பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 8

                    வரலாறு பேசும் பயணம் பகுதி 8

கங்கைகொண்ட சோழபுரம். 
      பாரதி இயக்கத்தார் மேற்கொண்ட மற்றொரு நீண்டதூர பயணம். இதில் ஒரு பேருந்து நிறைய அறுபதுக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். திருவையாற்றில் அதிகாலை புறப்பட்டு கீழப்பழூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் வழியாக முதல் பார்வை கங்கைகொண்டசோளீச்சரம். இது அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர். இராஜராஜனின் குமாரர் ராஜேந்திரன் உருவாக்கிய தலைநகரம் இது. தஞ்சை ராஜராஜேச்சரம் போலவே அவருடைய மகன் ராஜேந்திரன் தன்னுடைய புதிய தலைநகரில் ஒரு ஆலயம் அமைத்தார். கிட்டத்தட்ட தந்தை உருவாக்கிய கோயிலைவிட பல விதங்களிலும் பெரிதாகக் கட்ட நினைத்த இவரிடம் அமைச்சர்கள், பெரியோர்கள் தந்தையைக் காட்டிலும் தான் பெரியவன் எனும் நினைப்பில் அனைத்தையும் பெரிதாகக் கட்டுவது சரியல்ல என்றதும், உயரமாக கட்டவிருந்த ஆலய் விமானத்தைக் குறுக்கி சிறிதாக உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. இந்த ஆலயம் இப்போது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.

      இவ்வூருக்குப் பல பெயர்கள் உண்டு. அவை கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் ஆகியவை. இங்கு இவ்வாலயம் எழுப்பப்படுவதற்கு முன்பு இது வன்னியபுரம், வன்னியபுரி என்று வழங்கப்பட்டதாம். இப்பகுதியில் வன்னி மரங்கள் அதிகமாக இருந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். ராஜேந்திர சோழன் தன் இளம் வயதிலிருந்தே போர்க்களங்கள் பலவற்றைக் கண்டவர். மேலை, கீழச்சாளுக்கியர் களையும், ஈழம், பாண்டிய நாடு இவற்றை வென்றபின் 1023இல் கங்கை கொண்டசோழ புரத்தை உருவாக்கினார். இவ்வாலயத்திலுள்ள ஈசர் கங்கைகொண்ட சோழீஸ்வரர் என்று பெயர். அருகில் ஒரு மாபெரும் ஏரியை வெட்டி அதில் முதலில் கங்கைநீரை வார்த்து பின்னர் கொள்ளிடம் நீரினால் நிரப்பினார் என்கின்றனர். கடல்போன்ற அந்த ஏரியை இப்போதும் பார்க்கலாம், இடையில் இப்போது ஒரு சாலை அமைக்கப் பட்டிருக்கிறது. கொள்ளிடத்தில் வந்த பெருவெள்ளம் இவ்வூரை அழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

      இந்த கோயிலின் அமைப்பு தஞ்சை பெருவுடையார் ஆலயம் போலவே அமைந்தது. ஆலய வளாகத்தினுள் பல சிறு சந்நிதிகள் இருந்ததாகவும், காலப்போக்கில் அவை அழிந்து போனதாகவும் தெரிகிறது.


      இங்குள்ள சிவலிங்கம் மிகப்பெரியது. நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்த பின்னர் லோயர் அணைக்கட்டு கட்டப்பட்டது. அங்கு கருங்கற்கள் கிடையாது என்பதால் இவ்வாலயத்தின் மதிற்சுவரிலிருந்து கருங்கற்கள் எடுக்கப்பட்டு அணை கட்ட பயன்படுத்தினார்கள். ஆகையால் இவ்வாலயத்தின் மதிற்சுவர்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. இவ்வாலயத்தின் நந்தி சுதை வேலையால் கட்டப்பட்டது. இங்கு மேலைப் பிரகாரத்தில் சிங்கமுகக் கேணி என்று ஒன்றிருக்கிறது. கோயிலுக்கு வெளியில் மேற்புறம் காணப்படும் ஏரியின் நீர் குழாய் மூலமாக ஆலயத்தினுள் வந்து இந்த சிங்க முகக் கிணற்றுக்கு வருகிறது. இது கங்கை நீரால் நிரம்பியதால் கங்கை நீர் அபிஷேகம் ஈசருக்கு நடைபெறுகிறது. இங்கு மூலவர் சிவலிங்கம் 13 அடி உயரம். ஆவுடையாரின் சுற்றளவு 60 அடி, ஒரே கல்லால் ஆனது. விமானம் 160 அடி. இவ்வாலயத்தின் உட்பக்தி கோடையிலும் சில்லென்று இருக்குமாம். இதற்குக் காரணம் மூலவரின் அடியில் சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கோடியில் உட்புறம் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் உட்புறம் கதகதப்பாகவும் இருக்குமாம். வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பாரதி இயக்கத்தினர் தங்கள் முன்னோர்களின் சாதனைகளைக் கண்டு வியந்து போற்றினார்கள்.

                                   To be continued..............

No comments: