பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 1, 2013

ஆண், பெண் வேற்றுமை பாராட்டுதல்.

ஆண், பெண் வேற்றுமை பாராட்டுதல்.    2-1-2013

எல்லா உயிர்களிலும் ஒரே ஆன்மாதான் உள்ளது என்று வேதாந்தம் கூறுகிறது. எனினும் இந்த நாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் இவ்வளவு அதிகமான வேறுபாடுகள் ஏன் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எப்போதும் பெண்களைக் குறை கூறுகிறீர்கள். அவர்களுடைய நன்மைக்காக ஏதாவது செய்திருக்கிறீர்களா?

ஆன்மாவில் பால் வேற்றுமை இருக்கிறதா என்ன? இந்த ஆண் - பெண் வேறுபாட்டு உணர்ச்சியைத் தூர எறியுங்கள். எல்லாம் ஆன்மாதான்.

பெண்களை மதிக்க வேண்டும்.

உங்கள் பெண்களின் நிலைமையை உயர்த்த முடியுமா? அப்படியானால் நம்பிக்கை உண்டு. இல்லாவிட்டால் இப்போது இருக்கின்ற பிந்தங்கிய நிலையில் அப்படியேதான் இருப்பீர்கள்.

பெண்ணின் தெய்வீகத்தை நாம் ஏமாற்ற முடியுமா? இதுவரை முடியவில்லை. இனியும் முடியாது. அது எப்போதும் உறுதியாக இருக்கிறது. தவறாமல் அது போலியைக் கண்டுபிடித்து விடுகிறது. அயோக்கியத்தனத்தைக் கண்டுபிடித்து விடுகிறது; உண்மையின் இதத்தை, ஆன்மீகத்தின் ஒளியை, தூய்மையின் புனிதத்தை உணர்ந்து கொள்கிறது. உண்மையான ஆன்மீகத்தை அடைய வேண்டுமானால் இந்தத் தூய்மை நிச்சயமாகத் தேவை.

பெண்குலம் சிறக்காமல் உலகத்திற்கு நல்ல காலம் இல்லை. ஒறெ இறக்கையுடன் பறவை பறக்க முடியாது. அதனால்தான் ஸ்ரீ ராமகிருஷாவதாரத்தில் குருவாக ஒரு பெண் ஏற்றுக் கொள்ளப்பட்டார்; ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மை பெண்ணாகப் பாவித்து சாதனை செய்தார்; இறைவனைத் தாயாகக் காண்கின்ற சாதனை முறையைப் போதித்தார்.

அதனால்தான் பெண்களுக்கான மடம் ஒன்றை நிறுவ நான் முதன்முதலாக முயற்சி செய்கிறேன். அந்த மடம் கார்க்கி, மைத்ரேயி போன்றவர்களும், அவர்களைவிட மேலானவர்களும் உருவாகின்ற இடமாக அமையும்.

எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பெண்கள் என்றால் அவர்களை ஆதிபராசக்தியாகவே கொண்டாடுவதை ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் நாங்கள் கண்டோம். அதனால்தான் அந்த நிலையை அடையும்படி உங்களை இவ்வளவு வற்புறுத்திக் கூறுகிறேன்; ஒவ்வொரு கிராமத்திலும் பெண்களுக்கான பள்ளிகளைத் திறக்கச் சொல்கிறேன்; அவர்களையும் மனிதப் பிறவிகளாக்கும்படிச் சொல்கிறேன். அவர்களின் நிலைமை உயர்ந்தால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் மகத்தானவர்களாக வளருவார்கள். அவர்களின்மூலம் நாடு மேன்மையுறும்; கல்வி, ஞானம், ஆற்றல், பக்தி ஆகியவற்றில் எழுச்சி ஓங்கும்.

பெண்கள் பக்தியும் ஞானமும் அடைவதற்குத் தகுதியில்லாதவர்கள் என்று எந்தச் சாஸ்திரத்தில் உள்ளது? இந்தியா நலிவுற்றிருந்த காலத்தில் புரோகிதர்கள் செய்த வேலை அது. மற்ற ஜாதியினருக்கு வேதங்களைப் படிக்கும் உரிமையை மறுத்த காலத்தில், பெண்களின் உரிமைகளையும் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். வேத, உபநிஷத காலங்களில் மைத்ரெயி, கார்க்கி முதலான பெண்கள் பிரம்ம ஞானத்தைப் பற்றி விவாதிக்கும் தங்கள் திறமையின் காரணத்தால் ரிஷிகளுக்குரிய சிறந்த இடத்தைப் பெற்றிருந்ததை நாம் காண்கிறோம். இன்றும் அவர்களை அதிகாலையில் நாம் நினைவுகூர்கிறோம். வேதங்களில் ஆழ்ந்த புலமை உடைய ஆயிரம் பிராமணர்கள் கூடியிருந்த சபையில், பிரம்மத்தைப் பற்றிய விவாதத்திற்கு யாஜ்ஞவல்கியரையே அழைக்கிறார் கார்க்கி (பிருஹதாரண்யக உபநிஷதம்). அவர்கள் அந்தக் காலத்தில் ஆன்மீக வாழ்வில் அனுமதித்துப் போற்றப்பட்டபோது, இந்தக் காலத்தில் ஏன் அந்த உரிமையை மறுக்க வேண்டும்? ஒரு காலத்தில் நடந்தது மற்றொரு காலத்திலும் நிச்சயம் நடக்கும். அதையே வரலாறு காட்டுகிறது. பெண்களுக்குத் தரவேண்டிய, முறையான மதிப்பைக் கொடுத்ததாலேயே எல்லா இனங்களும் மகத்தான் நிலையை அடைந்துள்ளன. எந்த நாடு, எந்த இனம் பெண்களை மதிக்கவில்லையோ அவை ஒருபோதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை; அடையவும் செய்யாது. உங்கள் இனம் இவ்வளவு இழிந்துள்ளதன் முக்கியக் காரணம், பராசக்தியின் வடிவங்களான பெண்களுக்கு நீங்கள் மரியாதை அளிக்காததுதான்.......

எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ, அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை. எனவே அவர்களை முதலில் உயர்த்த வேண்டும்.

நன்றி: "எனது பாரதம் அமர பாரதம்" ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை.

(தொடரும்)

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

பெண்களுக்குத் தரவேண்டிய, முறையான மதிப்பைக் கொடுத்ததாலேயே எல்லா இனங்களும் மகத்தான் நிலையை அடைந்துள்ளன.

அருமையான பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்..

Unknown said...

மிகவும் அற்புதமானக்கருத்துக்கள் இன்றைய உலகத் தேவை அதை இந்திய சமூகத்திலே ஆரம்பித்து அது கீழை நாடெல்லாம் பரவி மேலை நாடுகளுல்லோரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று விதைக்கிறார் வீரத் துறவி...

நமது பாரதியும்.

''பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.''

என்று கூறியவன் மேலும் கூறுகிறான்..

--------------------------------------------------------
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
------------------------------------------------------

சுவாமியின் கருத்துக்கள் யாவையும்; மகாகவி பாரதியும் தனது கருத்தாகவே கொண்டிங்கு கொட்டுகிறான் இந்தக் கருத்துக்களை இன்னும் வலு சேர்த்தே!

அற்புதமான பதிவு தொடருங்கள் ஐயா! நன்றிகள் பல.

Unknown said...

இந்த மகா ஞானிகள் கருத்துக்கள் புதிய வேதங்கள் அவைகள் எங்கும் பரவ இந்த கல்வி சூழல் சீர்திருத்தப் பட வேண்டும். அதற்கு மேலும். படித்த சமூகத்தில் உயர்ந்து நிலையில் இருக்கும் பெண்கள்; பணம் புகழ் பதவி என்பவைகளை முதன்மையாக்கி பெண்ணை காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் அவலத்தைப் போக்க பாடு படவேண்டும்.

அடுத்த ஆண் நம்மை வர்ணிக்க அவனுக்கு என்ன தைரியம்? என்று எண்ணுவது தன்னை தான் உயர்வென்று என்னுதலுக்கு சமமாகும். அந்த ரஜோ குணம் வேண்டும். (அதாவது காட்சி பொருளாக பாவிக்க அனுமதிக்கக் கூடாது என்பதே அதன் சாரம்) எங்களது அழகை கடை போட, காட்சிப் பொருளாக்க நாங்கள் ஒரு போதும் அனுமதியோம் என்று அந்தப் பெண்களும் ஆண்களின் வியாபாரத்திற்கு துணை போய், புகைப் படக் கருவிகளுக்கு பின்னே நின்று பொம்மைகளாக திரிவது சரியா? என்று சிந்திக்க வேண்டும்.

அவர்களது உரிமை மறுக்கப் படும் போது அவளது சகோதர சகோதரிகளோடு சமூகத்தில் போராடி பெண்மையின் மேன்மையை காப்பாற்ற உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

///எந்த நாட்டில், எந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ, அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை. எனவே அவர்களை முதலில் உயர்த்த வேண்டும்.///

///எந்த நாடு, எந்த இனம் பெண்களை மதிக்கவில்லையோ அவை ஒருபோதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை; அடையவும் செய்யாது.///

இது போன்ற புனித புது வேதங்கள் மூளை முடுக்கெல்லாம் ஒளிர்ந்து யாவரையும் எட்டும் வகைச் செய்ய வேண்டும்...

இவைகள் யாவும் நடக்கும் காலம் இதோ வந்துக் கொண்டே தான் இருக்கிறது.

நல்லப் பதிவு தொடருங்கள் ஐயா!