பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 13, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 17

                         வரலாறு பேசும் பயணம் பகுதி 17
ராமநாதபுரம்.        
                     ராமநாதபுரம் அரண்மனை ராமலிங்க விலாசம்

          பேய்க்கரும்பை விட்டு நீங்கி ராமநாதபுரம் நோக்கிப் புறப்பாடு. இந்த ஊரின் பெயரில் இருந்தே இது ராமாயணத்துடன் தொடர்புடைய ஊர் என்பது விளங்கும். பல நூற்றாண்டுகள் பழமையான இடம். இங்கு வட இந்தியாவிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து ராமநாத சுவாமியைத் தரிசிக்கிறார்கள். இவ்வூரின் வரலாறு மிகப் பழமை வாய்ந்தது. மறவர்கள் பூமி என்றழைக்கப்படும் ராமநாதபுரத்தில் புகழ் பரப்பிய சேதுபதிகள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பவும், அவர் கொழும்புவிலிருந்து திரும்பும்போது அவரது காலடி தன் தலையில் பட வேண்டுமென்று வணங்கிய பாஸ்கர சேதுபதி வாழ்ந்த ஊர். 12, 13ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியை சுல்தான் சையது இப்ராகிம் ஷாகீத் என்பவர் எரவாடியில் இருந்து ஆண்டதாகவும் வரலாறு இருக்கிறது. தமிழ் வரலாற்றுக் காலத்தில் இது பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கிறது. ராஜேந்திர சோழன் காலத்தில் சோழர்களிடமும், பிறகு நாயக்க வம்சத்தாரிடமும், அதன்பின் மராட்டிய அரசர்களும் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். 1795இல் இங்கிருந்த முத்துராமலிங்க சேதுபதியை பதவி இறக்கம் செய்துவிட்டு பிரிட்டிஷார் ஆட்சியைப் பறித்துக் கொண்டார்கள். இவர்கள் வம்சத்தின் ஆட்சி தொடர்ச்சியாக 1801இல் மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கையை ஜமீன்தாராக இருந்து ஆட்சி புரிந்தார். வேலு நாச்சியாரின் வீர வரலாறும் சிவகங்கையில் அரங்கேறியது. மருது சகோதரர்களின் சாகசங்களைக் கண்ட பூமி இது. பிரிட்டிஷ், பிரெஞ்சு இடையே நடந்த போரினால் இந்தப் பகுதிகளும் ஏற்ற இறக்கங்களைக் கண்டது மருது சகோதரர்கள் தூக்கில் இடப்பட்டதும், பின்னர் ஆங்கிலேயர் சார்புடையவர்கள் ஜமீன்தாராக ஆனதும் திப்பு சுல்தானின் தலையீடும் இந்தப் பகுதி வரலாற்றோடு கலந்து இருப்பது. 1892இல் ஜமீன்தார் அமைப்பு நீக்கப்படும் வரை இதெல்லாம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. 

          ராமநாதபுரத்தில் மன்னரின் அரண்மனை இப்போது காட்சியகமாக மாறியிருக்கிறது. பழமையின் ஒருசில நினைவுச் சின்னங்களை இங்கே பார்க்கலாம். முழுமையான ராமநாதபுரம் சமஸ்தானத்தின் எச்சங்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஓரளவு பழமையின் சின்னங்களைப் பார்த்த திருப்தியோடுதான் திரும்ப வேண்டியிருந்தது.

         சிவகங்கையில் அரண்மனையொன்று இருக்கிறது. அதன் நுழைவாயில் அழகாக ஊரின் நடுவே இருக்கிறது. உள்ளே பரந்து விரிந்த திறந்த வெளி. அங்கிருந்து அரண்மனைக்குள் நுழைய ஒரு சிறிய வாசல். அங்கிருந்தோர் அங்கு இப்போது உள்ளே போக முடியாது என்று தடுத்துவிட்டதால் சிவகங்கையின் சிறப்பை உள்ளே நுழைந்து பார்க்க முடியாமல் திரும்ப நேர்ந்தது.

