பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 7

.
                      வரலாறு பேசும் பயணம் பகுதி 7
சித்தன்னவாசல்.

      குடுமியான்மலைக்குக் கிழக்கே சுமார் பத்து கி.மீ தூரத்தில் பழங்கால ஓவியக் கலைக்குச் சான்று கூறும் வகையில் அமைந்துள்ள குகைக்கோயில் இருக்கிறது. அந்த இடத்தைச் சித்தன்னவாசல் என்கின்றனர். அங்கிருந்து மேற்கே கலைநயம் மிக்க ஊர், கொடும்பாளூர் இருக்கிறது. இந்த கொடும்பாளூரில் இருந்த வேளிர்கள் என்பவர்கள்தான் மாமன்னன் ராஜராஜ சோழன் வகையறாக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்திருக்கின்றனர். ஒரு வேளிர் மன்னனின் மகளைத்தான் ராஜராஜன் மணந்தான் எனவும் சொல்கிறார்கள்.

      இந்தப் பகுதிகள் அப்போதைய பாண்டிய நாட்டின் எல்லைக்குள் அமைந்திருந்தன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடங்களை சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், ஹொய்சாளர்கள் எனப் பல அரசர்களால் ஆளப்பட்டது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்த காலத்தில் விஜயநகர மன்னர்கள் பல நவாபுகளுடன் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். 1565ஆம் ஆண்டில் தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் தோல்வி கண்டதால் அந்தப் பேரரசு நலியத் தொடங்கியது. அவர்களால் நியமிக்கப்பட்ட நாயக்க மன்னர்கள் மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய பகுதிகளில் தங்கள் ஆட்சியை அமைத்துக் கொண்டனர். அப்படி இந்தப் பகுதிகளை கி.பி.16, 17 ஆகிய நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களின் ஆட்சி இங்கு நடைபெற்றிருக்கிறது.

      இராமநாதபுரம் மறவர் ராஜ்யத்தை கிழவன் சேதுபதி எனும் புகழ்வாய்ந்த மன்னன் ஆட்சிபுரிந்த காலத்தில் ரகுநாதராய தொண்டைமான் என்பார் திருமயம் பகுதிக்கு அதிபதியாக இருந்து வந்தார். இந்த தொண்டைமானின் சகோதரியை கிழவன் சேதுபதி மணந்து கொண்டதன் காரணமாக புதுக்கோட்டை திருமயம் பகுதிகளைக் கிழவன் சேதுபதி தன் மைத்துனரான ரகுநாதராய தொண்டைமான் என்பவருக்குச் சுதந்திரமாக ஆள்வதற்கு உரிமை வழங்கினார். புதுக்கோட்டை சமஸ்தானம் உருவான வரலாறு இது. பின்னர் 1763இல் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயர்களுக்குக் கட்டுப்பட்ட ராஜ்யமாக இருந்து வந்தது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் 1948ஆம் ஆண்டு வரை தொண்டைமான் அரசர்கள் இந்தப் பகுதிகளை ஆண்டு வந்தனர், பின்னர் இது இந்திய அரசுடன் இணைக்கப்பட்டு திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. 1974 ஜனவரி 14இல் இது தனி மாவட்டமாக ஆகியது.

      சித்தன்னவாசல் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குள் இருக்கிறது. அருகிலுள்ள பெரிய ஊர் என்றால் அது அன்னவாசல் எனும் ஊர்தான். இவ்வூருக்கு அருகில் இருந்ததால் இவ்வூர் சித்தன்னவாசல் என வழங்குகிறது. மேலும் இங்குள்ள காடு, மலைப் பகுதிகளில் பல சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர் அன்னவாசல் என்றழைக்கப்பட்டு பின்னர் அதுவே சித்தன்னவாசல் என வழங்கியதாகவும் சொல்கிறார்கள். இங்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கி.மு. 2ஆம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகள், உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்கள் உள்ள ஒரு குகைக்கோயில் ஆகியவை உண்டு. இங்கு குன்றின் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள குகைக்கு ஏழடிப்பட்டம் என்று பெயர். சைவ சமண மோதலின் காரணமாகவோ அல்லது உலக சந்தடிகளிலிருந்து ஒதுங்கி வாழ நினைத்ததாலோ சமணத் துறவிகள் இந்தக் காட்டுப் பகுதிகளில் குடியேறினார்கள். இங்குள்ள குகையைக் குடைந்து சமணப் படுக்கைகள் மிக வழுவழுப்பான பாறைகளில் அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் உலக சந்தடியிலிருந்து ஒதுங்கி அமைதி தவழும் இடமாக இவ்விடம் இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

      சித்தன்னவாசல் மண்டப ஓவியம் புகழ்பெற்றது. முன்மண்டபத்தின் விதானத்தில் தாமரைத் தடாகம் வரையப்பட்டிருக்கிறது. ஓவியக் கலையின் தொன்மை, பெருமை, அழகு அத்தனையும் இதில் காணலாம். இதில் பசுமையான இலைகள், தாமரை மலர்கள், அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர்நிலையைச் சித்திரமாகக் காணலாம். அந்த தடாகத்தில் மீன்கள் அங்குமிங்குமாக நீந்துவதும், யானைகள் தடாகத்தைக் கலக்கி நீர் அருந்துவதையும், அன்னப்பறவை போன்ற பறவைகள் குஞ்சுகளுடன் இங்கு நீந்துவதையும் காணமுடியும்.

                                   To be continued.......

No comments: