: வரலாறு பேசும் பயணம் Part 2
கோயிலடி எனும் இந்த சின்னஞ்சிறு
கிராமம் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் கல்லணைப் பகுதியில் அமைந்திருக்கிறது.
இந்த ஊரின் சிறப்பு என்ன? இந்த இடத்தை முதலில் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? இவ்விடத்தை
முதல் ஊராகத் தேர்ந்தெடுக்கக் காரணம் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தின் போது
நூறு தொண்டர்களுடன் அவர் தஞ்சை மாவட்டத்தினுள் நுழைந்த ஊர் இந்த கோயிலடி.
1930இல் ராஜாஜி நடத்திய
இந்தப் போராட்டத்தின் போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் ஜே.ஏ.தார்ன்
எனும் ஆங்கிலேயர். அவருக்கு இந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை எவ்வகையிலேனும் நிறுத்தி
தோல்வியுறச் செய்துவிட வேண்டுமென்கிற வேகம். அதற்காக அவர் கிராமங்கள், ஊர்கள் தோறும்
தண்டோரா அடித்து ஒரு அறிவிப்பினைச் செய்தார். சத்தியாக்கிரக தொண்டர்கள் இந்த மாவட்டத்தின்
ஊர்கள் வழியாக வேதாரண்யம் செல்லுகின்ற பாதை நெடுகிலும் எந்த ஊரிலும், யாரும் சத்தியாக்கிரகிகளுக்கு
உணவு அளிப்பதோ, தண்ணீர் கொடுப்பதோகூட கூடாது. அப்படி யாரும் கொடுத்தால் அவர்கள் மிகக்
கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்பது அவரது அறிவிப்பு. வழிநெடுக இருந்த ஊர்களின்
அதிகாரிகள் முதல் தலையாரி வரையிலான அனைவரும் மக்களிடம் இந்த உத்தரவைச் சொல்லி அச்சுறுத்திக்
கொண்டிருந்தார்கள். இந்த உத்தரவினால் மக்கள் அச்சமடைவார்கள், சத்தியாக்கிரகிகளுக்கு
எந்த உதவியும் கிடைக்காது, போராட்டம் பிசுபிசுத்துப் போகும் என்று கனவு கண்டார்கள்
அதிகார வர்க்கத்தினர். ஆனால் பாவம், அப்போது அவர்களுக்குத் தெரியுமா இந்தப் போராட்டத்தில்
எதிர்பாராத அதிசயம் நிகழும் என்று.
இந்தப் பின்னணியில் ராஜாஜி
தலைமையிலான தொண்டர்கள் திருச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
அவர்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெரு வழியாக நடந்து திருவரங்கத்தை
அடைந்தனர். அங்கு இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு அங்கிருந்து திருவானைக்கா வழியாக திருவளர்ச்சோலை
வந்து அங்கிருந்து கல்லணையைத் தாண்டி கோயிலடி கிராமத்தினுள் நுழைகின்றனர். அப்போது
கோயிலடி ஊர் அருகில் காவிரிக் கரையில் ஏராளமான கிராம மக்கள் குவிந்திருந்தனர். சத்தியாக்கிரகிகளுக்கு
இவர்கள் தங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்களா அல்லது எதிர்க்கவா என்பது தெரியவில்லை.
தஞ்சை கலெக்டர் உத்தரவுப்படி தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்கிற அச்சமும்,
அதை எப்படி வெல்வது என்ற யோசனையுடன் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
சத்தியாக்கிரகிகள் ஊரை
நெருங்கிய போதுதான் அங்கு கூடியிருந்தவர்கள் தங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்
என்பதை உணர்ந்து கொண்டார்கள். தொண்டர்கள் ஊர்வலம் ஊரை நெருங்கியபோது காத்திருந்த கூட்டம்
கைகளில் மலர் மாலைகளையும், கதர் நூல் மாலைகளையும் கொண்டு வந்து இவர்களுக்கு அணிவித்து
வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிக்கு ஜே, என்றெல்லாம்
கோஷமிட்டனர். அப்போதே தெரிந்து விட்டது, தஞ்சை மாவட்டத்தில் கலெக்டரின் உத்தரவுக்கு
எவரும் அஞ்சவில்லை, தங்களுக்கு வழிநெடுக ஆதரவு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டனர்.
அங்கு கூடியிருந்தவர்கள்
அனைவரும் விவசாயக் கூலிகள். அவர்கள் சொன்னார்கள், அரசாங்க ஆணை எங்களுக்கெல்லாம் தெரியும்.
அது தெரிந்ததால் ஊர் பெரிய மனிதர்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டார்கள். தேசத் தொண்டர்களுக்கு
நாம் சென்று எல்லா உதவிகளையும் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஒன்றுகூடி இங்கே வந்திருக்கிறோம்
என்றார்கள். அந்த ஏழை எளிய மக்களின் தேசபக்தி தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அவர்கள்
உள்ளங்களில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.
அங்கிருந்து கிளம்பி அடுத்த
பதினைந்து நாட்கள் கழிந்தபின் வேதாரண்யம் சென்றடையும் வரை அவர்களுக்கு பொதுமக்களின்
வரவேற்பு சிறப்பாக அமைந்தது. அவர்களுக்கு குடிநீரோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது என்ற
கலெக்டரின் ஆணை காற்றில் பறக்க விடப்பட்டது. யாரோ அப்படி கொடுத்தால்தானே தண்டனை ஆகையால்
மரங்களைக் கொண்டு கொடுக்க வைத்தார்கள். உணவுப் பொட்டலங்களை ஒரு கூடையில் வைத்து சாலையோர
மரத்தின் கிளையில் கட்டி வைத்தனர் மக்கள். அந்த மரத்தின் குறியீடாக ஒரு எண் குறிக்கப்பட்டிருக்குமல்லவா
அந்த எண்ணை ஒரு சீட்டில் எழுதி அதைக் கொண்டு போய் யாரோ ஒரு சிறுவன் சத்தியாக்கிரகிகளிடம்
கொடுப்பான். அந்த எண்ணுள்ள மரம் வரும்போது கூடை இறக்கப்படும், உணவு பரிமாறப்படும்.
போலீஸ் உங்களுக்கு உணவளித்தது யார் என்றால், இந்த மரம் என்றார்கள் சத்தியாக்கிரகிகள்.
அப்படிப்பட்ட ஊரை பாரதி
இயக்கத்தார் காலடி பதித்த முதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனித பூமி. அந்த
ஊரில் இருப்பதுதான் அப்பக்குடத்தான் பெருமாள் ஆலயம். அந்த ஆலயத்தினுள் சென்று பெருமாளை
சேவித்துவிட்டு பிரகாரத்தில் உட்கார்ந்து அவ்வூரின் சிறப்பையும், அவ்வூர் மக்கள் சத்தியாக்கிரகிகளை
வரவேற்று உபசரித்ததையும், பிறகு அன்று மாலை காவிரி ஆற்று மண்ணில் நடந்த பொதுக்கூட்டம்
பற்றியும், அதில் உரையாற்றிய கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் பற்றியும் உரையாடினார்கள்.
அவ்வூர் மக்கள் சிலரும், ஆலயத்தில் தரிசனத்துக்கு வந்திருந்த மக்களும் இந்த உரையாடலைக்
கேட்டு அவ்வூரின் முக்கியத்துவத்தை அவர்களும் தெரிந்து கொண்டார்கள். இரண்டு மூன்று
கார்களில் சென்ற அனைவரும் அங்கு ஆலயம் தவிர, காவிரி ஆறு போன்ற இடங்களை தரிசித்து திருவையாறு
திரும்பினார்கள்.
கோயிலடி எனும் சிற்றூர்
இந்த அப்பக்குடத்தான் ஆலயம், உப்பு சத்தியாகிரகிகள் தஞ்சை மாவட்டத்தினுள் நுழைந்த இடம்
ஆகியவை தவிர ஒரு சிறந்த கர்நாடக இசைக் கலைஞரையும் கொடுத்திருக்கிறது. அவர்தான் கோயிலடி
ரங்கராஜன் எனும் இசைக் கலைஞர்.
To be continued......
No comments:
Post a Comment