பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 26, 2013

சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!


சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று! 

சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர். அவர் ஒரு நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு, ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக்காரராகப் பார்க்க முடியாது. யாரையும் எதிரியாகவோ, வேற்றாளாகவோ கருதியது கிடையாது. அன்பு மட்டுமே அவரை உலக மக்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார வைத்திருந்தது எனலாம்.

பிறப்பால் வங்காளியான அவருக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் இருந்த அன்பும் அக்கறையும் பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அவரது சிகாகோ பயணத்தின் முதல் கட்டத்தில் அவர் பயணம் செய்த கப்பல் சென்னை நோக்கி வரும் செய்தியைத் தொடர்ந்து அவரது தென்னக மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் பகுதியும் வருகிறது.

அவரது பயணத்தை மட்டும் சொல்லாமல், பயணம் செய்யும் இடங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் காலத்தில் தமிழ்பேசும் நல்லுலகம் மட்டுமல்ல, ஆந்திரப் பகுதிகளின் பெரும்பாலான இடங்கள், கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவற்றை உள்ளடக்கியிருந்தது பழைய சென்னை மாகாணம். சுவாமிஜி சொல்கிறார் 

"தென்னிந்தியாவின் பெரும் பகுதி சென்னை மாகாணத்தைச் சேர்ந்தது. நிலம் மட்டும் பரந்து கிடப்பதில் என்ன பயன்? அதிர்ஷ்டம் உள்ளவனிடம் பாலைவனம் கிடைத்தாலும் அது சொர்க்கமாக ஆகிவிடும்" 

என்று தென்னக மக்களின் உழைப்பை உயர்வுபடுத்திச் சொல்லுகிறார்.

தென்னக மக்களைக் குறிப்பாக தமிழக மக்களை அவர் வர்ணிக்கும் காட்சி அற்புதமானது. அவர் சொல்கிறார்: 

"மழித்த தலை, குடுமி, பல்வேறு வண்ணங்களைப் பூசிய நெற்றி, கட்டைவிரலை மட்டுமே நுழைத்து அணியக்கூடிய செருப்பு. பொடி போட்டு இளகிய மூக்கு - இத்தகைய தோற்றம், உடம்பு முழுவதும் சந்தனம் அப்பிய தனது குழந்தைகள், என்று நால் கல்கத்தாவின் ஜகந்நாத கட்டத்தில் ஒரிசா பிராமணனைக் காண்கிறோமே, அது தென்னிந்தியக் காட்சியின் ஒரு நகல்தான்" 

இங்கு சுவாமிஜி வந்து தங்கி பழகிய மனிதர்களின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தென்னிந்திய பிராமணர்கள் திருஷ்டி கழிப்பதற்கென்று மண்குடத்தில் வெள்ளையடித்து வண்ணம் பூசி வீட்டுமுன்பு வைத்திருப்பார்களாம். அதை வர்ணிக்கும் சுவாமி சொல்லுகிறார்: 

"தூரத்திலிருந்து பார்க்கும்போது இராமானுஜ நெறியினரின் (வைஷ்ணவர்கள்) நெற்றியில் திகழும் அந்த நாமம் சாட்சாத் அப்படியேதான் தெரிகிறது". நல்ல ரசனை.

தமிழ்நாட்டு உணவுப் பண்டங்களையும் சுவாமி வர்ணிக்கத் தவறவில்லை. நம்முடைய 'ரசம்' முதலான உணவுப் பண்டங்கள் பற்றிய அவர் விளக்கம் இதோ: 

"மிளகுத் தண்ணீர்" ரசத்துடன் கூடிய அந்த 'ஸாப்பாடு' ஒவ்வொரு கவளம் உள்ளே போகும்போதும் நெஞ்சம் ஒருமுறை நடுங்கித் தணியும்! அந்த அளவிற்கு காரமும், புளிப்பும். கடுகும் கருவேப்பிலையும் வறுத்துச் சேர்த்துள்ள தயிர்சாதம், நல்லெண்ணெய்க் குளியல், நல்லெண்ணெயில் பொரித்த மீன் -- இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தென்னிந்தியாவை நினைக்க முடியுமா?" என்கிறார்.

"சென்னை மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நாகரிகம் மிகமிகப் பழமையானது. யூபிரட்டஸ் நதிக்கரையில் மிகப் பழங்காலத்தில் பரவியிருந்த பெருநாகரிகம் இந்தத் தமிழர்களில் ஒரு பிரிவினராகிய சுமேரியர்கள் பரப்பியதே" இப்படி உலக நாகரிகம் தமிழகத்திலிருந்து பரவிய கருத்தை சுவாமிஜி அழகாக விவரிக்கிறார். "ஜோதிடமும், அறநெறியும், நீதிநெறியும், ஆசாரங்களும்தான் அசிரிய, பாபிலோனிய நாகரிகங்களுக்கு அடிப்படை. இவர்களின் புராணங்களே கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு மூலம். இவர்கலின் மற்றொரு பிரிவினர் மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்து அற்புதமான எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர். தென்னகத்தில் உள்ள இவர்களது பிரம்மாண்டமான கோயில்கள் வீர சைவ, வீர வைணவ நெறிகளின் கீர்த்தியைப் பறைசாற்றுகின்றன. இவ்வளவு சிறப்பான வைணவ நெறி உள்ளதே, "முறம் விற்பவரும் அதே வேளையில் பெரும் யோகியாகத் திகழ்ந்தவரும்" தாழ்ந்த குலத்தில் பிறந்தவருமாகிய ஒரு தமிழர் ஆரம்பித்தது அது. தமிழ் ஆழ்வார்கள், வைணவர் அனைவராலும் இன்றும் வழிபடப் படுகின்றனர். த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத வேதாந்தங்கள் பற்றி மற்ற இடங்களைவிட இங்குதான் இன்றும் அதிக ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. மற்ற இடங்களைவிட அறவழியில் நாட்டம் அதிகமாக உள்ளது."

அவர் எழுதிய கடிதங்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பட்டியலில் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார், அளசிங்கப் பெருமாள், 'லோகோபகாரி' எனும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும் சுவாமிஜியின் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தை மொழிபெயர்த்தவருமான வி.நடராஜ ஐயர், நாட்டராம்பள்ளி கே.வெங்கடசாமி நாயுடு ஆகியோரைச் சொல்லலாம். சென்னையில் இப்போது விவேகானந்தர் இல்லம் என வழங்கப்படும் ஐஸ் ஹவுஸ் எனும் கட்டடத்தை ஐஸ்கட்டி இறக்குமதி செய்யும் ஒரு கம்பெனியிடமிருந்து வாங்கிய பிலிகிரி ஐயங்கார் என்பவரைப் பற்றியும் சுவாமிஜி குறிப்பிட்டு விசாரித்திருக்கிறார். தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணத்தில்தான் பல தமிழர்களின் பழக்கம் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. சென்னையில் அவரை ரதத்தில் உட்காரவைத்து இழுத்துச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களில் ராஜாஜியும் ஒருவர். இராமநாதபுரம் சேதுபதி உட்பட இவருக்கு உதவி செய்த பலரும் தமிழர்களே. சிகாகோ போக உத்வேகம் கொடுத்த கன்னியாகுமரி பாறை இவரது வாழ்க்கையையே திசைதிருப்பிய இடம், அது இருப்பதும் தமிழ்நாடே. ஆக, தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சுவாமிஜியிடம் உள்ள உறவு எல்லை கடந்தது.

1 comment:

  1. //சென்னையில் இப்போது விவேகானந்தர் இல்லம் என வழங்கப்படும் ஐஸ் ஹவுஸ் எனும் கட்டடத்தை ஐஸ்கட்டி இறக்குமதி செய்யும் ஒரு கம்பெனியிடமிருந்து வாங்கிய கிலிபிரி ஐயங்கார் என்பவரைப் பற்றியும் சுவாமிஜி குறிப்பிட்டு விசாரித்திருக்கிறார். //

    'கிலிபிரி அய்யங்கார்' என்று எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. அது 'பிலிகிரி அய்யங்கார்' என்று இருக்க வேண்டும்.நீங்கள் வெளியிட்டுள்ள படத்தில் நெற்றியில் பெரிய திருமண்ணும், யோக வேஷ்டியும் அணிந்து முன்னால் தரையில் அமர்ந்திருப்பவரே பிலிகிரி அய்யங்கார்.

    அன்றைய ஐஸ் ஹவுஸை விலைக்கு வாங்கி முன்னால் இருக்கும் வளைவான பகுதியைக் கட்டித் தானே அங்கு குடியேறினார்.பிலிகிரி ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர். நீதிபதியான 'கர்னான்'என்பவர் அவருடைய நல்ல நண்பர். 'கேஸில் கர்னான்'என்று தன் மாளிகைக்குப்பெயர் சூட்டி நண்பருக்குப் பெருமை சேர்த்தார். தான் அந்த மாளிகையில் வாழும் போதே கீழ்தளத்தில் வரிய மாணவர்கள் தங்கிப் படிக்க‌ ஒரு விடுதியை நடத்தியுள்ளார்.சுவாமிஜி தன் சென்னனை விஜயத்தின் போது கேசில் கர்னானில் தான் தங்கினார். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் சென்னை வந்தபோதும் அங்கேதான் முதலில் தங்கிக்கொண்டு மடத்தின் பணிகளைத் துவங்கினார். அப்போது கேசில் கர்னான் ஏலத்துக்கு வந்துவிட்டது. ராமகிருஷ்ண பக்தர்களால் ஏலத்தில் வெற்றி பெறமுடியவில்லை.எனவே பின்னர் மயிலைக்கு மடம் மாற்றப்பட்டது.
    ReplyDelete

You can give your comments here