வரலாறு பேசும் பயணம் பகுதி 27
கீழப்பழூர்
கீழப்பழூரிலுள்ள ஆலந்துறையார் ஆலயம்
தஞ்சை அரியலூர் மார்க்கத்திலும், திருச்சி அரியலூர்
வழியிலும் சந்திப்பாக விளங்குவது இந்தக் கீழப்பழுவூர். இங்கே பழமை வாய்ந்த, திருஞானசம்பந்தரால்
பாடப்பட்ட தலமாக விளங்குவது கீழப்பழுவூர். சமீபத்தில் இவ்வாலயத்துக்கு குடமுழுக்கி
நடைபெற்று அழகொழுகக் காட்சி தருகிறது. இந்தப் படத்தில் இருப்பது பழைய தோற்றம்.
அமரர் கல்கி எழுதியுள்ள பொன்னியின் செல்வன் நெடுங்கதையில்
சோழ சக்கரவர்த்திகளுக்கு பக்க பலமாக இருந்து சுந்தர சோழர் காலத்தில் போர்க்களங்கள்
பல கண்டு விழுப்புண் ஏந்தியவர்களாகப் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் எனும்
பாத்திரங்களைப் படைத்திருந்தார். அந்த பழுவேட்டரையர்கள் கற்பனை பாத்திரங்கள் அல்ல.
இந்தப் பகுதியை ஆண்டுகொண்டே தஞ்சை சோழ சாம்ராஜ்யத்துக்கு உறுதுணையாக விளங்கியவர்கள்
இந்த மாவீரர்கள். இவர்கள் இந்தப் பகுதியில் பழுவூர் எனும் பெயரோடு விளங்கும் தங்கள்
நாட்டில் மூன்று சிவாலயங்களைச் சிறப்பாகக் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.
இம்மூன்று ஆலயங்களும் பழுவூர் பிரதேசத்தின் மூன்று
வெவ்வேறு இடங்களில் இன்றும் பழமையும் புதுமையுமாக நம் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றிக்கொண்டு
காட்சியளிக்கின்றன. பழுவூர் மேலப் பழுவூர் என்றும் கீழப்பழுவூர் என்றும் அடையாளம் காணப்படுகிறது.
இவ்வாலயங்களில் ஜமதக்னி முனிவரும் அவருடைய புதல்வரான பரசுராமனும் வழிபட்டதாக தலபுராணங்கள்
கூறுகின்றன.
உறையூர் சோழ சாம்ராஜ்யத்தைன் தலைநகராக இருந்த காலத்தில்
சுற்றுப்புறங்களை ஆண்ட பல குறுநில மன்னர்கள் அவர்களுடன் நட்புறவு பூண்டிருந்தனர். அப்படிப்பட்ட
ஒரு சிற்றரசர்தான் பழுவேட்டரையர். பெரிய பழுவேட்டரையரின் பெயர் அம்பலவாணன் என்பதாம்.
பழுவேட்டரையர் என்பது பட்டப் பெயர். சோழ சாம்ராஜ்யத்துக்கு பணிவிடை செய்த பழுவேட்டரையரின்
பெயர் மறவன் கந்தனார் என்பதாம். இவர் சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு கருவூலக் காப்பாளராகவும்
இருந்திருக்கிறார். அவருடைய மகன் குமரன் மறவன் உத்தமசோழனுக்கு உழைத்திருக்கிறார். உத்தம
சோழன் என்பார் ராஜராஜனுக்கு சித்தப்பா முறை ஆகவேண்டும்.
பழுவேட்டரையர்கள் சோழ மன்னர்களுடன் திருமண உறவு
கொண்டவர்கள். இவர்கள் காலத்தில் இவ்வூர் சிவாலயங்களுக்கு இவர்கள் ஏராளமான கொடைகளை அளித்திருக்கிறார்கள்.
கீழப்பழுவூர் ஆலந்துறையார் ஆலயத்தில் திருஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரப் பதிகத்தில்
இங்கு பூஜைகளைச் செய்து வந்த அர்ச்சகர்கள் சேரநாட்டிலிருந்து வந்தவர்கள் என்கிறார்.
ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர் இங்கு வழிபட்டார் என்பதைப் பார்த்தோமல்லவா? அவர்தான்
சேரநாட்டு மலைப்பிர தேசத்திலிருந்து இந்த கீழப்பழூரில் பூஜைகள் செய்ய இவர்களை அழைத்து
வந்திருக்கலாம் என்கின்றனர்.
கீழப்பழூரிலிருந்து மேற்கில் மேலப்பழூர் 15 கி.மீ
தூரத்தில் இருக்கிறது. இவை சோழர் காலத்தில் பெரும்பழூர் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
மேலப்பழூர் சிவாலயம்
கீழப்பழூர் ஆலயத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து
திருச்சி சாலையில் சுமார் 15 கி.மீ. பயணம் செய்து மேலப்பழூரை அடைந்தனர் பாரதி இயக்கத்தினர்.
அங்கு சாலையின் வலது புறம் வாசல் கேட் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது பழைய தோற்றம்
மாறாத கருங்கல்லால் கட்டப்பட்ட சிவாலயம். அருகிலிருந்த உள்ளூர்காரர் ஒருவர் வந்து ஆலயத்தின்
பொறுப்பாளர் இருக்குமிடம் தனக்குத் தெரியுமென்று சொல்லி இவர்களில் ஒருவரை கூட அழைத்துச்
சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல
அந்த பழமையான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழுவூர் ஆலயத்தைப் பார்க்காமலே சற்று தூரத்தில்
குடமுழுக்கு ஆன நிலையில் அதுவும் பூட்டிக் கிடந்த ஒரு ஆலயத்தைக் கண்டனர். அது மீனாட்சி
சுந்தரேசுவரர் ஆலயம், அதுவும் மூன்றாவது ஆலயம். அங்கும் உள்ளே சென்று தரிசிக்க முடியாமல்
தொடர்ந்து பயணப் பட்டார்கள்.
திருவானைக்கா.
ஜம்புகேச்சரம் என்றும் திருவானைக்கா என்றும் அழைக்கப்படும்
இந்த பிரபலமான ஆலயம் திருச்சி திருவரங்கம் இடையே வலப்புறம் இருக்கிறது. இது பஞ்சபூதத்
தலங்களுள் நீருக்கு உரியத் தலம் அப்புத் தலம் என்பர். சுவாமி ஜம்புகேச்வரர், அம்மை
அகிலாண்டேஸ்வரி. பல கோபுரங்கள் கொண்ட பெரிய ஆலயம். அம்பாளுக்குத் தனி ஆலயம் இடப்புறமாகச்
சென்று வடபுறத்தில் கோயில்கொண்ட அம்மனைக் காணலாம்.
ஜம்புகேஸ்வரத்தின் சில தோற்றங்கள்.
இந்தத் தலம் குறித்த திருநாவுக்கரசரின் தேவாரத்தில்
“துன்பம் இன்றித் துயரின்றி என்றும் நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன்
ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே” என்கிறார். சோழ மன்னர்களால்
கட்டப்பட்டது இந்த ஆலயம். அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞானசக்தி பீடம் எனப்படுகிறது.
மூலத்தானத்தில் ஜம்புகேச்வரர் அமர்ந்திருக்கும்
இடத்துக்கு நேராக வாசல்படி கிடையாது. ஒன்பது துளைகள் உள்ள கல்லால் ஆன பலகணி மட்டுமே
உண்டு. பக்தர்கள் இந்த பலகணி வழியாகத்தான் உள்ளே சுவாமியை தரிசிக்க வேண்டும், உடுப்பியில்
ஜன்னல் வழியாகக் கண்ணனை வழிபடுவதைப் போல. இதன் தத்துவம் மனிதன் உடலிலுள்ள ஒன்பது வாசலையும்
தன்வசப்படுத்திக் கொண்டு இறைவனை வழிபட வேண்டுமென்பதாம்.
சிவாலயங்களில் ஐப்பசி பெளர்ணமி அன்று சுவாமிக்கு
அன்னாபிஷேகம் செய்வார்கள். இங்கு வைகாசி பெளர்ணமியில் நடைபெறுகிறது. கருவறையில் எப்போதும்
நீர் ஊறிக்கொண்டே இருக்கும். (இவர்கள் போனபோது தமிழ்நாடே வறண்டு கிடக்கும்போது சுவாமியின்
கருவறையும் வறண்டே காணப்பட்டது).
கவி காளமேகத்துக்கு கவித்துவத்தை அம்பிகை அகிலாண்டேஸ்வரி
இந்த ஆலயத்தில்தான் கொடுத்ததாக வரலாறு இருக்கிறது. சக்தி உபாசகர் ஒருவர் தனக்கு எல்லா
கல்விச் செல்வங்களும் கிடைக்க வேண்டுமென்பதற்காக அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் கடும்
தவம் இருந்தார். அதே கோயிலில் பணியாற்றிக் கொண்டிருந்த தாசி காளமேகத்துக்கு அன்பிற்குரியவள்.
காளமேகம் அங்கு மடைப்பள்ளியில் சமையல்காரன். ஒருநாள் தாசி அர்த்தஜாமத்துக்கு நாட்டியமாடி
சுவாமியைப் பள்ளியறைக்குக் கொண்டு விட்டபிறகு வந்து காளமேகத்தை எழுப்பி அழைத்துப் போவதாகச்
சொல்லி அங்கிருந்த மண்டபத்தில் தூங்கச் சொல்லிவிட்டுப் போனாள்.
அங்கு தவமிருந்த உபாசகரின் தவத்தை மெச்சி அன்னை
அகிலாண்டேஸ்வரி ஒரு சிறு பெண் உருவம் தாங்கி வாயில் தாம்பூலத்துடன் மெல்ல அவரைத் தட்டி
எழுப்பி அவர் வாயைத் திறக்கச் சொன்னாள். அவர் தன் தவம் கலைந்த கோபத்துடன் ஏன்? எதற்கு>
என்றார். சிறு பெண்ணாக வந்த அகிலாண்டேஸ்வரி தன் வாயிலுள்ள தாம்பூலத்தைத் துப்ப வேண்டுமென்றாள்.
அவருக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. சீ! போ! வந்து விட்டாள் தாம்பூலம் துப்ப இடம்
தேடி என்று அம்பாளை விரட்டிவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.
அப்போது பக்கத்தில் மண்டபத்தில் படுத்து நன்றாக
குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த காளமேகத்தைத் தட்டி எழுப்பினாள் அம்பாள். அவனும்
எழுந்து தூக்கக் கலக்கத்தில் அன்னையைப் பார்த்தான். அவள் வாயைத் திற, என் தாம்பூலத்தை
உன் வாயில் துப்ப வேண்டுமென்றதும், அவன் வாயை அகலத் திறந்து அண்டாவைப் போல் காட்ட,
அன்னை அவன் வாயில் தாம்பூலத்தைத் துப்ப, அந்த விநாடி அவன் தெய்வீக கவிஞனானான்.
திருவானைக்கா தரிசனம் முடிந்தபின் பாரதி இயக்கத்தார்
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருட பள்ளி கொண்டிருக்கும்
பரந்தாமன் அரங்கநாதனைக் காணச் சென்றனர். அங்கு பெரிய வரிசை. அதில் நின்று பெருமாளை
தரிசனம் செய்ய எத்தனை காலம் பிடிக்குமோ என்று விசாரித்ததில், அது தாயார் சந்நிதிக்கான
வரிசையாம். பெருமாள் அன்று பங்குனி உத்தரம் என்பதால் ஆலயத்துக்கு வெளியே எங்கோ போயிருக்கிறார்
என்று சொன்னார்கள். சரி பெருமாளையும் தரிசிக்க முடியவில்லை, தாயாரைக் காணவோ ஏராளமான
கூட்டம், நேரமோ வெயில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று அருகில் விற்ற ஆலய பிரசாதம்
புளியோதரையை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விட்டனர்.
டாக்டர்
டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்துக்கு அருகில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிகள்:
1930இல் ராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து
புறப்பட்டு நடந்தே சென்று பதினைந்து நாட்களுக்குப் பிறகு வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளி
உப்பளத்தில் உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்து சிறை சென்றார்கள் அல்லவா? அந்த சத்தியாக்கிரகிகள்
ஊர்வலம் திருச்சியில் புறப்பட்ட இடம், திருச்சி கன்டோன்மெண்ட் எனப்படும் புதிய பேருந்து
நிலையம் எதிரில் இருந்த ராஜாஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
அவர்களின் இல்லத்திலிருந்து தான். அந்த இல்லத்தின் வாசலில் சுதந்திர இந்தியாவில் இரு
முறை நினைவு ஸ்தூபிகளை அமைத்திருக்கிறார்கள். டாக்டர் ராஜன் திருஈங்கோய்மலைக்குப் போய்
அங்கேயே காலமாகி விட்டாலும், அவருடைய பரம்பரையினர் இருந்த வீடு இங்கே இருக்கிறது. இப்போது
அஞ்சல் துறை அலுவலகமாக இருக்கும் அந்த இல்லத்தின் வாசலில் இரு ஸ்தூபிகள் விளம்பர போர்டுகளுடன்
சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு காணப்படுகின்றது. அங்கு சென்று அந்த இடத்தைப்
பார்த்துவிட்டு உப்பு சத்தியாக்கிரகம் பற்றி சிறிது விவாதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
To be continued...........
No comments:
Post a Comment