இந்து மதம்.... (தொடர்ச்சி) 13-1-2013
இந்துவானவன் சொற்களிலும், கொள்கைகளிலும் வாழ விரும்புவதில்லை. புலன்வயப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். ஜடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன் அவரைக் காண வேண்டும்; அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதறு ஓர் இந்து ஞானி கொடுக்ககூடிய சிறந்த சான்று, 'நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன், நான் கடவுளைக் கண்டுவிட்டேன்' என்று அவர் கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.
இடைவிடாத முயற்சியின் மூலம் நிறைநிலை பெறுவதும் தெய்வத்தன்மை அடைவதும் தெய்வத்தை அணுகுவதும் அவனைக் காண்பதுமே. அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறைநிலை அடைவதும்தான் இந்துக்களின் மதம். நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இதுதான் பொதுவாக உள்ள மதம். நிறைநிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது. எனவே ஆன்மா நிறைநிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவதுதான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். 'காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.'
நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப் பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும்போது நமது குறிக்கோளாகிய எல்லயற்ற இன்பம் கிட்டுகிறது.
(தொடரும்)
1 comment:
எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பது!
அப்படியானால், எல்லாவற்றிலும் அன்பை பொழிவது!!
அப்படியானால் எல்லாவற்றையும் தன்னைப் போல உணர்வது!!!
அருமையாகச் சொல்கிறார்...
அதனால் தான் மகாகவியும் பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே! அவனுள்ளும் அந்த பரமே வாழ்கிறது நெஞ்சே!! என்கிறான் அருமை!
அந்நிலை எய்த யாவரும் முயல்வோம். நன்றிகள் ஐயா!
Post a Comment