இந்து மதம்............. (தொடர்ச்சி) 12-1-2013
'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கையூட்டும் பெயர் அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம்! மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல; ஜடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை; காரண காரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை; ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், ஜடம், சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறுபகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான்; 'அவனது கட்டளையால்தான் காற்று வீசுகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்று கூறுகின்றன.
அவனது இயல்புதான் என்ன?
அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவமற்றவன், 'அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்கு அருள் செய்வாய்! -- வேத முனிவர்கள் இவ்வாறு பாடி வைத்துள்ளனர்.
அவனை எப்படி வணங்க வேண்டும்? அன்பினால். இம்மையிலும், மறுமையிலும் உள்ள எதையும்விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார். மக்களுக்குப் போதித்தார் என்று பார்ப்போம்.
மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழவேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது, ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அதுபோல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் -- இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.
இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லதுதான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. 'எம்பெருமானெ, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனது திருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிறது பிரார்த்தனை.
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி! இதோ, இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும், மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அதுபோலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூல காரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது' என்றார்.
ஆன்மா தெய்வீகமானது. ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை - நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுதலை.
கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிறான். ஆம், தூயவர்களும், மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகன்றுவிடுகின்றன. காரண காரியம் என்கிற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
(தொடரும்)
1 comment:
நடக்கும் யாவும் அந்த இறைவனின் சித்தமே என்பது தான் இறைவனின் மீது கொண்ட உண்மையான அன்பின் வெளிப்பாடு. அப்படி நினைக்கும் போது வருத்தம், கோபம், ஏமாற்றம், தற்பெருமை, அகங்காரம் என்று அனைத்தும் தாமரை இலைத் தண்ணீர் போலவே நம்மோடும் தங்கி இருக்கிறது.
வறுமையிலே வையவில்லை, செழுமையிலே மறக்கவும் இல்லை. என்னிலை எய்தினும் எனக்கு யாவும் நீஎன்றோ இறைவா! என்ற சித்தனை மாத்திரமே வாழ்வியலாக கொள்ளும் போது சுவாமி சொன்னது போல்... அவனின் மீதான அன்பு மட்டுமே எப்போதும் இருக்கிறது.
அவனை இன்னும் நெருங்க அவனின் அன்பில், கருணையிலே திளைக்க அவனே அருளவேண்டும்.
சுவாமிஜியின் பிறந்த நாளில் அவரைப் பெருமையோடு நினைக்கச் செய்தப் பதிவு.
நன்றிகள் ஐயா!
Post a Comment