பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 13, 2013

இந்து மதம் ..... (தொடர்ச்சி) 14-1-2013

இந்து மதம் ..... (தொடர்ச்சி) 14-1-2013

இந்த சிகாகோ சொற்பொழிவினைப் படிப்பதற்கு முன்பாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். காவிரியில் நீரில்லை; வயல்களில் விளைச்சல் இல்லை; அண்டை மாநிலத்தார் மனதில் இரக்கம் இல்லை; வானம் பொய்த்துப் போயிற்று -- இவற்றிற்கெல்லாம் மனம் வருந்தி உதவிக் கரம் நீட்ட வேண்டியோர் முகலாய சாம்ராஜ்ய தலைநகரில் இருந்துகொண்டு சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தலாமா, டீசல், பெட்ரோல் விலையை ஏற்றலாமா என்று ஆலோசனை செய்து வருகின்றனர். வேறு சிலரோ, மக்களின் எந்தப் பிரிவினரின் ஆதரவு தங்களுக்கு வலுவாக இருக்கிறது, யார் வாக்களித்தால் தாங்கள் வெற்றி பெறலாம் எனும் கற்பனையில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் மக்களைக் காக்கும் கடமை அந்த பரம்பொருளுக்கே உண்டு. பாதிக்கப்பட்டோரின் அழுகுரல் அந்தப் பரம்பொருள் காதில் மட்டுமே கேட்கும். 'அது' பார்த்துக் கொள்ளட்டும், இனி சுவாமிஜியின் 'இந்து மதம்' கட்டுரையைத் தொடருவோம்.......

..... எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்ட்மானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போதுதான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும்போதுதான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒரு மாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக்கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள்தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.

ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் அறிவியல். முழுமையான ஒருமைநிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும், இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டுபிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத்தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பதுதான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல் முடிவுகளின் ஆதார விளக்கங்களுடன் புகட்டப் படப்போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.

தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம். பல தெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கிற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும் -- எங்கும் நிறைந்த தன்மை உட்படத்தான் -- இருப்பதாகக் கூறி வழிபடுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பலதெய்வ வழிபாடாகாது; பல தெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம்தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில் 'நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால், அது என்னை என்ன செய்துவிடும்?' என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?' என்று கேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து.

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடு இணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

மூட நம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவந்தான். ஆனால், மதவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டண்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின்படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்து கொள்ள முடியும்? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும், பரந்த வெளியையும் நினைக்கலாம் அவ்வளவுதான்.

எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறுதான் செயல்படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும் நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும், தோற்றங்களுடனும் தொடர்புபடுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்றுவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புக் கொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது, தெய்வத்தை உணர்ந்து மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவையெல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.

அவன் எங்குமே நின்றுவிடக் கூடாது. 'புற வழிபாடும் ஜடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல் நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை' என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கிரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள்: "அவனை சூரியனும் விவரிக்க முடியாது, சந்திரனும் விளக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தானே ஒளிர்கின்றன."

இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமைதாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப் பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல்நிலை உண்மைக்குப் பயணம் செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம்பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது, அது உயரச் செல்லச் செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.

வேற்றுமையில் ஒற்றுமைதான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வித்துக் கொண்டு, சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லோருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.

(இனி தொடர்ந்து பார்ப்போம்..நாளை)


2 comments:

 1. அருமை! அற்புதமான விளக்கங்கள்!

  அடுத்தப் பதிவினை எதிர்பாத்து.

  பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

  மிக்க நன்றி!

  ReplyDelete
 2. ////தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல் முடிவுகளின் ஆதார விளக்கங்களுடன் புகட்டப் படப்போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.///

  இந்திய விஞ்ஞானிகள் நமது வேதத்தையும், புராண இதிகாசத்தையும் ஆழ்ந்துப் பார்த்தால் பிரபஞ்சத்தையே அங்கு காண முடியும்.. இன்னும் மறைந்திருக்கும் விஞ்ஞானத்தை வெளியேக் கொண்டுவர முடியும்.

  ///மூட நம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன் தான். ஆனால், மதவெறி அதைவிட மோசமானது.///

  எத்தனை காலமானாலும், இறைவனைப் புரிந்துக் கொள்ளாத எந்த மதத்தவனும் இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here