பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 22

                               வரலாறு பேசும் பயணம் பகுதி 22
ரஞ்சன்குடிக்கோட்டை 

சாத்தனூரிலிருந்து மெல்ல திருச்சி சென்னை பெரும்பாதையை அடைந்தனர். பெரம்பலூரில் ஒரு உணவு விடுதி பயணிகளின் பசியை ஆற்றி வழியனுப்பி வைத்தது. அங்கிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சில கல் தூரம் பயணித்ததும் சாலையின் இடதுபுறம் சில நூறு மீட்டர் தூரத்தில் ஒரு கோட்டை கண்களில் பட்டது. அது என்ன கோட்டை என்று விசாரித்தபோது, அதுதான் ரஞ்சன்குடிக் கோட்டை என்பது தெரியவந்தது. சாலையின் ஓரிடத்தில் திரும்பிய சிறிய சாலையொன்றில் அந்தக் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் விசாரித்ததில் சாலைக்கும் வட புறம் ஒரு வழி இருப்பதாகவும், அதில் போனால் கோட்டைக்குள் செல்ல முடியும் என்றனர்.
ஒரு வழியாக ஊரார் காட்டிய பாதை வழியாக கோட்டையினுள் வந்தார்கள். அந்தக் கோட்டை திப்பு சுல்தான் தன் பெரும் படைகளுடன் தங்கி இருந்த இடமாம். அடே அப்பா! கோட்டைதான் எத்தனை பிரம்மாண்டம். தூரத்திலிருந்து பார்த்தால் சின்ன கோட்டை போல காட்சியளித்தது நெருங்க நெருங்க எத்தனை பெரிய பிரம்மாண்ட கோட்டை என்பது புரிந்தது.

ரஞ்சன்குடிக்கோட்டை எனும் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் “சந்திரலேகா” படத்தில் வில்லனாக நடித்த வில்லன் நடிகர் ரஞ்சன் பெயர்தான் நினைவுக்கு வந்தது. அதில் எம்.கே.ராதா கதாநாயகன், அவருடைய தம்பி ரஞ்சன். அரண்மனை வாசலில் எம்.கே.ராதா தன் தம்பியை அன்போடு வா தம்பி என்பார், தம்பியோ எதிரியாகக் கருதிய அண்ணனை “இந்தா வாங்கிக்கொள்” என்று தன் குத்துவாளை அண்ணன் மீது வீசுவார். அருமையான காட்சி இப்போது நினைவுக்கு வருகிறது. ஆனால் அந்த ரஞ்சனுக்கும் இந்தக் கோட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது பின்புதான் தெரிந்தது.

இந்த ரஞ்சன்குடிக்கோட்டை என்பது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூருக்கும் வடக்கில் 22 கி.மீ. தூரத்தில் சாலையை யொட்டி அமைந்துள்ளது. இந்த கோட்டையின் வரலாறு என்னவென்று விசாரித்தபோது தெரியவந்த செய்திகள் பிரமிக்கத் தக்கவை. 1751இல் இங்கு நடந்த ஒரு யுத்தம், பிரிட்டிஷ்காரர்களின் கிழக்கிந்திய படைகளின் ஆதரவோடு ஆற்காட்டு நவாப் முகமது அலிக்குக்கும், எதிரணியில் ஆற்காட்டு நவாபின் எதிரியும் ஆற்காட்டு வம்சத்தைச் சேர்ந்தவனுமான சந்தாசாஹேபுக்கும் நடந்த யுத்தம். இதில் சந்தா சாஹேபை பிரெஞ்சுக்காரர்கள் ஆதரித்தனர். இரு இந்தியர்கள் ஆற்காட்டு நவாப், எதிரில் இன்னொரு ஆற்காட்டு நவாப் உறவினர் இவ்விருவரையும் ஆதரித்து இரு ஐரோப்பிய படைகள் ஒன்று கிழக்கிந்திய கம்பெனி இன்னொன்று பிரான்ஸ் நாட்டுப் படை. இந்த யுத்தத்தில் ஆங்கிலேயர் ஆதரவுடனான முகமதி அலிக்கு வெற்றி கிடைத்தது. சந்தா சாஹேபும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் தோல்வி.

ரஞ்சன்குடிக்கோட்டை நீண்ட சதுர வடிவில் அமைந்தது. அதனைச் சுற்றி பெரிய ஆழமான அகழி. கோட்டை முதல் சுற்று, பாதுகாப்புடனான இரண்டாம் அடுக்கு, அதன் மேல் அதிக பாதுகாப்புடனான உயர்ந்த அடுக்கு என்று மிக அருமையான அமைப்பு. பாறைகளை வெட்டி எடுத்து அடுக்கி வலுவாகக் கட்டப்பட்ட கோட்டை. கோட்டியினுள் ஒரு அரண்மனை இருக்கிறது. குடியிருப்பு வீடுகளும் நிறைய இருக்கின்றன. போர் என்று வந்தால் பதுங்கிக் கொள்ள சுரங்க அமைப்புகள் நிறைய உண்டு. கோட்டியின் அடிவாரத்திலிருந்து மேல் பகுதிக்குச் செல்ல மலையைக் குடைந்து ஒரு சுரங்கப் பாதையும் உண்டு. இந்தக் கோட்டை இப்போது இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இது ஒரு சுற்றுலா இடம்.
இந்தக் கோட்டையை நஞ்சன்குடிக்கோட்டை என்றும் சிலர் சொல்கிறார்கள். இதனுள் ஒரு சிவாலயமும், அனுமன் கோயிலொன்றும் இருக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபின் ஆணையின்படி அவ்வூர் ஜாகீர்தார் கட்டியதாகத் தெரிகிறது. இங்குதான் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும், இரு பக்கங்களிலும் இரு இந்திய அரசர்கள் ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர் இருந்து போரிட்டனர். போர் நடந்த இடம் வலிகொண்டா என்றாலும் அது இந்தக் கோட்டையில்தான் மையம் கொண்டிருந்தது. வலிகொண்டா என்பதுதான் இப்போது வாலிகண்டபுரம் என்றழைக்கப்படுகிறது, இது மிக அருகில் இருக்கிறது. 1752இல் பிரெஞ்சுப் படைகள் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் சரணாகதி அடைந்தனர். பிரெஞ்சுப் படையின் தளபதியாக இருந்தவர் டியாட்டீல் என்பவர்.

மிக உயர்ந்த செங்குத்தான பாறைகள் வழியே இந்த கோட்டையின் உச்சியைத் தொடப் புறப்பட்ட பாரதி இயக்கத்தினர் ஓரிருவர் தவிர அனைவரும் மேல் பகுதி வரை சென்று அங்கிருந்து நீர்தேக்கத்தையும் அரண்மனையையும் பார்த்துத் திரும்பினர். வழிநெடுக இவர்களுக்கு இடையூறு செய்யாமல் ஏராளமான வானரங்கள் திரிந்து கொண்டிருந்தபோதும் சற்று ஏமாந்தால் கையில் இருக்கும் உணவுப் பொருட்களை இவர்களைக் கேட்காமலே பறித்துச் சென்று கொண்டிருந்தன.

வாலிகண்டபுரம்.   

பெரம்பலூருக்கும் ரஞ்சன்குடிக்கோட்டையும் இடையில், நெடுஞ்சாலைக்கு மிக அருகில் ஒரு கோபுரம் தெரியும் அதுதான் வாலிகண்டபுரம் சிவாலயம். வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்த இடம் இது. வேப்பந்தட்டை தாலுகாவின் எல்லைக்குள் அமைந்தது. சோழ மன்னர்கள் காலத்தில் இது சோழநாட்டினுள் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. ராமாயண காப்பியத்தோடும் தொடர்புடையதாகச் சொல்லப்படும் ஒரு புராதன நகரம். வாலி, சுக்ரீவன் இவர்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியுமல்லவா. அதில் வாலி சிவனை வழிபட்ட தலம் இது. அது குறித்தே இங்குள்ள அழகிய சிவாலயத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் வாலாம்பிகா. ராஜராஜசோழன் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இந்த ஆலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. அழகிய இந்த கோயிலின் அமைப்பும், நந்தி மண்டபமும் நந்தியும், அருகில் வைக்கப்பட்டிருந்த சேதமுற்ற பழைய நந்தியும் நம்மைக் கவர்கின்றன.


வாலிகண்டபுரத்திலிருந்து பெரம்பலூர் சென்று அங்கிருந்து துறையூர் செல்லும் சாலையில் நெடுந்தூரம் பயணம் செய்து, வழியில் பெருமாள் மலை எனுமிடத்தில் மலைமீது பாதை அமைத்து ஆலயம் கொண்ட அந்தப் பகுதியின் அழகையெல்லாம் கண்டுகொண்டு அனைவரும் திருவெள்ளறை எனும் கிராமத்தைச் சென்றடைந்தனர்.

                            To be continued.............

No comments: