மறுமலர்ச்சிக்கு வழி. (5-1-2013)
எதையும் அழிக்காதீர்கள்.
முதலில், 'எதையும் அழிக்காதீர்கள்' என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு மனித குலத்தை வேண்டுவேன். அழிவுப் பிரச்சாரம் செய்கின்ற சீர்திருத்தவாதிகள் உலகிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை. எதையும் உடைக்காதீர்கள், கீழே இழுக்காதீர்கள்; மாறாக ஆக்குங்கள், முடிந்தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் கையைக் கட்டியபடி, நடப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருங்கள். உதவி செய்ய முடியாவிட்டால் தொந்தரவு செய்யாதீர்கள்........ ஒருவன் எந்த நிலையில் இருக்கிறானோ, அந்த நிலையிலிருந்து அவனை உயர்த்த முயல வேண்டும்.
நீங்களும் நானும் என்ன செய்ய முடியும்? ஒரு குழந்தைக்குக்கூடப் போதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? முடியாது. குழந்தை தனக்குத்தானே போதித்துக் கொள்கிறது.
சக்தியின் ஊற்று -- மக்கள்.
சமுதாயத் தலைமை, அறிவு வலிமை உள்ளவர்களிடமோ, தோல் வலிமை உள்ளவர்களிடமோ, பண வலிமை உள்ளவர்களிடமோ யாரிம் இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் மக்களே. சமுதாயத் தலைவர்கள் எவ்வளவு தூரம் இந்தச் சக்தி மையத்திலிருந்து விலகி நிற்கிறார்களொ, அவ்வளவு தூரம் வலிமை குறைந்து விளங்குவார்கள்..........
சுயநலமே சுயநலமின்மையைக் கற்றுத் தருகின்ற முதல் ஆசிரியர். தன் சொந்த நன்மைகளைப் பாதுகாப்பதற்காகத்தான், சமுதாய நன்மைகளை ஒருவன் முதலில் கவனிக்க ஆரம்பிக்கிறான். சமுதாயத்தின் நலனில்தான் தனி நபரின் நலன் இருக்கிறது. எப்படித்தான் முயன்றாலும் பலரின் ஒத்துழைப்பின்றிப் பல வேலைகள் நடைபெறாது. தற்காப்புகூட இயலாத காரியம் ஆகிவிடும்.
சமுதாயத்தின் வாழ்வில்தான் தனிமனித வாழ்வு அடங்கியுள்ளது. சமுதாயத்தின் இன்பத்தில்தான் தனி மனித இன்பம் அடங்கியுள்ளது. சமுதாய்ம் இல்லாஇட்டால் தனி மனிதன் இருப்பது முடியாது; இது அழியாத உண்மை, இந்த அடித்தளத்தில்தான் உலகமே இயங்குகிறது. எல்லையற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் இன்பத்தில் இன்பம் காண்பதும், அதன் துன்பத்தில் துன்புறுவதுமாக மெள்ள மெள்ள முன்னேறுவதுதான் தனி மனிதனின் ஒரே கடமை.
பாரதத் திருநாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரே!
பாரதத் திருநாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரே! நீங்கள் அமைதியாக உழைத்து வருவதன் காரணமாக அல்லவா பாபிலோனியா, பாரசீகம், அலெக்சாண்டிரியா, கிரீஸ், ரோம், வெனிஸ், ஜினோவா, பாக்தாத், சாமர்கண்ட், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், ஹாலந்து, இங்கிலாந்து ஆகியவைன் ஒன்றன்பின் ஒன்றாக ஆதிக்கமும் வளமும் பெற்று உயர்ந்தன! ஆனால் நீங்கள்? உங்களைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்!...........
உங்கள் முன்னோர்கள் சில தத்துவ நூல்களை எழுதினர்; சில காவியங்களை உருவாக்கினர்; சில கோயில்களையும் கட்டிவைத்தனர் -- அப்பப்பா! இதற்காகத்தான் நீங்கள் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்! விண்ணதிரக் கோஷம் இடுகிறீர்கள்! ஆனால் யார் ரத்தம் சிந்தி உலகின் முன்னேற்றங்கள் அனைத்தையும் உருவாக்கினார்களோ அவர்களின் பெருமையைப் பேச யார் இருக்கிறார்கள்? உலகை வென்றவர்களாகிய மத வீரர்களை போர் வீரர்களை, காவிய வீரர்களை உலகம் கண்டுகொள்கிறது; போற்றிப் பாராட்டுகிறது. ஆனால் எந்த முணுமுணுப்புமின்றி இரவும் பகலும் தங்கள் வீடுகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் நமது தொழிலாளர்களை யாரும் கவனிப்பதில்லை; உற்சாகப் படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் அவர்களை வெறுக்கின்றனர். ஆனாலும் எல்லையற்ற பொறுமையுடனும் அன்புடனும் தளராத ஊக்கத்துடனும் செயல்படுகின்றார்களே. இது வீரம் இல்லையா?
மகத்தான பணி கையில் கிடைத்தால் பலரும் வீரத்தைக் காட்ட முடியும். கைதட்டவும், பாராட்டவும் பலர் இருந்தால் கோழைகூட மகத்தான் தியாகம் செய்யத் தயாராக இருப்பான். கடைந்தெடுத்த சுயநலமியும் பற்றற்றவன் ஆவான். ஆனால் பார்க்கவோ, கேட்கவோ யாரும் இல்லாவிட்டாலும், மிகச்சிறிய வேலைகளில்கூடத் தன்னலமின்மையையும் கடமையுணர்வையும் வெளிப்படுத்துபவன் இருக்கிறானே, அவன் தான் பேறு பெற்றவன். அழுத்தி நசுக்கப்பட்டுக் கிடக்கின்ற பாரத்ததின் உழைக்கும் வர்க்கத்தினரே, நீங்கள் இவ்வாறுதான் செயல்படுகிறீர்கள். உங்களை வணங்குகிறேன்.
நன்றி: சுவாமி விவேகானந்தர் "எனது பாரதம் அமர பாரதம்"
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
(தொடரும்)
1 comment:
உண்மையில் சுவாமி சொல்வது போல அழிப்பதாகச் சொல்வது எல்லாம் வீணான வேறொரு தீமையான வளர்ச்சியையே உண்டு செய்திருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
உண்மையில் இருளென்னும் தீமையை மறைக்க முயல்வது ஒரு முடியாத வீணான செயலே... ஒளியை ஏற்றினால் இருள் தானாக குறைந்து மறைகிறது! இன்னும் சொன்னால்
இருள் என்பதொன்று கூட இல்லை... அது ஒளியளவுக் குறைவு என்பதே உண்மை!!!
இதை சரியாகப் புரிந்துக் கொண்டாலே போதும். தீமையை அழிக்க முயல்வதைவிட நன்மையை வளர்த்தாலே போதும் என்பது அருமையானக் கருத்து.
மகரிஷி பகவான் ஸ்ரீ ரமணரின் கருத்தும் இதுவாகவே இருந்து இருக்கிறது என்பதை அவரின் பல செயல்களில் இருந்து என்னால் உணரமுடிகிறது. எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம் தாம் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் அப்படியே போகட்டும் இருந்தும் அதன் தாற்பரியம் நோக்கம் அது அந்த பேரொளியில் கலைப்பதற்கான (இதனுள்ளே அனைத்தும் அடக்கம்; எது செய்யக் கூடியது மற்றும் கூடாதது என்று) சரியானதொரு வழியாக இருப்பதை உறுதி செய்யட்டும் என்பதை அவர் உணர்த்துகிறார் என்பதாகவே நான் உணர்கிறேன்.
உண்மையைச் சொன்னால் ஞானிகளைத் தவிர யாவரும் நல்லவற்றை தனது சுய நலத்திற்காகவே செய்கிறார்கள். புண்ணியம் என்னும் சுய நலம் பல பொது நலத்திற்கு வித்திடுகிறது. அப்படி அதையும் கூட எதிர் பாராமல் செய்பவர்களே உண்மையில் தன்னை ஒரு ஞானி என்று தானே உணராமல் செயல்படும் மகாத்மாக்களாக உலகில் வலம் வருகிறார்கள் எனலாம்.
சுவாமி சொல்வது போல் நீ மற்றவருக்கு செய்வது என்பது உண்மையில் அது நீ உனக்கே செய்வது என்ற வேதாந்தத்தின் வெளிப்பாடே! எத்தனை எளிமையாக கூறுகிறார். அதில் எத்தனை ஆழமானக் கருத்து ஊடுருவியிருக்கிறது. ஒவ்வொரு உயிரினுக்கும் ஆதாரமான ஆத்மா என்பது ஒன்றே என்பதும் அதன் தத்துவம் அல்லவா!
பாராட்டும், வாழ்த்தும் யாவரையும் ஊக்கு விக்கும் என்கிறார் சுவாமி!
உலகில் உயர்ந்ததற் கெல்லாம் உயர்ந்தது ஒழுக்கம், அந்த ஒழுக்கத்தின் உயிரானது நன்றி யுணர்வு. நன்றியுணர்வு கொண்டவர்களுக்கு அடிமட்டத்தில் கடுமையாக உழைக்கும் சாதாரண மனிதனிடம் தாளாத அன்பும், பரிவும், இரக்கமும், ஏன் ? அவனைப் பற்றிய பெருமிதமும் கூடப் பிறக்கும். அப்படி பிறக்கும் போது அவன் கருணை உள்ளவன் ஆகிறான், கருணை உள்ளவன் மனதிலே கடவுள் உறைகிறார்!
சுவாமியின் நோக்கம் மனிதனை உயர்த்த (ஆன்ம நிலையில்) கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதையும் உணர்கிறேன்.
அருமையானக் கருத்துக்கள், மனிதனாக்கும் மகத்தானது!!
நன்றிகள் ஐயா!
Post a Comment