பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 13

                  வரலாறு பேசும் பயணம் பகுதி 13

காட்டுமன்னார்கோயில் (காட்டுமன்னார்குடி)  

      இப்படி இரு வகையாலும் குறிப்பிடப்படும் இந்தக் கிராமம் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா தலைநகராகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் இது. இவ்வூருக்குச் செல்ல வேண்டுமானால் சிதம்பரத்திலிருந்து தென்மேற்கில் 25 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் ஸ்ரீமுஷ்ணம் என்றும் திருமுட்டம் என்றும் அழைக்கப்படும் ஊருக்கு 25 கி.மீ. கிழக்கில் இருக்கிறது. பாரதி இயக்கத்தினர் இந்த முறை ஒரு நீண்ட பயணம் புறப்பட்டதால் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி வழியாக இவ்வூரை வந்தடைந்தனர். இந்த காட்டுமன்னார்கோயில் சோழர் காலத்திலேயே மிக முக்கியமான ஊராகத் திகழ்ந்திருக்கிறது. இந்த ஊரில்தான் வீராணம் ஏரியைப் பார்த்து அதன் கரையோடு சேத்தியாத்தோப்புக்குச் சென்றனர் பாரதி இயக்கத்தார். இதில் கொடுமை என்னவென்றால் இந்த வீராணம் ஏரி எப்போதும் ஒரு கடல்போல தோற்றமளிக்குமாம், ஆனால் இவர்கள் சென்றபோது கரையோடு சென்ற சுமார் இருபது கி.மீ. தூரமும், வறண்ட, புதர் மண்டிய, ஆங்காங்கே நீர் தேங்கிய அடையாளங்களுடன் தரை பிளந்து கிடந்த ஏரியின் தரைமட்டத்தைத்தான்.

      முதலில் காட்டுமன்னார்கோயிலில் இருந்த ஒரு சிவாலயம், ஒரு வைணவ ஆலயம் இரண்டையும் சென்று பார்க்க முடிந்தது. இங்குள்ள பெருமாள் ஆலயம் சிவாலயம் தவிர அருகிலுள்ள திருநாரையூரில் உள்ள பொல்லா பிள்ளையார் ஆலயம் இவைகளை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, பக்தர்கள் வந்து தரிசிக்கும் புனிதத் தலமுமாகத் தெரிகிறது. கடைச்சோழ வம்சத்தில் வந்த பராந்தக சோழன் எனும் வீரநாராயணன் என்பார் இங்குள்ள ஆலயங்களைக் கட்டியிருக்கிறார்.  இங்குள்ள ஒரு கல்வெட்டு உத்தமசோழன் காலத்தியது என்பது தெரிகிறது. இந்த உத்தம சோழன் என்பார் ராஜராஜசோழனுக்குச் சித்தப்பா முறை ஆகிறது. இவர் காலத்தில் இந்த சிவாலயத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது.

      இந்த கல்வெட்டில் காணப்படும் ஒரு செய்தி மிக முக்கியமானது. அதாவது ராஜராஜ சோழனுடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் என்பார் மதுரை ஒற்றர்கள் சிலரால் கொலைசெய்யப்பட்டார். அவர்கள் பிடிபட்டு அவர்கள் சொத்துக்களை கையகப் படுத்தி குற்றவாளிகளை மரண தண்டனைக்கு உட்படுத்தினர். அவர்களுடைய நிலங்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த நிலத்தை சில கிராம மக்கள் தங்கள் ஊர்களுக்கு நீர்நிலைகளை உருவாக்கத் தெவை என்று கேட்டபோது அவற்றை கொடையாகக் கொடுத்ததாக அந்தக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் இவ்வூர் வீரநாராயண சதுர்வேத மங்கலம் என்றே அழைக்கப்பட்டது. அத்துடன் இங்குள்ள பெருமாள் ஆலயத்தில் இருக்கும் மூலவர் பெயரும் வீரநாராயணப் பெருமாள் ஆகும்.

      கல்கி அவர்கள் எழுதியுள்ள “பொன்னியின் செல்வன்” நெடுங்கதையில் முதல் காட்சியே இந்த ஊரில்தான் தொடங்குகிறது. அதன் கதாநாயகன் வந்தியத்தேவன் காஞ்சியிலிருந்து தன் குதிரையில் வரும்போது ஒரு ஆடிப்பதினெட்டில் இங்குள்ள வீரநாராயண ஏரியின் கரையோடு வருகிறான். ஆடிப்பதினெட்டைக் கொண்டாடும் மக்களின் ஆரவாரத்தைக் காண்கிறான் என்கிறது அந்தக் கதை. போகட்டும். இங்குள்ள பெருமாள் ஆலயம் சிறப்பானது. வேதம் தமிழ் செய்த வைணவப் பெரியார் அவதாரத் தலமாம் இது.

      அருகிலுள்ள திருநாரையூரில் விநாயகர் ஆலயம். அவர் பெயர் பொல்லாப் பிள்ளையார். இந்த பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டிருந்த சிவாச்சாரியார் வெளியூர் போக நேர்ந்த சமயம் அவர் சிறு பிள்ளையாக இருந்த தன் மகன் நம்பியாண்டார் நம்பியைத் தன் சார்பில் பூஜை செய்யச் சொல்லிவிட்டு வெளியூர் போய்விட்டார். சிறுவன் நம்பி தாய் கொடுத்த பூஜை சாமான்களுடன் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வித்து பூக்களால் அலங்காரம் செய்து, அம்மா கொடுத்த கொழுக்கட்டையை பிள்ளையார் முன் வைத்து, ஊம் சாப்பிடுங்கள் என்கிறான். அவர் எப்படி சாப்பிடுவார். குழந்தை விடுவதாயில்லை. அழுது, புலம்பி, கெஞ்சி கடைசியில் தன் தலையை பிள்ளையார் காலில் மோதி குருதி சொட்ட நின்றதும் பிள்ளையார் கொழுக்கட்டையைச் சாப்பிட்டு விடுகிறார். வெறுங்கையோடு வீடு திரும்பிய பிள்ளையை அம்மா எங்கேடா கொழுக்கட்டை என்றதும், விநாயகர் சாப்பிட்டுவிட்டதைச் சொல்ல அவர் நம்ப மறுக்கிறார். அப்பா இத்தனை நாள் பூஜை செய்கிறார் அப்போதெல்லாம் கொழுக்கட்டை சாப்பிடாத பிள்ளையார் இப்போது எப்படி சாப்பிட்டிருப்பார் என்று சந்தேகம் எழுப்புகிறாள். பின்னர் விநாயகர் தன் மகனுக்கு இரங்கி இப்படியொரு செயலைச் செய்தது கேட்டு அந்தப் பெற்றோர்க்கு மகிழ்ச்சி. இந்த நம்பியாண்டார் நம்பிதான் சோழன் சிதம்பரத்தில் கண்டெடுத்த ஓலைச்சுவடிகளை வகை பிரித்துப் பன்னிரு திருமுறையாக அமைத்துக் கொடுத்தவர். அந்தத் திருக்கோயிலை தரிசிக்கும் பாக்கியமும் இவர்களுக்குக் கிடைத்தது பெரும் பேறு.

வீராணம் ஏரி. 

      அந்த சின்னஞ்சிறு ஊரில் காலை எங்கே சாப்பிடுவது என்று தேடியபோது ஸ்ரீகிருஷ்ண பவன் எனும் ஓர் அருமையான கடை கண்களில் பட, அங்கு சென்று உணவினை பாரதி இயக்கத்தார் முடித்துக் கொண்டு வீராணம் ஏரியைப் பார்க்கச் சென்றனர். தமிழகத்தில் உள்ள மாபெரும் ஏரிகளில் ஒன்று இந்த வீராணம் ஏரி. பழமையான ஏரிகூட. கல்கி “பொன்னியின் செல்வனில்” எழுதியிருப்பது போல இந்த ஏரி பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் காலத்தில் உருவாக்கப்பட்டதாம். இதன் சரியான பெயர் “வீரநாராயண ஏரி” என்பதாகும்.


      சோழ தேசத்தில் விவசாயத்தை அதிகரிக்கச் செய்ய பராந்தகன் கி.பி.907 முதல் 935 வரை நாட்டை ஆண்டபோது இதனை உருவாக்கினான். இந்த ஏரி உள்ள இடம் வீரநாராயண சதுர்வேத மங்கலம் என்பது. சதுர்வேத மங்கலம் என்றாலே நான்கு வேதங்களைக் கற்ற வேத பண்டிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட இனாம் ஊர் என்பது புரிகிறது. இதுவே இப்போது காட்டுமன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீராணம் ஏரி காட்டுமன்னார்கோயிலில் இருந்து சேத்தியாத் தோப்பு வரை காணப் படுகிறது. இதன் வழியாக தண்ணீரைக் காணாமலே சென்று சேத்தியாத்தோப்பை அடைந்தார்கள்.
                            To be continued.............

No comments: