பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 3

                     வரலாறு பேசும் பயணம் பகுதி 3

       இந்த பெயரைக் கேட்டமாத்திரத்தில் நம் நினைவுக்கு வருபவர் அங்கு கோயில் கொண்டிருக்கும் காளிங்கநர்த்தன பெருமாளும், அவரைப் பற்றி ஏராளமான பாடல்களை இயற்றி இன்றுவரை தமிழிசையில் பாடப்பட்டு வரும் வேங்கடசுப்பையர் இயற்றிய கிருஷ்ணகானமும் நம் நினைவுக்கு வரும். எத்தனை பாடல்கள். அலைபாயுதே, ஆடாது அசங்காது வா கண்ணா இப்படி அவருடைய பாடல்களைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. அன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. காளிங்கன் தலைமீது ஏறி நர்த்தனமாடி, காளிங்கனின் கொட்டத்தை அடக்கிய கிருஷ்ண பகவானின் தரிசனம் அந்த தினத்தில் கிடைத்தது மாபெரும் பேறு.

      அன்று ஊத்துக்காடு என்றுமில்லா அளவுக்கு மக்கட் கூட்டத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ஆலயத்தினுள் நுழையக் கூட நெரிசலில் அல்லல் பட நேர்ந்தது. ஒருவழியாக ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிடைத்தது.

      ஊத்துக்காடு எனும் கிராமம் சாலியமங்கலத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக ஆவூர் சென்று பாபநாசம் கும்பகோணம் போகும் சாலையில் திருக்கருகாவூரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்த கிருஷ்ணத் தலம். இது 1000 – 2000 வருஷங்கள் பழமையானது. கிருஷ்ண ஜயந்தி திருவிழா இங்கு பிரபலமாக நடைபெறும். முன்பெல்லாம் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இரவு முழுதும் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி நடைபெறும். நாளடைவில் அது நின்றுபோயிற்று.

இங்கு மூலஸ்தானத்து கிருஷ்ண விக்ரகம் காளிங்கன் எனும் ஐந்து தலை நாகத்தின் தலைமீது கிருஷ்ணன் நின்று ஆடுவது போன்ற தோற்ற முடையது. பாம்பின் தலைமீது கண்ணன் நிற்பது போல தோந்றினாலும், பாம்புத் தலைக்கும் கண்ணன் காலுக்கும் இடையில் மெல்லிய நூலிழை போன்ற இடைவெளி உண்டு. இதுவே இங்குள்ள சிறப்பு. அருள்மிகு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊத்துக்காடு வந்து ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடுவது வழக்கம். அதுபோலவே தத்தமது குழந்தைகள் இசையில் வல்லவர்களாக, கலைகளில் சிறந்தவர்களாக ஆக வேண்டுமென்று நினப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

உத்ஸவர் கிருஷ்ணன் காலுக்கு கொலுசு வாங்கி சாத்தி வழிபடுவது சிறப்பு. காரணம் இந்த கிருஷ்ணன் காளிங்கன் எனும் பாம்பு வடிவுடைய அசுரனை அவன் தலைமேல் ஏறி நின்று, சுற்றிலும் ஆயர்பாடி சிறுவர்கள் பயந்து போய் பார்த்துக் கொண்டிருக்க இவன் அந்த ராட்சச வடிவுடைய அரக்கப் பாம்பை ஆடியே வதம் செய்த காலல்லவா கண்ணனின் கால்கள். அந்தக் கால்களுக்கு கொலுசு அணிவித்து அழகு பார்க்க வேண்டாமா? ஸ்ரீஜயந்தி அன்று கிருஷ்ண பகவானுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்விப்பர்.

தலவரலாறு:  தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் வசித்தது. சிவபெருமானுக்கு இந்த காமதேனு மலர்களைக் கொய்து கொண்டு வந்து இங்குள்ள கயிலாசநாதனுக்கு அர்ச்சித்து பூஜித்து வந்தது. இங்கு ஏராளமான பசுக்கள் நிரம்பியிருந்த காரணத்தால் இவ்வூர் “ஆவூர்” என வழங்கப்பட்டது. “ஆ” என்றால் பசு. பசு வந்த இடம் “கோ” வந்து “குடி”யேறிய காரணத்தால் கோவிந்தகுடி என்றாகியது. அது போலவே பட்டி எனும் பசு சிவனை பூசித்தத் தலம் பட்டீஸ்வரம். இப்படி பல ஊர்கள் இருந்த போதும் காமதேனு விரும்பி வசித்தத் தலம் ஊத்துக்காடு.

ஆதி நாளில் இவ்வூர் காமதேனுவின் சுவாசமாக இருந்ததால் “மூச்சுக்காடு” என்றும் நாளடைவில் “ஊத்துக்காடு” என மறுவியது. ஒரு முறை தேவரிஷி நாரதர் இங்கு வந்து இங்கிருந்த பசுக்களிடம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சரிதையைச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது, காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயர்குலச் சிறுவர்களை அங்கிருந்த ஒரு மடுவில் பெரிய பாம்பு ஒன்று இருந்து துன்புறுத்தி வந்ததையும், அதன் பெயர் காளிங்கன் என்றும், அந்தக் காளிங்கனின் ஆணவத்தை அடக்கக் கண்ணன் அதன் தலைமீது ஏறி நின்று அது சோர்ந்து வீழும்வரை தலைமீது ஆடியதையும் நினைவுகூர்ந்தார். இதனைக் கேட்டு காமதேனு கண்ணனை கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தது.
காமதேனுவுக்கு ஸ்ரீகிருஷ்ணனை எப்படியாவது தரிசிக்க வேண்டும், அவன் குழலிசையைக் கேட்டு மகிழ் வேண்டுமென்கிற ஆசை உண்டானது. அதை அப்படியே கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டது. அன்பர் குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணன் காமதேனுவின் கோரிக்கையை ஏற்காமல் இருப்பானா? ஓடோடி வந்தான். வேணுகானம் உள்ளம் உருக வாசித்தான். அப்போது மடுவில் காளிங்கன் தலைமீது தான் ஆடிய காட்சியை அதற்குக் காட்டினான். காமதேனு ஜென்மம் சாபல்யம் அடைந்ததாக உணர்ந்தது.
பிந்நாளில் சோழ மன்னன் ஒருவன் இந்தப் பகுதிக்கு வந்த போது இந்த வரலாற்றைக் கேட்டான், அதற்கேற்றவாரு காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு இங்கொரு ஆலயத்தை வடித்துக் கொடுத்தான் என்கிறது இவ்வூர் தலபுராணம்.
                
ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765)

தமிழிசையில் கிருஷ்ணன் மீது பல்வேறு சுவையான பாடல்களைப் பாடியவர் ஊத்துக்காடு வேங்கடகவி என்பார். கர்நாடக இசை வடிவில் உணர்ச்சிப் பிரவாகத்தில் கண்ணன் சந்நிதியில் அவனை நேரில் பார்த்து, பேசி, உணர்ந்து, மகிழ்ந்த நிலையில் பலதரப்பட்ட பாடல்கள், அத்தனையும் தமிழுக்கு ஓர் புது வழியைக் காண்பித்த பாடல்களை அவர் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான அவருடைய பாடல்கள் நமக்கு இப்போது கிடைத்துள்ளன, இன்னும் எத்தனையோ கிடைக்காமல் போயிருக்கலாம். தமிழ், சமஸ்கிருதம் மராத்தி இப்படி பன்மொழிப் புலமையோடு அவர் பாடல்கள் இருக்கின்றன.  இதுவரை சுமார் 500 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கிடைக்காமல் போனவை எத்தனையோ? இவருடைய பாடல்களை இவரது வம்சத்தில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் என்பார் பாடிக் காப்பாற்றி வந்துள்ளார். இன்றும் கூட இவர் வாரிசுகளாக உள்ளவர்கள் இந்தப் பாடல்களைப் பாடி வருகின்றனர்.

‘தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் அமைந்த இவரது பாடல்களில் கண்ணன் பற்றிய வர்ணனைகள், கண்ணனின் லீலைகள், அந்தப் பாடல்களில் அமைந்த இனிமை, தாளக்கட்டு, பாடல் வரிகளின் சிறப்பு இவை அத்தனையும் நம்மை புல்லரிக்கச் செய்துவிடும். பாகவத புராணத்தைப் படித்து கண்ணனின் பால லீலைகளை முழுவதுமாகத் தெரிந்து வைத்திருப்பவரால்தான் அத்தனை அழக்காக கண்ணனின் லீலைகளைப் பாட முடியும். பாடல்களின் தாளக் கட்டு கேட்போரை தன்னையறியாமல் தாளம் போடவோ, எழுது ஆடவோ செய்து விடும்.

வேங்கடகவியின் இயற்பெயர் வேங்கடசுப்ரமண்யம். இங்கு வாழ்ந்த சுப்புகுட்டி ஐயர் என்பார் அவரது தந்தையார். வெங்கம்மா என்பது தாயார். மன்னார்குடிக்கு அருகில் வசித்து வந்த இவர்களது முன்னோர்கள் ஊத்துக்காட்டுக்கு குடிபெயர்ந்து வந்தனர். இந்த ஊருக்கு சம்ஸ்கிருத மொழியில் தேனுஸ்வாசபுரம் என்றொரு பெயரும் உண்டு. காமதேனுவுக்கு ஸ்வாசமாக இருந்த ஊர் என்று பொருள். இவரது சகோதரி மகன் ஒருவர் தஞ்சை மராத்திய மன்னன் பிரதாபசிம்ம ராஜாவின் அவையில் இசைக் கலைஞர்காக இருந்திருக்கிறார். அவர் பெயர் காட்டு கிருஷ்ண ஐயர்.

சிறுவயதில் வேங்கடகவிக்கு இசையில் ஆர்வம் இருந்தது. ஆனால் அவருக்குச் சரியான குருநாதர் அமையவில்லை. அப்போது கிருஷ்ண யோகி என்பாரிடம் இசை கற்க இவருக்கு ஆசை. ஆனால் அவர் மறுத்து விட்டார். ஆகையால் அவர் கிருஷ்ண பகவானிடம் முறையிட்டார். அவர்தான் காளிங்கநர்தன கிருஷ்ணன், இவ்வூரின் குடியிருக்கும் இறைவன்.

இவர் வாழ்வில் ஓர் அற்புதம் நிகழ்ந்ததாகச் சொல்வர். ஒரு குழந்தை மேலெங்கும் புழுதி படிந்திருக்க, இவருடைய மடியில் வந்து அமர்ந்து கொண்டதாம். என்ன சொல்லியும் எழுந்திருக்க மறுத்துவிட்டது அந்தக் குழந்தை. அப்போது எங்கிருந்தோ ஒரு வேய்ங்குழலோசை மெல்ல கேட்கத் தொடங்கி மனங்களைக் கொள்ளை கொள்ளத் தொடங்கியது. அதைக் கேட்டு அனுபவித்த வேங்கடகவி அதே நினைவில் மயங்கி வீழ்ந்தார். அவர் கண்விழித்துப் பார்க்க அங்கே கிருஷ்ணன் பாலகனாக வந்து அவர் எதிரே குழலூதிக் கொண்டு நிற்கிறான்.  அப்போது அவர் தன்னுடைய உடலில் மாற்றங்களைக் கண்டார். மனம் இசை வடிவானது, இசை ஊற்றெடுக்கத் தொடங்கியது.
அந்த கிருஷ்ணனே வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின் ஒரு பாடலைச் சொல்கிறார்கள். அது ஆபோகி ராகத்தில் அமைந்த “குரு பாதாரவிந்தம் கோமளமு” எனும் பாடல். அதில் அவர் சொல்லும் கருத்து: “நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை” என்கிறார்.

வேங்கடகவி வாழ்நாளெல்லாம் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்ததால் திருமண பந்தத்துள் அகப்படவில்லை. பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கண்ணனைப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய பெரும்பாலான பாடல்கள் நாட்டியம் ஆடுவதற்குரிய தாளக்கட்டுடன் அமைந்திருந்தன. அதீதமான சொற்கட்டுகளும், ஜதிகளும் அவர் பாடல்களில் இருந்தன. காளிங்க நர்த்தனம் எனும் பாடல் ஜதிகளும் தாளக்கட்டுகளும் அதிகமுள்ள பாடல். கண்ணன் காளிங்கனின் தலைமீது ஏறி நின்று அவன் தாங்கமுடியாத அளவு அவன் தலைமீது கண்ணன் ஆடிய ஆட்டம், அவன் விஷத்தைக் கக்கி, உடல் சோர்ந்து கீழே விழும்வரை அந்தப் பாடல். கேட்போரை அப்படியே எழுந்து ஆட வைக்கும் வல்லமை படைத்தது. அதனை நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் பாடிப் பிரபலப்படுத்தினார். இப்போது திருமதி அருணா சாய்ராம் அவர்கள் இதனை கச்சேரி தோறும் பாடிவருகிறார்.

இவர் ஒரு தனிமை விரும்பி. ஏகாந்தத்தில் அமர்ந்து கண்ணனை மட்டுமே துணையாகக் கொண்டு தன் பாடல்களைப் பாடியவர். ஆகையால் இவருக்கு சீடர்கள் என்று எவரும் இல்லை. இவர் நள்ளிரவில் தனிமையில் அமர்ந்து யாரும் கேட்காதபடி தனித்தே பாடி வந்தார். கிருஷ்ணன் மட்டுமே அவற்றைக் கேட்கவேண்டுமென்பது அவர் அவா. சில வாக்யேயக் காரர்களைப் போல ஒவ்வொரு பாடலிலும் அவர்கள் முத்திரை வாசகமொன்றை சேர்ப்பது போல இவர் எதையும் அப்படி சேர்த்துப் பாடியதில்லை. ஏதோ நவாவர்ண கீர்த்தனை யொன்றில் (8ஆவது நவாவர்ணம்) அவர் தன் பெயரைச் சொல்கிறார். இதிலிருந்து அவர் தன்னுடைய பாடல்களுக்கு விளம்பரம் எதையும் தேடவில்லை என்பது தெரிகிறது.

அப்படி இவர் பிறர் கேட்கா வண்ணம் பாடினாலும் இவர் பாடுவதைக் கேட்டு அதை எழுதி வைத்தவர்களும் உண்டு. எடுத்துக்காட்டாக இவருடைய “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த” எனும் பாடலைக் கேட்டு எழுதி வைத்தவர் ருத்ரபசுபதி பிள்ளை எனும் நாதஸ்வர வித்வான்.

இவருடைய படைப்புகளில் தோடியில் தாயே யசோதா, ஆபேரியில் நந்தகோபாலா, ஜெயந்தஸ்ரீயில் நீரஜசாம நீல கிருஷ்ணா, அடாணாவில் மதுர மதுர, ஆரபியில் மரகதமணிமாய, ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவர் ஏழு ராகமாலிகை, மூன்று தில்லானா, அவை சுருட்டி, சிந்துபைரவி, பூரணிமை ஆகிய ராகங்களில் இயற்றியுள்ளார்.
வேங்கடகவியின் சகோதரர் மூலமாக அவருடைய வாரிசாக வந்தவர் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். இவர் வேங்கடகவியின் பாடல்களைப் பிரபலப்படுத்தியவர். 1950களில் இவர் பல ஊர்களில் நிகழ்ச்சிகளை நடத்தி ஊத்துக்காடு பாடல்களை மக்களிடம் கொண்டு சென்றார். அவருடைய ஒலி நாடாக்கள் மூலமாகவும் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களை அனைவரும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. காளிங்க நர்த்தனம் இப்படித்தான் பிரபலமடைந்தது.


பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர வேங்கடகவிக்கு இன்னொரு குருவும் இருந்திருக்கிறார். அவர்தான் பாஸ்கரராஜபுரம் எனும் கிராமத்தில் பிறந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துக்குப் பாஷ்யம் எழுதிய பாஸ்கர ராயர் என்பார். அம்பாள் பேரில் அவருடைய கீர்த்தனங்கள் பிரபலமானவை. அவருடைய தாக்கத்தினால்தான் வேங்கடகவியும் காமாக்ஷி நவாவரண கிருதிகளை இயற்றினார் என்கிறார்கள். இவர் ஒரு கிருஷ்ண பக்தர் மட்டுமல்ல, ஸ்ரீவித்யா உபாசகருமாவார்.
                                 To be continued............

No comments: