பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 7, 2013

நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? 8-1-2013


சிகாகோ சர்ம சமய மாநாட்டு மேடை

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு (2) 8-1-2013

நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? செப்டம்பர் 15, 1893.

ஒரு சிறுகதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம் ஒருவரையொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ்சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்ல வேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும், கிருமிகளையும் மிகவும் சிறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.
மேடையில் மற்ற இந்திய பிரதிநிதிகளுடன் சுவாமிஜி

ஒருநாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

"நீ எங்கிருந்து வருகிறாய்?"

"கடலிலிருந்து!"

"கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா?" என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

"நண்பா! இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?" என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, "உனது கடல் இவ்வளவு பெரியாய் இருக்குமா?" என்று கேட்டது.

"சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?"

"நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்" என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இதுதான். நான் இந்து, நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்துகொண்டு தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்துகொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கண் எடுத்துக் கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

(தொடரும்)

1 comment:

Unknown said...

ஒரு மொழி இருபொருள் எனவும் கொள்ளலாம்!

தனது மதம் தான் பெரியது, உயர்ந்தது என்று சரியாகப் புரியாமல் வாதிடுவோருக்கான சரியானக் கருத்து! மற்றொன்று...

இறைவன் என்பவன் ஒரு கிணற்று நீர் போல ஒரு இடத்திலே தான் தேங்கிக் கிடப்பது போன்ற ஒரு புரியாக் கருத்தை கொண்ட பலருக்கும் இது போதிய விளக்கம் தரும் என்பது எனது கருத்து!

இறைவன் அவன் பிரபஞ்சப் பெருங்கடல், அவனே / அவளே / அதுவே இந்த பிரபஞ்சம்......
பரதேகி அவன். அப்படிப் பார்க்காமல் கடவுளை கிணற்று நீராகப் பார்ப்போரும் இந்தக் கருத்தை புரிந்தும் கொள்ள வேண்டும்.
இதை கூற எனக்கு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு அனுபாவமும் கூட... எனது நண்பர் குழந்தையின் பிறந்த நாள் விழா. அங்கே அவரின் நண்பர் ஒருவரை சந்தித்தேன்... அவர் சிறந்த பக்தி மான் என்று அறிகிறேன்... அவர் எப்போதும் திருநீறு பட்டையும், ருத்ராட்சமும் கூட அணிந்து இருப்பார். அவர் வீட்டிலே வேதம் சொல்லித் தர வகுப்பிற்கு இடம்ளித்ததாக முன்போரும்ரை கூறினார். அவர் இம்முறை கூறுகிறார். கோவில்களிலே திருடர்கள் கொடிமரம் வரை செல்லலாம், அதன் பிறகு அவர்கள் ஒரு தீட்டுத் துணியை உள்ளே எறிவார்கள் அப்படி எறிந்தால் சாமி அப்படியே பின்புறமாக வெளியேறிவிடும் அதன் பிறகு அவர்கள் இலகுவாகத் திருடுவார்கள். நான் ஒரு கணம் அவரின் புரிதலைக் கண்டு அதிர்ச்சி யுற்றேன். அதன் பிறகு ஏதும் சொல்லாமல் அமைதியும் உற்றேன். இனி என்ன பேச வேண்டியிருக்கிறது. அவரிடம். கடவுளைப் பற்றிய எத்தனைப் புரிதல். அங்கே சன்னதியில் கடவுள் அந்த விக்கிரகத்தில் மாத்திரம் இருந்துக் கொண்டு ஆட்சி செய்வது போன்றும், அவருக்கு வெறுப்பான (வெறுப்பா???) காரியத்தால் அவனே வெளியே ஓடியும் விடுகிறானாம். என்னப் புரிதல் அது!!!???

இறைவனை சரியாகப் புரிந்தவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். கோவில்களில் சென்று தங்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்தால் போதும், அங்கே வீற்றிருக்கும் இறைவனை சந்தோசப் படுத்த (மனிதனைப் போன்று அவனையும் எண்ணிக் கொண்டு) சில காரியங்கள் செய்தால் போதும் வாழ்வில் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற தவறானப் புரிதலும் தான் அதிகமாக காண்கிறோம்.
மதம் என்பது பயிற்சி கூடமே அதுவே பணியிடமாகாது என்பதை பெரும்பாலும் புரிந்துக் கொள்ளப் படுவதில்லை.

எனினும் இங்கே...

சுவாமிஜி மத மாச்சரியத்தை களையவேண்டும் என்று கூறி அதற்கான அமெரிக்காவின் ஏற்பாடை வெகுவாகப் பாராட்டுகிறார். இங்கே சிங்கப்பூரில் அனைத்து மதத் தலைவர்களையும் அடிக்கடி ஒருங்கிணைப்பது வழக்கம், அது போதுவானதொறுக் கருத்தை வாழ்வு முறையை ஆராய்ந்து புதிய பரிந்துரையை ஏற்படுத்த ஏற்படுத்தும் ஏற்பாடே!

இன்னும் சொல்லப் போனால், பெரும் பாலான இடங்களில் இந்துக் கோவில்களும் புத்தர் கோவில்களும் அருகருகே இருக்கும். அப்படி இல்லாத இடங்களிலே இந்துக் கோவில்களிலே புத்தருக்கு தனி சிலை கொண்ட ஒரு தனி பீடம் இருக்கும்.

நன்றிகள் ஐயா! அடுத்தப் பதிவை நோக்கி நகர்கிறேன்.