நாட்டரசன்கோட்டை.    
                                         கம்பர் சமாதி

           நாட்டரசன்கோட்டை எனும் இவ்வூர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களால் புகழ் பெறாவிட்டாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழநாட்டை விட்டு நீங்கி இங்கு வந்து தங்கியிருந்த காரணத்தாலும், அவருடைய சமாதி இங்கிருப்பதாலும், ஆண்டுதோறும் காரைக்குடிக் கம்பன் கழகத்தார் கம்பன் விழாவின் ஒரு பகுதியை இங்கு வந்து கம்பன் சமாதியில் நடத்துவதால் இந்த இடம் புகழ்பெற்று விட்டது. நாட்டரசங்கோட்டை என்பது சிறிய கிராமம் அதிலும் கம்பன் சமாதி இருக்குமிடம் புதர் பூண்டுகளைத் தாண்டி ஒதுக்குப்புறமாக அமைதியாக இருக்கும் ஓரிடம். இங்கு ஒரு காவலாளி, நினைவிடத்தில் தங்கி வருபவர்களுக்குச் சமாதியைத் திறந்து காட்டுகிறார். வாழ்க! அவர் தயவால் கவிச்சக்கரவர்த்தி உறங்கும் அவர் சமாதியை வணங்க முடிந்தது.

காளையார்கோயில்    

          இந்த கிராமம் சிறியது என்றாலும் இங்கு அமைந்திருக்கும் சிவாலயம் பெரியது. பெரிய மருது, சின்ன மருது காலத்தில் கட்டப்பட்ட கோயில். மருது சகோதரர்களை கிராமப் புறக் கலைஞர்கள் இன்றும் கூட நினைவு வைத்து அவருடைய வீரத்தைப் போற்றிப் பாடுகின்ற பாடல்களைக் கேட்கலாம். “மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த மருது பாண்டியர் பாருங்கடி” எனும் கும்மிப் பாட்டை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  சிவகங்கை ஜமீனுக்குச் சொந்தமானது இது.

          அரண்மனையிலுள்ள காளீஸ்வரர் ஆலயத்து மூலவரின் பெயரால் இந்த காளையார்கோயில் எனும் பெயர் உண்டானது. சங்க காலத்தில் இவ்வூருக்கு “கானப்பேரெயில்” என்ற பெயர் இருந்திருக்கிறது. இவ்வூர் ஆலயத்தின் சிவபெருமானை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியிருக்கிறார். அவர்தான் இவரை காளை என்று அழைக்கிறார், இவ்வூரின் பெயரும் அதனையொட்டியே காளையார் என்று வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வூருக்குப் பெருமை சேர்ந்த்தவர்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்ட முத்து வடுகநாதர், ஆங்கிலேயரை எதிர்த்துத் தூக்கில் மாண்ட மருது சகோதரர்கள் ஆகியோராவர். 

திருமயம்.      
   
          இவ்வூரின் சரியான பெயர் திருமெய்யம். அது மருவி திருமயம் ஆயிற்று. இங்கு கோட்டையில் அமைந்திருக்கும் ஆலயத்தில் கொலுவிருக்கும் பெருமாள் மெய்யர் என்று பெயர். இவ்வூர் புதுக்கோட்டைக்கும் காரைக்குடிக்குக் இடையில் இருக்கிறது. இங்குள்ள கோட்டையும், அதனுள் அமைந்திருக்கும் அழகான ஆலயமும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருழுக்கும் இடங்களாகும். இவ்வூரில் சாலையில் அமைந்திருக்கும் பைரவர் கோயில் இவ்வூர் வழியாக வாகனங்களில் போவோர் வருவோர் கும்பிடும் பிரபலமான கோயில். இங்குள்ள கோட்டை ராமநாதபுரத்தை ஆண்ட பிரபலமான மறவர் குல மன்னன் கிழவன் சேதுபதியால் 1687இல் கட்டப்பட்டது. ராமநாதபுரம் மன்னர்களின் பிரதிநிதிகள்தான் திருமயத்தையும் நிர்வகித்து வந்தார்கள்.

             இவ்வூருக்குப் பெருமை சேர்க்கும் ஆலயங்களில் கோயில் கொண்டிருக்கும் சத்யவாகீஸ்வரர், சத்தியமூர்த்தி பெருமாள் ஆகியோர் பிரபலமான மூர்த்தங்கள். முதல் சிவன், இரண்டாவது பெருமாள். இவை அடுத்தடுத்து உள்ள கோயில்கள். மலையில் அடிவாரத்தில் அமைந்தவை இவை. இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. நமது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டுவரும், நாவலருமான தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் இது. பெருந்தலைவர் காமராஜரின் குருவான தீரர் சத்தியமூர்த்திக்கு இவ்வூரில் ஒரு சில நிறுவப்பட்டிருக்கிறது.


                                   To be continued...........     

1 comment:

Yarlpavanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.