சிறுகதை
தஞ்சை வெ.கோபாலன்
“பிரகலாத
சரித்திரம் இன்னிக்கு, அவசியம் வந்துடுங்கோ” என்று குரல் கொடுத்தார் மெலட்டூர் மகாலிங்கம்.
தஞ்சாவூர் ஜில்லாவில் மெலட்டூர் நாயக்கர் காலத்திலிருந்து “பாகவத மேளா” எனும் தெலுங்கு
நாட்டிய நாடகத்துக்குப் பெயர் பெற்ற ஊர். அந்த ஊரில் நடைபெறும் பாகவத மேளா எனும் நாட்டிய
நாடகம் நரசிம்ம ஜெயந்தியை யொட்டி இருவேறு குழுக்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட
குழுவொன்றின் தலைவர்தான் மகாலிங்கம்.
இந்த
மெலட்டூரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சுவையானவை. தஞ்சையை விஜயநகர சாம்ராஜ்யாதிபதிகளின்
வாரிசுகளாக இருந்து சில நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் சேவப்ப
நாயக்கர் என்பவர்தான் முதல் நாயக்க மன்னர். இவர் விஜயநகர பேரரசின் சக்கரவர்த்தியும்
கிருஷ்ணதேவராயரின் தம்பியுமான அச்சுத தேவராயரின் மைத்துனியின் கணவன். இவரைத் தொடர்ந்து
அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்று நாயக்க மன்னர்கள் தஞ்சாவூர்
ராஜ்ஜியத்தை 130 வருஷ காலம் ஆண்டு வந்தார்கள்.
இவர்களுடைய
காலத்தில் இசை, நாட்டியம் ஆகிய கலைகள் சிறந்து விளங்கின. தெலுங்கு தேசத்திலிருந்து
பற்பல கலை வல்லுனர்கள் தஞ்சையை நாடி வந்தனர். அப்படி வந்தவர்களில் இந்த பாகவத மேளா
எனும் கலையைத் தெலுங்கில் ஆடிப்பாடி நடித்து வந்தவர்கள் இவர்களது பரம்பரையினர். இந்தக்
கலைஞர்களுக் கென்று இரகுநாத நாயக்கர் உருவாக்கிய ஊர்தான் மெலட்டூர்.
இந்த
ஊரிலிருந்து இப்போது வேலை செய்யவென்று வெளியூர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்றுவிட்ட
இளைஞர்களெல்லாம் கூட இந்த பாகவத மேளா சமயத்தில் இந்த ஊருக்கு வந்து ‘நரசிம்ம ஜயந்தி”
அன்று நடக்கும் பிரஹலாத சரித்திரத்தில் நடிப்பார்கள். வெளியூர் ரசிகர்கள் எல்லோரும்
கூட இரவு பத்து மணிக்கு மெலட்டூரில் கூடிவிட்டால், நாட்டிய நாடகம் முடிந்து ஊர் திரும்ப
விடியற்காலை ஆகிவிடும்.
உள்ளூரில்
மட்டும் நடந்து வந்த இந்த நாட்டிய நாடகத்தை வெளியூர்களிலும் நடத்த வேண்டுமென்று பலர்
விரும்பியதால் இந்தக் குழு சென்னை, திருப்பதி, தஞ்சை போன்ற ஊர்களுக்கும் சென்று நாடகங்களை
நடத்தினர்.
திருப்பதியில்
வெங்கடேசப் பெருமான் சந்நிதியில் நடைபெற்ற பாகவத மேளாவுக்கு பெரிய வரவேற்பு காணப்பட்டது.
உடனே சென்னையில் இருந்த ஒரு சபாவின் செயலாளர் தங்கள் சபாவில் நாடகத்தை நடத்த விருப்பம்
தெரிவித்தார். உடனே பாகவத மேளா குழு சென்னைக்குச் சென்றது.
சென்னை
சபாவில் நாடகம் நடக்கவிருந்த நாள். மாலை ஐந்து மணியிலிருந்தே மக்கட் கூட்டம் அவை நிரம்ப
இருந்தது. சரியாக ஆறு மணிக்கு நாடகம் தொடங்கியது. இதுபோன்ற நாடகங்களை அதிகம் பார்த்திராத
சென்னைக் கூட்டம் இதனை பெரிதும் ரசித்துப் பாராட்டியது.
கர்நாடக
சங்கீதக் கச்சேரி, வாத்திய இசைக் கச்சேரி, பரத நாட்டியம் என்று மட்டுமே இயங்கி வந்த
சபாக்கள் அவ்வப்போது அமைச்சூர் நாடகங்களையும் அரங்கேற்றுவது வழக்கம். ஆனால் இதுபோன்ற
வரலாற்று சிறப்பு மிக்க நாட்டிய நாடகம் இதுவே முதல் தடவை என்பதால் பெண்கள் கூட்டம்
நிரம்பி இருந்தது. பாகவத மேளா நாடகங்கள் தெலுங்கு மொழியில் தான் இருக்கும். பாடல்களும்,
வசனங்களும் கூட தெலுங்கு மொழியில் தான்.
நாடகத்தில்
ஒரு பெண் வேஷம் தரித்தவர் மிக அழகாக பரதநாட்டியம் ஆடிக்கொண்டு ஒரு காட்சியில் தோன்றினார்.
அந்தப் பெண் பார்க்க மிக அழகாகவும், இளமையாகவும் இருந்ததோடு, பரத முத்திரைகளை மிகச்
சிறப்பாகச் செய்ததன் மூலம், அவள் பரதநாட்டியம் பயின்றவள் என்பதை நிரூபித்தன.
நாடகம்
பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாமி அருகிலுருந்த மற்றொரு மாமியிடம் சொன்னாள், “இந்தப்
பெண் பார்க்க எத்தனை லட்சணமாக இருக்கிறாள். என் புள்ளைக்கு நாலு வருஷமா பெண் பார்த்துக்
கொண்டிருக்கேன். ஒண்ணுமே சரியா வரல. தனக்கு வரப்போற பெண்டாட்டி பரதநாட்டியம் ஆடத் தெரிஞ்சவளா
இருக்கணும்கறான் அவன். இந்தப் பெண்ணைப் பார்த்தா எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு, இவளை
என் மகனுக்குப் பெண் கேட்டால் என்ன” என்றாள்.
உடனிருந்த
அந்த மாமியும் சம்மதம் தெரிவித்து, நாடகம் முடிந்ததும் நாடகக் குழுத் தலைவரிடம் பேசி,
அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடிவு செய்தனர்.
நாடகம்
ஒருவழியாக ஒன்பதரை மணிக்கு முடிந்தது. நடிகர்கள் தங்கள் மேக்கப்பைக் கலைத்துக் கொண்டிருந்தனர்.
நாடகக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் அங்கு கூடிநின்று அன்றைய நிகழ்ச்சி எப்படி நடந்தது
என்பது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
மாமி
மெதுவாக அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் சென்று “இந்த நாடகத்தில நாட்டியம் ஆடி நடிச்சாளே,
அந்தப் பெண்ணைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு வந்திருக்கேன்” என்றாள்.
அவர்
முகத்தில் சிரிப்பு. அவர் சொன்னார், “அந்தப் பெண்ணா? அவளோடு அப்பாவும் இங்கேதான் இருக்கார்,
அவரைக் கூப்பிடறேன்” என்று சொல்லிவிட்டு “சுப்புணி! சுப்புணி!! என்று யாரையோ அழைத்தார்.
அப்போது
சுப்புணி என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அங்கு வந்து சேர்ந்தார். “என்ன விஷயம்?”
என்று அழைத்தவரிடம் கேட்டார்.
“இதோ
பாரு. இந்த மாமிக்கு சில விவரம் தெரியணுமாம். நம்ம நாடகத்துல நடிச்சாளே, அந்தப் பெண்ணைப்
பத்தி தெரிஞ்சுக்கணுமாம்” என்று சொல்லிவிட்டு கேலியாக கண்களைச் சிமிட்டினார்.
சுப்பிரமணியமும்
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டே, அந்த அம்மையாரிடம்,
“என்ன மாமி!’ அந்தப் பெண்ணைப் பற்றி என்ன தெரியணும்?” என்றார்.
“என்
பையனுக்கு நான் வரன் பார்த்துண்டு இருக்கேன். பரதநாட்டியம் ஆடத் தெரிஞ்ச பொண்ணுதான்
வேணுமாம். இந்தப் பொண்ணு ரொம்ப நன்னா நாட்டியம் ஆடறா, ரொம்ப அழகாவும் இருக்கா. இவளை
என் பையனுக்குப் பார்க்கலாம்னு நெனைக்கறேன். நீங்க அவளுக்கு அப்பாவா? ” என்றாள் மாமி.
இது
ஏதோ விபரீதமான கேஸ் என்பதைப் புரிந்து கொண்டு நடக்கும் கேலிக்கூத்தை இன்னும் சிறிது
தொடர எண்ணிய சுப்பிரமணியன் அந்த மாமியிடம் “நான் அவளோடு அப்பாதான்” என்றார்.
“அப்போ
நல்லதா போச்சு. நீங்க அவளோட ஜாதகம் இருந்தா கொடுங்கோ. என் பிள்ளை ஜாதகத்தோடு பொருத்தம்
பார்த்துட்டு சரியா இருந்தா கலியாணம் செஞ்சுடலாம்” என்றாள்.
சுப்பிரமணியனுக்கு
தர்ம சங்கடம். “மாமி! அவள் இல்ல, அவன். என்னோடு மகன் அவன். பெண் வேஷம் போட்டு நடிச்சான்”
என்றார்.
மாமிக்கு
அவர் பதில் திருப்தியாக இல்லை. கோபம் வேறு வந்துவிட்டது. மாமி சொன்னாள். “ஏதோ என் புள்ளைக்கு
கல்யாணம் தடைபட்டுண்டே போறதேன்னு இந்தப் பொண்ணப் பார்க்கலாம்னா நீங்க கிராக்கி பண்ணிக்கிறேளே.
அவள் பொண்ணா, பையனான்னு கூடவா எனக்குத் தெரியாது. எத்தனை நன்னா அவ ஆடினா? பொண்ணும்
நல்ல அழகு” என்று விடாமல் பேசினாள் மாமி.
சுப்பிரமணியனுக்கு
என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. அருகிலிருந்த பெரியவரை அழைத்து, “நீங்க சொல்லுங்கோ,
இந்த மாமி என் பையனை பொண்ணுன்னு நெனச்சுண்டு ஜாதகம் கேட்கறா?” என்றார்.
பெரியவர்
வாயிலிருந்த வெற்றிலைப் பாக்கை மென்றுகொண்டே, “மாமி அவன் இவரோட பையன் தான். சந்தேகமே
வேண்டாம்” என்றார்.
மாமி
சொன்னாள் “இஷ்டமில்லைன்னா, இல்லைன்னு சொல்லிட்டுப் போங்களேன். எதுக்கு பொண்ணைப் போய்
பையன்னு சொல்லி பொய்யெல்லாம் சொல்லிண்டு” என்று கோபப்பட்டுக் கொண்டு திரும்பிப் போக
எத்தனித்தாள்.
அப்போது
சுப்பிரமணியன் குறுக்கிட்டு, “மாமி கொஞ்சம் இருங்கோ, இதோ மேக்கப் கலைச்சுட்டு அவனே
வருவான். நீங்களே பார்த்து முடிவு பண்ணிக்குங்கோ” என்றார்.
அப்போது
மேக்கப் கலைத்துவிட்டு தலையில் இருந்த விக்கையும் எடுத்துவிட்டு ஆணுடையில் வந்த ஆனந்தைப்
பார்த்ததும், மாமிக்கு வியப்பு. “ஐயயோ, இவன் பையனா? அப்படியே பொண்ணு மாதிரி நல்ல அழகா
இருந்தானே. நன்னாவும் பரதம் ஆடினானே” என்றாள்.
“ஆமாம்
மாமி. அவன் ஒரு எஞ்ஜினீயர். எங்க பாகவத மேளாவுல பெண்கள் யாரும் நடிக்கறது இல்லை. பெண்
வேஷம் எல்லாம் ஆண்களே போடறதுதான். அதோட இல்லாமல் அவன் பரத நாட்டியத்தை முறையா கத்துண்டு
ஆடறவன். நான்கூட பாகவத மேளா நாடகங்கள்ள பெண் வேஷம் போடறவன் தான். அது தெரியாம நீங்க
அவனைப் பொண்ணுன்னு நெனச்சு கேட்டேள். நாங்க சொல்றதையும் நீங்க நம்பல” என்றார்.
“அப்படியா!
இது தெரியாமத்தான் நான் போய் பொண்ணு கேட்டேனா? ஆனா, சும்மா சொல்லக்கூடாது, பொண்ணுகூட
தோத்தா, இவன் அப்படி நன்னா நடிச்சான், அற்புதமா நாட்டியம் ஆடினான். நீங்க கொடுத்து
வச்சவர்” என்று சுப்பிரமணியத்தை வாழ்த்தி விட்டுப் புறப்பட்டுச் சென்றாள் மாமி.
1 comment:
அருமையான கதை
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
Post a Comment