வரலாறு பேசும் பயணம் பகுதி 6
குடுமியான்மலை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அற்புதமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உண்டு. அவற்றில் குடுமியான்மலை சிறப்பு வாய்ந்தது. பாண்டியர், பின்னர் மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரால் கட்டப்பட்ட மிக அழகான சிவாலயம் இங்கு இருக்கிறது. இவ்விடம் புதுக்கோட்டையிலிருந்துய் சுமார் இருபது கி.மீ. தூரத்தில் உள்ள சுற்றூர். இவ்வூரின் சிறப்பு பண்டைய தமிழ்க் கலாச்சாரத்தையும், இசையின் தொன்மையான இசைக்குறிப்புகளை கல்வெட்டில் பதித்து வைத்திருப்பதும், அந்த எழுத்துக்கள் கிரந்த எழுத்தில் இருப்பதால் அவை பல்லவர் காலத்தியவை எனவும் தெரிகிறது. குடுமியான் மலை ஆலயம் அமைதியும், அழகும் இயற்கையின் எழில் தோற்றத்தைத் தன்னுள்ளே கொண்ட அழகான இடம். இங்கு உள்ள ஆயிரம் கால் மண்டபம் சிறப்பானது. இங்கு தமிழக அரசின் வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் அண்ணா பண்ணையும் இருக்கிறது.
குடுமியான் மலை செல்வதற்காக முதலில் தஞ்சையிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்குச் சென்று அங்கு சில நண்பர்கள் மூலம் மதிய உணவு தயாரித்து வாகனத்தில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. காட்டில் உண்ண என்ன கிடைக்கும்? புதுக்கோட்டை கொடும்பாளூர் மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையில் இருந்து சுமார் இருபது கி.மீ. தலைவில் இந்த குடுமியான்மலை அமைந்திருக்கிறது. முக்கிய சாலையிலிருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிப் பயணித்தால் கோயிலைக் காணலாம். புதுக்கோட்டையிலிருந்து எப்போதோ ஒருமுறை நகரப்பேருந்து வசதியும் உண்டு. வழியில் திருவப்பூர், பெருமாநாடு, குமரமலை விளக்கு, புல்வயல், அண்ணா பண்ணை வயலோகம், விசலூர் ஆகிய ஊர்களையும் காணலாம்.
நமது நாகரிகத்தின் உச்ச கட்டமாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. முன்பொரு காலத்தில் இவ்வூர் திருநாலக்குன்றம் என்றும் பிறகு சிகாநல்லூர் என்றும் வழங்கப்பட்டு பின்னர் குடுமியான்மலை என வழங்கப்படுகிறது. ஊரின் மத்தியில் ஒரு குன்று. அந்த குன்றினைச் சுற்றி அமைந்தது இவ்வூர். அதன் கிழக்குப் பகுதியில் உள்ளதுதான் குடுமித்தேவர் ஆலயம்.
பழமை வாய்ந்த நமது சங்க நூல்களில் கிடைக்கும் சில குறிப்புகளிலிருந்து பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனும் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இவ்வூர் இருந்ததாகத் தெரிகிறது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் ஒரு யாகம் செய்தான் என்பதால் இவனைக் குடுமிக் கோமான் எனப் போற்றி வந்தனர். இவன் தன் கொடையுள்ளத்தால் வள்ளல் எனப் போற்றப்பட்டவன்.
குடுமியான்மலை மேலும், அதன் அருகிலுமாக நான்கு கோயில்கள் இங்கு உள்ளன. அவற்றுள் ஒரு குடவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளைக் கொண்ட சிகாநாதசுவாமி கோயில் என வழங்கப்படும் பெரிய சிவன் ஆலயமும் அடங்கும். முன்பே குறிப்பிட்ட இசை சம்பந்தப்பட்ட கல்வெட்டு மிக பழமையானது மட்டுமல்ல இந்திய இசை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இசை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவ்வாலயத்தில் சுமார் 120 கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இந்த ஆலயத்தின் மகாமண்டபத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் உயரமான அழகிய சிலைகள் காணக் கிடைக்கின்றன. அற்புதமான கலையழகும், உயிரோட்டமான வடிவமைப்பும் பார்ப்போரை கவரக்கூடியவைகளாக இருக்கின்றன. இந்த சிற்பங்களில் பலவும் பின்னப்பட்டுப் போய் காணப்படுகின்றன. என்ன காரணம் என்று விசாரித்தபோது படையெடுப்பினால் சிதைந்து போயிற்று என்கிறார்கள். யார் படையெடுப்பு, எந்த காலகட்டம் என்பதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. எனினும் சிலர் மாலிக்காபூர் படையெடுப்பு என்கின்றனர். எது சரி என்பதை வரலாற்று ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
குடுமியான்மலையில் உள்ள ஒரு சிவன் சிலையில் ஒரு புதுமை. இங்கு சிவன் வீணை எனும் இசைக்கருவியை வாசிப்பது போல காட்சியளிக்கிறார். (இதனை வீணாதாரா என்று குறிப்பிடுகின்றனர்) சிவபெருமானுக்கு இசையில் அதிலும் வீணை இசைப்பதில் விருப்பமுடையவர் என்கின்றனர். இவ்வூரிலுள்ள இசை குறித்த கல்வெட்டுகளினாலும், சிவன் கரங்களில் வீணை இருபதும் இவ்வூருக்கும் இசைக்கும் ஏதோ பந்தம் இருப்பது தெரிகிறது. இந்தக் காரணம் கொண்டே இசை அறிஞர்களும், இசை மாணவர்களும் இங்கு அடிக்கடி வருகை புரிகிறார்களாம்.
கடைச் சோழர்களின் அதாவது விஜயாலய சோழன் காலம் தொடங்கிதான் இக்கோயில் வளர்ச்சியும் கட்டுமானங்களும் நடைபெற்றதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் மேலைக் கோயிலிலும் இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலும் காணக் கிடைக்கின்றன. முக்கிய ஆலய வளாகத்தில் அப்படி எந்த கல்வெட்டுக் காணக் கிடைக்கவில்லை. அதிலிருந்து இவ்வாலயம் முன்பு பழமைத் தோற்றத்தோடும், பிறகு எடுத்துக் கட்டி புதிதாக உருவானதும் தெரிகிறது.
சிற்பக்கலையின் உயர்வு வெளிப்படும் இவ்வூர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுவாமியின் பெயர் சிகாநாதசுவாமி அம்மன் அகிலாண்டேஸ்வரி. மலையின் உச்சியில் முருகப்பெருமானுக்கு ஒரு கோயில் உண்டு. மலையின் ஏற்றத்தில் சைவ நாயன்மார் அறுபத்தி மூவரின் சிற்பங்கள் இருக்கின்றன.
To be continued.............
No comments:
Post a Comment