பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 15, 2013

நம்பிக்கையும் வலிமையும். (16-1-2013)


                             நம்பிக்கையும் வலிமையும். (16-1-2013)

சுவாமி விவேகானந்தர் பேசிய சில முத்தான வரிகளை இப்போது பார்க்கலாம்:--

1. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை -- இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது உங்களியையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, அனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

3. 'இல்லை' என்று ஒரு போதும் சொல்லாதே. 'என்னால் இயலாது' என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

4. நீங்கள் கடவுளின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிசொல்லாகும். ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

5. போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட் படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

6. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றி போதிப்பாயாக.

7. வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் 'சமுத்திரத்தையே குடித்து விடுவேன்', 'எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும்' என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

8. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெரு முழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய். பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.

9. அறியாமை மிக்க, உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.

10. சகோதரா! நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கு இல்லை. நீ அழுவதேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, நீ ஏன் அழ வேண்டும். மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.

11. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். 'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன் மீதே நீ நம்பிக்கை வை. அதுதான் ஒரே வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வைத்தால், எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பது தெரியும். அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று நம்பு. நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.

12. சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டேயிருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.

13. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும், ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதறுத் தயாராக இருக்கின்றன.

14. நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான், உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக. நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.

15. சண்டையிடுவதிலும் குறை சொல்லிக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.

--ooOoo--

2 comments:

  1. ///சகோதரா! நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கு இல்லை. நீ அழுவதேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, நீ ஏன் அழ வேண்டும். மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு./////

    அருமை!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. குழப்பமான மனநிலைக்கு மருந்தாக அமைந்திருகின்றது விவேகானந்தரின் அறிவுரைகள் . நன்றி.

    ReplyDelete

You can give your comments here