பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 4

வரலாறு பேசும் பயணம் பகுதி 4       
       
திருவையாறு ஊரும் படித்துறைகளும்.

      திருவையாற்றில்தான் பாரதி இயக்கம் இயங்குகிறது என்றாலும், இந்த ஊரின் சிறப்பு, வரலாற்று நிகழ்வுகள் இவைகளைப் பற்றியெல்லாம் அனைவரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியாது. ஆகையால் நமது ஊரையே முதலில் நன்றாகத் தெரிந்து கொள்வோம் எனும் ஆர்வத்துடன் பாரதி இயக்க நண்பர்கள் முதலில் ஊரைச் சுற்றத் தொடங்கினர். திருவையாறு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அங்கு கோயில் கொண்டிருக்கும் ஐயாறப்பர்தான். அவருடைய ஆலயம் மிகச் சிறப்பானது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. அகப்பேய் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின் லிங்கம் மண்ணால் ஆனது. அதற்கு அபிஷேகம் கிடையாது புனுகு சட்டம் மட்டுமே. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்வார்கள். பின்னாளில் இந்த ஆலயம் பலரால் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பல மண்டபங்கள் கோபுரங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதன் வெளிப்பிரகாரத்தில் இரண்டு ஆலயங்களைக் காணலாம். தென்புற பிரகாரத்தில் காணப்படுவது தென் கயிலாயம். வடக்கிலுள்ளது வட கயிலாயம். இவை இரண்டும் ராஜராஜசோழனின் மனைவியாலும், ராஜேந்திர சோழன் மனைவியாலும் அவர்கள் அளித்த பொன்கொண்டு எழுப்பப்பட்டது என்கின்றனர். மிக அழகான சிவாலயங்கள் இவை. தென் கயிலாயத்தில் அப்பர் சுவாமிக்கு ஒரு சந்நிதி உண்டு. ஆடிமாதம் அமாவாசையன்று அப்பருக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி தந்த நிகழ்ச்சி இப்போதும் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. அப்பருக்கு கயிலைக் காட்சி கொடுத்த பொய்கை மேட்டுத் தெருவில் காணலாம். இவற்றைக் கண்டு மகிழ்ந்த பின் காவிரி ஆற்றுக்குச் சென்றனர் பாரதி இயக்கத்தினர்.

      காவிரியில்தான் தண்ணீரே இல்லையே, காவிரிக்கு எதற்காக என்ற ஐயப்பாடு எழத்தான் செய்யும்.. அங்கு தண்ணீர் இல்லாவிட்டால் என்ன, ஏராளமான படித்துறைகள் இருக்கின்றனவே. எத்தனை தெரியுமா? இருபத்திநான்கு படித்துறைகள். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா, ஆம்! அவை அத்தனையும் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும், பின்னர் வந்த மராட்டிய மன்னர்களுமாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். தஞ்சை தலைநகரம் என்றாலும், அவர்களுடைய கலைநகரமாகத் திருவையாறு இருந்து வந்திருக்கிறதல்லவா? ராணிகளுக்கென்று ஒரு படித்துறை, இப்படி அந்த படித்துறை வரலாற்றைச் சற்று பாருங்கள்.

      ஆறு என்று ஒன்றிருந்தால் அங்கு மக்கள் இறங்கி நீராடுவதற்கு வசதியாகப் படித்துறைகள் இருக்கத்தான் செய்யும் இல்லையா? அப்படியிருக்கையில் திருவையாறு காவிரியாற்றில் உள்ள படித்துறைகள் பற்றி மட்டும் என்ன சிறப்பு எனும் கேள்வி எழுகிறது. இது குறித்த சில சிறப்பான செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்த காலத்தில் தென்னிந்தியா முழுவதும் விஜயநகர பேரரசர்களின் ஆளுகைக்குட் பட்டிருந்தது என்பது வரலாறு படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படி அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இடங்களுக்கெல்லாம் அவர்கள் சார்பில் ஆட்சிபுரிய நாயக்க மன்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். செஞ்சி, தஞ்சை, திருச்சி, மதுரை ஆகியவிடங்களில் நாயக்க மன்னர்கள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள். கிருஷ்ணதேவராயர் காலமான பிறகு அவருடைய தம்பி அச்சுததேவ ராயர் விஜயநகர மன்னராக பதவி வகித்தார். அவர் காலத்தில் மதுரையில் விஸ்வநாத நாயக்கர் பதவியில் இருந்தார். தஞ்சைக்கு அச்சுததேவ ராயரின் மைத்துனியின் கணவர் சேவப்ப நாயக்கர் என்பார் மன்னராக அனுப்பப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரையும் சேர்த்து நான்கு நாயக்க மன்னர்கள் சுமார் 130 வருஷங்கள் இந்தப் பகுதியை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார்கள். அவர்கள் காலம் கலைகளுக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். கலைகளின் மறுமலர்ச்சி, ஆலயங்கள் புனரமைக்கப்பட்டது, கடவுள் பக்தியோடு மன்னர்கள் ஆட்சி புரிந்தபோதும் இறை பணிகளில் தங்களை முழுமையாக் அர்ப்பணித்துக் கொண்டார்கள் தஞ்சை நாயக்கர்கள். அவர்கள் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய நால்வர் மட்டுமே.

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குட்பட்ட சிருங்கேரியில் வேதங்களை நன்கு பயின்று தேர்ச்சி பெற்ற கோவிந்த தீட்சிதர் என்பார் தஞ்சாவூருக்கு அமைச்சராக அனுப்பப்பட்டார். அவர் அச்சுதப்ப நாயக்கர், அவர் குமாரர் ரகுநாத நாயக்கர் ஆகியோர் ஆட்சியில் அமைச்சராக இருந்து பல சாதனைகளைப் புரிந்தவர். பல ஆலயங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. படையெடுப்புகளால் சேதமுற்றிருந்த பல ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. காவிரி நதியில் இறங்கி மக்கள் நீராடுவதற்காக அவர் பல படித்துறைகளைத் திருவையாறு தொடங்கி மயிலாடுதுறை எனும் மாயவரம் வரை இவர் கட்டி வைத்தார். கும்பகோணம் மகாமகக் குளம், கும்பகோணம் ராமசாமி கோயில், பட்டீஸ்வரம் கோயில் இப்படி இவர் உருவாக்கிய ஆலயங்கள் பலப்பல.

எந்தவொரு சாம்ராஜ்யத்தின் தலைநகரமும் ஒரு ஆற்றின் கரையில் அமைந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் பெயர் சொல்லுமளவுக்கு எந்தவொரு பெரிய நதிக்கரையில் அமையாததால் இங்குருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருந்த திருவையாற்றை இவர்கள் கலை பண்பாட்டு விஷயங்களுக்காக தத்து எடுத்திருந்தனர். பல பெரிய கலைஞர்கள், பண்டிதர்கள் போன்றவர்கள் இங்குதான் குடியமர்த்தப் பட்டனர். அந்த வகையில்தான் தியாகராஜ சுவாமிகளின் முன்னோர்களும் இந்த ஊரில் வசிக்கத் தொடங்கினர்.

கோவிந்த தீட்சதர் திருவையாற்றில் இருபத்தி நான்கு படித்துறைகளைக் காவிரி நதியில் கட்டி வைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவை இன்றைக்கும் கூட திருவையாற்று காவிரியில் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு முன்பாக அதன் பெயர்களை இங்கே பார்த்து விடலாம். அவை: (10 சாமராயர் படித்துறை (2) பதினைந்து மண்டபப்படித்துறை (3) சீதாபாயி அம்மைப் படித்துறை (4) ஓடத்துறைப் படித்துறை (5) ஹுசூர் அரண்மனைப் படித்துறை (6) சக்கோஜி (ஏக்கோஜி) படித்துறை (7) சிங்கப்பூர் குமார(சாமி)ப் படித்துறை (8) புஷ்ய மண்டபப் படித்துறை (9) மோட்சப் படித்துறை (10) கல்யாணமகால் படித்துறை (11) ராணி கல்யாணிபாய் படித்துறை  (12) கைலாய வாகனப் படித்துறை (13) திருமஞ்சனப் படித்துறை (14) எசுந்தரப்பா படித்துறை (15) ராணி பூமாபாய் அம்மைப் படித்துறை (16) முத்து நாயக்கன் படித்துறை (17) ராஜா படித்துறை (18) விட்டோபா கோயில் படித்துறை (19) செவ்வாய்க்கிழமைப் படித்துறை (20) ராமப்பா அக்ரஹாரம் படித்துறை (21) சேதுபாவா சுவாமி படித்துறை (22) தியாகராஜர் சமாதி படித்துறை (23) மயானப் படித்துறை (24) ஐராவணப் படித்துறை. ஆகியவைகளாகும்.

இந்தப் படித்துறிகள் பற்றிய விரிவான விவங்களை திருவையாறு பாரதி இயக்கம் சார்பில் வழக்கறிஞர் திரு நா.பிரேமசாயி அவர்கள் தேடித் தொகுத்துத் தயாரித்து வருகிறார். விரைவில் இது குறித்த விரிவான செய்திகளை ஒரு நூல் வடிவில் பாரதி இயக்கம் வெளியிடும். வரலாற்றின் ஏடுகளில் காணப்படும் இதுபோன்ற பல அரிய செய்திகள் வெளிவராமல் போய்விடுமானால் நமக்குத்தான் அது பேரிழப்பாக இருக்கும். நம் முன்னோர்கள் சாதித்துவிட்டுச் சென்ற எச்சத்தையாவது நாம் காப்பாற்றவும், அதன் பெயர்களையாவது தெரிந்து கொள்ளவும் இந்தப் பணி பயன்படும்.


திருவையாற்றுப் பயணத்தின் நிறைவில் காவிரி ஆற்று மணலில் அனைவரும் உட்கார்ந்து மென்மையான காற்றை அனுபவித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

                       To be Continued............

No comments: