பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 13, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 14

                      வரலாறு பேசும் பயணம் பகுதி 14
வடலூர் 
        
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள். 

       சேத்தியத்தோப்பிலிருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் வந்து வடலூர் எனும் இடத்தை அடைந்தார்கள். இங்குதான் அருட்பெரும்ஜோதி ராமலிங்க அடிகலார் எனும் வள்ளலார் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார்.. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலிக்கு அருகிலுள்ளது இவ்வூர். சிதம்பரத்திலிருந்து 25 கி.மீ.வடக்கிலுள்ளது. இவ்வூரின் மேற்கில் விருத்தாச்சலம், வடக்கில் பன்ருட்டி, கிழக்கில் கடலூர், தெற்கில் சிதம்பரம் என்று பல தலங்களுக்கு மத்தியில் உள்ள ஊர் இது.

      ராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கையும் அவருடைய திருவருட்பாவும் மக்கள் மத்தியில் மிகவும் பெருமை பெற்றவை. இங்கு சத்ய ஞான சபை எனும் அருட்பெரும் ஜோதியின் இருப்பிடமும், தர்மசாலை எனும் இடம் வள்ளலார் அன்னதானம் செய்த பெருமைக்குரிய இடமும், மேட்டுக்குப்பம் எனுமிடத்தில் சித்தி வளாகம் எனுமிடத்தில் அவர் சித்தி அடைந்த இடமும், தீஞ்சுவை நீரோடை எனும் இனிய நீரோடையும் உள்ள இடங்களைக் கண்டு தரிசனம் செய்தனர்.

      இவை தவிர கருங்குழி எனும் ஊரில் இவர் தண்ணீரில் விளக்கை எரித்த இடம் இருக்கிறது. அருகிலுள்ள மருதூர் தான் இவர் பிறந்த இடம். வடலூரில் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க சத்ய ஞான சபையை 1872இல் தொடங்கினார். இவருடைய இந்த சன்மார்க்கம் இன்றும் பலராலும் பின்பற்றப்படுகின்றது. இவர் ஜோதியில் ஐக்கியமான இடம் இன்றும் புனிதத் தலமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

புதுச்சேரி

   அரிக்கமேடு

      வடலூரிலிருந்து கடலூர் வழியாக புதுச்சேரி நோக்கிப் பயணம். நெடுந்தூரப் பயணம் என்பதால் வழிநெடுக பசுமை நிறைந்த அழகிய காட்சிகள் மனங்களைக் கவர்வ்தாக அமைந்திருந்தன. கடலூர் பழையது, புதியது என இரு பிரிவுகள் இருந்தாலும், பழைய கடலூர் வழியாகவே புதுச்சேரி நோக்கிச் சென்றனர் சுற்றுலாக் குழுவினர். புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்ததுமே ஒரு மாறுபாடு உணரத் தலைப்பட்டார்கள். அங்கு திருவையாறு ஊராட்சித் துணைத் தலைவர் திரு குமணன் அனைவரையும் அழைத்துச் சென்று தன் இளைய தம்பி வீட்டில் உணவருந்தச் செய்தார். புதுச்சேரி ஒழுங்கு முறையோடு நகரமைப்பு உள்ள ஊர். கடற்கரையும் ஊரும் ஒன்றோடு ஒன்று உறவாடிக் கொண்டிருக்கும் அழகு. கடலுக்குள் நெடுந்தூரம் செல்லும் மரப்பாலம். கடலையொட்டி அமைந்த சுவரில் அமர்ந்து காற்று வாங்கும் உள்ளூர் வாசிகள். அரசியல் தலைவர் ஒருவரின் பால் கடையில் ஏடுடன் கூடிய பால் அருந்துதல், வழியில் மகாத்மா காந்தியின் மிகப்பெரிய சிலை இவற்றையெல்லாம் கண்டுகொண்டு மகான் அரவிந்தர் ஆசிரமம் சென்றடைந்தனர். அங்கு அமைதி, தியானம், ஒழுங்கு, கட்டுப்பாடு இவை அனைத்தும் காண மனம் மகிழ்ச்சியடைந்தது. அங்கு அரவிந்தர், அன்னை சமாதியின் முன்பு அமர்ந்து கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் ஏராளமான பக்தர்கள். அன்னை முன்பு மாடியிலிருந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பாரம், அந்த அழகு இவற்றையெல்லாம் கண்டு வெளியே வந்தால் அங்கு கூப்பிடு தூரத்தில் மணக்குள விநாயகர் ஆலயம். நமக்கெல்லாம் விநாயகரைத் தெரியும் எல்லா ஊர்களிலும் இருப்பவர்தான் தனித்து மிகச் சிறிய ஆலயம் பிள்ளையார் கோயில் என்பர். ஆனால் இங்கு இந்த மணக்குள விநாயகரைப் பரபலப்படுத்தியவர் மகாகவி பாரதியார். விநாயகர் அகவல் எனும் அவருடைய பாடல் அனைவரும் பாடி மகிழ்வர். “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று தொடங்கி அவர் மணக்குள விநாயகரிடம் என்னவெல்லாம் கேட்கிறார். கனக்கும் செல்வம், நூறு வயது என்று அடுக்கிக் கொண்டே போவதை யார் மறக்க முடியும்? அருமையான சூழ்நிலை. அனைத்தையும் கண்டு களித்த பாரதி இயக்கத்தார் அரிக்கமேடு எனும் புராதன புதைபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.

      ஊரிலிருந்து சற்றுத் தள்ளி ஒரு உப்பனாற்றுக் கரையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் முன்பு பல பண்டைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டனவாம். அங்கிருந்த தொல்பொருட்துறை ஊழியர் ஒருவர் விளக்கிச் சொன்னார். காடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருப்பதாலோ என்னவோ, கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே மனிதத் தலைகள் தென்பட்டன. அவர்கள் அங்கே என்ன செய்வார்களோ நாமறியோம். அரிக்கமேடு என்று பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் படித்த அந்த இடம் இப்போது நம் கண் எதிரே, ஆனால் மன நிறைவு தராத ஏதோவொரு வருத்தம் தோய அங்கிருந்து நகர நேர்ந்தது. இதே போன்ற இடம் வேறு எங்கேனும் இருந்திருந்தால் இந்நேரம் அது சுற்றுலாத் தலமாக அல்லவா மலர்ந்திருக்கும். ஊம்...

      அரிக்கமேடு விடை கொடுக்க பயணம் திரும்ப ஆரம்பித்தது. வழியில் பரங்கிப்பேட்டை. ஆம்! வெள்ளைக்காரன் வாயில் நுழையாத இந்தப் பெயரை அவன் போர்ட்டோ நோவோ என்றான். அண்ணாமலை பல்கலைக்கழகம் இங்கு கடல்சார் ஆய்வுக்கூடமொன்றை நடத்தி வருகிறார்கள். கடல்சார் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு இருக்கிறது. கடற்கரையோரமாக அமைந்த இந்த இடமும் அமைதியின் இருப்பிடம்தான். இவ்வூருக்கு மேற்சொன்ன பெயர்களைத் தவிர மகமூதுபந்தர் என்றும் முத்து கிருஷ்னபுரி என்றும் வேறு பெயர்களும் இருக்கிறதாம். போர்ட்டோ நோவோ என்பது துறைமுகம். போர்த்துகீசியர்கள் வந்து இறங்கி பின்னர் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் இது. கிழக்கிந்திய கம்பெனியார் காலத்தில் இது ஒரு பிரபலமான துறைமுகமாக இருந்திருக்கிறது. நாம் பெருமைப்படக்கூடிய இன்னொரு செய்தி ஆசியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை இங்குதான் தொடங்கப்பட்டதாம்.

      1781ஆம் வருஷம் மைசூரின் ஹைதர் அலி கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து இங்கு போரிட்டிருக்கிறார். அதன் நினைவாக ஒரு கொடிக்கம்பமும், கல்லறைகளும் இன்றும் நமக்கு வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இருட்டு நேரத்தில் உள்ளூர் (படித்த பட்டதாரி) இளைஞர்கள் சிலர் பாரதி இயக்க நண்பர்களை அங்கு கொண்டு சென்று காட்டினர். இன்னொரு செய்தி. நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி இமாலயம் சென்று பாபாவை தரிசிக்கிறார் என்கிறார்கள் அல்லவா? அந்த பாபா பிறந்த ஊர் இதுதானாம். அவருக்கு இங்கே ஒரு ஆலயம் இருக்கிறது. இரவு நேரத்தில் அந்த ஆலயத்தையும் சென்று காண முடிந்தது.

கடலூரும் ராபர்ட் கிளைவும்.


       அந்தக் காலத்தில் வரலாறு படிக்கும் போது ராபர்ட் கிளைவ் பற்றிய பாடம் ஒன்று உண்டு. அதில் ராபர்ட் கிளைவ் ஒரு முரட்டுத்தனமான இளைஞன். ஒருவருக்கும் அடங்காத அந்த இளைஞனை கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு அனுப்பியது. இங்கு வந்து தமிழ் நாட்டில் கடலூரில் பக்கிங்காம் கால்வாய் இருக்கிறதல்லவா அதன் கரையில் ஒரு மாளிகைக் கட்டிக்கொண்டு, மெல்ல மெல்ல சென்னையை, வேலூரை என்று ஒவ்வொரு இடமாகக் கபளீகரம் செய்து கொண்டு வந்து தமிழ் மண்ணில் ஆங்கிலேயர் கம்பெனியார் ஆட்சியை நிறுவியவன் அந்த கிளைவ். இங்கிலாந்தில் எதற்கும் பயனற்றவன் என்று தள்ளிவிடப்பட்ட அந்த முரட்டு இளைஞன் இந்தியாவை தன்வசப்படுத்திக் கொள்ள முடிந்தது நமக்கு பெருமையா அவமானமா சிந்திதாக வேண்டும். கடலூரில் அந்த கிளைவின் மாளிகையையும் அதையொட்டி ஓடுகின்ற பக்கிங்ஹாம் கால்வாயையும் அதன் மேல் அமைந்துள்ள வாராவதியில் நின்று பார்த்து ரசிக்க முடிந்தது.
                                  To be continued..........

No comments: