பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 9, 2013

இந்து மதம்...... (தொடர்ச்சி) 10-1-2013.

இந்து மதம்...... (தொடர்ச்சி) 10-1-2013.

.... இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும் படைப்பவனும், தொடக்கும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால், ஒழுங்கற்ற நிலையிலிருந்து (chaos) பல ஒழுங்குமுறைகள் (systems) ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன. பின்னர் அழிந்துவிடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: "பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்". இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.

இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் ஜடப்பொருள்களின் மொத்த உருவம்தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் உடல் அன்று. உடல் அழிந்துவிடும், ஆனால் நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன்; இது வீழ்ந்துவிடும், ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்படதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப் பட்டதானால் அது இறக்க வேண்டும்.

சிலர் பிறக்கும் போதே இன்பத்தில் பிறக்கிறார்கள்; உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும் தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும், நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள்.

அவர்கள் அனைவரும் படைக்கப்பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும், இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்ட வேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப் படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும், கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?

ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை; மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப் படுகிறது அல்லவா?

வாழ்க்கையில் இரண்டு இணைகோடுகள் உள்ளன -- ஒன்று மனத்தைப் பற்றியது, இன்னொன்று ஜடப்பொருளைப் பற்றியது. ஜடப்பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்று ஆகிறது. இது, ஜடப்பொருள் ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.

பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு ஸ்தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குணவொற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity) இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால்தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.

இன்னொரு கருத்தும் இருக்கிறது......... (அது என்ன? நாளை பார்க்கலாம்.)

(தொடரும்)

1 comment:

 1. அருமையானப் பகுதி என்னைப் போன்று வாசிப்போருக்கு இங்கே வரும் சிறு சந்தேகங்களை எனது மொழியில் (சக மாணவனுக்கு இன்னொரு மாணவன் விளக்குவது போல்) கூற அனுமதிக்க வேண்ட்கிறேன் ஐயா!

  நன்றி!

  ///ஆனால் ஜடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்று ஆகிறது. ///

  இங்கே சுவாமிஜி கூறும் அந்த தத்துவம், ஆதி அந்தமில்லாததும், விருப்பு வெறுப்பு இல்லாததும், குணம் குறி இல்லாததும், உருவ அருவமானதும், இரண்டல்லாத ஒன்றே ஆனதுமான அழிவில்லாததும் மான அந்தப் பெரோளியானப் பரம் பொருளென்ற ஒன்றே (ஒரே ஒரு பொருள்) அது என்பதை வாசிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ///பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு ஸ்தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குணவொற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity) இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது.///

  இங்கே, இப்படி, இன்னாருக்கு, இன்னவிதமாகப் பிறந்தால் தனது முந்தய கர்ம வினையை தீர்க்க ஏதுவாக அமையும் விதமாகவே பிறப்பு நிகழ்கிறது. ஜீன்ஸ் என்பதை மேலோட்டமாக அறிவியல் கூற்றாகவே நாம் கொள்கிறோம் அப்படியே நாம் பலரையும் யூகிக்கிறோம்.

  ஆனால், ஒருவன் மிகவும் தாழ்வான, பழக்க குணாதிசயம் உள்ளவனுக்கு பிள்ளையாகப் பிறந்தால் அவனும் அந்த சூழலில் அவன் செய்த கர்மத்திற்கு தகுந்தார் போல் அதைப் போன்ற தாழ்வான பழக்க, குணாதிசய முள்ளவனாக இருந்து இன்னும் தாழவும் வழி இருக்கிறது...

  இருந்தும், சேற்றில் முளைத்த செந்தாமரை என்பார்களே அதைப் போல, அந்த தாழ்வான, பழக்க குணாதிசய வாதியின் பிள்ளையாகி அவனே அந்த குணங்களுக்கு தனது தந்தைக்கு நேர் விரோத போக்கையும் கொள்ளும் சூழலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறதை நாம் காணலாம்..

  அப்படிப் பார்த்தால் இங்கே அந்த அறிவியல் கூறும் ஜீன்ஸ் எங்கே... ஆக, சுவாமிஜி கூறுவது போல், அதனுள்ளும் ஒரு சூட்சுமம் இருக்கிறது... அது ஜீன்ஸ் அல்ல...

  உடல் தான், ஜீன்ஸ் என்று வந்தாலும் அதற்கானக் காரணம் எதுவோ? அவர் அது போன்ற உடலைப் பெற காரணம் எதுவோ? அது இன்னும் விரிவானது....

  புற பொருளான ஜடப் பொருள் அமைவிற்கு ஜீன்ஸ் காரணமாகிறது...

  இப்படி, இன்னாருக்கு இன்னார் பிள்ளை என்பது தான் முதல் காரணம். அது எதனால் விளைந்தது... அந்த முதல் காரணத்தால் இன்னாருக்கு பிள்ளையாகப் பிறந்தமையால் தான் புறத் தோற்றம் தந்தைத் தாயைப் போன்று இருக்கிறது... குணமும் இருப்பதற்கு அது அந்த ஆத்மாவின் கர்மவினை.... முந்தய ஞாபகம், (ஆசை, வாங்கி வந்த வரம் என்று நாம் குறிப்பிடுவது போல)... அது ஜீன்ஸ் அல்ல, இவனைப் போன்ற ஆசை, குணம் (ஞாபகம்) கொண்ட கர்மங்களை தாங்கிய ஆதாமா அது!

  மருத்துவர் ஆக விரும்புபவன் மருத்துவக் கல்லூரிக்கு போகிறான், மாறாக அவன் எஞ்சினியரிங் கல்லூரிக்கு போனால் எப்படி மருத்துவராவது...

  நான் இன்றைய உலகில் சாதித்த பலரையும் அல்ல, அப்படி சாதித்த பலரின் தாய் தந்தையரைப் பற்றி அறிய ஆவலுற்று அவர்களைப் பற்றி அறியும் போது , அவர்கள் தாங்கள் சாதிக்க; விடாது முயன்று தோற்றுப் போனவர்கள்

  அல்லது முயற்சியே செய்ய வழி இல்லாமல், ஆசையை மனதிலே இருத்தி கனவு கண்டவர்கள்,

  அல்லது சாதனைக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொண்டு காத்து இருந்தவர்கள்...

  அப்படி சாதிக்க வேண்டும் என்ற நல்ல கர்மாவோடு, அதே ஞாபகத்தோடு ஒரு ஆத்மா (ஒரு ஆத்மா என்பது கூடத் தவறே... இருப்பது ஒன்றே அந்த ஒன்றில் இருந்து தெறித்த ஒருத் துளி இதுவே ஆக , அதுவும் இதுவும் ஒன்றே என்றே சொல்லவும் வேண்டும் என்பார் சுவாமிஜி)

  அவர்களுக்கு பிள்ளையாகப் பிறக்கிறது.. அது அப்போது சாதிக்கிறது என்பதையும் உணர்கிறேன்...

  இருந்தும், மேலேக் குறிப்பிட்டது போன்று தீயோருக்கு நல்லக் குழந்தை பிறந்து வந்து மாற்றமும் நிகழ்கிறது.... அது சுருக்கமாக, அந்த ஆத்மா கொண்டு வந்த கர்மா! அந்த தந்தையின் / தாயின் நல்ல கர்மா இப்படி ஒருப் பிள்ளையப் பெற ஏதுவானது என்பதையும் உணரலாம்... ஜீன்ஸ் தான் காரணம் என்றால் இது எப்படி சாத்தியமாகிறது.

  இவைகள்....எனக்கு சுவையான பகுதி... இவைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க பெரிதும் விரும்புவேன்... அதனால் நீள்கிறது!

  எனது கருத்தை இங்கே பகிர வாய்பளித்தமைக்கு நன்றிகள் ஐயா!

  மலரட்டும் மகத்தானக் கருத்துக்கள்!!!

  ReplyDelete

You can give your comments here