பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 25

                         வரலாறு பேசும் பயணம் பகுதி 25
சாந்தோம் கதீட்ரல். 

சென்னையில் சாந்தோம் எனும் பகுதியில் எழிலொழுக வானுயர்ந்து நிற்கும் தேவாலயம் தான் சாந்தோம் சர்ச் என வழங்கப்படும் பழம்பெரும் தேவாலயம். இந்த கதீட்ரல் எனப்படும் தேவாலயம் 16ஆம் நூற்றாண்டில் இங்கு முதன்முதலில் வந்திறங்கிய போர்த்துகீசிய வணிகர்களால் கட்டப்பட்டது. பிறகு இந்தப் பகுதிகள் எல்லாம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் வசம் வந்தபோது இதனை அவர்கள் 1893இல் முற்றிலுமாகப் புதுப்பித்துக் கட்டினார்கள்.
                 
                          தேவாலயத்தின் உட்புறத் தோற்றம்

தூய தாமஸ் பாலஸ்தீனத்திலிருந்து இந்திய மண்ணில் கேரள மாநில கடற்கரையில் தான் கி.பி. 52இல் முதன்முதல் கால் பதித்தார். கி.பி.72 இல் அவர் மரணம் அடைந்த போது அவர் உடல் இங்குதான் சமாதி வைக்கப்பட்டது, அதனை இப்போதும் இந்த தேவாலயத்தின் அடித்தள அறையில் சென்று பார்க்கலாம். இந்தப் பகுதி முழுவதும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அனைவரும் சென்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பாகவைக்கப்பட்டிருக்கிறது.

இதன் பின்புற சாலையில்தான் 13 கி.மீ தூரமுள்ள மெரினா கடற்கரை எழிலொழுகக் காட்சி தருகிறது. இதனை 1886இல் வடிவமைத்தவர்கள் போர்த்துகீசியர்கள். இந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு அன்றிரவு கோவிளம்பாக்கத்திலுள்ள நவீன்ஸ் கிரீன் ஃபீல்டு எனும் குடியிருப்பில் தங்கிவிட்டு விடியற்காலையில் புறப்பட்டனர்.
                  
                                  திருக்கழுக்குன்றம்.

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வந்து திருக்கழுக்குன்றம் அடைந்தனர். அங்கு இரு பிரிவினராக பாரதி இயக்கத்தினர் வந்து சேர்ந்தனர். திருவையாற்றுப் பகுதியிலிருந்து ஒரு குழுவினர் இரா.முத்துக்குமார், பஞ்சநதம், பாரத் தலைமையிலும் மற்றொரு பிரிவினர் சென்னையிலிருந்தும் வந்து சேர்ந்தனர். மலை அடிவாரத்திலிருந்து மேலே சென்று சுவாமி தரிசனம் செய்வதற்குள் பலருக்கும் மூச்சு வாங்கிவிட்டது.
 
                                      வேதகிரீஸ்வரர் ஆலயம்
வேதகிரீஸ்வரர் ஆலயம் மலையிலிருந்து தோற்றம்

திருக்கழுக்குன்றத்தை விட்டு நீங்குமுன் அங்கிருந்த மிகப் பெரிய தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு மகாபலிபுரம் நோக்கிச் சென்றார்கள். மகாபலிபுரம் சென்றடையும்போது நல்ல வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

மகாபலிபுரம்      

அங்கு ஒரு சுற்றுலா வழிகாட்டியின் உதவியோடு மகாபலிபுரத்தின் சிறப்புகளான ஐந்து ரதம், அர்ஜுனன் தவம் முதலான புகழ்வாய்ந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு கடற்கரைக் கோயிலுக்குச் சென்று அங்கு அலைகளின் அழகில் மூழ்கித் திளைத்தனர். மாமல்லன் எனும் நரசிம்ம பல்லவனின் பெயரால் உருவான இந்த கடற்கரை நகரம் பல்லவ சாம்ராஜ்யத்தின் முக்கியமான துறைமுகமாகவும், இங்கு முட்டு முட்டாகக் காட்சியளித்த மொட்டைப் பாறைகளையும், சிறு குன்றுகளையும் சிற்றுளி கொண்டு சீரிய கோபுரங்களை எழுப்பிய பெருமை மாமல்லன் நரசிம்ம பல்லவனுக்கும் அவனது தந்தையான மகேந்திரவரம பல்லவனையும் சேரும். பிரபல பத்திரையாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய “சிவகாமியின் சபதம்” நாவல் முழுவதுமே இந்த ஊரையும், இந்த சிற்பங்களையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அதில் ஆயனர் எனும் ஓர் சிற்பி அவருடைய குமாரி சிவகாமி, அவளைக் காதலித்த நரசிம்ம பல்லவன் என்று அந்த நாவலின் சிறப்பு முக்கியமானது. பின்னர் கடற்கரை மணலை நடந்து கடந்து, கடற்பொருட்கள் விற்பனை செய்யும்

கடைகளின் முன்பாக நடந்து மீண்டும் கடல் மல்லை உணவு விடுதிக்குச் சென்று பகல் உணவு முடிந்து கிளம்பினர்.
                                To be continued..........

                  

No comments: