பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 24, 2015

58. சமூகம் - பஞ்சாங்கம்


          விவேக போதினி' பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு;  அதுகாட்சி அனுபவத்திற்கு விரோதம். மார்கழி மாதம் எட்டாந்தேதியே உத்தராயணம் தொடங்கிவிட்டது. அன்றைக்கே சூரியன் தனது தெற்கெல்லையிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான்.   மேற்படி ஸ்ரீ சாமிநாதய்யர் எழுதுகிறார் -"ஒரு காலத்தில் வஸந்த விஷூவானது கார்த்திகை நக்ஷத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாஸத்திற் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கப்பால், அந்த விஷூ அசுவினி நக்ஷத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது.  இங்ஙனம், வஸந்த விஷூவானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப்போய் விட்டது. அயன விஷூக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ, ஸம்வத்ஸரத்தின் பரிமாணத்தை 20 1/2 நிமிஷம் ஜாஸ்தியாகக் கணித்து விட்ட படியால், அயன விஷூ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20 1/2 நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழு நாள் பிந்திவிடும். மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால், புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்களும் பிரத்தியக்ஷத்துக்கு விரோதமாயிருக்கின்றன.

பருவ நினைப்பு

                சித்திரையும் வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதிர் வேனிற்கால மென்றும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிற் படித்தோம். இது பல நூற்றாண்டுகளின் முன்பு சரியாக இருந்தது. மேற்கூறப்பட்ட கணக்குத் தவறினால் பருவக் காலத்தையும் தவறாக்கி விட்டோம். இப்போது, இளவேனிற் காலம் பங்குனி மாதம் எட்டாந் தேதியிற் பிறந்துவிடுகிறது. ஆதலால், நம்மவர் அயன விஷூ காலங்களிற் செய்யும் ஸ்நானம் தானம் முதலிய வைதீகக் கிரியைகளெல்லாம் புண்ணிய காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து வருகின்றன. அயன விஷுக்களை நேராகத் தெரிந்து பஞ்சாங்கத்தில் வருஷப் பிறப்பைச் சரியான நாளில் வைத்தால், பருவக்கணக்கும் நேராகும்.கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க.


No comments: