண்டவர்களா யிருந்தாலும் அச்சத்தினால் வெளிக்கு அசிரத்தை
காண்பிக்கிறார்கள்.
இது நிஷ்காரணமான பயம். அவசியமற்ற மூடத்தனம். "வந்தே மாதரம்"
(தாயை வணங்குகிறேன்) என்பது எந்தச் சட்டத்திற்கு விரோதம்? உள் நாட்டு சாமான்களையே கிரயத்துக்கு
வாங்குவேன் என்ற விரதம் செய்து கொண்டால் எவனுடைய சட்டத்திற்கு விரோதம்? என் பணம்,
அதைக் கொடுத்து எனக்கு இஷ்டமான சாமான் வாங்கிக் கொள்ளுகிறேன். இதில் ராஜாங்கத்தார்
ஏன் தலையிட வேண்டும்? கள், சாராயம் நாட்டிலே பரவாமல் தடுப்பதற்கு, ஆங்கிலேய ராஜாங்கத்தார்
யாதொரு உதவியுஞ் செய்யாமல் தீர்வை லாபத்தைக் கருதி மதுபானத்தைப் பரவச் செய்துகொண்டு
வருகிறார்கள். எத்தனையோ சீர்திருத்தச் சங்கத்தார்கள்(சுதேசிகள் மட்டுமல்ல, மாக்னிக்கல்,
சாமுவேல் ஸ்மித் முதலியபல ஆங்கிலேயர்களுங்கூட) இது கூடாதென்று முட்டி முட்டிப்பார்த்தும்,
ஆங்கிலேய கவர்ன்மெண்டார் சிறிதேனும் கவனிக்காமலிருக்கிறார்கள்.
இப்படியிருக்க, என் தேசத்துக் கைக்கோளர்கள் செய்த துணிகளை நான் எனது
நாட்டிலே பரவச் செய்வேன் என்றால், இது ராஜாங்கத்தாருக்குப் பெரிய விரோதமாகவா போய்விடும்?
எனது குழந்தைகள் எனது மூதாதைகளைப் பற்றியும் எனது தேச சரித்திரத்தைப் பற்றியும் ஒன்றுமே
தெரியாமல், நான் நம்பும் வேதங்கள், சாஸ்திரங்கள் முதலியவற்றின் பெருமையை அறியாமல்,
ஜீவனத்திற்கு வேண்டிய கைத்தொழில்களைப் பற்றி ஏதுமே கற்றுக்கொள்ளாமல், மனிதர்களைப் 'போனகிராப்' பெட்டிகளாகச் செய்யும் நாசகரமான கல்வி கற்கும்படி செய்து அவர்களைக் கெடுக்கமாட்டேன்.
ஜாதீயப் பாடசாலைகளுக்கு அனுப்பி ஐரோப்பியக் கல்வியிலே பிரயோஜனகரமான அம்சத்தை மட்டும்
கற்றுக்கொள்ளும்படி செய்து எனது தேசத்து ஞானமும் என் குழந்தைகளுக்கு ஏற்படும் படி
செய்வேன். இதில் சட்டத்திற்கு என்ன கஷ்டம் சம்பவித்து விட்டது?
இனிப் பணச்செலவு மிகுதியாவதை உத்தேசித்து எங்கள் வியாஜ்ஜியங்களைப் பஞ்சாயத்துக்கள்
மூலமாகத் தீர்த்துக் கொண்டால் எந்தச் சட்டத்திற்கு விரோதம்?
எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும், சௌகரியமும்,
தீர்க்காயுளும் இந்தத் தலை முறையிலே ஏன் இல்லை? நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள்
குறுகி, மெலிந்து துர்பலமடைந்து, க்ஷீணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்?
இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை
பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன்.
நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் முறிந்து போகிறது?
இங்கிலீஷ் பாடசாலைகளிலே கூட நமது பிள்ளைகளுக்கு ஒருவிதமான சரீரப் பயிற்சி கொடுக்க வில்லையா?
இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் போய்ப் படிக்கத் தகுந்த சொத்தில்லாத பிள்ளைகள் எங்கள்
தேசத்தில் கோடிக்கணக்காக இருக்கிறார்கள். அவர்களுடைய சரீரம் பலமடையக் கூடாதென்று
எங்கேனும் சாஸ்திரமேனும், சட்டமேனும் உண்டா? அதற்குரிய முயற்சிகளை நான் செய்தால்
அதினின்று சட்டத்திற்குத் தலைநோவு கண்டுவிடுமா? சீச்சீ! சுதேசியம் சட்ட விரோதம் என்று
சொல்லுகிறவர்கள் பொய் சொல்லுகிறார்கள். அவர்கள் நம்மைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
பேசுகிறார்கள்.அவர்கள் பேச்சைக் கேட்டு மயங்குபவர்கள் தேசநலம் அறியாத களிமண்-அறிவு
கொண்ட மூடர்கள்.
அந்நிய-வஸ்து-வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாயத்து, சரீரப் பயிற்சி
- இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும்.
இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும்
கிடையாது இவற்றை ஆதரிக்காமலிருப்பவர்கள் தேசத்துரோகிகள் ஆவார்கள்.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Sunday, May 24, 2015
64. சமூகம் - குணமது கைவிடேல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment