பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 23

                        வரலாறு பேசும் பயணம் பகுதி 23
திருவெள்ளறை.   

மெல்ல மெல்ல இருளில் மூழ்கும் அந்த முன்னிரவு நேரத்தில் திருவெள்ளறை எனும் சோறூழியர்கள் எனும் சோழியர்கள் நிர்வகிக்கும் இந்தப் பெருமாள் ஆலயத்தைச் சென்றடைந்தனர். மிகப் பழமையான உயர்ந்த நுழைவாயில் கொண்ட ஆலய முன்கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இரவு நேர இனிமையான காற்று, ஒளி பரவிய பிரகாரம், அமைதியாக பெருமாளைச் சேவித்துவிட்டு வரும் பக்தர்கள் கூட்டம் அந்த அனுபவமே இனிமையானது. நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கத்தை யடுத்து முக்கியமான வைணவத் தலம் இந்தப் பகுதியில் இதுதான் என்று கருதப்படுகிறது. இவ்வூருக்கு ஸ்வேதகிரி, ஆதிவெள்ளறை, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் என்றெல்லாம் பெயர்கள் உண்டாம்.

இந்தக் கோயிலுக்கும் ஒரு பழமையான வரலாறு உண்டு. சிபிச்சக்கரவர்த்தி இந்தப் பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த காலம். ஒருநாள் வேட்டைக்குக் கானகம் வந்த சிபியின் கண்களில் ஒரு வெள்ளைப் பன்றி பட்டுவிட்டது. வேட்டைக்கு வந்த அரசர் அதைத் துரத்திக் கொண்டு போனாராம். அது ஓடிப்போய் காட்டில் மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்து கொண்டிருந்த இடத்துக்கருகில் ஒரு புற்றில் மறைந்து கொண்டதாம். அதைத் தேடிப்போன மன்னன் மகரிஷியிடம் அங்கு ஓடிவந்த பன்றி என்னவாயிற்று என்று வினவ அவர் புற்றில் பாலை ஊற்று என்றாராம். அதன்படி மன்னன் புற்றில் பாலை ஊற்ற புற்றுமண் கரைந்து அதனுள் இப்போதைய பெருமாளின் விக்கிரகம் அங்கு இருந்ததாம். அதைக் கொண்டு போய் ஒரு ஆலயம் அமைத்து அதில் பிரதிஷ்டை செய் என்றாராம் மகரிஷி. அதன்படி கட்டப்பட்ட ஆலயம் இது, இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளும் அங்கு கிடைத்த பெருமாள் தானாம்.

தலபுராணத்தின்படி கருடபகவான், மார்கண்டேய மகரிஷி, இலக்குமி, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலமாம் இது. நான்கு சதுர் யுகங்களுக்கு முன்னால் பெருமாள் இங்கு மார்கண்டேயரையும், பூதேவியையும், சிபி சக்கரவர்த்தியையும் ஆசீர்வதித்ததாகக் கூறுகிறார்கள்.

இவ்வாலயத்தில் மூலவர் புண்டரீகாக்ஷபெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலம்; தாயார் செண்பகவல்லி, பங்கயவல்லி என்றும், பங்கஜவல்லி என்றும்கூட சொல்கிறார்கள். ஸ்வேதகிரி என்றால் வெள்ளைமலை என்று பொருள். இது திருவரங்கக் கோயிலுக்கும் முந்தையது என்பதால் இதனை ஆதிவெள்ளறை என்று அழைக்கிறார்கள். ஆலயத்துக்கு இரண்டு நுழைவாயில்கள். உத்தராயண வாசல், தட்சிணாயன வாயில் என்று பெயர். உத்தராயண வாசல் தைமாசம் தொடங்கியும், தட்சணாயண வாயில் ஆடி மாதம் முதலும் பயன்படுத்துகிறார்கள். இதனைத் தவிர நாழி கேட்டான் வாசல் என்று ஒன்று உண்டு. இதற்கும் ஒரு விளக்கம் சொல்கிறார்கள்.

இந்த ஆலய தரிசனம் செய்துகொண்டு மன நிறைவோடு பாரதி இயக்கத்தினர் திருச்சியை அடைந்து அங்கு கனரா வங்கி ஜி.ஸ்ரீதரன் இல்லத்தில் உணவருந்திவிட்டு ஊர் திரும்பினர்.

திருக்கோயிலூர்.

திருக்கோயிலூர் சென்றவுடன் ஒருவர் இங்குதான் கபிலர் குன்று இருக்கிறது என்றார். அது எங்கே இருக்கிறது என்று விசாரித்தபோது அவ்வூரின் மத்தியில் ஓடுகின்ற பெண்ணையாற்றின் இடையில் இருக்கிறது என்றனர். இங்கு ஓடும் ஆறு தென்பண்ணை ஆறு. ஆந்திரப்பிரதேசம் நெல்லூர் அருகில் வடபெண்ணை ஆறு ஓடுகிறது.
தமிழ்நாட்டில் அட்டவீரட்டானத் தலங்கள் மொத்தம் எட்டு. அதில் திருக்கோயிலூர் ஒன்று. சிவபெருமான் தன் வீரத்தை வெளிப்படுத்திய இடங்கள் என்று இதற்கு இந்தப் பெயர் வந்தது. சிவபெருமான் தீமையை அழிக்க பல உருவங்களை எடுத்தார் அவை மொத்தம் எட்டு. திருக்கடவூரில் எமசம்ஹாரம், வழுவூரில் கஜசம்ஹாரம், கண்டியூரில் பிரம்மன் அகம் அழித்தது, திருவதிகை இப்படி பல ஊர்கள்.
              
                              கபிலர் குன்று

கபிலர் என்பார் ஒரு சங்ககாலத் தமிழ்ப் புலவர். கரிகால் சோழன், பாரி வள்ளல் ஆகியோர் வாழ்ந்த காலத்தவர். வேள்பாரியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். கபிலர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தவர். பாண்டியன் அவையில் அரசவைப் புலவராக இருந்த இவர் பல அரசர்களிடமும் சென்று தன் தமிழை ஓதிவந்தார். பரம்பு மலை வேள்பாரியிடம் சென்ற போது அவரோடு நெருக்கமான நண்பரானார். பரம்பு நாட்டில் அரசனுக்குச் சமமாக இவரும் வாழ்ந்து வந்தார்.

அந்த சமயம் தமிழகத்தின் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒன்று சேர்ந்து சிற்றரசர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். அப்படி அவர்கள் பரம்பு மலையைப் பிடிக்க முயன்றபோது பாரி வீரத்துடன் போராடி உயிர் துறந்தார். பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியின் இரண்டு பெண் பிள்ளைகளான அங்கவை, சங்கவை எனும் இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்களுக்குத் தகுந்த மணமகன்களைத் தேடலானார். இதர வேளிர்குல மன்னர்களையெல்லாம் அணுகினார், அவர்கள் மூவேந்தர்களுக்குப் பயந்து கொண்டு மறுத்துவிட்டனர். அதில் இருங்கோவேள் என்பான் அவரை அவமரியாதை செய்து வெளியே தள்ளி கதவை மூடினான். பின்னர் அவ்விரு பெண்களையும் அந்தணர்கள் சிலரிடம் பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டுப் போனார்.
தன் நண்பன் பாரியின் மரணம் அவரை மிகவும் பாதித்துவிட அவர் வடக்கிருத்தல் எனும் வழக்கப்படி உண்ணாவிரத நோன்பிருந்து இந்த ஆற்றில் அமைந்துள்ள இந்தச் சிறு குன்றின்மேல்தான் உயிர் துறந்தாராம். அங்கு ஒரு சிறு ஆலயமும், நெடிய படிகளும் இருக்கின்றன. அற்புதமான இடம், ஒரு உயிர் உண்ணா நோன்பினால் பிரிந்த இடம், அதைச் சென்று பாரதி இயக்கத்தார் பார்த்து கபிலருக்கு அஞ்சலி செலுத்தினர்.
கபிலர் குன்றிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கிச் செல்வதற்காக பெண்ணையாற்றைக் கடந்து செல்கையில் வழியில் ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆசிரமம் காணப்பட்டது. அங்கு சந்நிதிகளில் மந்திர ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தோம் சுவாமிகளின் சந்நிதியில் ஹோமம் நடந்து கொண்டிருந்தது. தஞ்சையில் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய சீனிவாசன் என்பார் வயது முதிர்ந்த நிலையில் அங்கு இருப்பதைக் கண்டு அவரை நலம் விசாரித்தார்கள். இந்த ஆசிரமம் மிகவும் பிரபலமானது. இந்த ஆசிரமத்தில் ஞானானந்த கிரி என்பார், ரமண மகரிஷி அவர்களோடு சமகாலத்தில் இருந்தவர் இங்கு இருந்தார். இவர் ஒரு அத்வைத வேதாந்த ஜீவன்முக்தர். இவ்விடத்தை தபோவனம் என்கிறார்கள்.
   
ஞானானந்தகிரி சுவாமிகள், திருக்கோயிலூர்

ஞானனந்தகிரி சுவாமிகளுக்கு என்ன வயது என்பது யாருக்குமே தெரியாதாம். இவர் 1974இல் சமாதியடைந்தார். இவர் ஒரு சித்தர் என்பது மக்கள் எண்ணம். பாரதி குறிப்பிடும் குள்ளச்சாமி என்பவர் இவர்தான் என்பது சிலருடைய கருத்து.

                             To be continued...............

                       

No comments: