பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 10, 2013

இந்து மதம் ..... தொடர்ச்சி (11-1-2013.)


இந்து மதம் ..... தொடர்ச்சி (11-1-2013.)

இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்கு சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலில் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில்தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயற்சி செய்யுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள் அறிய முடியும்.

இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப் படுவதுதான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: "நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் இரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். முயற்சி செய்யுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்."

நான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்பு8கிறான். ஆன்மாவை வாளால் வெட்ட முடியாது. நெருப்பால் எரிக்க முடியாது. நீரால் கரைக்க முடியாது. காற்றால் உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்று எல்லை இல்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். ஜடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது. தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் ஜடத்துடன் கட்டுப்பட்டதாகத் தன்னைக் காண்கின்றது. எனவே தன்னை ஜடமாகவே கருதுகிறது.

சுதந்திரமான, நிறைவான, தூய்மையான் ஆன்மா ஏன் இவ்வாறு ஜடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகிவிடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வர முடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக் கொள்ள முடியும்?

இந்து நேர்மையானவன்; அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர்கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்; "எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், ஜடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்க ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது." உண்மை என்னவோ அதுதான் ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. "எனக்குத் தெரியாது" என்று இந்து கூறுகிறானே, அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது.

ஆகவே, மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்த காலவினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப் படுகிறது. எதிர்காலம் நிகழ் காலத்தால் நிர்ணயிக்கப் படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது; சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரைநிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, "ஆ"வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு நல்வினை தீவினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடும் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?

இதை நினைக்கும்போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இதுதான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: "ஓ அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்கள். அனைத்து இருளையும் அனைத்து மாயையையும் கடந்த ஆதி முழுமுதலை நான் கண்டுவிட்டேன். அவரை அறிந்தால்தான், நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்".

'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!'............ (தொடர்ச்சியை நாளை பார்ப்போம்)

(தொடரும்)

1 comment:

Unknown said...

அருமை! அருமை!! அருமை!!!

ஆவலுடன் அடுத்தப் பதிவை நோக்கியே!

நன்றிகள் ஐயா!