பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 17, 2013

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (18-1-2013)


                             மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (18-1-2013)

சுவாமிஜியின் மேலும் சில பொன்மொழிகள்.

1 ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்துச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா ரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

2. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம். உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு, "ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள்..." என்று நீ சொல்லாதே. மாறாக, அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.

3. தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரிய பலனை விளைப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்குரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது; நிறுத்தி வைக்கவும் முடியாது. அதே போல, நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்குரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்திலுள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

4. எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல், பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான் இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.

5. உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால், அவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்.

6. கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை - இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

7. உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவனால் ஒரே ஒரு நாளைக்காகிலும் ஒரே ஒருவனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால், அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்மையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். மற்றவை எல்லாம் பொருளற்ற வெறும் பகற் கனவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

8. தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல், அமைதியுடனும் ஆண்மையுடனும் ஆக்க பூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்த சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையப் போகிறது என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன்.

9. மோகமாகிய முதலையின் வாயில், மக்கள் எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அந்தோ! இதயத்தைப் பிளக்கக்கூடிய அவர்களின் சோகக் குரலைக் கேளுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளிபெறச் செய்வதற்காகவும், 'ஏ! வீரர்களே! முன்னேறிச் செல்லுங்கள்! அஞ்சாதே! அஞ்சாதே!' என்று வேதாந்த முரசு முழங்கிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

10. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

11. கிராமம் கிராமமாகச் சென்று மனித குலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இத்தனை உறுதியாக இருக்கும்போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரைவிடுவது மேல்.

12. பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால், அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

13. புனிதமான வாழ்க்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சி அடைந்தவர்கள்; கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள்; ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாகச் சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள் -- இத்தகைய ஆண்களும் பெண்களும் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோக்ஷம், பரோபகாரம், தாழ்ந்தவர்களின் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகிய இந்த உயர்ந்த கொள்கைகளைப் பிரசாரம் செய்தபடி இந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைவரை செல்வார்கள்.

14. நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. இந்த முறையில் உன்னுடைய சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால், நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

15. தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல், தன்னடக்கம் ஆகியவை வீரனுக்கு உரிய பண்புகள். அவை இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறானேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவனுடைய இதயத்திலும் வாழ்க்கையிலும் ஆணை செலுத்த வேண்டுமானால், முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

--ooOoo--

No comments: