பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 3, 2013

இந்தியப் பெண்களுக்கு:-- 4-1-2013


                                     இந்தியப் பெண்களுக்கு:-- (4-1-2013)

பெண்களுக்கு மட்டும் என்ன, ஆண்களுக்கும் கூறுகிறேன் - பாரத நாட்டை நம்புங்கள், பாரதத்தின் மதத்தை நம்புங்கள், வலிமையுடன் வாழுங்கள், நம்பிக்கை வையுங்கள். எதற்கும் வெட்கப்பட வேண்டாம். இந்தியா ஏற்றுக் கொள்வதற்குச் சிறிதே உள்ளது. ஆனால் பிறருக்கு வழங்கிட உலக மக்களினங்கள் அனைவரிலும் அதிகம் அதனிடம் உள்ளது என்பத நினைவில் கொள்ளுங்கள்.

இந்தியர்களிடயே, குறிப்பாக பெண்களிடையே வேலை செய்வதற்கு இப்போது வேண்டியது ஓர் ஆண் அல்ல, பெண் - பெண் சிங்கம்.

நமக்கு ஆண், பெண் இருபாலரும் வேண்டும். ஆன்மாவில் பால் வேற்றுமை இல்லை. காட்டுத் தீ போல இமயத்திலிருந்து குமரிமுனை வரையிலும், வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையிலும் உலகம் முழுவதும் பரவ வல்ல ஆயிரக்கணக்கான ஆண்கலும், ஆயிரக்கணக்கான பெண்களும் நமக்கு வேண்டும். இது குழந்தை விளையாட்டல்ல. அதற்கு நேரமும் இல்லை. குழந்தை விளையாட்டிற்காக வந்திருப்பவர்கள் விரைவில் வெளியேறட்டும்; இல்லாவிட்டால் அவர்களுக்குப் பேராபத்து நேர்வது உறுதி. ஒரு சங்கம் வேண்டும். சோம்பல் ஒழியட்டும்; பரவுங்கள்; பரவுங்கள், தீயைப் போல எங்கும் பரவுங்கள்.

உலகத்திற்கு யார் ஒளி தருவார்? பண்டைக் காலத்தில் தியாகமே வாழ்க்கை நியதியாக இருந்தது; வரப்போகிற யுகங்களுக்கும் அதுவே நியதியாக இருக்கும். எல்லோருடைய நன்மைக்காக பூமியின் சிறந்த வீரர்கள் தங்களைத் தியாகம் செய்தேயாக வேண்டும். நிலைத்த அன்புடனும் இரக்கத்துடனும் நூற்றுக் கணக்கான புத்தர்கள் தேவை.

உலக மதங்கள் உயிரற்ற கேலிக்கூத்துகளாகி விட்டன. உண்மை வாழ்வே இன்றைய உலகின் தேவை. கொழுந்துவிட்டு எரிகின்ற அன்பு கொண்ட, சுயநலம் இல்லாத வாழ்க்கை உடையவர்களே உலகிற்குத் தேவை. அத்தகைய அன்பு ஒவ்வொரு சொல்லையும் இடிபோன்று இறங்கிடச் செய்யும்.

தைரியமான சொற்கள், அவற்றைவிட தைரியமிக்க செயல்கள் இவையே இன்றைய தேவை. உன்னதமானவர்களே, விழித்து எழுங்கள்; விழித்து எழுங்கள், துன்பத் தீயில் உலகம் வெந்து கொண்டிருக்கிறது, நீங்கள் தூங்கலாமா?

இந்தியாவை ஆன்மீக மயமாக்க ஐநூறு ஆண்கள் முயன்றால் அதற்கு ஐம்பது வருஷங்கள் ஆகலாம்; அதையே ஐநூறு பெண்கள் முயன்றால் ஒரு சில வாரங்களிலேயே சாதித்து விடலாம்.

ஆண்களே விலகுங்கள்!

முதலில் உங்கள் பெண்களுக்குக் கல்விச் செல்வத்தை அளியுங்கள், பிறகு அவர்களை விட்டுவிடுங்கள். தங்களுக்கு என்னென்ன தேவையென்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கலாம், அந்த மட்டில்தான் நாம் அவர்கள் விஷயத்தில் தலையிடும் உரிமை இருக்கிறது. தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலைமையில் அவர்கள் வைக்கப்பட வேண்டும். இதனை அவர்களுக்காகப் பிறர் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதை நிறைவேற்றிக் கொள்வதில் நம் இந்தியப் பெண்கள் உலகின் பிற மாந்தரைப் போல திறமையுடையவர்களே.

சுதந்திரமே வளர்ச்சிக்கான முதல் நிபந்தனை. 'இந்தப் பெண் அல்லது அந்தக் குழந்தையின் முன்னேற்றத்திற்கு நான் வழி வகுப்பேன்' என்று யாராவது சொல்லத் துணிவானானால் அது தவறு, முற்றிலும் தவறு. விதவைகளின் பிரச்சினை பற்றியும், பெண்கள் நிலைமைகளைப் பற்றியும் எனது கருத்து என்ன என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். அவற்றுக்கான பதிலை இப்போது ஒரேயடியாகக் கூறிவிடுகிறேன் -- நான் என்ன வதவையா, பெண்ணா? என்னிடம் இந்த அசட்டுத்தனமான கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே, பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் யார்?

விதவைகளையும், பெண்களையும் ஆள்வதற்கு நீங்கள் என்ன எல்லாம் வல்ல ஆண்டவனா? விலகி நில்லுங்கள்! அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள்.

நன்றி: "எனது பாரதம் அமர பாரதம்" - -- சுவாமி விவேகானந்தர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

(தொடரும்)

1 comment:

 1. எத்தனை அருமையான பேச்சு...

  ஒருவரையொருவர் அடிமை செய்வதை ஒழிக்க வேண்டும்!
  பெண்களுக்கும் பெண்களே வேலை பார்க்கட்டும். அப்போது தான் அவர்களுக்கு எவ்விதத்திலும் துரோகம் நிகழாது என்பதோடு அவர்கள் உணர்வுகள் முழுவதுமாக உணரப் பட்டு, ஒன்றுபட்டு பிரதிபலிக்கும்! எத்தனை நேர்த்தியான உண்மை தத்துவம். இது தான் சுதந்திரத்தை முழுமையாக அளிப்பது என்பதோ!

  தியாகமே வாழ்க்கைத் தத்துவம் என்பதை விளக்கியதோடு... அன்பான வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடி போல் இறங்க வேண்டும் என்கிறார். அன்பு மற்றவரை நெகிழச்செய்யும்! உருகச் செய்யும்.... அவைகள் கூட சிறிது நேரம் கழித்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யும் அதனால் அன்பான வார்த்தைகள் இடிபோல் இறங்கட்டும் அப்போது அவர்களிடம் இருக்கும் தீயவை அனைத்தும் அழிந்து என்றும் நிலையான ஒரு ஐக்கியமான குழைவு அதாவது ஒன்றோடு ஒன்று ஒன்றுதல் என்று ஆங்கிலத்திலே கூறுவார்களே அந்த நிலையை ஏற்படும் என்கிறார் சுவாமி!

  கல்விக் கண்ணைத் திறந்துவிடு பாதையும் பயணமும் அவள் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவாள் என்கிறார் மகாஞானி!

  ஒவ்வொருவரும் சுதந்திரமானவர்கள், அவர்களின் சுய விருப்பத்திலே தலையிட நாம் யாரென்கிறார், அறிவுரையும் ஆலோசனையும், அனுபவ மொழியும் மாத்திரம் போதும்! ஆணையிடாதே என்கிறார்!!!!

  அன்பு, உழைப்பு, தியாகம், சுதந்திரம் இவைகளே வாழ்வின் தத்துவம் என்பவர் பொம்மைகளை வைத்து விளையாடும் சிறு பிள்ளைகளாக வாழ் நாள் முழுவதும் விளையாடிய (யாடும்) வீணர்களை அடையாளமும் காட்டுகிறார்!

  அருமையானப் பதிவு, அற்புதக் கருத்துக்கள், ஒவ்வொரு நாளும் புதியதோர் பாடம்.

  தொடர்ந்து வெடிக்கட்டும் மெல்லிய மொட்டுக்கள்!!!
  பகிர்விற்கு நன்றிகள்!

  ReplyDelete

You can give your comments here