பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 6, 2013

சுவாமிஜியின் சிகாகோ பேருரைகள் (1) 7-1-2013.

சுவாமிஜியின் சிகாகோ பேருரைகள் (1) 7-1-2013.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த நானூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மாபெரும் கண்காட்சி ஒன்று அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் வல்லவர்கள் கூடி பல பிரிவுகளாக அந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்படிக் கூட்டப்பட்ட இருபது துறைகளில் சர்வசமயப் பேரவை என்பதும் ஒன்று. சிகாகோ நகரில் சுமார் 4000 பேர் அமரக்கூடிய ஒரு அவையில் இந்த பேரவை நடந்தது. ஆண்டு 1893, செப்டம்பர் 11. இந்த நாளில் காலை 10 மணிக்கு மன்றம் கூடியது. உலகிலுள்ள பெரிய பத்து மதங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்து இதில் கலந்து கொண்டனர். இது பதினேழு நாட்கள் நடந்தன. சுவாமிஜி இதில் ஆறுமுறை பேசினார். வந்திருந்த பிரதிநிதிகளில் சுவாமிஜிக்கு மட்டுமே இத்தனை முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பதிலளிக்கும் வகையில் சுவாஜி பேசிய பேச்சை இப்போது முதல் பகுதியாகப் பார்ப்போம். பலமுறை சுவாமிஜியைத் தலைவர் பேச அழைத்தும் அவர் பேசத் தயங்கிவிட்டுக் கடைசி பேச்சாளரகப் பேசிய பேச்சு இது. அவர் அமெரிக்க நாட்டு மக்களை அழைத்த விதமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது. இனி உரையைப் படியுங்கள்.....

"அமெரிக்க நாட்டு சகோதரிகளே! சகோதரர்களே!!

மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்த உங்களது வரவேற்புக்கு நன்றிகூற இப்போது நான் உங்கள் முன்பாக நிற்கிறேன். என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதை எப்படி வெளியிடுவது என்பதற்கு சொற்கள் வரவில்லை. உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த துறவியர் பாரம்பரியத்தின் பெயரால் உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் அன்னைபோன்ற மூத்த மதத்தின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும், பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள சர்வமத பேச்சாளர்களுள் சிலர் கீழைத்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிமுறைகளை வெறுக்காத பண்பினைப் பற்பல நாடுகளுக்கும் கொண்டுசென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று இங்கே எடுத்துரைத்தார்கள். அவர்களுக்கெல்லாம் எனது நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்துக்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் எனும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பட்டவர்களுக்கு புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியர்கள் இழைத்த கொடுமையால் தங்களது ஆலயம் அழிக்கப்பட்ட அதே ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனதார ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க ஷோராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னமும் பேணிக் காத்து வருகின்ற பெருமைக்குரிய சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒருசில வரிகளை இங்கு, உங்கள் முன்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

'எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடைகளெல்லாம்
இறுதியில் கடலில் சென்றடையும்
பான்மையைப் போன்றுலகோர் பின்பற்றும் தன்மையாலே
பின்பற்றும் நெறிபலவாய், நேர்வழியாய் சென்றும்
வளைந்து வளைந்து செல்வதுபோல் தோன்றினாலும்
பின்னர் முடிவிலே அவைகளெல்லாம்
ஈசன் எந்தை உனை அடையும் எனும் உண்மையினை
தேர்ந்திட்டோம் அதுவே உண்மையன்றோ!'

இதுவரையில் நடந்துள்ள மாநாடுகளில், மிகவும் சிறப்புடையதாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்துக்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்; 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் என்னை அடைய முயலுகிறார்கள், அவை எல்லாம் இறுதியில் என்னையே வந்தடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகத்தை நெடுநாளாக இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன; உலகை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்.

அவற்றுக்கு அழிவு காலம் வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிக்க, மணியொன்று முழங்கியது. அந்த மணியோசைதான் மதவெறிகளுக்கும், வாள்கொண்டும், பேனா முனை கொண்டும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளைஅடைய பல்வேறு வழிகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கப்படும் சாவுமணி என்று நான் திடமாக நம்புகிறேன்.

(தொடரும்)

3 comments:

 1. ////கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த நானூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மாபெரும் கண்காட்சி ஒன்று அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ////

  இந்த விழாவினோடு நடந்த ஒரு சர்வ சமய விழா என்பதை நான் இக்கணம் அறிந்தேன் நன்றி!

  கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தான் எனபது அறிவியல் துறை சார்ந்த கருத்து; அப்படியே இதுவரை நாம் கூறும் கண்டு பிடிப்புகள் யாவும் கூறப் பட்டு வந்துள்ளன.

  (எனது கருத்துப் பரிமாற்றமாக..)

  உண்மையில், அதை ஞான மார்க்கமாக கூற முற்பட்டால் அது அங்கேயே தான் இருந்தது அதைப் படைத்தவன் எப்போதே அங்கே வைத்திருக்கிறான் (அதைத் தான் கண்டுபிடிப்பது என்கிறார்கள்) இதை மேலோட்டமாக பார்த்தால் குதர்க்க வாதமாகத் தோன்றலாம், இருந்தும் இதில் ஒரு உட்கருத்தை மட்டும் இங்கே கூற விரும்புகிறேன்.

  விஞ்ஞானிகள் அறிந்து வெளியிடும் யாவையும், ஏதோ இதுவரை இல்லாத ஒன்றை அவர்கள் உருவாக்கி வெளியிடுவதாகவும், அதற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லாததைப் போலவே பெரும்பாலானோர் புரிந்துக் கொண்டு மெஞ்ஞானத் தில் இருந்து முற்றிலும் வேறானது இந்த விஞ்ஞானம் என்று புரிந்துக் கொள்வதோடு விஞ்ஞானிகள் யாவரும் நாத்திககர்களைப் போலவும் விஞ்ஞானத்தை போற்றுபவன மெஞ்ஞானத்தில் இருந்து வேறு பட்டவன் என்பதாக கற்பனைச் செய்துக் கொள்வதையும் அறியாமை என்பதை கூறவே விளைகிறேன்.

  தாங்களும், இது போன்றக் கருத்துள்ளவர்கள் பரவலாக இருப்பதை அறிவீர்கள். இன்னும் சொன்னால் ஆன்மீக நம்பிக்கை உள்ள இளைஞர்கள் கூட இதிலே தெளிவில்லாமலும் கூட இருக்கிறார்கள்! தாங்கள் அறிவீர்கள்!..கீதையிலே அதைப் பற்றிய தெளிவானக் கருத்தை பகவான் கூறியும் இருக்கிறார்.

  ///பலமுறை சுவாமிஜியைத் தலைவர் பேச அழைத்தும் அவர் பேசத் தயங்கிவிட்டுக் கடைசி பேச்சாளரகப் பேசிய பேச்சு இது. ///
  இந்தக் கருத்து பற்றிய முழு புரிந்துணர்வு எனக்கு வரவில்லை... இருந்தும், நான் யூகிப்பது, அனைவரும் பேசி முடிக்கட்டும் அதன் பின்பு அனைத்தையும் தெரிந்துக் கொண்டு அவர்களின் கர்த்துக்களில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதற்கு இந்து மதம் சரியான பதில் தரும் / தர வேண்டும் என்ற கடமையுணர்வை மனதில் கொண்டு கூட காத்திருந்திருக்கலாம் என்றே!

  நேற்று தினமலரிலும் இது போன்றதொரு வாசகத்தைப் பார்த்தேன், அப்போது எனக்கு த்ளிவாகத் தோன்றவில்லை. இப்போது நான் இப்படி யூகிக்றேன்.

  அருமையானப் பதிவு தொடருங்கள்...

  இந்தப் பதிவுகளின் வழியே சுவாமிஜியின் கருத்துக்கள் இன்னும் என்னைப் போன்றோரை செதுக்கும் என நம்புகிறேன். நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 2. சுவாமிஜியும் தனது தயக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தங்கள் மூலம் அறிகிறேன், அப்படியாயின் நாம் இப்படியும் கொள்ளலாம் என்பதும் எனதுக் கருத்தும் ஐயா!

  சுவாமிஜியே அப்படி எழுதி இருக்கிறார் என்று கூறுகையில் அதை அப்படியே ஏற்க்க வேண்டும் தான் அப்படியாயின் அங்கே அப்படி சொற்பொழிவு செய்தது அந்த நரம்பு தளர்ச்சி கொண்டு தத்தளித்த இதயம் கொண்ட நரேந்திரர் அல்ல அவருள் இருந்த ஆத்மாவே வீறு கொண்டெழுந்து இத்தனை அழகாக பேசி இருக்கிறது என்றே கொள்கிறேன். அன்னை கலைவாணியே அப்படி செய்தும் இருக்கிறாள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆத்மார்த்தமான செயலே அழியாத பேருண்மையை என்றும் நிற்கும். அப்படி பார்க்கையில் சுவாமிஜியின் அந்தப் பேச்சு அவருள் இருந்த உண்மைகளை, அவரின் ஞானத்தை தான் நமக்கு உணர்த்துகிறது. அப்படி தான் நாம் முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காகவே வீரத் துறவியும் கலக்கம் கொண்டதாக தானே இந்த உலகுகிற்கு கூறியும் சென்று இருக்கிறார்கள்.

  மற்றவர்களைப் போல, முன்பே பல நூல்களைப் புரட்டி குறிப்புகளை எடுத்துக் கொண்டும் இவ்வளவு, இதைப் பற்றி, இப்படி பேச வேண்டும் என்று நன்கு யோசித்து வடிகட்டி தரம் நிறம் பிரித்து தயார் செய்து வராதது... சுவாமியின் ஞானமும், ஒளிவு மறைவு இல்லாத உண்மையானப் பேச்சையும், (எப்படி என்றால் பரம ரகசியம் பேசுவதை ஒலி பெருக்கியால் அனைவரும் கேட்க்கச் செய்வதைப் போல்) மறைகளின் உண்மையை, உயர்வை வேறு எந்த கற்பனைக்கும் (இது தயார் செய்து கை தட்டலுக்காக பேசியப் பேச்சு என்பதாக கொள்ளாமல்) இடம் தராமலும் இருக்க இதுவும் இறைவனின் ஏற்பாடே! என்றும் நான் நம்புகிறேன்.
  அருமை, தொடருங்கள்.
  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 3. ///அப்படி தான் நாம் முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காகவே வீரத் துறவியும் கலக்கம் கொண்டதாக தானே இந்த உலகுகிற்கு கூறியும் சென்று இருக்கிறார்கள்.///

  எனது முந்தைய பின்னூட்டத்தில் இந்த வரிகளுக்கு அர்த்தமாக... இவைகள் எதேச்சையாக, இது போன்ற கலக்கம் வந்தது என்று கொள்ளாமல், இறைவனின் ஏற்பாடு என்றேக் கொள்ள வேண்டும் அது அந்த வீர துறவியின் கருத்தில் இருந்தும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் மாறாக சுவாமியே வேண்டுமென்று அப்படி எழுதி இருக்கிறார்கள் என்பதாக நான் குறிப்பிடுவதாக தவறாக வாசிப்பவர் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதை சுவாமிஜி எழுதி இருப்பதால் எனது முதல் பின்னூட்டக் கருத்து போன்ற யூகம் இங்கே அடிபட்டும் போகிறது.

  அருமை!!!

  ReplyDelete

You can give your comments here