பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம். Part I

                          வரலாறு பேசும் பயணம் 
                  
(திருவையாறு பாரதி இயக்க நண்பர்கள் ஏற்பாடு செய்து தமிழகமெங்கும் பயணம் செய்து வந்த வரலாற்றுச் செய்திகள் அடங்கியது)

       இதுவொரு சுற்றுப் பயண விவரங்கள் அடங்கிய நூல். விடுமுறை நாட்களில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வந்த ஊர்களைப் பற்றிய செய்திகள் அடங்கியது. மகாகவி பாரதியார் “தேசிய கல்வி” எனும் திட்டத்தை “சுதேசமித்திரனில்” தொடர்ந்து நாலைந்து கட்டுரைகளை எழுதினார். அதில் அவர் சொல்லும் கருத்து முதலில் ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். பிறகு பல்வேறு பகுதிகள், நாடுகள் என்று வரலாற்றறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அந்த வகையில் நாம் இருக்கும் பகுதியின் வரலாற்றை முதலில் நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த பயணத்தைத் திருவையாறு பாரதி இயக்கத்தினர் மேற்கொண்டனர். அதன் விவரங்கள்தான் இந்த நூல்.

      திருவையாறு பாரதி இயக்கம் கடந்த ஆண்டு (2016) ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முடிவு செய்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் தொடங்கி 2017 ஜனவரி 26ஆம் தேதி வரை விடுமுறை நாட்களில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதிகளுக்குச் சென்று அந்தந்த இடங்களின் சிறப்புகள் பற்றி உரையாடி அதனைப் பதிவு செய்ய வேண்டுமென்று முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்களில் எல்லாம் பல இடங்களுக்குச் செல்லத் தொடங்கினர். ஒவ்வொரு பயணத்திலும் குறைந்த பட்சமாக ஐந்து பேராகவும், அதிகமாக 65 பேர் கொண்ட குழுவாகவும் அந்தப் பயணங்கள் நடைபெற்றன.

      பாரதி இயக்க உறுப்பினர்களுக்கு பல இடங்கள் ஏற்கனவே பார்த்த இடமாக இருந்திருக்கிறது. புதிதாகப் பார்ப்பவர்களும் இருந்தார்கள். ஏற்கனவே பார்த்தவர்கள் கூட இம்முறை அந்தந்த இடங்களின் சிறப்பினை முதன் முறையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் வடக்கின் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் தெற்கே கன்னியாகுமரி வரையிலும், மேற்கே ஹோசூர், தர்மபுரி ஆகிய இடங்களும் கிழக்கே ராமேஸ்வரம், பூம்புகார், தரங்கம்பாடி, கடலூர், புதுவை ஆகிய இடங்களும் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியது. மேற்சொன்ன தமிழகத்தின் எல்லைகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுவந்த விவரங்களைத் திரும்பிப் பார்க்கின்றபோது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. அந்த இடங்கள், பழவேற்காடு, காஞ்சிபுரம், வேலூர் கோட்டை, செஞ்சிக்கோட்டை, திருவண்ணாமலை, ரமணாசிரமம், திருக்கோயிலூர் ஆசிரமம், கபிலர் குன்று, இடைக்கழிநாடு, சதுரங்கப்பட்டினம், புதுச்சேரி, அரிக்கமேடு, மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், கடலூர் முதுநகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், வீராணம் ஏரி, திருநாரையூர், பூம்புகார், தரங்கம்பாடி, தில்லையாடி, கங்கைகொண்டசோழபுரம், முதல் ரயில் ஓடிய நாகைப்பட்டினம், வேதாரண்யம், அகத்தியம்பள்ளி, புத்தவிஹாரம் உள்ள புஷ்பவனம், கோடியக்கரை, நாகூர், திருவாரூர், கும்பகோணம், மனோரா, ஆவுடையார்கோயில், சித்தன்னவாசல், திருக்கோகர்ணம், குடுமியான்மலை, ராமேஸ்வரம், தனுஷ்கோடிக் கடற்கரை, ராமநாதபுரம், சிவகங்கை, கம்பன் சமாதி அமைந்துள்ள நாட்டரசன்கோட்டை, திருமெய்யம், மதுரை, திண்டுக்கல்கோட்டை, கூடலூர் கண்ணகி ஆலயம், முல்லைப்பெரியார் அணை கட்டிய பென்குவின், சின்னமனூர் பெருமாள் ஆலயம், கீழடி, பிரான்மலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கன்னியாகுமரி, சதுரக்கோட்டை, கருங்குளம், திருநெல்வேலி, அரிகேசநல்லூர், சங்ககிரி கோட்டை, ஈரோடு, ஈரோட்டில் பெரியார் ஈ.வே.ரா.வின் நினைவு இல்லம், பவானி, மேட்டூர் அணை, ராஜாஜி பிறந்த தொரப்பள்ளி, ஹோகேனக்கல், பாப்பாரப்பட்டி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, அதியமான்கோட்டை, நாமக்கல் கோட்டை, திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், திருச்செங்கோடு மலைக் கோயில், டி.கல்லுப்பட்டி குமரப்பா ஆசிரமம், ரஞ்சன்குடிக்கோட்டை, வாலிகண்டபுரம், சாத்தனூர் கல்மரம், திருவெள்ளரை, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி போன்ற மேலும் பல ஊர்களுக்குச் சென்று அந்தந்த இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டு அவற்றை பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.

இந்தப் பயணங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், தெரிந்து கொண்ட செய்திகள் அனைத்துமே மிகவும் அரியதும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுமாகும்.
மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பெருந்தலைவராக இருந்த ராஜாஜி வேதாரண்யத்தில் நடத்திய உப்பு சத்தியாக்கிரக தொண்டர்கள் தஞ்சை மாவட்டத்தில் காலடி வைத்த கோயிலடிக்கு ஆகஸ்ட் 15 அன்று சென்றது முதல் தொடர்ந்து இந்த வரலாற்றுப் பயணம் நடைபெற்றது. அடுத்தபடியாக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நாளான ஆகஸ்ட் 25 வியாழன் அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள ஊத்துக்காடு எனும் ஊருக்குச் சென்றனர். அங்கு காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆலயத்திற்கும், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிவாலயத்துக்கும் சென்று அவ்வூரின் வரலாறு, ஊத்துக்காடு கிருஷ்ணனைப் பாடிய ஊத்துக்காடு வேங்கடகவியின் வரலாறு, அவர் பாடல்கள் ஆகியவைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து இவர்கள் பயணம் ஆகஸ்ட் 28 ஞாயிறு. இடம் திருவையாற்றில் வட கைலாயம், தென் கையாலயம், ஸ்ரீதியாகபிரம்மம் சமாதி ஆகிய இடங்கள். அதன்பின் ஏராளமான இடங்கள் அற்புதமான செய்திகள்.


அப்படிச் சென்ற இடங்களின் முக்கியத்துவத்தையும், அங்கு சென்று பல புதிய செய்திகளை அறிந்து கொண்டதையும் இந்த நூலில் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

To be continued......

No comments: