வரலாறு பேசும் பயணம் பகுதி 21
ஏலாக்குறிச்சி.
தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து
வடக்குத் திசையில் சென்றால் திருமானூர் கொள்ளிட ஆற்றுப் பாலம் குறுக்கிடும். அதனையும்
கடந்து அரியலூர் செல்லும் பாதையில் சென்றால் வடபுறத்தில் ஒரு பெரிய வளைவு காணப்படும்,
அதுதான் ஏலாக்குறிச்சி செல்லும் பாதை. இந்த ஏலாக்குறிச்சி அரியலூர் வட்டத்தினுள் அமைந்த
ஒரு கிராமம். கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இதுவொரு புண்ணியத் தலம். இங்குதான் கன்னி
மேரிக்கு ஒரு மாபெரும் ஆலயம் 1711இல் வீரமாமுனிவர் எனும் தமிழ்ப்பெயர் கொண்ட கத்தோலிக்க
பிஷப் காஸ்டான்சோ பெஸ்கி என்பவரால் கட்டப்பட்டது. பெரம்பலூரிலிருந்து மானாமதுரை நெடுஞ்சாலையில்
வந்தால் 65 கி.மீ தூரத்தில் இருக்கிறது இந்த ஊர்.
இந்த ஏலாக்குறிச்சியின் முன்னாளைய பெயர் திருக்காவலூர்.
அரியலூரிலிருந்து இங்கு வர 25 கி.மீ.பயணம் வரவேண்டும். இங்குள்ள மேரியின் பெயர் அடைக்கலமாதா,
சர்ச்சுக்கு அடைக்கலமாதா ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் இந்த அடைக்கலமாதா தேவாலயத்தில் தேரோட்டம்
மிகச் சிறப்பாக நடைபெறும். எங்கெங்கிருந்தெல்லாமோ கிறிஸ்தவர்கள் இங்கு வந்து கூடுவார்கள்.
தஞ்சையில் இயங்கும் சில பெரிய காத்தலிக் நிறுவனங்களிலிருந்து ஞாயிற்றுக் கிழமைகளில்
இங்கு தொண்டாற்றுவதற்கென்று வாலன்டியர்கள் வந்து இலவச பணியாற்றுவது போற்றற்குரியது.
திருவையாற்றிலிருந்து பாரதி இயக்கத்தினர் அங்கு
சென்று வாகனங்களை நிறுத்தியதும் யாரும் இவர்களைத் தடுக்கவில்லை. நுழைவாயிலில் இருந்த
அலுவலக வாயிலில் ஒரு பாதிரியார் நின்று கொண்டிருந்தார். அவரிடம் பாரதி இயக்கத்தினர்
வரலாறு பேசும் பயணத்திற்காக இந்த அடைக்கலமாதா தேவாலயம், அதன் வரலாறு பற்றி தெரிந்து
கொள்ள வந்திருப்பதாகச் சொன்னதும், தான் அங்கு புதியவர் என்றும் பழைய சாமி உள்ளே இருப்பதாகச்
சொன்னதும், அவரைத் தேடி உள்ளே சென்றார்கள். அங்கு பழைய பாதிரியார் வந்தவர்களை அன்போடு
வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்து அந்த ஆலயத்தின் வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் சில நூல்களையும், ஒலிப்பேழையொன்றையும் இவர்களுக்கு வழங்கி இவர்கள் வருகைக்காக
மகிழ்ச்சியடைவதாகச் சொல்லி அன்போடு வழியனுப்பினார்.
பாரதி இயக்கத்தினர் அந்த தேவாலய வளாகத்தினுள் நுழைந்து
எல்லா இடங்களையும் பார்த்து தேவாலயத்தின் உட்புறம் சென்று அந்த அமைதியான சூழ்நிலையில்
அங்கு மக்கள் அமர்ந்து கண்மூடி தியானம் செய்வதைக் கண்டு அமைதியாக வெளிவந்தார்கள். சுற்றிலும்
கிராமப்புற சூழ்நிலை, தேவாலயத்தின் உட்புறம் அமைதி, தூய்மை, அன்பு அனைத்தும் நிலவுவதைக்
காண முடிந்தது.
காமரசவல்லி.
ஏலாக்குறிச்சியிலிருந்து கிராமத்துப் பாதை வழியாக
மிகவும் சிரமத்துக்கிடையே பெரம்பலூர் நோக்கிப் பயணப்பட்டவர்கள் வழியில் காமரசவல்லி
எனும் கிராமத்தை அடைந்தனர். இந்த காமரசவல்லி பெயரே இவர்களைச் சுண்டி இழுத்து விட்டது.
அது என்ன பெயர்? காமரசவல்லி? அழகான கிராம சூழ்நிலையில் மிக அமைதியாகத் தனித்து நின்றது
காமரசவல்லி சிவாலயம்.
இந்த ஆலயத்து இறைவன் பெயர் கார்கோட்டீஸ்வரர், அம்பாள்
பாலாம்பிகை. இந்த ஆலயத்தில் கார்க்கோடகன், மன்மதன், ரதி ஆகியோர் வழிபட்டதாக வரலாறு
கூறுகிறது. திருநாவுக்கரசர் சுவாமிகள் இங்கு வந்து இவ்வாலயத்தில் தேவாரம் பாடியிருப்பதாகச்
சொன்னார்கள், அந்த தேவாரப் பாடல் ஆலயத்துச் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது.
இவ்வாலயத்து ஈசரை காதல் தேவதையான மன்மதனும் காதல்
தலைவி ரதியும் வழிபட்டதாகத் தல வரலாறு இருக்கிறது. காமனும் ரதியும் வணங்கி வழிபட்டதால்
இவ்வூர் காமரதி வல்லி என்று பெயர் வந்து பின்னர் அது திரிந்து காமரசவல்லியாக மாறியிருக்கிறது.
கார்க்கோடகன் என்பவன் எட்டு தெய்வீக நாகங்களில் ஒன்று. அந்த தெய்வீக நாகமான கார்க்கோடகன்
வழிபட்ட தலம் இது. அவன் வழிபட்டதால் இந்த ஈசருக்கு கார்க்கோட்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததாம்.
அந்த சின்னஞ்சிறு சிவாலயத்தினுள் சென்று வழிபட்டதும் அங்குள்ள சிவாச்சாரியார் அவ்வூரின்
தல புராணத்தை விளக்கி இங்கு வழிபட்டுச் செல்வோர் அடையும் நலங்களைப் பற்றி விரிவாகச்
சொன்னதும் பாரதி இயக்கத்தினர் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.
சாத்தனூர்
(பெரம்பலூர்)
சாத்தனூர் என்கிற பெயரில் ஏராளமான கிராமங்கள் பரவிக்
கிடக்கின்றன. நாம் சொல்லும் இந்த சாத்தனூர் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தாலுகாவில்
கொளக்காநத்தம் எனும் ஊருக்கருகிலுள்ளது. இவ்வூரில் அப்படியெல்ல அதிசயம் என்றுதான் அங்கு
காட்டுப் பாதை போன்றிருந்த வழியாக புதர்களுக்கிடையே செல்லும்போது தோன்றியது. புதர்களுக்கு
இடையே ஒரு பெரிய இடைவெளி. அங்கு ஒருசில கட்டடங்களும் அருகில் அரசு பாதுகாக்கும் சில
பழங்காலத்து காட்சிப் பொருட்களும் இருப்பது தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான்
அது பல யுகங்களுக்கு முன்பிருந்த மரம் விழுந்து கல்லாகி இன்று கல்மரம் என அழைக்கப்படும்
அரிய காட்சி என்பது தெரிந்தது.
இவ்வூரின் ஜனத்தொகையே மொத்தம் 1500க்கு மேல். இங்குள்ள
அதிசயம் இந்த கல்மரம்தான். மிக பிரம்மாண்டமான மரமொன்று எந்த யுகத்திலோ கீழே விழுந்து
காலத்தால் அழியாமல் கல்லாகிப் போய் இன்று மரத்தின் உரு மாறாமல் கிளைகளோடு அப்படியே
கிடப்பதைப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. இதனை இப்போது தொல்பொருள் துறை வேலிகள்
அமைத்துப் பாதுகாக்கிறது. அந்த கல்மரத்தின் சிறப்பைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு
பாரதி இயக்கத்தார் புறப்பட்டனர்.
To be continued............
No comments:
Post a Comment