பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 2, 2013

பெண்களின் பிரச்சினைகளுக்குக் கல்வியே தீர்வு! (3-1-2013)


                 பெண்களின் பிரச்சினைகளுக்குக் கல்வியே தீர்வு! (3-1-2013)

நம் பெண்களுக்கு முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன. எனினும் கல்வி என்ற மந்திரத்தால் தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை.

முதலில் பெண்களுக்குக் கல்வி அளியுங்கள். பிறகு அவர்களை விட்டுவிடுங்கள். தங்களுக்கு என்னென்ன சீர்திருத்தங்கள் தேவையென்பதை அப்போது அவர்களே கூறுவார்கள்!

இத்தகைய கல்வி பெற்றால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள முடியும். எதற்கெடுத்தாலும் ஒப்பாரி வைப்பதற்குத்தான் அவர்கள் இதுவரை கற்பிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏதாவது ஒன்றானால் போதும், அழத் தொடங்கி விடுவார்கள். வீர உணர்வை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். இந்தக் காலத்தில் தற்காப்பு முறைகளைக்கூட அவர்கள் அறிய வேண்டியுள்ளது. ஜான்சி ராணியின் வீரத்தை எண்ணிப் பாருங்கள்.

தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு பெண்ணும் சுயமாகச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய கல்வியை அவர்களுக்கு அளியுங்கள்.

நமது பெண்களுக்கு ஒரு விஷயத்தைச் சுலபமாகச் சொல்லிக் கொடுக்க முடியும். அது கற்பு நெறி. அது அவர்களின் பாரம்பரிய பண்பு. அதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அதை அவர்களிடம் வேரூன்றச் செய்து, அவர்களிடம் பண்பு நலத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம், அவர்கள் இல்லறத்தில் இருந்தாலும் சரி, திருமணம் செய்யாமல் இருந்தாலும் சரி, கற்பைக் காப்பதற்காக உயிரை வேண்டுமானாலும் விடத் தயங்காதவர்களாகச் செய்ய வேண்டும். ஒரு லட்சியத்திற்காக உயிரைத் தியாகம் செய்வது என்பது சாதாரண வீரமா?

அதனுடன் அவர்களுக்கு நன்மை பயக்கின்ற விஞ்ஞானம் மற்றும் பிற விஷயங்களையும் கற்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நன்மை தரும். இதை அறிந்தால் அவர்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியுடனும் கற்பார்கள்.

நமது நாட்டுப் பெண்கள் மேலை நாட்டுப் பெண்களைப் போன்ற அறிவு பெற வேண்டும்; ஆனால் அதற்காகத் தூய வாழ்வை இழக்க வேண்டும் என்றால் அந்த அறிவு தேவையில்லை.

சீதை - இந்தியர்களின் ஆதர்ச பெண்மணி.

இலட்சிய இந்தியாவின் இலட்சியச் சான்று சீதை. அவள் உண்மையிலேயே வாழ்ந்திருந்தாளா, இந்தக் கதையில் வரலாற்று உண்மை உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி. இலட்சியம் இங்கே உள்ளது - அதுதான் நாம் பார்க்க வேண்டியது.

ஒரு நாடு முழுவதும் ஊடுறுவிப் பாய்ந்து, மக்களின் வாழ்க்கையில் புகுந்து, மக்களினத்தின் இரத்தத்துளி ஒவ்வொன்றிலும் நுழைந்து கிளர்ச்சியூட்டும் சீதை - இலட்சியத்தை, வேறு எந்தப் புராணக் கதையும் சித்தரிக்கவில்லை.

நல்லது என்று கருதக்கூடிய எதற்கும், தூய்மை என்று எண்ணக்கூடிய எதற்கும், புனிதம் என்று பாராட்டக் கூடிய எதற்கும், உயர் பெண் தகைமை என்று பாராட்டக் கூடிய எதற்கும் சீதையின் பெயர் சான்றாகத் திகழ்கிறது. ஒரு பெண்ணை வாழ்த்தும் புரோகிதர், "சீதையைப் போல் இருப்பாயாக!" என்றே வாழ்த்துவார். ஒரு குழந்தைக்கு ஆசி கூறினால் அவர், "சீதையைப் போல் விளங்குவாயாக!" என்று சொல்வார். அவர்கள் அனைவரும் சீதையின் குழந்தைகள்; சீதையைப் போல் திகழ்வதற்கு முயல்கிறார்கள்; பொறுமைக்கு எல்லையாக, துயரின் உருவாக, கற்புக்கரசியாக, மாசிலா இல்லற மங்கையாகச் சீதை காட்சியளிக்கிறாள். ......... சீதை ஓர் உண்மையான இந்திய நாட்டுப் பெண்மணியாக இயல்பாகவே திகழ்ந்தாள்; தனக்குத் தீமை செய்தவர்களுக்கும் அவள் ஒரு போதும் தீமை செய்யவில்லை.

சீதையைப் பற்றி என்ன சொல்வது! உலகம் முழுவதும் உள்ள கடந்த கால இலக்கியங்கள் முழுவதையும் அலசிப் பாருங்கள். அது போலவே எதிர்கால இலக்கியங்களையும் முடிந்தால் ஆராயுங்கள்; இன்னொரு சீதையை நீங்கள் காண முடியாது. இது உறுதி. சீதை இணையற்றவள். இனி அதைப் போல் ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியாது என்னும்படி அவள் படைக்கப்பட்டுள்ளாள். ஒரு வேளை ராமர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இரண்டாவதாக ஒரு சீதை இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான இந்தியப் பெண்மை வார்க்கப்பட வேண்டிய அச்சு அவள். ஏனெனில் பூரணப் பெண்மை என்பதன் இந்திய இலட்சியங்கள் அனைத்தும் அந்த ஒரு சீதையின் வாழ்க்கையிலிருந்தே தோன்றியிருக்கின்றன. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் ஆண், பெண், குழந்தைகள் அனைவரின் வழிபாட்டைப் பெற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள். பெருமைக்குரிய இந்தச் சீதை தூய்மையினும் தூய்மையானவள். பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தவள். துன்ப வாழ்வை ஒரு சிறு முணுமுணுப்பும் இல்லாமல் தாங்கித் துயரப்பட்டவள். அவள் கற்பின் திருவுரு, தூய்மையின் உறைவிடம். அவள்மக்களின் இலட்சியம், தேவர்களின் இலட்சியம். அந்த மகத்தான சீதை நம் தேசிய தேவியாக எப்போதும் நிலைத்து வாழ்வாள்.

சீதையைப் பற்றி அறியாத யாரும் இருக்க மாட்டார்கள். எனவே இங்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நமது புராணங்கள் எல்லாம் மறைந்து போகலாம்; வேதங்கள்கூட அழிந்து போய்விடலாம்; நமது சம்ஸ்கிருத மொழிகூட ஒரேயடியாக அழிந்து போய்விடலாம், ஆனால் இந்த நாட்டில் ஐந்து இந்துக்கள் உயிர் வாழ்ந்தாலும்கூட, அவர்கள் கொச்சை மொழி பேசிக்கொண்டிருந்தாலும்கூட, அங்கு சீதையின் கதை இருக்கவே செய்யும். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவள் நம் இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுறுவி இருக்கிறாள். இந்துக்களான ஆண், பெண் ஒவ்வொருவரின் இரத்தத்திலும் கலந்திருக்கிறாள். நாமெல்லாம் சீதையின் குழந்தைகள். பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை சீதை இலட்சியத்திலிருந்து விலகும்படி செய்தால், அந்த முயற்சிகள் தோல்வியையே தழுவும். அதையே நாம் அனுதினமும் கண்டு வருகிறோம். சீதையின் அடியொற்றிய நம் பெண்கள் வளர வேண்டும். முன்னேற வேண்டும்; அது ஒன்றே வழி.

சீதையை தோற்றுவித்த இனம் -- அவள் கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும் -- உலகிலேயே பெண்களுக்கு இணையற்ற மரியாதை அளிப்பது என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: "எனது பாரதம் அமர பாரதம்" ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை.

(தொடரும்)

1 comment:

Unknown said...

ஆஹா! எத்தனை அருமையாக பறைசாற்றி சென்றுறிருக்கிறார் இந்த மகா ஞானி.

///பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை சீதை இலட்சியத்திலிருந்து விலகும்படி செய்தால், அந்த முயற்சிகள் தோல்வியையே தழுவும். அதையே நாம் அனுதினமும் கண்டு வருகிறோம். சீதையின் அடியொற்றிய நம் பெண்கள் வளர வேண்டும். முன்னேற வேண்டும்; அது ஒன்றே வழி.///

இந்த சத்திய வாக்கு நமது புதிய வேதம். பெண்ணுரிமை, பெண்முன்னேற்றம், பெண்கல்வி என்று மாதர் தம்மை உயர்வு செய்ய இந்த சமூகம் எத்தனை நல்ல மாற்றங்களை செய்தாலும். மேலை நாட்டுப் பெண்களுக்கு நிகரானதொரு சமூக அறிவும் அந்தஸ்தும் பெற்றாலும் இந்தியப் பெண்ணின் லட்ச்சணம் என்பது அது அத சீதாதேவியின் லட்ச்சணம் மாத்திரமே அதை யாரும் மறக்கக் கூடாது, அப்படி அந்த லட்சணம் களையும் போது எல்லாமே குலைந்தும் போகும் என்று ஆணித்தரமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

ஆணும் பெண்ணும் சமமென்று பொது நோக்கு வேண்டி அதனை அடைய உழைக்கும் யாவரும் மனதில் கொள்ள வேண்டிய அவசியமான, அற்புதமானக் கருத்திது. கற்பு நெறியோடு (சுவாமி குறிப்பிடுவது முழுக்க முழுக்க மனது சார்ந்ததே; மனது கற்பு நெறி போற்றினால் உடல் தானாக கற்பு நெறியோடு விளங்கும்). மேலும் சுவாமி கூறுவதும் ஆண், பெண் உறவை மாத்திரமான கற்பு மட்டும் அல்ல, அது வாழ்வியியலில் பெண் கொள்ள வேண்டியக் கொள்கை. வாழ்க்கையில் துணிச்சலோடு அரக்கர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாதக் கொள்கை, இன்பம் அல்ல கணவனின் துன்பமும் சரிபாதி என்று கூடவே வனவாசமும் கொள்ளத் தயாரான துணையைப் போன்று, இந்த சமூகத்தில் ஒரு களங்கப் பட்டவள் ஆகிவிடக் கூடாது என்று எதைச் செய்தாலும் ஒரு முன்னெச்சரிக்கையான செய்கை, கணவனின் கோபத்தையும் அதற்கான சூழலையும் உணர்ந்து அவனின் உட்கருத்துக்கு உடன்படும் உயரிய பண்பு என்று எத்தனையோ கற்பு நிலை இவைகள் யாவும் பாரதி கூறியப் புதுமை பெண்ணிற்கான லட்சணமும் கூட.

அதைவிடுத்து நாங்கள் எல்லாம் புதுமைப் பெண்கள் எங்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது என்று மனம் போன போக்கிலும், உலகம் போகின்ற போக்கிலும் நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டு சென்றால் என்ன ஆகும் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். சுவாமிஜி!

அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன் ஐயா!